வானம் பாடிய கவிதை

அல்போன்ஸ் - திருச்சி

ஞானிகள் குழந்தை இயேசுவைக் கண்டடைந்த சம்பவம், மத்தேயு நற்செய்தியின் மிக ஆழமான, அர்த்தமிக்க, வரலாற்று-தத்துவ பொக்கிஷங்களில் ஒன்று.
ஞானிகளின் பயணம் முழு மனிதகுலமும் எதிர் நோக்கும் நம்பிக்கையின் முதல் பயணம்
இறைவனால் ஒளியூட்டப்பட்ட தேடலின் முடிவைச் சின்னமாகக் காணும் தருணம்.
தூர கிழக்கிலிருந்து வந்த அந்த ஞானிகள் ஒரு நட்சத்திரத்தின் ஒளியைப் பார்த்து “யூதர்களின் ராஜா பிறந்தார்” என்ற ரகசியத்தை அறிந்தார்கள். அவர்கள் கண்டது நட்சத்திரம்.
தேவனின் தெய்வீக சுடரொளி. உலகின் ஒளியினை காட்ட ஒளியே வந்தது அவர்களை மலை வழியாகவும், இருள் வழியாகவும் நடத்தி கடந்த தலைமுறைகளுக்கு அரிய ஒரு போதனையை வழங்கியது:
உண்மையான ஒளியைத் தேடும் மனது எப்போதும் இயேசுவைத் தேடி வந்து சேரும்.
அவர்கள் பயணத்தில் இருந்தது, அறிவு மட்டுமல்ல; ஆழமான பணிவு, தேடுதல், ஒளியின் மகத்துவம். அவர்கள் இறுதியில் குழந்தை இயேசுவை “காண்பது” என்பது இரண்டு கண்களால் மட்டுமே நிகழாத ஒரு தெய்வீக அனுபவம், இதயத்தின் மூலம் கண்ட உண்மையின் வெளிப்பாடு.
எதிர் நோக்கும் நம்பிக்கையின் முதல் யாத்திரை.
மூன்று அரசர்களின் திருவிழா
இந்தப் பயணம் நமக்குச் சொல்லுவது
மனிதன் தேடுவதில் ஆரம்பிக்கிறது. தேவன் வெளிப்படுவதில் நிறைவடைகிறது

குழந்தை இயேசுவை தொட்டிலில் காணும் தருணத்தில் தான் ஞானிகள் புரிந்து கொண்டார்கள்.
இவரே ராஜாதி ராஜன்,
இவரே உலக இரட்சகர்,
இவரே வானத்தின் ஒளி, ஆனால் பூமியின் மடியில் பிறந்தவர்.

அவர்களின் மூன்று பரிசுகள்
தெய்வ ரகசியத்தை முன்கூட்டியே அறிவிக்கின்றன:
பொன் - அரசர், இயேசுவின் அதிகாரம்
தூபவர்க்கம் - தெய்வீக இயல்பு
வெள்ளைப்போளம் - இயேசுவின் மரணம் மற்றும் இறப்பைக் குறிக்கும்.
இந்த நிகழ்வு ஒரு பெரிய இறையியல் செய்தியை உலகிற்கு அறிவிக்கிறது:
“கிறிஸ்து யூதருக்கே அல்ல, அனைத்து மக்களுக்கும் வந்த இரட்சகர்.”
யூதேயர்கள் அல்லாத ஞானிகள் முதலில் கிறிஸ்துவைக் காண்பது
இயேசுவின் மீட்பு எல்லோருக்கும் என்ற வானத்தின் முதல் அறிவிப்பு.

வானம் பாடும் கவிதை

வானில் தோன்றிய அடையாளங்கள் - கடவுள் தனது ஆழமான சத்தியங்களை மனிதருக்குக் காட்டும் திரை. மனிதருக்கு வானம் என்பது வெறும் பரந்த வெளி அல்ல விவிலியத்தில்; அது ஞானிகளை வழிநடத்திய நட்சத்திரம்போல, வரலாற்றின் பல முக்கிய தருணங்களில் தெய்வ ரகசியங்களை வெளிப்படுத்தியுள்ளது.

1. நோவாவின் காலத்தில் வானவில் - பெருவெள்ளத்தின் பின் வானவில்லை வைத்தார் (ஆதி 9:12-17). அது: நம்பிக்கையின் நிறங்கள், நியாயத்தீர்ப்பின் முடிவை, அமைதியின் ஆரம்பத்தை, “நான் உன்னை மறுபடியும் அழிக்கமாட்டேன்” என்ற இறைவனின் வாக்குறுதியைக் குறிக்கும்.
2. யாக்கோபிடம் தேவதூதர்கள் ஏறும்- இறங்கும் ஏணி யாக்கோபு கனவில் ஒரு ஏணி வானத்திற்குச் சென்றது. அதில் தூதர்கள் ஏறி-இறங்கினர் (ஆதி 28:12). இது வானும் மண்ணும் இணைந்த காட்சி வானம் திறந்தபோது மனிதன் விண்ணரசின் வழியை அறிந்தான்.
3. எகிப்தில் இருளின் ஆதிக்கம் - எகிப்தில் ஒரு நாள் முழுவதும் கனமான இருள் வானத்தில் சூழ்ந்தது (யாத்திராகமம் 10:21-23). இந்த இருள், பாவத்துக்கு எதிரான தேவனின் தீர்ப்பையும், இஸ்ராயேலை பாதுகாக்கும் கருணையையும், ஒரே சமயத்தில் காட்டியது. வானத்தின் இருள் கூடத் தெய்வீக செய்தியாக மாறியது.
4. இஸ்ரவேலருக்கு பகலில் மேகஸ்தம்பம் அவர்களின் யாத்திரை முழுவதும் வானத்தில் மேகத்தால் தேவன் வழிகாட்டினார் (யாத்திராகமம் 13:21). இது வெறும் மேகம் அல்ல, தேவனின் கண்காணிப்பு, காப்பு, திசை, அன்பு. இரவில் அக்கினி ஸ்தம்பம் வானத்தில் தோன்றியது - “இருளைத் துளைத்த வெளிச்சம்” இருளின் நடுவே பயணத்தின் ஒளி.
5. யோர்தான் நதியில் இயேசு திருமுழுக்கின் பொழுது, வானில் வழி காட்ட மட்டுமல்ல வானம் திறந்து, “இவர் என் மகன்” என்று வாழ்த்துரை பாடியது. பரிசுத்த ஆவி புறாவைப் போல இறங்கியது (மத்தேயு 3:16-17).
6. மலைமீது இயேசுவின் மறுரூபம்: மாற்கு 9:2-7 உயர்ந்த மலையில் வானம் மீண்டும் திறந்து ஒளி அவரைச் சூழ்ந்தது; மோசே, எலியா தோன்றினர். அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது.
7. சிலுவையில் இயேசு இறக்கும்போது அதே வானில் இருள் சூழ்ந்தது -மத்தேயு 27:45 வானம் முழுவதும் மூன்று மணி நேரம் இருள் சூழ்ந்தது. .இது: மனித பாவத்தின் ஆழம். கிறிஸ்துவின் தியாகத்தின் உச்சி.
8. உயிர்த்தெழுதலில் வெளிச்சம் கல்லறையில், வான தூதரின் ஒளி மின்னியது (மத்தேயு 28:2-3). புதிய விடியற்காலை, மனிதருக்குத் திறந்தது கடவுளின் அரசு...
9. இயேசுவின் விண்ணேற்றம்: அப்போஸ்தலர் 1:9 மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்றது. வானம் விவிலியத்தில் ஒரு இயற்கை மட்டுமல்ல; தேவன் தனது மகிமையையும் இரக்கத்தையும் மனிதருக்கு வெளிப்படுத்தும் மேடை. நட்சத்திரம் போல, வானவில், மேகம், அக்கினி, ஒளி, இருள், வானம் திறப்பு- ஒவ்வொன்றும் கடவுள் மனிதனை அணுகிய இரட்சணிய வரலாற்றின் பதிவுகள்.


நட்சத்திரம் ஏன் மறைந்தது?
நட்சத்திரம் ஏன் மறைந்தது? அது வழிகாட்டல் குறைவல்ல-
அது நம்பிக்கையை ஆழப்படுத்தும் இடைநிறுத்தம்.
ஒளி மறைந்தாலும், அடையாளம் நின்றுவிட்டாலும், தேவனின் வாக்குத்தத்தத்தை நம்பி நடை போடுபவர்கள் யாத்திரிகர்களே. அவர்கள் தங்களின் நம்பிக்கையின் உள்ளொளியை நம்பி நடந்தனர்.
இதுவே நம்பிக்கை யாத்திரிகளின் உள்ளார்ந்த விளக்கம்:
ஞானிகள் எரோதிடம் தீர்வு பெறவில்லை. ஆனால் அவர்கள் வெளிவந்தபொழுது நட்சத்திரம் மீண்டும் வந்தது.
அவர்கள் நம்பிக்கையால் நடந்தார்கள் இதுவே வாழ்க்கை.
இன்றும் நம்முடைய வாழ்க்கையில்: தீர்வுகள் தாமதமாகலாம், அடையாளங்கள் மறையலாம், பிரார்த்தனையின் பதில் கிடைக்காமல் இருக்கலாம்.
ஆனால்:
தேடுபவர்களுக்கு ஒளி மீண்டும் வரும்;
நம்பிக்கையோடு நடப்பவர்களை
தேவன் தவறாது சந்திப்பார்.
நாம் எல்லோரும் ஞானிகளைப் போல
நட்சத்திரத்தின் ஒளியில் அல்ல-
தேவனின் வாக்குத்தத்தத்தின் நம்பிக்கையில் நடப்போம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது