இயேசுவின்‌ அன்பால்‌ ஈர்க்கப்பட...

அருள்பணி எஸ். எம்மானுவேல்

jesus கத்தோலிக்க நம்பிக்கையாளர்களுக்கு ஜூன்‌ மாதம்‌ முக்கியமான மாதம்‌ காரணம்‌ திரு இருதய பக்தி அல்லது இயேசுவின்‌ திரு இருதயபடத்தை நிறுவுதல்‌ அல்லது புதுப்பிக்கக்கூடிய நாள்கள்‌.

"இயேசுவின்‌ இதயத்திலிருந்து இரத்தமும்‌ தண்ணீரும்‌ வழிந்தோடின அதிலிருந்து திரு அவையின்‌ அருளடையாளங்கள்‌ வெளிப்பட்டன” என்னும்‌ வார்த்தைகளை உரோமை திருப்பலி நூலின்‌ காண முடியும்‌. இயேசுவின்‌ தெய்வீக அன்பை உணர்ந்து கொள்ளவும்‌, நமது தனி வாழ்விலும்‌ கிறிஸ்துவ வாழ்விலும்‌ இயேசுவின்‌ அன்பின்‌ சாட்சிகளாக செயல்படவும்‌ நமக்கு தூண்டுதல்‌ கொடுக்கும்‌ ஒரு பக்தி இது. இயேசுவின்‌ அன்பால்‌ ஆட்கொள்ளப்படுகின்ற நாம்‌ நமது அன்றாட வாழ்வில்‌ அன்பை உண்மையாக்க, உறுதியாக்க அழைக்கப்படுகின்றோம்‌.

நாம்‌ வாழ்ந்து வரும்‌ இன்றைய காலத்தில்‌ அன்பு வன்முறைகளுக்கு உள்படுத்தப்படுகிறது. உண்மையான அன்பை வெளிப்படுத்தவும்‌, வாழ்ந்து காட்டவும்‌, புரிந்து கொள்ளவும்‌ தயக்கம்‌ காட்டுகின்ற காலம்‌ இது. எனவேதான்‌ அன்பு என்னும்‌ போர்வைக்குள்‌ பல அநீதிகளை குடும்பங்களிலும்‌, சமுதாயத்திலும்‌ ஏன்‌ கிறிஸ்தவ வாழ்விலும்‌ இடம்‌ பெறுவதை காண முடிகிறது. வன்முறைகளை மையப்படுத்தியது அல்ல அன்பு. மாறாக, உண்மையான அன்பு: தியாகம்‌, மன்னிப்பு, மனித நேயம்‌, அக்கறை, விட்டுக்கொடுத்தல்‌ போன்ற பண்புகளையும்‌, பவுல்‌ அடியார்‌ தமது கடிதத்தில்‌ குறிப்பிடுவதைப்‌ போல அன்பு பொறுமையுள்ளது, எரிச்சல்படாது, இழிவானதைச்‌ செய்யாது, தன்னலத்திற்கு இடம்‌ தராது, இறுமாப்பு அடையாது, நன்மை செய்யும்‌ என்றும்‌ காண முடிகிறது.

இயேசுவின்‌ அன்பு தன்னலத்தை, சுயநலத்தை மையப்படுத்தியது அல்ல; தியாகத்தை, வாழ்வை, வல்லமையை, ஆற்றலை, அக்கறையை வெளிப்படுத்தக்‌ கூடியது. எனவே தான்‌ திரு இருதய ஆண்டவரின்‌ படமோ, சுரூபமோ எல்லோரையும்‌ அரவணைக்கின்ற நிலையில்‌ காண முடிகிறது. இயேசுவின்‌ அன்பால்‌ ஈர்க்கப்படவும்‌ ஆட்கொள்ளப்படவும்‌ நாம்‌ மேற்கொள்ளும்‌ பக்தி முயற்சி நமக்கு தூண்டுதல்‌ தர வேண்டும்‌.

1யோவான்‌ 4:20-21ல்‌ வாசிப்பதைப்‌ போல கண்ணால்‌ காணுகின்ற சகோதரரை, சகோதரியை அன்பு செய்யாதவர்‌ கடவுளை அன்பு செய்ய முடியாது. இயேசு ஆண்டவர்‌ நம்மை அன்பு, செய்வதை தனது இரண்டு கைகளையும்‌ சிலுவையில்‌ விரித்துக்‌ கொடுத்து உயிரை தியாகம்‌ செய்த நிலையில்‌ தனது செயல்கள்‌ மூலம்‌ எண்பித்து காட்டியுள்ளார்‌. நாமும்‌ இயேசுவை அன்பு செய்கின்றோம்‌. நமது வாழ்விலும்‌, வார்த்தைகளிலும்‌ அன்பின்‌ தன்மைகளை மையப்படுத்தி செயல்களில்‌ வெளிப்‌படுத்தப்படும்‌ உண்மையான அன்பை வாழ்வாக்குவோம்‌. இயேசுவின்‌ தெய்வீக அன்பின்‌ சாட்சிகளாக வாழ்வோம்‌.

கடந்த ஒரு சில நாள்களுக்கு முன்பு தமிழகத்தின்‌ கடைகோடி நகரமாக கருதப்படும்‌ ஜெயங்கொண்டம்‌ எனும்‌ பகுதியில்‌ “மதத்தை கடந்த மனித நேயம்‌” என்னும்‌ தலைப்பு இடப்பட்ட செய்தியில்‌ இரண்டு கத்தோலிக்க அருள்பணியாளர்கள்‌ கும்பாபிஷேக விழாவில்‌ பங்கேற்ற போது ஊர்‌ மக்கள்‌ அனைவரும்‌ திரண்டு வரவேற்றது சிறப்புக்குரிய, பெருமைக்குரிய நிகழ்வாக இருந்தது என்பதை வாசித்திருப்போம்‌..

நம்‌ இந்திய திருநாட்டில்‌ மதத்தால்‌ பிரிந்திருந்த போதும்‌ மனித நேயம்‌ மிகுந்த செயல்பாடுகள்‌ ஒவ்வொரு நாளும்‌ நடந்து கொண்டே இருக்கிறது. வழிபாடு எல்லா மனிதரையும்‌ ஏற்று, மதிப்பளித்து, அன்பு செய்து வாழ நமக்கு அழைப்பு தருகிறது. எல்லா மதமும்‌ சம்மதமே என்னும்‌ பொதுமைத்‌ தன்மையை வெளிப்படுத்துவது அல்ல; மாறாக வேறுபாடுகளை முரண்பாடுகளை களைந்துவிட்டு மனிதரை ஏற்று வாழும்‌ சமூகமாக உயர அழைப்பு. கடவுள்‌, வழிபாடு என்பது ஒவ்வொருவரின்‌ நம்பிக்கையின்‌ வெளிப்பாடு. ஆனால்‌ மதத்தின்‌ பெயரால்‌ மனிதர்களை வெறுத்து ஒதுக்க வேண்டிய தேவையில்லை. மனித நேயத்தை வளர்க்க முயற்சி செய்யும்‌ போது இயேசுவின்‌ அன்பு, மன்னிப்பு நமது வாழ்வில்‌ வெளிப்படுகிறது.

நன்றி:- வழிகாட்டும் தோழன்

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது