பிறர்க்கென்றே நீ வாழ்ந்தால்...
அருட்தந்தை தம்புராஜ் சே.ச.
பிறருக்குச் சிறு சிறு சேவைகளைச் செய்து வாழ்பவனே முழு மனிதன். தங்களுக்கென வாழ்ந்து பிறரைச் சுரண்டி செல்வம் சேர்த்தவர்கள் யாரும் வரலாற்றில் நினைவுகூறப்படுவதில்லை. மற்றவர்களுக்குச் சேவை புரிதல் மகேசனுக்குச் சேவை புரிதல் என்றும் வாழும் மனிதனை உலகமே போற்றும்.
எம் பெருமான் இயேசுவும் அதைச் சொல்லித் திருவாய் மலர்ந்தார். "சின்னஞ்சிறிய என் சகோதரன் ஒருவனுக்கு நீங்கள் இவற்றைச் செய்த போதெல்லாம் எனக்கே செய்தீர்கள்" மத்தேயு 25:40
இதை விளக்க இதோ ஒரு கதை..
எல்லா ஓட்டப்பந்தயங்களிலும் அவன்தான் முதலில் ஓடுவான். அவனுக்கென தனி ரசிகர்கள். அன்றும் அவன் தான் முதலில் ஓடிக்கொண்டிருந்தான். திடீரென குழந்தையொன்று குறுக்கே ஒடி வந்தது. தவறிவிட்ட தாய் தவித்ததாள். முதலில் ஓடி வந்தவன் ஓட்டத்தை நிறுத்தி குழந்தையைத் தூக்கிச் சென்று அக்குழந்தையின் தாயிடம் ஒப்படைத்தான். அதற்குள் அவன் பின்னால் ஓடிவந்தவர்கள் முன்னே ஓடினார்கள்.
மீண்டும் நம் வீரன் முன்னே ஓடினான். மீண்டும் ஒரு சோதனை. கூட்டத்திலிருந்து ஒரு அபலக்குரல். "ஒர் அனாதையை உனக்கென்ன வேடிக்கை கேட்கிறது?" எனக் கேட்டு கூட்டம் ஒன்று அடித்துக் கொண்டிருந்தது.. வீரன் ஓட்டத்தை நிறுத்தினான். அடிப்பட்டவனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு மைதானத்திற்குள் திரும்பினான். அதற்குள் பரிசளிப்பு விழா முடிந்துவிட்டது. நமது வீரன் மரத்தடியில் மனம் கலங்கி நின்று கொண்டிருந்தான். சிலர் அவனை பார்த்து சிரித்தார்கள். சிலர் "வாழத்தெரியாதவன்" என்றார்கள். சிலர் "பிழைக்கத் தெரியாதவன்" என்றார்கள்.
குழம்பிய மனதோடு அன்று இரவு உறங்கச் சென்றான். அவன் ஒரு கனவு கண்டான். அந்தக் கனவிலே அவனால் காப்பாற்றப்பட்ட குழந்தை அவன் தலையில் மலர்முடி ஒன்றை வைத்துச் சென்றது. காப்பாற்றப்பட்ட அனாதை அவனுக்குப் பூச்செண்டு ஒன்றைக் கொடுத்துமறைந்தான். அப்போது வானத்திலிருந்து ஒரு குரலொலி கேட்டது:
" உனக்காகவே நீ வாழ்ந்தால் நீ மனிதனே அல்ல;
நீயும் வாழ்ந்து, மற்றவரையும் வாழவைத்தால் நீ மனிதன்.
பிறர்க்கென்றே வாழ்ந்தால் நீ தெய்வம்,
இன்று நீ தெய்வத்துள் தெய்வமானாய்."
பிறருக்கு நற்காரியங்களைப் புரிந்து நாமும் தெய்வ நிலையை அடைவோம். நாம் கேட்காமலே நமக்கு ஆண்டவர் எத்துணை அருள்வளங்களை வழங்கியுள்ளார்!
இறையாசீர் என்றம் உங்களோடு இருப்பதாக....!
நன்றி ஆவியின் அனல் ஆகஸ்டு 2015!