cross

தவக்காலம் இறையருளின் காலம்.

- தந்தை சகாய பெஞ்சமின் -

தவக்காலம் இறையருளின் காலம். இறை இரக்கத்தின் காலம். காலங்களில் சிறந்தது வசந்தம் என்பார்கள். ஆனால் காலங்களில் உயர்ந்தது புனிதமானது தவக்காலம்.

தவக்காலம் ஒரு புதிய வாழ்வின் தொடக்கம். தன்னையே வருத்தித் தவத்தில், செபத்தில் நிலைத்து இறைவனைக் காணும் காலம். புண்ணயங்களில் சிறந்து விளங்கப் புனிதத்தில் உயர்ந்திட நம்மை அழைப்பது தவக்காலம்.

உலகத் தேவைகளை மறந்து ஆன்மத் தாகத்தைத் தணிக்கத் தூண்டும் காலம். தவக்காலம் புலன்களை அடக்கி வெளியுலகப் பயணங்களைக் குறைத்து ஆன்மீகப் பயணமதை உள்நோக்கி மேற்கொள்ள நம்மை அழைக்கும் காலம் தவக்காலம்

இந்தத் தவக்காலம் விபூதி புதனன்று திருப்பலியில் மக்களின் நெற்றியில் சாம்பல் பூசுவதின் வழியாகத் தொடங்குகின்றது. இந்தச் சாம்பலானது மக்களின் உளமார்ந்த மனமாற்றத்தின் வெளி அடையாளமாகவும் தவத்தின் த வக்காலம் இறையருளின் குறியீடாகவும் மனிதனின் நிலையற்றத் தன்மையைக் குறிப்பதற்காகவும் நெற்றியில் பூசப்படுகிறது.

சாம்பல் புதன் தொடங்கி உயிர்ப்பு நாள் வரை மொத்தம் 40 நாட்கள் இந்தத் தவக்காலம் தொடருகின்றது. இக்காலம் முழுவதும் ஒறுத்தல்கள், உணவுக் கட்டுப்பாடு, ஆடம்பரம் மறுத்தல், சிலுவைப்பாதைச் செபித்தல் தியானித்தல் வழியாக இயேசுவின் பாதையில் பயணம் செய்ய அழைக்கின்றது. நிலை வாழ்வு நோக்கிய பயணத்தில் வரும் தடைகளாகிய பாவங்களை, பலவீனங்களைக் கடந்து முன்னோக்கிச் செல்ல அழைக்கும் காலம் இந்தத் தவக்காலம்.

இயேசுவின் பாடுகளைத் தியானித்து.அவரது துன்பங்களோடு நமது துன்பங்களையும் இணைத்துத் துன்புறும் மக்கள்மீது அக்கறை கொள்ளவும் அவர்களுக்கு உதவவும் அழைப்பு விடுக்கும் தவக்காலம் இறையருளின் காலம். இந்தத் தவக்காலம்.

இன்று நாம் அவசரமான அதிவேகமான உலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். எதையும் உடனே பெற வேண்டும் அடைய வேண்டும் அனுபவிக்க வேண்டும் என்று துடிக்கும் மனிதர்கள். எங்கும் எதிலும் அவசரம், வேகம். இட்லி . மாவு முதல் இதயங்கள் வரை எல்லாமே 'ரெடிமேடாக'க் கிடைக்கின்றது. அதுபோல அன்பும் 'ரெடிமேடாகக் ' கிடைக்குமா என்று ஏங்கும் மனிதர்கள். காலை முதல் மாலை வரை எங்கே போகின்றோம் எதற்காக வாழ்கின்றோம் ஏன் உழைக்கின்றோம் என்று தெரியாமல் பொருட்களைத் தேடி, பணத்தைத் தேடி அலையும் மனிதர்கள் மத்தியில் இயேசுவின் வாழ்வையும் அவரது சிலுவையையும் நமதாக்கி நமது வாழ்க்கைப் பயணத்தில் வரும் துன்பங்களுக்கும் சிலுவைகளுக்கும் அர்த்தம் உண்டு என்பதனை உணர அழைக்கும் காலம் இந்தத் தவக்காலம்.

நமது குடும்ப உறவுகளையும் மனித மாண்புகளையும் இறைவனோடு உள்ள நமது அன்பையும் புதுப்பித்துக் கொள்ள நம்மை அழைக்கும் காலமிது

அன்புக்குரியவர்களே! இயேசுவின் இலட்சியப் பயணம் சிலுவையோடு, மரணத்தோடு முடிந்து விடவில்லை . அஃது அவரது உயிர்ப்பிலே முழுமையடைந்தது. எனவே நமது செபங்களும் ஒறுத்தல்களும் தவக்காலப் பக்தி முயற்சிகளும் கல்லறையோடு முடிந்து விடாமல் நமது உயிர்ப்பு என்னும் விடியலை நோக்கித் தொடர்ந்து சென்றிட அவரது தொடங்குவோம், வாழ்வோம் இந்தத் தவக்காலத்தை….

நன்றி : மாதாமையக் கடிதம்


sunday homily


முகப்பு பக்கம்
வத்திக்கான் வானொலி
கத்தோலிக்க இதழ்கள்
ஞாயிறு வாசகம்
விருந்தினர் பக்கம்
உம் வாக்கே விளக்கு!
சென்னை பங்குதலங்கள்
நூலகம்
திருத்தலச் சுற்றுலா
தவக்கால சிந்தனைகள்
ஒலியும் ஒளியும்
அன்னை தெரேசா
கிறிஸ்மஸ் மலர்கள்
பொங்கல்
செபமாலை
பாடல்கள்
செபமே ஜெயம்





A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com