இன்றைய உலகில் திருஅவையில் திருமணத்தின் மாண்பும் குடும்பமும்
அருள்பணி. ஜூட் பிரகாசம்.

முன்னுரை:
தனிமனித சமுதாய கிறிஸ்தவ சமுதாய நலன்கள் இன்றைய சமூகத்தின் அமைப்பான திருமணம், குடும்பம் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புக் கொண்டுள்ளன. திருமணம், குடும்பம் எனும் அன்புச் சமூகத்தை வளர்ப்பதற்கு மணமக்கள், பெற்றோர் ஆகியோரின் ஒத்துழைப்பும், உதவிகளும் தேவை. திருமணம், குடும்ப மாண்பு எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. பலதரப்பட்ட பழக்கம், மனமுறிவு, தான்தோன்றித் தனமான காதல் உறவுகள், மற்றும் சில சீர்கேடுகளால் திருமணம் மற்றும் குடும்ப அமைப்புகளின் மாண்பு தேய்ந்து வருகிறது. மேலும் தன்னலம், கட்டுக்கடங்கா காமம், தவறான முறைகளால் மகப்பேற்றை தடுத்தல் போன்றவற்றால் திருமண அன்பு இழிவுபடுத்தப்படுகிறது. மேலும் இன்றைய பொருளாதார, சமூக உளவியல், அரசியல் சூழல்கள் குடும்பத்தில் பெரும் சிக்கல்களை தோற்றுவிக்கின்றன. திருமண மாண்பைக் குறித்து மக்களுக்கு தெளிவும், ஊக்கமும் அளிக்க திருச்சங்கம் இக்கட்டுரையின் வாயிலாக விரும்புகிறது (இஉதி.47)
திருமணம் என்பது ஒப்பந்தமா? உடன்படிக்கையா?
திருச்சபையின் நெடிய வரலாற்றில் விசுவாசிகளின் நம்பிக்கை அனுபவத்தின் அடிப்படையில் பிளாரன்ஸ் திருச்சங்கத்தில் (1439) தான் திருமணம் அருட்சாதனமாக அறிவிக்கப்பட்டது. திருமணம் என்பது திருமுழுக்கு பெற்ற ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இறுதிவரை சேர்ந்து வாழ ஏற்படுத்தப்படும் ஒரு ஒப்பந்தம் ஆகும். ஒப்பந்தம் என்னும் சொல் உலகப் போக்கை குறிக்கக்கூடியது. இது தொழில் துறையில் அல்லது வர்த்தக துறையில் இருவர் ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு உடன்பாடு. தொழில் நிறைவுற்றதும் தொடர்புகளும் உறவுகளும் மறைகின்றன. காலாவதியாகின்றன. இத்தகைய உலக சார்ந்த சொல்லால் மணமக்கள் உடல் மீது கொள்ளும் உரிமைக்கு மட்டும் அழுத்தம் கொடுப்பதாகத் திருமணம் குறித்த இறையியல் இருந்தது. திருமணம் ஒர் ஒப்பந்தமாக கருதப்பட்டதால் குழந்தைகளை பெற்றெடுத்தல் கல்வியில் வளர்த்தல் ஆகியவை நிறைவு பெற்ற பிறகு இனிமேல் அடைவதற்கு எதுவும் இல்லை என்ற கணிப்பில், உறவில் ஒரு தொய்வு, இடைவெளி எழுந்தது.
எனவே இரண்டாம் வத்திக்கான் சங்கம் முன்வரையுள்ள இறையிலார்கள் உடலுறவை குறைத்து மதிப்பீடு செய்தார்கள். அதற்கு மாறாக கற்புடைமையை மிதமிஞ்சிய மதிப்பீடுடன் விவரித்தார்கள். திருமணம் இம்மண்ணிற்கு மக்களைப் பெற்றுக் கொடுக்கிறது, ஆனால் கற்பு விண்ணுலகிற்கு மக்களைப் பெற்றுக் கொடுக்கிறது என்று புனித எரோம் கூறினார். திருமணத்தின் குறுகிய இறையியலுக்கு காரணம் கடந்த காலங்களில் இயற்கை சட்டத்தின் (Natural Law Methodology) அடிப்படையில் அதன் இறையியல் ஆய்வுகள் நடத்தப்பட்டது. ஆனால் இரண்டாம் வத்திகான் சங்கம் இறைவெளிப்பாட்டை, அடிப்படையாகக் கொண்ட புதிய ஆய்வு முறையை பின்பற்றியது.
எனவே தான் திருமணம் ஒர் உடன்படிக்கை என்னும் விவிலியச் சொல்லை சங்கம் பயன்படுத்துகிறது. மேலும் திருமண உடன்படிக்கையால் ஒருவருக்கொருவர் உதவியும், பணியும் செய்கின்றனர். விவிலியத்தில் உடன்படிக்கை என்னும் சொல் இறைவனுக்கும், மானிடருக்கும் இடையே உள்ள ஆளோடு ஆள்சார்ந்த ஆழமான நம்பிக்கை மிகுந்த, பிரிக்க முடியாத அன்புறவை எடுத்துக்காட்டுகிறது. எனவே உடன்படிக்கை என்னும் சொல் திருமணம் என்னும் ஆழமான இறையியலுக்கு வித்திட்டது. இது அன்பிற்க்காகவே ஏற்படுத்தப்பட்ட திருவருட்சாதனம். எனவே அது நம்பிக்கையாளர்களின் சிறு கூட்டம், சிறு திருச்சபை, இல்லத்திருச்சபை ஆகும்.
அன்புறவை திருமணத்தில் முன்னிலைப்படுத்துவதாலும் மணமக்களின் அழைப்பை அவர்களது திருமண வாழ்வில் பேணி வளர்ப்பதாலும் திருமணமும் இறைவனுடைய அழைத்தலே என்னும் பவுல் அடியாரின் கூற்றுக்கு சங்கம் வலுவூட்டியது.
திருமணம், குடும்பம் ஆகியவற்றின் புனிதத்தன்மை:
திருமணம் அதன் விளைவான குடும்பம் வாழ்வின் வாயிலாக ஒரு உறவு சமூகத்தை கடவுள் படைப்பின் துவக்கத்திலேயே ஏற்படுத்தினார். இந்த சமூக உறவு ஒரு பிரிக்கப்படாத, ஒருவருக்கொருவர் அளித்துக் கொள்ளும் உடன்படிக்கையின் மீது கட்டப்பட்டுள்ளது. மணமக்கள் ஒருவருக்கொருவர் தங்களையே கையளித்து ஏற்றுக்கொள்ளும் மனித செயல்பாடுகள் மூலம் சமுதாயத்தின் முன்னிலையில் நீடித்து நிற்கும் அமைப்பாக உள்ளது. இது ஒரு புனிதமான பிணைப்பு. (இஉதி:48)
கிறிஸ்து திருஅவை மீது அன்புக் கொண்டு அதற்காகவே தம்மை ஒப்புக்கொடுத்ததுப் போல மணமக்களும் ஒருவருக்கொருவர் தங்களைக் கையளித்து அன்பை நிலைத்திருக்க வேண்டும் என்று கற்பித்துள்ள இயேசு அவர்களோடு எந்நாளும் தங்கியிருக்கிறார். (இஉதி: 48) திருமண அன்பு மணமக்களை கடவுளிடம் இட்டுச் செல்கிறது. பெற்றோராக தங்கள் உயரியப் பணியை ஆற்ற உதவியும் ஊக்கமும் பெறுகின்றனர். அவர்கள் தங்கள் கடமைகளை ஆற்றிட தனிப்பட்டதோர் அருளடையாளத்தால் வலுப்பெறுகின்றனர். இறை வேண்டலாலும், முன்மாதிரியான வாழ்வாலும் பிள்ளைகளும், குடும்பத்திலுள்ள உறவுகளும் மனித முதிர்ச்சி, மீட்பு ஆகியவற்றுக்கான வழிகளை எளிதாக கற்றுக் கொள்கிறார்கள். மகப்பேறு ஒன்றிப்பு நிலை, நம்பகப்பண்பு, உறவுகளின் ஒத்துழைப்பு ஆகியவற்றின் வழியாக கிறிஸ்துவ குடும்பம் மீட்பரின் உடன்னிருப்பையும், திரு அவையின் இயல்பையும் வெளிப்படுத்துகிறது. (இஉதி: 48)
திருமண அன்பு:
தம்பதியருக்கிடையிலான அன்பு எல்லோராலும் மதிக்கப்படுகிறது. இந்த அன்புக்கும் உள்ளத்து உணர்வுகளுக்கும் உடல் சார்ந்த செயல்களுக்கும் தனிப்பட்ட மாண்பை அளிக்கும் திறன் உண்டு. தனிப்பட்ட அருள் மற்றும் தமது அன்புக் கொடைகளால், கடவுள் இந்த அன்பை நிலைப்படுத்தி உயர்த்தி நிறைவு செய்கிறார் (இஉதி: 49) திருமண அன்பு தன்னலமற்று செயல்படும்போது முழுமையடைகிறது. வெறும் உடல் சார் தேவைக்காக தன்னலத்தோடு இந்த அன்பு தேடப்படும் போது அந்த காம உணர்ச்சியும் விரைவில் பரிதாபமான நிலையில் மறைந்து போய்விடும். திருமண அன்பு ஒருவருக்கொருவர் அளிக்கும் வாக்குறுதியால் முத்திரையிடப்படுகிறது. கிறிஸ்துவின் அருளால் தூய்மைப்படுத்தப்படுகிறது. இன்பத்திலும் துன்பத்திலும், உடலாலும், உள்ளத்தாலும் முறிவுப்படாத நிலையில் நம்பகத்தன்மை கொண்டது. இவ்வன்பில் பிறர்மனை விரும்புதலுக்கும் மனமுறிவிற்கும் இடமில்லை.
பொதுநிலையினர் அருட்ப்பணியாளர்களின் கடமைகள்:
அருட்ப்பணியாளர்கள் வழக்கமாக ஆற்றும் அருள் பணிகளுக்கு இடையே மணவாழ்வின் அழைப்பை பெற்றவர்களுக்கு திருமணம் குடும்ப வாழ்வை பேணி வளர்ப்பது குறித்து அறிவுறுத்துவதும் அவர்களின் துன்ப வேளையில் இரக்கத்தோடும் பொறுமையோடும் அவர்களை திடப்படுத்தி தேற்றுவதும் அருட்ப்பணியாளர்களின் கடமை. குடும்ப நல் இயக்கங்கள் இளையோரையும் புதிதாக மனமான தம்பதியரையும் ஒருங்கிணைத்து படிப்பினை மற்றும் செயல் திட்டங்களால் அவர்களுக்கு குடும்ப சமூக மறைப்பணி ஆகியவற்றை பயிற்றுவிக்க முயற்சிக்கலாம். (இஉதி : 52)
முடிவுரை:
மணமக்களே அன்பாலும் மன ஒற்றுமையாலும் ஒருவரை ஒருவர் புனிதப்படுத்தி இணைந்திருப்பார்களாக. அவர்கள் வாழ்வின் ஊற்றா னக் கிறிஸ்துவை பின்பற்றுவார்களாக. தம்பதியர் தங்கள் அழைத்தலில் மகிழ்ச்சி மற்றும் தியாகத்தினுடே அன்பில் நிலைத்திருந்து தங்கள் வாழ்வில் சான்று பகிர வேண்டும். முடிவாக திருமணம் மற்ற திருவருட்சாதனங்களுக்கு குறைந்தது அல்ல. மாறாக அவற்றுக்கு அது இணையானது என அதன் மாண்பை நிலை நாட்டியது இரண்டாம் வத்திக்கான சங்கத்தின் ஒரு மாபெரும் புரட்சியாகும். ( இஉதி : 52)