"இறைமகன் இயேசுகிறிஸ்து பிறந்துள்ளார்." என்ற நற்செய்தி முதன் முதலில் ஆடுமேய்க்கும் இடையர்க்கு அறிவிக்கப்பட்டது. இறைமகனின் இந்த மாபெரும் நற்செய்தி முதலாவது எளியவர்க்கு அறிவிக்க வேண்டும் என்பதே அவரின் நோக்கமாகும். இதன் வெளிப்பாடே வானதூதர்கள் வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருக்கின்ற ஏழை இடையர்களுக்கு இயேசு பிறந்ததை அறிவித்தது.
இயேசு பிறப்பதற்குப் பெரிய அரசக் குடும்பத்தைத் தேடவில்லை, பெரிய மாட மாளிகையைத் தேடவில்லை. மாறாக ஏழை தச்சன் குடும்பத்தையும், மாட்டுக்குடிலையும் தேடினார். இடையர்களுக்கு "உங்களுக்காக மீட்பர் பிறந்துள்ளார்" என அறிவிக்கப்பட்டனர். ஆமாம்! தங்கள் துயரவாழ்வில், ஒடுக்கப்பட்ட வாழ்வில் இருந்து விடுதலைக் கிடைக்கும் என்ற வேகத்தில் இடையர்கள் "மீட்பரை" தரிசிக்க, ஆராதிக்க ஆட்டுக்குட்டியோடு, ஏன்? எதற்கு? என்ற கேள்வி கேட்காமல் ஒடிவருகின்றார்கள். இன்று இறைமகன் இயேசுவின் பிறப்பைக் கொண்டாடுகின்றோம். இந்நாட்களில் நாம் சிந்திப்பது செயல்படுவது எல்லாம் நம் சுயநலத்திற்காகத் தானே இருக்கின்றது. இந்நாட்களிலாவது நாம் எளியவர்களை நினைத்து அவர்க்கு நம்மால் முடிந்தது எதைச் செய்யமுடியும் என்று சிந்தித்தால் "இயேசு நம்மில் பிறக்கிறார்". அதுவே கிறிஸ்து பிறப்பின் அர்த்தம் நிறைவேறுகிறது. ஒரு வேளை நானும் ஏழையாக இருக்கலாம் பரவாயில்லை! என்னால் ஒரு பேனா ஏழை மாணவனுக்குக் கொடுக்க முடியுமென்றால் அதுவே "சிறந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்".
இறைமகன் இயேசு தனக்குக் கிடைத்த காணிக்கைகளியே சிறந்த காணிக்கையாக ஏழை விதவைப் பெண் கொடுத்த காணிக்கையே! என்று கூறுகின்றார். இதைப் படிக்கின்ற நீங்கள் இந்தக் கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு நம்மை விட ஏழை ஒருவருக்கு ஏதாவது ஒருவிதத்தில் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால், இதைச் செயல்படுத்த முயற்சி எடுத்தால் அது தான் நீங்கள் கொண்டாடியக் கிறிஸ்து பிறப்பு விழாக்களிலேயே சிறந்த ஒன்றாகக் கருதப்படும். உங்களை விட எளியவர்களுக்கு நீங்கள் கொடுத்துப் பாருங்கள்! கொடுத்ததை நினைத்துப் பாருங்கள்!!
அஃது உங்கள் உள்ளத்தில் இனம்புரியாத மகிழ்ச்சிப் பொங்குவதை உணர்வீர்கள். கொடுக்கும்போது இரண்டு பக்கம் மகிழ்ச்சி பிறக்கின்றது. பெறுபவர்களும், கொடுப்பவர்கள் மகிழ்ச்சி அடைகின்றார்கள். இந்தக் கிறிஸ்து பிறப்புவிழா உங்களுக்குக் கொடுத்து மகிழ்ந்தப் பிறப்பு விழாவாக இருக்கட்டும்.
A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com