துயர் நிறை பேருண்மை
1. இயேசு பூங்காவனத்தில் இரத்தவியர்வை வியர்த்தது.
இறைவாக்கு:
அவரோ மிகுந்த வேதனைக்குள்ளாகவே, உருக்கமாய் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அவரது வியர்வை பெரும் இரத்தத் துளிகளைப் போலத் தரையில் விழுந்தது. அவர் இறைவேண்டலை முடித்துவிட்டு எழுந்து சீடர்களிடம் வந்தபோது அவர்கள் துயரத்தால் சோர்வுற்றுத் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். லூக். 22:44-45
சிந்தனை
சோதனை வந்த பொழுது இயேசு தந்தையிடம் செபிக்கின்றார். இறைத்தந்தையின் சித்தம் நிறைவேண்டுமென்று செபிக்கிறார். துன்பதுயர வேளைகளில் செபத்தில் ஈடுபடமால் நான் இறைவனை நொந்து கொண்டு அவரிடமிருந்து அகன்று தூரப் போகின்றேனா? இயேசு செபித்ததனால் வானதூதர் ஒருவர் அவருக்கு ஆறுதல் கூறி அவரது மனநிலையை உறுதிப்படுத்துகின்றார். நானும் இறைச் சித்தப்படி செபித்தால் கட்டயாம் வானதூதர் எனக்கும் ஆறுதல் அளிப்பார் என்று நம்புவேன் என்ற பக்குவம் எனக்கு உண்டா?
செபம் :
ஆண்டவரே! துன்பவேளியில் எனக்கும் மன உறுதியைத் தாரும்.
2. இயேசு கசையால் அடிக்கப்பட்டது
இறைவாக்கு:
பின்னர் பிலாத்து இயேசுவைச் சாட்டையால் அடிக்கச் செய்தான்.யோவா. 19:1
சிந்தனை:
மனிதர்களின் கையால் மனுமகன் அடிபடுகின்றார். பிறர்க்கு நன்மையே செய்தபுவூடல் மனிதனின் தன்னலத்தால் பதம் பார்க்கப்படுகின்றது. நான் எனது ஐம்புலன்களை அடக்காமல் மனம் போனபோக்கில் சிற்றின்பத்திற்கு என்னையே கையளித்துள்ளேனா, தூயவரான இயேசு பரபாஸ் என்ற கொலைகாரனோடு ஒப்பிடப்படுகின்றார். அன்று ஓசன்னா! என்று அறிக்கையிட்டவர்களே இன்று சிலுவையில் அறையும் அவனை என்று கொக்கரிக்கின்றனர். எனது வாழ்விலும் பல சமயங்களில் இயேசுவைப் புறக்கணித்து இவ்வுல மதிப்பீடுகளைப் பெரிதுப்படுத்துகின்றேனா?
செபம் :
ஆண்டவரே! துன்பங்கள் வரும் பொழுது துவண்டு போகாமல் நாட வரம் தாரும்!
3. இயேசுவுக்கு முள்முடி தரிக்கப்பட்டது
இறைவாக்கு:
அவருடைய ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தனர். அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரது தலையின்மேல் வைத்து, அவருடைய வலக்கையில் ஒரு கோலைக் கொடுத்து அவர்முன் முழந்தாள்படியிட்டு, யூதரின் அரசரே, வாழ்க! ; என்று சொல்லி ஏளனம் செய்தனர்: மத். 27:28-29
சிந்தனை:
மகிமையின் கிரீடத்தைத் துறந்து முள்முடி சூடப்படும் இயேசுவைப் பார். பலமுறை நான் அகந்தையோடு நான் தான் இவ்வுலகின் மையம் என்று கருதியுள்ளேன். வணங்காமுடியாக நான் என் கருத்துதான் முக்கியம் என்று தலைக்கனம் பிடித்துத் திரிந்துள்ளேன். தாழ்ச்சியோடு பிறருடைய கருத்துக்கு பலவேளைகளில் நான் செவிமடுத்ததில்லை. இயேசுவின் பணிவான குணத்தில் நானும் பங்கு பெறுவேன் என்று தீர்மானிப்பேன்.
செபம் :
ஆண்டவரே! என் வாழ்வில் வரும் அவமானங்களைப் புன்னகையோடு ஏற்றுக் கொள்ள அருள்புரியும்!
4. இயேசு சிலுவையைச் சுமந்து செல்லல்
இறைவாக்கு:
இயேசு சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு மண்டை ஓட்டு இடம்; என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர். யோவா. 19:17
சிந்தனை:
ஒரு கள்வனைப்போல, ஒரு கொலையாளியைப்போல, ஒரு குற்றவாளியைப்போல இயேசு அவமானத்தின் சின்னமாகிய சிலுவையைச் சுமந்து செல்கிறார். நம் பாவங்களை அவர் சுமந்து நம்மை விடுவிக்க இவ்வாறு சிலுவையை ஏற்றுக்கொண்டார். அவரது காயங்களால் நாம் குணமடைகிறோம். எனது வாழ்வில் வரும் சிலுவைகளை துன்ப துயரங்களை நான் சுமக்க எவ்வளவு தயக்கம் காட்டுகிறேன்! இக்கட்டான நிலைகளில் நான் இறைவனின் சித்தத்தை அறிய முற்படுகின்றேனா? அல்லது அவரது சித்தத்தை ஒதுக்கித் தள்ளி நான் போன போக்கில் செல்கின்றேனா?
செபம் :
ஆண்டவரே! உம் சித்தத்தை அறிந்து அதன்படி நடக்க எனக்கு அறிவுத் தெளிவைத் தாரும்!
5. இயேசு சிலுவையில் உயிர் விடுதல்
இறைவாக்கு:
ஏறக்குறைய நண்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று. கதிரவன் ஒளி கொடுக்கவில்லை. திருக்கோவிலின் திரை நடுவில் கிழிந்தது. தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார். லூக். 23:44-46
சிந்தனை:
சிலுவையின் அடியில் அன்னை மரி வீரத்தாயாக நிற்கின்றார். தன் அன்பு மகன் கள்வர் மத்தியில் சிலுவையில் தொங்குவதைப் பார்த்துத் தாயின் உள்ளம் சுக்குநூறாய் உடைந்திருக்காதா? தனக்கென்றிருந்த இறுதி பொக்கிஷமாகிய தனது தாயை எனது தாயாக இயேசு கையளிக்கின்றார். 'இதோ! உன் தாய்! என்னே இயேசுவின் தியாக அன்பு! 'ஆன்மதாகம் கொண்டு தாகமாய் இருக்கின்றேன்" என்கிறார் இயேசு. என் வாழ்வில் இயேசுவின் தாய் நடந்த பாதையில் நான் செல்கின்றேனா? ஆன்ம தாகத்தால் இயேசுவின் அன்பைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ளும் ஆசை எனக்குண்டா?
செபம் :
ஆண்டவரே! கல்வாரிக் குன்றில் பாடுபடும் இயேசுவோடு நானும் பங்கேற்று என் பகைவர்களை மன்னிக்கும் வரம் தாரும்!
செபமாலை முடிக்கின்ற செபம்
முதன்மை வானதூதரைன அதிதூதரான புனித மிக்கேலே, வானதூதர்களான புனித கபிரியேலே, இரபேலே திருத்தூதர்களான புனித பேதுருவே, பவுலே, யோவானே நாங்கள் எத்தனைப் பாவிகளாயிருந்தாலும் நாங்கள் இப்பொழுது வேண்டிக்கொண்ட இந்த ஐம்பத்து மூன்று மணி மன்றாட்டையும், எங்கள் புகழுரைகளோடு சேர்த்து, புனித கன்னி மரியாவின் திருப்பாதத்திலே பாத காணிக்கையாக வைக்க உங்களை மன்றாடுகிறோம். ஆமென்.