இயேசுவின் இறை வேண்டுதலைப் பின்பற்றி..

A.J.S.ராஜன் .
prayer

இயேசுவின் சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி "ஆண்டவரே,திருமுழுக்கு யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்தது போல் எங்களுக்கும் கற்றுக் கொடும்" என்றார். இயேசு சொன்ன வேண்டுதல் "கர்த்தர் கற்பித்த செபம்" என்ற பெயருடன் நடைமுறையில் உள்ளது. இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இயேசு செபித்த செபம் என்னவென்றால் நம்மில் அநேகர் ஆச்சரியப்படக் கூடும்.

யோவான் எழுதிய நற்செய்தி மற்ற மூவரும் எழுதிய நற்செய்திகளிலிருந்து மாறுப்பட்ட அமைப்பைக் கொண்டது,மற்ற மூவரும் இயேசுவின் பிறந்தது முதல் பாடுபட்டு,உயிர்த்தெழுந்தது வரை வரலாறு முறைப்படி எழுதினார்.ஆனால் யோவான் எழுதிய நற்செய்தி சாதரண மக்களுக்கு அன்று, அவர் காலத்தில் வாழ்ந்த கிரேக்க வேதபோதக வல்லுநருக்காக எழுதப்பட்டது. இதனை நாம் நற்செய்தியின் ஆரம்பத் திருச்சொற்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். அவர் இயேசுவின் நற்செய்தியை அணுகிய முறையே மாறுப்பட்டதாகும். அதனால் அவரது செய்தியின் சிலபகுதிகளைப் புரிந்து கொள்ளுவது கடினமாகும்.அதனை அதிகாரம் 17-லில் நன்றாக உணரலாம்.

நாம் இங்கு ஆழ்ந்த சிந்தனை செய்ய எடுத்துக் கொள்ளுவது யோவான் நற்செய்தியின் 17-ம் அதிகாரமும், திரு இருதயத்திற்கும் குடும்பத்தை ஒப்புக் கொடுக்கும் செபத்தையும் ஒப்பு ஆய்வு மேற்கொண்டு அதன் சிறப்பை எடுத்துக் காண்பிப்பதே ஆகும். இயேசு தமது சீடர்களுக்காக வேண்டினார். நாமும் அவரைப் போல நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட குடும்பத்திலுள்ள குழந்தைகளுக்காவும் பரந்த மனப்பான்மையுடன் உலகிலுள்ள அனைவருக்காவும் மன்றாடுகிறோம்.

இயேசு கற்பித்த வேண்டுதலும், அவர் தமது சீடர்களுக்காகவும் உலகிலுள்ளவர்க்காகவும் செய்த வேண்டுதலும் நாம் எவ்வாறு வேண்ட வேண்டுமென்று தெள்ளத்தெளிவாக யோவான் நற்செய்தி 17-ம் அதிகாரம் எடுத்துரைக்கின்றது. இதனைப் பலமுறை வாசித்து இதன் உட்கருத்தை அறிந்து கொள்ளுவது சாலச் சிறந்ததாகும். இயேசு பெருமான் காட்டிய வழியில் நாம் தினமும் வேண்டுவோம். அதற்கு உறுதுணையாக இருப்பது குடும்பத்தை திருஇருதயத்திற்கு ஒப்புக்கொடுக்கும் செபம் என்பது எமது எளிமையான எண்ணம். இதை நீங்கள் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் செபித்து பயன் பெறுமாறு உங்களைக் கேட்டுக் கொள்ளுகிறோம்.

இயேசுவின் வேண்டுதல் - யோவான் அதிகாரம் 17

நன்றி நவிலல்

நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன். தந்தையே, உலகம் தோன்றும் முன்பே நீர் என்னை மாட்சிப் படுத்தியுள்ளீர். இப்போது உம் திருமுன் அதே மாட்சியை எனக்குத் தந்தருளும்.(17:4,5)

ஒப்படைக்கப்பட்டவர்கள்

நீர் இவ்வுலகிலிருந்து தேர்ந்தெடுத்து என்னிடம் ஒப்படைத்த மக்களுக்கு நான் உமது பெயரை வெளிப்படுத்தினேன். உமக்கு உரியவர்களாய் இருந்த அவர்களை நீர் என்னிடம் ஒப்படைத்தீர். அவர்களும் உம் வார்த்தைகளைக் கடைப்பிடித்தார்கள்.(17:6)

நிந்தை பரிகாரம்

நீர் எனக்குத் தந்தவை அனைத்தும் உம்மிடமிருந்தே வந்தவை என்பது இப்போது அவர்களுக்குத் தெரியும்.ஏனெனில் நீர் என்னிடம் சொன்னவற்றையே நான் அவர்களிடமும் சொன்னேன். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு நான் உம்மிடமிருந்து வந்தேன் என்பதை உண்மையில் அறிந்துகொண்டார்கள். நீரே என்னை அனுப்பினீர் என்பதையும் நம்பினார்கள்.அவர்களுக்காக நான் வேண்டுகிறேன். உலகிற்காக அல்ல, மாறாக நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுக்காகவே வேண்டுகிறேன். அவர்கள் உமக்கு உரியவர்கள்.(17:7-9)

எல்லோருக்காகவும் வேண்டுதல்

இனி நான் உலகில் இருக்கப்போவதில்லை. அவர்கள் உலகில் இருப்பார்கள். நான் உம்மிடம் வருகிறேன். தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும்.நான் அவர்களோடு இருந்தபோது நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்து வந்தேன்: நன்கு பாதுகாத்தேன். அவர்களுள் எவரும் அழிவுறவில்லை. மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறும் வண்ணம் அழிவுக்குரியவன் மட்டுமே அழிவுற்றான்.(17:11-12) அவர்களை உலகிலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் வேண்டவில்லை: தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன்.(17:15) அவர்களுக்காக மட்டும் நான் வேண்டவில்லை: அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன்.(17:20)

ஒப்புக் கொடுத்தல்

எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்.(17:21) இவ்வாறு, நான் அவர்களுள்ளும் நீர் என்னுள்ளும் இருப்பதால் அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக. இதனால் நீரே என்னை அனுப்பினீர் எனவும் நீர் என்மீது அன்பு கொண்டுள்ளதுபோல் அவர்கள்மீதும் அன்பு கொண்டுள்ளீர் எனவும் உலகு அறிந்து கொள்ளும்.(17:23)

இறைவனோடு இணைதல்

தந்தையே, உலகம் தோன்றுமுன்னே நீர் என்மீது அன்புகொண்டு எனக்கு மாட்சி அளித்தீர். நீர் என்னிடம் ஒப்படைத்தவர்கள் என் மாட்சியைக் காணுமாறு அவர்களும் நான் இருக்கும் இடத்திலேயே என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.(17:24) நான் அவர்களோடு இணைந்திருக்கவும் நீர் என்மீது கொண்டிருந்த அன்பு அவர்கள்மீது இருக்கவும் உம்மைப்பற்றி அவர்களுக்கு அறிவித்தேன்: இன்னும் அறிவிப்பேன். (17:26)

திரு இருதயத்திற்குக் குடும்பத்தை ஒப்புக் கொடுக்கும் செபம்

நன்றி நவிலல்

இயேசுவின் திரு இருதயமே! கிறிஸ்துவ குடும்பங்களில் தேவரீர் செய்து வரும் சகல உபகாரங்களையும், சொல்ல முடியாத உமது நன்மைத் தனத்தையும் நினைத்து நன்றியறிந்த பட்சத்தோடு உமது திருபாதத்தில் முகம் குப்புற விழுந்து கிடக்கிறோம்.

ஒப்படைக்கப்பட்டவர்கள்

எங்கள் குடும்பங்களில் சகலரையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். தேவரீர் எங்களை ஆசீர்வதித்து,இப்பொழுதும் எப்பொழும் உமது திரு இருதய நிழலில் நாங்கள் இளைப்பாறச் செய்தருளும்.

நிந்தை பரிகாரம்

மறந்து எங்களில் யாரவது உமது திரு இருதயத்தை நோகச் செய்திருந்தால் அவர் குற்றத்திற்காக நாங்கள் நிந்தை பரிகாரம் செய்கிறோம். உமது திரு இருதயத்தைப் பார்த்து எங்கள் பரிகாரத்தை ஏற்றுக் கொண்டு அவர்களுக்குக் கிருபை செய்தருளும்.

எல்லோருக்காகவும் வேண்டுதல்

உலகத்திலிருக்கும் எல்லாக் குடும்பங்களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம். பலவீனருக்குப் பலமும், திக்கற்றவர்களுக்கு ஊன்றுகோலும் விதவைகளுக்கு ஆதரவு அனாதைப் பிள்ளைகளுக்குத் தஞ்சமுமாயிருக்கத் தயைபுரியும். ஒவ்வொரு வீட்டில் நோயால் சிரமப்படுவர்கள் தலைமாட்டில் தேவரீர் தாமே விழத்துக் காத்திருப்பீராக.

ஒப்புக் கொடுத்தல்

சிறுபிள்ளகைளை நீர் எவ்வளவோ பாசத்தோடு நேசித்தீரே! இந்த விசாரணையிலுள்ள சகல பிள்ளைகளையும் ஆசீர்வதியும். அவர்களுடைய இருதயத்தில் விசுவாசத்தையும், தெய்வ பக்தியையும் வளரச் செய்யும். ஜவிய காலத்தில் அவர்களுக்கு அடைக்கலமாகவும் மரணசமயத்தில் ஆறுதலாகவும் இருக்க உம்மை மன்றாடுகிறோம்.

இறைவனோடு இணைதல்

திவ்விய இயேசுவே! முறை முறையாய் உமது திருசிநேகத்தில் வாழ்ந்து மரித்து நித்தியகாலமும் எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாறக் கிருபை புரிற்தருளும். -ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  செபங்கள்