மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக் காலத்தின் 21-ஆம் ஞாயிறு
3-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எசாயா 66:18-21 | எபிரேயர் 12:5-7,11-13 | லூக்கா 13: 22-30

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


எருசலேம் நோக்கி நெடும் பயணம் மேற்கொண்ட இயேசு ஓர் ஊருக்கு வருகின்றார். அப்பொழுது ஒருவர் இயேசுவிடம் கேள்வி ஒன்று கேட்கின்றார்.

"ஆண்டவரே மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?" இக்கேள்விக்கு இயேசு நேரடியாகப் பதில் கூறவில்லை. ஓர் எடுத்துக்காட்டின் மூலம் பதில் தருகின்றார். இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும் (லூக். 13:24) என்கிறார்.

மீட்புப் பெறுவது அதாவது வாழ்வின் இறுதியில் வான் வீடு அடைவது இதுதான் நமது இலக்கு. இது சாத்தியமா? ஆம் என்கிறார் இயேசு. ஆனால் கடினம். முயற்சி செய்ய வேண்டும் என அறிவுரை கூறுகின்றார்.

கிறிஸ்துவன் என்ற காரணத்தினால் அதாவது திருமுழுக்குப் பெற்றுவிட்டேன் என்ற காரணத்தினால் மோட்சம் எனக்கு நிச்சயம் என்று இல்லை. மோட்சம் அடைய நான் முயற்சி செய்ய வேண்டும். அதுவும் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும் என்பது ஆண்டவரின் எச்சரிக்கை. எனவே உழைக்க வேண்டும். தோல்வி ஏற்பட்டாலும் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். இதோ சில வழிமுறைகள்.

முதல் பாடம்: வாழ்வு பெற வேண்டும் என்ற ஆசை இருக்க வேண்டும். அடைந்தே தீருவேன் என்ற நம்பிக்கை வேண்டும். நம்மிடம் உள்ள தேவையில்லாதவற்றைக் கழிக்கவும். தேவையானவற்றைக் கூட்டவும் தெளிவு வேண்டும். என்னிடம் நீக்கப்பட வேண்டியது எதுவுமில்லை என்று என் நாக்கு சொல்லலாம். மனம் சொல்லுமா? மனச்சாட்சி சொல்லுமா? நீக்கப்பட வேண்டியவை எத்தனை என்னிடம் உள்ளன என்பது என் மனதுக்குத் தெரியாதா என்ன? மனச்சாட்சிக்கு உண்மையுள்ளவர்களாக நடக்க முயல்வது நாம் கற்கவேண்டிய முதல் பாடம்.

இரண்டாவது பாடம்: புறம் பேசுவதைத் தவிர்ப்பது. நேரில் ஒன்றும், பின்னால் ஒன்றும் பேசும் பழக்கம் நம்மிடம் ஒரு பிணியாகவே உள்ளது எனலாம். இதைப் பற்றி புனித அல்போன்ஸ் லிகோரியார்
கூறும்போது, புறம்பேசுவது என்பது ஒரு பேய். வீட்டிற்கு ஒரு பேய் என்றால் மடத்திற்கு ஓட்டுக்கு ஒரு பேய் என்கிறார். உண்மையைத் திரித்துக் கூறுவதும், சுயநலக் கண்ணோட்டத்தில் பிறரின்
எச்செயலையும் பார்ப்பதும், வதந்திகளைப் பரப்புவதும் தவிர்க்கப்பட வேண்டும். வேண்டுமென்றே ஒருவரின் பெயரைக் கெடுப்பதாலும் அவதூறு பேசுவதாலும் எழுதுவதாலும் நாம் சாதிக்கக் கூடியது என்ன? வாள் எடுத்தவன் வாளால் மடிவான். வினை விதைத்தவன் வினையை அறுப்பான். பூமராங் (Boomarang) போன்று அது நம்மையே பாதிக்கும்.

மூன்றாவது பாடம்: நல்லவர்களை மதிக்கவும் அல்லாதவர்களை ஒதுக்கவும் மனதில் உறுதிகொள்ள வேண்டும். பொதுவாக நாம் யாரிடம் அச்சம் கொள்கிறோமோ அவர்களுக்கே விசுவாசமாக இருக்கிறோம். யாரை நல்லவர் என்று கருதுகிறோமோ அவர்களுக்குத் துரோகம் செய்கிறோம். முன்னதற்குக் காரணம் பயம். இரண்டாவதற்கு, அவர் ஒன்றும் சொல்லமாட்டார் என்கிற நம் சுயநலம். இதை மாற்றாவிட்டால் நாம் வாழ்வு பெறுவது சிரமம்.

குன்றின் மேல் நின்று பார்ப்பதற்கும், குன்றின் அடியில் இருந்து பார்ப்பதற்கும் வேறுபாடு உள்ளது. முந்தையது பரந்த பார்வை. பிந்தியது குறுகிய பார்வை. குன்றின் கீழே இருப்பவர் குன்றின் மேலே இருப்பவரின் பார்வை சரியில்லை, நான் பார்ப்பதுதான் சரி என்று சொல்ல முடியுமா? உயர்ந்த எண்ணம், நிறைந்த அனுபவம், வயது, ஞானம் என பரந்த சிந்தனையாளர்களைப் போற்றவும் மதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். நமது குறுகிய பார்வையால் அவர்களை எடைபோடுவது தவிர்க்கப்பட வேண்டும்.

நான்காவது பாடம்: முதல் பாடத்தை ஒத்தது. கடவுள் பயம், நம் செயல், சொல் அனைத்தையும் கடவுள் கவனிக்கின்றார் என்ற எண்ணம், மறைவாய் உள்ளதையும் கடவுள் காண்கின்றார் என்ற உணர்வு நம்மை வாழ வைக்கும் என்பதை மறத்தலாகாது.

இப்பாடங்களைப் பின்பற்றுவது கடினம்தான். ஆனால் முடியாதது அல்ல. முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

யாருக்கு விண்ணகம் சொந்தம் ?

மீட்பு, இரட்சண்யம், இறைவனின் பராமரிப்பு, இறைவனின் நிறையாசி. இறைவனின் நிறையருள் ஆகியவை ஒரு குறிப்பிட்ட இனத்தாருக்கு மட்டும் சொந்தமானவை அல்ல ; அவை எல்லாருக்கும் சொந்தமானவை என்பதை இயேசு இன்றைய நற்செய்தியிலே தெளிவாக்குகின்றார்!

வெள்ளை மனிதர்கள் அதிகம் வாழும் ஒரு பகுதி! அந்தப் பகுதியிலே கோயில் திருவிழா! அப்போது பலூன் விற்கும் வியாபாரி ஒருவர் பல வண்ணங்கள் நிறைந்த பலூன்களை வானத்திலே பறக்கவிட்டு, குழந்தைகளின் மனத்திலே ஆசையை மூட்டிக்கொண்டிருந்தார்! அப்போது கருப்பு நிறக் குழந்தை ஒன்று அவரிடம் சென்று, எல்லா கலர் பலூன்களும் பறக்கின்றன! கருப்புப் பலூனைக் காணோம்! கருப்புப் பலூன் மேலே பறக்குமா? என்று கேட்டது. அதற்கு அந்த வியாபாரி அந்தக் குழந்தையை அன்போடு பார்த்து, நிச்சயமாகக் கருப்புக் கலர் பலூனும் பறக்கும்! கலர் முக்கியமல்ல, அந்தப் பலூனுக்குள்ளிருக்கும் காற்றுதான் முக்கியம் என்றார்.

ஆம். மனிதர்களுடைய நிறம், இனம், நாடு, மொழி, பணம், பதவி, பட்டம், அழகு, அந்தஸ்து, மதிப்பு, மரியாதை ஆகியவை முக்கியமல்ல. கடவுளுடைய மீட்பைப் பெற அவரவருடைய வாழ்க்கையே முக்கியமாகும்!

இறைவன். இறைவாக்கினர் எசாயா வழியாக இன்றைய முதல் வாசகத்தில், பிற இனத்தார், பிற மொழியினர் அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வருவேன் : அவர்களும் கூடிவந்து என் மாட்சியைக் காண்பார்கள் [எசா 66:18) என்கின்றார்.

நல்வாழ்வு வாழ, அதாவது குறுகிய வழியைத் தேர்ந்தெடுத்து, இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுபவர்கள் (லூக் 13:24ஆ) அனைவர்க்கும் கடவுளின் ஆசி உண்டு ; இறைவனின் மீட்பு 82 உண்டு. குறுகிய வழி எப்படிப்பட்டது என்பதை அறிந்துகொள்ள எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம் நமக்கு உதவிபுரிகின்றது. குறுகிய வழியில் நடக்க விரும்புகின்றவர் ஒரு சில வழிமுறைகளைக் கையாள முன்வர வேண்டும்.

 1. கடவுள் நம்மைக் கண்டித்துத் திருத்தும்போது நாம் தளர்ந்துபோகக் கூடாது. காரணம் ஆண்டவர் யாரிடம் அன்பு கொண்டிருக்கின்றாரோ அவர்களைக் கண்டிக்கின்றார் (எபி 12:5-6).
 2. திருத்தப்படுவதற்காகத் துன்பங்களைத் தாங்கிக்கொள்ள வேண்டும் (எபி 12:7).
 3. திருத்தம் ஆரம்பத்தில் நமக்குத் துயரம் தந்தாலும் முடிவில் அமைதியையும், நேர்மையான வாழ்வையும் அளிக்கும் என்று நம்ப வேண்டும் (எபி 12:11).
 4. தளர்ந்து போன கைகளைத் திடப்படுத்த வேண்டும் (எபி 12:12அ).
 5. தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்த வேண்டும் (எபி 12:12ஆ).
 6. நேர்மையான பாதையில் நாம் நடந்து செல்ல வேண்டும் (எபி 12:13).

மேற்கூறப்பட்ட 6 பாடங்களையும் கசடறக் கற்று, கற்றபடி நின்று, ஊனமில்லா உண்மை வாழ்வு வாழ்ந்து வளமுடன் இம்மையையும், மறுமையையும் பெற்று, இறைவனால் மீட்கப்பட்டவர்களாய் நாம் வாழ இன்றைய இறைவாக்கு நமக்கு அருள்புரியட்டும்!

மேலும் அறிவோம் :

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக (குறள் 391).

பொருள்: ஒழுக்கத்தையும், பண்பாட்டையும் உருவாக்கும் நூல்களைத் தன் குறைகள் நீங்கும் வண்ணம் ஒருவர் விரும்பிக் கற்க வேண்டும். கற்றால் அதற்கு ஏற்றவாறு அவற்றை வாழ்வில் கடைப்பிடித்து நடக்க வேண்டும்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

அமெரிக்காவில் வெள்ளைநிறக் குழந்தைகள் சிகப்புநிற பச்சைநிற, ஊதாநிறப் பலூன்களைப் பறக்கவிட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்துக் கொண்டிருந்த கறுப்புநிற நீக்ரோ குழந்தைகள் வெள்ளை நிறக் குழந்தைகளைப் பார்த்து, "கறுப்புநிறப் பலூன்கள் மேலே பறக்குமா?" என்று கேட்டனர். அதற்கு வெள்ளைநிறக் குழந்தைகள் கூறினர்: "நிச்சயமாகப் பறக்கும்; ஏனெனில் பறப்பது வெள்ளைநிறமோ, பச்சைநிறமோ, கறுப்புநிறமோ இல்லை;மாறாக, பலூன்களில் உள்ள காற்றுதான்  பலூன்களை உயரப் பறக்கச் செய்கின்றது."

அவ்வாறே, மனிதர்களை விண்ணகத்துக்குக் கொண்டு செல்வது அவர்களது மதங்கள் அல்ல; மாறாக, கடவுள்மீது அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும், அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும் மனநிலையுமாகும். இவ்வுண்மையை பேதுரு பின்வருமாறு தெளிவாகக் கூறியுள்ளார்: "கடவுள் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை... எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர்" (திப 10:34).

இன்றைய நற்செய்தியில் இயேசுவிடம் ஒருவர் கேட்கிறார்: "ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?" இக்கேள்வியைக் கேட்டவர். ஒருசிலர்தான் மீட்படைவர் என்ற குறுகிய மனநிலையைக் கொண்டவர் என்பது தெளிவு. யூத இனத்தார் மட்டுமேமீட்புப்பெறுவர். பிற இனத்தவர் மீட்படையமாட்டார்கள் என்ற எண்ணம் யூதர்களுடைய மனத்தில் ஆழமாக வேரூன்றியிருந்தது. ஆனால் இக்கருத்துக்கு நேர்மாறாக இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் கூறுகிறார்: "பிற இனத்தார், பிற மொழியினர் அனைவரையும் கூட்டிச் சேர்க்க வருவேன்; அவர்களும் கூடிவந்து என் மாட்சியைக் காண்பார்கள்" (லூக் 13:28-30).

ஒரு பங்குத்தந்தை மறைக்கல்வி வகுப்பில் மாணவர்களிடம், "நரகத்திற்குப் போகிறவர்கள் கையை உயர்த்துங்கள்" என்றுகேட்டபோது, ஒரு மாணவன் மட்டும் கையை உயர்த்தினான். பங்குத்தந்தை அவனிடம், "ஏண்டா நீ ஒருவன் மட்டும் நரகத்துக்குப்போக விரும்புகிறாய்? " என்று கேட்டதற்கு அவன் கூறிய பதில்: "சாமி! நீங்கத் தனியாகப் போக வேண்டாம்; உங்களுக்குத் துணையாக நானும் வருகின்றேன்." ஆம், சாதாரண மக்கள் விண்ணகம் செல்ல, பங்குத்தந்தை நரகத்துக்குச் செல்லலாம். மற்ற மதத்தினர் விண்ணகம் செல்ல, கிறிஸ்தவர்கள் நரகத்துக்குச் செல்லலாம். புனித அகுஸ்தினை மேற்கோள் காட்டி இரண்டாம் வத்திக்கான் சங்கம் பின்வருமாறு கூறுகிறது; "திருச்சபையில் இணைந்திருந்தும் அன்பில் நிலைத்திராது, உள்ளத்தாலன்றி, உடலால் மட்டுமே அதன் மடியில் தவழ்கின்றவர்கள் மீட்புப் பெறுவதில்லை" (திருச்சபை, எண் 14). திருமுழுக்குப் பெற்றவர்கள் அன்புவாழ்வு வாழவில்லை என்றால், அவர்கள் பெயரளவில் மட்டுமே கிறிஸ்தவர்கள்: உண்மைக் கிறிஸ்தவர்கள் அல்ல; அத்தகையவர் மீட்படைவதில்லை.

மீட்பு என்பது கடவுளின் கொடை, ஆனால் அதே நேரத்தில் மீட்படைய உழைக்க வேண்டும். திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "அச்சத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் மீட்புக்காக உழைத்து வாருங்கள்" (பிலி 2:12). "உன்னையன்றி உன்னைப் படைத்த கடவுள் உன்னையன்றி உன்னை மீட்கமாட்டார்" (புனிதஅகுஸ்தின்). மீட்படைய நாம் என்ன செய்ய வேண்டும்? 'இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்திச் செல்ல முயலுங்கள்" (லூக் 13:24) என்கிறார் கிறிஸ்து. இடுக்கமான வழி இயேசு சென்ற வழி, அதுதான் சிலுவையின் வழி, 'என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" (மத் 16:24).

இன்றைய இரண்டாம் வாசகம் கூறுகிறது: "ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார் "(எபி12:6). எனவே, துன்பத்தைச் சாபமாகக் கருதாமல் கடவுளின் ஆசீர்வாதமாகக் கருத வேண்டும். கடவுள் நம்முடைய இம்மைநலன்களில் மட்டுமல்ல, மறுமை நலன்களிலும் அக்கறை கொண்டவர். எனவேதான் நிலையற்ற இவ்வுலக இன்பங்களைப் பற்றிக்கொண்டு நிலையான விண்ணக வாழ்வை நாம் இழந்து விடாமல் இருக்க, துன்பங்கள் வழியாக நம்மைத் தூய்மைப்படுத்தி விண்ணக வாழ்வுக்குத் தகுதியுள்ளவர்களாக மாற்றுகின்றார்.

"காசு இருந்தால் ஆசைப்பட்ட எல்லாத்தையும் வாங்கலாம், ஆனால் அம்மாவை வாங்கமுடியுமா? " என்று திரைப்படக் கவிஞர் கேட்கிறார். ஆனால் இயேசுவோ, "காசு இருந்தால் ஆசைப்பட்ட எல்லாத்தையும் வாங்கலாம், ஆனால் ஆன்மாவை வாங்கமுடியுமா? என்று கேட்கிறார். "மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கெண்டாலும் தம் வாழ்வையே (ஆன்மாவை) இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக்கொடுப்பார்? (மத் 16:26). "மனம் மாறாவிட்டால் (தவம் செய்யாவிட்டால்) எச்சரிக்கின்றார் கிறிஸ்து. தவம் என்பது என்ன? காட்டுக்குச் சென்று அனைவரும் அழிவீர்கள்" (லூக் 13:3) என தவம் செய்வது தவம் இல்லை. மாறாக, ஒருவர் தமக்கு வரும் துன்பங்களைத் தாங்கிக்கொள்வதும் மற்றவர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும்தான் தவம் என்கிறார் வள்ளுவர்.

உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண்செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு (குறள் 261)

நமக்கு வரும் துன்பங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும். சிலவேளைகளில் சில துன்பங்கள் நம் உடலில் தைத்த முள்ளைப் போன்று வருத்தலாம்; நாம் செருக்குறாதபடியும் கடவுளின் அருளில் நம்பிக்கை வைக்கும்படியும் கடவுள் அத்துன்பங்களை அனுமதிக்கிறார் என்பதைப் பவுல் அடிகளார் போன்று புரிந்துகொள்ள வேண்டும். மேலும் பிறர்க்கு நாம் முற்பகல் தீமை செய்தால், பிற்பகல் அதே தீமை நம்மைத் தாக்காமல் விடாது.

பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் நமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும் (குறள் 319)

எனவே. இடுக்கமான வாயில் வழியில் செல்வோம். தன்னலம் துறந்து பிறர் நலம் பேணுவோம். மீட்படைவோர் எவ்வளவுபேர்? என்று கேட்காது. நாம் மீட்படைவோமா? என்று கேட்போம். நம்மில் நற்செயலைத் தொடங்கிய கடவுள் அதை நிறைவு செய்வாராக (பிலி 1:6).

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

உதட்டு ஊழியமா? வாழ்க்கை சாட்சியமா?

பேராயர் ஃபுல்டன் ஜே. ஷீன் ஆண்டகை சொல்வார்: இறுதிநாளில் வானகத்தில் நமக்கு 3 ஆச்சரியங்கள் காத்திருக்குமாம்:  

 1. நாம் எதிர்பார்த்தவர்கள் விண்ணகத்தில் இருக்க மாட்டார்கள்.
 2. நாம் எதிர்பாராதவர்கள் அங்கே இருப்பார்கள்.
 3. நாமே அங்கே இருப்பது - நமக்கே அங்கே இடம் கிடைத்திருப்பது.  

பட்டிக்காட்டான் யானையைப் பார்ப்பது போல என்பார்களே, அப்படியொரு பாமரன் நரகத்துக்குப் போனார். அங்கும் இங்கும் பார்த்தபடி போன அவருக்கு அதிர்ச்சி. அங்கே அவருடைய ஊர் உபதேசியார் இருந்தார். "ஐயா, நீங்களா இங்கே! நீங்க வாய் திறந்து செபம் சொன்னா மனசெல்லாம் உருகுமே” என்றபோது, “உஸ்... சத்தம் போடாதே, அதோ அங்கே நமது பங்குச் சாமியார்" என்றார் உபதேசியார். பங்குத்தந்தையைப் பார்த்ததும், “சாமி உங்க பக்தி என்ன, உங்க பிரசங்கம் என்ன” என்று உரக்க வியந்தபோது, “உஸ்... கத்தாதே அதோ அங்கே நமது ஆயர்' நன்றார் பங்குக்குரு. இப்படிக் கதை வளர்க்கலாம். யாரும் நரகத்திற்குப் போக நேரும் என்பதுதான் கதைச்சுருக்கம்.
 
 மீட்பு என்பது என்ன? இறையன்பின் அரவணைப்பிலிருந்து விலகிச் சென்ற நாம் மீண்டும் மனம் திருந்தி அந்த அன்பின் அரவணைப்புக்குள் வருவதுதான். அது கடவுளின் கொடை. தானாக வருவதில்லை அது. போராட்டத்தின் பரிசு. அதை அடைய “நீங்கள் அச்சத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் மீட்புக்காக உழைத்து வாருங்கள்" (பிலிப். 2:12).
 
 ஒடுக்கமான வாயில் என்று இயேசு குறிப்பிடுவது சிலுவையின் பாதை, தியாகத்தின் பாதை, பாடுகளின் பாதை, ஊனியல்பை அதன் இழிவான இச்சைகளோடு சிலுவையிலே அறைகின்ற பாதை, இடறலாகஉள்ள கண்ணைப் பிடுங்கி, கையைத் துண்டித்து எறிகின்ற பாதை!

 இப்பாதையில் செல்கின்றவர்களைக் கடவுள் அன்பினால் கண்டித்துத் திருத்துவார். இக்கண்டிப்பு இப்பொழுது நமக்குத் துன்பமாக இருப்பினும் முடிவில்லா நிலை வாழ்வைக் கொடுக்கும் (எபி. 12:5-7, 12). மெழுகு உருகிக் கரையாமல் திரி எரிந்து ஒளிருமா? இயேசு சட்டிக்காட்டுகின்ற வாயில் அவரே பயணம் செய்த பாதை. வாழ்வும் மீட்பும் தரும் பாதை. அது சிலுவைப் பாதை. "இயேசு இரத்தம் சிந்தி நமக்கெனப் புதியதொரு வழியைத் திறந்து வைத்துள்ளார். இதுவே வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் வழி" (எபி. 10:20).

 தேர்ந்தெடுக்கப்பட்ட யூத குலத்தைச் சார்ந்திருந்தாலே இறைவன் தங்களை விண்ணக வாழ்வில் சேர்த்துக் கொள்வார். பிற இனத்தாரையோ புறம்பே தள்ளி விடுவார் என்று நம்பியவர்கள் யுதர்கள்.  
 
 நிலை வாழ்வடைய இறைவன் அனைத்துலக மக்களையும் அழைக்கின்றார் (எசா. 66:18). மீட்பு அடைவதும் அடையாததும் அவரவர் தேர்ந்து கொண்ட வழியையும் வாயிலையும் பொருத்தது. அந்த வழி அகன்றதா குறுகலானதா என்பதைப் பொருத்தது.  
 
 இறையரசில் நுழையத் தடைகளில் ஒன்று "வெறும் உதட்டு ஊழியம்”. “என்னை நோக்கி ஆண்டவரே என்று சொல்பவரேல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை... அவர்களிடம் உங்களை எனக்குத் தெரியவே தெரியாது என்று வெளிப்படையாக அறிவிப்பேன்” (மத். 7:21- 23). பத்துத் தோழியர் உவமையில் மணமகன் சொன்னதும் இங்கே நினைவு கூறத்தக்கது (மத். 25:12).  
 
 இன்னொரு தடை "ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை” (மத். 3:9) என்ற இஸ்ரயேல் மக்களின் இறுமாப்பு. இன்றுகூட நாங்கள் தோமையாரின் கிறிஸ்தவர்கள், சவேரியாரின் கிறிஸ்தவர்கள் என்று மரபு சார்ந்த வறட்டு பெருமிதத்தில் மிதந்து கொண்டிருப்பவர்கள் பலர். ஆனால் இந்த உணர்வுகளெல்லாம் 'காலியான பெருங்காய டப்பா’ கதையாக முகந்து முகந்து பார்த்துத் திருப்தியடைவதா? உள்ளே ஒன்றும் இல்லை. எல்லாமே வெறுமை.  
 
 அன்று நம் முன்னோர்கள் பெருங்காயம் வைத்திருந்தார்கள். மணத்திருக்கலாம். ஆனால் இன்று...? அந்த டப்பாவில் ஏதாவதுண்டா? இல்லையென்றால் ஓட்டை விழுந்து துருப்பிடித்து குப்பையில் தூக்கி எறியத்தான் ஏற்றதா?  
 
 மீட்புப் பெறுபவர் யார்? மலைப்பொழிவில் இயேசு பட்டியலிடும் எட்டு வகையான பேறு பெற்றோர். இன்னும்.…...  

 1.  மனம் மாறினால் மீட்புப் பெறலாம். “இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று" (லூக். 19:9) என்று இயேசு சொல்லக் காரணம் சக்கேயுவின் மனமாற்றமல்லவா!
 2.  ஏழை எளியோரில் இயேசுவைக் கண்டு உதவுபவர்கள். "என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே... உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப் பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள்" (மத். 25:34). இறுதித் தீர்ப்பு சொல்லுகிற செய்திதானே இது!
 3.  இயேசுவின் மீது நம்பிக்கை வைத்து அவரது இறையாட்சி மதிப்பீடுகளைக் கடைப்பிடித்து சாட்சிய வாழ்வு வாழ்பவர்கள். சட்டங்கள் அல்ல இயேசுவின் மீது கொள்ளும் நம்பிக்கையே மீட்புத் தருவது என்று திருத்தூதர் பவுல் சொல்லவில்லையா?

 "இயேசு ஆண்டவர் என வாயார அறிக்கையிட்டு இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என்று நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள்" (ரோமை. 10:9) சீலாவும் பவுலும் சிறைக்காவலரிடம் சொன்னது: "ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை கொள்ளும். அப்போது நீரும் உம் வீட்டாரும் மீட்படைவீர்கள்" (தி.ப. 16:31).
 
 நான் வியந்து இரசித்து மகிழும் அந்தக் கேள்வி!
 
 நாம் எல்லாருமே நற்செய்தி ஏடுகள்தாம். நாள் ஒன்றுக்கு ஓர் அதிகாரம் எழுதுகிறோம் என்பார்கள். ஆம், இந்தியர் நமக்கு இறைவன் வழங்கிய சிறப்பு நற்செய்தி அண்ணல் காந்தி.
 
 ஏழையர் மனம் ... பகைவர்க்கு அன்பு ... ஒரு கன்னத்தில் அறைந்தவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்காட்டு (மத். 5:3- 10,39,44) இயேசுவின் இந்த வன்முறை சிறிதும் கலவாத வார்த்தைகளுக்கு அழியா உருக்கொடுக்க, உயிர் கொடுக்க இறைவன் வரைந்த இணையற்ற ஓவியம் தான் அண்ணல் காந்தி.
 
 வழக்கறிஞர் பணியைத் துறந்து, ஏழையின் தன்மையோடு அரை அம்மண உடையுடுத்தி இறைவனுக்கும் மனச்சாட்சிக்கும் இறுதிவரை கீழ்ப்படிந்த (பிலிப். 2:6-8) பாரதத்தின் தலைமகன் அண்ணல் காந்தி.
 
 "இறைவா, இந்த மனிதர் உம்முடையவரா? உமது ஆவியார் இவரில் செயலாற்றுகிறாரா? உம் திருஅவையில் இவரும் உறுப்பினரா? இவரைப் புனிதர் என்று அழைக்கலாமா? இவரிடம் நான் செபிக்கலாமா?
 
 இன்னும் ஒரே ஒரு கேள்வி! இறைவா, இவ்வளவு அருமையான மலர், உம் தோட்டத்திற்கு வெளியே பூத்துக் குலுங்குகிறதே, ஏன்? எப்படி?”
 
 "மகனே, என் தோட்டத்திற்கு வேலியை நீ எங்கே போட்டிருக்கிறாய்?” - இறைவன் தொடுத்த இந்த வினாவின் விடை விவிலியத்தில் அண்ணலை நாம் காண வைக்கிறது. ஆம், “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை. கிழக்கிலும் மேற்கிலும் இருந்து பலர் வந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசில் அமர்வர்” (மத். 8:10,11).
 
 இறைவாக்கினர் எரேமியா கூறுகிறார்: "ஆண்டவர் கூறுவது இதுவே. இதோ, வாழ்வின் வழியையும் சாவின் வழியையும் உங்கள் முன் வைக்கிறேன்” (எரே. 21:8). அதுபோல அகண்ட வாயிலையும் குறுகிய முன் வைத்து 'நீங்கள் எதில் நுழையப் போகிறீர்கள்?' பந்தியில் வாயிலையும் நம் என்று கேட்கிறார் இயேசு.
 
 "திருஅவையில் இணைந்திருந்தும் அன்பில் நிலைத்திராது, உள்ளத்தாலன்றி உடலால் மட்டுமே அதன் மடியில் தவழ்கின்றவர்கள் மீட்புப் பெறுவதில்லை” என்கிறது 2ஆம் வத்திக்கான பொதுச்சங்கம் (ஏடு: திருச்சபை. எண்: 14).

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

விண்ணகத்தின் வாயில் இடுக்கமான வாயில்


துன்பம் கடந்துபோய்விடும்:

ஹென்றி மடீசும், ஆகஸ்ட் ரென்வாவும் நெருங்கிய நண்பர்கள். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இவர்கள் இருவரும் மிகப்பெரிய ஓவியர்கள். நல்ல உடலுள்ள நலத்துடன் அற்புதமான ஓவியங்களை வரைந்துகொண்டிருந்த ஆகஸ்ட் ரென்வா (Auguste Renoir) திடீரெனப் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இனிமேல் அவரால் ஓவியங்களை வரைய முடியாது என்று எல்லாரும் நினைத்துக் கொண்டிருந்தபோது, அவர் மிகுந்த வலியுடனும் வேதனையுடனும் ஓவியங்களை வரைந்தார்.

இச்செய்தியை அறிந்த ஆகஸ்ட் ரென்வாவின் நெருங்கிய நண்பரான ஓவியர் ஹன்றி மடீஸ் (Henri matisse), அவருடைய வீட்டிற்குச் சென்றார். அங்கே அவர் ஓவியங்களை வரைந்துகொண்டிருந்தார். அதைப் பார்த்துவிட்டு வியந்து போன ஹென்றி மடீஸ், “நண்பா! இவ்வளவு வலியோடும் வேதனையோடு நீ ஓவியம் வரைய வேண்டுமா? பேசமால் ஓய்வெடுக்கலாமே!” என்றார். அதற்கு ஆகஸ்ட் ரென்வா, “இப்போது நான் அனுபவிக்கும் வலியும் வேதனையும் துன்பமும் கடந்து போய்விடும்; ஆனால், நான் வரையும் ஓவியங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்” என்று தனது கண்களைத் தான் வரைந்துகொண்டிருந்த ஓவியத்திலிருந்து எடுக்காமலேயே சொன்னார்.

ஆம், மிகப்பெரிய ஓவியரான ஆகஸ்ட் ரென்வா வலியையும் வேதனையையும் தாங்கிக்கொண்டு ஓவியம் வரைந்தார். அவரது வலியும் வேதனையும் கடந்து போய்விட்டன; ஆனால், அவர் வரைந்த ஓவியங்களோ இன்றைக்கும் நிலைத்து நிற்கின்றன. பொதுக் காலத்தின் இருபத்து ஒன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, “விண்ணகத்தின் வாயில் இடுக்கமான வாயில்” என்ற சிந்தனையைத் தருகின்றது. அதுகுறித்து நாம் சிந்திப்போம்.

அது என்ன இடுக்கமான வாயில்?

எதையும் எளிதாக அடைய விரும்பும் ஒருவரை நாட்டுப் புறங்களில், ‘நோகாமல் நுங்கு தின்ன ஆசைப்படுகின்றான்’ என்று கேலி செய்வார்கள். இன்றைக்கு எதையும் எளிதாக அடைந்துவிட வேண்டும் என்று பலர் விரும்புகின்றார்கள். எளிதாக அடைகின்ற ஒன்று நிலைத்து நிற்குமா? அல்லது நிலைத்து நிற்கும் ஒன்றை எளிதாக அடைந்துவிட முடியுமா? சிந்தித்துப் பார்க்க வேண்டியதொன்றாக இருக்கின்றது.

இயேசு எருசலேம் நோக்கிப் போகும் வழியில் அவரை எதிர்கொள்ளும் ஒருவர், “ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?” என்றொரு கேள்வியைக் கேட்கின்றார். அந்த மனிதர் கேட்ட கேள்விக்கு இயேசு, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தான் அல்லது பலர் என்று உடனடியாகச் சொல்லிவிடவில்லை. மாறாக, அவர் மீட்புப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறார். அதன் பின்னரே இயேசு அவர் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்கின்றார்.

மீட்புப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கு விளக்கம் அளிக்கின்றபோதுதான் இயேசு, “இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள்” என்கிறார். இப்பகுதியை மத்தேயு நற்செய்தியோடு இணைத்துப் பார்த்தால் “அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன்வழியே செல்வோர் பலர்” என்ற வார்த்தைகள் இடம் பெறும்.

இயேசு மக்கள் நடுவில் பணிசெய்யும்போது பலரும் அவரைப் பின்தொடர்ந்தர்கள். அவர்களெல்லாம் அவரது உண்மையான சீடரில்லை. அவர்களில் பெரும்பாலனோர் ஆதாயத்திற்காக அவரைப் பின்தொடர்ந்தனர். இந்த உண்மை இயேசுவுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. எனவேதான் அவர் தன்னிடம் கேள்வி கேட்டவரிடம் பதில் சொல்வதன் மூலமாக, “இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள்” என்கிறார். இதன்மூலம் அவர் கடவுளின் வார்த்தையைக் கேட்டு, அதன்படி நடப்போர் விண்ணகத்திற்குள் நுழைவர் (மத் 7:21) என்கிறார்.

மீட்புப் பெறுவோர் சிலரா? பலரா?

மீட்புப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கு விளக்கம் அளித்த இயேசு, தொடர்ந்து யாரெல்லாம் மீட்புப் பெறுவர் என்ற கேள்விக்கு விளக்கம் அளிக்கின்றார். “கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலிமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்” என்று இன்றைய நற்செய்தியின் இறுதியில் இயேசு சொல்லக்கூடிய வார்த்தைகளும், “பிற இனத்தார், பிற மொழியினர் அனைவரையும் நாம் கூட்டிச் சேர்க்க வருவேன்” என்று இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் சொல்லக்கூடிய வார்த்தைகளும் எல்லாரும் மீட்புப் பெறுவர் என்ற கருத்தினை வலியுறுத்திக் கூறுகின்றன.

யூதர்களைப் பொறுத்தவரையில், தங்களுக்கு மட்டுமே மீட்பு உண்டு, பாவிகளுக்கோ, வரிதண்டுவோருக்கோ, பிறவினத்தாருக்கோ மீட்பு இல்லை என்ற எண்ணமானது இருந்தது. அதன் வெளிப்படுத்தான், “மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?” என்ற கேள்வி. யூதர்கள் நடுவில் இத்தகையதோர் எண்ணம் இருந்தாலும், கடவுளின் விருப்பமெல்லாம், எல்லாரும் மீட்படைய வேண்டும் என்பதுதான். இதுகுறித்துப் பவுல் திமொத்தேயுக்கு எழுதிய முதல் திருமுகத்தில், “எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார்” (1 திமொ 2:4) என்று கூறுவார். இவ்வாறு கடவுள் எல்லா மனிதரும் மீட்புப் பெற விரும்புகிறார் என்பதைக் கொண்டு, அவர் எத்துணை பேரன்பு மிக்கவர் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

துன்பங்களைத் தாங்கிக்கொள்ளுங்கள்:

மீட்புப் பெறுவதற்கு இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயல வேண்டும் என்றாலும், எல்லாராலும் அது முடிவதில்லை. யூதர்கள் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்திருந்தால் அல்லது இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயன்றிந்திருந்தால், அவர்கள் எதிரிகளால் நாடுகடத்தப்பட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால், அவர்கள் பிற தெய்வங்களை வழிபட்டு, அழிவுக்குச் செல்லும் வாயில் வழியாக நுழைந்தார்கள். ஆகவேதான் கடவுள் அவர்களைப் அசீரியர்கள் வழியாக (பாபிலோனியர்கள் வழியாகக்) கண்டித்துத் திருத்தினார். அசீரிய நாடு என்பது தன்னுடைய மக்களுக்குத் தண்டனை வழங்கி, அல்லது அவர்களைக் கண்டித்துத் திருத்தக் கடவுள் ஏந்திய தடியே (எசா 10:5).

இந்தப் பின்னணியில் இன்றைய இரண்டாம் வாசகத்திற்கு வருவோம். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் அதன் ஆசிரியர், “ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாமெனத் தள்ளிவிடாதே. திருத்தப்படுவதற்காகத் துன்பங்களைத் தாங்கிக்கொள்ளுங்கள்... அப்போது அமைதியையும் நேர்மையான வாழ்வையும் பயனாகப் பெறுவீர்கள்” என்கிறார். கடவுள் தண்டித்துத் திருத்துவது துயரத்திற்குரியதாக இருக்கலாம். ஆனால், அதுவே இடுக்கமான வாயில் வழியாக நுழைவதற்கும், மீட்பினைப் பெறுவதற்கும் வழிவகுக்கும்.

எனவே, ஆண்டவர் நம்மைக் கண்டித்துத் திருத்துவதை விருப்பத்தோடு ஏற்றுக்கொள்வோம்; இடுக்கமான வாயில் வழியே நுழைய வருந்தி முயல்வோம். இறைவன் தரும் மீட்பினைப் பெறுவோம்.

சிந்தனைக்கு:

‘நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்’ (1 கொரி 15:2) என்பார் புனித பவுல். எனவே, நற்செய்தியை உறுதியாய்ப் பற்றிக் கொண்டு, அதன்படி வாழ்வோம். அதன்வழியாக மீட்பையும் இறையருளையும் நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

இடுக்கமான வாயில்... இனிதான வரவேற்பு.

கடவுளின் குணங்களை விளக்கப் பல கதைகள் சொல்லப்படும். ஒவ்வொன்றும் ஒரு தனிப்பட்ட குணத்தை வலியுறுத்தும். அப்படியொரு கதை இது. கடவுள் விண்ணகத்தில் தன் மாமன்றத்திற்கு வந்தார். மாமன்றம் மக்களால் நிறைந்து வழிந்தது. கூட்டம் அலைமோதியது. உலகில் இருந்த அனைவரும் அங்கிருந்ததைப் போல் இருந்தது. அந்தக் கூட்டத்தைக் கண்ட இறைவன், வானதூதரிடம் பத்துக் கட்டளைகள் அடங்கிய பலகையை எடுத்து வரச் சொன்னார். வானதூதர் கொண்டு வந்தார். அந்தக் கட்டளைகளை ஒவ்வொன்றாக வாசிக்கச் சொன்னார். "நானே உன் கடவுளாகிய ஆண்டவர்... என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தலாகாது." (விடுதலைப் பயணம் 20 : 2-3) என்ற முதல் கட்டளையை வானதூதர் வாசித்தார். அந்தக் கட்டளையை மீறியவர்கள் மாமன்றத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணையிடப்பட்டது. பலர் வெளியேற வேண்டியிருந்தது. இப்படி ஒவ்வொரு கட்டளையும் வாசிக்கப்பட்டது. அந்தக் கட்டளையை மீறிய மக்கள் வெளியேற்றப்பட்டனர். இறுதி கட்டளை வருவதற்குள், மாமன்றம் ஏறத்தாழ காலியாகி விட்டது. ஒரு சிலர் மட்டும் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தனர்.
கடவுள் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார். அவர் அந்த மாமன்றத்திற்குள் வந்தபோது இருந்த அந்தக் கட்டுக்கடங்காத கூட்டம், அங்கு ஒலித்த ஆரவாரம் இவற்றிற்கும், இப்போது ஒரு சிலரே நின்று செபித்துக் கொண்டிருந்த இந்த அமைதிக்கும் இருந்த வேறுபாடு அவரை ஆழ்ந்த சிந்தனையில் மூழ்க வைத்தது. பின்னர் ஏதோ ஒரு தீர்மானத்தோடு, கடவுள் வானதூதரிடம் திரும்பி, "வெளியில் அனுப்பப்பட்ட அனைவரையும் உள்ளே வரச் சொல்." என்றார். மீண்டும் மாமன்றம் நிறைந்தது, மகிழ்ச்சி ஆரவாரம் எழுந்தது. கடவுளும் மகிழ்ந்தார்.

கதையாக, கற்பனையாக இப்படி கடவுளை நினைத்துப் பார்க்கலாம். சிரித்துக் கொள்ளலாம். ஆனால், உண்மையில் நம் கடவுள் இப்படி நடந்து கொள்வாரா? ம்... வந்து... 'ஆம்' என்று உடனடியாகப் பதில் சொல்ல நம்மில் பலருக்குத் தயக்கம் இருக்கும். ஆழ்ந்து சிந்தித்தால், கடவுள் என்ற இலக்கணத்தின் ஒரு முக்கிய அம்சம் இதுவென்று புரியும். அனைவரையும் கூட்டிச் சேர்க்கும், அனைவரையும் அன்புடன் அழைத்து, அணைத்து விருந்து கொடுக்கும் கடவுள் தான் நம் கடவுள். இன்றைய ஞாயிறுத் திருப்பலியில் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள முதல் வாசகம் தரும் செய்தி இதுதான்.
எசாயா 66 : 18, 20
பிறஇனத்தார், பிறமொழியினர் அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வருவேன்: அவர்களும் கூடிவந்து என் மாட்சியைக் காண்பார்கள்... இஸ்ரயேல் மக்கள் தூய கலம் ஒன்றில் உணவுப் படையலை ஆண்டவரின் கோவிலுக்கு எடுத்து வருவதுபோல், அவர்களைக் குதிரைகள், தேர்கள், பல்லக்குகள், கழுதைகள், ஒட்டகங்கள் ஆகியவற்றின் மேல் ஏற்றி, எருசலேமில் உள்ள என் திருமலைக்கு அழைத்து வருவார்கள், என்கிறார் ஆண்டவர்.
அனைவரையும் இறைவன் எருசலேமில் உள்ள தன் திருமலைக்கு அழைத்து வருவார் என்று கூறும் எசாயாவின் இந்த வாசகத்தையும் தாண்டி, ஒரு படி மேலே சென்று, இயேசுவின் கூற்று இன்றைய நற்செய்தியின் இறுதியில் ஒலிக்கிறது.
லூக்கா நற்செய்தி 13 : 30
“இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்.
இறைவனின் திருமலைக்குச் சேர்ந்து வருவது மட்டுமல்ல, அந்த மலையில் அனைவருக்கும் சமபந்தியும் இருக்கும்.

அனைவரும், மீண்டும் சொல்கிறேன்... ஒருவர் கூட மீதம் இல்லாமல் அனைவரும் வாழ்வு பெற வேண்டும், மீட்பு பெற வேண்டும் என்பது மட்டுமே இறைவனின், இயேசுவின் விருப்பம். நிபந்தனையற்ற அன்பு என்று நாம் நம்பும், நாம் வணங்கும் கடவுளின் முக்கிய அம்சமே பாகுபாடுகள் இல்லாத சமத்துவம்.
நம்மில் சிலருக்கு, இந்தச் சமத்துவத்தை ஏற்பதற்கு அதிகத் தயக்கமாய் இருக்கும். “யூதர்கள், புற இனத்தார் அனைவருக்கும் மீட்பு உண்டு” என்ற அந்த எண்ணத்தை யூதர்களால், இஸ்ராயலர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சாதாரண, எளிய இஸ்ராயலர்கள் ஏற்றுக் கொண்டாலும், அவர்களது மதத் தலைவர்களால் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
தாங்கள் கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்ட குலம், பிற இனத்தவரிடையே இருந்து தனித்து பிரிக்கப்பட்டு, மீட்கப்பட்ட குலம்... அப்படியிருக்க, சமாரியர், வரி வசூலிப்பவர், ஆயக்காரர், தொழு நோயாளிகள் என்று பிறரோடு ஒரே மலையில், ஒரே மன்றத்தில் அமர்ந்து, சமபந்தியில் விருந்து உண்பதா? நடக்கவே நடக்காது. இஸ்ராயலரின் கடவுள் இப்படி செய்யமாட்டார் என்பது இம்மதத்தலைவர்களின் அசைக்க முடியாத எண்ணம்.
எப்படி எல்லாரும் மீட்பு பெற முடியும்?
ஏற்றுக் கொள்ள முடியாத, ஏற்றுக் கொள்வதற்குக் கடினமான இந்தக் கேள்வியை இன்று ஒருவர் இயேசுவிடம் சிறிது வித்தியாசமாகக் கேட்கிறார். இந்தக் கேள்வியுடன் இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது:
லூக்கா 13 : 22 - 23
இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக்கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார். அப்பொழுது ஒருவர் அவரிடம், “ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?” என்று கேட்டார்.

"எல்லாருக்கும் மீட்பு கிடைக்குமா?" என்று கேட்க விழைந்தார் அந்த மனிதர். ஆனால், "மீட்பு ஒரு சிலருக்கு மட்டும் தான்." என்று மதத் தலைவர்கள் மீண்டும், மீண்டும் ஊதிய அந்தச் சங்கின் ஓசை இந்த மனிதரின் மனதைச் செவிடாக்கியிருக்க வேண்டும். எனவே, அவர் இயேசுவிடம், "மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?" என்று கேட்டார்.
இயேசு இந்தக் கேள்விக்கானப் பதிலை இன்றைய நற்செய்தியின் இறுதியில் கூறியுள்ளார். எல்லாத் திசைகளிலிருந்தும், எல்லா மக்களும் இறையரசின் விருந்தில் பங்கு கொள்வர் என்பது இயேசுவின் பதில். ஆனால், இயேசு இந்தப் பதிலை உடனே சொல்லாமல், முதலில் மீட்புப் பெறுவது எவ்வாறு என்ற பாடத்தை, ஒரு சவாலாக நமக்கு முன் வைக்கிறார்.
"இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும்." (லூக்கா 13 : 24)
இடுக்கமான வாயில் வழியே பலர் உள்ளே செல்ல முடியாமல் போகலாம் என்று இயேசு சொல்லும் கூற்றை மேலோட்டமாகப் பார்த்தால், அந்தக் கூற்று, யூதமதத் தலைவர்கள் சொல்லி வந்த "ஒரு சிலருக்கே, அதுவும், இஸ்ராயலருக்கே மீட்பு உண்டு" என்ற கூற்றைப் போல் தெரியலாம். ஆனால், மதத் தலைவர்களின் எண்ணங்களுக்கும், இயேசுவின் எண்ணங்களுக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உண்டு.
மதத் தலைவர்கள் இறைவனைத் தங்கள் தனியுடைமையாக்கி, அதன் வழியாக, மீட்பையும் தங்கள் தனிப்பட்டச் சொத்து என்பது போல் நினைத்தனர், போதித்து வந்தனர். இயேசுவோ, இறைவன் எல்லாருக்கும் பொதுவான தந்தை என்றும், அவர் தரும் மீட்பு எல்லாருக்கும் கொடுக்கப்படும் பரிசு என்றும் கூறினார். இந்தப் பரிசை ஏற்பதும் நிராகரிப்பதும் அவரவர் எடுக்கும் முடிவு. விண்ணகத்தின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும், ஆனால், இது குறுகலான, இடுக்கமான வாயில். முயற்சி செய்துதான் உள்ளே நுழைய முடியும். இவை இயேசுவின் எண்ணங்கள்.

இறையரசில் நுழைவது, விண்ணக விருந்தில் பங்கு கொள்வது மிகவும் பெருமைக்குரிய உயர்ந்த நிலைதான். ஆனால், அந்த நிலையை அடைய ஏற்கனவே நாம் அணிந்துள்ள எல்லாப் பெருமைகளையும் களைய வேண்டும். பெருமைகளைக் களைவது எளிதல்ல என்பதை இயேசு, "பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற் போகும்." என்று சுட்டிக் காட்டினார். அவர் இப்படிச் சொன்னபோது, அவர் மனதில் யூதமதக் குருக்களை அதிகம் எண்ணியிருப்பார். அவர்களை மனதில் வைத்து, தொடர்ந்து ஒரு கதையும் சொன்னார். அந்தக் கதையை நான் கொஞ்சம் விரிவாகக் கற்பனை செய்து பார்க்கிறேன்.
மீட்பின் வாயில்வரை வந்துவிட்ட யூதமதக் குருக்கள் அந்தக் குறுகிய வாயிலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அணிந்திருந்த பெரும் ஆடைகள், அவர்கள் பெருமையை நிலை நிறுத்தத் தலையில் அணிந்திருந்த மகுடம் இவைகளுடன் கட்டாயம் அந்த வாயில் வழியே அவர்களால் சென்றிருக்க முடியாது. எனவே, என்ன செய்தனர்? மீட்பின் வாயிலில் நின்று கொண்டு, தங்கள் அருமை பெருமைகளையும், தாங்கள் அந்த வீட்டுக்கு உரிமையுடையவர்கள் என்பதையும் சப்தமாய் எடுத்துச் சொல்லி, வீட்டு உரிமையாளரை வெளியில் வரச் சொல்லி அழைத்தனர்.
அது மட்டுமல்ல, வெளியில் வரும் வீட்டு உரிமையாளரிடம் அந்த வாயிலை இன்னும் இடித்துப் பெரிதாக்க வேண்டுமென்று கூறுவதற்குக் காத்திருந்தனர். அப்படி அந்த வாயில் இடித்துப் பெரிதாக்கப்பட்டால்தான் தங்களது பட்டாடைகள், மகுடங்கள் இவை எதையும் கழற்றாமல் அவர்களால் போக முடியும். எனவே அந்தத் தீர்மானத்துடன் அவர்கள் காத்திருந்தனர். வீட்டு உரிமையாளர் வெளியில் வருவது போல் தெரியவில்லை. பொறுமையிழந்து, தங்கள் பெருமைகளை இன்னும் உரக்க எடுத்துரைத்த வண்ணம் நின்றிருந்தனர். இறுதியாக, உள்ளிருந்து பதில் வந்தது: "நீங்கள் யார்? உங்களை எனக்குத் தெரியாதே." என்று.
அதிர்ச்சியில் வாயடைத்துப் போன மதத் தலைவர்கள் சுதாரித்துக் கொண்டு, தங்கள் அருமை, பெருமைகளை எல்லாம் மீண்டும் பட்டியலிட்டு முழங்கினர். அந்த வீட்டுத் தலைவனுடன் தாங்கள் உண்டது, குடித்தது, அவருடன் பழகிய நாட்கள், அவர் தங்களுக்குச் சொன்ன போதனைகள் எல்லாவற்றையும் எடுத்துச் சொன்னார்கள். வீட்டுத் தலைவரின் பொறுமை அதிகம் சொதிக்கப்பட்டுவிட்டதால், "உங்களை எனக்குத் தெரியாது. நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்றும் தெரியாது." என்று கடூரமாகச் சொல்லி, அவர் அவர்களை அந்த இடத்தை விட்டுப் போகச் சொன்னார். வீட்டுத் தலைவர் வெளியில் வரவில்லை, தரிசனம் தரவில்லை. எல்லாம் குரலொலி மட்டும்தான்.
இந்த வாக்குவாதம் நடந்து கொண்டிருந்த அதே வேளையில் அங்கு வந்த எளிய மக்கள், தங்கள் அருமை, பெருமை என்று எதையும் தங்களுடன் சுமந்து வராத எளிய மக்கள் அந்த மீட்பின் வாயில் வழியே எளிதாக, மகிழ்வாக உள்ளே சென்றவண்ணம் இருந்தனர். தங்களுக்குக் கோவில்களில் மீட்பைப் பற்றி எடுத்துரைத்த தங்கள் தலைவர்கள் இந்த வாயில் வழியே வரமுடியாமல் தவித்ததை வேடிக்கையாய் பார்த்தபடி அந்த மக்கள் சென்றது அந்தத் தலைவர்களின் வெந்துப் போயிருந்த நெஞ்சில் பாய்ந்த அம்புகளாய்த் தைத்தன. புலம்பலிலும், கோபத்திலும் மதத் தலைவர்கள் பற்களைக் கடித்துக் கொண்டு அங்கு நின்றுகொண்டிருந்தனர். இந்தக் கதையை இயேசு இப்படி முடிக்கிறார்.
லூக்கா நற்செய்தி 13 : 28ஆ-30
“இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும், நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது அழுது அங்கலாய்ப்பீர்கள். இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள். ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்.”

அன்புள்ளங்களே, இந்தியாவில் விடுதலை நாளுக்குப் பின் வரும் இந்த ஞாயிறு நீதியின் ஞாயிறென்று கொண்டாடப்படுகிறது. எல்லாரையும் அழைக்கும், ஏற்று அணைக்கும், எல்லாருக்கும் சமபந்தியாக விருந்து படைக்கும் அன்புத் தந்தையாக இறைவனைப் பார்ப்பதும், அந்த விருந்தில் கலந்து கொள்ள நம் தற்பெருமைகளை எல்லாம் களைந்து விட்டு, அனைவரோடும் அந்தக் குறுகலான வாயில் வழியே நுழைந்து செல்வதும், அங்கு அந்த விருந்தில் அனைவரும் அ-னை-வ-ரு-ம் எந்த வித பாகுபாடும் வேறுபாடும் இல்லாமல் கலந்து கொள்வதில் மனநிறைவு அடைவதும் தானே நீதி என்பதன் இலக்கணம்?

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
ser