உயிரைத் தரவைத்த உயர்ந்த அன்பு


திருமதி.ஜெபா அலங்காரம் திருச்சி

"இயேசுவை சிலுவையில் இணைத்ததெல்லாம் அன்பே தவிரஆணி இல்லை, அன்பின் சக்தியை தவிர வேறுயேதும் இல்லை". இவை திருவழிப்பாடு பாடல் வரிகள். ஆம் இயேசுவின் பாடுகளை தியானிக்கும் இந்நாட்களில் கடைசி துளி இரத்தம் வரை விட்டு வைக்கப்படாமல் பிடுங்கப்படும் அளவுக்கு கொடுமையான மரணத்துக்குக் கையளிக்கும் மனஉறுதி இயேசுக்கு எங்கிருந்து வந்தது? பாடுகளை சகிக்கும் ஆற்றலைத் தந்தது எது? உறுதியாக இயேசு நம் மேல் வைத்த அன்பு தான்.

அன்பு எனில், அது எப்படி பட்டது? தந்தைக்கும், மகனுக்கும் உள்ள அன்பு போல, முழுமையான அன்பு போல, மாசற்ற, பரிசுத்த அன்பு போல இயேசு நம்மையும் நிபந்தனையின்றி அன்பு செய்கிறார். ஆம் "என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் எங்கள் மீதுஅண்பு கொண்டுள்ளேன்" (யோவான் 15:9) என்கிறார். தந்தையுமே நாம் மீது அன்பு கொண்டுள்ளார் (யோவான்16:27) அந்த அன்பு நாம் கருவில் உருவாகும் முன்பே, நாம் ஒன்றும் இல்லாமல் இருந்தபோதே, வெறுமையாய் இருந்த போதே தொடங்கிய அன்பு (எரேமியா 1:10) அந்த அன்பு தாம் நம்மை தேர்ந்து கொண்டது. (யோவான் 15:16). அந்த அன்பு தான் நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் த் உயிரைக் கொடுக்க வைத்தது. (உரோமையர் 5:8)

கடவுள் அன்பாய் இருக்கிறார். நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் கடவுள் மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்பு கொண்டு தம் மகனை நம் பாவங்களுக்கு கழுவாயாக அனுப்பினார் என்பதில் தான் அன்பின் தன்மை விளங்குகிறது.(யோவான் 4:8-10). எனவே இயேசுவின் அன்பு, தந்தையின் அன்பு நம்மீது காட்டப்படுவது நாம் ஆண்டவரின் அன்புக்கு தகுதியுடையவர்கள் என்பதால் அல்ல, உரிமை உடையவர்கள் என்பதால் அல்ல, மாறாக கடவுள் இரக்கம் காட்டுவதாலேயே எல்லாம் ஆகிறது. (உரோமையர் 9:16) மேலிருந்து கீழிறங்கிய அன்பு, இரக்கம் எப்படி செயல் வடிவம் பெற்ற நம்மை தொடுகிறது. கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக் கொண்டிருக்க வேண்டியதொன்றாக கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்டார். (பிலிப் 2:6-8) இவ்வாறாக, செயலாக்கம் பெற்ற அந்த அன்பு தன்னை தாழ்த்துகிறது. மூன்று படிநிலைகளில் கடவுளிடமிருந்து மனிதனாக, மனிதனிலிருந்து அடிமையாக, அடிமையிலிருந்து உயிரற்ற உடலாக....

isaiah58:7இதைப்புரிந்து கொள்ள, நாம் சற்றே பின்னோக்கி செல்வோம். அக்கால யூதச்சட்டபடி, அடிமைகள் குறித்த ஒரு விளக்கத்தை விடுதலைப்பயண நூலில் வாசிக்கலாம். விடுதலைப்பயணம் 21:1-6 வரை வாசித்தோம் எனில் அதில் ஏழாம் ஆண்டில் அடிமைகள் விடுதலை செய்யப்படவேண்டும்.அதனால் அடிமைகள் உரிமையாளர் மேல் அன்பு வைத்து விடுதலை பெற்றுப்போக விரும்பாவிட்டால் அதற்கு அடையாளமாக அடிமையின் காதில் துளையிட்டு, உரிமையாளரோடே இருக்க விட்டுவிடுவர். இயேசுவும் நம் மீது வைத்த அன்பினால் (திருபா 22:16) தம் கைகளையும் கால்களையும் துளைக்க அனுமதித்தார். நமக்கு அடிமையும் ஆனார். அதனால் தான் தன்னை கற்றூணில் கட்டி அடிக்கவும், தாடியை பிய்க்கவும், காறி உமிழவும், தலையில் முள்முடி சூட்டவும், சிலுவை சுமத்தப்படவும், அதில் அறையப்படவும், சிலுவையில் உயிர் துறக்கவும், இறந்தபின்னும் ஈட்டியால் குத்தப்படவும் அனுமதித்தார். அன்பினால் அடிமை வடிவை ஏற்றதால் தான் அத்தனை அவமானங்களையும் ஏற்றுக் கொண்டார் நம் அருள்நாதர் இயேசு.

இயேசுவின் பாடுகளையும், நம் பாவங்களையும் சிந்திக்கும் இத்தவக்காலத்தில் நம் பாவங்களை ஆழ்கடலில் மூழ்கடித்த இயேசுவின் உயர்ந்த அன்பையும் சிந்திக்கும் போது நாமும் அந்த அன்பை செயலாக்குவோம். அது எவ்வாறு இருக்கும் அல்லது இருக்க வேண்டும்? "கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும், பசித்தோருக்கு உணவைப் பகிர்ந்து கொடுப்பதும், பிற மனிதருக்கு தன்னை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ(எசாயா 58:6.7). இது தானே ஆண்டவர் விரும்பும் உண்மையான நோன்பு.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு இறைமகன் இயேசு