திருச்சிலுவையின் மாட்சி

பாதசந்திரன்

Holy Cross நம்பிக்கை தரும் சிலுவையே, நீ மரத்துள் சிறந்த மரமாவாய்;
உன்னைப் போன்று தழை, பூ, கனியை எந்தக் காவும் தந்திடுமோ?
இனிய சுமையை இனிய ஆணியால் இனிது தாங்கும் மரமே நீ!

மாட்சிமிக்க போரின் வெற்றி விருதை நாவே பாடுவாய்;
உலக மீட்பர் பலியாகி வென்ற வகையைக் கூறியே,
சிலுவை அடையாளத்தைப் புகழ்ந்து, வெற்றி முழக்கம் செய்திடுவாய்.

நம்பிக்கை தரும் சிலுவையே, நீ மரத்துள் சிறந்த மரமாவாய்;
உன்னைப் போன்று தழை, பூ, கனியை எந்தக் காவும் தந்திடுமோ?

இயேசுவின் திருப்பாடுகளையும், இறப்பையும் வணக்கத்தோடு நாம் நினைவுகூருகின்ற புனித வெள்ளிக்கிழமை திருவழிபாட்டின் ஒரு பகுதியாக உள்ள, திருச்சிலுவையின் மாட்சியைப் போற்றுகின்ற பாடல் வரிகளே இவை. திருச்சிலுவை, / இயேசு என்ற அரசரின் மாண்புமிக்க அரியணை; திருச்சிலுவை, / இயேசு என்ற ஆசிரியரின் மறையுரை மேடை; திருச்சிலுவை, / இயேசு என்ற குரு தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்த பலிப்பீடம்.

கொரிந்தியருக்கு எழுதிய திருமடலில் திருச்சிலுவையின் மாட்சிமையைப் பற்றி விவரிக்கும்போது, திருத்தூதர் புனித பவுல் மிக அழுத்தமாக எழுதுகிறார்: "சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை. ஏனெனில், "ஞானிகளின் ஞானத்தை அழிப்பேன், அறிஞர்களின் அறிவை வெறுமையாக்குவேன்" என்று மறைநூலில் எழுதியுள்ளது. இவ்வுலகைச் சார்ந்த ஞானி எங்கே? அறிவாளி எங்கே? வாதிடுவோர் எங்கே? இவ்வுலக ஞானம் மடமை எனக் கடவுள் காட்டிவிட்டாரல்லவா?.... யூதர்கள் அரும் அடையாளங்களை வேண்டும் என்று கேட்கிறார்கள்; கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள். ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது. ஆனால் அழைக்கப்பட்டவர்கள், யூதரானாலும் கிரேக்கரானாலும், அவர்களுக்குக் கிறிஸ்து, கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார்.” (1 கொரி 1: 18 - 20, 22 - 24)

மேலும், கலாத்தியருக்கு எழுதிய திருமடலில், "நானோ, நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்தவரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்." (கலா 6:14) என்று திருச்சிலுவையின் மேன்மையை எடுத்துரைக்கின்றார்.

திருச்சிலுவை - மகிமைக்கு உயர்த்தப்பட்ட அவமானத்தின் சின்னம்:

மனித வரலாற்றில் பயங்கரமானதும், நினைக்கும்போதே அச்சம் விளைவிப்பதுமான ஒரு மரண தண்டனை உண்டு என்றால், அது சிலுவையில் அறையப்படுவதுதான். மிகவும் மோசமான குற்றவாளிகளுக்கும், அரசனுக்கும் நாட்டிற்கும் எதிராக துரோகச் செயலில் ஈடுபடுவோருக்குமே இந்தக் கொடிய தண்டனை வழங்கப்பட்டது. கிறிஸ்து வாழ்ந்த காலகட்டத்தில், சிலுவை மரணம் என்பது வெட்கக்கேடானதும், நிந்தைக்கும் அவமானத்திற்கும் உரியதாகவும் யூதமக்களால் கருதப்பட்டது. "மரத்தில் தொங்கவிடப்பட்டோர் சபிக்கப்பட்டோர்" என்று இணைச்சட்டம் நூலிலும் (21:23), திருத்தூதர் புனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமடலிலும் (3:13) இந்தக் கருத்து தெளிவாகிறது.

holy crossஆயினும், இறைமகன் இயேசு சிலுவையின் வெட்கக்கேட்டையும், நிந்தை அவமானத்தையும் தான் ஏற்றுக்கொண்டு, கடவுளை மகிமைப்படுத்தும் கருவியாக அந்தச் சிலுவையை மாற்றிவிட்டார். இதனை, எபிரெயருக்கு எழுதிய திருமடலில் "அவர் தாம் அடையவிருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார். இப்போது, கடவுளது அரியணையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்" (எபி 12:2) என்று திருத்தூதர் புனித பவுல் கூறுகின்றார்.

திருச்சிலுவை - இறைவல்லமையின் நிகரற்ற செயல்பாடு:

உலக மீட்புக்கான இறைதிட்டத்தில் சிலுவையின் பங்கு விநோதமானதுதான். மீட்பின் கருவியாக இறைவன் தேர்ந்தெடுத்த அவமானத்தின் சின்னமான இந்தச் சிலுவை, இறைவனின் நிகரற்ற செயல்பாட்டிற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. எந்த ஒரு பொருளும், அது எத்தனை எளிமையானதாக, வலுவற்றதாக இருந்தாலும், இறைவன் அதனைப் பயன்படுத்த எண்ணும்போது, அந்தப் பொருள் மேன்மையடைகிறது என்பதை சிலுவை நமக்குக் காட்டுகிறது. இதனை திருத்தூதர் புனித பவுல் "உலகம் ஒரு பொருட்டாகக் கருதுபவற்றை அழித்து விட அது தாழ்ந்ததாகக் கருதுபவற்றையும், இகழ்ந்து தள்ளுபவற்றையும் கடவுள் தேர்ந்தெடுத்தார்" என்று (1 கொரி 1:28) கூறுகின்றார்.

மரணத்திற்கு இட்டுச் செல்லும் கழுமரமாகக் கருதப்பட்ட சிலுவையை முடிவில்லா வாழ்விற்கு அழைத்துச்செல்லும் சாதனமாகவும், சித்ரவதைகளின் சின்னமான சிலுவையை மனித மனங்களுக்கு அமைதி தரும் மரமாகவும், கொடுமைகளுக்கும் வலிகளுக்கும் காரணமான சிலுவையை மட்டற்ற மகிழ்ச்சியின் அடையாளமாகவும், நிந்தை அவமானத்தின் கருவியான சிலுவையை மாந்தர் பெருமையோடு பற்றிக்கொள்ளும் ஊன்றுகோலாகவும் கடவுள் மாற்றியமைத்தார். இறைவனின் சர்வ வல்லமைக்கும் மகத்துவத்திற்கும், திருச்சிலுவை சான்றாக இருக்கிறது.

திருச்சிலுவை கண்டெடுக்கப்படுதல்

holy cross chruch madapadஇறைமகன் இயேசுவை தன்மேல் தாங்கி, அவரது தூய இரத்தத்தில் நனைந்து புனிதமடையும் பேறுபெற்ற இந்த திருச்சிலுவை, கிறிஸ்து உயிர்த்து விண்ணேற்றம் அடைந்த பிறகு முன்னூறு ஆண்டுகளாக எவருடைய கவனத்தையும் ஈர்க்காமல் எந்தவொரு சிறப்பும் அடையாமல் இருந்தது. இந்த சிலுவை கண்டெடுக்கப்பட்ட நிகழ்வினை கீழ்க்கண்ட மரபுவழி செய்திகள் வாயிலாக அறிகிறோம். கி.பி.306 ஆம் ஆண்டில் கான்ஸ்டன்டைன் உரோமை சாம்ராஜ்ஜியத்தின் பேரரசரானார். இவருடைய தாயாரான அரசி ஹெலனா கி.பி. 326 ஆம் ஆண்டில் புனித பூமிக்கு திருயாத்திரை மேற்கொண்டு எருசலேம் நகருக்கு வந்தபோது, அங்கிருந்த பல திருத்தலங்களையும் ஆலயங்களையும் செப்பனிட்டு புதுப்பிக்கும் பணியைச் செய்தார். அப்போது நிலத்தினடியில் புதையுண்டிருந்த மூன்று சிலுவைகள் ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்டன. அந்த மூன்று சிலுவைகளில் இயேசுவைத் தாங்கிய சிலுவை எது என்பது கேள்விக்குறியாக இருந்தது. அந்த கட்டத்தில், மரணமடையும் நிலையில் நோய்வாய்ப்பட்டிருந்த ஒருவரை அந்த மூன்று சிலுவைகளையும் தொடச்செய்தார், அரசி ஹெலனா. இரண்டு சிலுவைகளைத் தொட்டபோது எந்த மாற்றமும் இல்லாத நிலையில், மூன்றாவது சிலுவையை தொட்டபோது அந்த நோயாளி முற்றிலும் நோய் நீங்கி நலமடைந்தார். எனவே அந்தச் சிலுவையே இயேசு அறையப்பட்ட சிலுவை என்று அரசி முடிவு செய்து, அதனை சகல சிறப்புகளுடன் வணக்கத்திற்குரிய ஒன்றாக அறிவித்தார். அந்த சிலுவை கண்டெடுக்கப்பட்ட இடத்தின் மேலே 'புனிதக் கல்லறையின் பேராலயம்' ஒன்றையும் அரசி ஹெலனா கட்டி எழுப்பினார்.

திருச்சிலுவையின் மாட்சி திருவிழா

இந்த மாபெரும் நிகழ்வினை சிறப்பிக்கும் விதமாக, செப்டம்பர் 14 ஆம் நாள் 'திருச்சிலுவையின் மாட்சி' என்ற பெருவிழாவை கத்தோலிக்கத் திருஅவை கொண்டாடுகின்றது. செப்டம்பர் மாதம் என்றவுடனே, அந்த மாதத்தின் 8-ஆம் நாளன்று நாம் கொண்டாடுகின்ற அன்னை மரியாவின் பிறந்தநாள் விழாதான் சட்டென நம் நினைவுக்கு வரும், இதைத் தவிர, செப்டம்பர் 5-ஆம் நாள் கொல்கத்தா நகர் புனித அன்னை தெரேசாவின் திருநாள், செப்டம்பர் 15-ஆம் நாள் வியாகுல மாதா திருநாள், செப்டம்பர் 29-ஆம் நாள் முதன்மை வானதூதர்களான புனிதர்கள் மிக்கேல், கபிரியேல், ரபேல் திருநாள் ஆகிய விழாக்களும் நமக்கு தெரிந்திருக்கும். ஆயினும், இந்த மாதம் 14-ஆம் நாளன்று திருஅவை சிறப்பிக்கின்ற “திருச்சிலுவையின் மாட்சி” என்ற விழாவையும் நாம் நினைவில் கொள்ளுதல் வேண்டும்.

இன்னும் குறிப்பாகச் சொன்னால், தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரையோரமாக உள்ள ‘மணப்பாடு’ என்ற ஊரில் தீபகற்ப குன்றின் மீதுள்ள திருச்சிலுவை ஆலயம் 400 ஆண்டுகளுக்கு முன்னர், நடுக்கடலில் கப்பல் சிதைந்தபின் கரைக்குத் தப்பி வந்த போர்த்துக்கீசிய மாலுமிகள் கட்டியெழுப்பியதாகும். இவ்வாலயத்தின் திருப்பீடத்திலுள்ள பாடுபட்ட சுரூபத்தின் பின்னால், கிறிஸ்து அறையப்பட்டு இறந்த சிலுவை மரத்தின் சிறிய துண்டு ஒன்று பதிக்கப்பட்டு வணக்கத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. “திருச்சிலுவையின் மாட்சி” திருநாள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14-ஆம் நாள் இத்திருத்தலத்தில் மிக சிறப்பான பெருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது.

திருச்சிலுவை வாழ்வின் ஊற்றாகத் திகழ்கின்றது. பாம்பினால் கடிக்கப்பட்டு இஸ்ரேயல் மக்கள் இறந்தபோது, கம்பத்தில் பொருத்தப்பட்ட வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைத்தார்கள். அது போலவே, நாமும் வாழ்வில் துன்ப-துயரங்களை சந்திக்க நேரும்போது திருச்சிலுவையின் மேன்மையை நினைவில் கொண்டால், வாழ்வில் அமைதியும், வளமும் பெறுவோம் என்பது உறுதி. எனவே, திருச்சிலுவை அடையாளத்தை பொருள் உணர்ந்து பயன்படுத்துவோம், திருச்சிலுவையின் பாதையில் நடப்போம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு