இறை பணியில் உறவுகள் வலுப்பட..

திருமதி.மி.மரிய அமலி

old people day முதியோர் தினம் என்றவுடன் நம் நினைவில் வருவது வீட்டில் இருக்கும் முதியோர்கள், முதியோர் இல்லத்தில் இருக்கும் முதியோர்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லமுதியவர்கள் என இவர்கள் பால் தான் நம் சிந்தனை விரியும்.

பெற்றோரை தங்களோடு வைத்து பாராமரிக்கும் இன்றைய தலைமுறையினர் வெகு சிலரே.வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் பாதுகாப்பு கருதி வசதியான முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுகின்றனர்.ஓய்வு ஊதியம் பெறும் முதியோர்கள் தங்கள் வசதிக்கேற்ப முதியோர் இல்லங்களை தெரிவு செய்கின்றனர்.இரண்டும் இல்லாத பெற்றோர்கள் பிள்ளைகளால் விரட்டப்பட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் அடைக்கலம் தேடி விடுகின்றனர்.இப்படியாக பொது நிலையினரின் முதியபருவம் ஒரு வகையில் பாதுகாப்பாக அரவணைப்புடன் கூடிய சூழல்கள் அமைகின்றது.

பதினைந்து வயதில் இறைபணிக்காக தங்களை அர்பணிக்கும் இறைபணியாளர்களின் முதிய பருவம் எப்படி உள்ளது? துறவிகளின் முதிய பருவம் பற்றி இன்றைய நாளில் நாம் உறுதியாய் சிந்திக்க வேண்டிய ஒன்றாக கருதுகிறேன். துறவிகள் என்று கூறுகையில் இருபால் துறவிகளையே கருத்தில் கொள்ள வேண்டும்.தோராயமாக 15 முதல் 70 வயது வரை இறை பணியாற்றும் அவர்களின் இறுதி காலங்கள் மன அமைதியுடன் தொடர முடிகிறதா என்பது கேள்விக்குறியே.கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகாலமாக தங்களையே தியாக வாழ்வில் ஈடுபட்ட முதிய துறவிகள் பற்றி நாம் நினைத்துக்கூட பார்ப்பதில்லை. இதில் வேதனைக்குரிய விசயமாக நான் கருதுவது சில முதிய துறவிகள் இயலாமை காலத்தில் தங்கள் வீடுகளைத்தேடி செல்கின்றனர்.எதனால்? இறுதி காலத்தில் அவர்களுக்கு ஒரு அரவணைப்பு தேவைப்படுகிறது.அன்பான கவனிப்புக்காக ஏங்குகின்றனர்.தானும் மதிப்புக்குரியவராக கருதப்படவேண்டும் என்பதால்தானே? இன்று நோய்வாய்ப்படும் முதிய துறவிகளின் இல்லங்களில் அருகிருந்து கவனிக்க உதவியாளர்கள் இருந்தாலும் முறையான கவனிப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே. அவ்வுதவியாளர்கள் பணியாளர்கள்தான். ஆத்மார்தமான ஒரு உறவின் கவனிப்பை எதிர்பார்க்க முடியாது. பொது மக்களோடு ஆண்டாடுகாலமாக பணியாற்றிய அவர்களுக்கு இறுதி காலத்தில் பேச்சுத் துணை கூட இன்றி தனிமையின் கொடுமையோடு மன அழுத்தத்தோடு போராடும் முதிய துறவிகளின் வாழ்வு பரிதாபத்திற்குரியதே.

இத்தகைய சூழலை எப்படி மாற்றுவது என என்னுள் எழுந்த கருத்தை பகிரவே இக்கட்டுரை.எப்படி வயதான பெற்றோரை கவனிக்கும் பொறுப்பு பிள்ளைகளுக்கு இருப்பது போல், முதிய துறவிகளை கவனிக்கும் பொறுப்பை இளம் துறவிகளிடம் அளிப்பதே சாலச்சிறந்ததாக இருக்கும் என எண்ணுகிறேன்.

old priest கல்லூரி படிப்பை முடித்த இளம் துறவிகள் துறவு வாழ்வின் சவால்கள் என்ன என்பதை சிந்திக்கக் கூடிய வயதில் இருப்பர்.அந்த பருவத்தில் அவர்களுக்கு தெளிவான ஒரு வழிகாட்டுதல் தேவைப்படும்.மேலும் கீழ்படிதல்( பணிவு) எளிமை போன்ற வாக்குறுதிகளை கடைபிடிக்கவும் பயிற்சி அளிக்கப்படவேண்டும்.முதிய துறவிகளை கவனிக்கும் பொறுப்பு அளிக்கப்படும் போது முதிய துறவிகளின் அனுபவங்கள் அவர்களுக்கு பாடமாக வழிகாட்டுதலாக அமையும்.தங்களது குடும்ப உறவுகளை பிரிந்து இருக்கும் இளையோருக்கு பெற்றோர் நிலையிலிருந்து அன்பும் வழிகாட்டுதலும் கிடைக்கும் போதுஉறவுகள் வலுப்பட உதவும்.இத்தகைய சூழலில் முதியதுறவிகளுக்கு உரிய மதிப்போடு கூடிய கவனிப்பும் கிடைக்கும், இந்த வயதிலும் இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் பொறுப்பில் இருக்கிறோம் என்ற எண்ணம் அவர்களின் மன அமைதிக்கு வித்திடும்.நாம் பயனில்லாத மனிதர் இல்லை என்ற உணர்வு ஒரு புத்துணர்வை அளிக்கும்.

இளம் துறவிகளின் பயிற்சி காலத்தில் காலை மாலை குறிப்பிட்ட நேரங்களில் முதிய துறவிகளை கவனிக்கும் பொறுப்பு அளிக்கலாம்.இத்தகைய சூழல் இறை விசுவாசத்தில் உறுதிப்படவும் சேவை மனப்பான்மையை வளர்க்கவும் உதவும்.முதிய துறவிகளுக்கும் நாமும் கவனிக்கப்படுகிறோம், பாதுகாப்போடு இருக்கிறோம் என்ற மன அமைதி கிட்டும். எனவே இளம்துறவிகளின் பயிற்சி இல்லங்கள் முதிய துறவிகளின் புகலிடமாக அமையவேண்டும்.இருபருவமும் இணைந்தே பயணிக்க வேண்டும்.இத்கைய அமைப்பு துறவின் மேன்மையை உலகிற்கு காட்டும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது