செபமாலை பக்தியும், தாழ்ச்சி என்ற உயர் குணமும்

பெஞ்சமின்

அக்டோபர் மாதம் செபமாலை பக்திக்கான மாதம் என்பது தெரிந்ததே.

முன்குறிப்பு: பாரம்பரியத்தின்படி 1214 ஆம் ஆண்டிலிருந்து செபமாலை செபிக்கும் வழக்கம் வந்தது. புனித டோமினிக் அவர்களுக்குத் தேவதாய் காட்சி கொடுத்துத் தப்பறைக் கொள்கையை வெற்றிகொள்ள செபமாலை செபிக்க கூறினார். 1751 இல் லெபன்கோ போரில் கிறிஸ்தவர்கள் வெற்றி பெற, செபமாலை செய்து செபித்ததே காரணம் என்பர்.

தாழ்ச்சி:

தேவ அன்னைக்கு கபிரியேல் தூதர் நற்செய்தி அறிவித்தபோது "அருள் மிகப் பெற்றவரே வாழ்க, ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்றார். தேவதாய் இவ் வார்த்தையைக் கேட்டுக் கலங்கியதோடு, இவ்வாழ்த்து எத்தகையதோ? என எண்ணினார். வார்த்தையைக் கேட்டுப் பெருமையோ, கர்வமோ கொள்ளவில்லை. "கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" எனத் தூதர் கூறி முடித்தவுடன் "நான் ஆண்டவரின் அடிமை, உன் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார். 'ஆண்டவரின் அடிமை' என்று கூறியது தாழ்ச்சியின் பிரதிபலிப்பு. "உம் சொற்படியே ஆகட்டும்" என்றது இறைவார்த்தைக்கு கீழ்ப்படிந்தது. உடனே புறப்பட்டு யூதேயா மலைநாட்டில் உள்ள எலிசபெத்தின் வீட்டிற்குச் சென்று அவருக்குப் பணிவிடை (உதவி) செய்தாரென அடுத்து பார்க்கிறோம். இது பிறருக்குச் செய்த முதல் பணி. இதையடுத்து (விவிலியத்தில்) கானாவூர் திருமணத்தில் தேவதாய் செய்த உதவி இடம்பெறுகிறது.

எனவே, தாழ்ச்சி, கீழ்ப்படிதல், பிறருக்கு உதவி செய்தல் ஆகிய பண்புகள் மரியாவிடம் இருந்தன. தாழ்ச்சி என்றால் (சிலமசமயம்) கோழைத்தனம் எனச் சிலர் கூறுவார்கள். கோழைத்தனத்தில் கீழ்ப்படிதல், பிறருக்கு உதவி செய்தல் போன்ற செயல்கள் இடம்பெறாது. ஒருவித உள்பயம் இருக்கும்.

1. விவிலியத்தில் தாழ்ச்சி என்ற பண்பைக் கொண்டவர்கள் சிலரைக் காண்கிறோம். இவர்களில் முதன்மை யானவர் திருமுழுக்கு யோவானெனக் கூறலாம். இவரின் சீடர்கள் இயேசுவைப் பற்றிக் கூறினர். இவர்கள் இயேசுவின்மீது பொறாமை கொண்டவர்களாகக்கூட இருந்திருக்கலாம். ஆனால் திருமுழுக்கு புனித யோவான் கூறியது...

"அவர் வளர வேண்டும், நான் குறுக வேண்டும்" (யோவா 3:30). (அவர் செல்வாக்குப் பெருக வேண்டும். என் செல்வாக்கு குறைய வேண்டும்). இவரது பிறந்த நாளைத் திருச்சபை சிறப்பிப்பது பொருத்தமானதுதான்.

2. அரசரின் கனவில் கண்டதை விளக்கிக் கூறும்போது எல்லோரையும்விட நான் ஞானத்தில் சிறந்தவன் என்பதால் அன்று, அரசனுக்கு இது தெரிவிக்கப்பட வேண்டும் என இறைவன் சித்தமானதால்தான் இந்த விளக்கம் அருளப்பட்டது எனத் தானியேல் (3:30) கூறுவது அவர் தாழ்ச்சியான உள்ளம் கொண்டு இருப்பதால்தான் தாழ்ச்சியான பண்பு கொண்ட பலர் விவிலியத்தில் உள்ளனர். இயேசுவைப் பற்றிப் புனித பவுல் கூறும் போது மனித உருவில் தோன்றி தம்மைத் தாழ்த்தி.... நாவும் அறிக்கையிடும் எனக் கூறுகிறார் (பிலி 2:9). இன்று 'இயேசுவே ஆண்டவர்' - எனக் கூறுகிறோம் என்றால் அவர் தம்மைத் தாழ்த்தி சாவை ஏற்றதால்தான்.

புனித யாக்கோபு தனது மடலில் செருக்குற்றவர்களைக் கடவுள் எதிர்க்கிறார். தாழ்ச்சியுள்ளவர்களுக்கோ அருளை அளிக்கிறாரென குறிப்பிடுகிறார் (4:6).

கபிரியேல் தூதர் நற்செய்தி அறிவித்த போது தேவதாய் இறைவனின் வாக்கை ஏற்றுக் கொண்டது தாழ்ச்சியான குணம் கொண்டதால் (பிறகு சொல்கிறேன்! வீட்டில் கேட்டுச் சொல்கிறேன் என்று தட்டிக்கழித்து இருந்தால் நிலைமை எவ்வாறு இருந்திருக்கும்?).

எதிலும் தெளிந்து தெரியாத பிடிவாதமும், தற்பெருமையும் இருந்தால் தாழ்ச்சியான எண்ணம் வராது.

நடந்த நிகழ்வு:

ஒரு கைவிடப்பட்ட குழந்தைகள் சிறுவர்கள் காப்பகத்திற்கு ஒரு அருட்பணியாளர் (பிரிவினை சபையைச் சேர்ந்தவர்) சென்றார். சிறுவர்களைப் பார்த்து ஒவ்வொருவரையும் ஒரு சிறிய செபம் சொல்ல கேட்டார். ஒரு சிறுவன் 'பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே...' என்று கர்த்தர் கற்பித்த செபத்தை கூறினான். அடுத்தவனைக் கேட்டார். 'அருள் நிறைந்த மரியே' என்று தொடங்கினான். "இந்தச் செபம் வேண்டாம். இந்தப் பெயரைச் சொல்ல வேண்டாம்" எனக் கூறினார். அடுத்து விசுவாச மந்திரம் சொன்னான் (பிரிவினை சபையினர் விசுவாச மந்திரம் (செபம்) கூறுவதுண்டு). அதிலும் கன்னி மரியிடமிருந்து என்று தொடராக வந்தது. மீண்டும் மரியாவின் பெயர் வந்ததால் கோபமடைந்தார். இருப்பினும் வெளிக்காட்டவில்லை. அவர்களுடைய செபத்திலும் மரியாவின் பெயர் உள்ளதே!

2000 ஆண்டுகளாகத் தேவதாய் மகிமைப் படுத்தப்பட்டு வருகிறார். யாரும் அதை குறைக்க முடியாது. இந்த மாதத்தில் 'என் ஆன்மா ஆண்டவரை ஏற்றிப் போற்றுகின்றது. என்ற பாடல் தினமும் பாடப்படும். செபமாலை சொல்லும்போது முன்னதாகவோ, பின்னரோ இப்பாடலைப் பாடுகிறோம், செபிக்கிறோம். இப்பாடல் பாடும்போது மரியாவுக்கு இருந்த தாழ்ச்சி வேண்டும். அவ்வாறெனில் தேவதாய் நமக்குக் கைகொடுப்பார். இயேசுவும் நம்மை ஆசீரால் நிரப்புவார்.

இருதயத்தில் தாழ்ச்சியும், சாந்தமும் உள்ள இயேசுவே! எங்கள் இருதயம் உமது இருதயத்துக்கு ஒத்திருக்கச் செய்தருளும்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  மரியாளின் கருத்தோவியங்கள்