திருச்சிலுவை மகிமை

கடந்த வாரத்தில் என் நண்பர்கள் இருவரோடு பத்திரிகைக்குரிய காரியங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தேன். இருவருமே கத்தோலிக்க கிறிஸ்த்தவர்கள். நல்ல பயபக்தியும், இறையார்வமும் கொண்டவர்கள். 'செப்டம்பர் மாதம் என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது என்ன?" என்று இருவரையும் பார்த்து ஒரு வினை எழுப்பினேன். ஒருவர் உடனே பதிலளித்தார். ' 8ஆம் தேதி வேளாங்கண்ணி மாதா திருவிழா" என்று. மற்றவர் கூறினார். வியாகுல அன்னை விழைவை 15ஆம் தேதியன்றும், 29 ஆம்தேதி மிக்கேல், கபிரியேல்,.ரபேல் அதிதூதர்கள் விழாவையும் கொண்டாடுகிறோமே என்று .முதலாமவர் மீண்டுமாய் வேகமாய் பதிலளித்தார்... 'புனித வின்சென்ட் தே பவுல் விழா 28ஆம் தேதியன்று வருகிறதே என்று. நான் சொன்னேன். உபகார மாதா விழா வருகிறதே. அதை இருவரும் மறந்துவிட்டீர்களே என்று இருவரும் 'ஆமாம் ஆமாம் என்றனர்.

அன்பானவர்களே! வருடத்தின் 365 நாட்களுக்கும் ஒவ்வொரு புனிதர் பெயரையோ, அன்னை மரியாளின் பெயரையோ திருச்சபை சூட்டியிருப்பது அந்த நாளில் இறைவன் அவர்கள் வழியாக செய்த மகத்தான கரியங்களை நினைவு கூறவே. எனவே அந்நாட்களை தியானிப்பதில் நிச்சயமாய் தவறேதும் கிடையாது. ஆனால் சில விழாக்களுக்கு கொடுக்கப்படும் அதிகப்படியான முக்கியத்துவத்தில் வேறு சில சிறிய விழாக்கள் கண்ணெதிரே காணாமல் போய்விடுகின்றன. ஆனால் சிறிய விழா தானே என்று நாம் அலட்சியப்படுத்தும் அவற்றில் தான் இறைவனின் மிகப்பெரிய மீட்பின் இரகசியங்களும், அனுகூலங்களும் அருங்கொடைகளும் நிரம்பியிருக்கக்கூடும். அத்தகைய ஒரு விழா செப்டம்பர் holy crossமாதம் 14 ஆம் தேதி வரும் திருச்சிலுவையின் மகிமை விழா. இம்மாதத்தின் பெரிய விழாக்களைக் குறித்து எல்லா பத்திரிக்கைகளும் பக்கம் பக்கமாய் கட்டுரைகள் வெளியிடுவது வழக்கம். ஆனால் சிலுவையின் மகிமையைக் குறித்து இம்மாதத் தலையங்கத்திலேயே எழுது என்று ஆவியானவர் தூண்டியதால் இதோ எழுதுகிறேன்.. இயேசுவின் குரலை தரணியெங்கும் ஒலிக்க செய்வதே சீயோன் குரலின் நோக்கமன்றோ!


அன்றைய இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில் இறைவன் அளித்த உணவையும் மற்றவையும் குறித்து நன்றில்லாமல் குறை கூறினர். இறைவன் கொள்ளிவாய் பாம்புகளை அனுப்பினார். பலர் மாண்டனர். அதன் பின் மன்னிப்புக் கோரி மோசே மூலம் வெண்கலப் பாம்பு கோலில் உயர்த்தப்பட்டு அதைப் பார்த்து உயிர் பெற்றனர். இந்நிகழ்வே சிலுவை சின்னத்தின் முன்னோடி. குற்றமற்ற இயேசுவின் வாழ்வில் அன்று வாழ்ந்த மக்கள் தங்கள் பாவங்களால் சிலுவையைச் சுமத்தினர். இயேசுவால் மகிமையடைந்தது.. இந்த மீட்பின் சின்னத்தை நமது வீடுகளில் வைப்பதற்கு பலர் தயங்குவதுண்டு. காரணம் கேட்டால் குடும்பத்தில் துன்பம் வரும். என்று கூறுவார். இது முற்றிலும் தவறான கொள்கை. சாத்தானால் ஏமாற்றப்பட்டு நமது சுயஅறிவை நாம் இழந்து விடக் கூடாது. மாதந்தோறும் எனது வீட்டில் நடைபெறும் செபக்கூட்டத்திற்கு இரு மாதங்களுக்கு முன்பு ஒருசகோதரி வந்திருந்தார்.முன்னே வைத்திருந்த சிலுவையை படத்தைப் பார்த்து 'இயேசுவின்உருவப்படம் வைத்து செபிக்காமல் இது என்ன சிலுவையை வைத்திருக்கிறீர்கள்? " எனறு மனம் பொறுமினார். இறுதி நாட்களில் உருவமில்லா கடவுளை, மக்கள் உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர் என்று இயேசு கூறிய வார்த்தைகளைச் சுட்டிக் காட்டினேன். (யோ 2:24) அவரும் அமைதியானார்.


ஆம், அருமையானவர்களே, தொடக்கநிலைக் கிறித்தவ வாழ்வுக்கு உருவப்படங்களும், சுரூபங்களும் தேவையாகலாம். ஆனால் முதிர்ச்சி பெற்ற நிலையில் இயேசுவின் சிலுவையை மனதில் நிறுத்தி உருவமற்ற தந்தையையும், ஆவியான இறைவனையும் வழிபடுவதே சிறப்பான வழிபாடாய் இருக்கும். எனவே நமது வீடுகளில் சிலுவை படம் ஒன்றை வைப்போம். நமது கழுத்திலோ அல்லது சட்டைப் பாக்கெட்டிலோ அல்லது பையிலோ எப்போதும் ஓரு சிலுவையை வைத்திருப்போம். அச்சிலுவையானது நம்மை எதிர்த்து வரும் தீமைகளை  நிர்மூலமாக்கி சாத்தனின் தந்தரங்களைத் தவிடுபொடியாக்கி நமக்கு வெற்றியைக் கொண்டு வரும்.


இறையன்பில் டாக்டர் ஜே.ரொமிங்டன்.
ஆசிரியர் சீயோன் குரல்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது