மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக் காலத்தின் 24-ஆம் ஞாயிறு
3-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
விடுதலைப் பயணம் 32:7-11,13-14 | 1 திமொத்தேயு 1:12-17 | லூக்கா 15:1-32

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


இறைவனின் இணையற்ற இரக்கம்

அநேக மக்கள் கடவுளை பழிவாங்கும் கடவுளாகவும், நாம் செய்யும் தவறுகளுக்குத் தண்டனை வழங்கும் போலீஸ் காரராகவும் நினைக்கிறார்கள். ஆனால் இன்றைய வார்த்தை வழிபாட்டில் இறைவன், அன்பு காட்டும் தெய்வம், மன்னிக்கும் தெய்வம், இரக்கம் காட்டும் தெய்வம், காத்திருக்கும் தெய்வம், என்னைத் தேடும் தெய்வமாகத் தெளிவாக வெளிப்படுத்தப் படுகிறார்.

வானத்து விலங்குகளோ, வானதூதர்களோ தவறுகள் செய்வதில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம்தான் தவறு செய்கின்றோம். அறியாமை, இயலாமை, பலவீனம் என்ற போர்வையில் நாம் தவறுகிறோம். எல்லாரும் தவறு,குற்றம் புரிபவர்களாக இருந்தாலும், பெரும்பாலோர் தம் குற்றங்களை ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக நியாயப்படுத்தவே முயல்வார்கள். அதே நேரத்தில் தாங்கள் எத்தகைய குற்றங்கள் செய்தாலும், பிறர் தமது நிலைமையைப் புரிந்து மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பு. ஆனால் இவர்கள், பிறர் இத்தகைய தவறுகளைப் புரியும்போது அத்தகைய தாராள உள்ளத்துடன் நடந்துகொள்வதில்லை. குறிப்பாக ஏழை எளியவர்கள். ஒடுக்கப்பட்டவர்கள், வேலைக்காரர்கள் குற்றம் செய்தால் அதைப் பெரிதுபடுத்தி ஒடுக்கும் முறையில் ஈடுபடவும் தயங்க மாட்டார்கள். இதனால் இன்று தண்டனை வழங்கும் காட்டுமிராண்டிக் கலாச்சாரம் பெருகிக் கொண்டே போகிறது. சிலர் தங்களையே மன்னிக்க முடியாதவர்கள் ஆகிவிடுகிறார்கள்.

ஆனால் தவறு செய்பவர்களையும், குற்றம் புரிவோரையும் நாம் எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை இயேசு இன்று மூன்று உவமைகளால் அழகாகச் சித்திரிக்கிறார்.

 1. தவறிச் சென்ற ஆட்டைத் தேடி அலைந்து அதைக் கொண்டு வரும் ஆயன்.
 2. காணாமல் போன நாணயத்தைத் தேடிக் கண்டுபிடித்து மகிழும் ஒரு பெண்.
 3. வீட்டை விட்டு ஓடிப் போன ஊதாரி மகனை வரவேற்று விருந்து கொண்டாடும் தந்தை.

இந்த மூன்று உவமைகளிலும் (கடவுளின் பண்புகளான) தேடுதல் நடைபெறுகிறது. கண்டடைந்த பின் எல்லையற்ற மகிழ்ச்சி உண்டாகிறது. அதைத் தொடர்ந்து விருந்து கொண்டாட்டமும் நடைபெறுகின்றது. எனவேதான் மனம் மாறிய பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் (லூக். 15:7, 10) என இயேசு கூறுகின்றார். நீதிமான்களையல்ல, பாவிகளையே தேடிவந்தேன் என்கிறார் ஆண்டவர் (மத். 9:13).

உனக்கு நான் முடிவில்லா அன்பு காட்டியுள்ளேன் (எரே. 31:3) என்கிறார் ஆண்டவர். நீ செய்த தீமையெல்லாம் நாம் மறந்திடும் தெய்வம் அல்லவா (எசே. 16:63).

நம் இறைவன், எசாயா தீர்க்கத்தரிசி கூறுவதுபோல நமது பாவங்கள் செந்தூரம் போல சிவப்பாக இருந்தாலும் அவற்றை அழித்து நம் இதயத்தை வெண் பனியிலும் வெண்மையாக்குவார்.

இத்தாலி நாட்டில் பிளாரென்ஸ் நகரில் ஏஞ்சலினா என்ற பெண் வாழ்ந்து கொண்டிருந்தாள். பெயர் ஏஞ்சல்தான். ஆனால் பாவம் செய்து பாவியாக வாழ்ந்து பலரின் வாழ்வைக் கெடுத்தவள். ஒருநாள் தன் வீட்டு அலமாரியைத் திறந்து உடுத்த, அலங்கரிக்க ஆடை எடுத்தபோது அங்கிருந்த பாடுபட்ட சுரூபம் அவள் கண்களில்பட அச்சிலுவையிலிருந்து ஒரு குரல் கேட்டது: நான் உன் பாவங்களுக்காக இறந்தேன்! என்பதை மறந்துவிடாதே! இந்த வார்த்தைகள் திரும்பத் திரும்பத் தன் காதில் ஒலித்ததால் தன் தவறான வழியை விட்டு விட்டு புனித வாழ்க்கை வாழத் தொடங்கினாள். இன்று புனித ஏஞ்சலினாவாகத் திகழ்கின்றாள்.

கல்வாரி நோக்கி வாருங்கள். கல்வாரியைப் பாருங்கள். அங்கே மூன்று சிலுவைகள் உண்டு. நடுவே நிற்கும் சிலுவை இயேசு தொங்கிய சிலுவை. இது மீட்பின் சிலுவை. இது இயேசுவுக்குச் சொந்தம். இதை அணைத்து முத்தமிடலாம். வலது புறத்தில் இருக்கும் சிலுவை நல்ல கள்வனின் சிலுவை. இது பாவபரிகாரத்தின் சிலுவை. இதை இன்று நமக்குச் சொந்தமாக்கிக் கொள்ளலாம். ஆனால் இடது புறத்தில் இருக்கும் சிலுவையோ சாபத்தின் சிலுவை. நம் வாழ்வை நாசமாக்கும் சிலுவை. இந்த மூன்று சிலுவைகளில் எதை உங்களுக்குச் சொந்தமாக்க விரும்புகிறீர்கள்?

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

நம்மைத் தேடும் இறைவன்

இஸ்ரயேல் இனம் பெருகினால் நமக்கு ஆபத்து என்று சொல்லி இஸ்ரயேலருக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகளையெல்லாம் ஆற்றிலெறிந்து கொன்றுவிடும்படி எகிப்து நாட்டு அரசன் பார்வோன் கட்டளையிட்டான்.

தன் மகன் ஆற்றிலெறியப்படுவதை விரும்பாத தாயொருத்தி நாணல் கூடையில் அக்குழந்தையை வைத்து தன் மகள் வழியாக அதை ஆற்றிலிட்டாள். அது ஆற்றில் மிதந்து வந்தது. அந்தக் குழந்தையின் பெயர் மோசே. பார்வோன் மன்னனின் புதல்வியால் அது அரண்மனைக்கு எடுத்துச்செல்லப்படுகின்றது.

மோசே வாழ்க்கையிலே ஒரு நாள். தன் இனத்தைச் சேர்ந்த அடிமை ஒருவனை எகிப்தியன் ஒருவன் அடிப்பதைப் பார்த்துவிடுகின்றார். மோசேயின் இரத்தம் கொதிக்கின்றது. கோபம் கொப்பளிக்கின்றது. தன் இனத்தவனை அடித்தவனை அடித்துக் கொன்று மண்ணைத் தோண்டிப் புதைத்துவிட்டு. தான் செய்தது யாருக்கும் தெரியாது என்று எண்ணி அரண்மனையை அடைகின்றார். ஆனால் மோசே செய்தது எப்படியோ வெளியே தெரிந்துவிடுகின்றது. அரசன் மோசேயைக் கொல்லத் தேடுகின்றான். ஆனால் மோசே தப்பித்து மிதியான் நாட்டுக்கு ஓடிவிடுகின்றார். அங்கே அவருடைய மாமனின் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோதுதான் கடவுள் அவரை எரியும் புதரில் எரியாது நின்று அழைத்தார்.

மோசே ஒரு கொலைகாரர். கொலைகாரரைக் கடவுள் விடுதலை வீரராக விளங்க அழைத்தார். ஆம். கொலைகாரரைத்தான் அழைத்தார். எதற்கு ஒரு கொலைகாரரைக் கடவுள் தம் பணியைச் செய்ய அழைக்க வேண்டும்? இதற்குப் பல காரணங்கள் உள்ளன. அதில் ஒரு தலையாய காரணம். தாம் நல்லவர்களைவிட, பாவிகளைத் தேடி அலையும் கடவுள் என்பதை உலக மக்களுக்குக் கடவுள் எடுத்துச்சொல்ல விரும்பினார். புதிய ஏற்பாட்டிலே யூதாஸ் ஒரு முறைதான் காட்டிக்கொடுத்தான். ஆனால் பேதுருவோ மூன்று முறை மறுதலித்தார். ஆனால் இயேசு உயிர்த்த பிறகு திபேரியாக் கடல் அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த பேதுருவைத் தேடிச்சென்று, மூன்று முறை மறுதலித்தவரை, மூன்று முறை என்னை அன்பு செய்கின்றாயா? எனக் கேட்டு திருஅவைக்குத் தலைவராக ஏற்படுத்தினார் (யோவா 21:1-17).

நமது கடவுள் பாவிகளைத் தேடிச் செல்லும் கடவுள். தனது மனத்தை மாற்றிக்கொள்ளும் கடவுள் (முதல் வாசகம்). முன்னர் நான் அவரைப் பழித்துரைத்தேன்; துன்புறுத்தினேன்; இழிவுபடுத்தினேன். ஆயினும் அவர் எனக்கு இரங்கினார் என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடிகளார் கூறுகின்றார். இந்த உண்மையைத்தான் இன்றைய நற்செய்தியும் எடுத்துச்சொல்கின்றது. இன்று இயேசு நம் ஒவ்வொருவரையும் பார்த்து,

நீ காணாமல் போன ஆடாக இருந்தாலும் (லூக் 15:1-7), 
நீ காணாமல் போன காசாக இருந்தாலும் (லூக் 15:8-10), 
நீ காணாமல் போன மகளாகவோ. மகனாகவோ இருந்தாலும் (லூக் 15:11-32)நான் உன்னைக் கைவிடமாட்டேன்.

என் அரசிலே அழிவு என்ற சொல்லுக்கே இடமில்லை. என்னிடம் என் பரம தந்தை ஒப்படைத்த எதையும் நான் இழக்கமாட்டேன்.

ஒரு பாவி சாகவேண்டுமென்று நான் விரும்புவதில்லை. நான் பிறந்ததும், வளர்ந்ததும், வாழ்ந்ததும், இறந்ததும், உயிர்த்ததும், இன்று வாழ்வதும் பாவிகளை மீட்பதற்காகவே. ஆகவே அஞ்சாதே. திகையாதே. வா என்னிடம், உனக்காகப் பொறுமையோடு நான் காலமெல்லாம் காத்திருப்பேன் என்று கூறுகின்றார். மேலும் அறிவோம் :

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது (குறள் : 8).

பொருள் : அறக்கடலாகத் திகழும் சான்றோனாகிய இறைவன் அடியொற்றி நடப்பவர். ஏனைய பொருளும் இன்பமும் ஆகிய கடல்களை எளிதாகக் கடந்து செல்வர்; ஏனையோர் பிற துன்பங்களிலிருந்து மீள முடியாது தவிப்பர்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

ஒரு கல்லூரி மாணவன் முதலாம் ஆண்டில் ஒரு பெண்ணுடன் சுற்றினான். இரண்டாம் ஆண்டில் வேறொரு பெண்ணுடன் சுற்றினான். ஏன் அவன் அவ்வாறு மாற்றினான் என்று கேட்டதற்கு அவன் கூறிய பதில: "Syllabus (பாடத்திட்டம்) மாறிவிட்டது." கடவுள் என்றும் மாறாதவர்; அவர் தமது பாடத்திட்டத்தை மாற்றுவாரா? ஆம். மாற்றுகிறார். நீதியின் அடிப்படையில் செயல்பட்ட இறைவன் இரக்கத்தின் அடிப்படையில் செயல்படுகிறார். கடவுள் தமது பாடத்திட்டத்தை மாற்றுகிறார் என்பதை இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது. இஸ்ரயேல் மக்கள் சிலைவழிபாட்டில் ஈடுபட்டதற்காக அவர்களை அழித்துவிடத் திட்டமிட்ட இறைவன், மோசே அம்மக்களுக்காகப் பரிந்து பேசியபோது தமது திட்டத்தை மாற்றிக் கெண்டார். "ஆண்டவரும் தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு தம் மக்களுக்குச் செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார்" (விப 32:14).

மனிதரை அழிப்பதல்ல. மாறாக அவர்களை வாழவைப்பதே கடவுளுடைய திட்டமாகும். "உண்மையில் பொல்லாரின் சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழிகளினின்று திருந்தி வாழவேண்டும் என்பதன்றோ என் விருப்பம்" (எசே 18:23). விவிலியம் காட்டும் கடவுள், "இரக்கமும் அருளும் கொண்டவர். அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை" (திபா 103: 8-10), "கடவுள் தம் மகனை இவ்வுலகிற்கு அனுப்பியது மக்களை அழிப்பதற்காக அன்று, மாறாக அவர் மூலம் நிலைவாழ்வு பெறும் பொருட்டே" (யோவா 3:16).

ஏற்கெனவே உள்ளதைக் கண்டுபிடிப்பதற்கும் (Discovery), புதிதாக ஒன்றைக் கண்டுபிடிப்பதற்கும் (invention) உள்ள வேறுபாட்டை விளக்கும் வகையில் ஒரு வாக்கியம் அமைக்கும்படி ஆங்கில ஆசிரியர் கேட்டபோது, ஒரு மாணவன் கூறியது: "My father discovered my mother, both of them invented me என் அப்பா என் அம்மாவைக் கண்டுபிடித்தார். இருவரும் சேர்ந்து என்னைப் புதிதாகக் கண்டுபிடித்தனர்."

பல கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்த அறிவியல் மேதை டாக்டர் ஜேம்ஸ் சிம்சனிடம் "உங்களின் பெரிய கண்டுபிடிப்பு எது?" என்று கேட்டதற்கு அவர் கூறியது: "இயேசு கிறிஸ்து என்னுடைய மீட்பர் என்பதே எனது மாபெரும் கண்டுபிடிப்பு." இன்றைய இரண்டாம் வாசகத்தில் இதே பதிலைத்தான் திருத்தூதர் பவுல் கூறுகிறார். "பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகிற்கு வந்தார். அந்த பாவிகளுள் முதன்மையான பாவி நான்" (1 திமொ. 1:15),

நீதிமான்களை அல்ல. பாவிகளையே கிறிஸ்து தேடி வந்தார் என்பதை, அவர் காணாமற்போன ஆடு, காணாமற்போன காசு. காணாமற்போன மகன் ஆகிய மூன்று உவமைகள் வழியாகத் தெளிவுபடுத்தினார். இம்மூன்று உவமைகளில் 'காணமற்போன மகனின்' உவமை தலைசிறந்தது என்பதில் ஐயமில்லை. இந்த உவமையில் வரும் இளைய மகன் தனது சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தினான். ஆனால் இறுதியில் தனது தவற்றை உணர்ந்து, அறிவு தெளிந்து, தந்தையிடம் திரும்பி வருகிறான். பாவம் என்பது நமது சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகும். மனம்போன போக்கில் போவது சுதந்திரமாகாது. நிதானமிழந்து நிலைதடுமாறித் தறிகெட்டுத் தடம்மாறிச் செல்லும் மனத்தை நல்வழியில் செலுத்துவதுதான் அறிவுடைமையாகும்.

சென்ற இடத்தால் செலவிடாது தீதுஓர்இ
நன்றியின்பால் உய்ப்பது அறிவு (குறள் 422)

பலாப்பழத்தின் சுளையை எடுத்துச் சுவைக்கக் கத்தி தேவைப் படுகிறது. அவ்வாறு வாழ்க்கையைச் சுவைக்கப் புத்தி தேவைப்படுகிறது. இளைய மகனுக்குப் புத்தி வந்தது; அறிவு தெளிந்தது. அவனது வாழ்வில் ஏற்பட்ட திருப்புமுனை: "நான் எழுந்து என் தந்தையிடம் போவேன்" (லூக் 15:17-18), புத்தி கெட்டு பாவம் செய்யும் நாம், புத்தி தெளிந்து பாவக் குழியிலிருந்து எழவேண்டும்.

"தொட்டிலுக்கு அன்னை: கட்டிலுக்குக் கன்னி; பட்டினிக்குத் தீனி; சுட்டபின் நெருப்பு: கெட்டபின் ஞானி" என்று பாடிய கவிஞர் கண்ணதாசன் அப்பாவிகளுக்காகத் தொகுத்துள்ள பாவ அறிக்கை நமது சிந்தையைக் கிளறுகிறது. அப்பாவ அறிக்கை வருமாறு: "கைக்கோலை நழுவவிட்ட குருடன் கருந்தேளைப் பிடிப்பது போல். ஆன்மீக உணர்ச்சியை மறந்துவிட்ட நாங்கள் பாவத்தில் சிக்கினோம். அமுதென்று எண்ணி நஞ்சை அருந்தினோம்; மலரென்று எண்ணி முட்களைச் சூடினோம்... ஆசை வழி சென்றோம். தண்டனை கிடைத்த பிறகுதான் தவறுகளைஉணர்ந்தோம்" (அர்த்தமுள்ள இந்துமதம்). ஒரு முட்டாள் தான் முட்டாள் என்பதை ஏற்றுக்கொள்ளும்போது அறிவாளி ஆகின்றான். ஒரு பாவி தான் பாவி என்பதை ஏற்றுக்கொள்ளும்போது நீதிமான் ஆகின்றான்.

காணாமற்போன மகன் திரும்பி வந்ததும் அவனுடைய அப்பா அவனை அடிமையாக அல்ல, மகனாக ஏற்றுக்கொள்கிறார். அடித்துத் துரத்தப்பட வேண்டிய அவனுக்குக் கிடைத்தது: தந்தையின் அரவணைப்பு, முத்தம், முதல்தரமான ஆடை, கைக்கு மோதிரம், காலுக்கு மிதியடி: பெரிய விருந்து, நடனம், இசைக் கச்சேரி, இத்தகைய மகத்தான வரவேற்பைக் கண்டு மூத்த மகன் எரிச்சல் அடைந்தது நியாயமாகத் தோன்றுகிறது. இப்படிப்பட்ட ஒரு தந்தையை நாம் காணமுடியமா? அந்த தந்தைதான் நமது விண்ணகத் தந்தை. அவர் நம்மை என்றும் எத்தகைய நிலையிலும் தமது செல்லப் பிள்ளைகளாக ஏற்றுக்கொள்கிறார். அடிமைகளாக அல்ல. பிள்ளைகளாக ஏற்றுக்கொள்கிறார். "இனி நீங்கள் அடிமைகள் அல்ல: பிள்ளைகள்தாம்; பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுள் செயலே" (கலா 4:6-7).

தவறு என்பது தவறிச் செய்வது, 
தப்பு என்பது தெரிந்து செய்வது, 
தவறு செய்தவன் வருந்தி ஆகணும், 
தப்புச் செய்தவன் திருந்தப் பார்க்கணும் 
-திரைப்படப் பாடல்
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

மூத்த மகன் கதைக்கு முடிவு?

உலகளாவிய எழுத்தாளர்கள் உன்னதமானவைகளாகக் கருதிப் போற்றும் கதைகள் இரண்டு. கதை எழுதுபவர் எவருக்கும் முன்னோடியாக அமைவது இந்தக் கதைகளே! அந்த இரண்டு கதைகளுமே இயேசு சொன்னவை!

1. நல்ல சமாரியர் உவமை (லூக். 10:29-36)
- மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டது.
2. ஊதாரி மைந்தன் உவமை (லூக். 15:11-32)
மனமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டது.

தந்தையின் இரக்கம் எவ்வளவு ஆழமானது என்பதை ஊதாரி மகன் உவமை அழுத்தமாக உணர்த்தும். அறிவு தெளிந்தவனாய் இளைய மகன் தன்நிலை உணர்ந்து மனம் மாறித் தன் மனதிற்குள் சொல்ல நினைத்த வாக்கியங்கள் மூன்று (லுக். 15;18,19):

 1. "அப்பா கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்”.
 2. "இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்".
 3. "உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும்”. ஆனால் தந்தையைக் கண்டதும் அவனால் சொல்லமுடிந்த வாக்கியங்கள் முதல் இரண்டுதான் (லூக்.15:21). மூன்றாவதைத் தொடங்கவிட்டாமல் தன்னை மறந்த பூரிப்பில் தந்தை பணியாளர்களை அழைத்து என்னவெல்லாம் செய்யச் சொல்கிறார்! கடவுளின் மகனாகக் கருதப்பட்ட ஒருவன் கடவுளை விட்டு விலகி வெகுதொலைவு சென்று, மீண்டும் திருந்தி, திரும்பி வருகின்றபோது கடவுளால் அவனை ஓர் அடிமையாக நினைக்கக்கூட மனது வரவில்லையே!

விவிலியம் காட்டும் கடவுள் "இரக்கமும் அருளும் கொண்டவர். அவர் நம் பாவங்களுக்கேற்ப நம்மை நடத்துவதில்லை. நம் குற்றங்களுக்கேற்ப நம்மைத் தண்டிப்பதில்லை" (தி.பா. 103:8-10). மாறாக "உண்மையில் பொல்லாரின் சாவையா நான் விரும்புகிறேன். அவர்கள்தம் வழிகளினின்று திருந்தி வாழ வேண்டும் என்பதன்றோ என் விருப்பம்" (ஏசேக். 18:23) என்கிறார்.

ஆனால் இதற்கு முற்றிலும் எதிராக அண்ணனின் எண்ணங்கள் அமைகின்றன. மனம் மாறி வந்தவனைத் தந்தை மகனாக ஏற்றுக் கொண்டது போல, அவனைத் தம்பியாக அண்ணனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையே! தந்தையின் அன்புக்குத் தம்பி தகுதியற்றவன் என்ற முடிவுக்குத் தானே அவனால் வர முடிந்தது. நீதியால் தண்டனைக்குரியவன் என்கிறான் அண்ணன். இரக்கத்தால் மன்னிப்புக்குரியவன் என்கிறார் தந்தை.

கடவுள் நம்மைப் பாவிகளாக அல்ல, எப்பொழுதும் தன் பிள்ளைகளாகத்தான் பார்க்கிறார். இந்த உண்மையை உணர, இறைவாக்கினர் ஒசேயா அந்த அனுபவத்தை இறைவார்த்தையில் தருகிறார் (ஓசே. 11:4,8). இவ்வார்த்தைகளை வாசிக்கும்போது நமது உள்ளம் உருகும். இவ்வளவு இரக்கமுள்ள தந்தையாகக் கடவுளைப் பெற்ற நாம் எத்துணை பேறுபெற்றவர்கள்!

"பாவம் பெருகுகிற இடத்தில் அருள் பொங்கி வழிந்தது... அந்த அருள்தான் மனிதர்களை கடவுளுக்கு ஏற்புடையவர்களாக்கி நிலை வாழ்வு பெற வழி வகுக்கிறது" (ரோமை. 5:20,21). திருத்தூதர் பவுலின் இந்தக் கூற்றுக்கு என்ன பொருள்? கடவுளின் இரக்கம் மனிதனின் பாவத்தை விட வலிமையானது என்பதன்றோ!

கடவுளின் முகம் இரக்கமுள்ள தந்தையின் முகம். நினிவே மாநகர் மக்கள் நெறி கெட்டவர்களாய் பாவச் சேற்றில் உழன்று கொண்டிருந்தனர். அந்நகருக்கு அழிவு நேரும் என்று அறிவிக்கக் கடவுள் யோனாவை அனுப்பினார். அதைக் கேட்ட மக்கள் மனம் மாறிக் கடவுளின் மன்னிப்பைப் பெற்றனர்.அதனைப் பொறுக்காத யோனா சினம் கொண்டார். அப்போது கடவுள் தன் இயல்பை வெளிப்படுத்துகிறார்: "அந்த ஆமணக்குச் செடி ஓர் இரவில் முளைத்தெழுந்து மறு இரவில் முற்றும் அழிந்தது. அதற்காக நீ உழைக்கவும் இல்லை. அதை வளர்க்கவும் இல்லை. அதற்கு இவ்வளவு இரக்கம் காட்டுகிறாயே. இந்த நினிவே மக்களில் இலட்சத்து இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கிறார்கள். வலக்கை எது இடக்கை எது என்றுகூடச் சொல்லத் தெரியாத இத்தனை மக்களுக்கு நான் இரக்கம் காட்டாமல் இருப்பேனா?' (யோனா 4:10-11).

புலம்பல் நூல் 3:22-23 சொல்கிறது "ஆண்டவரின் பேரன்பு முடிவுறவில்லை. அவரது இரக்கம் தீர்ந்துபோகவில்லை. காலைதோறும் அவை புதுப்பிக்கப்படுகின்றன. நீர் பெரிதும் நம்பிக்கைக்குரியவர்”.

புதிய ஏற்பாட்டில் "இயேசுவே இறை இரக்கத்தின் திருமுகம். இறை இரக்கத்தின் அடையாளம்" என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். தொலைந்து போன நாணயம், காணாமற் போன ஆடு, ஓடிப்போன ஊதாரி, நல்ல சமாரியர், உடன் பணியாளரை மன்னிக்க மறுத்தவன் ... இப்படி எத்தனை எத்தனை உவமைகள். பாவியான சக்கேயு, யாக்கோபின் கிணற்றடியில் சமாரியப்பெண், விபச்சாரத்தில் பிடிபட்ட பெண், மத்தேயுவின் அழைப்பு, பேதுருவின் மறுதலிப்பு... இப்படி எத்தனை எத்தனை நிகழ்வுகள். அத்தனையும் இறைமகன் இயேசுவின் இரக்கத்தின் முகத்தை நம்முன் நிறுத்துகின்றன.

திருச்சபையாகட்டும், திருமுழுக்குப் பெற்ற கிறிஸ்தவனாகட்டும் இறையிரக்கத்தின் கருவியாக, சாட்சியாக, தூதனாகத் திகழ்வதில்தான் நமது வாழ்வு பொருள் பெறும், பொலிவு பெறும், நிறைவு பெறும். "உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கம் கொண்டு உமக்குச்செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்" (மார்க். 5:19).

இறைவன் இரக்கம் உள்ளவர் மட்டுமல்ல இரக்கமே உருவானவர். தனது அந்த உருவிலும் சாயலிலும் அன்றோ நம்மைப் படைத்திருக்கிறார். அவரைப் போல இருக்க வேண்டாமா நாம்?

"எனக்கொரு மகன் பிறப்பான். அவன் என்னைப் போலவே இருப்பான்". இதுதானே எந்தத் தந்தையும் எதிர்பார்ப்பது! 'எனக்கொரு மகன் பிற்ப்பான் அவன் அண்டை வீட்டுக்காரனைப் போல் இருப்பான்' என்றால் அசிங்கமில்லையா? இந்த உணர்வுக்கு விவிலியக் கடவுள் விதிவிலக்கா? எனவே இயேசு சொன்னார்: "உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்" (லூக். 6:36).

இது பாவி மனந்திரும்பிய கதை மட்டுமல்ல. தன்னையே நேர்மையாளனாக நினைத்துக் கொண்டிருப்பவன் மனம் திரும்ப வேண்டிய கதை. இந்த உவமைக்கு நற்செய்தியாளர் லூக்கா எழுதியிருக்கிற முன்னுரையே சான்று (லூக். 15:2-3).

கதை முழுவதும் இழையோடுவது மகிழ்ச்சியின் நற்செய்தி:

 • இழந்த மகனைக் கண்ட தந்தையின் மகிழ்ச்சி.
 • மனந்திரும்பிய பாவியின் உள்ளத்தில் மகிழ்ச்சி.
 • அதனால் வானதூதர்களிடையே மகிழ்ச்சி.
 • மீட்பால் வந்த மகிழ்ச்சி.

"உமது மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்" (தி.பா.51:12). பணம், பதவி, புகழ், போதை இன்னும் பல்வேறு அம்சங்கள் ஏதோ ஒரு வகையில் மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால் அவையெல்லாம் நிலையானவையா? மீட்பால் வரும் மகிழ்ச்சியே நிலையானது. அது மனமாற்றத்தால் மட்டுமே வரும்.

அந்த மகிழ்ச்சியை இளைய மகன் நிறைவாகப் பெற்றான். மூத்த மகன் பெற்றானா? அவன் வீட்டுக்குள் நுழைந்தானா? விருந்தில் பங்கேற்றானா? அது பற்றி இயேசு ஒன்றும் சொல்லவில்லையே ஏன்?

பாவி என எண்ணப்பட்டவன், தன்னைப் பாவி என ஏற்றுக் கொண்டவன் ஒருவனுடைய கதைக்கு இயேசுவால் முடிவு எழுத முடியும். ஆனால் பரிசேயனாகந் செருக்குற்றவனுடைய கதைக்கு அந்தப் பரிசேயன்தான் முடிவு எழுத வேண்டும்.

தவறுவது மனித இயல்பு. ஆனால் தவறுக்குப் பின் திருந்தி வாழ்வதுதான் மனித மாண்பு. இந்த மாண்புமிக்க வாழ்வுக்குத்தான் இயேசு நம்மை இன்று அழைக்கின்றார். நமது பதில் என்ன?

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

அவர் பெயர் இரக்கம்!

புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமடல் பிரிவு 13ல் அன்பிற்கு ஒரு பாடல் இசைக்கின்றார். அதை வாசிக்கும்போதெல்லாம், இந்தப் பாடலில் 'இரக்கம்' என்ற வார்த்தையை அவர் ஏன் பயன்படுத்தவில்லை என்ற ஐயம் என்னில் எழுவதுண்டு. இன்று அதிகமாகப் பேசப்பட்டு பொருளை இழந்த வார்த்தைகளில் ஒன்று அன்பு. எல்லாவற்றையும் நாம் அன்பு செய்வதாக இன்று சொல்கின்றோம். ஆனால், அன்பிற்கு அடிப்படையான ஒரு படி அல்லது வாயில் இருக்கின்றது. அதன் வழியாகத்தான் ஒருவர் அன்பிற்குள் நுழைய முடியும். அது என்ன? இரக்கம். அந்தப் படியை நாம் ஏறிக் கடக்கத் தேவையில்லை - இறங்கித்தான் கடக்க வேண்டும்!

நாம் பலகாரக் கடை ஒன்றிற்குச் செல்கின்றோம் என வைத்துக்கொள்வோம். நிறைய பலகாரங்களை வாங்கிவிட்டு வெளியே வந்து, நம்முடைய வண்டியை நகர்த்தும்போது அங்கு வருகின்ற ஒருவர், 'ஐயா! எனக்கு ஏதாவது கொடுங்க!' என்று கையை நீட்டுகிறார். நாம் பையைத் துலாவி ஐந்து அல்லது பத்து ரூபாய் கொடுக்கிறோம். இதை நாம் பிறரன்புச் செயல் என்று சொல்கிறோம். இந்த அன்பு நம்மில் எப்படி வந்தது? இரக்கம் என்ற உணர்வால்தான். இரக்கம் என்ற உணர்வு வர வேண்டுமென்றால் ஒருவர் தன்னுடைய நிலையிலிருந்து இறங்கி வந்து அடுத்தவரின் தளத்தில் நிற்க வேண்டும். இரக்கம் வர இறங்கித்தான் ஆக வேண்டும்!

இரக்கம் கொண்டு இறங்கி வந்த ஐந்து நபர்களை இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது. இந்த ஐந்து நிகழ்வுகள் அல்லது எடுத்துக்காட்டுகள் சுட்டிக்காட்டும் செய்தி ஒன்றுதான்: 'அவர் பெயர் இரக்கம்!' இவை எழுப்பும் கேள்வியும் ஒன்றுதான்: 'அவர் பெயர் இரக்கம் என்றால் உன் பெயர் என்ன?'

1. ஆண்டவராகிய கடவுளின் இரக்கம்

இன்றைய முதல் வாசகத்தில் (காண். விப 32:7-11,13-14) இஸ்ரயேல் மக்கள் பொன்னாலான கன்றுக்குட்டியை வழிபட்டு யாவே இறைவனை, ஆண்டவராகிய கடவுளைப் புறக்கணிக்கின்றனர். இது பெரிய பிரமாணிக்கமின்மையாகக் கருதப்பட்டது. ஆகையால் ஆண்டவரின் கோபம் அவர்கள்மேல் எழுந்து அவர்களைக் கொல்ல நினைக்கிறது. அந்த நேரத்தில் மோசே ஆண்டவராகிய கடவுளின் உடன்படிக்கையை அவருக்கு நினைவூட்ட, ஆண்டவரின் கோபம் தணிகின்றது. ஆண்டவர் தன்னுடைய எண்ணத்தை மாற்றிக்கொண்டு மக்களுக்குச் செய்யப் போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாமல் விடுகின்றார். இஸ்ரயேல் மக்கள் செய்த செயலுக்கு ஆண்டவராகிய கடவுள் கோபம் கொள்வது தகுந்தது என்றாலும், அவர் அந்தக் கோபத்திலிருந்து இறங்குகின்றார். அந்த இறங்குதல் அவருடைய இரக்கமாக மாறுகின்றது. இங்கே மோசேயின் பங்கும் முக்கியமானது. ஆண்டவராகிய கடவுளுக்கே அவருடைய நற்குணத்தைச் சுட்டிக்காட்டுபவராக மாறுகின்றார் மோசே.

2. இயேசு கிறிஸ்துவின் இரக்கம்

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 திமொ 1:12-17), திமொத்தேயுவுக்கு எழுதுகின்ற மடலில், தன்னுடைய அழைத்தல் வாழ்வு அல்லது பழைய வாழ்வு பற்றி நினைவுகூறுகின்ற பவுல், 'நான் அவரைப் பழித்துரைத்தேன். துன்புறுத்தினேன். இழிவுபடுத்தினேன் ... ஆயினும் அவர் எனக்கு இரங்கினார்' என்று இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தை - தான் அனுபவித்ததை - அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். தொடர்ந்து, 'கடவுள் எனக்கு இரங்கினார் ... பொறுமையைக் காட்டினார்' என்றும் எழுதுகின்றார். பவுலைப் பொருத்தவரையில் இயேசு அவருடைய செயல்களுக்கு ஏற்ப அவரைத் தண்டிக்கவோ கண்டிக்கவோ இல்லை. மாறாக, இரக்கத்தைக் காட்டி அவரைப் புறவினத்தாரின் திருத்தூதராகத் தெரிந்துகொள்கிறார்.

3. ஆடு மேய்ப்பவரின் இரக்கம்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 15:1-32) இயேசு, 'பரிசேயரின் முணுமுணுப்புக்கு' எதிராக மூன்று எடுத்துக்காட்டுக்களைச் சொல்கின்றார். முதலாவது எடுத்துக்காட்டு, ஆடு மேய்க்கும் ஒருவர் காணாமல் போன ஆட்டைத் தேடும் நிகழ்வு. நூறு ஆடுகள் வைத்திருந்த ஒருவர் அவற்றில் ஒன்று காணாமல்போனபோது, தொன்னூற்று ஒன்பது ஆடுகளை விட அந்த ஒரு ஆடுதான் பெரியது என்று எண்ணியதால் அதைத் தேடிக் கண்டுபிடித்து மகிழ்ச்சியோடு தோளில் போட்டுக்கொண்டு, தன் நண்பர்களையும் தன்னுடைய மகிழ்ச்சியில் பங்கேற்க அழைக்கின்றார். அவர் காணாமல் போன அந்த ஒரு ஆட்டிற்காக அனுபவித்த எல்லாத் துன்பங்களும் மறைந்து சட்டென்று மகிழ்ச்சியாக மாறிவிடுகிறது. ஆடு மேய்ப்பவர் காணாமல்போன அந்த ஆட்டிற்காக மலைகள், பள்ளத்தாக்குகள் என அனைத்திலும் ஏறி இறங்குகின்றார். அதுவே அவருடைய இரக்கம்.

4. நாணயம் தொலைத்த பெண்ணின் இரக்கம்

ஓர் ஆணை உருவகப்படுத்திய லூக்கா தொடர்ந்து ஒரு பெண்ணையும் உருவகப்படுத்துகிறார். பத்து நாணயங்களுள் ஒன்றைத் தொலைத்த பெண், உடனடியாக எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும் வரை தேடி, அதைக் கண்டுபிடித்துத் தோழியரோடு மகிழ்ந்து கொண்டாடுகின்றார். தான் தோழியரோடு மகிழ்ந்து கொண்டாடிய பணம் தொலைந்து போன பணத்தைவிட மிகுதியாக இருந்தாலும் அது பற்றிக் கவலைப்படவில்லை அவர். தான் தொலைத்த திராக்மா கிடைத்ததே அவளுடைய பெருமகிழ்ச்சியாக இருக்கிறது.

5. மகன்களைத் தொலைத்த தந்தையின் இரக்கம்

'ஒரு தந்தையும் இரண்டு மகன்களும்' எடுத்துக்காட்டில், தந்தை இரண்டு மகன்களையும் தொலைத்துவிடுகின்றார். இளைய மகன் தன்னுடைய சொத்துக்களைப் பிரித்து வாங்கிக் கொண்டு சென்று, தந்தையிடமிருந்து தொலைந்துவிடுகின்றார். மூத்த மகன் தன்னுடைய வேலைகளிலேயே தொலைந்துவிடுகின்றார். இருவரையும் விருந்திற்கு அழைக்கின்றார் தந்தை. மூத்தவர் விருந்திற்குள் நுழைய மறுக்கிறார், தயங்குகிறார். தான் செய்த வேலைகள் அனைத்தும், தான் தந்தைக்குக் காட்டிய பிரமாணிக்கம் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டதாக உணர்கின்றார்.

இவர்களுடைய பெயர்கள் இரக்கம் என்றால் என்னுடைய பெயர் இரக்கம் என்றாக நான் என்ன செய்ய வேண்டும்?

இவர்களே இதற்கான வாழ்க்கைப் பாடங்களையும் வரையறுக்கிறார்கள்:

அ. அவரவருடைய முடிவுக்கு அவரவரே பொறுப்பு

தன்னுடைய இளைய மகன் தன்னுடைய சொத்துக்களைப் பிரித்துக் கேட்டபோது அவனைத் தடுத்து நிறுத்தவோ, அவனுக்கு அறிவுரை பகரவோ முயற்சி செய்யவில்லை அந்த ஊதாரித் தந்தை. மகனுடைய முடிவுக்கு மகனே பொறுப்பு என்று கருதினார். தன்னுடைய ஆற்றல், நேரத்தைச் செலவழித்து அவனுக்கு முட்டுக்கட்டை போடவில்லை. அல்லது தன்னுடைய வேலைக்காரர்களை அனுப்பி அவனைப் பின்தொடரச் சொல்லவில்லை. 'நான் போகிறேன்' என்று என்று சொன்ன மகனிடம், 'போ' என்கிறார். முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுளும் தன்னுடைய மக்கள் தனக்கு எதிராகத் திரும்பிய போது, அவர்களுடைய முடிவுக்கு அவர்களே பொறுப்பு என்று பொறுமை காக்கின்றார். இரண்டாம் வாசகத்திலும் பவுல் திருச்சபையைத் துன்புறுத்தியபோது இயேசு பொறுமை காக்கின்றார். பவுலின் செயலுக்கு அவரே பொறுப்பு என்பது போல அமைதி காக்கின்றார்.

இரக்கத்தின் முதன்மையான பண்பு பொறுமை. அந்தப் பொறுமையில் நான் அடுத்தவரை அவருடைய பொறுப்பில் விட வேண்டும். இரக்கம் என்றவுடன் எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு என்னுடைய மடியில் வைத்து, 'நான்தான் எல்லாவற்றுக்கும் எல்லாருக்கும் பொறுப்பு' என்று பதறுவது அல்ல. மாறாக, ஒவ்வொருவரும் முதிர்ச்சி அடைந்தவர், ஒவ்வொருவரும் நன்மை-தீமை அறியக்கூடியவர், பொறுமையாக இருந்தால் அல்லவரும் நல்லவர் ஆவார் என்று அடுத்தவரின் செயல்களுக்கு அடுத்தவரே பொறுப்பு என்று பொறுமையுடன் அமர்தல் இரக்கத்திற்காக முதற் பாடம்.

ஆ. உன்னுடைய தீமை என்னுடைய நன்மையை ஒருபோதும் பாதிக்காது

'நீ தீயவனாய் இருக்கிறாய் என்பதற்காக நானும் தீயவனாய் இருப்பேன்' என்று யாவே இறைவனோ, இயேசுவோ, தந்தையோ சொல்லவில்லை. மாறாக, மற்றவர்களின் தீமை தங்களுடைய நன்மையைப் பாதிக்காவண்ணம் அவர்கள் கவனமாக இருந்தார்கள். தன்னுடைய மகன் வெறுங்கையனாய் வந்தான் என்பதற்காக அவனுடைய தந்தை தன் கைகளையும் வெறுங்கையாக்கவில்லை. வெற்றுக்கையனாய் இருந்த மகனை இருந்த இடத்திலேயே நிரப்புகின்றார். தான் தெரிந்துகொண்ட இஸ்ரயேல் மக்கள் பிரமாணிக்கமின்மையில் இருந்தாலும் அவர்களுடைய தீமை கடவுளையோ மோசேயையோ பாதிக்கவில்லை. பவுல் சவுலாய் இருந்தபோது செய்த தீமையும் இயேசுவின் நன்மைத்தனத்தைப் பாதிக்கவில்லை.

இன்று நான் என்னுடைய நன்மையை எப்படி நிர்ணயிக்கிறேன்? எனக்கு ஒருவர் தீமை செய்தால் நான் அவருக்கும் தீமை செய்ய நினைத்தேன் என்றால், என்னுடைய நன்மையைவிட அவருடைய தீமை வலுவானதாக இருக்க நான் அனுமதித்துவிடுகிறேன். காணாமல் போன ஆடும் நாணயமும் தங்களுக்கு ஏதோ வகையில் தீங்கிழைத்தாலும் அவற்றைத் தொலைத்தவர்கள் வாளாவிருக்கவில்லை. தங்களுடைய நன்மைத்தனத்தால் அவற்றைத் தேடினர். இதுவே இரக்கத்தின் இரண்டாம் பாடம்.

இ. என்னுடையதும் உன்னுடையதே

ஊதாரித் தந்தையின் இவ்வார்த்தைகள் அவருடைய பெருந்தன்மையைக் காட்டுகின்றன. 'என்னுடையதும் உன்னுடையதே' என்று அவர் தன்னுடைய இரண்டு மகன்களுக்கும் சொல்கின்றார். தன்னுடைய செயலுக்கு அவர் எந்த பதில் உபகாரமும் எதிர்பார்க்கவில்லை. தன்னுடைய இளைய மகனைக் கண்டபோது அவனுடைய கழுத்தில் விழுந்து அவனை வரவேற்ற தந்தை மூத்த மகனுடைய கழுத்தில் அவ்வாறு விழவில்லை. ஏனெனில், மூத்த மகனை அவர் தன்னுடைய சமம் என்று கருதினார். 'எனக்குரிய ஒன்று என் தம்பிக்குப் போகிறது' என்று மனதுக்குள் முணுமுணுத்த மூத்த மகனிடம், 'நான், என்னுடையது, என்னுடைய இளைய மகன், வேலைக்காரர்கள், சொத்து என எல்லாம் உன்னுடையது' என்று சொல்லி ஒரு நொடியில் அவனைத் தந்தையாக்கி இவர் மகனாகின்றார். இதுதான் இரக்கத்தின் மூன்றாம் குணம்.

நான் ஒருவருக்கு இரங்குகிறேன் என்றால் அவரை நான் அதே நிலையில் வைத்திருத்தல் கூடாது. அப்படி வைத்திருந்தால் நான் அவரைப் பயன்படுத்துபவராக மாறிவிடுவேன். மாறாக, 'என்னுடையது எல்லாம் உன்னுடையது' என்று சொல்லி அவருக்கு இரங்கும்போது, அவர் நிறைந்தவராகிவிடுவார். அங்கே நான் குறைந்தவன் என ஆனாலும் எனக்கு அது நிறைவே.

இறுதியாக,
இரக்கம் என்பது இறைவனின் பெயர்! இது நம் பெயரானால் இந்த உலகமும், உறவும் இனிக்கும்!

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

செப்டம்பர் 11 என்று சொன்னதும், 2001ம் ஆண்டு, செப்டம்பர் 11ம் தேதி, நியூ யார்க் நகரில், உலக வர்த்தக மையத்தின் இரு அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து விழுந்த காட்சி நினைவுக்கு வரலாம். வர்த்தக உலகின் பெருமைக்குரிய சின்னங்களாக உயர்ந்து நின்ற அவ்விரு கோபுரங்களின் மீது இரு விமானங்கள் மோதிய காட்சியும், ஏறத்தாழ 100 நிமிடங்கள் இரு தீப்பந்தங்களைப்போல் எரிந்த அவ்விரு கோபுரங்களும், ஒன்றன்பின் ஒன்றாக இடிந்து விழுந்த காட்சியும், உலகெங்கும் ஒளிபரப்பப்பட்டு, அதிர்ச்சியை உருவாக்கின. தொடர்ந்து வந்த பல நாட்களில், உலக ஊடகங்கள், இந்நிகழ்வை மீண்டும், மீண்டும், பல கோணங்களில் காட்டி, அடிப்படையான பல கேள்விகளை எழுப்பி, பதில்கள் தேட முயன்றன. நியூ யார்க் நகரம், அமெரிக்க ஐக்கிய நாடு என்ற வட்டங்களைக் கடந்து, நம் அனைவரையும் ஒரு தேடலில் ஈடுபடுத்தியது, இந்நிகழ்வு. மரணம், துன்பம், வன்முறை, நம்பிக்கை என்ற பல கோணங்களில் எழுந்த இத்தேடல்களின் விளைவாக, பல நூறு கட்டுரைகளும், நூல்களும் வெளிவந்தன. இந்த வெளியீடுகளில், 'One' - அதாவது, 'ஒன்று' என்ற தலைப்பில், Cheryl Sawyer என்ற பேராசிரியர் எழுதியிருந்த ஒரு கவிதை, நம் ஞாயிறு சிந்தனைகளை இன்று துவக்கி வைக்கிறது. இக்கவிதையின் ஒரு சில வரிகள் இதோ:

"கரும்புகையும், புழுதியும், சாம்பலும் மழைபோல் இறங்கிவந்தபோது,
நாம் ஒரே நிறத்தவரானோம்.
எரியும் கட்டடத்தின் படிகளில் ஒருவர் ஒருவரைச் சுமந்து இறங்கியபோது,
நாம் ஒரே வகுப்பினரானோம்.
சக்தி வேண்டி, முழந்தாள்படியிட்டபோது,
நாம் ஒரே மதத்தவரானோம்.
இரத்ததானம் வழங்க வரிசையில் நின்றபோது,
நாம் ஒரே உடலானோம்.
இந்தப் பெரும் அழிவை எண்ணி, கூடிவந்து அழுதபோது,
நாம் ஒரே குடும்பமானோம்."

இக்கவிதை வரிகள் கூறும், ஒரே நிறம், ஒரே இனம், ஒரே மதம், ஒரே குடும்பம் என்பதுதானே, நாம் அனைவரும் கனவு காணும் விண்ணகம். இந்த விண்ணகத்தைத் தொலைத்துவிட்டு, அடிக்கடி தேடி வருகிறோமே! ஒரே இறைவனின் மக்கள் என்ற உன்னத உண்மை, நாம் எழுப்பும் பிரிவுச் சுவர்களுக்குப்பின் காணாமல் போய்விடுகிறது. நாம் எழுப்பிய பிரிவுச் சுவர்கள், 2001ம் ஆண்டு, செப்டம்பர் 11ம் தேதி என்ற அந்த ஒரு நாளிலாவது இடிந்து விழுந்ததே என்று எண்ணி, ஒவ்வோர் ஆண்டும், செப்டம்பர் 11ம் தேதியன்று, நாம் நன்றி சொல்லவேண்டும். ஒரு கொடூரமான நிகழ்வு, நம்மை ஒருங்கிணைத்தது என்பதுதான், புதிரான, வேதனையான ஓர் உண்மை. அந்தக் கொடூரத்தின் தாக்கங்கள் குறையக் குறைய, காணாமற்போன பிரிவுச் சுவர்களை மீண்டும் தேடிக் கண்டுபிடித்து, கட்டியெழுப்பி, நம்மையே சிறைப்படுத்திக் கொண்டோம். மத வெறி, நிற வெறி, சாதிய வெறி, என்ற சுவர்கள் உயர, உயர, மனிதத்தன்மை காணாமற்போகிறது என்பது, கசப்பான உண்மை.

காணாமல் போவதையும், கண்டுபிடிப்பதையும் எண்ணிப்பார்க்க, இந்த ஞாயிறு வழிபாடு நம்மை அழைக்கிறது. இயேசு கூறிய உவமைகளில், உலகப் புகழ்பெற்ற உவமையான 'காணாமற்போன மகன் உவமை', இந்த அழைப்பை விடுக்கிறது. இந்த உவமைக்கு முன்னதாக, 'காணாமற்போன ஆடு' மற்றும் 'காணாமற்போன காசு' என்ற இரு உவமைகளையும் ஒரு முன்னுரைபோல் தருகிறார், இயேசு. மூன்று உவமைகளிலும், காணாமற்போவதும், கண்டுபிடிப்பதும் நிகழ்கின்றன. ஆடு, காசு இரண்டும் காணாமல் போகின்றன. அவற்றைக் கண்டுபிடிப்பதோ, அவற்றின் உரிமையாளர்கள். ஆனால், காணாமற்போகும் மகனோ, பன்றிகள் நடுவே, பசியால் துடித்தபோது, தன்னை முதலில் கண்டுபிடிக்கிறார். பின்னர், தன் தந்தையின் இல்லம் திரும்பிவந்து, புது வாழ்வையும் கண்டுபிடிக்கிறார். வீட்டைவிட்டு வெளியேறியதால், காணாமல்போய், மீண்டும் தன்னையே கண்டுபிடித்த இளைய மகனையும், வீட்டைவிட்டு வெளியேறாமல், வீட்டுக்குள்ளேயே காணாமல் போன மூத்த மகனைப் பற்றியும் சிந்திப்போம்.

முதலில், ‘காணாமல் போவது’ என்றால் என்ன என்பதை அறிய முயல்வோம். ஆன்மீக எண்ணங்களை எழுதுவதில் புகழ்பெற்ற Ron Rolheiser, OMI என்ற ஓர் அருள்பணியாளர், இந்த உவமையைப் பற்றி எழுதும்போது, காணாமல் போவது பற்றி கொஞ்சம் விரிவாகச் சிந்தித்துள்ளார். தன் வாழ்வில், 14வது வயதில் நடந்தவற்றை இவ்வாறு கூறியுள்ளார்:

“எனக்கு 14 வயதானபோது, கோடை விடுமுறையில் நடந்த சில நிகழ்வுகளால் என் உலகம் நொறுங்கிப்போனது. நல்ல உடல் நலமும், அழகும் நிறைந்த, 20 வயதுள்ள ஓர் இளைஞர், என் வீட்டுக்கருகே வாழ்ந்தார். அவரைப் பார்க்கும்போதெல்லாம், பிற்காலத்தில் நானும் அவரைப்போல் இருக்கவேண்டும் என்று நினைப்பேன். அந்த விடுமுறையில் ஒருநாள், அவர் தூக்கில் தொங்கி இறந்தார். அதே விடுமுறையில், என் நண்பர்களில் ஒருவர், வேலை செய்யும் இடத்தில், ஒரு விபத்தில் இறந்தார். வேறொரு நண்பர், குதிரை சவாரி பழகும்போது, தூக்கி எறியப்பட்டு, கழுத்து முறிந்து இறந்தார். இந்த மரணங்கள் எல்லாம், ஒன்றன்பின் ஒன்றாக, ஒரு மாதத்திற்குள் நடந்தன. இவர்களது அடக்கச் சடங்கில் நான் பீடச் சிறுவனாய் உதவி செய்தேன்.

வெளிப்படையாக, என் உலகம் மாறாததுபோல் நான் காட்டிக்கொண்டாலும், என் உள் உலகம் சுக்குநூறாய் சிதறிப்போனது. இருள் என்னைக் கடித்துக் குதறியது. உலகிலேயே என்னைவிட சோகமான, பரிதாபமான, 14 வயது இளைஞன் ஒருவன் இருக்கமுடியாது என்ற முடிவுக்கு வந்தேன்.”

அருள்பணி Rolheiser அவர்கள், தன் சோகமான முடிவிலேயே தங்கியிருந்திருந்தால், அவரது வாழ்வு திசைமாறி போயிருக்கலாம். அவர் முற்றிலும் காணாமற் போயிருக்கலாம். ஆனால், அவ்வேளையில் அவருக்கு வந்த ஓர் உள்ளொளியைப் பற்றி அவர் இவ்விதம் விவரித்துள்ளார்: “இந்த சோகம் என் உள்ளத்தை ஆக்கிரமித்த அதே வேளையில், மற்றொன்றும் என் உள்ளத்தில் மெதுவாக, சப்தமில்லாமல் நுழைந்தது. அதுதான் விசுவாசம். வாழ்க்கையை வேறொரு கோணத்தில் பார்க்கவும், எனக்குள் மண்டிக்கிடந்த குறைகளோடு என்னையே நான் ஏற்றுக்கொள்ளவும், அந்த விசுவாசம் எனக்கு உதவியது. நான் இன்று ஒரு குருவாக இருப்பதற்கு, அந்தக் கோடை விடுமுறை பெரிதும் உதவியது. சூழ்ந்த இருளில், என்னைக் காணாமல் போகச்செய்த அந்தக் கோடை விடுமுறைதான் என்னை அதிகம் வளரச் செய்தது.” தனது 14வது வயதில் நடந்தவற்றை இவ்வாறு கூறும் Ron Rolheiser அவர்கள், தொடர்ந்து, Christina Crawford என்பவர் எழுதியுள்ள 'Mummy Dearest', 'Survivor' என்ற இரு நூல்களைப் பற்றிக் கூறுகிறார். Christina அவர்கள், ஒரு வீட்டில் வளர்ப்புப் பிள்ளையாக வாழ்ந்தவர். அந்த வீட்டில் அவர் அடைந்த துன்பங்களையெல்லாம் இந்நூல்களில் விளக்குகிறார். அவர் வாழ்வில் இருள் மட்டுமே சூழ்ந்திருந்த காலங்களைப்பற்றி அவர் எழுதும்போது, "அந்த நாட்களில் நான் முற்றிலும் காணாமல் போயிருந்தேன்" என்று எழுதிவிட்டு, உடனே, "காணாமல் போவதும் ஒரு வகை கண்டுபிடிப்புதான்" என்றும் குறிப்பிடுகிறார்.

ஆம், காணாமல் போவதில் பல உண்மைகளைக் கண்டுபிடிக்கலாம். முற்றிலும் காணாமல்போகும், நிலைகள் முடிவுகள் அல்ல. அந்த இருள், புதிய வழிகளை, புதிய ஒளியை உருவாக்கும். ஆன்மீக ஒளி பெற, முற்றிலும் காணாமல் போவதும் உதவி செய்யும். இதற்கு புனித அன்னை தெரேசா ஓர் எடுத்துக்காட்டு.

செப்டம்பர் 4, சென்ற ஞாயிறன்று, அன்னை தெரேசாவை புனிதராக உயர்த்தி மகிழ்ந்தோம். பெருமைப்பட்டோம். இந்த அன்னையைப் புகழாத நாடு இல்லை, மதம் இல்லை, மொழி இல்லை... அவ்வளவு உயர்ந்ததோர் இடத்தை, இந்தப் புனிதர், மனித மனங்களில் பெற்றுள்ளார். காணாமல் போவதைச் சிந்திக்க, அன்னை தெரேசாவின் வாழ்க்கை நமக்கு உதவியாக இருக்கும். காணாமல் போவதையும், இப்புனிதரின் வாழ்வையும் இணைத்து நான் பேசுவது ஆச்சரியமாக இருக்கலாம். எனினும் அந்தப் புதிரைப் புரிந்து கொள்ள முயல்வோம்.

அன்னை தெரேசா அவர்கள் புனிதர் பட்டம் பெறுவதற்குத் தேவையான வழிமுறைகளை ஒருங்கிணைத்துவந்த அருள்பணி Brian Kolodiejchuk என்பவர், 2007ம் ஆண்டு, "Mother Teresa - Come Be My Light" என்ற நூலை வெளியிட்டார். அன்னை தெரேசா அவர்கள், தனிப்பட்ட வகையில் எழுதிவைத்திருந்த எண்ணங்கள், இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. தன் வாழ்வின் ஐம்பது ஆண்டுகள், அந்த அன்னையின் மனதில் எழுந்த சந்தேகங்கள், கலக்கங்கள், போராட்டங்கள் ஆகியவை இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாண்டு, அவர் புனிதராக உயர்த்தப்படுவதற்கு முன்னர், ஆகஸ்ட் 16ம் தேதி வெளியான மற்றொரு நூலிலும், அன்னையின் உள்மனப் போராட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. “A Call to Mercy: Hearts to Love, Hands to Serve” என்ற தலைப்பில் வெளியான இந்நூலில், அன்னை அவர்கள், தன் ஆன்மீக வழிகாட்டிக்கு எழுதிய ஒரு மடலில் நாம் காணும் வரிகள் இதோ: "அனைவராலும் கைவிடப்பட்டு, தன் துன்பங்களோடு மட்டுமே வாழும் ஏழையின் நிலை, ஆன்மீக வாழ்வில் நான் உணரும் கைவிடப்பட்ட நிலையின் உண்மையான பிரதிபலிப்பு."

பலரும் செய்யத்தயங்கும் ஒரு பணியை, ஆழ்ந்த அன்புடன், நாள் தவறாமல் செய்து வந்த அந்த அன்னைக்கு இப்படி ஒரு நிலையா? அதுவும், அவர் அப்பணிகளைச் செய்து வந்த காலத்தில், இப்படி ஒரு நிலையா? அவர் வாழ்ந்த 87 ஆண்டுகளில், 50 ஆண்டுகள் இது போன்ற போராட்டங்களில் கழிந்தனவா? அன்னை தெரேசா அவர்களின் உள்மனப் பதிவுகளை வாசிக்கும்போது, இத்தகையக் கேள்விகள் நம்மைத் துளைக்கின்றன.

ஆனால், நிதானமாய், ஆழமாய்ச் சிந்தித்தால், அன்னை தெரேசா போன்ற உன்னத உள்ளங்களால் மட்டுமே இத்தனை நீண்டகாலம், இவ்வளவு ஆழமான துன்பங்கள், கலக்கங்கள், இருள் நிறை நாட்கள் இவற்றைச் சமாளித்திருக்க முடியும் என்பது விளங்கும். அதிலும் சிறப்பாக, அன்னை தெரேசா அவர்கள் செய்துவந்த பணியில், நம்பிக்கையைக் குலைக்கும் வண்ணம் நிகழ்ந்த துன்பங்களையே, ஒவ்வொரு நாளும், மீண்டும், மீண்டும் அவர் சந்தித்ததால், அவர் மனதிலும் இருள், பயம், கேள்விகள், குழப்பங்கள் இவைச் சூழ்ந்தது இயற்கைதானே.

கேள்விகளும் குழப்பங்களும் இல்லாமல், எவ்வித சலனமுமில்லாமல் அவர் வாழ்க்கை ஓடியிருந்தால், அவர், உணர்வுகளற்ற ஓர் இயந்திரமாய் இயங்கியிருக்க வேண்டும். தன்னைச்சுற்றி நிகழ்வனவற்றால் சிறிதும் பாதிக்கப்படாமல், தன் உலகத்திற்குள்ளேயே வாழும் பலருக்கு, காணாமற்போகும் வாய்ப்புக்கள் இருக்காது. அவ்வாறு காணாமல் போகாமல், பாதுகாப்பாக வாழ்பவர்கள், பல உண்மைகளை தொலைத்து விட வாய்ப்புண்டு. இந்நிலையில் வாழ்ந்தவர், இன்றைய உவமையில் நாம் சந்திக்கும் மூத்த மகன்.

Timothy Keller என்பவர் எழுதிய 'The Prodigal God' என்ற நூலில், இரு மகன்களும் மேற்கொண்ட வாழ்வுப் பயணத்தை ஒப்பிடுகிறார். இளைய மகன் தன்னையே கண்டுகொள்ள வேண்டும் என்ற தேடலில், தந்தையின் கட்டுப்பாட்டைவிட்டு விலகிச் செல்கிறார். பலரது மனங்களைப் புண்படுத்துகிறார். தான் தேர்ந்துகொண்ட தேடல் பாதை தவறானது என்பதை உணர்ந்ததும், தாழ்ச்சியுடன் தந்தையைத் தேடி வருகிறார். தந்தையின் உறவில்தான் தன் மீட்பு உண்டு என உணர்கிறார்.

மூத்தவரோ, தன் சொந்த முயற்சியால் மீட்படைய முடியும் என்ற உறுதியில், தந்தைக்கும், அனைவருக்கும் ஏற்றவராக வாழ்கிறார். ஆனால், தன் வாழ்வுக்கு உரிய வெகுமதிகளை தந்தை வழங்கியிருக்கவேண்டும் என்ற கணக்குடன் வாழ்ந்து வருகிறார். அவர் போட்டுவைத்த கணக்கு தவறாகிப் போனது என்று அறிந்ததும், அவரது குணம் தலைகீழாக மாறுகிறது. அதுவரை அவர் அணிந்து வாழ்ந்த முகமூடிகள் வீழ்ந்தால், அவர் வெறுப்பில் காணாமல் போகிறார். வீட்டுக்குள் அவர் பாதுகாப்பாக வாழ்ந்தாலும், அவர் தனக்குள் வளர்த்துக்கொண்ட சுயநலக் காட்டில் அவரே தொலைந்துபோகிறார்.

நாம் எல்லாருமே வாழ்வில் காணாமல் போயிருக்கிறோம். அறியாத, புரியாதச் சூழல்களில் திகைத்து நின்றிருக்கிறோம். ‘கண்ணைக்கட்டி காட்டில் விட்டதைப்போல்’ உணர்ந்திருக்கிறோம். அந்நேரங்களில், அந்த இருளுக்குள் தங்களையேப் புதைத்துக் கொள்வோர் பலர் உண்டு. ஒரு சிலர், தங்கள் உள் உலகம் இருள் சூழ்ந்ததாய் இருந்தாலும், வெளி உலகை ஒளி மயமாக்கினர், புனித அன்னை தெரேசாவைப் போல்.

பன்றிகள் நடுவே, பசியில் மயங்கியிருந்த இளைய மகன், பன்றிகளுடன் தன்னையே புதைத்துக் கொள்ளாமல், அவையே இனி தன் வாழ்வு என்ற விரக்தியான எண்ணங்களால் ஒரு பாலைநிலத்தை உருவாக்கி, அங்கு காணாமற் போய்விடாமல், "நான் புறப்பட்டு என் தந்தையிடம் போவேன்" என்று எழுந்தாரே, அதுதான் அழகு.

காணாமல் போவதும் ஒரு வகையில் பார்க்கப்போனால் அழகுதான். அப்படி காணாமல் போகும்போது, அதுவரை, வாழ்வில் காணாமல் போயிருந்த பல உண்மைகளையும், விசுவாச உணர்வுகளையும் நம்மால் மீண்டும் கண்டுபிடிக்கமுடியும். இறைவனை நோக்கி, எழுந்து நடப்போம். மீண்டும் நம்மையும், நம் இறைவனையும் கண்டுபிடிப்போம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

அன்பு நம் வாழ்வின் தலைச்சிறந்த பண்பு

நான் ஒரு முறை ஒரு குடும்பத்தை சந்திக்கச் சென்றேன். அங்கே வயதான பாட்டி ஒருவர் இருந்தார். அவருக்கு மூன்று மகன்கள். வயதான பாட்டி ஒரு காலத்தில் அரசு ஆசிரியராக பணி செய்தவர். திருமணமான பத்தாவது ஆண்டில் தன் கணவரை இழந்தார். மகன்களை சிறப்பாகப் படிக்க வைத்தார். நல்ல நிலைக்கு உயர உழைத்தார்.எல்லா மகன்களுக்கும் திருமணத்தை முடித்து வைத்தார். திருமணமான சிறிது காலத்தில் ஒவ்வொருவரும் நகர்ப்புறத்தில் குடியேறத் தொடங்கினர். தங்கள் படிப்பிற்கேற்ற நல்ல வேலையைப் பெற்றனர். ஆனால் தங்கள் குடும்பத்தைமட்டும் அதிகமாக அன்பு செலுத்த ஆரம்பித்தனர்.தன்னை பெற்று வளர்த்து ஆளாக்கிய தாயை அடிக்கடி சந்தித்து பேசக்கூடிய வழக்கத்தை விட்டனர். எந்தவொரு பொருளாதார உதவியும் செய்யாமல் கண்டுகொள்ளாமல் இருந்தனர். அந்த பாட்டி என்னிடம் பகிர்ந்து கொண்ட போது கண்ணீர் விட்டு அழுதார். இருந்தபோதிலும் அந்த பாட்டி "எனக்கு எதுவும் செய்யவில்லை என்றாலும் என் மகன்கள் மூவரும் அவர்களின் குடும்பத்தோடு எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அது மட்டும் எனக்கு போதும் "என்று கூறினார். இதைக் கேட்டதும் அன்பு மட்டுமே உலகில் மிக உயர்ந்த பண்பு என்பதை என்னால் உணர முடிந்தது.

இன்றைய நற்செய்தியில் நாம் மூன்று உவமைகளைக் காண்கிறோம். முதலாவதாக காணமற்போன ஆட்டைத் தேடிய ஆயன் குறிப்பிடப்பட்டுள்ளார். ஐந்தறிவு கொண்ட ஆடு, நன்மை எது தீமை எது என்பதை உணர இயலாத நிலையில் வழிதவறிச் சென்றது.அதைத் தேடிச் சென்று ஆயன் மீட்டார். இச்செயல் ஆயனுக்கு தன் மந்தையில் உள்ள ஒவ்வொரு ஆடும் முக்கியம் ,எல்லாவற்றையும் அவர் அன்பு செய்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

இரண்டாவதாக காணமற்போன நாணயத்தைத் தேடும் பெண். இவர் தன் உழைப்பால் சேர்த்து வைத்த அந்நாணயத்தை பெரிதும் மதித்தார். எனவே அதை இழக்க விரும்பாமல் அதைத் தேடிக் கண்டடைந்தார்.ஆனந்தம் கொண்டார்.

ஆனால் மூன்றாவதாகக் காணும் ஊதாரி மைந்தனின் உவமை சற்று வித்தியாசமானது. ஆறறிவு படைத்த மனிதன். நன்மை எது தீமை எது என நன்கு உணர்ந்திருந்த போதும் தன்னை வளர்த்து ஆளாக்கிய தந்தையின் மகிழ்ச்சியைக் கருதாமல் தன்னுடைய சொந்த விருப்பங்களுக்கும் இச்சைகளுக்கும் அடிமையாகி தந்தை மீது கொண்டுள்ள பாசத்தையும் சொத்தையும் அழித்தான் மகன்.அப்படிப்பட்ட மகனையும் தேடிச் செல்கிறார். அவன் வருகைக்காகக் காத்திருக்கிறார் தந்தை. அவரால் இது எப்படி முடிந்தது. அது அன்பால் மட்டுமே. எத்தனைத் தவறு செய்தாலும் தன் மகன் தன் மகனே.இதுதான் தந்தையின் மனநிலை. அவ்வன்பு தந்தை தன் மகனை மன்னிக்கச் செய்தது. மறுவாழ்வு தந்தது. உயர்நிலைக்கு மீண்டும் கொண்டுவந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

நம்முடைய அன்பு எத்தகையது? நிபந்தனையற்றதா ?மன்னிக்கக் கூடியதா? அல்லது போனது போகட்டும் என்று விட்டுவிடக்கூடியதா? சிந்திப்போம்.அன்பு என்ற பண்பை நமதாக்கி தலை சிறந்தவர்களாக வாழ முயற்சிப்போம்.

இறைவேண்டல்
அன்பின் பிறப்பிடமே இறைவா! உமது அன்பு எம்மிலே வாழ்வு பெறவும் அவ்வன்பை எம்மை வெறுப்பவர்களுக்குக்கூட வாரி வழங்கவும் வரமருளும். ஆமென்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
ser