என் மீது அன்பு செலுத்துகிறாயா?

அருள்தந்தை ஜாக்ஸ்ன் லூயிஸ் அவர்கள் 29.05.2020 அன்று மாதா தொலைக்காட்சியில் ஆங்கிலத் திருப்பலியில் ஆற்றிய மறையுரையின் தமிழாக்கம்

+ திருத்தூதர் புனித யோவான் எழுதிய நற்செய்தி நூலிலிருந்து வாசகம்
அதிகாரம் 21 வசனங்கள் 15 முதல் 19 வரை

 
15 அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன் பேதுருவிடம், "யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?" என்று கேட்டார். அவர் இயேசுவிடம், "ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!" என்றார். இயேசு அவரிடம், "என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்" என்றார். 16 இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், "யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?" என்று கேட்டார். அவர் இயேசுவிடம், "ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!" என்றார். இயேசு அவரிடம், "என் ஆடுகளை மேய்" என்றார். 17 மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், "யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?" என்று கேட்டார். "உனக்கு என்னிடம் அன்பு உண்டா?" என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், "ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?"" என்றார். இயேசு அவரிடம், ""என் ஆடுகளைப் பேணிவளர். 18 "நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடி வந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச் செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்" 19 பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்ன பின் பேதுருவிடம், "என்னைப் பின் தொடர்" என்றார்.


peterபுனித யோவான் நற்செய்தியின் இந்த பகுதியிலே, இயேசுவுக்கும், புனித பேதுருவுக்கும் இடையே நிகழ்ந்த மிக அருமையான ஒரு உரையாடலை நாம் வாசிக்கிறோம். இறுதி இராவுணவின் போது இயேசு தனது சீடர்களோடு ஆற்றிய நீண்ட கருத்தாழம் மிக்க சொல்லாடலையும், அதனைத் தொடர்ந்து தனது சீடர்களுக்காகவும், மற்றும் அனைத்து நம்பிக்கையாளர்களுக்காகவும் இறைத்தந்தையை நோக்கி அவர் ஏறெடுத்த இறைவேண்டலையும் கடந்த மூன்று வாரங்களில் ஒவ்வொரு நாளும் திருப்பலியின் நற்செய்தி வாசகமாக கேட்டு பகிர்ந்து கொண்டோம். இன்று, அதனினின்று மாறுபட்ட மற்றொரு உரையாடல் நமது சிந்தனைக்கு தரப்படுகிறது.

இறுதி இராவுணவுக்கும், இன்று கலிலேயக் கடற்கரை உரையாடலுக்கும் இடையே பல நிகழ்வுகள் மிக வேகமாக நடைபெற்றுவிட்டன. குறிப்பிட்ட இந்த நாள்களில் பல்வேறு சம்பவங்களில் புனித பேதுருவின் செயல்பாடு எவ்வாறு இருந்தது என்பது நமக்குத் தெரியும். பாதம் கழுவும் நிகழ்வின் போது, “இல்லை, நீர் எனது பாதங்களைக் கழுவிட நான் அனுமதிக்க மாட்டேன்” என்று சொன்ன புனித பேதுரு, “நான் உன் பாதங்களைக் கழுவாவிட்டால், என்னோடு உனக்குப் பங்கு இல்லை” என்று இயேசு சொன்னவுடன், “அவ்வாறாயின், என் உடல் முழுவதையும் கழுவும்” என்றுரைத்தார். அதன் பிறகு, “உம்மை என்றும் பின்தொடர்ந்து வருவேன்; உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்" என்று புனித பேதுரு கூறியபோது, "எனக்காக உயிரையும் கொடுப்பாயோ? நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன் சேவல் கூவாது” என்று இயேசு சொல்லுகிறார். இப்படி முன்னுக்குப் பின் முரணான சில நிகழ்வுகள் அன்று நடைபெறுகின்றன.

கெத்சமனி தோட்டத்தில் இயேசு கைது செய்யப்படும் போது, சட்டென வாளை உருவி, தலைமை குருவின் பணியாளனுடைய காதை அறுத்தவர் புனித பேதுரு தான். அந்நேரத்தில் இயேசு தான் பேதுருவை அமைதிப்படுத்த வேண்டியிருந்தது. பின்னர் புனித பேதுரு இயேசுவைத் தொடர்ந்து பின்பற்றிச் சென்றபோது, தலைமை குருவின் மாளிகை முற்றத்தில், “நீயும் அந்த மனிதனுடைய சீடன் தானே?” என்று அங்கிருந்தோர் கேட்டபோது, “அவரை எனக்குத் தெரியாது” என்று மறுதலிக்கிறார். இயேசுவோடு பழகி, உறவாடி, அவரிடமிருந்து மனவலிமை பெற்றிருந்த புனித பேதுரு, “நீ அந்த மனிதனின் சீடன் தானே?” என்று பணிப்பெண் கேட்ட அந்த இடத்தில், தடுமாற்றத்திற்கு உள்ளாகிறார். இந்த இடத்திலே சேவல் கூவி, இயேசு பேதுருவுக்கு சொன்ன அடையாளக் குறியீட்டை நினைவுபடுத்துகிறது. இதனையடுத்து தனது தவறை எண்ணி வருந்திய பேதுரு, “மனம் நொந்து அழுதார்” என்று ஏனைய மூன்று நற்செய்தியாளர்களும் பதிவு செய்கிறார்கள். ஆனால், புனித யோவான் தனது நூலில் பேதுருவின் மனவருத்தத்தை இந்த இடத்திலே குறிப்பிட்டு பதிவு செய்யாமல் தவிர்த்துவிடுகிறார். இதனைத் தொடர்ந்து புனித யோவான் எழுதுகின்ற பாடுகளின் நிகழ்வுகளில் புனித பேதுரு காணப்படுவதில்லை.

பேதுருவின் மனவருத்தத்தை மேற்சொன்ன இடத்தில் தவிர்த்திட்ட புனித யோவான், இங்கு, கலிலேயக் கடற்கரையில் நடக்கின்ற உரையாடலில் பதிவு செய்ய விழைகிறார். பேதுரு மனவருத்தம் அடைந்த அதே சூழ்நிலை இங்கே மீண்டும் காட்சிப்படுத்தப்படுகிறது. அன்று, இயேசு கைது செய்யப்பட்ட இரவில் தலைமை குருவின் மாளிகை முற்றத்தில் மூட்டப்பட்டிருந்த நெருப்பின் அருகில் குளிர்காய்ந்து கொண்டிருந்த சமயத்தில், பேதுரு இயேசுவை மறுதலித்தார். இன்று, கலிலேயக் கடற்கரையில் உணவு தயாரிப்பதற்காக நெருப்பு மூட்டப்பட்டுள்ளது. இயேசு சீடர்களுக்கு அப்பமும், மீனும் உணவாகத் தருகிறார். இந்த இடத்தில் பேதுருவின் உள்மனக் காயத்தை ஆற்றும் விதமாக இயேசு செயல்படுகிறார். குற்றம் நிகழ்ந்த சூழலை உருவாக்கி, பேதுருவின் உள்ளத்திலே நம்பிக்கையின் தெளிவை மீண்டும் நிலைநாட்டுவதற்காக இயேசு கேள்விகளை முன்வைக்கிறார். இப்போது ‘சரியானதை தேர்ந்து கொள்ள வேண்டிய’ நிலையில் புனித பேதுரு நிறுத்தப்படுகிறார். இந்நேரத்தில் பேதுரு தெரிவு செய்யவிருக்கின்ற நிலையிலிருந்து மீண்டும் அவர் பிறழ்வதற்கான வாய்ப்பே இல்லை. இதற்கான ஒரு எச்சரிக்கையின் குறியீடாக இயேசு, “நீ இளைஞனாக இருந்தபோது உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடி வந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது வேறொருவர் உன்னை, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார்” என்று கூறுகிறார். இந்த கட்டம் தான் பேதுருவுக்கு ஒரு சோதனைக் களமாக அமைகிறது. இந்த சோதனையை வெற்றி கண்டு, இயேசுவின் மீது தான் கொண்டுள்ள உண்மையான பற்றுறுதியை வெளிப்படுத்துகின்ற வகையிலான உறுதிபாட்டை எண்பிக்க வேண்டிய முக்கியமான கட்டத்தில் பேதுரு நிற்கிறார். ஆகவே தான் அன்பை நிரூபிப்பதற்கான சோதனை இங்கே முன்வைக்கப்படுகிறது.

நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள அழைப்பின் வழியாக நம் ஒவ்வொருவரிடமும் ஒரு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு, அதனை செய்துமுடிக்க வேண்டிய கடமையும் நம் மேல் சுமத்தப்பட்டுள்ளது. இந்தப் பொறுப்பை நாம் ஏற்று செயல்படுவதற்கு முன்பாக, இயேசு நம்மைப் பார்த்துக் கேட்கின்ற முதல் கேள்வி: “என்னை அன்பு செய்கிறாயா?” என்பதே. இந்தக் கேள்வி கேட்கப்பட்டபோது, புனித பேதுரு தனது வாழ்க்கையின் மிகவும் முக்கியமான கட்டத்தில் இருந்தார். அவர் தான் திருஅவையின் தலைவர் என்று ஏற்கனவே குறிக்கப்பட்டு, சீடர்களுக்கும் அறிமுகமாகியிருந்தார். இயேசுவின் பாடுகள்-இறப்பினை அடுத்து நிகழ்ந்த பல சம்பவங்களில், பேதுருவின் அனுபவத்தை நாம் சற்று கவனிக்க வேண்டும். ஏற்கனவே இயேசு கைதாகிய இரவில், ‘அவரைத் தெரியாது’ என பேதுரு மறுதலித்திருந்தார். சீடர்கள் எல்லோருமே ஒன்றாக இல்லாமல், சிதறுண்டு பிரிந்து போனார்கள். ஆயினும், ஏதோ ஒரு உத்வேகம் அவர்களை மீண்டும் ஒன்றாகக் கூட்டிச் சேர்த்திருந்தது. அவ்வாறு ஒன்றிணைந்தக் குழுவிலே பேதுரு சிறப்பான முக்கியத்துவம் பெற்றிருந்தார். அதனால் தான், வாரத்தின் முதல் நாளன்று விடியலில் கல்லறைக்கு சென்ற பெண்களில் ஒருவரான மகதலா மரியா திரும்ப வந்து, “கல்லறை வெறுமையாக இருக்கிறது; ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய்விட்டனர்" என்று பேதுருவிடம் தான் தெரிவிக்கிறார். உடனே பேதுருவும், யோவனும் கல்லறையை நோக்கி ஒடுகிறார்கள். முன்னதாக கல்லறையை அடைந்த இளையவரான யோவான், பேதுரு வரும்வரையில் உள்ளே செல்லாமல் காத்திருக்கிறார். பேதுரு தான் முதலில் கல்லறையின் உள்ளே நுழைகிறார், காண்கிறார், நம்புகிறார். எனவே பேதுருவுக்கு தரப்பட்டிருந்த முக்கியத்துவம் அங்கே பேணப்படுகிறது. ஆக, ‘சீடர்களுக்குள் தலைமை சீடர்’ என்றவொரு நிலையை பேதுரு இழந்திடவில்லை. ஆயினும், ஏதோவொன்று புனித பேதுருவை கலக்கத்தில் ஆழ்த்தியிருந்தது. மறுதலிப்பு அனுபவத்தின் துயரமும், அழுத்தமும் அவரை அரித்துக் கொண்டிருந்தன. அவர் தனக்குள்ளேயே மனமுடைந்து, நொந்து அழுதுகொண்டிருந்தார். அந்த மனக்காயம் ஆற்றப்பட்டு, உள்ளத்தில் அமைதி மீண்டும் நிலைபெறுவதற்கான வாய்ப்பினை அவர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். கலிலேயக் கடற்கரையில் சீடர்களை சந்தித்த இந்த வேளையில் இத்தகைய அரிய வாய்ப்பை இயேசு பேதுருவுக்கு தருகிறார்.

நண்பர்களே, நாம் சோர்வடைகின்ற நேரங்களில், நலிவுற்று தளர்ந்து போகின்ற தருணங்களில் வலுவடைவதற்கான முதலடியை நாம் தான் எடுத்துவைக்க வேண்டும் என்று கடவுள் எதிர்பார்ப்பதில்லை. அவரே அந்த முதலடியை முன்வைக்கிறார். ஆதாமின் அனுபவம் இங்கே நினைவுறுத்தப்படுகிறது. ஆதாமுக்கு ஒரு கட்டளையை, ஒரு கடமையை கடவுள் கொடுத்தார்; ஆதாம் அந்தக் கடமையிலிருந்து தவறினார். தன் பிழையை உணர்ந்து ஆதாம் அவராகவே கடவுளைத் தேடிச் செல்லவில்லை. ஆனால், தவறிழைத்த ஆதாமைத் தேடிக் கொண்டு கடவுள் வருகிறார். “ஆதாம், நீ எங்கே இருக்கிறாய்?” என்று அன்போடு கேட்கிறார். ஆக, நமது முதல் பெற்றோர் தவறிழைத்தபோதே, அவர்கள் தன்னைத் தேடி வரட்டும் என் காத்திருக்காமல், கடவுளே அவர்களைத் தேடிச் சென்றார். அதே போல, இங்கு இயேசு பேதுருவைத் தேடி வருகிறார். “சீமோனே, எங்கே இருக்கிறாய்? என்னை அன்பு செய்கிறாயா?” என்று அன்பொழுக கேட்கிறார். நாம் பலவீனமான நேரங்களிலும், தளர்ந்து போகின்ற சமயங்களிலும் இதே கேள்வியை நம்மைப் பார்த்தும் இயேசு கேட்கிறார். நமது வாழ்க்கையில் நெறிபிறழ்ந்து தடுமாறும் போது, எந்தவொரு துணையுமின்றி தனித்திருப்பது போல நாம் எண்ணும்போது, நாம் தனியாக இல்லை என்பதை உணர வேண்டும். அத்தகைய நேரங்களில் “என்னை அன்பு செய்கிறாயா?” என்ற கேள்வியுடன் இயேசு நமக்கு வெகு அருகிலே துணைவராக நிற்கிறார்,

“என்னை அன்பு செய்கிறாயா?” என்ற கேள்வியை இயேசு கேட்பதன் காரணம் என்ன? இறைவனின் திருவுளப்படி செயலாற்றுகின்ற நாம், அந்த செயல்களை எல்லாம் அன்பின் அடிப்படையில் செய்ய வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறார். சாதாரண அன்புடன் அல்ல; கடவுள் மீது கொண்ட அபரிமிதமான அன்போடு செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். நமது வாழ்க்கையில் திட்டமிட்டு நாம் செய்கின்ற எல்லா செயல்களுக்கும் இந்த உன்னதமான இறையன்பே அடித்தளமாக இருக்க வேண்டும் என்பதே கடவுளின் எதிர்பார்ப்பாக உள்ளது. நமது அருகில் இருக்கின்ற ஒரு மனிதனின் துன்பத்தைக் கண்ணுற்று, அவன் மேலே பரிவு கொண்டு அவனுக்கு உதவி செய்ய முன்வருவோமென்றால், அந்த பண்பு மிக சிறப்பானதே. ஆனால், அந்த பிறரன்பு செயலையும் இறையன்பை அடிப்படையாகக் கொண்டே செய்திடல் வேண்டும். இதைத் தான் புனித அன்னை தெரேசா செய்தார். கொல்கத்தா நகர வீதிகளில் நலிவுற்று வருந்தியவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய அன்னை தெரேசா, “துன்புறுவோர் மீது எழுந்த பரிதாபத்தால் அல்ல, மாறாக கடவுள் மீது கொண்ட அன்பை முன்னிட்டே அவர்களுக்கு உதவுகிறேன்.. இந்த நற்செயல்களைச் செய்வதற்கு எனக்கு உந்துசக்தியாக இருப்பது இறைவன் மீது நான் வைத்துள்ள அன்புதான்” என்று சொன்னார்.

இதையே புனித அகுஸ்தீனார், “முதலில் இறைவனை அன்பு செய்க; பின்னர் நீ என்ன செய்ய நினைக்கிறாயோ அதனை செய்க” என்று கூறுகிறார். ஏனெனில், இறைவனை அன்பு செய்ய ஆரம்பிக்கின்றபோது, நமது மனிதத்தன்மை பக்குவப்பட்டு மாற்றம் பெறுகிறது. இறைவனின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்ட நாம், நமது பலவீனங்கள் - பாவங்களின் விளைவாக அந்த இறைச்சாயலை இழந்து நிற்கிறோம். இப்போது, “என்னை அன்பு செய்கிறாயா?” என்ற கேள்வியை இயேசு நம்மிடம் கேட்பதன் வாயிலாக, நாம் இழந்துவிட்ட இறைச்சாயல் மீண்டும் நம்மில் மலர்ந்திட செய்கிறார். “ஆண்டவரே, நான் உம்மை அன்பு செய்கிறேன்” என்று இரண்டு முறை கூறிய புனித பேதுரு, மூன்றாம் முறையாக அந்தக் கேள்வியை இயேசு கேட்டபோது, "ஆண்டவரே உமக்கு எல்லாம் நன்றாகத் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?" என்று அழுத்தமாக பதில் சொல்கிறார். இத்தகைய உளபாங்கைத் தான் இயேசு நம்மிடம் இன்று எதிர்பார்க்கிறார். எந்தவொரு செயலையும் செய்யும் போது, “நான் ஏதோ செய்கிறேன்” என்னும் மனபாங்குடன் அல்ல; மாறாக என்னை வலுவூட்டுகின்ற விதமாக என் கரங்களைப் பற்றிக் கொண்டு, என்னோடு நடந்து வருவதற்கு தயாராக இயேசு என் அருகிலே நிற்கிறார் என்ற உணர்வோடு நாம் செயல்பட வேண்டும். கடவுளின் இத்தகைய ஒன்றித்த உடனிருப்பை நாம் அறிந்து அனுபவித்திடவே இன்று நாம் அழைக்கப்படுகிறோம். நமது தோல்விகளிலும், சோதனைகளிலும், கலக்கமுற்றிருக்கும் போதும், நம்மை திடப்படுத்தவும், இழந்த நமது இறைச்சாயலை மீண்டும் பெற்றிடவும் நம் அருகிலே இயேசு இருக்கிறார். இழப்பு நடைபெற்ற இடத்திலேயே இழந்ததை மீண்டும் நிலைநிறுத்துகின்ற செயல்பாடும் நிகழ்கிறது. எங்கே நாம் தவறிழைத்தோமோ, எந்த இடத்திலே நாம் நெறிபிறழ்ந்தோமோ, அந்த இடத்திலேயே இயேசு நம்மை கைதூக்கி கரையேற்ற காத்திருக்கிறார் என்பதை நாம் உணர்ந்திடல் வேண்டும். எனவே, இத்தகைய எண்ணங்களை நம் உள்ளத்திலே நிறுத்தி, நல்லதொரு இறைவேண்டலை செய்வோம்:

“ஆண்டவரே! இதோ, நான் உமது திருமுன் நிற்கின்றேன். நீரே என்னை நன்கு அறிவீர். நான் எங்கே தவறிழைத்தேன் என்பது உமக்கு நன்றாகத் தெரியும். என்னுடைய பலவீனங்களும், தடுமாற்றங்களும் உமக்குத் தெரியும். எனது பயணத்தில் என் முன்நடந்து வழிநடத்தி என்னை பாதுகாத்தருளும். உமது காலடிச் சுவடுகளை பின்பற்றி நான் நடந்திடுவேன்”.

இவ்வாறு நாம் நம்மையே அர்ப்பணிக்கின்ற வேளையில், அழுத்தமாகவும் தெளிவாகவும் நம் காதுகளில் கேட்கின்ற இயேசுவின் அழைப்பு: “என்னைப் பின் தொடர்ந்து வா!”


 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு இறைமகன் இயேசு