மகிமை நிறை பேருண்மை

1. இயேசு உயிர்த்தெழுதல்

glory-01இறைவாக்கு:
பிறகு அவர்கள் கல்லறைக்குள் சென்றபோது வெண்தொங்கல் ஆடை அணிந்த இளைஞர் ஒருவர் வலப்புறம் அமர்ந்திருக்கக் கண்டு திகிலுற்றார்கள். அவர் அவர்களிடம் "திகிலுற வேண்டாம்: சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள்: அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்: அவர் இங்கே இல்லை: இதோ, அவரை வைத்த இடம்." மாற். 16: 6,7

சிந்தனை
இயேசு சாவின் மீது வெற்றி கொள்கிறார். மானிடமகன் பாடுகள் பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார் என்ற இறைவாக்கை இயேசு நிறைவேற்றிக் காட்டுகிறார். மகதலா மரியா, இயேசுவின் மீது வைத்திருந்த ஆழ்ந்த அன்பிற்குச் சனமானமாக முதன்முதல் அவளுக்குத் தன்னையே வெளிப்படுத்துகிறார். உயிர்த்த ஆண்டவரின் செய்தி: . 'அஞ்சாதீர்கள் உங்களுக்கு அமைதி உண்டாகுக" என்பதாகும். பாவத்திற்கு மரித்து நிலைவாழ்விற்கு இட்டுச் செல்லும் பாதையை நான் தேடுகிறேனா? அன்பு, அமைதி, மகிழ்ச்சி என்ற உயிர்ந்த ஆண்டவரின் கொடைகளை நான் தேடி அடைய முயற்சிக்கிறேனா?

செபம் :
ஆண்டவரே! உயிர்த்த ஆண்டவரின் அமைதி என்று என்றும் எந்நாளும் என்னோடு நிலைத்து நிற்க அருள்தாரும்.

2. இயேசு விண்ணேற்றம் அடைதல்

glory-02இறைவாக்கு:
இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். மாற். 16:19

சிந்தனை:
என் தந்தையின் வீட்டில் பல வீடுகள் உண்டு. நான் முன்னே செல்கின்றேன் என்ற உறுதி மொழியைக் காத்து, இயேசு விண்ணகம் செல்கின்றார். இவ்வாழ்க்கையின் துயரங்களை வென்றால், விண்ணகத்தில் என்ற ஓர் இடம் உண்டு என்ற நம்பிக்கையில் நான் வாழ்கின்றேனா? சாவுக்குப்பின் வெற்றி, வெற்றிக்கு பின் நிலைவாழ்வு உண்டு என்ற நம்பிக்கையில் என் வாழ்வைத் தைரியத்தோடு நான் வாழ்கின்றேனா?

செபம் :
ஆண்டவரே! என் வாழ்வை வெற்றிகரமாக நடத்தி, இயேசுவோடு ஒரு நாள் விண்ணகத்தில் மகிமையோடு அரசாள்வேன் என்ற நம்பிக்கையை எனக்குக் கொடுத்தருளும்!

3. தூய ஆவியாரின் வருகை

glory-03இறைவாக்கு:
பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். திடீரென்று கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது.மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள்.தி.ப.2: 1-4

சிந்தனை:
பெந்தகோஸ்து பெருவிழாவின்போது தூய ஆவியானவர் அக்கினி நாவின் வடிவில் வந்திறங்கி மக்களுக்கு அருள் பொழிவு கொடுத்தார். சிதறிக்கிடந்தவர்களை ஒரு குடும்பமாக ஒன்று சேர்த்தார். கொடைகளை அள்ளித் தெளித்து கோழையாக இருந்தவர்களை வல்லமையுள்ள இறைத்தூதர்களாக மாற்றினார். திருச்சபை என்ற குழந்தை பிறக்கும் அந்த வேளையில் அன்னை மரியாள் தாயாக இருந்து செயல்படுகின்றாள். ஆவியானவரின் கொடைகளைப் பெற்ற இயேசுவின் சாட்சியாய் வாழ நான் தாகம் கொண்டிருக்கின்றேனா?

செபம் :
ஆண்டவரே! என் வாழ்வில் தொடர் பெந்தெகோஸ்தே அனுபவத்தை நான் வல்லமையோடு உமக்குச் சாட்சியான வாழ்வு வாழ வரம் தாரும்!!

4. அன்னை மரியாளின் விண்ணேற்பு

glory-04இறைவாக்கு:
அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்: "ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்: உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்: தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்: செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார். தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார் ".லூக். 1:44-55

சிந்தனை:
மரியாளின் தாழ்நிளை கண்டு இறைத்தந்தை அவளை உயர்த்துகின்றார். தலைமுறை தலைமுறையாய் அவரது இரக்கம் நினைவுக் கூறப்பட்ட வேண்டுமென்று இறைவன் அன்னை மரியாளை உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு அழைத்துச் சென்று அவளை மகிமைப்படுத்துகின்றார். "வல்லவராம் என் இறைத்தந்தை என்னையும் உயர்த்தி வருகின்றார்." என்று நம்பி நான் நம்புகின்றேனா? விண்ணகம் என் தாய்நாடு என்று நம்பி அருள் வாழ்வைத்தேடி வாழ்கின்றேனா?

செபம் :
ஆண்டவரே! அன்னை மரியாளின் பரிந்துரையை நான் நாடி உம்மையே என் இலக்காகக் கொள்ள வரம் தாரும்!

5. கன்னி மரியாள் விண்ணுலக மண்ணுலக அரசியாக முடிசூடப்பட்டது.

glory-05இறைவாக்கு:
வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது: பெண் ஒருவர் காணப்பட்டார்: அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்: நிலா அவருடைய காலடியில் இருந்தது: அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார். தி.ப :11-1

சிந்தனை:
அன்னை மரியாள் இயேசு பிறக்கும் முன் சொன்ன "ஆம்" என்ற அதே வார்த்தையைச் சிலுவையின் அடியில் நின்ற போதும் மீண்டும் சொல்லி வீராங்கனையானள். இறைச் சித்தத்திற்கு அடிபணிந்ததால் இறைமகன் இயேசுவை இவ்வுலகிற்கு அளிக்கும் உன்னத கருவியானாள். ஆகவே, இறைவன் அவளை விண்ணக மண்ணக அரசியாக முடிசூட்டியது எவ்வளவு பொருத்தம். எத்துணை உண்மை! பேருண்மை! கடவுளை நம்பியவள் ஏமாந்து போகவில்லையே! எனக்கும் அதே பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அன்னை மரியின் பரிந்துரையை நாடுகின்றேனா?

செபம் :
ஆண்டவரே! கடந்ததை மறந்துவிட்டு வரும் பரிசை நினைத்து மகிழ்ந்து நான் வாழ அருள் தாரும்!

செபமாலை முடிக்கின்ற செபம்
முதன்மை வானதூதரைன அதிதூதரான புனித மிக்கேலே, வானதூதர்களான புனித கபிரியேலே, இரபேலே திருத்தூதர்களான புனித பேதுருவே, பவுலே, யோவானே நாங்கள் எத்தனைப் பாவிகளாயிருந்தாலும் நாங்கள் இப்பொழுது வேண்டிக்கொண்ட இந்த ஐம்பத்து மூன்று மணி மன்றாட்டையும், எங்கள் புகழுரைகளோடு சேர்த்து, புனித கன்னி மரியாவின் திருப்பாதத்திலே பாத காணிக்கையாக வைக்க உங்களை மன்றாடுகிறோம். ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  செபங்கள்