வழித்துணையாய் வந்தவர்

திரு. இரான்சம் அமிர்தமணி-சென்னை

வானத்தில் வெண்மேகங்கள் கூட்டங்கூட்டமாக எங்கோ யாத்திரை செல்வதுபோல தவழ்ந்து சென்றன. சூரியனும் தன் வெப்பக் கதிர்களை அன்று குறைத்துக் கொண்டதாகத் தோன்றியது. அந்த வசந்தகால ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேளையில் மெலிதாக குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்ததால் , எருசலேம் நகரத்திலிருந்து வெளியூர்களுக்கு சென்று கொண்டிருந்த பயணிகளுக்கு பிரயாணம் சுகமாக இருந்தது.

Road_to_Emmaus

வடமேற்கு திசையில் இறங்கிச் சென்ற மலைப்பாதையில் அந்த இரண்டு பயணிகளும் தங்கள் முன்னே தெரிந்த சற்று கரடுமுரடானப் பாதையில் கவனமாக அடிமேல் அடிவைத்து சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் மனத்தில் இருந்த குழப்பமான சிந்தனை, அவர்களின் முகத்தில் தெரிந்தது. மூன்று நாட்களுக்கு முன் பாஸ்கா விழா காலத்தில் ஓய்வுநாளுக்கு முந்தையநாளான வெள்ளிக்கிழமையன்று நகரத்தின் கோட்டை மதிலுக்கு வெளியே கல்வாரிக் குன்றில் நாசரேத்து போதகருக்கு நிகழ்த்தப்பட்ட மரண தண்டனையும், அங்கே கறைபடிந்த கழுமரத்தில் உடல் சிதைந்து உயிரிழந்து தொங்கிய அந்த சடலத்திற்கு அவசரமாக நடந்த சவஅடக்கமும், அந்த இரண்டு பயணிகளின் உரையாடலின் முக்கிய கருத்தாக இருந்தது.

"அந்த போதகர் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம்? யூதேயா தேசத்திற்கும், இஸ்ராயேல் மக்களுக்கும் உரோமை சாம்ராஜ்ஜியத்தின் அடிமைத்தளையிலிருந்து விடுதலைப் பெற்று தந்து, தாவீது அரசரின் ஆட்சியை இந்த மண்ணில் மீண்டும் நிறுவிட தோன்றியிருக்கும் தலைவர் இவர் என்றல்லாவா நினைத்திருந்தோம்? இப்போது எல்லாம் ஒன்றுமில்லாது போயிற்றே? உண்மையே பேசி, நன்மையே செய்த அந்த போதகரும் இறந்து போனாரே"
என்று அந்த பயணிகளில் ஒருவரான கிளயோப்பா வருத்தத்தோடு சொன்னார். அவருடைய தோழர், தன் தலையில் போர்த்தியிருந்த துணியை சரி செய்துகொண்டு, "உண்மைதான், நண்பரே! அவர் செய்த பல அற்புத செயல்களைக் கண்டு, அவர் ஒரு தெய்வபிறவி என்று நாம் நினைத்தது பொய்யாகிப் போனது.... நாம் ஏமாந்துவிட்டோமோ?" என்று தனது மனதிலிருந்த சந்தேகத்தை வெளிப்படுத்தினார். "ஒன்றும் புரியவில்லை, அய்யா! ஒரே குழப்பமாக இருக்கிறது.." என்று பதில் சொன்ன கிளயோப்பா, தன் கைநழுவி கீழே விழுந்த ஊன்றுகோலை எடுப்பதற்காக குனிந்தார். அப்போது தங்களுக்குப் பின்னால் ஒரு ஆள் வேகமாக வருவதைக் கண்டார். அந்த பயணியும் இவர்களோடு சேர்ந்து கொள்வதற்காக வருவதுபோல் தெரிந்தது.

"ஷலோம்" என்று அவர்களுக்கு வாழ்த்து கூறிய அந்த புதிய ஆள், நட்போடு புன்முறுவல் பூத்தார். இரு நண்பர்களும் புதிய மனிதருக்கு சமாதான வாழ்த்து கூறினார்கள். அவர்களோடு நடக்கத் தொடங்கிய அந்த மனிதர், "நானும் உங்களோடு வரலாமா? எவ்வளவு தொலைவு செல்கிறீர்கள்?" என்று வினவினார். அதற்கு கிளயோப்பா, "எம்மாவு கிராமத்திற்கு போய்க்கொண்டிருக்கிறோம். உமக்கு சிரமம் இல்லையென்றால் நீரும் எம்மோடு வரலாம்" என்று கூறினார். சிறிது தூரம் மௌனமாக அவரகள் மூவரும் நடந்தார்கள். அந்த மௌனததைக் கலைக்கும் விதமாக கிளயோப்பாவின் தோழர், "இவ்வளவு விரைவாக இதுபோன்ற முடிவு வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை..." என்றார். "ஆமாம்... நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் வேறொன்று நினைக்கிறது போலும்..." என்று கிளயோப்பா பதிலிறுத்தார். இப்போது அந்த புதிய பயணி, "நீங்கள் எதை குறித்து இவ்வளவு கவலையோடு பேசிக் கொள்கிறீர்கள்?" என்று கேட்டார். கிளயோப்பா சட்டென நின்றார். அந்த புதிய பயணியை ஆச்சரியதோடு பார்த்து, "நீர் எந்த ஊரில் இருக்கிறீர்? எருசலேம் பட்டணத்தில் வசிக்கின்ற எல்லோரும் கடந்த இரண்டு நாட்களாக ஒரே ஒரு விஷயத்தை பற்றித்தானே பேசிக்கொண்டிருக்கிறார்கள். நாசரேத்தூர் இளம் போதகர் இயேசுவுக்கு மரண தண்டனை கொடுத்து அவரை கொன்றுவிட்டார்களே... உமக்கு எதுவுமே தெரியாதா?" என்று கேட்டார். அந்த புதிய மனிதர் முகத்தில் சலனமின்றி மற்ற இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தார்.

தலைமை குருவின் சேவகர்களும், மூப்பரும் இரகசியமாக சதிசெய்து மூன்று நாட்களுக்கு முன் இரவு நேரத்தில் இயேசுவை சிறைபிடித்தது, விசாரணை என்ற பெயரில் அன்று இரவு முழுவதும் அவரை அடித்து அவமானப்டுத்தி கொடுமை செய்தது, மறுநாள் வெள்ளிக்கிழமை ஆளுநரின் விசாரணைக்கு பிறகு அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது, அதன் பின்னர் அன்று பகல் பொழுதில் கொல்கொத்தா குன்றில் சிலுவையில் அறையப்பட்ட இயேசு மரணமடைந்தது - இப்படி கடந்த மூன்று நாட்களில் நடந்த சம்பவங்களை உணர்ச்சி பொங்க விவரித்த கிளயோப்பாவின் நண்பர், "இன்று விடியற்காலையில் கல்லறைக்குச் சென்ற சில பெண்கள், அங்கே இயேசுவின் சடலத்தை காணவில்லை என்றும், அதை யாரோ திருடிக்கொண்டு போய்விட்டார்கள் என்றும், கல்லறையில் வானதூதர்கள் இருந்தார்கள் என்றும் சொன்னார்கள்... மேலும் இயேசு உயிரோடிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்... இறந்து போனவர் எப்படி மீண்டும் உயிரோடு வரமுடியும், அய்யா?"" என்று கேட்டார்.

கிளயோப்பா தொடர்ந்து பேசினார்: "அவர்தான் மெசியா என்று நம்பிக்கை வைத்து அவரைப் பின்தொடர்ந்து வந்தோம்.... ஆனால் இப்போது? இயேசுவைக் காணவில்லை... எல்லாம் வெறுமையாகிவிட்டது..." பாதையின் ஓரமாக நின்றபடி பேசிய கிளயோப்பா, தூரத்தில் எங்கோ நோக்கியவாறு நீண்ட பெருமூச்சுவிட்டார். பின்னர் மேற்கொண்டு நடக்க ஆரம்பித்தார். மலைப்பாதை சற்று வளைந்து கீழிறங்கிய அந்த இடத்திற்கு அவர்கள் வந்தபோது, அந்த புதியவர், “நண்பர்களே! மெசியாவைக் குறித்து ஆகமநூல்களில் இறைவாக்கினர் உரைத்தவற்றை நீங்கள் வாசித்ததில்லையா?" என்று கேட்டார். அவர்கள் உதட்டை பிதுக்கி, தங்களுக்கு தெரியாது என்பது போல தலையை அசைத்தார்கள்.

இப்போது அந்த புதிய பயணி, மறைநூலில் மெசியாவை குறித்து கூறப்பட்ட பல்வேறு முன்னறிவிப்புகளை எடுத்துக்காட்டி அவற்றின் பொருளை நிதானமாக விளக்கிக் கூறினார். தான் மாட்சிமை அடைவதற்கு முன், மெசியா துன்பங்களை அனுபவிக்கவேண்டும் என்பதை இறைவாக்கினர் எசாயாவும் இன்னும் பல இறைவாக்கினர்களும் எழுதியுள்ளதை சுட்டிக்காட்டினார். மேலும் இயேசு தனது சீடர்களோடு இருந்த காலத்தில் "நான் துன்புற்று உயர்த்தப்படுவேன், இறந்தபின்னர் மூன்றாம் நாளில் உயிர்த்து எழுவேன்" என்று பலமுறை அவர்களுக்கு கூறியதையும் எடுத்துச் சொல்லி, மெசியாவைக் குறித்து மறைநூலில் சொல்லப்பட்டவை எல்லாம் எவ்வாறு இயேசுவில் முழுமையாக நிறைவேறியுள்ளன என்று விளக்கினார்.

கிளயோப்பாவும் அவருடைய நண்பரும் அந்த புதிய மனிதர் சொன்னதையெல்லாம் திகைப்போடும் ஆச்சரியதோடும் கேட்டுக்கொண்டே நடந்து கொண்டிருந்தார்கள். புதிய பயணி சுட்டிக்காட்டிய மறைநூல் மேற்கோள்களெல்லாம் அவர்கள் பலமுறை வாசித்தவைதான்.... ஆனாலும் இதுவரை புரியாத புதிய அர்த்தங்கள் அவர்களுக்குப் புரிந்தன... பல சந்தேகங்களுக்கு விடைகள் கிடைத்தன.. சிக்கலான முடிச்சுகளாக இருந்த குழப்பங்கள் தெளிவாயின... அவர்கள் மனத்தில் இருந்த சஞ்சல இருள் விலகி, நம்பிக்கை ஒளி உதித்தது... எம்மாவு போகும் பாதையில் தாங்கள் வெகுதூரம் வந்துவிட்டோம் என்பதே அவர்களுக்கு தெரியவில்லை...

கதிரவன் தனது கிரணங்களை சுருக்கிக்கொண்டு மேற்கு திசையில் மலைகளின் வளைவுகளில் இறங்கிக் கொண்டிருந்தான். மாலைநேரக்காற்று இதமாக வீசிக்கொண்டிருத்தது. அவர்கள் மூவரும் பாதையின் ஓரமாக இருந்த ஒரு மண்டபத்தை அடைந்தபோதுதான், தாங்கள் எம்மாவு கிராமத்திற்கு வந்து சேர்ந்துவிட்டோம் என்பதை கிளயோப்பா உணர்ந்தார். அதனை குறிப்பால் கண்டுகொண்ட புதிய பயணி, அந்த பயணத்தில் அவர்களோடு கூட தன்னையும் சேர்த்துக் கொண்டதற்காக நன்றி கூறிவிட்டு, பாதையில் முன்னேறி நடக்கத் தொடங்கினார். ஆயினும் கிளயோப்பாவுக்கும், அவருடைய நண்பருக்கும் அவரை விட்டு பிரிய மனமில்லை. தங்கள் மனத்தில் நம்பிக்கையை விதைத்து, மறைநூல் வசனங்களின் உட்பொருளை புரிந்திடச் செய்த அந்த பயணியை தங்கள் வீட்டிற்கு கூட்டிச் செல்ல நினைத்தார்கள். கிளயோப்பா, "அய்யா, மாலை நேரமாயிற்று... இன்னும் கொஞ்ச நேரத்தில் இருள் சூழ்ந்துவிடும்.. இன்றிரவு எங்களோடு தங்கும்... தயைகூர்ந்து எங்கள் வீட்டிற்கு வாரும்" என்று அழைத்தார். அவரும் அதற்கு சம்மதித்து, அவர்களோடு வந்தார்.

breaking bread at Emmaus

அன்று இரவு உணவுக்காக பந்தியமர்ந்தபோது, கிளயோப்பா ஒரு அப்பத்தை அந்த புதிய பயணியிடம் கொடுத்து, இறைவாழ்த்து மொழிந்திட கேட்டுக்கொண்டார். அவ்வாறே அவர் அப்பதைக் கையிலெடுத்து உயர்த்திப் பிடித்து, "தந்தையே, அனைத்துலகின் ஆண்டவரே, இந்த மண்ணிலிருந்து எங்களுக்கு உணவு அருள்பவர் நீரே! உம்மைப் போற்றுகிறோம்!" என்று கூறி, அப்பத்தை பிட்டு அவர்கள் இருவருக்கும் கொடுத்தார். அப்போதுதான் கிளயோப்பா அந்த பயணியின் கண்களை நேருக்கு நேரே பார்த்தார். அந்த கணத்தில் அவர்கள் சட்டென தங்கள் முன் அமர்திருப்பவர் யார் என்று புரிந்துகொண்டார்கள்... ஆஹா! இவர் ஆண்டவரும் போதகருமான இயேசு அல்லவா?... அவர்களை நோக்கி புன்னகை புரிந்து கொண்டிருந்த இயேசுவை அவர்கள் வியப்போடு பார்த்துகொண்டிருக்கும்போதே, அவர் அந்த இடத்திலிருந்து மறைந்துவிட்டார்!

கிளயோப்பாவும் அவருடைய நண்பரும் செய்வதறியாது வாயடைத்துப்போய், ஒருவரையொருவர் திகைப்போடு பார்த்த்துகொண்டிருந்தார்கள். உள்ளத்தில் உவகையும், உடலிலே புது வலிமையும் பொங்கிட, கைகளை உயர்த்தியபடி துள்ளி குதித்த கிளயோப்பா, உற்சாகத்தோடு கூவினார்: "உண்மைதான்... உண்மைதான்... அந்த பெண்கள் சொன்னது சரிதான்... இயேசு உயிரோடிருக்கிறார்..! அவர் உயிர்த்துவிட்டார்...!!" அவர்கள் இருவரும் வேகமாக வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். இரண்டு பேருடைய மனதிலும் ஒரே எண்ணமே மேலோங்கி நின்றது. "உயிர்த்த இயேசுவை கண்டோம்" என்ற செய்தியை மற்ற சீடர்களுக்கு உடனே சொல்லவேண்டும்... சூழ்ந்திருந்த இருளையும், கடினமான பாதையையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. ஆண்டவர் இயேசுவோடு தாங்கள் பயணம் செய்த அதே சாலையில் ஓட்டமும் நடையுமாக எருசலேம் நகரத்திற்கு விரைந்து போனார்கள். கிளயோப்பாவின் தோழர் உற்சாகம் பொங்க, "வழியிலே அவர் நம்மோடு பேசி மறைநூலை விளக்கும்போது நமது உள்ளம் பற்றி எரிவது போல நாம் உணர்ந்தோம் அல்லவா?" என்று கூறினார்.

எருசலேம் நகரத்தில் நுழைந்தவுடன் அவர்கள் இருவரும் சீடர்கள் தங்கியிருந்த இல்லத்திற்கு ஓடிவந்தார்கள். மூச்சிரைக்க மாடிப்படிகளில் ஏறிவந்து, மேலறையின் கதவை உடைத்துவிடுவது போல தட்டினார்கள். கதவைத் திறந்த பேதுருவை தள்ளிக்கொண்டு, உள்ளே நுழைந்தார்கள். தன்னை கட்டுப்படுத்த முடியாமல் கிளயோப்பா கூச்சலிட்டார்: "அவர் உயிரோடிருக்கிறார்..! நமது ஆண்டவர் இயேசு உயிரோடிருக்கிறார்..! எங்களோடு பந்தியமர்ந்து அப்பத்தை பிட்டு எங்களுக்கு அவர் தந்தபோது, நாங்கள் அவரைக் கண்டுகொண்டோம்...!"

his disciples praising

அறையில் கூடியிருந்த சீடர்களில் ஒருவர் கைகளை உயர்த்தியபடி உரத்த குரலில் இறைப்புகழ் கூற, அனைவரும் ஒன்றிணைந்து பாடினார்கள்:

“ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே..!
இன்று அக்களிப்போம்.. அகமகிழ்வோம்..!”


மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது