திருத்தூதர் தோமா

அருள்பணி ஏசு கருணாநிதி
incredulity_st_thomas

ஜூலை 3ஆம் நாள் திருத்தூதர் தோமாவின் திருநாளைக் கொண்டாடுகிறோம். இயேசுவின் சமகாலத்தவர் ஒருவர், இயேசுவோடு வாழ்ந்த, பணி செய்த, அவரின் விலாவிலேயே கையிடும் பேறு பெற்ற தோமா நாம் வாழும் இந்தத் தமிழ் மண்ணில் வந்து நின்றார் என்று நினைக்கும்போதே ஆச்சர்யமாக இருக்கிறது.

எருசலேமுக்கும் கோழிக்கோட்டிற்குமான தூரத்தை அவர் கடந்த விதம், மேற்கொண்ட பயணம், பயணத்தில் சந்தித்த சவால், புதிய வாழ்விடம், புதிய கலாச்சாரம், மொழி, உணவுப்பழக்கவழக்கம், மனித உருவம் என அனைத்துமே புதிதாய் அவருக்கு இருக்க, இந்தப் புதிய இடத்தில் அவர் காலூன்றி நற்செய்தி அறிவித்ததும் ஆச்சர்யமாக இருக்கிறது.

'திதிம்' என்பது இவருடைய பெயர். 'திதிம்' என்றால் 'இரட்டை' என்பது பொருள். வாழ்வின் எதார்த்தங்கள் எல்லாமே இரட்டையில்தான் இருக்கின்றன: ஆண்-பெண், பகல்-இரவு, நன்மை-தீமை, ஒளி-இருள், பிறப்பு-இறப்பு, மகிழ்ச்சி-துன்பம். தோமாவிடமும் இந்த இரட்டைத்தன்மை இருந்தது. ஒரு கட்டத்தில் 'வாருங்கள், நாமும் சென்று அவரோடு இறப்போம்' என்கிறார். மறு கட்டத்தில் நம்புவதற்கே தயக்கம் காட்டுகிறார். ஆனால், இந்த இரண்டையும் ஒன்றோடொன்று சமரசம் செய்து கொள்ளாமல் அப்படியே எடுத்துக்கொள்கின்றார்.

நாம் பல நேரங்களில் இரட்டைத்தன்மையை ஒற்றைத்தன்மையாக்க முயற்சி செய்கின்றோம். அது தவறு என்றே நான் சொல்வேன். பிறப்பு மட்டுமே இருக்க முடியுமா? இறப்பு என்ற அதன் அடுத்த பக்கமும் அவசியம்தானே. இரட்டைத்தன்மையை ஒன்றாக்க முயலும்போதுதான் விரக்தி வந்துவிடுகிறது. 'நன்மை,' 'ஒளி,' 'மகிழ்ச்சி' ஆகியவை மட்டுமே சரி என நினைத்து மற்றதை விடுவதால் நாம் அடுத்ததை விரும்பத்தகாதது ஆக்கிவிடுகிறோம்.

திதிம் நம்மிலும் ஒருவர்.

ஐயம் கொண்ட இவரின் மற்றொரு குணம் சரணாகதி.

இரண்டும் அவசியம்தான் இறை-மனித உறவில்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு