புனித தந்தை பியோ அவர்களின் கடைசித் திருப்பலியின் காணொலி சில பகுதிகள் செப்டம்பர் 22-1968

புனித பியோ பியத்ரெல்சியா

வாழ்க்கை வரலாறு:

இளமைக் காலம்

st.pio prays for us!இத்தாலி நாட்டில் பென்வென்டோ (Benevento) மாநிலத்தில் பியெத்ரெல்சினா (Pietralcine)என்ற சிற்றூர் உள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டில் அந்த கிராமம் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் இருந்தது. அங்கு அப்போது 300 குடும்பங்கள் மட்டுமே வசித்து வந்தன. அந்த கிராமத்தில் தான் ஒராசியோ போர்ஜியோனி (Orazio Forgione) மரிய ஜியுசெப்பா (Maria Giuseppe) தம்பதியருக்கு 1887 ஆம் ஆண்டு நான்காவது மகனாகப் பிறந்தவர் தான் தந்தை பியோ. எளிமையான நிலையிலும் அந்தக் குடும்பம் ஒழுக்க வாழ்வினையே கடைப்பிடித்து வந்தது. அன்றாடம் ஜெபிப்பதை அந்த குடும்பத்தார் கடமையாகக் கொண்டிருந்தனர். குறிப்பாக உலகைப் படைத்த உன்னத இறைவன் மீதும், அந்த இறைவனை ஈன்ற அன்னை மரியாள் மீதும் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தனர். இவரது அன்னையார் தவக்காலத்தில் முழந்தாட்படியிட்டவாறே உணவு உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவரது குடும்பத்தார் வாயிலிருந்து எவ்விதமான தீச்சொல்லும் வெளிவராது. அதுபோன்றே ஒழுக்க வாழ்வியல் சூழலை நம் தந்தை பியோ பிறந்தது முதலே தனது வாழ்க்கையை புனிதமாக அமைத்துக் கொள்ள அடித்தளமாக அமைந்தது. 1887 ஆம் ஆண்டு மே மாதம் இவருக்கு திருமுழுக்கு (Baptized) கொடுக்கப்பட்டது. பெற்றோர் இவருக்கு பிரான்செஸ்கோ (Francesco)என்று பெயரிட்டனர். சிறு வயதிலேயே தந்தை ஜெபிப்பதில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார். தீயச் சொல்லை விரும்பாதத் தந்தை, தீய சொல்லை யார் வாயிலிருந்தாவது கேட்க நேர்ந்தால் அதற்காக கண்ணீர் விட்டு, இறைவனிடம் வருந்தி அழுவார். பக்தி மட்டுமல்லாமல், நகைச்சுவை உணர்வும் இவரிடம் மிகுந்திருந்தது.

தந்தை பியோ தினமும் ஆலயத்துக்குச் சென்று ஜெபிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆலயத்தைக் கவனிக்கும் பொறுப்பில் இருந்த இவரது மாமன் இவர் ஜெபிப்பதற்காக ஆலயக் கதவுகளைத் திறந்துவிடுவார். 1899 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி தந்தை பியோவுக்கு அவரது பன்னிரெண்டாவது வயதில் புது நன்மையும், உறுதிபூசுதலும் வழங்கப்பட்டது. அந்த காலக் கட்டத்தில் இவரது தந்தையார் ஒரு நாள் அவர்களது வீட்டுக்கு அருகாமையில் கிணறு ஒன்று தோண்டுவதற்கு ஏற்பாடு செய்தார். நாற்பதடி ஆழம் தோண்டியும் தண்ணீர் வரவில்லை. அதனைக் கண்ணுற்ற இவர் தனது தந்தையாரிடம், "அந்த இடத்தில் நீங்கள் எவ்வளவு தோண்டினாலும் தண்ணீர் வராது" என்று கூறினார். மகன் வேடிக்கையாக ஏதோ சொல்கிறான் என்று முதலில் நினைத்த தந்தை என்னதான் சொல்கிறார் என்பதைக் கேட்டுப் பார்ப்போம் என்று "அப்படியானால் எங்கு தோண்ட வேண்டும்?" என்று கேட்டார். அவர் ஒரு இடத்தைச் சுட்டிக்காட்டி, "இதில் தோண்டுங்கள் அப்பா" என்றார். என்னதான் நடக்கிறது பார்ப்போம் என்று விளையாட்டாகத் தோண்டினர். அந்த இடத்தில் ஏழடி ஆழத்திலேயே தண்ணீர் பீறிட்டுப் பாய்ந்தது. அந்த நிகழ்வினைக் கண்டு அனைவரும் வியந்தனர்.

pio pio pio pio pio pio

இவரது தந்தையரால் மூத்த மகனைப் படிக்க வைக்க இயலவில்லை. இளைய மகன் பிரான்செஸ்கோவை எப்படியாவது படிக்க வைக்க வேண்டுமென்று எண்ணினார். "மகனே பிரான்செஸ்கோ நீ என்ன படிக்க வேண்டுமென்று விரும்புகிறாய்?" என்று கேட்டார். அதற்கு பிரன்செஸ்கோ, "அப்பா நான் ஒரு குருவானவராக விரும்புகிறேன்" என்று பதில் கூறினார். மகன் படிப்புச் செலவுக்குத் தேவையான பணத்தைச் சம்பாதிப்பதற்காக ஒராசியோ அமெரிக்காவுக்குச் செல்ல முடிவெடுத்தார். ஒராசியோ மனைவி மற்றும் பிள்ளைகளிடம் விடைபெற்றுக் கொண்டபின், மகன் பிரான்செஸ்கோவிடம் வந்தார். அன்பான தந்தையை வறுமைப் பிரிக்கின்றதே என்று மனம் வருந்தியதை அவர்கள் கண்கள் சொன்னது. ஆன்மாவில் பிரான்செஸ்கோ இறைவனின் அன்பைச் சுவைத்ததால, "அப்பா நான் உங்களுக்காக இறைவனிடம் அடிக்கடி ஜெபிக்கிறேன்" என்று இந்த பிஞ்சு மகன் அன்று ஒரு குருவானவரின் மனநிலையில் நின்று கூறியது இவரது தந்தையாரை மெய்சிலிர்க்கச் செய்தது.

இவர் பலமுறை வீட்டிற்குள் நுழையும்போது ஒரு தீயசக்தி இவரை வீட்டிற்குள் நுழையவிடாமல் தடுக்கும். அந்த தீயச் சக்தி சில நேரங்களில் குருவானவரைப் போலவும் காட்சியளிக்கும். அது போன்ற நேரங்களில் இவர் ஒன்றும் புரியாமல் தவிப்பார். அப்போது வெறுகாலோடு ஒரு சிறுவர் இவர் கண் முன் தோன்றுவார். அந்த சிறுவன் தீயச் சக்தி மீது சிலுவை அடையாளம் வரைந்ததும் அந்த தீயச்சக்தி மறைந்துவிடும். சிறு வயடிலேயே துறவு வாழ்க்கையை நேசித்த பிரான்செச்கோ தனது ஒன்பதாவது வயதில் கடும் குளிர்காலத்தில், யாரும் பார்க்காத வகையில் தினமும் கட்டாந்தரையில் படுத்து உறங்கினார். தலையணைக்குப் பதிலாக ஒரு கல்லைப் பயன்படுத்தினார். ஒருநாள் இந்தக் காட்சியைக் கண்ணுற்ற இவரது தாயார் கண் கலங்கினார். இவர் ஆரம்ப காலத்தில் சில நாட்கள் படிப்பில் மந்தமாகக் காணப்பட்டார். அதனைக் கேள்வியுற்ற இவரது தாயார் மிகவும் வருந்தினார். அதற்கான காரணத்தை பிரான்செஸ்கோவிடம் கேட்டறிந்தார். தனக்கு கல்வி தருவதற்கு திறமையும், ஒழுக்கமும் நிறைந்த ஒருவரை ஆசானாக நியமிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி டான் ஆஞ்செலோ கக்காலோ (Don Angele Caccavo) என்பவரை புதிய ஆசிரியராக நியமித்தார். அதன்பின் கல்வியில் மிகவும் சிறந்து விளங்கினார். அன்னையார் மனம் மகிழ்ந்தார்.

pio pio pio pio pio pio pio pio

அருள் தந்தையர்களுக்கு உதவியாக திருப்பீடக் குழுவிலும் இணைந்து இறைப்பணி செய்தார். ஒருநாள் பங்குத் தந்தையுடன் திருப்பீடக் குழுவினர் செல்லும்போது ஒரு இடத்தில் நின்றார். அனைவரையும் பார்த்து "இந்த இடத்தில் கோயில் மணி ஒலிப்பதையும், தூயவர் கீதம் பாடுவதையும் கேட்டீர்களா?" என்று கேட்டார். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆனால் இவரோ "இந்த இடத்தில் ஒரு தேவாலயமும், ஒரு துறவியர் இல்லமும் உருவாகும்" என்று கூறினார். இவர் கூறியபடி அந்த இடத்தில் பின்னாளில் ஒரு தேவாலயமும், ஒரு துறவியர் இல்லமும் உருவானது கண்டு அன்று நகைத்தவர்கள் வியந்தனர்.

துறவற வாழ்க்கை

துறவறச் சபையில் சேர வேண்டுமென்று விரும்பிய இவர் மிகவும் தியாகம் நிறைந்தச் சபையான கப்புச்சின் (Capuchin) சபையில் சேர விரும்பினார். அவருடைய ஆசையை அரங்கெற்றும் வகையில் 1903 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் நாள் இவரது அன்பு அன்னை இவரை துறவற வாழ்வுக்கு அர்ப்பணித்து (Monastery life)வழியனுப்பினார். 1903 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் நாள் பிரான்செஸ்கோவுக்கு துறவற ஆடை வழங்கப்பட்டது. அதன் பின்னர் உத்தரியம், இடைக் கச்சை, எரியும் மெழுகுவர்த்தி ஆகியவை வழங்கப்பட்டன. அன்று பிரான்செஸ்கோ என்ற இவரது பெயரை அருட்சகோதரர் ஃராட்டே பியோ (Frate Pio) என்று பெயர் மாற்றம் செய்தனர். பெயர் மாற்றம் செய்யப்பட்ட பின் பியோ அனுமதிக்கப்பட்ட இரண்டு மணி நேரம் தவிர மீதி நேரங்களில் அமைதியாகவே இருந்து வந்தார். கடுமையான ஒறுத்தல் முயற்சிகளை கடைப்பிடித்து வந்தார். குரு மாணவரான இவருக்கு பெனத்தோ நாதெல்லோ என்பவர் ஆன்ம வழிகாட்டியானார். 1904 ஆம் ஆண்டு ஜனவரி 22 அம் நாள் கற்பு, கீழ்ப்படிதல், ஏழ்மை போன்ற மூன்று வாக்குறுதிகளையும் வழங்கினார். 1905 ஆம் ஆண்டு மெய்யியல் படிப்பைத் துவங்கிய இவர் இரண்டுகள் அங்கு பயிற்சி பெற்று நிரந்தர வார்த்தைப்பாட்டினைக் கொடுத்தார். இவர் குரு மாணவராகப் பயிற்சிப் பெற்று வந்த காலக்கட்டத்திலேயே விண்ணகத்தாருடன் தொடர்பு கொண்டிருந்தார். அருங்காட்சிகள் பல கண்டார். ஆன்மாவில் இறைவனை தாங்கி வந்த இவரை அவ்வப்போது பலவிதமான நோய்கள் வந்து வாட்டி வதை செய்தன.

பேயையும், நோயையும் அவ்வப்போது எதிர்கொண்டாலும், இவரது தளராத மன உறுதியால் 1910 ஆம் ஆண்டும் இவர் கப்புச்சின் குருவானவரானார். குருவான பின் தனது சொந்த ஊரான பியெத்ரெல்சினாவில் முதல் திருப்பலியை நிறைவேற்றினார். 1915 ஆம் ஆண்டு இவரது உடலில் மறைமுகமாக இயேசுவின் ஐந்து காயங்கள் தோன்றினர். அவற்றின் வலி தாங்க முடியாமல் துடித்தார். 1918 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி இவரது கைகளிலும், கால்களிலும், விலாவிலும் ஏற்பட்ட ஐந்து காயங்களிலிருந்து வேதனையுடன் இரத்தமும் வெளிப்பட்டது. ஆனால் பியோவோ தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட வெளி அடையாளங்களை எடுத்துவிட்டு, வேதனைகளை மட்டுமே தரும்படி வேண்டினார். ஆனால் காயங்கல் எதுவும் மறையவில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான மருத்துவக் குழு அவரை வந்து பரிசோதித்தது. காயத்தின் வலி ஒருபுறமிருக்க, இந்தச் சோதனையின் வலியால் மிகவும் அவதிக்குள்ளானார். முடிவில் மருத்துவக் குழு இந்த காயங்களை குணப்படுத்த முடியாதென்று கூறிவிட்டது. ஒருநாள் மருத்துவர் ஒருவர் காயங்களை சோதனை செய்யும்போது, அதிலிருந்து வித்தியாசமான நருமணத்தை உணர்ந்தார். அது முதல் த்ந்தை பியோ தனது காயங்களுடன் வாழும்போதே புதுமைகளைச் செய்து வந்த அந்த அற்புதரை மக்கள் புனிதர் என்றே கொண்டாடினர். இதனால் அவரைப் பார்க்க வரும் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்தது. இதனால் பொறாமை குணம் கொண்ட ஒரு சிலரது சதியால் இவரை மூன்றாண்டு காலம் யாரும் சந்திக்க முடியாதபடி தனிமையில் வைத்திருந்தனர்.

மூன்று மொழிகளை மட்டுமே அறிந்திருந்த தந்தை பியோ எந்த மொழியில் யார் கடிதம் எழுதினாலும் அதனை வாசித்து அறிந்து கொள்ளும் இறை ஆற்றலைப் பெற்றிருந்தார். தினமும் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை ஒப்புரவு அருட்சாதனம் வழங்கினார். ஒருமுறை ஒரு அருட்தந்த்தை இவரை சோதனை செய்யும் நோக்கி சந்திக்க வந்தார். அவர் வரிசையில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் "உங்களுக்கு இருக்கும் ஏராளமான கடமைகளை விட்டுவிட்டு இங்கு வந்து உங்களது நேரத்தை வீணாக்குகிறீர்களே?" என்று கூறினார். அதற்கு அந்த அருட்தந்தை, "நான் காண வேண்டுமென்பதை! கண்டுகொண்டேன். நான் வருகிறேன்" என்று விடைபெற்றுச் சென்றார். தந்தை பியோவின் அற்புதச் சக்தியைக் கண்டு வியந்தார். தந்தை பியோ செய்துவரும் அற்புதங்களைக் கண்ணுற்ற ஒருவர் இவர் ஏதோ மாயஜால வித்தைகளைக் காட்டுகிறார் என்று விமர்சித்தார். அந்த நபர் ஒருமுறை நோய்வாய்ப்பட்டிருந்தார். அதனை அறிந்த தந்தை பியோ அங்கு சென்று அந்த நபருக்காக இறைவேண்டல் செய்து இறையாற்றலால் அவரை குணமாக்கினார். அக்கணமே அம்மனிதர் தனது தவறான எண்ணத்துக்காக வருத்தம் தெரிவித்தார். தந்தை பியோவுக்கு கடுமையான நோய் ஏற்பட்டதன் காரணமாக இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது இவர் மயக்க மருந்து எதுவுமின்றி அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

ஒருநாள் இரவு தந்தை பியோ ஜெபக் கூட்டத்தில் ஜெபித்துக் கொண்டிருக்கும் போது கீழேயிருந்த ஆலயத்தில் ஏதோ ஒரு பொருள் உடைந்து சிதறுவது போல சத்தம் கேட்டது. உடனே தந்தை பியோ அங்கு விரைந்து சென்று பார்த்தார். அங்கு பீடத்துக்கு அருகாமையில் நின்ற பெரிய மெழுகுவர்த்திகள் தண்டுகளோடு உடைந்து சிதறிக் கிடந்தன. தொட முடியாத உயரத்தில் மாதாவின் சுரூபம் இருந்தது. எப்படி மெழுகுவர்த்தித் தண்டுகள் விழுந்தன என்று தந்தை பியோ அங்குமிங்கும் உற்றுப் பார்த்தார்.அப்போது கப்புச்சின் சபை துறவி ஒருவர் அங்கிருந்து சுத்தம் செய்து கொண்டிருப்பதைக் கண்டார். நீங்கள் யார்? ஏன் இந்த இருட்டில் அமர்ந்து கொண்டு இதைச் செய்கிறீர்கள்? நான் இதற்கு முன்பு உங்களைப் பார்த்ததில்லையே என்று கேட்டார்.அதற்கு அவர் நான் ஒரு கப்புச்சின் சபைத் துறவி. நான் மரித்து பல ஆண்டுகளாகிவிட்டன. நான் வாழும் போது சோம்பேறியாக இருந்த குற்றத்திற்காக உத்தரிக்கிற ஸ்தலத்திலே உள்ளேன். எனவே நான் மோட்சம் செல்வதற்காக எனக்காக்ச் செபிப்பீர்களா? என்று கேட்டார்.அதற்கு தந்தை பியோ, இப்போது நீங்கள் அமைதியாகச் செல்லுங்கள். நாளைய தினம் நான் உங்களுக்காக திருப்பலி ஒப்புக் கொடுக்கிறேன் அதன் காரணமாக நீங்கள் விடுதலை பெறுவீர்கள் என்று கூறி அனுப்ப

முதலாம் உலகப்போர் நிகழ்ந்த் காலக்கட்டத்தில் துறவிகளும் போருக்குச் செல்ல வேண்டும் என்ற நிபந்தனையின்படி போரில் கலந்து கொண்டார். போர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் குண்டுவீச்சுக்கு ரொட்டோன்டோ எக்காரணம் கொண்டும் பலியாகாது என்று தந்தை கூறியிருந்தார். ரொட்டோன்டோவுக்கு அருகில் ஜெர்மானியரின் ஆயுதக் கிடங்கு இருப்பதை அறிந்து அமெரிக்க விமானப் படையினர் அதனை அழிக்கத் திட்டமிட்டனர். விமானத்தில் குண்டுமழை பொழிவதற்காக வான் படையை வழிநடத்தி வந்த அதிகாரி திடீரென வான்வெளியில் ஒரு காட்சியினை கண்டு வியந்தார். ஒரு கப்புச்சின் குருவானவர் வானில் தோன்றி அந்த அதிகாரியை முன்னேற விடாமல் தடுத்தார். திகைத்த அந்த அதிகாரி பிற விமானங்களைத் திருப்பிப் போகும்படி உத்தரவிட்டார். பின்னர் அந்த அதிகாரி தன்னை முன்னேற விடாமல் தடுத்த குருவானவர் தந்தை பியோ தான் என்பதை உணர்ந்தார். இங்ஙனம் தந்தை பியோ நாட்கள் செல்லச் செல்ல அற்புத நாயகரானார். அதனால் இவரது இரத்தம் தோய்ந்த ஆடைகளையும் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு எடுத்து சென்றனர். சிலர் அதனை வியாபாரமாகவும் மாற்றினர். ரஷ்ய பிரபுவான இளவரசர் கார்ல் க்ளுகிஸ்ட் இவரது காயங்கள் பற்றிய மருத்துவ அறிக்கையைப் பற்றி செய்தித்தாளில் படித்து இவரை நேரில் காண வந்தார். அவர் தந்தை பியோவிடம் ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெற்றுக் கொண்டார். அப்போது தந்தை பியோ தனது காயங்கள் மீது வலி தாங்க முடியாமல் ஊதுவதைக் கண்டார். இளவரசர் தந்தையின் கரத்தை முத்தி செய்தபோது அந்தக் காயத்திலிருந்து அதிகமாக நறுமனம் வருவதை உணர்ந்தார். அவர் உரோம் சென்று ஒரு துறவறச் சiபியில் சேர்ந்து பிறரால் புண்ணியவான் என்று அழைக்கப்பட்டு தனது எழுபத்து ஏழாவது வயதில் கனடா நாட்டில் மரித்தார்.

pio pio piopio pio pio

1920 ஆம் ஆண்டு பேராசிரியர் ஜெமெல்லி (Gemelli) இவருடைய காயங்களைச் சோதிப்பதற்காக வந்தார். அவரிடம் தந்தை பியோ, "வத்திக்கான் உத்தரவுப்படி நடந்து கொள்ளுங்கள்" என்று கேட்டுக் கொண்டார். அதனால் தன்னை அலட்சியப்படுத்தியதாகக் கருதிய ஜெமெல்லி தந்தை பியோவின் காயங்கள் பொய்யானவை. விஞ்ஞான உலகுக்கு ஏற்றவையே தவிர மெஞ்ஞானத்துக்கு ஏற்புடையதாக இல்லை" என்று அறிக்கை வெளியிட்டார். அவரது செல்வாக்கு அந்த அறிக்கையினை உண்மையென நம்பும்படியாகச் செய்தாலும் தந்தை அதனைக் கண்டு கொள்ளவில்லை. இறைத்தொண்டில் தான் கவனம் செலுத்தினார். ஆனால் ஜெமெல்லி தொடர்ந்து அவதூறு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார். அதற்கான சந்தர்ப்பமும் அவருக்கு சாதககமாகவே அந்நேரம் அமைந்திருந்தது. இதனால் வத்திக்கானின் நடவடிக்கையும் சற்று கடுமையாகவே இவர் மீது இருந்தது. ஆனால் நம் தந்தை பியோ, "நம்மைத் தாகும் திருச்சபியின் கரங்கள் இனிமையானவை" என்று தன்னடக்கமாகப் பதில் கூறுவார். தனக்கு அவமானம் நேர்ந்த போதெல்லாம் அமைதியாக இறைவனின் உதவியை நாடினார். இறைவன் தகுந்த நேரத்தில் இவருக்குத் தேவையான அருளுதவிகளை வழங்கி வந்தார். தீயவர்கள் எந்த அளவுக்கு நம் தந்தையை நசுக்கப்பார்த்தனரோ, அந்த அளவுக்கு இவரது புகழ் நாளுக்கு நாள் பரந்து விரிந்தது. காயங்களின் நறுமணத்தாலும், உள்ளங்களை ஊடுருவி அறியும் ஆற்றலாலும் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தினார். உரோமைச் சேர்ந்த போதினி என்ற எஞ்சினியர் தந்தையைக் காண ரொட்டோன்டோ வந்தார். நீண்ட நேரம் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்த அவர் புறப்பட தயாரான போது மழை பெய்தது. மழையில் எப்படி ஊர் போய் சேருவது? என்று தந்தையிடம் கேட்டார்.. அதற்கு தந்தை பியோ நானும் உன்னுடன் வருகிறேன் என்றார். அதற்கான அர்த்தத்தைப் புரிந்து கொண்ட அம்மனிதர் மழையிப் பொருட்படுத்தாமல் புறப்படத் தயாரானார். பயங்கர காற்றுடன் மழை பெய்தது. ஆனால் அவர் மழையில் நனையாமல் பத்திரமாக வீடு போய் சேர்ந்தார். கொட்டும் மழையில் வந்ததைக் கண்டு அதிர்ச்சியுடன் இவரது நண்பர் இவரை வரவேற்றார். நண்பர் எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் மழையில் நனையாமல் வந்து நிற்பதைக் கண்டு வியப்படைந்தார்.

யுயெத்ரோ குதினோ என்பவன் பன்னிரெண்டு வயதில் பார்வையை இழந்தவன். அவன் ஒருநாள் தந்தை பியோவை சந்திக்க வந்தான். அவனைப் பார்த்த தந்தை "உலகின் பாவங்களைக் காணாத நீ பேறு பெற்றவன். ஏனென்றால் பார்வையற்ற நீ கடவுளைப் புண்படுத்த குறைந்த அளவே சந்தர்ப்பம் இருக்கிறது" என்று கூறினார். அத்துடன் நீ பார்வை பெற விரும்பியதுண்டா? என்று கேட்டார். அவரோ தந்தை பியோ ஏதோ ஒரு திட்டத்தை மனதில் வைத்துக் கொண்டே இங்ஙனம் கேட்கிறார் என்பதை உணர்ந்து கொண்டார். அதனால் தந்தையே நான் எப்போதும் கடவுளின் விருப்பப்படியே நடக்க விரும்புகிறேன். எனது பார்வையை பாதியிலேயே கடவுள் இழக்க வைத்ததற்கு ஏதாவது காரணம் இருக்கும். கடவுள் எனக்கு பார்வை கொடுப்பதன் மூலம் நான் தவறிச் செல்ல நேருமானால் நான் பார்வை பெற வேண்டாம் என்று உறுதியாகக் கூறினான். அவனது உறுதியான வார்த்தைகளைக் கேட்ட தந்தை அவனை அப்படியே வாரியணைத்துக் கொண்டார் நெகிழ்வுடன்.

pio pio pio pio pio pio

ஒரு நாள் ஒரு பெண் தந்தை பியோவைச் சந்தித்து ஏராளமான கருத்துகளை பரிமாறிக் கொண்டிருந்தான். அவளை இடைமறித்த தந்தை பியோ அம்மா நீங்கள் பாவச் சங்கீர்த்தனம் செய்துவிட்டீர்களா? என்று கேட்டார். அதற்கு அப்பெண் தந்தையே நான் எந்த பாவமும் செய்யவில்லையே? பின் எதற்கு பாவச் சங்கீர்த்தனம்? என்று அலட்சியமாக கேட்டாள். அதற்கு தந்தை அம்மா உன் வீட்டிற்குப் போய் வீட்டிற்கு அருகிலுள்ள தெப்பக் குளத்தை உற்றுப் பார். பார்த்த பின்பு நீ அங்கு பார்த்ததை என்னிடம் வந்து சொல் என்று கூறி அனுப்பினார். தந்தை பியோ கூறியபடி அவள் தெப்பக்குளத்திற்குச் சென்று உற்றுப் பார்த்தாள். அவள் அங்கு கண்ட காட்சி அவள் உடலை நடுங்க வைத்தது. தெப்பக் குளத்தில் ஒரு அழகிய குழந்தை இவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தது. பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன் அதே இடத்தில் தனக்குத் தவறான உறவில் பிறந்த குழந்தையை அந்த இடத்தில் தான் வீசி எறிந்தது நினைவிற்கு வந்தது. அந்த நினைவு அவளை நெஞ்சில் குத்த அவள் குழந்தையை வாரி அணைக்க எண்ணினாள். குழந்தை தண்ணீருக்குள் ஓடி மறைந்தது. தனது தவறை உணர்ந்து கண்ணீர் விட்டு கத்றி அழுதாள். தந்தையிடம் வந்து தனது பாவத்தை அறிக்கையிட்டு ஒப்புரவு அருட்சானத்தைப் பெற்றாள். தந்தை பியோ நோயினால் துன்புறும் மக்களுக்காக ஒரு ஆறுதல் இல்லம் அமைக்க விரும்பினார். கல்லூரி வாழ்க்கையில் கடவுள் நம்பிக்கையை இழந்தவரான டாக்டர் வில்லி தனது மனைவிக்காக தந்தை பியோவைக் காண வந்தார். தந்தை பியோவைச் சந்தித்த பின் அவரது வாழ்க்கையில் மாற்றம் உண்டாகியது. அவரிடம் தந்தை பியோ நான் எதிர்காலத்தில் அமைக்கவிருக்கும் மருத்துவ இல்லத்தை வந்து கட்டுவீர்கள் என்றார். அதற்கு அவர் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளோடு போராடிக் கொண்டிருக்கும் என்னால் எப்படி முடியும்? என்று கேட்டார். அதற்கான உதவிகளை உங்களுக்கு இறைவன் தருவார் என்று பதில் கூறினார். அதன்படி லாட்டரி ஒன்றிற்கு ஏராளமான பரிசுத் தொகை அந்த நபருக்குக் கிடைத்தது. அவரது பிரச்சனைகள் அனைத்தும் அகன்றன. அவர் தனது இல்லத்தில் இருந்தபடியே மருத்துவ இல்லத்தைக் கட்டும் பணியில் ஈடுபட்டார்.

அதே போன்று பெல்ஜியரான மாரியோ சான்லிகோ என்ற மருத்துவரிடமும் மருத்துவ இல்லத்தை அமைக்க உதவி கோரினார். அம்மருத்துவரும் மருத்துவ இல்லம் அமைக்கும் பணியில் பங்கு கொண்டார். அதே போன்று யுகோஸ்லோவியா மருத்துவர் ஒருமுறை அவரது மனைவியோடு இவரைச் சந்திக்க வந்தார். அவரிடம் நீங்கள் இங்கு தங்கி உயிர்களைக் காக்க மருத்துவ தொண்டாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அதன்படி 1940 ஆம் ஆண்டு, மார்ச் 9 ஆம் தேதி துன்புறுவோரின் ஆறுதல் இல்லம் உதயமானது. அன்னை மரியாளிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார் தந்தை பியோ. 1050 ஆம் ஆண்டு பாத்திமா அன்னையின் சுரூபம் இத்தாலிக்குக் கொண்டு வரப்பட்டபோது இவர் புற்றுநோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். அன்னையின் சுரூபம் வானூர்தியில் கொண்டு வரப்பட்ட போது, "என் அன்பு அன்னையே நீ இத்தாலிக்கு வரும்போது நான் நோயுடன் இருந்ததை அறிவாய். நீ தொடாந்து வரும்போது நான் இன்னும் அதே நோயுடன் துன்புறுவதைக் காண்கிறாய். அன்னையே நீ இங்கிருந்து போகும் வேளை நான் முழுவதும் குணம் பெற வேண்டும்" என்று முறையீடு செய்தார். அப்போது அன்னையின் சுரூபத்தோடு வானத்தில் சென்ற அவானூர்தி இவரது ஆசிரமத்திற்கு மேலே மும்முறை வானத்தில் வட்டமடித்தது. அதற்கான காரணத்தை அப்போது என்னாலே உணரமுடியவில்லை என்று அந்த விமானத்தை இயக்கிய பைலட்டே கூறினாராம். அப்போது தந்தை பியோவின் உடலில் நடுக்கம் ஏற்பட நோய் குணமாகியது.

தினமும் தந்தை பியோ திருப்பலியில் அர்ப்பணிப்புடன் ஏற்றெடுப்பார். அதிகாலை 2 மணிக்கு அவர் ஜெபிப்பதில் ஈடுபடுவார். அதிகாலை 4-30 மணிக்கு ஆலயம் திறக்கப்படும் போது ஆலயத்திற்குச் சென்று தியானத்தில் ஈடுபடுவார். ஆலயம் முழுவதும் மக்கள் வெள்ளம் நிரம்பியிருக்கும் திருப்பலி நேரத்தில் பல இடங்களில் பரவச நிலையில் காணப்படுவார். இவரது அணுகுமுறை நாளும் மக்கள் மனதில் மனமாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. தந்தை பியோ எளிய வாழ்க்கையையே மிகவும் விரும்பினார். 1968 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் நாள் ஐந்து காய வரம் பெற்ற பொன் விழாவை இறைவனுக்கு ஒப்புக் கொடுத்தார். 1968 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் நாள் மரணமடைந்தார்.

வாழும்போதே அற்புதங்களை நிகழ்த்திய அந்த அற்புதருக்கு நம் முந்தைய திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் 1999 மே 2 ஆம் நாள் வணக்கத்திற்குரிய பட்டமும், st pio2002 ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் நாள் புனிதர் பட்டமும் வழங்கினார். இன்று நாள்தோறும் உலகம் முழுவதும் அற்புதங்களை நிகழ்த்தி வரும் தந்தையின் கல்லறையைச் சந்தித்து கோடானக் கோடி மக்கள் கண்ணீரோடு ஆசிரைப் பெற்று அதிசயங்களை காணுகின்றனர்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு