காலடி அமர்ந்து....
திருமதி நிர்மலா அல்போன்ஸ் -மெல்போன்- ஆஸ்திரேலியா
நாங்கள் சென்னையில் வசித்தப்பொழுது எங்கள் வீட்டில் ஒரு நாய் இருந்தது. மிகவும் செல்லமாக குடும்பத்தில் ஒருவராக வளர்ந்த வந்தது. அதன் பெயர் குல்ஃபி. என் கணவர் வீட்டில் நாற்காலியில் அமர்ந்திருந்தால் அவர் காலடியில் வந்துப்படுத்துக் கொள்ளும். அவரும் அதைத் தடவி, தடவி அதன் உரோமங்களுக்கிடையில் மறைந்து கிடக்கும் உண்ணிகளை எடுத்துவிட்டால், சுகமாகக் காட்டிக் கொண்டு இருக்கும்.
நாம் அதிகமாய் நேசிப்பவர்கள் நம் அருகில் இருந்தால் அவர்களது காலடியில் அமர்ந்து அவர்கள் பேசுவதைக் கேட்பது அல்லது அவர்களது இருத்தலை உணர்வது நமக்கு மிகவும் விருப்பமான செயலாக இருக்கிறது.
விவிலியத்தில் இயேசு மீது அன்புகொண்ட சில பெண்கள் அவரது காலடியில் இருப்பதைக் காண்கிறோம்.
- லூக்கா 10:39, மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
- லூக்கா 7:38, இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார்; அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார்.
பெண்கள் மட்டுமல்ல, ஆண்கள் பலரும் இயேசுவின் காலடியில் இருக்கும் பல நிகழ்வுகள் விவிலியத்தில் காணப்படுகிறது.
- லூக்கா 8:35 பேய்கள் நீங்கப்பெற்றவர் ஆடை அணிந்து அறிவுத் தெளிவுடன் இயேசுவின் காலடியில் அமர்ந்திருப்பதைக் கண்டு அஞ்சினர்.
- லூக்கா 17:16 அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர்.
- மத்தேயு 15:30 அப்பொழுது பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்தனர். அவர்கள் தங்களோடு கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், மற்றும் பிற நோயாளர் பலரையும் அவர் காலடியில் கொண்டுவந்து சேர்த்தனர். அவர்களை அவர் குணமாக்கினார்.
என்னுடைய நண்பர் ஒருவர் தவக்காலத்தில் மேற்கொள்ளும் ஒரு செயலாக அடிக்கடி நற்கருணை சந்திப்புச் செய்து இறைப்பிரசன்னத்தில் அமர்ந்திருக்கப் போவதாகச் சொன்னார்.
நான் சிந்தித்துப் பார்க்கிறேன்! திருச்சபை - கடன் திருநாட்கள் எனச் சொல்லப்பட்ட நாட்களைத் தவிர்த்து மற்றநாட்களில் தனிமையில் கோவிலுக்குக் சென்று நற்கருணை முன்பாக மண்டியிட்டு அமர்ந்து இயேசுவோடு உறவாடிய நாட்கள் எத்தனை?
இந்த வாழ்க்கை என்னும் பயணத்தில் நாம் எதையோ தேடி ஓடிக்கொண்டே இருக்கிறோம். நம்மைச் சுற்றிலும், நமக்குள்ளாமாக பலவிதமான இரைச்சல்கள். "என்னிடம் வாருங்கள், இளைப்பாறுதலை தருவேன். " என்று ஓயாமல் அழைத்துக் கொண்டிருக்கும் இயேசுவின் மென்மையான குரலைக் கேட்பதற்கு நம் புறந் செவிகள் அல்ல. ஆன்மாவின் செவிகள் திறக்க வேண்டும். பரிசுத்த ஆவியின் உந்துதலால் நாம் நிதானம் பெற்று, இயேசுவின் காலடியில் அமர பழகிவிட்டால் இனி எல்லாம் சுகமே!
எஜமானின் காலடியில் அமர்ந்த நாய் உடலில் இருந்து உண்ணிகள் களையப் பட்டு சுகம் பெற்றது.
நன்றியுணர்வோடும், நம் பாவங்களுக்கு மனம் வருந்தியும், நமது தேவைகளை நினைத்தும் இயேசுவின் காலடியில் அமர்ந்துவிட்டாலே போதும், நம் உடல், உள்ளம் ஆன்மா இவற்றில் ஒட்டியிருக்கும் உண்ணிகள் களையப்பட்டு சுகம் பெறுவோம்.
நான் தினமும் தியானிக்கும் பாடலிருந்து சில வரிகள்.
"அழகிய உன் பதம் தொடவேண்டும்
நான் ஆயிரம் வரங்கள் பெற வேண்டும்"