அன்னையின் அன்பு!

அன்னை என்றாலே அன்பைப் பொழிந்து அரவணைப்பவள். அழுகின்ற குழந்தையின் குரல் ஒலி கேட்டு விரைந்தோடி அமுதூட்டி சீராட்டித் தாலாட்டி ஆறுதலையும், அன்பையும் அளிப்பவள். அன்னை மட்டுமே. 'தான்', 'தனது' என்று எண்ணாது தன் உயிரையும் கூடத் தனது பிள்ளை நலமுடன் வாழத்தியாகமாக்கிடத் தயங்காதவள். இத்தகு தியாகமிகு உள்ளம் கொண்டவளே அன்னை மரியா! இவர் இயேசுவுக்கு மட்டும் தாயல்ல, நம் அனைவரின் தாயுமானவர். இயேசுவின் இன்ப-துன்பங்களில் அவரின் தாய் அன்னை மரி உடனிருந்து ஊக்குவித்து இறைத் திட்டத்தினை ஏற்று என்றுமே இறைவனோடு இணைந்து வாழ வழி காட்டியவள். அந்த அன்னை மரியாள் நம் தேவைகளில் நமக்காகப் பரிந்து பேசி இறைவனிடமிருந்து அருளையும், ஆசீரையும் பெற்றுத் தருபவள்.

இறைமகன் இயேசு தன் வயிற்றில் உருவாகி மானிட மகனாய் பிறக்க இறைத் திட்டத்தை ஏற்ற அந்த நாள் முதல் மரியா நற்கருணை நாதரைத் தாங்கிய தேவாலயமானார். எனவேதான் அன்னை ஓர் ஆலயம். அவரில் நாம் தஞ்சம் புகுந்திடின் பாவ உலகில் இருந்து பரிசுத்தமாய் வாழ நமக்குக் கற்றுக் கொடுப்பவர் அன்னை மரியா. எனவே நமக்கெல்லாம் அன்னையாய், உலகு போற்றும் உத்தமியாய் வாழ்ந்தவர் இயேசுவின் அன்னை தேவமாதா. எனவே தான் தாயிற் சிறந்த கோவிலுமில்லை என்று அன்னையைப் பாராட்டி அன்னை மரியாவின் பெயரில் பல கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.

பாவமின்றி பிறந்த அன்னை
இறைவன் யாரை முன்குறித்து அழைத்தாரோ அவர்கள் அனைவருமே இறைவனின் இரக்கத்தைப் பெற்றவர்கள். பாவமின்றி பரிசுத்தமாய் பிறந்ததால் மரியா பெண்களுக்குள் பேறுபெற்றவள். எலிசபெத் "ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? ஏனென்றால் இயேசுவைத் தாங்கியுள்ள நீர் பேறுபெற்றவள்" என்று வாழ்த்தினார். எனவே இயேசுவின் தாயாவது பெரும் பாக்கியம்.

ஆனால் அந்தப் பாக்கியத்தை பெறுவதற்கு முன் கன்னிப் பெண் மரியாள் பட்ட மனவேதனை அளவிட முடியாது. அச்சம் ஒரு புறம் வாட்டியது. ஆனால் தூய ஆவியார் இறைத்திட்டத்தை ஏற்றிடத் துணிவு கொடுத்தார். மனித இயல்பு கொண்ட உடல் உண்டென்றால், ஆவிக்கு உரிய உடலும் உண்டு (1கொரி 15:41) என்ற பவுலடியாரின் வாக்கின்படி மனித உடலில் புனிதமும், செபமும் கலந்து இறைத் திட்டத்தை ஏற்று வாழ்ந்தவர் அன்னை மரியா. எனவே தன் உடல் தூய ஆவியின் ஆலயம் என்பதை இதயத்தில் நிறுத்தி பாவமின்றி பிறந்த மரியா பரிசுத்தமாய் வாழ்ந்து இறப்பு வரை பாவ நாட்டத்திற்கு இடம் கொடாது இறைத் திட்டத்தை ஏற்று வாழ்ந்ததால் இறந்தபின் இறைமாட்சியில் பங்குபெற உடலோடும், உள்ளத்தோடும் விண்ணேற்றம் சென்று மகிமையின் அரசியாய் பரலோகத்திற்கு ஆரோபணமான இராக்கினி என்று போற்றப்படுகின்றார்.

ஆவியின் அருளால் நிரப்பப்பட்டவர்
பரம தந்தை யார்மீது அன்பு கொண்டுள்ளார் எனில் தம் சித்தம் அறிந்து செயல்படுபவரை தாம் குறித்து வைத்துள்ள திட்டம் நிறைவேற பெயர் சொல்லி அழைக்கின்றார். தம் தாயின் வயிற்றில் உருவாகும் முன்பே அறிந்துள்ளார் (எரே 1:5) அது மட்டுமல்ல, கருவிலிருந்தே என்னை மிகக் கவனமுடன் சுமந்து வந்த தந்தையே (எசா 46:3) என்றுதைப் பெற்றவர்கள். பாவமின்றி பரிசுத்தமாய் பிறந்ததால் மரியா பெண்களுக்குள் பேறுபெற்றவள். எலிசபெத் "ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? ஏனென்றால் இயேசுவைத் தாங்கியுள்ள நீர் பேறுபெற்றவள்" என்று வாழ்த்தினார். எனவே இயேசுவின் தாயாவது பெரும் பாக்கியம். கடவுளின் அன்பும், பராமரிப்பும் பற்றி வியந்து போற்றுகின்ற மரியாவை கடவுள் கடைக்கண் நோக்கினார். "இதோ என் உள்ளங்கையில் உன்னை பொறித்து வைத்துள்ளேன்" என்று அன்னை மரியாவுக்கு அடைக்கலப் பாறையாய், அரணாய் இருந்து பாதுகாத்து வந்தவர் நம் பரம தந்தை. எனவே தம் ஒரே மகன் மானிட உருவெடுத்து மண்ணில் பிறந்திட அன்னை மரியாவைத் தாயாகத் தேர்ந்தெடுத்தார். வானதூதர் வாழ்த்துக் கேட்டு அஞ்சிய இளம்பெண் மரியாவிடம் "மரியா, அஞ்ச வேண்டாம், கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர்... தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்" என்ற இச்செய்தி மரியாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தவே, "தூய ஆவி உன்மீது வரும், உன்னத கடவுளின் வல்லமை உன்மேல் நிழலிடும்" என்ற இறைவார்த்தையை நம்பி இளம் வயதிலேயே மரியா ஆவியின் அருள் பெற்று வாழ்ந்தார். "உன்னை பெரிய இனமாக்கி உனக்கு ஆசி வழங்கிடுவேன்" என்று ஆபிரகாமுக்கு வாக்களித்த அதே கடவுள் மரியாவைக் கடவுளின் தாயாகத் தேர்ந்தெடுத்து, ஆசீர் வழங்கி, தூய ஆவியின் வல்லமையால் நிரப்பினார்.

அன்று "இதோ நான் ஆண்டவரின் அடிமை" என்று கீழ்ப்படிந்த மரியா இயேசுவின் தாயாகி மீட்புத் திட்டத்தில் பங்காளியுமானார். எனவே இயேசுவின் மரிப்பு சீடர்களை அச்சுறுத்திய அவ்வேளையில் சீடர்களை ஒன்றுகூட்டி செபித்தார். இவ்வாறு அன்னை மரியும், சீடர்களும் ஒருமனப்பட்டுச் செபிக்கையில் அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டார்கள். எனவே, சீடர்கள் தூய ஆவியால் நிரப்பப்பட அன்னை ஒரு கருவியாய் இருந்தார். கோழைகளாயிருந்த சீடர்கள் துணிவு பெற்று ஆவியின் வல்லமையால் இறை வார்த்தையைப் போதிக்கத் தொடங்கினார்கள். நம் கத்தோலிக்கத் தாய் திருச்சபை அன்று உருவாகி இறையாட்சி புத்துயிர் பெற்றது. "உறுதி தரும் ஆவியைப் புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்" என்றும், "என்னைத் தூய்மைப் படுத்தியருளும்" என்றும் வேண்டும் சீடர்களும் இயேசுவின் சாட்சிகளாய் வாழ்ந்திட ஆவியின் வல்லமையுடன் செயல்புரிய மரியா இடைவிடாது செபித்ததால் எல்லாரும் தூயஆவியின் வல்லமை பெற்றனர். இவ்வாறு அன்னை மரி மட்டுமின்றி திருச்சபையின் உறுப்பினர்கள் எல்லோரும் தூயஆவியின் கொடைகளைப் பெற்று ஒற்றுமையுடன் வாழ்ந்திட அன்னை மரியாவே அடிப்படை. எனவே, நம் கத்தோலிக்கத் திருச்சபை அன்னை மரியாவைத் தலைமையாய் கொண்டு செயலாற்றி தாய் திருச்சபை என்று அழைக்கப்படுகிறது. இயேசு பிறக்கும் முன் தூயஆவியால் நிரப்பப்பட்ட அன்னை, அவரின் இறப்பிற்குப் பின்பும் தூயஆவியால் நிரப்பப்பட்டதும் அன்னையின் மகிமையை நமக்கு உணர்த்துகிறது.

மரியாவின் மகிமை அவரது விண்ணேற்பில் நிகழ்கின்றது.
விதையானது பூமியில் மடிந்து புது உரு எடுக்கின்றது. அதுபோல் அன்னை மரி பாவத்திற்கு மரித்து பரமன் கையில் தன்னை ஒப்புக்கொடுத்ததால் அவர் பரிசுத்தமாய் வாழ்ந்திட தூய ஆவி துணை நின்றார். எனவே, உலகில் உள்ள எல்லாப் பெண்களையும்விட அன்னையின் வாழ்வு வேறுபட்டுக் காணப்பட்டது. அந்த அன்னை தன் ஒரே மகன் இறந்தபின் கண்ணீர் விட்டு அழுதாலும் இறைத்திட்டம் இதுவாயிற்று என்று இழப்பையும் ஏற்று துணிவு பெற்றார். மானிட மகன் இயேசு மரித்தபின் அவரின் உடலை புதுத் துணியால் சுற்றி கல்லறைக்குள் அடக்கம் செய்தனர். ஆனால் இயேசு உயிர்த்தார் என்று தன் காதில் கேட்டதும் சீமோனும், பேதுருவும் கல்லறைக்கு ஓடி வந்தனர். அங்கு துணிகளையும், இயேசுவின் தலை மூடியிருந்த துண்டையும் கண்டனர். இயேசு மனித உரு எடுத்து மண்ணில் பிறந்து அடக்கம் செய்யப்பட்டாலும் இறைமகன் என்பதை நிரூபிக்க வெற்றி வீரராகக் கொடி ஏந்திய வண்ணம் உயிர்த்து விட்டார். உயிர்த்த இயேசு நாற்பதாம் நாள் விண்ணுலகு சென்றார். தாம் விண்ணுலகு அடைந்தது போல் பாவமின்றி பிறந்த தம் பாசமிகு அன்னையையும் விண்ணிற்கு அழைத்துக் கொண்டார்.

முதல் மனிதர் பாவம் செய்தபோது ஏதோன் தோட்டத்திலிருந்து வெளியேற்றிய தந்தை அவரின் ஒரே மகன் இயேசுவின் உயிர்ப்பால் நமக்கும் புது வாழ்வு தந்தார். இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்த தூய ஆவி உங்களுள் குடிகொண்டி ருந்தால் கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடலையும் உயிர்பெறச் செய்வார். பாவத்தில் பிறந்த நாமே உயிர்த்தெழுந்தால் பாவமின்றி பரிசுத்தமாய் வாழ்ந்த அன்னை மரி உயிர்த்தெழுதலும் உண்மையே. இவ்வாறு உடல் உள்ளம், ஆன்மா அனைத்தையும் கடவுளுக்கு அர்ப்பணித்த இயேசுவின் தாய் விண்ணிற்கு எடுத்துச் செல்லப்பட்டு பரலோக அரசியாய் முடி சூட்டப்படும் இப்புனித நாளே அன்னையின் விண்ணேற்பு நாளாகும்.

மாட்சியும், மகிமையும் பெறும் அன்னை மரி இறைமகன் இப்பூமியில் பிறந்து, மரித்து உயிர்த்தார். அவரின் பிறப்பு-இறப்பு-உயிர்ப்பால் இறைத் திட்டம் நிறைவேற்றப்பட்டு நாம் பெற்றோம் புதுவாழ்வு. பாவத்திலிருந்து விடுதலை அடைந்தோம். நாம் விடுதலை பெற்று உரிமை வாழ்வு பெற்றிட ஆணிவேராய் நின்று செயல் பட்டவர் அன்னை மரி.

அன்னை மரி தன் ஒவ்வொரு செயலிலும் இறைதிட்டத்தை நிறைவேற்றியவர். நீங்கள் உண்டாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும் கடவுளுடைய மாட்சிக்கே செய்யுங்கள் என்ற இறைவார்த்தையின்படி வாழ்ந்தவர் அன்னை மரியா. எனவே இயேசு எவ்வாறு தந்தையின் திட்டத்தை நிறைவேற்ற மரித்து உயிர்த்தாரோ, அவ்வாறே அன்னை மரியும் இறைச் சித்தத்தை நிறைவேற்றி இறந்து மரித்தார்.

பாவமின்றி பிறந்த அன்னை மரியா வானதூதர்கள் புடைசூழ விண்ணிற்கு எடுத்துச் செல்லப்பட்டு முடி சூட்டப்பட்டார். எனவேதான் 'ஜென்மப் பாவமின்றி உற்பவித்த இராக்கினியே, பரலோகத்திற்கு ஆரோபணமான இராக்கினியே' என்று அன்னையின் மன்றாட்டு மாலையில் போற்றுகிறோம்.

இத்திருநாளைத் தாய் திருச்சபை புனித நாளாய் கொண்டாடி மகிழ்கின்றது. மகிழ்ச்சி பொங்கும் இப்புனித நாளில் நம் இந்திய நாடு அந்நியர் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது சாலப் பொருந்தும். பாவக்கட்டுகளாகிய பகை, சண்டை, சச்சரவு, வெறுப்பு, பொறாமை, அழுக்காறு, சீற்றம், வெறுப்பு ஆகிய அடிமைக் கட்டுகளில் இருந்து நமக்கு விடுதலை பெற்றுக் கொடுத்தார் அன்னை மரி. பின்பு புதுவாழ்வு பெற்று தூய ஆவியால் நிரப்பப்பட்டு ஆவியின் கனிகளான அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் ஆகிய பண்புகளைப் பெற்று இயேசுவின் சாட்சிகளாய் ஒற்றுமையாய் வாழத் துணிவு பெற்றோம்.

இவ்வாறு நம் இந்திய நாட்டில் அடிமை அச்சம் நீங்கி, வேறுபாடுகளைக் களைந்து யூதரானாலும், கிரேக்கரானாலும், அடிமைகளானாலும், உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் தூயஆவியின் ஒரே உடலாய் இருக்கும்படி இந்திய மக்கள் சாதி சமய வேறுபாடுகளைக் களைந்து வாழ்வதே உண்மையான சுதந்திரமாகும்.

'வாழ்க மரியே' என்று வாழ்த்தி விண்ணக அரசி என்று போற்றப்படும் அன்னை மரியாவின் அருள் நம் இந்திய நாட்டில் நிலைத்திட 'ஜெய்ஹிந்த்' பாடி பாரத மணிக் கொடியைப் பாரில் பறக்கவிடுவோம். மாட்சிமிகு அன்னையின் மங்கா அடிச்சுவட்டில் உண்மை, நீதி, அன்பு ஓங்கி இந்திய நாடு எல்லாருக்கும் உரியது என்று இது எம் தாய் நாடு என்று தாயின் பெருமையைப் பாராட்டி நாமும் மகிமை பெறுவோம்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  ஈஸ்டர் பெருவிழா