மகிழ்ச்சி நிறை பேருண்மை
1. அதிதூதர் கரியேல் கன்னி மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்னது
இறைவாக்கு:
ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார் " என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். வானதூதர் அவரைப் பார்த்து, ;மரியா, அஞ்சவேண்டாம்: கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்: அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்: உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது ; என்றார். லூக். 1:26-33.
சிந்தனை
இவ்வுலகைப் படைத்தாளும் இறைவனின் தூதரே மரியாளிடம் வந்து இம்மகிழ்ச்சியான செய்தியைச் சொன்னர், மரியாளின் மகிமையைக் குறிக்கிறது. இறைவனின் திட்டம் இது தான் என்றறிந்ததும், உடனே மரியாள் கீழ்ப்படிகின்றாள். தன்னையே இறைவன் திட்டத்திற்கு அர்ப்பணிக்கின்றாள். மரியாள் ஆம் என்று சொன்னதனால் நமக்கு ஒரு மீட்பர் கிடைத்துள்ளார். இயேசுவை இவ்வுலகிற்குக் கொடுப்போம்.
செபம் :
ஆண்டவரே!! நான் உமது சித்தத்தை அறிந்து ஆம் என்று சொல்லும் வரம் தாரும்.
2. கன்னி மரியாள் எலிசபெத்தைச் சந்தித்தது
இறைவாக்கு:
மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது அவர் உரத்த குரலில், ;பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்: உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. லூக். 1:45
சிந்தனை:
நற்செய்தியைக் கேட்டவுடனே மரியாள் விரைந்து சென்று, எலிசபெத்திற்கு ஆவியானவரின் அருட்பொழிவை அளிக்கின்றார். தூய திருமுழுக்கு யோவானுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றாள். அவர் தாயின் வயிற்றிலே இருன்னும் பொழுதே தூய்மைப் படுத்தப்படுகிறார். நான் ஆர்வத்தோடு இயேசுவின் நற்செய்தியைப் பிறரோடு பகிர்ந்து கொள்கின்றேனா? ஊக்கத்தோடு பிறருக்கு இயேசுவின் அன்பைப் பகிர்ந்து கொள்ளத் துடிக்கின்றேனா?
செபம் :
ஆண்டவரே! கன்னிமரியாளைப்போல நானும் பிறரன்புப்பணியில் ஈடுபட எனக்கு வரந்தாரும்.
3. இயேசு மனித அவதாரம் எடுத்துப் பிறந்தது
இறைவாக்கு:
கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார். அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார். லூக்.2:5-7
சிந்தனை:
இவ்வுலகைப் படைத்த இறைமகனுக்கு இவ்வுலகில் பிறக்க இடமில்லை. மாட்டுக் குடிலில் பிறந்தார். கந்தைத்துணியால் போர்த்தப்பட்டார். மிருகங்கள் தான் அவருக்கத் துணை. இருப்பினும் யோசேப்பும் மரியாளும் அமைதியாக மகிழ்ச்சியோடு இறைச் சித்தத்திற்கு அடிபணிகின்றனர். இந்த உலக காரியங்களில் தான் எனது மகிழ்ச்சி உண்டு என்று நான் எண்ணி வாழ்கின்றேனா? அல்லது எனது மகிழ்ச்சி திருப்தி எல்லாம் இறைவனின் எளிமையான வாழ்வுதான் எனது வாழ்வின் மையம் எனறு வாழ்கின்றேனா?
செபம் :
ஆண்டவரே! இயேசுவின் எளிய தாழ்ச்சியான மனநிலையை எனக்குத் தாரும்.
4. இயேசு கோவிலில் அர்ப்பணிக்கப்படுதல்.
இறைவாக்கு:
குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள். மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள்.ஏனெனில், ;ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும் ; என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு ஒருசோடி மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது. லூக். 2:25
சிந்தனை:
புறவினத்தார்க்குக் கூட ஒளியாக இயேசு கோவிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கப்படுகின்றார். திருக்குடும்பம் ஏழ்மையில் இருந்தால், ஏழைகளின் காணிக்கையாகிய இரண்டு புறாக்களை எடுத்துச் சென்றனர். இறைவனது மீட்பைப் பற்றியும், இறைமகன் இயேசு இவ்வுலகின் ஒளியாய் உண்மையாய் வாழ்வாகவும் இருக்கின்றார். என்பதை வெளிப்படையாகப் பிறருக்கு அறிவிக்கும் தைரியம் எனக்கு உண்டா?
செபம் : ஆண்டவரே! மரியாளின் தூய இதயத்தை எனக்குத் தாரும்.
5. கோவிலில் இயேசுவைக் கண்டுபிடித்தல்
இறைவாக்கு:
அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.மூன்று நாள்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார் அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்து கொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர். லூக். 2:48
சிந்தனை:
பன்னிரண்டு வயதிலேயே இயேசு இறைத்தந்தைத் தனது அப்பா என்ற அனுபவத்தைப் பெற்றிருந்தார். ஆசிரியர்கள் சொல்வதைக் கவனமாய்க் கேட்டார். அறிவு சார்ந்த கேள்விகளை அவரிடம் கேட்டார் எனது குழந்தைகளை ஆன்மீக வாழ்வில் வளர்ச்சியடையக் கூடிய சூழ்நிலைகளை எனது குடுபத்தில் நான் உருவாக்குகின்றேனா? காசையோடு யோசேப்பும் மரியாளும் இயேசுவைத் தேடினது போல எனது குழந்தைகள்மீது நான் கரிசனையுள்ள அன்பை வெளிப்படையாகக் காட்டுகின்றேனா?
செபம் :
ஆண்டவரே உமது பிரசனத்தை ஒவ்வொரு நாளும் நான் ஆவலாய் தேட அருள்புரியும். .
செபமாலை முடிக்கின்ற செபம் முதன்மை வானதூதரைன அதிதூதரான புனித மிக்கேலே, வானதூதர்களான புனித கபிரியேலே, இரபேலே திருத்தூதர்களான புனித பேதுருவே, பவுலே, யோவானே நாங்கள் எத்தனைப் பாவிகளாயிருந்தாலும் நாங்கள் இப்பொழுது வேண்டிக்கொண்ட இந்த ஐம்பத்து மூன்று மணி மன்றாட்டையும், எங்கள் புகழுரைகளோடு சேர்த்து, புனித கன்னி மரியாவின் திருப்பாதத்திலே பாத காணிக்கையாக வைக்க உங்களை மன்றாடுகிறோம். ஆமென்.