கோதுமை மணி மண்ணில் ...

அருள்தந்தை எல்.எஃஸ் ஜெரோம்.சே.ச

wheedseed“கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.” (யோவான் நற்செய்தி 12: 24)

தாவர உலகம் மீண்டும் உயிர்பெற்று எழும் வசந்தக் காலத்தில் இயேசுவின் இந்தக் கூற்று பல எண்ணங்களை உள்ளத்தில் விதைக்கின்றது. விதைக்கப்பட்ட இந்த எண்ணங்கள் மிகுந்த விளைச்சலைக் கொடுக்க வேண்டும் என்பது நம் எண்ணம், நம் வேண்டுதல். வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தோருள் கிரேக்கர் சிலரும் இருந்தனர். இவர்கள் கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, “ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்” என்று கேட்டுக் கொண்டார்கள். (யோவான் நற்செய்தி 12: 20-21) ஆர்வமாக, ஆவலாகத் தன்னைக் காண வந்த கிரேக்கர்களை இயேசு வரவேற்று, அவர்களுக்கு நம்பிக்கை தரும் நாலு வார்த்தைகளைச் சொல்லியிருக்கலாம். அதற்கு நேர் மாறாக, இயேசு கூறும் வார்த்தைகள் கலக்கத்தை, அச்சத்தை உருவாக்கும் வார்த்தைகளாக ஒலிக்கின்றன. எருசலேமுக்கு கிரேக்கர்கள் ஏன் வந்தார்கள்? அவர்கள் இயேசுவை ஏன் காண விழைந்தார்கள்? அவர்களிடம் இயேசு ஏன் இப்படி ஒரு பதிலைத் தந்தார்? என்ற கேள்விகளுக்கு அருள்தந்தை முனாச்சி என்பவர் (Fr Munachi E. Ezeogu) தன் மறையுரையில் தரும் விளக்கம் புதிதாக உள்ளது... புதிராகவும் உள்ளது. அதை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

கிரேக்கர்கள் உரோமையர்களைவிட கலாச்சாரத்தில் உயர்ந்தவர்கள். அவர்கள் மத்தியில் வாழ்ந்த உலகப் புகழ்பெற்ற மேதை சாகரடீசை அவர்கள் கொன்றது பெரும் தவறு என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். சாக்ரடீசின் கொலைக்குப் பின், எந்த ஒரு தனி மனிதரையும், அவர் பின்பற்றும் கொள்கைகளுக்கென, அவர் மக்களிடையே பரப்பிவரும் கருத்துக்களுக்கென கொல்வதில்லை என்று உறுதியான தீர்மானம் எடுத்தவர்கள் கிரேக்கர்கள். எனவே, அவர்கள் மத்தியில் பல்வேறு சிந்தனையாளர்கள் சுதந்திரமாக வாழ முடிந்தது, பேச முடிந்தது. தங்கள் நாட்டு சிந்தனைகள் போதாதென்று, பல கிரேக்கர்கள் அண்டை நாடுகளுக்கும் சென்று அங்குள்ள சிந்தனையாளர்களைச் சந்தித்து, தங்கள் அறிவைப் பெருக்கினர். சுதந்திரச் சிந்தனை கொண்ட இந்த கிரேக்கர்களில் ஒரு சிலர் இயேசுவைத் தேடி எருசலேம் நகருக்கு வந்தனர்.

wheedseed2எருசலேமில் அவர்கள் இயேசுவைத் தேடியபோது, ஒரு கசப்பான உண்மையை முதலில் கண்டுபிடித்தனர். இயேசு என்ற அந்த இளையவருக்கு எதிராக அந்நகரில் உருவாகி வந்த எதிர்ப்பு, வெறுப்பு ஆகியவை அவர்களை அதிர்ச்சி அடையச் செய்திருக்கும். எனவே, அவர்கள் இயேசுவைச் சந்தித்ததும், தாங்கள் கண்டுபிடித்த உண்மைகளை அவருக்கு எடுத்துச் சொல்லி, சிந்தனை சுதந்திரம் உள்ள கிரேக்க நாட்டுக்கு அவரைத் தங்களுடன் வரும்படி அழைத்திருப்பார்கள். அவர்கள் தந்த அழைப்பை ஏற்க மறுத்த இயேசு, தன்னுடைய நேரம் வந்துவிட்டது என்று பேச ஆரம்பிக்கிறார்.

ஊருக்குப் புதிதாய் வந்த வேற்று நாட்டினரே இயேசுவுக்கு வரப்போகும் ஆபத்தை உணர்ந்திருந்தார்கள் என்றால், இயேசுவுக்கு அது தெரியாமலா இருந்திருக்கும்? கட்டாயம் இயேசு இதை உணர்ந்திருப்பார். அந்த ஆபத்திலிருந்து தப்பித்துப் போகாமல், அதை நேருக்கு நேர் சந்திக்க அவர் முடிவெடுத்தார். அந்த கசப்பான முடிவை இன்றைய நற்செய்தியில் பல விதங்களில் கூறுகிறார்.

அவர் சொன்ன முதல் வாக்கியம்: மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. (12: 23) யோவான் நற்செய்தியில் "நேரம் வரவில்லை" என்ற வார்த்தைகள் மும்முறை சொல்லப்பட்டுள்ளன. கானாவில் நடந்த திருமணத்தின்போது மரியா அவரிடம் 'திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது' என்று சொன்னதும், இயேசு அவரிடம், “அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே” (2: 3-4) என்று முதல் முறை சொல்கிறார். மீண்டும் யோவான் நற்செய்தியில் இரு இடங்களில் அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை. (7: 30) அவரைப் பிடிக்கவில்லை. (8: 20) என்று வாசிக்கிறோம். இவ்வாறு, தன் நேரம் இன்னும் வரவில்லை என்று உணர்ந்திருந்த இயேசு, இன்று தன் நேரம் வந்துவிட்டது என்று சொல்கிறார். எதற்கான நேரம் இது? மானிட மகன் மாட்சி பெறும் நேரம்... மாட்சி பெறும் நேரம் என்றால், அதைத் தொடர்ந்து அரியணை, மணிமகுடம், அரசாட்சி என்ற தோரணையில் இயேசு பேசியிருக்க வேண்டும். அதற்கு நேர் மாறாக, இயேசு கூறியவை மேலும் புதிராக உள்ளன. அவர் தொடர்ந்து கூறிய வார்த்தைகள் காலம் காலமாக பலருடைய உள்ளங்களில் உறுதியை, வீரத்தை விதைத்துள்ள வார்த்தைகள்: “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.” (யோவான் நற்செய்தி 12: 24)

மிக எளிதான ஓர் உவமை, மிக ஆழமான உண்மைகளைக் கூறும் உவமை. கோதுமை மணி படைக்கப்பட்டதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, அது உணவாக மாறி, வேறொரு உயிரை வளர்க்க வேண்டும். அல்லது அது விதையாக மாறி, தன் இனத்தைப் பெருக்க வேண்டும். இந்த இரண்டு காரணங்களும் நிறைவேற, கோதுமை மணி தன் சுய உருவை, உயிரை இழக்க வேண்டும். இதற்கு மாறாக, கோதுமை மணியை நாம் அலங்காரப் பொருளாகவும் பயன்படுத்தலாம். ஆனால், அலங்காரப் பொருளாக இருப்பது கோதுமை மணியின் இயல்பு அல்ல.

கோதுமை மணி மாவாக அறைபட்டு அப்பமாக மாறுவதை புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார் அழகாகக் கூறியுள்ளார். தான் சிங்கங்களின் பசி தீர்க்கும் உணவாகப் போகிறோம் என்பதை உணர்ந்த அவர் சொன்ன வார்த்தைகள் இவை: "இறைவனின் கோதுமை மணி நான். சிங்கத்தின் பற்களால் அறைக்கப்பட்டு, கிறிஸ்துவின் தூய்மையான அப்பமாக மாறுவதற்காக படைக்கப்பட்ட கோதுமை மணி நான்." (I am God's wheat, ground fine by the lion's teeth to be made purest bread for Christ.)

புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார் மனதிலும் இன்னும் பல்லாயிரம் புனிதர்கள் மனதிலும் இந்த ஆவலை உருவாக்கிய வார்த்தைகள் இன்று இயேசு நமக்கு கூறியுள்ள இந்த அற்புத வார்த்தைகள்: “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.” (யோவான் நற்செய்தி 12: 24)

உணவாக மாறி மற்றவரை வாழ்விப்பதும், விதையாக மாறி தன் இனத்தைப் பெருக்குவதும் கோதுமை மணிக்கு மட்டுமல்ல, உலகில் படைக்கப்பட்ட அனைத்து தானிய மணிகளுக்கும் உள்ள இயல்பான இரண்டு காரணங்கள். தானியங்களின் இயல்பாக விளங்கும் இவ்விரு காரணங்களைச் சிந்திக்கும் இந்த வேளையில், உள்ளத்தில் எழும் நெருடல்கள் பல.

இன்றைய உலகில் உயிர் தொழில்நுட்பம் (Bio-technology) என்ற பெயரில் நாம் விதைகளோடும், பிற உயிரினங்களோடும் மேற்கொண்டுள்ள விபரீதமான விளையாட்டுக்களை இந்நேரத்தில் வேதனையோடு எண்ணிப் பார்க்க வேண்டும். 'இலாபம் திரட்டுதல்' என்ற ஒரே வெறியுடன் விதைகளில் உருவாக்கப்பட்டுள்ள உயிரணு மாற்றங்கள் (Genetically modify seeds) நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றன. மனசாட்சியை விற்றுவிட்டு, பணம் திரட்டுவது ஒன்றையே வெறியாகக் கொண்டு அலையும் Monsanto போன்ற நிறுவனங்களால் உருவாக்கப்படும் விதைகள், விதைகளே அல்ல. இந்த விதைகளை ஒரு முறை விதைத்து, அதிலிருந்து வெளிவரும் தானிய மணிகளை மீண்டும் விதைக்க முடியாது. அந்தத் தானிய மணிகளுக்குள் உயிர்தரும் கரு அழிக்கப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் தானியங்களைப் பெறுவதற்கு நாம் இந்த நிறுவனங்கள் விற்கும் விதைகளையேத் தேடிச் செல்ல வேண்டும்.

இயற்கைக்கு முரணாக, விதை என்ற இலக்கணத்தையே மாற்றி, தன் இனத்தை மீண்டும் மீண்டும் உருவாக்கும் இயல்பை விதைகளிடமிருந்து, தானியங்களிடமிருந்து பிரித்துவிடும் இந்த சுயநல நிறுவனங்களைக் குழிதோண்டி புதைக்க வேண்டும். இறைவன் கொடுத்த இயற்கையைப் பேணி வளர்க்கும் மனித முயற்சிகள் உயிர் பெற்று எழவேண்டும்... நீங்களும் நானும் இந்த மாற்றத்தைக் கொணர துணிவு பெற வேண்டும் என்று சிறப்பாக வேண்டிக் கொள்வோம்.

சுயநல வெறியில் சுகம் கண்டுவரும் நிறுவனங்களையும், அரசுகளையும், அமைப்புக்களையும் குறித்து இறைமகன் இயேசு இன்று நம்மிடம் என்ன சொல்வார் என்று கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தேன்... அதன் விளைவு இது:
சுயநலம் மண்ணில் விழுந்து மடியாவிட்டால், அது பலுகிப் பெருகி உலகைச் சீரழித்துவிடும். அது மடிந்து புதைக்கப்பட்டால், பிறர்நலம் என்ற மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.


 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு இறைமகன் இயேசு