சிலுவையின் சிறப்புகள்

Holy Cross தியாகத்தில் மற்றவன் உயர்வது தான் தியாகியின் வீரச்செயல். தன் சிந்தனை, தனது செயல் பெரிது என்று கருதாது பிறரின் கருத்துக்களை தனது வாழ்வாக்கும்போது அங்கு சிலுவையைச் சுமக்க வேண்டிய நிலை உருவாகின்றது. இயேசுவின் வாழ்வில் இதே நிலைதான் ஏற்பட்டது. தாம் நலமாய் இருப்பதை ஒரு பொருட்டாகக் கருதாத இயேசு தந்தையின் சித்தத்தை ஏற்றுக் கீழ்ப்படிந்தார். எனவே, அவர் பிறரால் இகழப்பட்டு, அவமானப் பட்டு சிலுவைச் சாவை ஏற்றார். சிலுவையில் அறையப்பட்டு சிலுவையில் மரித்த அவர் மூன்றாம் நாள் வெற்றி வீரராய் உயிர்த்தார். எனவே, இயேசுவின் தியாகமும், வீரமும், வெற்றியும் நம்பிக்கை தரும் நல்ல செயல் ஆயிற்று. இயேசு சிலுவையில் மரித்து உயிர்த்ததால், நமக்கு விடுதலை, மீட்பு, வெற்றி கிடைத்தது. இதனைத் தெளிவாக நமக்கு உணர்த்தவே சிலுவை பற்றிய செய்தி அழிந்து போகின்றவர்க்கு மடமையே. ஆனால் மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை என்று 1கொரி 1:18 இல் புனித பவுலடியார் அழகாகக் கூறுகின்றார்.

இயேசுவின் அடிச்சுவட்டினைப் பின்பற்றி அவர் வாழ்ந்த தியாகம், அன்பு வாழ்வு, மன்னிப்பு இவற்றின் வழிகளை நமது வாழ்வாக்கி வாழ்வது கிறித்தவனின் உரிய பண்பாகும். இக்கருத்தினை நாம் நமது வாழ்வாக்கி வாழ்ந்திட இயேசு இவ்வாறு கூறுகின்றார்: தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரே அதைக் காத்துக் கொள்வர் (மத் 10:38-39). எனவேதான் சிலுவை ஒருவனின் வாழ்வை சீர்படுத்தி வான்வீட்டை அடைய உதவும் ஏணிப்படி என்று கூறினால் அது முற்றிலும் உண்மையாகும்.

பாவத்திலிருந்து விடுதலை தருவது சிலுவை

நமது பாவங்களுக்காக, நமது அக்கிரமங்களுக்காக இயேசு சிலுவையில் இரத்தம் சிந்தினார் (கொலோ 1:20). இயேசு சிலுவையில் சிந்திய இரத்தத்தால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டன. எனவே, தன் பாவங்களை நன்கு உணர்ந்த தாவீது என் பாவங்களையெல்லாம் துடைத்தருளும். தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே உருவாக்கும் (திபா 51:9-10 என்று மனதுருகி மன்றாடி புதுவாழ்விற்குத் தகுதியுடையோரானார். பாவத்தால் இறை உறவு துண்டிக்கப்பட்டு அவரைப் பகைக்கும் உள்ளம் உடையோராய்த் தீச்செயல்கள் புரிந்து வந்தீர்கள். இப்பொழுது நீங்கள் தூயோராகவும், மாசற்றோராகவும், குறைச்சொல்லுக்கு ஆளாகாதோராகவும் தம்முள் விளங்குமாறு ஊனுடல் எடுத்த தம் மகனின் சாவின் வழியாகக் கடவுள் உங்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார் (கொலோ 1:21) என்பதால் பாவத்திலிருந்து விடுபட்டு புது உறவு பெற்று அப்பா தந்தையே (உரோ 8:16) என்று அழைக்கும் உரிமை பெறுகின்றோம். இவ்வாறு புது உறவு பெற்று கடவுளை அப்பா தந்தையே என்று அழைக்கும் போது நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியாரும் நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கின்றார். ஒரு குழந்தை தனக்கே உரிய உரிமைக்குரலில் அப்பா என்று தன் தந்தையை அழைத்து உரிமை கொண்டாடி மகிழ்வதுபோல் கடவுளை நாம் அப்பா என்று அழைத்து உரிமை பெற்று மகிழ அடிப்படையும், ஆணிவேரும் இயேசு சுமந்து மரித்த புனித சிலுவையே!

வியாதியிலிருந்து விடுதலை தருவது சிலுவை

ஒருவனின் உடலில் சுத்தமான இரத்தம் இருப்பின் அவன் ஆரோக்கியமானவன். மாறாக இரத்தத்தில் கோளாறு அல்லது உடலில் கோளாறு என்றால் அவன் வியாதியதன் (நோயாளி) ஆகிவிடுகிறான். உடலில், மனதில் சக்தியின்றி அல்லல்படுகிறான். அப்போது அவனுக்கு பிறரின் உதவி தேவைப்படுகிறது. தனிமையில் நோயால் வருந்தும்போது யாரிடம் செல்வோம் இறைவா? என்று புலம்பிப்பாடுகையில் சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன் (திபா 23:4) என்ற இறைவார்த்தை ஆறுதலும், நம்பிக்கையும் தருகிறது. ஏனெனில் வார்த்தையான தேவன் நமக்காய் பாடுபட்டார். அவருடைய தழும்புகளால் நாம் குணமடைகிறோம் (இசை 53:4). இயேசு இப்பூமியில் பிறந்து சிலுவைப் பாடுகள் பட்டு உயிர்விடும்வரை அவர் சிந்திய ஒவ்வொரு துளி இரத்தமும் நாம் குணமடைந்து புதுப்படைப்பாக, நல்லுறவுடன் வாழவே. எனவே, நாம் எப்போதெல்லாம் உடல் சோர்வுற்று, சக்தி இழந்து வியாதியால் துன்புறுகின்றோமோ, அப்போது ஆண்டவர் நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணுவேன். நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்கிறார் (யாத் 15:26). மேலும் நமக்காய் சிலுவையின்மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். அவர் தம் காயங்களால் நீங்கள் குணமடைந்தீர்கள் (1பேது 2:24). எனவே, இயேசு சிலுவை சுமந்து பட்ட துன்பங்களால் நாம் பரிபூரண சுகமடைகிறோம். ஏனெனில் விலையேறப்பட்ட இயேசுவின் பரிசுத்த இரத்தம், அதுவும் சிலுவையில் மரிக்கும் சிலுவை முன் சிந்திய இறுதித் துளி இரத்தம் வல்லமை மிக்கது!

மன்னிப்புத் தருவது சிலுவையே

மனிதன் இறைக் கட்டளையை ஏற்காது தன் விருப்பம்போல் வாழும்போது பாவத்திற்கு அடிமையாகிறான். ஆயினும் அன்பான இறைவன் அவனை மன்னிக்கின்றார்.மோசே காலத்தில் பாலைவனத்தில் முணுமுணுத்து இறைவார்த்தையை ஏற்க மறுத்தோரை பாம்பு கடித்தது. அப்பாலைவனத்தில் இறைவனின் கட்டளையை மோசே கேட்டு வெண்கலப் பாம்பை உயர்த்தினார். அப்போது அந்தப் பாம்பை உற்றுப்பார்த்த அனைவரும் மீண்டும் புது வாழ்வு பெற்றனர். அவ்வாறு கடவுள் உலகின் மீது அன்புகூர்ந்து உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பு அளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார் (யோவா 3:17). எனவேதான் இயேசு கடினமான யூதச் சட்டங்களை விட்டு புதியதொரு இனமாக ஒருங்கிணைக்கவும், கடவுளோடு நம்மை ஒப்புரவாக்கவும் வேதனை நிறைந்த சிலுவையைச் சுமந்து சென்றார் (எபே 2:15-16).

இரு குற்றவாளிகளின் நடுவில் சிலுவையில் அறையுண்டு தொங்கி (லூக் 23:33) சிலுவையிலிருந்து தந்தையே! இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை (லூக் 23:34) என்று கூறி வதைக்கப்பட்டு உயிர்விடும் நிலையிலும் இயேசு நமக்காய்ப் பரிந்து பேசி மன்னிப்புப் பெற்றுத் தருகிறார். தம்மை துன்பப்படுத்துவோரை, இகழ்ச்சியாகப் பேசுவோரை மன்னித்து அவர்களுக்காகச் செபிக்க இயேசு சிலுவையில் தொங்கிடும் பரிதாப நிலையில் நமக்குக் கற்றுத் தருகிறார். எனவே, சிலுவை வழியே சீரிய வழி என்பதை உள்ளத்தில் இருத்தி நமது பகைவர் எப்படிப்பட்டோராயினும் இயேசு கூறியதுபோல் ஏழுமுறை மட்டுமல்ல, எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன் (மத் 18:22) என்ற வாக்கின்படி பகைவரை மன்னித்து சிலுவை வழியிலே ஒருவர் ஒருவரோடு ஒப்புரவாகி இறையாட்சியில் பங்கு பெறுவோம்.

சிலுவை வறுமையை அழிக்கின்றது

பணமில்லாமையால் மட்டும் மனிதன் வறுமை அடைவதில்லை; மாறாக நிம்மதி, மகிழ்ச்சி, மனித உறவு, அன்பு இன்மை, பகைமை ஒருவனின் மனதை வெறுமையாக்கி நம்பிக்கை இழக்கச் செய்கிறது. எல்லா செல்வங்களுக்கும் அதிபதியும், உரிமையுமான இயேசு தம்மை வெறுமையாக்கி நம்மை செல்வந்தர் ஆக்கினார். அவர் நமக்காக ஏழ்மையாகி தரித்திரத்தை விட மேலான வறுமை நிலையில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார். அவர் செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராக்குமாறு இவ்வாறு செய்தார் (2கொரி 8:9). செல்வந்தர் ஏழையாவது எவ்வளவு அவமானமோ அவ்வாறே இறைமகன் இயேசு தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று... சிலுவைச்சாவை ஏற்றார் (பிலி 2:7-8). அதனால் அவமானமாகி, அடிமை அறையப்படும் சிலுவையில் அறையப்பட்டு உயிர் தறந்தார். இயேசுவின் சிலுவைச்சாவால் இவ்வுலக வறுமை நிலை நீங்கப்பட்டு விண்ணுலகு அடையும் உரிமை பெற்றோம். எனவே, சிலுவை தம் வறுமை வாழ்வை மாற்றி விண்ணுலகிற்குச் சென்று இன்பம் துய்க்கும் உரிமையைத் தந்தது. நிலையற்ற இன்பத்தை நாம் இழந்தாலும் நிலையான இன்பத்தைப் பெற்று இறைஉயர்வில் வளர சிலுவை சிறந்த ஆயுதமாயிற்று.

சிலுவை சாபத்தை அழிக்கின்றது

பயத்தால் வரும் நோய், மூட நம்பிக்கையால் வரும் இழப்புக்கள் இவை அனைத்தும் சாபத்தின் காரணம் என்பர் சிலர். ஆம், நம் மூதாதையரின் தீச்செயல்களால் அச்சாபம் தம் பிள்ளைகளைத் தாக்குகிறது. தந்தையரின் கொடுமையைப் பிள்ளைகள் மேலும் பிள்ளகைளின் பிள்ளைகள் மேலும் மூன்றாம் நான்காம் தலைமுறை வரை தண்டித்துத் தீர்ப்பவர்(விப 34:7) நம் ஆண்டவராகிய கடவுள். ஆயினும் நம் பாவங்கள் இயேசு சிந்திய இரத்தத்தால் கழுவப்படுகிறது. எனவே, இயேசு சிலுவையின்மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். நம் பாவங்களுக்காக அவரே இறந்தார் (1பேது 3:24). இவ்வாறு நம் பாவங்கள், சாபங்களைச் சுமந்து இயேசு சிலுவையில் மரித்து நமக்குப் புதுவாழ்வு தந்தார். எனவேதான் இயேசு கிறிஸ்து சாபத்துக்கு உள்ளாகி நம்மைச் சட்டத்தின் சாபத்தினினின்று மீட்டுக்கொண்டார் (கலா 3:13). சாபத்தால் அமைதி இழந்து வெறுப்புக்குள்ளாகி, பொறாமை பெருகி தாமும் வாழாது பிறரையும் வாழவிடாது, சாத்தான் நம்மை அடிமையாக்குகிறது.

இந்தச் சாபம், அடிமைத்தனம் அனைத்தையும் இயேசு தம் சிலுவைச் சாவால் முறியடித்தார். எனவே, நம்மை படைத்த ஆண்டவரின் கட்டளைகளுக்கு கீழ்ப்படியாது மனம் போன போக்கில் வாழ்ந்து பாவத்திற்கு அடிமையாகி சாபத்தால் மடியும்போது மனம் மாறி மன்றாடுகையில் தாவீதுக்கு நான் காட்டிய மாறாத பேரன்பை உங்களுக்குக் காட்டுவேன் என்கிறார் நம் கடவுள் (எசா 55:3). இவ்வாறு இறையன்பை நாம் பெற்று மகிழ, சாபத்திலிருந்து விடுபட சிலுவையில் மரித்தார் இயேசு.

சிலுவையின் மகிமை

சிலுவை என்றால் அவமானம். சிலுவை என்றால் போராட்டம். சிலுவை என்றால் அடிமை நிலை. சிலுவை என்றால் துன்பம் தருவது என்று மக்கள் பயந்து வீடுகளில் சிலுவை வைக்க விரும்புவதில்லை. ஆனால் நம் மீட்பராம் இயேசு என்று சிலுவை சுமந்து இரத்தம் சிந்தி கல்வாரியில் தம் இறுதி மூச்சை விட்டு மரித்தாரோ அந்த நாள் அகில உலகமெங்கும் ழுடிடின குசனையல (புனித வெள்ளி, பெரிய வெள்ளி) என்று போற்றப்படுகின்றது.

எனவே, இயேசு சிலுவை சுமந்து, அதில் மரித்து அடக்கப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்ததால் நமக்கு வெற்றி நிச்சயம் உண்டு என்றும், துன்பத்திற்கு முடிவு உண்டு என்பதும் உணர்த்தப்படுகிறது. எனவேதான் சிலுவைப் போரின்போது நம்பிக்கையோடு சிலுவை தாங்கிப் போரிட்ட அனைவரும் வெற்றி பெற்றனர். இத்தகு சிறப்புமிகு சிலுவை எது என்று கண்டறிய நோயாளி ஒருவர் இயேசு சுமந்த சிலுவையைத் தொட்டு அவர் அந்த நோயிலிருந்து சுகமடைந்தார். எனவே, இயேசு சுமந்து மரித்த சிலுவை இதுவே என்று கண்டறிந்தனர். இந்தச் சிலுவையே நமக்கு விடுதலை, நம்பிக்கை, வெற்றி தருகிறது. எனவே, சிலுவை மகிமை மிக்கதாயிற்று. இத்தகு வல்லமை மிகு சிலுவை மண்ணில் புதைப்பட்ட நிலையில் இருப்பதை அறிந்த மன்னன் கான்சன்டைனின் தாய் ஹெலனா அதைக் கண்டுபிடித்து சிலுவையின் மகிமையை உலகறியச் செய்தார். எனவே, செப்டம்பர் 14 ஆம் நாள் சிலுவை உயர்த்தப்பட்டு அந்நாள் சிலுவையின் மகிமை நாள் என்று நம் தாய் திருச்சபை கொண்டாடுகிறது.

எருசலேம் நகரைப் பெர்சியர் கைப்பற்றி சிலுவையை அவமானப்படுத்திய நிலையில் ஹெர்குலிய போரிட்டு மீண்டும் சிலுவையினை கான்டான்டின் நோபிளுக்கும், எருசலேமிற்கும் கொண்டு வந்தார்.

எனவேதான் சிலுவை வெற்றி தருவது, மகிமை மிக்கது, நம்பிக்கை தருவது, விடுதலை அளிப்பது, மாட்சிமையானது என்று சிலுவைத் திருவிழாவை திருச்சபை மிகச் சிறப்பாகக் கொண்டாடி சிலுவையின் சிறப்பை பாராட்டி சிலுவை உயர்த்தப்பட்ட நாள் உன்னத நாள் என்று அகில உலகம் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறது.

எனவே, மீட்பராம் இயேசு சுமந்த சிலுவையால் நாம் விடுதலை வெற்றி பெற்றோம் என்று இறைவனைப் போற்றி மகிழ்கின்றோம்.

நன்றி -ஆவியின் அனல்9/16
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது