நீத்தார் நினைவு

அருள்பணி இயேசு கருணாநிதி

இன்றைய (2 நவம்பர் 2021) திருநாள்
நீத்தார் நினைவு
'இறப்புக்குப் பின் வாழ்வு உண்டா?' - இந்தக் கேள்விக்குச் சில இடங்களில் 'ஆம்' என்றும், பல இடங்களில் 'இல்லை' என்றும் விடையளிக்கிறது திருவிவிலியம்.
'ஆன்மாக்கள் துன்புறுவது என்பது இடம் சார்ந்த ஒன்றா? அல்லது நிலை சார்ந்த ஒன்றா?' – 'துன்புறுதல் என்பது இடம்' என்கிறது திரிதெந்தின் திருச்சங்கப் புரிதல். 'துன்புறுதல் என்பது நிலை' என்கிறது இரண்டாம் வத்திக்கான் சங்கப் புரிதல்.

இறப்புக்குப் பின் வாழ்வு உண்டா அல்லது இல்லையா? என்றும், துன்புறுதல் இடமா அல்லது நிலையா? என்று கேள்வி கேட்கின்ற நாள் அல்ல இந்த நாள்.
'இயேசுவின் பாடுகள், இறப்பு, மற்றும் உயிர்ப்பு நம் பாவங்களைப் போக்கிவிட்டது என்றால், நாம் ஏன் இறந்த பின்னரும் துன்புற வேண்டும்?'
'காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்டு நாம் செய்யும் இறைவேண்டல், காலத்தையும் இடத்தையும் கடந்த ஆன்மாக்களை எப்படிச் சென்றடையும்?'
'மோட்சம், நரகம், துன்புறும் நிலை ஆகியவை பற்றிய நம்பிக்கை இல்லாத சமயத்தவர்கள், அல்லது இறப்புக்குப் பின்னர் வாழ்வு உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளாத நபர்களுக்கு என்ன நேரிடும்?'

இன்றைய நாளில் நாம் என்னதான் செய்கிறோம்?
புனித அகுஸ்தினார், தன் 'ஒப்புகைகள்' நூலில், தன் தாய் மோனிகாவின் இறப்பைப் பதிவு செய்யும் இடத்தில் குறிப்பிடும் விடயம் நமக்கு விடை தருகின்றது. அது என்ன?
'என் தாய் இறந்த பின்னர் அவரை நாங்கள் அவருடைய கணவருக்கு அருகில் அடக்கம் செய்ய வேண்டும் என நினைப்பார் என்று எண்ணினோம். ஆனால், அவரோ, 'என்னை எங்கு வேண்டுமானாலும் அடக்கம் செய். ஆனால், பீடத்தில் என்னை நினைக்க மறவாதே. என் ஆண்டவர் என்னை எங்கிருந்தும் உயிர்ப்பிக்க வல்லவர்' என்றார்.'

அகுஸ்தினாரின் இந்தப் பதிவு நமக்கு மூன்று விடயங்களைச் சொல்கின்றது:

(அ) நம் இறப்புக்குப் பின்னர் உடல் ஒரு பொருட்டு அல்ல. அல்லது, உடல் இறந்துவிடுகிறது. ஆன்மா வாழ்கிறது.
(ஆ) இறந்தவர்களை நாம் இறைவேண்டலில் நினைவுகூர வேண்டும்.
(இ) இறந்த நாம் அனைவரும் உயிர்ப்போம். நம்மை உயிர்ப்பிக்க ஆண்டவரால் மட்டுமே இயலும்.

ஏறக்குறைய இந்த விடயங்களைத்தான் இன்றைய நாளில் நாம் நினைவுகூருகின்றோம். 'மனித ஆன்மா அழிவுறுவதில்லை' என்ற நம்பிக்கை சமயங்களைக் கடந்த ஒன்றாகவும், பல மெய்யிலளார்களின் கூற்றாகவும் உள்ளது. ஆன்மா அணிந்துகொள்ளும் ஆடைதான் உடல். அல்லது, ஆன்மா குடியிருக்கும் வாடகை வீடுதான் உடல். பொய்யுடல் அழியத்தான் வேண்டும். கண்ணுக்குத் தெரியாத அந்த ஆன்மா நம் கண்களுக்குப் புலப்படாத ஓர் இடத்தில் அல்லது ஒரு நிலையில் வாழ்கின்றது. அந்த நிலையில் அது இறைவனில் இளைப்பாறுகிறது.

இன்றைய திருநாள் நமக்கு மூன்று பாடங்களைத் தருகின்றது:

(அ) வாழ்வின் நிலையாமை

பெருந்தொற்றுக் காலத்தில் நாம் கற்ற பல பாடங்களில் ஒன்று வாழ்வின் நிலையாமை. எந்த நேரத்திலும் எதுவும் நேரிடலாம். இங்கு வந்தவர் எல்லாம் அங்கு செல்ல வேண்டும் என்பது வாழ்வின் எதார்த்தம். அவர்கள் சென்றுவிட்டார்கள், நாம் செல்வோம் என்பதும் எதார்த்தம். நாம் இன்று கல்லறைகளில் ஏற்றும் மெழுகுதிரி உருகி மறைவது போல, நம் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் உருகி மறைகின்றது. நாம் ஏற்றும் அகர்பத்திகள் புகையாய் காற்றில் மறைவது போல, நாமும் மறைகின்றோம். ஆனால், அதுவரை நாம் எரிகின்றோம். அதுவரை மணம் வீசுகின்றோம். கண்களைத் திறந்து பார்க்கும்போது நம் கண்முன் நிற்கும் அனைத்துக்கும் உயிர் இருக்கின்றது. கண்களை மூடிவிட்டால் அனைத்தும் மறைந்துவிடுகின்றன. மறைந்து போகாத கடவுளைக் காண நாம் உடலின் கண்களை மூடித்தான் ஆக வேண்டும். ஆக, அந்த நாளை மனத்தில் நிறுத்த இந்த நாள் நம்மை அழைக்கிறது.

(ஆ) இறப்புக்குப் பின் உள்ள வாழ்வை நிர்ணயிப்பது இறப்புக்கு முன் உள்ள வாழ்வே

இறப்புக்குப் பின் உள்ள வாழ்வைப் பற்றிப் பல நேரங்களில் சிந்திக்கும் நாம் இறப்புக்கு முன் உள்ள வாழ்வை மறந்துவிடுகின்றோம். இந்த வாழ்வே அந்த வாழ்வைத் தீர்மானிக்கிறது எனில், குறுகிய இந்த வாழ்வை நன்முறையில் வாழ்தல் நலம். இதையே மேலாண்மையியலில், 'பின்னோக்கி வாழ்தல்' என்று அழைக்கின்றனர். அதாவது, என் அடக்கச் சடங்கின்போது அங்கு நிற்பவர்கள் என்னைப் பற்றி என்ன பேச வேண்டும் என்பதை நான் எழுதுவது. பின் அதை அப்படியே வாழ்வாக்குவது. எடுத்துக்காட்டாக, 'இவர் மிகவும் எளிமையாக வாழ்ந்தார்' என்று அவர்கள் சொல்ல வேண்டும் என நான் விரும்புகிறேன் என்றால், 'நான் இப்போது எளிமையாக வாழ்வது.' 'எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகளே. வலிமை மிகுந்தோர்க்கு எண்பது. அவற்றில் பெருமைக்கு உரியன துன்பமும் துயரமுமே! அவை விரைவில் கடந்துவிடுகின்றன. நாங்களும் பறந்துவிடுகின்றோம்' என்கிறார் திருப்பாடல் ஆசிரியர் (90:10). ஆண்டுகள் எழுபது என்றாலும், பத்தாண்டுகள் எனக் கணக்கிட்டால், வெறும் ஏழு பத்தாண்டுகளே. இவற்றில் முதல் 35 ஆண்டுகள் கற்றலிலும் நிற்றலிலும் கடந்து விடுகிறது. அதற்குப் பின்னர் வரும் ஆண்டுகளில் நாம் வற்றத் தொடங்குகின்றோம். கற்றல், நிற்றல், வற்றல் என நகரும் ஆண்டுகளில் நாம் நன்மதிப்பீடுகளைப் போற்றல் நலம்.

(இ) இறப்பில் நாம் தனியர்கள் இல்லை

இறப்பு ஒரு கொடிய அனுபவமாக இருக்கக் காரணம் அதை நாம் தனியாக அனுபவிக்க வேண்டிய நிர்பந்தம்தான். ஆனால், இறப்பில் நாம் தனியாக இல்லை. நம்மை நினைவுகூர உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதை இன்றைய நாள் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. இறந்த நம் முன்னோர்களுடன் நாம் இறைவேண்டலில் துணைநிற்பது போல, நம்மோடும் நமக்குப் பின் வரும் தலைமுறையினர் துணைநிற்பர். ஆக, இறப்பு நம்மை ஒருபோதும் பிரித்துவிடவோ, தனித்துவிடவோ இயலாது. இன்றைய நாளில் நாம் முடிந்தவரை பல இறந்தோரை நினைத்துப் பார்ப்போம். செல்டிக் நாகரீகத்தில், இறந்தோர் அனைவரும் வானத்துக்கு ஏறிச்செல்லும் ஓட்டைகளே நட்சத்திரங்கள் என்று சொல்லப்படுவதுண்டு. அந்த ஓட்டைகள் வழியே வானின் ஒளி நட்சத்திரங்களாக நம் கண்களுக்குத் தெரிகின்றன. அந்த நட்சத்திரங்கள் ஒளியில் நம் மெழுகுதிரி ஒளியை இணைத்துக்கொள்வோம்.

இறுதியாக,
சில நாள்களுக்கு முன் நான் வாசித்த போஸ்டர் ஒன்றுடன் சிந்தனையை நிறைவு செய்கின்றேன்.
'யாராவது இறந்தால் 'ரெஸ்ட் இன் பீஸ்' – அமைதியில் இளைப்பாறுங்கள்! என்கிறோம். யாரையாவது பார்த்து, 'லிவ் இன் பீஸ்' – அமைதியில் வாழுங்கள்! என்று சொல்கிறோமா? இறந்தோருக்கு அல்ல, வாழ்வோருக்கே இன்று அமைதி தேவைப்படுகிறது.'
எதார்த்தமான பதிவு இது.

வாழ்வோருக்கு அமைதி தேவையே. ஆனால், அதை அவர்களே இழக்கின்றனர். அவர்களால் அதைப் பெற்றுக்கொள்ள இயலும்.
ஆனால், இறந்தோர் தங்கள் அமைதியைப் பெற்றுக்கொள்ள அவர்களால் இயலாது. நாமே அதற்கு உதவி செய்ய வேண்டும்.
'அமைதியை ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்' (மத் 5:9) என்னும் மலைப்பொழிவுச் சொற்களை நான் இப்படித்தான் புரிந்துகொள்கின்றேன்: 'தங்கள் இறைவேண்டல் வழியாக இறந்தோருக்கு அமைதியை ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர். ஏனெனில், அவர்கள் இறைவனின் பிள்ளைகள் என அழைக்கப்படுவர்.'

'உத்தரிக்கிற நிலை ஆன்மாக்களே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!'
எங்களது இறைவேண்டல் உங்களை அடைகிறது என்பது எங்கள் நம்பிக்கை.
உங்கள் ஆசீர் எங்களை அடைகிறது என்பது எங்கள் எதிர்நோக்கு.
உங்களையும் எங்களையும் இணைத்ததும் இணைப்பதும் அன்பே....

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது