உயிர்ப்பு பெருவிழா

சிந்தனைச் செல்வர். பேராசிரியர் -அ.குழந்தைராஐ; காரைக்குடி

உயிர்ப்பு என்பது செயல்பாடுகளின் மாற்றம்

A Christian celebration of the Resurrection of Christஇயேசுவின் உயிர்தெழுதலை ஈஸ்டர் என உலகக் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள். உயிர்தெழதலை அன்றும், இன்றும் பல இறையியலார்கள் ஏற்றுக்கொள்கின்றனர். சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட எகிப்து பிரமிடுகளில் வைக்கப்பட்ட மாமன்னர்களின் உடல்கள், அவர்கள் மீண்டும் உயிர்பெற்றுவிடுவார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் கட்டப்பட்டவையே. ஆனால் இயேசுவின் உயிர்த்தெழுதல், அதிலிருந்து மாறுபட்டது. தாம் வாழ்ந்தக் காலத்திலேயே நமக்குத் தபோர் மலையில் தம்மை மறுரூபமாக்கிக் காண்பித்தவர். " Tansubstantiation" எனும் ஓர் உடலை, உருவெடுத்து, வேற்று உருவமாகக் காட்டும் தத்துவம்.

ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் அவர் பலுகச் செய்யவில்லை. மாறக இருந்தவர்கள் பகிர்ந்துக் கொடுத்தார்கள் என்பர் சிலர். அன்னை மரியாவுக்கு இயேசு தவிர மற்றக் குழந்தைகள் பிறந்தனர் என்பாரும் உண்டு. சிலர் தங்கள், தங்கள் அறிவுத் திறனுக்கு ஏற்ப இறை வார்த்தைகளை ஒடித்து, இடித்துத் தங்கள் வசமாக்கிக் கொள்வர். ஆனால் இயேசுவின் உயிர்த்தெழுதல் அப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய விவதாப் பொருள் அல்ல. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் என்பது தான் இயேசுவின் முதல் போதனை (மாற்கு 1:15). மனம் மாறியவனின் உடல் எப்படி இருக்கும்? அவன் பாவியாக, குற்றவாளியாக இருந்த போது காணப்பட்ட உடலாகவே இருக்கும். ஆனால் மனம் திரும்பிய பாவி, குற்றவாளியின் உள்ளம் மாறியிருக்கும். அஃது அவனின் செயல்பாட்டில் தெரியவரும். நற்செயல்கள் நல்ல சிந்தனைகளால் வருவதுதான். சவுலைக் கண்டவர்கள் சவுலுக்கு உள்ளேயே ஒரு பவுல் இருப்பதைக் காணவில்லை. நாணலாகச் சீமோனுக்கு உள்ளே பாறையான பேதுருவைக் காணவில்லை. சாதாரணமாக ஒரு கிராமவாசி, வேலையினிமித்தம் வெளிநாடுச் சென்றுவந்தால் அவனிடம் காணும் மாற்றங்கள் ஏராளம். நம் நாட்டுத்தலைவர்கள் வெளிநாடுகளில் படித்த காலங்களில் கற்றுக்கொண்ட தலைமைப் பண்புகள் ஏராளம்.

பெயர் மாற்றங்களே ஒரு மனிதனை மாற்றுகிறது. ஆபிராம் -ஆபிரகாம், சாராயி- சாராள், யாக்கோபு - இஸ்ராயேல் என்பவர்களின் பணி வாழவு; மாறிப் போனதைக் காணலாம்.

நமது தியானங்கள், தியான ஆசிரமங்களில் வாரந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இரண்டு மூன்று நாட்கள் செலவழிக்கிறார்கள். பாதயாத்திரையாகப் பயணம் மேற்கொள்கிறார்கள். ஏழு வாரம் நோன்பிலிருந்து, புலால் உணவை மறுத்து, வெள்ளிக்கிழமைகளில் சிலுவைப்பாதை ஜெபித்து, எல்லாம் முடிந்தவுடன் விபூதி புதனுக்கு முன்பிருந்த நிலைக்கே போய்விடுகின்றனர். இஃது ஏதோ மணப்பெண் அல்லது மாப்பிள்ளை பியூட்டி பாலர் (Beauty Parlour) ஒன்றிற்குச் சென்று, தங்களை ஒப்பனைச் செய்து கொண்டு, பிற மக்களின் பார்வையில் தங்களைக் கவர்ச்சியாகக் காட்டுவதற்காகச் செய்யப்படும் உடல் அழகு மசாஜ் வேலை அல்ல. இப்படிப்பட்ட ஒப்பனை ஒரு சிலமணி நேரங்களுக்கு மட்டுமே தாக்குப் பிடிக்கும். பின்னர் முந்திய நிலைக்கு வந்துவிடுவர். நம்நாட்டில் நடைபெறும் தியான கூட்டங்கள் மற்றும் அதில் கலந்துக் கொள்வோர் மனம் மாற்றப்பட்டிருந்தால், தோமா காலத்து 2.5 சதவீதம் தற்போது 20 சதவீதமாக உயர்ந்திருக்கும்.

மனிதன் மாற்றம் பெற்று மறு உருவாகுதால் என்பது, தங்களின் பழைய வாழ்க்கையை விட்டுவிட்டு, புதிய வாழ்க்கையை நடத்துவது. பாவியான மனிதன் தண்ணீருக்குள் கிடக்கும் கல்லைப் போன்றவன். கல்லில் உள்ள பாசியைப் போக்க அந்தத் தண்ணீரே பயன்படுகிறது. அதேபோல ஊனியல்புகளின் இச்சைக்குரிய வாழ்வு வாழ்ந்த மனிதன் ஆவிக்குரிய தெய்வீகச் சாயலைத் தரித்த மனிதனாக வாழவேண்டும்.

ஏழு வாரத் தவக்காலத்தில் மனிதன் தன்னுடைய கோபம், பழிவாங்கும் உணர்வு, எரிச்சல், புறங்கூறுதல், பொறமைப் போன்றவற்றை விட்டுவிடப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். உளவியலார்களின் கருத்துப்படி ஒரு மனிதன் சில காரியங்களைப் புதிதாகத் துவக்க அல்லது பழையவற்றை விட்டுவிட 24 நாட்கள் பயிற்சியைப் பல்லைக் கடித்தக் கொண்டு செய்தால் போதும் என்கிறார்கள். பல்லாண்டுத் தவக்காலம் நம்மைச் செம்மைப் படுத்தவில்லையென்றால், நமக்குப் பயிற்சிக் கொடுத்தவர்கள் மற்றும் பயிற்சிப் பெற்றவர்களின் பணம், நேரம், உழைப்பு எல்லாமே வீண்தான். நாளுக்கு நாள் மாதாமாதம் ஆண்டுக்காண்டு மனிதனின் நேர்மறை எண்ணங்களை வளர்த்து எதிர்மறைச் சிந்தனைகளை ஒரங்கட்டிவிட்டாலே போதும் - நாமும் உயிர்த்தெழுந்த இயேசு தான்..

risen christ with mary

அனைவருக்கும் ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு ஈஸ்டர் பெருவிழா