விண்ணில் ஒரு ராகம் மண்ணில் ஒரு தாளம்
அல்போன்ஸ்-திருச்சி
யோர்தான் நதி, மனித வரலாற்றில் அது ஒரு சாதாரண நீர்வழி அல்ல; அது இறைவன் மனிதருக்கு எழுதும் மீட்பு கதையின் உயிர்த்துடிப்புப் போன்றது. அது, பழைய ஏற்பாட்டின் விடுதலையும் புதிய ஏற்பாட்டின் நம்பிக்கையும் இணைக்கும் தெய்வீக நதி.
கடவுள் மனிதன் இருகரைகளையும் நெய்து இணைக்கும் வழித்தடம் இந்த நதியே பின்னர் யோவான் இயேசுவுக்குத் திருமுழுக்கு அளித்த தளமாக ஆனது;
இயேசு தன் கால்களை நனைத்தபொழுதுதான் இந்த நதி புனிதமானது. வானம் பிளவுபட்டது, ஆவி புறாவாய் இறங்கியது, பிதாவின் குரல் ஒலித்தது.
இது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல; இதில் மறைந்திருக்கும் இரட்சிப்பின் ரகசியம். பாவமில்லா தேவகுமாரன், பாவிகளின் வரிசையில் நிற்பது தாழ்மையின் உச்சம். யோர்தான் நதியில் அவர் இறங்கிய நிமிடம் முதல், மனித குலத்தின் எழுச்சிக்கான புதிய பாதை திறக்கப்பட்டது.
இயேசுவிற்குப் பாவம் இல்லை. ஆனாலும் பாவமன்னிப்பின் திருமுழுக்குச் செய்ய வருவது பணிவின் மணிமுடி. இயேசு திருமுழுக்கின் தருணத்தில் நடந்த நிகழ்வுகளைப் பார்ப்போம்.
1. திரித்துவக்காட்சி
விவிலியத்தில் அரிதாகவே காணப்படும் காட்சி
இங்கே திருத்துவம் ஒரே நிகழ்வில் வெளிப்பட்டது:
இயேசு ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார்.
அப்பொழுது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.
பிதாவின் குரல் - “இவன் என் பிரியமான குமாரன்” என்ற சாட்சி.
இயேசு - திருமுழுக்கு பெறுகிறார்.
ஆவியானவர் - புறாபோல இறங்குகிறார்.
இத்தருணம் அரிதான திரியேக தத்துவக் காட்சியாக வணங்கப்படுகிறது
2. முதலுரையும் பதிலுரையும்
பொதுவாகப் பிராத்தனையின் பொழுது குருவானவர் முதலில் ஜெபங்களை முதலுரையாகத் தொடங்க மற்றவர் பதிலுரை கூறுவார்கள். அதைப் போல விவிலியத்திலும் இயேசு ஞானஸ்தானம் பெறும்பொழுது ஒர் அதிசயத்தைக் காண்கிறோம்.
இயேசுவும் திருமுழுக்குப் பெற்றபொழுது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.
இது இரட்சணியத்தின் முதல் ராகம்
இந்தக் குரலுக்குப் பூமியிலிருந்து பதிலுரைப்படுகிறது. ஆம் இயேசுவின் பாடுகளின் பொழுது அதாவது அவர் உயிர் விடும்பொழுது "இயேசுவின் மரணத்தைப் பார்த்து நின்ற நூற்றுவர் தலைவன், அவரை, 'நிச்சயமாக இவர் கடவுளின் குமாரன்' என்றான்."
யோர்தானில் ஒலித்தது தெய்வக் குரல்
கல்வாரியில் ஒலித்தது மனித குரல்
தந்தையின் முதலுரை, மனிதரின் பதிலுரை
தொடக்கத்தில் தேவன் சாட்சி; நிறைவில் மனிதன் சாட்சி
விண்ணில் ஒரு ராகம், மண்ணில் அதன் தாளம்
இங்கே விசேஷம் என்னவென்றால், இயேசு, தான் இஸ்ராயேல் மக்களுக்காக வந்தேன் என்றார்.
ஆனால் அவரை ஏற்றுக்கொண்ட முதல் மனிதன் நூற்றுவர் தலைவன் பிற இனத்தார்.
அதைபோல் யூதர்கள் அல்லாத ஞானிகள்தான் முதன் முதலில் குழந்தை இயேசுவைக் கண்டு வணங்கினர்.
3.உதிக்கின்ற செங்கதிர்
(மத்தேயு 3: 16) “இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார்”
(மாற்கு 1:11) “அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே” என்று இருவரும் ஒர் அழகான காட்சியைக் காட்டுகிறாரகள்.
இயேசு யோர்தானில் நீரிலிருந்து எழும்பிய தருணம், இது ஆதியாகமம் 1:2-3 இன் படைப்புக் காட்சியை நினைவூட்டுகிறது. நீர் மீது ஆவி மிதந்தபோது, “ஒளி உண்டாகட்டும்” என வெளிச்சம் உதித்தது. இது அதிகாலைப் பொழுதில் உதிக்கும் செங்கதிரின் மேன்மையான காட்சிபோல். மறைநூலில் ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது.
செங்கதிர் இருட்டைத் துளைத்து வெளிச்சத்தை வழங்குவது போல, இயேசு நீரிலிருந்து எழும்பும் அந்த நொடி, புதிய படைப்பு, புதிய வெளிச்சம், புதிய இரட்சிப்பு ஆகியவற்றின் உதயத்தை அறிவிக்கிறது.
யோவான் திருமுழுக்கு அளித்தபோது, இயேசு நீருக்குள் செல்லுதல் மற்றும் நீரிலிருந்து எழுதல் என்பது வெறும் நிகழ்வு அல்ல; அது முழு மீட்சித் திட்டத்தின் தெய்வீகத் தீர்க்கதரிசன உருவகமாகப் புரிந்துகொள்ளப்படுகிறது இயேசு நீருக்குள் இறங்குவது - மனிதரின் அடிமைத்தனத்தின் ஆழத்தில் இறங்குதல்.
இயேசு நீரிலிருந்து எழுதல் - இரண்டாம் ஆதாமாகப் புதிய மனிதகுலத்தின் பிறப்பு. அனைவருக்குமான ஆன்மீக விடுதலையின் முதற்படி.
பவுல் கூறுவது போல்
“நாம் நீர்மூழ்கும்போது, கிறிஸ்துவின் மரணத்தில் இணைகிறோம்
நீரிலிருந்து எழும்போது புதிய வாழ்க்கையில் எழுகின்றோம்
நீரில் → கல்லறையில்
இயேசு நீரிலிருந்து எழுதல் → உயிர்த்தெழுதல் ஆவி இறங்குதல் இயேசு பெந்தெக்கோஸ்து ஆற்றல்
யோர்தான்: உயிர்த்தெழுதலின் முந்தைய நிழல் கல்லறை: உயிர்த்தெழுதலின் உண்மையான நிறைவேற்றம் இயேசுவின் பணி, தேவனின் திட்டம், உலகின் மீட்பு எல்லாவற்றின் ஆரம்பம் அந்தக் உதிக்கின்ற செங்கதிரில் தொடங்குகிறது.
4. “வானமும் பூமியும்
மேலும் ஒரு விசேஷத்தைப் பார்ப்போம்.
(மாற்கு 1:10,11) அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் கிழிந்தது அப்பொழுது, “என் அன்பார்ந்த மகன் நீயே,” என்று ஒரு குரல் ஒலித்தது.
கல்வாரியில் பார்ப்போம்:
(மாற்கு15:38,39) இயேசு உயிர் துறந்தபொழுது ஆலயத் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது. அவருக்கு எதிரே நின்றுகொண்டிருந்த நூற்றுவர் தலைவர், “இம்மனிதர் உண்மையாகவே கடவுளின் மகன்” என்றார்.
மாற்கு நற்செய்தி மட்டுமே காட்டும் கவித்துவமான ஒரு காட்சி இவை இரண்டு காட்சிகளும் மனிதன்-தேவன் இடையே இருந்த தடையை அகற்றுகிறதை வெளிப்படுத்தும் ஆழமான தெய்வீக அறிகுறிகள் யோர்தானில் வானம் கிழிதல், மனிதரின் மீது தேவனுடைய கருணை இறங்குவதற்கான பாதை…
கல்வாரியில் ஆலயத் திரைக் கிழிதல், மனிதன் கடவுளிடம் செல்ல வாசல் திறந்தது.
கிறிஸ்துவை நாம் பின்பற்றும்போது, நாமும் பாவத்தின் இருட்டிலிருந்து எழுச்சி பெறுகிறோம். திருமுழுக்கு ஒருநாள் நடைபெற்ற நிகழ்ச்சி அல்ல; அது வாழ்விலே தொடர்ந்தும் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்படும் அருட்புதுமை. நம்மைச் சுற்றி இருக்கும் உலகத்துக்கு நாம் ஒளியாக மாறும் மிகப் பெரிய அழைப்பு.


