செபம் என்றால் என்ன?

prayer

செபம் என்றால் என்ன? செபிப்பது எப்படி? எத்தனை வகையான செபங்கள் உண்டு? எனக்குப் பிடித்த செபம் எது? இந்த கேள்விகளுக்கு பதில் காண்போம்.

செபங்கள் பலவகை.அவைகளில் முக்கியமானவைகள்.

1) ஆராதனை செபம் 2) மன்னிப்பு செபம் 3) புகழ்ச்சி செபம் 4) செவிமடுத்தல் செபம் 5) மன்றாட்டு செபம் 6) அர்ப்பண செபம் 7) நன்றி செபம்.

ஒரு நண்பரை சந்திக்கும்போது என்ன செய்கிறோம்? முதலில் வணக்கம் செலுத்துகிறோம். (ஆராதனை) , மனநோகச் செய்திருந்தால், அவரிடம் மன்னிப்புக் கேட்கிறோம் (மன்னிப்பு செபம்). அவரது நல்ல குணங்களுக்காக அவரை பாராட்டுகிறோம்(புகழ்ச்சி செபம்), அவரோடு கலந்து பேசி அவர் ஆலோசனையை கேட்கிறோம் (செவிமடுத்தல் செபம்), அவரது உதவியை நாடுகிறோம் (மன்றாட்டு), அவருக்கு உதவியளிக்க உறுதி கூறுகின்றோம். (அர்ப்பணம்), இறுதியில் நன்றி கூறி விடை பெறுகின்றோம்(நன்றி).

இறைவனை சந்திக்கும்போதும் இவை அனைத்தும் நிகழவேண்டும். திருப்பலியில் இறைவனை சந்திக்கிறோம். திருப்பலிதான் சிறந்த செபம். அதில் எல்லா வகையான செபங்களும் அடங்கியுள்ளன. இதை சிறிது விளக்கமாகக் காண்போம்.

ஆராதனை செபம்

திருப்பலிக்கு ஆலயம் சென்றவுடன் நாம் செய்வது என்ன? முழந்தாளிட்டு நம்மை தாழ்த்தி, நித்திய ஸ்துதிக்குரிய சொல்லுகிறோம். இறைவனை ஆராதிக்கிறோம். பிதா, சுதன், ஆவியைப் பணிந்து ஆராதிப்போம். பாடல்களால் ஆராதிக்கலாம். அமைதியில் ஆராதிக்கலாம். இறைவன் ஆராதனைக்குரியவர். இறைவனை மட்டுமே நாம் ஆராதிக்க வேண்டும்.

மன்னிப்பு செபம்

திருப்பலி ஆரம்பமாகிறது. நமது பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கிறோம். நான் பாவி என்று ஏற்றுக்கொள்;கிறேன். ஆண்டவரே இரக்கமாயிரும், ஆண்டவரின் இரக்கத்தையும் மன்னிப்பையும் பெறுகின்றோம்.

புகழ்ச்சி செபம்

உன்னதங்களிலே இறைவனுக்கு மகிமை உண்டாகுக என்று பாடி ஆண்டவரை புகழ்கிறோம். இது சிறப்பான செபம். இசையிலும், இசைக்கருவிகளாலும் ஆண்டவரைப் புகழ்வோம். திருப்பலியே புகழ்ச்சி பலிதான். இயேசுவோடு, இயேசு வழியாக தந்தையை புகழ்கிறோம். ஆண்டவரை நான் எந்நேரமும் போற்றுவேன். அவரது புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும். (திபா 34-1)

செவிமடுத்தல் செபம்

திருப்பலியில் அடுத்து வருவது வார்த்தை வழிபாடு, விவிலியத்திலிருந்து வாசகங்கள் வாசிக்கப்படுகின்றன. இறைவார்த்தை வழியாக இறைவன் பேசுகிறார். அவர் குரலுக்கு செவிமடுக்கின்றோமா? இவரே என் அன்பார்ந்த மகன்! இவருக்கு செவிசாயுங்கள்! (மத் 17-5). ஆண்டவரே பேசும், அடியவன் கேட்கிறேன் (1சாமு 3-10). அநேகத் தீமைகளுக்குக் காரணம்;, இறைவார்த்தையை கேட்டு, இறை சித்தத்தை நாம் நிறைவேற்றுவதில்லை.

மன்றாட்டு செபம்

அடுத்து மன்றாட்டு. கேட்ட இறை வார்த்தையின்படி வாழ செபிப்பதே சிறந்த மன்றாட்டு. மேலும் திருச்சபைக்காகவும், உலகிற்காகவும் செபிக்கிறோம். இதுவே விசுவாசிகளின் மன்றாட்டு.

அர்ப்பண செபம்

திருப்பலியில் அப்ப, இரசத்தோடு நம்மையே காணிக்கையாக்குகிறோம். இதுவே அர்ப்பணம். நமது வாழ்வே ஒரு பலி. தினமும் திருப்பலியில் நம்மை முழுமையாக அர்ப்பணிப்போம். நமது அர்ப்பணத்தை தினமும் புதுப்பிப்போம். நம்மையும் நம் வாழ்வையும் நம் இன்ப துன்பங்கள், வேலை வருத்தங்கள், பாவங்கள், பலவீனங்கள், வெற்றி தோல்விகள், பகை வெறுப்புக்கள், நமது குடும்பப் பிரச்சனைகள், செபங்கள், தவங்கள், அனைத்தையும் பலியாக ஒப்புக் கொடுப்போம். எனக்குப் பிடித்தது அர்ப்பண செபம்தான். நான் விரும்பி செபிப்பது இந்த செபம் தான். புனித மார்க்கிரேட் மரியம்மாளின் சேசுவின் திருஇருதயத்திற்கு ஒப்புக்கொடுக்கும் செபத்தை தினமும் நற்கருணை வாங்கியபின் சிறு வயதிலிருந்தே செபிப்பேன். இந்த செபமே என் வாழ்வை மாற்றியது.

நன்றி செபம்

இறுதியில் நன்றி செபம். நமது வாழ்வே ஒரு நன்றி செபமாக மாற வேண்டும். எந்நேரமும் நன்றி கூறுங்கள் (எபே 5-20)


மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  செபங்கள்