நேர்மறைத் தாக்கம்
அருள்தந்தை தம்புராஜ் சே.ச.
நமது வாழ்வு பிறரது வாழ்வில் நேர்மறையாகத் தாக்கம் ஏற்படுத்த வேண்டும். பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்றில்லாமல், நமது வாழ்வின் தடங்களை எதிர்கால நம் வாரிசுகளுக்கு வெற்றியின் தடங்களாக, நம்பிக்கையின் தடங்களாக, எதிர்பார்ப்பின் தடங்களாக, ஆழமாக, அழுத்தமாகப் பதிவு செய்ய வேண்டும். பணம், பகட்டு, செல்வம், வெற்றி இவையெல்லாம் மறக்கக்கூடிய ஒரு நுகர்வு பொருளாக இருந்துவிடும். ஆனால், நமது நேர்மறையான எண்ணங்கள், செயல்கள் நமது எதிர் காலத்தில் தொடர்ந்து வாழப் போகும் வாரிசுகளைப் பாதித்து, அவர்களும் நேர்மறை எண்ணங்களிலும், செயல்களிலும் சாட்சிகளாக வாழ நாம் ஓர் உந்துசக்தியாக இருக்க வேண்டும். அப்பொழுது, பிறவிப் பயன் என்ற கனியை நாம் சுவைக்க முடியும்.
இதை விளக்க இதோ ஒரு நிகழ்ச்சி: ஒரு நாள் எட்டு வயதுள்ள ஒரு சிறுமியும், அவளுடைய ஐந்து வயது தம்பியும் பொம்மைகள் விற்கப்படும் கடை ஒன்றைக் கடந்து சென்றார்கள். அப்போது அச்சிறுமி மட்டும் திடீரென்று நின்று இரண்டு அடி பின்னால் வந்து அந்தக் கடையையும், அதில் அலங்காரமாக அடுக்கியிருந்த பொம்மைகளையும் வைத்த கண் வாங்காமல் ஏக்கத்தோடு பார்த்தாள். அதைக் கவனித்து விட்ட அந்தக் குட்டிச் சிறுவன், என்ன உனக்கு அந்தப் பொம்மை வேணுமா? என்று பெரிய மனிதர் மாதிரி கேட்டான். ஆமாம் என்று தலையை ஆட்டினாள் அச்சிறுமி.சரி வா என்று அக்காவைக் கடைக்குள் கூட்டிக்கொண்டு போய் உனக்கு என்ன பொம்மை வேணும் சொல்லு? என்று கேட்டான். அந்தச் சிறுமியும் ஒரு பொம்மையைக் காண்பிக்க, அதை நிதானமாக எடுத்து அக்காளிடம் கொடுத்துவிட்டு கடைக்காரரைப் பார்த்து எவ்வளவு சார் இந்தப் பொம்மையின் விலை? என்று கேட்டான். ஆரம்பத்திலிருந்தே அந்தக் குட்டிப்பையனுடைய பெரிய மனிதத் தோரணையைப் பார்த்து மனதிற்குள்ளேயே இரசித்துக் கொண்டிருந்த கடைக்காரர் ஏதோ ஓரு விலையைச் சொன்னதும் தனது பணப்பையிலிருந்து ரூபாய் தாளை எடுத்துக் கொடுக்கிறவன் மாதிரி காட்டிக்கொண்டான் சிறுவன். கடைக்காரரும் புன்னகையோடு நீ எவ்வளவு தருவே? என்று கேட்டார். சிறுவன் தன் கால்சட்டை பைக்குள் கைவிட்டு கடற்கரை மணலில் பொறுக்கிய சின்னச்சின்ன கிளிஞ்சல்களை வெளியே எடுத்து மேஜைமீது வைத்தான். கடைக்காரர் சீரியஸா பணத்தை எண்ணுகிறவர் மாதிரி அந்தக் கிளிஞ்சல்களை ஒவ்வொன்றாக எண்ணினார். அப்புறம் சிறுவனைப் பார்த்தார். அவன் முகம் வாடிப்போயிருந்தது. என்ன சார், பணம் குறையுதா? என்று சிறுவன் ஏக்கத்தோடு கேட்டான். அதற்குக் கடைக்காரர் சேச்சே.... அதெல்லாம் இல்லே. நிறையவே இருக்கு என்றவர், ஒரு பத்து கிளிஞ்சல்களை மட்டும் தன் பக்கம் நகர்த்தி வைத்துக்கொண்டு இதுதான் இந்தப் பொம்மையோட விலை.மீதிப் பணமெல்லாம் உனக்குத்தான் என்றார். சிறுவன் மிகவும் மகிழ்ந்து அந்தக் கிளிஞ்சல்களை எடுத்துக்கொண்டு அக்காவோடு நடையைக் கட்டினான்.
கடைப் பணியாளருக்கு ஆச்சரியம்! தன் முதலாளியைப் பார்த்து என்னங்க ஐயா, விலை அதிகமான அந்தப் பொம்மையை அந்தச் சிறுவனுக்கு வெறும் பத்து கிளிஞ்சல்களுக்கு வித்துட்டீங்க? என்று கேட்டான்.
அதற்குக் கடைக்காரர் இல்லப்பா, நமக்குத்தான் அது வெறும் கிளிஞ்சல். அந்தச் சிறுவனைப் பொறுத்தவரைக்கும் அது பெரிய பொக்கிஷம். இந்த வயதுல அவனுக்குப் பணம்னா என்னன்னு தெரியாது. அதோட மதிப்பும் புரியாது. பெரியவனாகும்போது கண்டிப்பா புரிஞ்சுப்பான். அப்போ, சின்ன வயசுல நாம நம்ம அக்காவுக்குப் பணத்துக்குப் பதிலா வெறும் பத்து கிளிஞ்சல்களைக் கொடுத்து ஒரு பொம்மையை வாங்கிக் கொடுத்தோம்னு நினைவு வரும். அப்போ இந்தக் கடையைப் பத்தியும், என்னையப் பத்தியும் நினைப்பான். இந்த உலகம் நல்ல மனிதர்களால் நிரம்பியதுதான்னு அவன் மனசுல ஓர் அழுத்தமான எண்ணம் விழும். அந்த நேர்மறை எண்ணத்தை அச்சிறுவன் மத்தவங்களுக்கும் பரப்புவான். எனக்கு அதுதான் வேண்டும் என்று சொல்லிவிட்டு சிரித்தார்.
மனித வாழ்வு நேர்மறை எண்ணங்களால் நிரம்பும்போது, இவ்வுலகம் சொர்க்கப் பூமியாகக் காட்சி தரும். வருங்காலத் தலைமுறைக்கு நாம் எதை விட்டுச் செல்கிறோம்? சிந்திப்போம்.