மகிழ்ச்சி இல்லங்கள்
இல்லாமை தீர்த்த இயேசு .
அருட்தந்தை தம்புராஜ் சே ச அவர்கள் வழங்கிய மறையுரையிலிருந்து தொகுக்கப்பட்டது.
இயேசு தனது பொது வாழ்வில் பல இடங்களுக்கு சென்று யூத சமுதாயத்திலிருந்த பல்வேறு இல்லங்களைச் சந்தித்தார். ஆனால் அங்கெல்லாம் ஒரு வித இல்லாமை குடியிருந்தது.
1.மணவீட்டில் குறை, 2. விருந்தில் குறை, 3.உபசரிப்பில் குறை, 4.உள்ளத்தில் குறை, 5. செய்து வந்த தொழிலில் குறை, 6.உடலில் குறை, 7.நம்பிக்கையில் குறை.
இப்படி ஒவ்வொரு இல்லத்திலும் குறைகளைக் கண்டறிந்த இறை மகன் இயேசு அவைகளை நீக்க தாமே அந்த இல்லங்களுக்கு தேடிச் சென்றார். அங்கே இருந்த குறைகளை களைந்தார். அதனால் அந்த இல்லங்களில் மகிழ்ச்சி, அன்பு, சமாதானம், நிறைவு, இறையாசீர் என பல்வேறு ஆசீர்கள் கிடைத்தன.
நம்பிவந்தவர்கள் இயேசுவிடம் முழுவதுமாக தம்மையே அளிக்கும் போது பூரண நிறைவையும், இறை ஆசீரையும் பெற்றுக் கொண்டு மன்னிக்கப்பட்டவராக திரும்பி சென்றனர். இயேசுவின் மாட்சிமை, மகிமை இவர்களின் மூலம் மற்றவரிடம் சென்று அடைந்தது.
1.கானாவுர் திருமணம்-யோவான் 2. 1-12.
இஸ்ரயேல் மக்களின் மரபுப்படித் திராட்சை ரசம் திருமணங்களில் முக்கியமான சிறப்பான ஒரு பானம். அதுவே அந்தத் திருமண வீட்டாரின் அந்தஸ்து என்ன என்பதை மற்றவர்களுக்கு அறிய செய்கிறது. திராட்சை ரசம் தீர்ந்து விட்டப்போது மரியாள் மணவீட்டாரின் அவமானத்தைப் போக்க தன் மகனிடம் நிலைமையை விவரித்தார்கள். இயேசுவோ நேரம் வரவில்லை என்றார். தாய்க்கு தெரியாதா தன்மகனைப் பற்றி ! அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள் என்று ஊழியர்களுக்கு கட்டளையிட்டார்.
இயேசுவும் தாயின் கட்டளையை ஏற்று கற்சாடிகளில் நீரை நிரப்பச் சொன்னார். சாடியின் விளிம்பு வரை நிரப்பிய நீர் இறைபுகழ்ச்சிக் கூறிய இயேசுவின் வசீகர முகத்தைப்பார்த்து சிவந்து திராட்சை இரசமாக மாறியது. இயேசுவின் முதல் அடையாளம் அன்னை மரியாளின் மூலம் நிகழ்ந்தது. கடைசியில் வந்த ஏழைகளுக்கு உயர்ந்தரக திராட்சை இரசம் கிடைத்தது. அன்னை மரியாளின் கரிசனை அன்பு, கருணை அன்பு, கனிவான அன்பு மணவீட்டார்க்கு மகிழ்ச்சியையும் இயேசுவின் சந்திப்பினால் அனைவரையும் நிரப்பியது.
2. சீமோன் அளித்த விருந்து. லூக்கா 7.36-50
சீமோன் என்ற பரிசேயர் தன்னை பெருமை பாரட்ட எண்ணி இயேசுவை தம் இல்லத்திற்கு விருந்து உண்பதற்கு அழைத்தார். ஆனால் மரபுகளை மறந்தவராக இருந்தார். ஆனால் பாவியான பெண் மரியாள் இயேசுவின் கால்களை தன் கண்ணீரால் நனைத்து, தன் கூந்தலால் துடைத்து, இலமிச்சை(யேசன) என்ற விலையுர்ந்த நறுமணத் தைலத்தினால் பூசினார்.
இதைப்பார்த்த சீமோனின் மனதை அறிந்த இயேசு மரபு வழக்கங்களை அதிகமாக கடைபிடிக்கும் பரிசேயரான நீர் ஏதும் செய்யவில்லையே. அதைத்தான் இப்பெண் செய்தார் என்றார். குறைவான அன்பு செய்தவரைக்காட்டிலும் அதிக அன்பு செய்த அப்பெண்ணின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு இறை ஆசீர் நிறைவாய் பெற்றுச்சென்றார். அவரின் நம்பிக்கை அவரை மீட்டது.
இந்த பெண் இயேசுவின் காலடியில் முற்றிலுமாக சரணடைந்தார். தனக்கு கிடைத்த மாற்றத்தின் அடையாளமாக நறுமணத்தைலத்தால் அந்த இல்லத்தை மணக்க வைத்தார். கிடைத்த மன்னிப்பிற்கு நன்றியாக முத்தங்களை சரமாரியாக பாதத்தில் பதித்தார். அமைதியைப் பெற்று சென்றார்.
3. தேவையானது நல்ல பங்கு ஒன்றே. லூக்கா 10.38-42
இயேசுவை தன் வீட்டிற்கு அழைத்தார்கள் மார்த்தாள், மரியாள் சகோதரிகள். இயேசுவும் அவர்கள் வீட்டிற்கு சென்றார். ஆனால் மார்த்தாள் வீட்டு வேலைகளில் பரபரப்பாக முழ்கி இருக்கையில், மரியாளோ இயேசுவின் காலடியில்; அருகில் அமர்ந்து அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தார். இயேசுவிடம் மார்த்தா தன் சகோதரியைப்பற்றி குறை கூற, அவரோ தேவையானது ஒன்றே, மரியாளோ நல்ல பங்கைத் தேர்ந்துக்கொண்டாள். அது அவளிடமிருந்து எடுக்கப்படாது என்றார்.
மார்த்தா உலகக்காரியங்களில் ஈடுபட, மரியாள் இங்கே இயேசுவின் காலடியில் அமர்ந்தார். நற்செய்தியில் இயேசுவின் காலடியிலிருந்த அனைவரும் ஒன்றை தவறாமால் பெற்றுக்கொண்டனர். அது தான் அவரின் அன்பான நிறைவான அருளாசீர்.
4.இயேசுவும் சக்கேயுவும். லூக்கா 19.1-10
இயேசுவைப் பற்றி அறிந்த சக்கேயு அவரைக் காண மரத்தின் மேல் ஏறினார். இயேசுவை தூரத்திலிருந்து பார்க்க நினைத்தார். ஆனால் இயேசுவோ அவர் உள்ளம் அறிந்து அவரை கீழே இறக்கி அவர் இல்லம் சென்று அவருடன் விருந்து உண்டார். இங்கே இயேசு அவரை தேடிச்சென்றார். அங்கே நிகழ்ந்தது ஒரு பெரிய மனமாற்றம். தான் செய்த தவறுகளை உணர்ந்து அதற்கு மன்னிப்பும். பரிகாரமும் தேடிக்கொண்டார்.
இந்த இல்லத்திற்கு இறை மகன் மீட்பை கொடுத்தார். தான் ஏன் இந்த உலகிற்கு வந்தேன் என்பதனை உணரவைத்தார். இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிட மகன் வந்திருக்கிறார் என மற்றவர்களும் அறிவித்தார்.
5.மத்தேயுவின் ஒத்துழைப்பு மத்தேயு 9.9-13
சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்த மத்தேயுவைக் கண்ட இறை மகன் இயேசு என்னைப் பின்பற்றி வா என்றார். உடனே இயேசுவின் பின் சென்றார். மத்தேயுவில் நிகழ்ந்தது மனமாற்றம். வேலையை துறந்தார். செல்வத்தை இழந்தார். மத்தேயுவின் வீட்டில் விருந்தும் நடந்தது. இயேசுவோடு வரிதண்டுபவர்களும், பாவிகளும் அமர்ந்திருந்தனர். முனுமுனுத்தார்கள் பரிசேயர்கள்.
இதனைக் கண்டு இயேசுவோ மறுமொழியாக நோயற்றவர்க்கல்ல. நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன். பாவிகளையே அழைக்க வந்தேன் என்றும் தான் ஏன் இவ்வுலகம் வந்தேன்? என்பதை பரிசேயர்களுக்கு தெளிவாகவும் ஆணித்தரமாகவும் கூறினார்;.
அவர் நிறைவான வாழ்வும். மீட்பும் தரவே வந்தார். கணக்கு எழுதி வந்த மத்தேயு பின் நற்செய்தியாளராக மாறிவிட்டார். அவரது எழுத்தாணி இப்போது நமக்கு நற்செய்தி எழுதியுள்ளது.
6.பேதுருவின் மாமியார் மாற்கு 2.29-34
பேதுருவின் மாமியார் காய்ச்சலாய் படுத்திருக்க, இயேசு வந்து அவரைத் தொட்டதும் காய்ச்சல் நீங்கியது. இவ்வாறு அவர் தொட்டு குணமடைந்தவர் அநேகர். ஆடைதை; தொட்டதாலே குணமடைந்தார் பெண் ஒருவர். தாவீதின் மகனை என்று அழைத்த குருடர்களை இயேசு பரிவு கொண்டு அவர்களுடைய விழிகளைத் தொட்டார். அவர்கள் பார்வை பெற்றனர். காதுகேளாதவரை அழைத்துச்சென்று தம் விரல்களை அவர் காதுகளில், உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார். காதுகள் திறக்கப்பட்டன. நாவும் கட்டவிழ்ந்தது. சிறுவர்களை அரவணத்து, தம் கைகளால் அவர்கள் மீது வைத்து ஆசீர் வழங்கினர்.
இயேசுவின் தொடுதலால் அவரின் வல்லமை வெளிப்பட்டது.
7.சீடர்கள் தங்கி இருந்த வீட்டில் இயேசு தோன்றுதல். யோவான் 20. 1-30
யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள்.அவர்கள் மத்தியில் வந்து நின்றார் உயிர்த்த இயேசு. அதுவரை சோகம் சூழ்ந்திருந்தது. இப்போதோ பெரும் மகிழ்ச்சி நிறைந்திருந்தது.
தொடக்கநூலில் கடவுள் தான் உண்டாக்கிய உருவத்திற்கு தன் முச்சை ஊதி மனிதனை உண்டாக்கினார். இங்கு இயேசு தன் சீடர்கள் மேல் ஊதி தூய ஆவியை அவர்களுக்கு உயிராய் அளித்தார். மன்னிப்பின் அதிகாரத்தையும் கொடுத்துச் சென்றார்.
இரண்டாம் முறை இயேசு அங்கு வந்த போது சீடர்களின் பூட்டியிருந்த வீட்டின் நடுவில் வந்து நின்றார். அவர்களை வாழ்த்தினார். தோமாவை தொட்டு உணர்ந்து நம்பிக்கை கொள் என்று அழைத்தார். ஆனால் இயேசுவோ தோமாவை, அவரது நெஞ்சத்ததை தன் அன்பால் தொட்டார். " நீரே என் ஆண்டவர் நீரே என் கடவுள் " என்று அவர் நெஞ்சைத் தொட்டார். தொட்டன இரு நெஞ்சங்கள்!
இந்த இல்லத்தில் நம்பிக்கை விதைத்தார். அந்த விதை இன்று வளர்ந்து திருச்சபையாக உலகம் முழுவதையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
பேதுருவும், இயேசுவின் அன்பு சீடரும் கல்லறையை கண்டனர். நம்பினர். மகதலா மரியாள் இயேசுவைக் கண்டார். பற்றிக் கொண்டார். சுட்டிக் காட்டினார். காணமலே நம்பும் நம் உள்ளத்திற்கும், இல்லத்திற்கும் இறைமகன் இயேசு தினமும் வருகிறார். நிறைவைத் தருகிறார்.