உள்ளங்களின் உள்ளாழம்

தந்தை தம்புராஜ் சே.ச.

ஆன்மிகத்தில் வளர நாம் பல யுக்திகளைப் பயன்படுத்துகின்றோம். செபம், தவம், ஈகைச் செயல், நவநாள் செபங்கள், திருத்தலங்களுக்குத் திருயாத்திரைகள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. இவையெல்லாம் நல்ல காரியங்கள்தான். ஆயினும் இறைவன் கோவிலாகிய நம் இதயத்தில் வாசம் செய்கின்றார் என்ற உணர்வில் நாம் ஆழமாக வளர வேண்டும்.

சமாரியப் பெண் இயேசுவைப் பார்த்து, பரம தந்தையைத் தொழ வேண்டியது எப்படி? என்று கேட்கின்றாள். அதற்கு இயேசு, ஆவியிலும், உண்மையிலும் அவரைத் தொழ வேண்டும் என்றார். எருசலேமுக்கோ, ஏன் கெரிசிம் மலைக்கோ செல்லக்கூடத் தேவையில்லை என்ற புரட்சிகரமான கருத்தைத் தெரிவித்தார்.

பல்லாண்டுகளுக்கு முன்னர் உலகிலுள்ள எல்லா தேவர்களும் ஒன்றுகூடி மாநாடு ஒன்றை மகத்தான முறையில் நடத்தினர். மாநாட்டின் நோக்கம் யாதெனில், மக்கள் கண்டுபிடிக்க இயலாத ஓர் இடத்தைத் தேர்ந்தெடுப்பதாகும். தேர்ந்தெடுத்தபின் அந்த இடத்தில் போய் ஒளிந்து கொள்வது என்று தீர்மானித்தனர்.

காட்டில் போய் ஒளிந்து கொண்டால் அங்கு மக்கள் வரமாட்டார்கள் என்றார் முதல் தேவர்.

மலைக்குகைளில் போய் மறைந்து கொண்டால் அங்கு மக்கள் வர மாட்டார்கள் என்றார் இரண்டாவது தேவர்.

ஆழ்கடலின் ஆழத்தில் பதுங்கிக் கொண்டால் பக்தர்கள் அங்கு பார்க்க வரமாட்டார்கள் என்றார் மூன்றாமவர்.

இவற்றையெல்லாம் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்த சீனியர் கடவுள் சிரித்துவிட்டு, இவ்விடங்களில் பதுங்கிக் கொண்டால் மக்கள் எப்படியும் கண்டுபிடித்து விடுவார்கள். அவர்கள் அணுக இயலாத, அவர்கள் அணுக விரும்பாத ஓர் இடம் உண்டு. அதுதான் மக்களது உள்ளங்களின் உள்ளாழம் என்றார். இந்த மூத்தத் தேவரின் கருத்தை மற்ற தேவர்கள் எல்லாரும் முழுமையாக ஏற்றுக்கொண்டார்கள்.

இருக்கும் இடத்தை விட்டு, இல்லாத இடம் எல்லாம் அலைகின்றோம் ஞானத் தங்கமே! என்று பாடினார் ஒரு சித்தர்.

திருப்பாடல் 46 இக்கருத்தைத்தான் நமக்கு உணர்த்துகின்றது: அமைதி கொண்டு, நானே கடவுள் என உணர்ந்து கொள்ளுங்கள் (வச. 10). ஆகவே, அன்பார்ந்தவர்களே, ஒவ்வொரு நாளும் அரை மணி நேரமாவது, நாம் தனித்திருந்து, அமைதியாயிருந்து, உள்ளாழத்தில் உறையும் இறைவனைக் காண்போம். நம் மனம் குவிந்து ஒருமனப்படும்போது, இறைவனை நாம் தரிசித்து வாழ்க்கையில் அமைதியைச் சுவைக்க முடியும்.

புனித இஞ்ஞாசியார் எழுதிய ஆன்மிகப் பயிற்சி என்ற தியான கையேடு இத்தகைய அனுபவத்தை நமக்கு அளிக்கின்றது.

இறையாசீர் என்றும் உங்களோடு!


 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது