முன்பின் முரணாக வரும் திருநாள்கள்?

அருள்பணி எல்.எக்ஸ். ஜெரோம் சே.ச.

நவம்பர் 1, புனிதர் அனைவரின் திருநாள். நவம்பர் 2, இறந்தோர் அனைவரின் நினைவு நாள். இவ்விரு திருநாட்களும் முன்பின் முரணாக வருகின்றனவோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இறந்தோரின் நினைவுக்குப்பின்தானே புனிதரின் நினைவைக் கொண்டாட வேண்டும்? இங்கோ, புனிதரின் நினைவுக்குப்பின் இறந்தோரின் நினைவைக் கொண்டாடுகிறோமே!


பொதுவாக, ஒருவர் இறந்ததும், அவரைப்பற்றிய நல்லவையே அதிகம் பேசப்படும். ஒருவர் இறந்தபின், அவரைப்பற்றி நாம் கூறும் நல்லவற்றை, அவர் வாழ்ந்த காலத்திலேயே, அவரது முன்னிலையில், அவர் காதுபடக் கூறியிருந்தால், அவர் இன்னும் நல்லவராக, புனிதராக வாழ்ந்திருப்பாரே!


இறந்தபின் வழங்கப்படும் புகழ் மாலைகளை, மரியாதைகளை, வாழும்போதே ஒவ்வொருவருக்கும் நாம் கொடுத்தால், இவ்வுலகில், வாழும் புனிதர்களின் எண்ணிக்கை அதிகமாகுமே! புனிதர்கள் விண்ணுலகில்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லையே! தாங்கள் நல்லவர்கள் என்று, வாழ்நாள் எல்லாம் உணரும் மனிதர்கள், புனிதர்களாக இவ்வுலகை விட்டு விடைபெற்று போகலாமே!


இறந்தோர் மீது காட்டும் பாசத்தை, அவர்கள் வாழும் நாட்களில் காட்டி, அவர்களை புனிதர்களாக வாழவைக்கலாம் என்பதைச் சொல்லித்தரவே, கத்தோலிக்கத் திருஅவை, புனிதர் அனைவரின் திருநாளுக்குப்பின், இறந்தோர் அனைவரின் நினைவு நாளைக் கொண்டாட நம்மை அழைக்கிறது.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு