"கன்னி மரியாவின் இதயமாக மாறுவோமா!"

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு

madha ஒரு ஊரில் ஒரு கைம்பெண் தன் குழந்தையை வளர்த்து வந்தார். கடினப்பட்டு உழைத்து அந்த குழந்தையை நல்ல படிப்பைப் படிக்க வைத்தார். அந்த பையனும் சிறந்த முறையிலே பட்டப்படிப்பு முடித்தார். படித்து முடித்த பிறகு நல்ல ஒரு வியாபாரம் செய்தார். திருமணம் செய்து கொண்டார். அவருக்கு குழந்தைகளும் பிறந்தன. அவர் அதிகமாக வியாபாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். அதன் பிறகு தனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். தன்னைப் பெற்று வளர்த்த தாயை வசதி வந்த பிறகு இடையூறாக நினைத்தார். எனவே கல் சுமந்து மண் சுமந்து வளர்த்த அன்புத் தாயை ஒரு இடையூறாக நினைத்து, முதியோர் இல்லத்தில் சேர்த்தார். தாயும் தன் மகன் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்று பரந்த மனப்பான்மையோடும் கனத்த இதயத்தோடும் முதியோர் இல்லம் சென்றார். ஒரு முறை வியாபாரம் செய்த அந்த நபருக்கு இரசாயன விபத்தின் காரணமாக கண் பார்வை பறிபோனது. எனவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார். ஆனால் அவருடைய பார்வை மீண்டும் பெற முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே மருத்துவர் "யாராவது கண்களைக் தானமாகக் கொடுத்தால்தான் இவருக்கு பார்வை கிடைக்கும்? " என்று அவரின் மனைவியிடம் கூறினார். எனவே எல்லா இடத்திலும் கண் தானத்திற்காகத் தேடி அலைந்தார்கள். ஆனால் கிடைக்கவில்லை.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட முதியோர் இல்லத்தில் வாழ்ந்த அவரின் தாய் விரைந்து மருத்துவமனைக்கு சென்றார். தன் மகனுக்கே தெரியாமல் மருத்துவரை அணுகி " தன் கண்களை தன் மகனுக்குக் கொடுக்குமாறு "கேட்டுக்கொண்டார். முதலில் மருத்துவர் உயிரோடு இருப்பவரின் கண்களை எடுப்பது மனித நேயத்திற்கு எதிரானது என்று மறுதலித்தார். ஆனால் அந்த நபரின் தாய் முழுமூச்சாக தன் கண்களை தன் மகனுக்கு கொடுக்குமாறு மிகவும் தாழ்மையோடு கேட்டுக் கொண்டார். இறுதியில் மருத்துவர் அந்த நபரின் தாயுடைய கண்களில் எடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். இறுதியில் அந்த நபர் பார்வை பெற்றார். பார்வை பெற்ற அந்த நபர் மருத்துவரிடம் "தனக்கு கண்களை தானமாக கொடுத்த அந்த மாமனிதர் யார்?" என்று கேட்டார். அதற்கு மருத்துவர் அந்த நபரின் தாயை காட்டி "இவர்தான் நீங்கள் பார்வை பெறுவதற்குக் காரணம் "என்று கூறினார். அதைக் கண்ட நபர் தன் தாயின் தியாக செயலை மறந்ததற்காக மனம் வெம்பி அழுதார். தன் தாயிடம் மன்னிப்பு கேட்டார். பார்வையிழந்த தன் தாயை வீட்டிற்குக் கொண்டு சென்று இறுதிவரை அன்போடு பராமரித்தார். கல்லான இதயத்தை கூடக் கனிவான தாயின் அன்பு கனிவுள்ளதாக மாற்றிவிடும்.

இந்த உலகத்தில் தாயின் இதயம் தான் மிக உன்னதமான இதயம். தான் பெற்ற பிள்ளைகள் தன்னைத் துன்பத்திற்கு உள்ளாக்கினாலும் அவர்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரே இதயம் தாயின் இதயம். யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தன் குழந்தைகளை எப்படியாவது வளர்த்து ஆளாக்க வேண்டும் என்று உறுதியோடு இருக்கும் இதயம் தாயின் இதயம். தான் சாப்பிடவில்லை என்றாலும் தன் பிள்ளைகள் வயிறார சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் அன்பு இதயம் தாயின் இதயம்.

தனக்குப் பிடிக்காத உணவுகளையும் மருந்துகளையும் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்காக சாப்பிடும் நல்ல இதயம் தாயின் இதயம். தன் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக தனக்குப் பிடித்த உணவை கூட தியாகம் செய்யும் அன்பு இதயம் தாயின் இதயம். இவ்வாறாக தாயின் உன்னதமான இதயத்தின் பெருமையை அடுக்கிக் கொண்டே போகலாம். இன்றைய நாளில் நம் தாய்த் திருஅவையோடு இணைந்து புனித மரியாவின் மாசற்ற இதய விழாவினைச் மிகச் சிறப்பாக கொண்டாடி மகிழ்கின்றோம். அன்னை மரியாள் இயேசுவுக்கு மட்டும் தாய் அல்ல ; மாறாக, உலக மக்கள் அனைவருக்கும் தாய் ஆவார். உலகத்திலுள்ள எல்லா மனிதரும் கடவுளின் மீட்பைப் பெற்று அன்போடும் மகிழ்வோடும் பொறுமையோடும் தாழ்ச்சியோடும் தூய்மையோடும் இரக்கத்தோடும் அமைதியோடும் நீதியோடும் சமத்துவத்தோடும் நிறைவோடும் பகிர்வோடும் பிறர் நலத்தோடும் வாழ்ந்திடத் தன்னை முழுமையாகக் கடவுளின் விருப்பத்திற்குக் கையளித்தார். அன்னை மரியாவின் இதயம் கடவுளுக்கு உகந்த இதயமாக இருந்தது. தூய்மையும் நேர்மையும் உண்மையும் இறை நம்பிக்கையும் நிறைந்த இதயமாக இருந்தது. எனவே தான் கடவுள் அன்னை மரியா வாழ்ந்த காலகட்டத்தில் எத்தனையோ இளம்பெண்கள் இருந்தபோதிலும் தன்னுடைய மகனை இந்த உலகத்திற்கு அனுப்பி மீட்பை கொடுப்பதற்காக அன்னை மரியாவைத் தெரிவு செய்தார். அந்த அளவுக்கு அவரின் இதயம் மாசற்ற இதயமாகவும் கள்ளம் கபடமற்ற இதயமாக இருந்தது. அவரின் இதயம் தூய்மையாக இருந்ததால்தான் அவரின் வாழ்வும் தூய்மையாக இருந்தது. அந்த தூய வாழ்வு தான் இந்த உலகை மீட்க வந்த ஆண்டவர் இயேசுவை இந்த உலகத்திற்கு கொண்டு வரக் கருவியாக மாற்றியது. அவர் இயேசுவை ஒரு குழந்தையாக பெற்றெடுத்து கல்வாரியில் கையளிக்கும் வரை மாசற்ற வழியிலேயே அவரையும் வளர்த்தெடுத்தார். இயேசு இறைமகனாக இருந்த போதிலும் மனித உருவெடுத்து மண்ணில் வாழ்ந்த இயேசுவை மனித நேயத்தோடு வளர்த்தெடுத்தார்.

இன்றைய நற்செய்தி வாசகமானது கோவிலில் காணாமல் போன சிறுவன் இயேசுவைக் கண்டுபிடிக்கும் நிகழ்வைப் பற்றி வாசிக்கின்றோம்.

குழந்தை இயேசு ஒரு இறைமகன் தான். அது அன்னை மரியாவுக்கும் அவரை வளர்த்த வளர்ப்புத் தந்தை சூசைக்கும் தெரியும். இருந்தபோதிலும் கூட்டத்திலே காணாமல் போய்விட்டார் என்று கேள்விப்பட்டதும் தாய்க்குரிய அன்பு இதயத்தோடு அவரைத் தேடிக் கண்டுபிடித்து தன் உள்ளக் குமுறலை இயேசுவிடம் கூறினார். அந்த நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இயேசு போதகர் நடுவில் நின்று அவர்கள் சொல்வதைக் கேட்டும் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் போதகர்கள் அனைவரும் குழந்தை இயேசுவின் ஞானத்தைக் கண்டு வியந்தார்கள். ஆனால் அன்னை மரியாள் தன் மகனைப் பார்த்து "மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே " (லூக்: 2: 48) என்று கூறினார். அதற்கு குழந்தை இயேசு அவர்களிடம் " நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவலில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா? "என்று கூறினார். இவ்விர்த்தைகள் அன்னைக்கு அதிர்ச்சியையும் கவலையையும் கொடுத்தாலும் அதைத் தன் உள்ளத்தில் நிறுத்தி பதித்து வைத்ததாக வாசிக்கின்றோம். ஒரு தாயாக தான் பெற்ற குழந்தை காணாமல் போன சூழலில் தேடி அலைந்தார். கண்டுபிடித்தவுடன் தாய்க்குரிய மனநிலையில் தன்னுடைய உள்ளத்தின் கேள்வியை இயேசுவிடம் கேட்டார். ஆனால் இயேசு இறைவனுக்குரிய மனநிலையில் இறைத் தந்தையின் திருவுளம் தான் தன் வாழ்வின் முதன்மை என்பதை வெளிப்படுத்தினார். அன்னை மரியாவின் இதயம் இயேசுவின் மனித இறை இயல்பை ஏற்றுக்கொண்ட இதயம். எனவேதான் தன் மகனையே அவ்வுலக மீட்பிற்காக சிலுவையிலே பலியாக கொடுக்கும் அளவுக்கு துணிந்த இதயமாக மாறியது. ஒரு தாய்க்கு மிகவும் கொடுமையான ஒரு நிகழ்வு என்றால் தன்னுடைய மகனின் இறப்பை பார்ப்பது. அந்த நிலைதான் அன்னை மரியாவுக்கும் வந்தது . ஆனால் அன்னை மரியாவின் இதயம் இயேசுவின் இதயத்தைப் போல தியாகம் நிறைந்த இதயமாகவும் மாசற்ற இதயமாகவும் இருந்ததால் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நல்ல இதயமாக இருந்தது.

எனவே நம்முடைய அன்றாட வாழ்விலும் அன்னை மரியாவின் இதயத்தைப் போல நம்முடைய இதயமும் மாற நம்மை முழுமையாகக் கடவுளிடம் ஒப்படைப்போம். அன்னை மரியாவின் நல்ல நற்பண்புகளை நம்முடைய வாழ்வின் மதிப்பீடுகளாக மாற்ற முயற்சி செய்வோம். அன்னை மரியாவின் மாசற்ற இதயம் இவ்வுலகிற்கு மீட்பையும் மாற்றத்தையும் கொடுத்தது. எனவே நாமும் கடவுளின் மீட்பு இந்த உலகத்தில் அனைவருக்கும் கிடைக்கப் பெற அன்னை மரியாளைப் போல நல்ல இதயமாக மாறுவோம். தாய்க்குரிய மனநிலையில் நம்மோடு வாழக்கூடிய எல்லா மனிதர்களையும் அன்பு செய்ய முயற்சி செய்வோம். அவ்வாறு வாழும் பொழுது நம் வாழ்விலே முழுமையில் அன்னை மரியாவைப் போல பெறமுடியும்.

இறைவேண்டல் :

அன்பின் இதய ஆண்டவரே! அன்னை மரியாவின் மாசற்ற இதயப் பெருவிழாவை கொண்டாடும் இந்த நாளில் அன்னை மரியாவைப் போல எங்கள் இதயத்தையும் மாற்றும் நல்ல மனதை எங்களுக்குத் தாரும். ஆமென்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  ஈஸ்டர் பெருவிழா