முதன்மையானது செபம்..

அருட்பணி ஜேம்ஸ் தியோபிலஸ் ச.ச

prayers
விவிலியம் கூறும் பக்தி முயற்சிகளில் முதன்மையானது செபம். கடவுள் மக்களோடு தொடர்பு கொள்வதற்கு தன்னையே வெளிப்படுத்துகிறார் (விப 3:14). மனிதன் கடவுளோடு தொடர்பு கொள்வது பலிகள் வழியாக அதிலும் சிறப்பாக செபங்கள் வழியாக. செபம் என்பது இறை மனித உறவை அடித்தளமாக வைக்கிறது. பழைய ஏற்பாட்டிலே தொடக்கநூலில் 18ம் அதிகாரத்தில் ஆபிரகாம் இறைவனோடு கொள்ளுகின்ற செப உரையாடலைப் பார்க்கின்றோம். சோதோம் நகரம் அழிக்கப்படுவதற்கு முன்பாக ஆபிரகாம் இறைவனோடு மன்றாடுகிறார். அங்கே ஒரு உறவு பரிமாற்றம் வெளிப்படுத்தப்படுகிறது. அதே போல அவருடைய சந்ததிகள் தொடர்ந்து இறைவனிடம் மன்றாடுகின்றார்கள் (யாக்கோபு பலமுறை இறைவனிடம் மன்றாடி ஆசீரைப் பெறுகிறார் - தொநூ 32, தாவீது அரசனும் அதே போல இறைவனோடு மன்றாடுகிறார் - திருப்பாடல்கள்). செபம் என்பது ஒரு தொடர் உறவு பரிமாற்றமாக பழைய ஏற்பாடு நமக்கு சொல்கிறது.

செபத்தை இரண்டு வகைகளில் நாம் வாழ்ந்து காட்டலாம். முதலாவதாக, செபம் சொல்லுதல் இரண்டாவதாக செபித்தல். செபம் சொல்லுதல் என்பது ஒரு புத்தகத்தில் உள்ள செபத்தை வாய்திறந்து உச்சரிப்பது. செபித்தல் என்பது தனி மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையேயுள்ள உறவை வெளிப்படுத்துவது. பல வேளைகளில் நாம் செபம் சொல்லுகிறோம். ஆனால் செபித்தல் தான் மிகச் சிறந்தது. இயேசுவும் செபம் சொல்லுகிறார். லூக் 4:16 ல் கூறப்படுவது போல “வழக்கத்தின்படி ஓய்வு நாளில் தொழுகைகூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். ஆக, பொது செபத்திற்கு செல்வது இயேசுவின் வழக்கமாக இருந்தது. அதேபோல இயேசு எருசலேமிற்கும் ஆண்டுதோறும் பாஸ்கா விழாவிற்கும், மற்ற பெருவிழாவிற்கும் சென்றார் (லூக் 2:42).

ஆனால், விவிலியத்தில் பல இடங்களில் நாம் காண்கிறோம் இயேசு தனித்திருந்து செபிப்பதை.

* பொது பணியை துவங்குவதற்கு முன்பாக பாலைநிலத்தில் அவர் செபித்தார்(லூக் 4:2).
* காலையில் கருக்கலில் சென்று செபித்தார் (மாற்கு 1:35).
* இரவும் முழுவதும் செபித்தார் (மாற்கு 6:46).
* திருத்தூதர்களை தேர்ந்தெடுப்பதற்கு முன் செபித்தார் (லூக்கா 6:12-16).
* லாசரை உயிர்ப்பிப்பதற்கு முன்பாக இரண்டு நாள்கள் செபித்தார் (யோவான் 11:6).
* இயேசு கெத்சமெனித் தோட்டத்தில் செபித்தார் (மத்தேயு 26:36-46).
 

இவ்வாறு, பல இடங்களில் அவர் தனித்திருந்து செபிப்பதாக நற்செய்திகள் கூறுகின்றன. இந்த செபத்தில் அவர் என்ன செபித்தார் என்பது நமக்கு கொடுக்கப்படவில்லை. அவருடைய செபத்தின் உள்ளடக்கம் நமக்கு தரப்படவில்லை.

ஆனால், மத்தேயு 11:25 ல் ஒரு சிறிய உள்ளடக்கம் தரப்படுகின்றது “தந்தையே விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும், அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.” அதேபோல் யோவான் 11:41 ல் ஒரு சிறிய செபம் சொல்லப்படுகிறது. “தந்தையே என் வேண்டுதலுக்கு செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறே.;”

இவைத் தவிர, மற்ற இடங்களில் அவர் பல வேளைகளில் செபித்த பொழுது என்ன செபித்தார் என்றே தெரியவில்லை. அவருடைய செபம் முழுமையாக தந்தை மகன் உறவை வெளிப்படுத்துகிற ஒரு உரையாடலைத் தான் வெளிப்படுத்தியிருக்கும் என்பதை விவிலியப் பணியாளர்கள் கூறுகின்றார்கள். ஆக, செபித்தல் என்பது கடவுளுக்கும் நமக்கும் இடையே உள்ள உறவை வெளிப்படுத்துகிறது. இதையும் யோவான் நற்செய்தியாளர் 17ம் அதிகாரத்தில் அழகாக சித்தரித்திருக்கிறார்.

இயேசு தன்னுடைய சீடர்களைக் கூட செபம் சொல்ல கூறவில்லை. அவர்கள் அவரிடம் ஆண்டவரே யோவான் தன்னுடைய சீடருக்கு இறைவனிடம் வேண்ட கற்றுக்கொடுத்தது போல எங்களுக்கும் கற்றுக்கொடும். அவர்கள் கேட்டப்பொழுது தான் இயேசு அவர்களுக்கு செபிக்க கற்றுகொடுக்கிறார். விண்ணகத் தந்தையே உமது பெயர் போற்றப்படுக என்ற செபத்தை கற்றுக்கொடுக்கிறார் (லூக்11:1-4).

அன்புக்குரியவர்களே! செபித்தல் என்பது இறை-மனித உறவு வாழ்க்கை. இது செபம் சொல்லுவதை விடச் சிறந்தது. இந்த தவக்காலத்தில் நாம் இறைவனோடு அந்த உறவு வாழ்க்கையை ஆழப்படுத்துவோம். அவர் முன் அமர்ந்து நம்முடைய எண்ணங்கள், தேவைகள், விருப்பங்கள், துன்பங்கள், ஏமாற்றங்கள், கவலைகள் போன்றவைகளை தந்தையிடம் குழந்தைகள் பேசுவது போல உளமாறப் பேசுவோம். இதுவே இறை-மனித உறவை வளர்ப்பதற்கான சிறந்த வழிமுறையாகும்.

நன்றி - அருள்வாக்கு.காம்
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  செபங்கள்