விவிலியத்தில் செபம்

prayer

மலையளவு நம்பிக்கை

அன்று இயேசுவின் பத்துச் சீடர் பதறி உள்ளத்தையும் இல்லத்தையும் இழுத்து மூடிக் கொண்டனர். மூடிய கதவுகள் வழியே வெண் ஒளிக் கீற்றாய் இயேசு வந்தார். கல்லறையில் அடக்கப்பட்ட இயேசு இங்கு எங்கே எனச் சீடர்கள் பதற கலக்கம் வேண்டாம். உயிருடனே திரும்பி விட்டேன். உங்களுக்கு அமைதி ஆகட்டும் என்று அவர்களை வாழ்த்தினார். புசிப்பதற்கு மீனும் அப்பமும் கொடுத்தார். மறைந்தார். ஆனால் அச்சமயம் தோமா அங்கு இல்லை. நடந்தது கேட்ட தோமா, என் கையால் அவரைத் தொட்டால் மட்டுமே இயேசுவின் உயிர்ப்பு உண்மை என உணருவேன் என்றார். இயேசு மீண்டும் ஒளி வெள்ளமாய்த் தோன்றினார். தோமாவைத் தொட்டுப் பார்க்கச் சொன்னார். தோமாவோ "என் அகத்தலைவா என் முழுமுதற்தேவா" என அவர் பாதம் வீழ்ந்து பணிந்தார். அதற்கு இயேசு, கண்டு நம்பிக்கை கொண்டு வாழ்வதைவிட காணாமலேயே நம்பிக்கை கொண்டு வாழ்வதே நலம் என்றார்.(யோவா. 20: 24 - 29)

நூற்றுவருக்கும் நூதனமான தலைவன் ஒருவன் அன்று கப்பநாகும் வந்த இயேசுவைத் தேடிப் போனான். என்ஊழியன் ஒருவன் திமிர்வாதத்து நோய்க்குள் நொடித்துவிட்டான். அதனை நீக்குதற்கு நின் அருள் வேண்டும் நீ நினைத்தால்தான் நோய்க்கு நிவாரணம் இல்லையென்றால் அவன் உயிர் நிவேதனம் என்றான். உடனே இயேசு உன் இல்லம் செல்லும் பாதையைக் காட்டு. நான் வந்து அவன் வாதையைப் போக்குவேன் என்றார். இல்லை இல்லை. உம்மை ஏற்க எளியவன் இல்லம் தகுதியற்றது. அதனால் ஒரு வார்த்தை சொல்லும். அவன் நோய் நீங்கும் என்றான். இவனது மொத்த நம்பிக்கையைப் பார்த்த இயேசு இஸ்ரயேலில் நல்ல உள்ளம்; இதுகாறும் பிறந்ததில்லை என்று பாராட்டி, உன் ஊழியன் அங்கே வளமாய் உள்ளான். போய்வா என்றார். பின்னர் கூட்டத்திடம், மனிதருக்கு தேவை மலையளவு நம்பிக்கை என்றார். (லூக்கா 7: 01-10)

செபத்திற்குத் தேவை நம்பிக்கை. அதுவும் நாக்கு முதல் நாடி நரம்புவரையான நம்பிக்கை. மொத்த நம்பிக்கை. ஒருவர் சொல்கிறார்: மனிதன் தன்னிடத்தில் அழுத்தமான நம்பிக்கை பெறுவதற்குக் கடவுளிடம் நம்பிக்கை வைப்பது அவசியம் என்கிற புதிய மரபு உருவாகிக் கொண்டிருக்கின்றது என்று. பிரார்த்தனைக்கு நோய்களை குணமாக்கக்கூடிய சக்தி இருப்பதாக அலெக்ஸிஸ் கேரல் போன்ற பெரிய மேதைகள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கைக் கடலில் புயலும் இடியும் இயல்பே என்பதை இதயம் உணரட்டும். அதைவிட உணரட்டும் புயலையும் இடியையும் சாந்தப்படுத்த வல்லவர் இறைவன் என்பதை. அந்தக் கடவுள் சொல்கிறார் : என் மீது நம்பிக்கை வை. என்னை விட்டுவிட்டு நீ எதையும் செய்ய முடியாது என்று. ஆம். கடவுளின் துணையால் நம்மால் எதையும் செய்ய முடியும். நம்பிக்கையே செபம்.

மன்னிப்பு தரும் மகிழ்ச்சி (திருப்பா 51)

மன்னன் தாவீது அழகிலும் அறிவிலும் வீரத்திலும் சிறந்து விளங்கியவர். குடிமக்களுக்கு அன்பானவர். பாசமானவர். பாங்கானவர். பெருந்தன்மையானவர். எளிதில் மனம் நோகச் செய்யாதவர். மென்மையானவர். மதிக்கப்படுபவர். நட்புக்குத் துரோகம் செய்யாதவர். தர்ம சங்கடத்தில் ஆழ்த்தாதவர். ஆயினும் அவருக்கும் ஒருநாள் வந்தது. பல மனைவிகள் இருந்தும் இன்னுமொரு பெண்ணை ஏறெடுத்துப் பார்த்தார். அவள் இன்னொருவனின் மனைவி எனத் தெரிந்தும் அவளைத் தனது மனைவியாக்க அவரின் காமப்பசி துடித்தது. அதனால் அந்த இன்னொருவனைக் கொல்வதற்கும் துணிந்தார். அவனை வஞ்சகமாகப் போர்க்களத்திற்கு அனுப்பிக் கொன்றார். மாற்றான் மனைவி அவரது மனைவியானார். இறைவனால் திருப்பொழிவு செய்யப்பட்ட நாடாளும் மன்னன் செய்யும் செயலா இது? தன்னை நம்பி வாழும் குடிமகனுக்குச் செய்த துரோகம் அல்லவா இது? இறைவனது கடும் கோபம் அவரைச் சுட்டது. தன்நிலை உணர்ந்தார். ஆண்டவரிடம் அழுதழுது செபித்தார்.

ஆண்டவா! என்னை எல்லாரும் நல்லவன் என்று வாழ்த்தினார்களே!
என்னோடு வாழ்வது இன்பம் என்று ஏத்தினார்களே!
ஆனால் உமக்கு எதிராகப் பாவம் செய்தேனே!
இறைவா! உமக்கு எதிராக மட்டுமே பாவம் செய்தேன்.
என் குற்றங்குறைகளை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.
நான் செய்த பாவம் எந்நேரமும் என் கண்முன் நிற்கின்றது.
நீர் என்னைக் கழுவியருளும்.
என்னில் தூய்மை மணக்கட்டும்.
அதனால் உம் மன்னிப்பை மக்களுக்கு எடுத்துச் சொல்வேன்.
உம் பேரன்பை, உம் பரிவன்பை, உம் நன்மைத்தனத்தை மற்றவர்க்குச் சொல்வேன்.
என்னைப் போல் பாதை மாறிச் சென்றவர்க்கு உம் வழிகளை எடுத்துச் சொல்வேன்.

இறையன்பைப் புறக்கணிப்பது பாவம். ஆயினும் இறைவனின் மன்னிக்கும் கருணை உள்ளம் மனிதனின் எத்துணைப் பெரிய பாவத்தையும் தன்னுள் அமிழ்த்திவிடக் கூடியது. அதனால் பாவத்தின் மன்னிப்பைப் பெற்று இறைவனின் அரவணைப்பில் இணையத் துடிப்பது நொறுங்கிய உள்ளம். இந்த உள்ளம் இறைதிருமுன் தன் பாவம் ஏற்று அவரிடம் மன்னிப்பை மன்றாடுகிறது. இதுவே செபம். செய்த தவற்றை ஏற்று புதிய இதயத்தைக் கேட்பது செபம். பாவங்களைச் செய்து கொண்டே இறைவனிடம் மன்னிப்பு கோர முடியாது. ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்து கொண்டே கடவுளிடம் இரக்கத்தை வேண்ட முடியாது. இருப்பதை ஊதாரித் தனமாகச் செலவு செய்துவிட்டு இறைவனிடம் வசதி வாய்ப்புகளைக் கேட்க முடியாது. வாழ்க்கையின் வெற்றிக்குத் தூண்டுகோலாக அமைவது செபம்.

அன்று முதல் உலகப் போர் கடுமையாக நடந்து கொண்டிருந்தது. நேச நாட்டுப் படைகள் திருப்பித் தாக்குவதற்கு நாள் குறித்துவிட்டன. அதற்கான பொறுப்பை எற்ற தளபதிக்குச் செய்தி சொல்ல ஆள் அனுப்பினார்கள். அவரைக் காணவில்லை. தேடினார்கள். கடைசியாக ஒரு சிறு கோவிலில் அவர் செபித்துக் கொண்டிருந்தார். எத்தனை முறை பிரார்த்தனை செய்யப்பட்டது, எத்தனை முறை செபவரிகள் செபிக்கப்பட்டன, எத்தனை முறை தீபங்கள் ஏற்றப்பட்டு ஆரத்தி எடுக்கப்பட்டது, எத்தனை முறை மறைநூல்கள் வாசிக்கப்பட்டன என்பதெல்லாம் ஒருவரின் ஆன்மீக அளவு கோல்கள் அல்ல. மாறாக ஒருவரின் எண்ணமும் அதிலிருந்து வெளிவரும் வார்த்தையும் செயலுமே அவரை அளக்கும் அளவு கோல்.

நன்றி : வத்திகான் வானொலி செய்திமடல்


மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  செபங்கள்