இயேசு என் மீட்பர்
நியூயார்க் நகரிலே எலினா என்ற கிராமப் பகுதியிலே ஒரு நீக்ரோ பெண்மணி தன் 4 வயது குழந்தையை வைத்துக் கொண்டு மணிக்கணக்காகக் காத்து நிற்கிறாள். சிறிய பையனுக்கோ ஒன்றுமே புரியவில்லை . ஓடியாடி விளையாடும் சிறுவன் அம்மாவின் முகத்தைப் பார்க்கிறான். தாயோ சோக நிலையில் ஆவலோடு எதையோ எதிர்நோக்கி காத்திருக்கிறாள். அம்மா ஏன் இங்கு நிற்கிறீர்கள்? வாங்கம்மா வீடு போவோம் எனக் கூப்பிடுகிறான். அதேநேரத்தில் அவள் எதிர்பார்த்த புகைவண்டி நிலையம் வந்து சேர்ந்தது. ஆவலோடு நெருங்குகிறாள். மகனே இங்கே பார்! இங்கே இறந்து கிடக்கும் ஆப்ரகாம் லிங்கன் இவர்தான் உன்னையும் என்னையும் உரிமையோடு இந்த நாட்டிலே வாழ வைக்க உயிர் கொடுத்த மகான். நமக்கு உரிமை பெற்றுத்தர தன் உயிரையே பலியாக்கத் துணிந்துவிட்டார் என்று கண்ணீர் மல்கத் தாய் தன் மகனிடம் கூறினாள். உடலைத் தொட்டு முத்தமிட்டு இடம் நகர்ந்தாள்.
இதேபோல் உலகிலே எத்தனையோ தலைவர்கள் உயிர் கொடுத்துள்ளார்கள். பாரத நாட்டின் உரிமைக்காக உயிர் கொடுத்தார் காந்திமகான் . மாந்தருள் மாணிக்கமாய்த் திகழ்ந்த ஜான் கென்னடி நீதிக்குச் சான்று பகரத் தன் உயிரையும் கொடுத்தார். தென் அமெரிக்காவில் எல் சால்வடோர் மறைமாவட்ட பேராயர் ஆஸ்கார் ரோமோரோ அந்த மறைமாவட்ட ஏழை மக்களுக்கு குரல் கொடுத்ததால் பலி பீடத்தில் நிற்கும்போதே சுட்டுக்கொல்லப் பட்டார். இவர்கள் எல்லாம் நாட்டின் அரசியல் விடுதலைக்காக, உரிமைக்காக உயிர் கொடுத்தவர்கள். ஆனால் சரித்திரத்தில் ஒரே ஒருவர் தான் உலகின் பாவங்களைப் போக்க உயிர் கொடுத்துள்ளார். இவர்தான் இயேசு என்ற நாமம் கொண்ட பெருமகான்.
இவரைப் பற்றி இன்றைய நற்செய்தியிலே புனித மாற்கு என்பவர் 6-ஆம் அதிகாரத்தில் 34- ஆம் வசனத்தில் குறிப்பிடுவதுபோல் ஆடுகளின் மேல் அக்கறையும் இரக்கமும் கொண்டவராக காட்சி தருகின்றார். நெடுநேரம் போதிக்கின்றார். பழைய ஏற்பாட்டிலே இஸ்ரயேல் மக்கள் ஆட்டின் தலையிலே கை நீட்டி தங்கள் பாவங்களை அதன் மேல் சுமத்தி காட்டுக்குள்ளே விரட்டி விடுவார்கள். அது அவர்களின் பாவங்களைச் சுமந்து போகும் பலி ஆடாகும். அதேபோல் அனைத்துப் பாவங்களையும் தன் மேல் சுமந்தவராய் யோர்தான் நதிக்கரையிலே நடந்து வர இவரே உலகின் பாவங்களைப் போக்க வந்த உன்னத செம்மறி என திருமுழுக்கு யோவானால் (யோவா. 1:29) சுட்டிக்காட்டப்படுகிறார். இவர் சென்ற இடமெல்லாம் நன்மையே செய்துகொண்டு சென்றார். எப்படி சந்தனக் கட்டையானது அரைக்கப்பட்டுத் தண்ணீரில் கலக்கப்பட்டால் தன் மணத்தைப் பரப்புகின்றதோ அதேபோல் நல்லாயன் இயேசு ஆடுகளின் மேல் அக்கறை கொண்டவராய் போதிக்கின்றார். ஆடுகளுக்காக உயிர் கொடுக்கும் ஆயனாக மாறிவிட்டார்.
பன்றியும் பசுவும் நடத்திய உரையாடலை கற்பனையாக இங்கு குறிப்பிட விரும்புகிறேன். கேட்க விரும்புகிறீர்களா? அன்றொரு நாள் பன்றியானது பசுவை நோக்கி பேசியது: ஓபசுவே! எத்தனையோ மக்கள் என்னை வெட்டி சமைத்து நாட்கணக்காக சாப்பிடுகிறார்கள், ஊறுகாய் உண்டாக்கி உலகம் முழுவதும் அனுப்புகிறார்கள். ஆனால் மக்களோ சீ பன்றி என்று கூறி என்னை வெறுக்கிறார்கள். ஆனால் உன்னை ஓ பசுவே என்று பெருமதிப்போடும் பெருமிதத்தோடும் அழைக்கிறார்கள். ஏன் இந்த பாரபட்சமான வித்தியாசம்! சிறிது நேரம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த பசு பேச ஆரம்பித்தது : ஓ பன்றி! நீயும் நானும் மிருகங்கள் தான். ஆனால் ஒன்று, நீ இறந்த பின் மக்களுக்கு பயன்படுகின்றாய். நானோ உயிரோடு இருக்கும்போதே பயன்படுத்தப்படுகின்றேன். எனவே என்னை மக்கள் மதிக்கிறார்கள், விரும்புகிறார்கள் என்று பதில் உரைத்தது. ஆம் அன்புக்குரிய வர்களே நல்லாயனாகிய இறைவன் நமக்குத் தரும் பாடம் உயிரோடு இருக்கும்போதே நல்ல ஆடுகளாக, ஆயனின் குரலுக்குச் செவிமடுக்கும் ஆடுகளாக, ஏன் பலி ஆடாக கூட மாற வேண்டும். அப்போது நாம் நிறை வாழ்வு பெறுவோம்.
நற்செய்தியாளர்களாக மாறுவோம்.
எதற்காகத் தனிமையான இடத்திற்குச் சென்று திருத்தூதர்களை இயேசு ஓய்வெடுக்கச் சொன்னார்? இதற்கு எண்ணற்ற காரணங்கள் இருக்கலாம். அதில் ஒரு தலையாய காரணம் அவர்கள் இறைவனை அன்பு செய்ய வேண்டும் என்பதற்காக!
ஒவ்வொரு செயலுக்கும் நேரம் ஒதுக்குவதுபோல, இறைவனோடு தனித்திருக்கவும் நாம் நேரம் ஒதுக்க வேண்டும் என்ற உண்மையை இயேசு நமக்கு இன்று சுட்டிக்காட்டுகின்றார்.
ஞான முத்துக்கள் (Pearls of Wisdom) என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட உவமை இது.
எல் பெத்தேல் (EI Bethel) என்பவர் ஒரு மடாதிபதியைச் சந்தித்தார். அவருக்குத் துறவியாக ஆசை. அவர் துறவற மடத்திற்குள் நுழைவதற்கு முன்னால் ஒரு சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள விரும்பினார். எல் பெத்தேல் மடாதிபதியைப் பார்த்து, ஏன் துறவிகள் தனிமையில் வாழ வேண்டும்? கடவுள்தான் எல்லா இடங்களிலும் இருக்கின்றாரே! அவரை எங்கு வேண்டுமானாலும் அன்பு செய்யலாமே! என்றார்.
மடாதிபதி பதில் ஒன்றும் சொல்லவில்லை. ஒரு மெழுகுதிரியை ஏற்றி அதை எல் பெத்தேலிடம் கொடுத்து, குடிசைக்கு வெளியே நின்று இதை அணையாமல் பார்த்துக்கொள் என்றார்.
எத்தனை முறை ஏற்றினாலும் அத்தனை முறையும் மெழுகுதிரி காற்றில் அணைந்துவிட்டது. அப்போது எல் பெத்தேல், இது குடிசைக்குள் மட்டுமே அணையாது எரியும் என்றார். அதற்கு மடாதிபதி, நீ கேட்ட கேள்விக்கு நீயே பதில் சொல்லிவிட்டாய். இறை அன்பு என்பது இந்த மெழுகுதிரியைப் போன்றது. சத்தமும், சந்தடியும், பராக்குகளும், சோதனைகளும் நிறைந்த உலகத்திலே அதனால் எளிதாக எரிய முடியாது; அமைதியில்தான் அது எரிய முடியும் என்றார். எல் பெத்தேல் ஞானம் பெற்று துறவற மடத்தில் சேர்ந்தார்.
சீடர்கள் மனத்தில், இதயத்தில் இறை அன்பு சுடர்விட்டு எரிய வேண்டும். அந்த இறை அன்பில் அவர்கள் மனம், இதயம் வெதுவெதுப்பாகி இறை அன்பை உலகுக்கு அவர்கள் பிரதிபலிக்க வேண்டும் என இயேசு விரும்பினார். இதனால்தான் தனிமையான இடத்திற்குச் செல்லுமாறு அவர்களுக்கு அன்புடன் கட்டளையிட்டார். அவரே தனிமையை நாடி, அவரது சீடர்களுக்கு முன்மாதிரியாய் விளங்கினார் (மாற் 1:35).
தனிமையில் நமது மனமும், இதயமும் இறை அன்பால் பற்றி எரியும்போது நாம் உள்ளொளி பெற்று நீதி நிறைந்த ஆயர்களாக (முதல் வாசகம்), அமைதி நிறைந்த நற்செய்தியாளர்களாக (இரண்டாம் வாசகம்) மாறுவோம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை !
மேலும் அறிவோம் :
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்(கு)
என்புதோல் போர்த்த உடம்பு (குறள் : 80).
பொருள் : அன்பு நிறைந்த உள்ளத்துடன் இயங்குவதே உயிருடன் கூடிய உடலாகும். அன்பு நெஞ்சம் இல்லாத உடல், உயிரற்ற எலும்புக்கூட்டைத் தோலால் போர்த்திய வெற்றுடல் ஆகும்.
பங்குத் தந்தை ஞாயிறு திருப்பலியில் மறையுரை ஆற்றிக் கொண்டிருந்தபோது மக்கள் தங்குவதைக் கண்டு, "ஐயோ! தீ. தீ" என்று கத்த, மக்கள் கோவிலைவிட்டு ஓட ஆரம்பித்தனர், ஆனால், எங்குமே தீயைக் காணாத அவர்கள் பங்குத் தந்தையிடம், 'சாமி, தீ எங்கே?' என்று கேட்க, அவர், "நரகத்தில் " என்று அமைதியாகச் சொன்னார். மக்கள் கோபமும் ஆத்திரமும் அடைந்து அவரை மனதாரத் திட்டினார்கள். அப்போது பங்குத் தந்தை அவர்களிடம், “நான் பிரசங்கத்தில் உண்மையைச் சொல்லும்போது தூங்கி விழுகிறீர்கள்; பொய் சொன்னால் விழித்துக் கொள்கிறீர்கள்" என்றார்.
ஆம், இன்றைய உலகில் பொய்க்கு இருக்கிற வரவேற்பு உண்மைக்குக் கிடையாது. இன்றைய விளம்பர உலகில் பொய் மெய்யாகி விடுகிறது; மெய் பொயயாகி விடுகிறது. பழங்காலத் தமிழ்ப்பாடல் பின்வருமாறு உள்ளது:
பொய்யுடை ஒருவன் சொல்வன்மையால்
மெய்போலும்மே மெய்போலும்மே
மெய்யுடை ஒருவன் சொல்லமாட்டாமையால்
பொய் போலும்மே பொய் போலும்மே
ஒருவர் பேசுவதெல்லாம் பச்சைப்பொய்; ஆனால் அவர் கவர்ச்சியாகப் பேசுகிறார். எனவே அவரது பொய்யையும் மக்கள் மெய்யென நம்புகின்றனர். மாறாக, மற்றொருவன் உண்மை பேசினாலும், அவருடைய பேச்சில் கவர்ச்சி இல்லாததால், அவருடைய மெய்யும் பொய்யாகிவிடுகிறது. வழியும் வாழ்வும் உண்மையும் உயிருமான இயேசு கிறிஸ்து (யோவா 14:6) உண்மையை எடுத்துரைக்கவே இவ்வுலகிற்கு வந்த இயேசு கிறிஸ்து (யோவா 3:37). உண்மையினால் தம் சீடர்களை இறைவனுக்கு அர்ப்பணமாக்கிய இயேசு கிறிஸ்து (யோவா 17:17-19), இன்றைய தற்செய்தியில், மக்கள், 'ஆயரில்லா ஆடுகளைப் போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார் (மாற் 6:34) என்று வாசிக்கிறோம்.
இன்றைய உலகம் பொய்யாலும் பொய்மையின் பிறப்பிடமான சாத்தான் பிடியிலும் (யோவா 8:44) சிக்கித் தவிக்கின்றது. எனவே, இன்றைய உலக மக்களுக்குத் தேவை உண்மை, முழுமையான உண்மை. திருமேய்ப்பர்கள் மக்களுக்கு உண்மையை எடுத்துரைக்க வேண்டும். இன்றைய முதல் வாசகத்தில். ஆடுகளை மேய்க்காமல், அவற்றைச் சிதறடிக்கும் போலி மேய்ப்பர்களைக் கடவுள் சபிக்கின்றார். ஆனால், அதே நேரத்தில் ஆடுகளின்மேல் உண்மையான அக்கறை கொண்டுள்ள நல்ல மேய்ப்பர்களை மக்களுக்குக் கொடுக்கப் போவதாகவும் வாக்களிக்கின்றார் (எரே 23:1-4).
நல்லாயர் தனது ஆடுகளைப் 'பசும்புல் வெளிக்கும். அமைதியான நீர் நிலைக்கும் அழைத்துச் செல்வார்; புத்துயிர் அளிப்பார்; நீதி வழி நடத்துவார், சுவையான விருந்தளிப்பான் (பதிலுரைப்பாடல், திபா 23:1-5).
நல்லாயர் கிறிஸ்துவைப் பின்பற்றி, திருமேய்ப்பர்கள் மக்களுக்குச் சுவையான விருந்தை நலமிக்கப்போதனையை வழங்க வேண்டும். இறைவார்த்தையில் வேரூன்றியிராத எவ்விதப் போதனையும் போலியானது; பொய்யானது: வஞ்சகமானது. அத்தகைய மறையுரை. மக்களைத் தவறான வழியில் இட்டுச் செல்லும்; மனமாற்றத்திற்கும் புதுவாழ்வுக்கும் வழிவகுக்காது. வாழ்வு தரும் வார்த்தையைத் தேடி வருகிற மக்களுக்கு வெறும் தவிட்டைக் கொடுத்து ஏமாற்றுவது அநீதியாகும்.
இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூறுகிறது : "இறைமக்களுக்கு இறைவார்த்தைப் பந்தியில் நிறைவான 2,ணவு வழங்கப்பட வேண்டும். விவிலியத்தின் கருவூலம் தாராளமாகத் திறந்து விடப்படவேண்டும். மறையுரை திருவழிபாட்டின் ஒரு பகுதி: இதில் நம்பிக்கையின் மறை பொருளும் வாழ்க்கை நெறிகளும் விளக்கப்பட வேண்டும்" (திருவழிபாடு. 51-52)
நள்ளிரவு 12 மணிக்கு ஒரு பெண் பங்குத் தந்தையை எழுப்பி, *சுவாமி, உடனடியாக எங்க வீட்டுக்கு வாங்க; என் மகள் நீங்கள் இல்லாமல் தூங்கமாட்டேன் என்று அடம்பிடிக்கிறாள்" என்றார், பங்குத் தந்தை அதிர்ச்சியுற்றவராய், "ஏன் அவ்வாறு சொல்லுகிறாள்?" என்று கேட்டதற்கு அப்பெண், "சாமி நாங்கள் அவளுக்கு எத்தனையோ தக்க மாத்திரைகள் கொடுத்தும் அவளுக்குத் தூக்கம் வரவில்லை. நீங்கள் வந்து ஐந்து நிமிடம் பிரசங்கம் வைத்தால், உடனடியாகத் தூக்கம் வந்துவிடும் என்கிறாள்" என்றார்.
பங்குத் தந்தையர்களின் மறையுரை மக்களைத் தூங்க வைக்கும் தூக்க மாத்திரையாக அமையாமல். சமுதாயத் தீமைகளுக்கு வேட்டு வைக்கும் வெடி மருந்தாகவும், பாவ நோய்ககுக் குணமளிக்கும் அருமருந்தாகவும் அமைய வேண்டும்.
இன்றைய உலகிற்குத் தேவை 'அமைதியின் நற்செய்தி. இயேசு கிறிஸ்துவே நமது அமைதி : அவர் யூத இனத்திற்கும் பிற இனத்திற்கும் இடையே இருந்த பகைமை என்ற தடைச் சுவரைத் தமது சிலுவையால் தகர்த்துவிட்டு, இரு இனத்திலுமிருந்து புதியதொரு மனித குலத்தைப் படைத்து, அமைதியை நற்செய்தியாக அறிவித்தார் (எபே 2:13-14) என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் எடுத்துரைக்கிறார் புனித பவுல். திருப்பணியாளர்கள் திரும்பத் திரும்ப அமைதியின் நற்செய்தியைத் தங்களது மறையுரையில் விளக்க வேண்டும்.
கடவுள் மனிதரைக் கிறிஸ்து வழியாகத் தம்முடன் ஒப்புரவாக்கி, அந்த ஒப்புரவுச் செய்தியைத் திருச்சபையிடம் ஒப்படைத்துள்ளார் (2 கொரி 5:19-20), திருச்சபை ஒரே நேரத்தில் ஒப்புரவு அடைந்த சமூகமாகவும், ஒப்புரவை வழங்கும் சமூகமாகவும் திகழ்கிறது.
இன்று எங்கும் எதிலும் போர். கடமைக்கும் உரிமைக்கும் இடையே போர்: காமத்திற்கும் காதலுக்கும் இடையே போர்; கொள்கைக்கும் நடத்தைக்கும் இடையே போர், தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இடையே போர், இவ்வுலகே ஒரு போர்க்களம். இன்று மனிதன் சமுதாயம் என்ற நிலத்தில் பகைமை என்ற விதையை ஊன்றி, வெறுப்பு என்ற திரைப் பாய்ச்சிக் கொண்டிருக்கிறான். அதன் விளைவாக வேற்றுமை என்ற மரம் வளர்ந்து, பொறாமை என்ற பூ பூத்து. கலகம் என்ற காய் காய்த்து. வன்முறை என்ற பழம் பழுத்துக் கொண்டிருக்கிறது.
"மங்கை தீட்டுப்பட்டால் கங்கையில் நீராடலாம்; கங்கையே தீட்டுப்பட்டால் எங்கே நீராடுவது? ஆம், உலகம் பிளவுபட்டால் திருச்சபை அப்பிளவைச் சரி செய்யலாம். திருச்சபையே பிளவுபட்டு நின்றால், பிளவுபட்ட திருச்சபை அமைதியின் நற்செய்தியை எவ்வாறு உலகிற்கு அளிக்க முடியும்?
திருப்பணியாளர்களும் மக்களும் இனம், மொழி, நிறம், சாதி அடிப்படையில் மக்களை, அரசியல்வாதிகள் போல், பிளவுபடுத்தாமல் ஆடுகளைச் சிதறடிக்காமல் திருச்சபையை மாபெரும் அன்பியமாகக் கட்டி எழுப்பத் தங்கள் சொல்லாலும் செயலாலும் உழைக்க வேண்டும்.
வேற்றுமை வேலிகளை வேரறுப்போம்;
பிரிவினைக் கவர்களைப் பிளந்தெரிவோம்;
ஒற்றுமையை உருவாக்குவோம்
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போர் புரியும் உலகை வேரோடு சாய்ப்போம்,
பொய்மையின் முகமூடியைக் கிழித்தெறிவோம்;
ஆவியிலும் உண்மையிலும் கடவுளைத் தொழுவோம்.
ஆயனில்லா ஆடுகளாக ..
இயேசுவே பதில்! - இயேசு அழைக்கிறார், இயேசு வருகிறார், இயேசு விடுவிக்கிறார், Jesus saves என்பது போல இன்று கிறிஸ்தவ உலகில் எழும் நற்செய்தி முழக்கங்களில் ஒன்று: Christ is the answer. இதனைச் சுவர் எழுத்தாய்க் கண்ட இளைஞன் ஒருவன் அதனடியில் எழுதி வைத்தானாம் “What then is the question?” என்று.
கிறிஸ்து பதில் என்றால் எந்தக் கேள்விக்கு?
கிறிஸ்து தீர்வு என்றால் எந்தத் தேவைக்கு?
கிறிஸ்து மாற்று என்றால் எந்தப் பிரச்சனைக்கு?
கிறிஸ்து மருந்து என்றால் எந்த நோய்க்கு?
பதில் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்குக் கேள்வியும் முக்கியம். இயேசுவே பதில்! எந்த கேள்விக்கு இயேசு பதிலாக இருக்கிறார்?
முட்டி போட்டு நன்மை வாங்குவதா, முதுகு வளையாமல் நிமிர்ந்து நின்று வாங்குவதா எது சரி என்ற கேள்விக்கா? நற்கருணை வாங்க நாக்கை நீட்டுவதா, கைகளை ஏந்துவதா, எது சரி என்ற கேள்விக்கா? குருக்கள் திருமணம் செய்து கொள்ளலாமா, இல்லை கட்டைப் பிரமச்சாரிகளாகத் தான் காலத்தைத் தள்ள வேண்டுமா என்ற கேள்விக்கா? இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல கிறிஸ்து வேலையற்றவரல்ல. நாமும் வேறு வேலை இல்லாதவர்கள் போல இவற்றைப் பற்றி அலசிக்கொண்டும் அலட்டிக் கொண்டும் நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பதா?
அன்று சமயத்தால், அரசியலால் ஏற்பட்ட சமுதாயச் சீர்கேடுகள், அநீதிகள், அடிமைத்தனங்கள் ... இவற்றின் பின்னணியில்தான் இயேசு பதிலாக இருந்தார். இயேசு எப்படிப் பதிலாக இருந்தார் என்பதை அவரது வார்த்தையைப் படித்தாலே புரியும்; வாழ்க்கையைப் பார்த்தாலே தெரியும்.
லூக் 4:18,19 “ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது” என்று நாசரேத் என்ற இயேசு வளர்ந்த ஊரில் ஒய்வு நாளில் தொழுகைக் கூடத்தில் அவர் வாசித்த எசாயாவின் சுருளேடு. இயேசு இப்படித்தான் பதிலாக இருந்தார் - நோயுற்றோருக்கு நலமாக, பசித்தோருக்கு உணவாக, சிறைப்பட்டோருக்கு விடுதலையாக, ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வாக, பாவிகளுக்கு மீட்பாக, எளியவருக்கு நற்செய்தியாக...
வாழ்க்கையின் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலாக நோய்களுக்கெல்லாம் மருந்தாக, தேவைகளுக்கெல்லாம் தீர்வாக, சிக்கல்களுக்கெல்லாம் மாற்றாக இருந்த இயேசுவை மக்கள் திரள் தேடியதில் வியப்பென்ன இருக்க முடியும்! மக்களின் இந்தத் தேடலில் இயேசு எப்படி செயல்படுகிறார் என்பதை நற்செய்தி பரிவுமிக்க ஆயராகப் படம்பிடித்துக் காட்டுகிறது. “அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப் போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு அவர் அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்” (மார்க். 6:34). நல்ல ஆயன் நானே. நல்ல ஆயன் தன் ஆடுகளுக்காக உயிரைக் கொடுப்பான் என்று சொன்னவரல்லவா நம் இயேசு!
தூதுரைப் பணியை முடித்துவிட்டுத் திரும்பி வந்த திருத்தூதர்கள் “தாங்கள் செய்தவை கற்பித்தவையெல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள்” (மார்க். 6 : 30). அந்நேரத்தில் மக்கள் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால் அவர்களுக்கு உண்பதற்குக் கூட நேரம் கிடைக்கவில்லை. அவர்களுக்கும் தனக்கும் தனிமையும்: ஓய்வும் வேண்டும் என்று நினைக்கிறார்.
ஓய்வு என்பது உழைப்புக்கு எதீர்ச்-சால் அல்ல. மாறாக உழைப்புக்குரிய ஆக்க சக்தியே! போதிய ஓய்வு இல்லாமல் மனிதனால் உழைக்க இயலாது; கூடாது.
அந்த நிலையில் தன்னைத் தேடிய திரளான மக்களைப் பார்க்கிறார். தனது தேவையை மறந்தார். பசியை மறந்தார், உணவை மறந்தார், ஒய்வை மறந்தார். மக்களுடைய தேவைகளை உணர்ந்தார். தீர்த்து வைத்துத் தன் பரிவை வெளிப்படுத்துகிறார்.
பரிவு என்னும் தமிழ் வார்த்தைக்குப் பொருள் உடன் துன்புறுதல் என்பதாகும். அடுத்தவர் படும் துன்பத்தை நமதாக நம்மில் உணர்வது அனுபவிப்பது. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் உணர்வு.
இராமகிருஷ்ண பரமஹம்சர் ஒருமுறை படகில் சென்று கொண்டிருந்தார். படகு கரையை நெருங்குகின்ற தருணம். அப்போது திடீரென வலியால் துடித்தார். அவர் முதுகை மூடியிருந்த துணியை விலக்கியபோது ' காயங்கள் காணப்பட்டன. அவர் வலியால் முனகியபடியே கரையைச் சுட்டிக்காட்டினார். அந்தக் கரையில் சிலர் ஓர் அப்பாவி மனிதனை அடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு மனிதனைச் சில வன்முறையாளர்கள் அடிப்பதைப் பார்க்கின்றபோதே அவர் முதுகு முழுவதும் இரத்தம் கசிந்தது. அதற்குப் பெயர்தான் பரிவு.
பல சமயங்களிலும் பிறருடைய பசியை நம்மால் உணர முடிவதில்லை. பிறருடைய வலியை நம் வலியாக உணர்வதில்லை. மாறாக “இது அவன் தலையெழுத்து ... அவனுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்" என்று நினைப்போம். பேசுவோம். இயேசு அப்படி எப்போதும் நடந்து கொண்டதில்லை. பிறருடைய துயரத்தை தன் துயரமாக உணர்ந்தார். அப்படி ஓர் உணர்வுதான் நம்மை உதவிடும் செயல்பாட்டுக்கு இட்டுச் செல்லும்.
பரிவு என்பது மனித நேய வெளிப்பாடு. அதுதான் நற்செய்திப் பணியால் களைத்துச் சோர்ந்த சீடர்களை ஓய்வு கொள்ளச் சொல்கிறது. பின்னர் மக்களின் பசியை உணர்ந்து அதைத் தீர்க்க வழி வகுக்கிறது. பரிவு என்பது இறைவனுக்கே உரித்தான பண்பு. சென்ற இடமெல்லாம். நன்மை செய்தது இதனால்தான். நயீன் பட்டணத்து விதவையின் மகனை உயிர்ப்பித்தது அந்த ஏழைத்தாயின் மீது கொண்ட பரிவினால்தான். உங்கள் பாவங்கள் செந்தூரம் போல் சிவந்திருந்தாலும் உங்களை வெண்பனியிலும் வெண்மையாக்குவேன் என்று கூறுவதும் மனித இனத்தின். மீது கொண்ட பரிவினால்தான். “தந்தையே இவர்களை மன்னியும்” என்று தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களுகாக மன்றாடியதும் அவர்கள் மீது கொண்ட பரிவினால்தான். இயேசுவின் பரிவு “காணாமல் போனதைத் தேடுவேன். அலைந்து திரிவதைத் திரும்பக் கொண்டு வருவேன். காயப்பட்டதற்குக் கட்டுப்போடுவேன். நலிந்தவற்றைத் திடப்படுத்துவேன்” (எசேக். 34:16) என்ற இறைவாக்கினர் எசேக்கியேலின் கூற்றை, உண்மையாக்குகிறது.
ஆயனில்லாத ஆடுகள் மூன்று வதத் துயரங்களுக்கு உள்ளாகும். 1. போகும் வழி ஒதரியாது திணறும். 2. மேய்ச்சலுக்கான ஆடம் காணாமல் பசிக்கு உணவின்றி; தாகத்துக்கு நீரீன்றி தனக்கும். 3. எதிரீகளால் வலிய மிருகங்களால் தாக்கிக் கொல்லப்படும் ஆபத்தை, பாதுகாப்பற்ற நிலையில் சந்திக்கும்.
மனிதர்களாகிய நமக்கும் இம்மூன்றும் பொருந்தும். எந்த வழி போவது என்று தெரியாததால் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட நிலை. தவறான பல போதனைகளால் அலைக்கழிப்பு. எங்கு யார் மூலம் தேவையானவைகளைப் பெறக்கூடும் என்று வழிகாட்டி இல்லாத அவலம். இறுதியாக யாரை விழுங்கலாபெனக் கர்ச்சிக்கும் சிங்கம் போல் தேடித் திரியும் அலகையோடு, பலவிதமான தீய, தூய்மையற்ற மனிதர்களோடு நாம் நடத்த வேண்டிய அன்றாடப் போராட்டங்கள்.
ஆயனில்லா ஆடுகளாகக் காரணம்? ஆயர் மட்டும்தானா? ஆடுகள் இல்லையா? இதுவும் சிந்தனைக்குரியதே!
எனவே அன்றைய மக்களைக் குறித்து இயேசு பரிவிரக்கம் கொண்டார். பலவற்றைக் கற்றுக் கொடுக்கலானார். இன்றைக்கும் இயேசு நம்மீது அதே அக்கறை உள்ளவராக இருக்கிறார். எனவே “உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டுவிடுங்கள். ஏனென்றால் அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்” (1 பேதுரு 5:7).
ஓய்வு...ஒப்பற்ற மருந்து
நான் துறவற வாழ்வில் சேர்ந்த புதிதில், பல பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அவற்றில் ஒன்று அருள்பணிக்குச் செல்வது. சனிக்கிழமை மதியம் நவதுறவு இல்லத்திலிருந்து இருவர் இருவராகச் சைக்கிளில் கிளம்புவோம். அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று, சிறுவர், சிறுமியருக்கு மறைகல்வி பாடங்கள் நடத்துவோம். ஞாயிறு திருப்பலிக்கென பாடல்கள் சொல்லித்தருவோம். இந்த அருள்பணி அனுபவம் பெரும்பாலும் மகிழ்வான ஓர் அனுபவமாக இருந்தது. சனிக்கிழமை காலையிலேயே மனதில் பரபரப்பு தோன்றும். இந்த பரபரப்புக்குக் காரணங்கள் பல உண்டு. வாரம் முழுவதும் துறவு இல்லத்திலேயே இருப்பதால், வார இறுதியில் வெளி உலகைப் பார்க்கும் வாய்ப்பு, சைக்கிள் பயணம், கிராமங்களில் மக்கள் தரும் அன்பான உபசரிப்பு, குழந்தைகள் 'அண்ணா, அண்ணா' என்று கூப்பிட்ட பாசம், பங்குத்தந்தை இல்லத்தில் கிடைத்த வேறுபட்ட உணவு... இப்படி பல காரணங்கள்.
நவதுறவு இல்லத்திற்குத் திரும்பியபின், இந்த நினைவுகளை மீண்டும் நான் அசைபோட்டு, நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ்ந்ததுண்டு. இந்த அனுபவங்கள் வெறும் மேலோட்டமான மகிழ்ச்சியாக மட்டும் இருந்துவிடக்கூடாது என்பதற்காக, துறவு இல்லத்தில் அவ்வப்போது இந்த அருள்பணி அனுபவங்களை மதிப்பிடும் நேரங்களும் இருந்தன. ஆர்ப்பாட்டமாக, ஆரவாரமாகச் செய்த அருள்பணியை அமைதியில் அசைபோட்டபோது பல தெளிவுகள் பிறந்தன, பாடங்களைக் கற்றுக்கொண்டேன். பணிகள் செய்வதோடு நிறுத்திவிடாமல், மீண்டும் அவைகளை அமைதியில் சிந்திக்கவும், குழுவில் மதிப்பிடவும் துறவு வாழ்க்கை எனக்குக் கற்றுக்கொடுத்த அந்தப் பழக்கத்திற்காக நான் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். மதிப்பீடுகள் செய்யும் வழிமுறைகள் அனைத்து பெரும் நிறுவனங்களிலும் நடத்தப்படுகின்றன என்பதை பின்னர் அறிந்தபோது இன்னும் மகிழ்வாக இருந்தது.
என் அருள்பணி அனுபவத்தை இன்று நான் அசைபோடக் காரணம்... இன்றைய நற்செய்தி. இயேசு தன் சீடர்களை அருள்பணிக்கென இருவர் இருவராக அனுப்பியதை சென்ற ஞாயிறு நாம் சிந்தித்தோம். இந்த வாரம் அதன் தொடர்ச்சியை நாம் சிந்திக்கிறோம். இதோ இன்றைய நற்செய்தியின் துவக்க வரிகள்: மாற்கு நற்செய்தி 6: 30-31
அக்காலத்தில், திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்து கூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவையெல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள். அவர் அவர்களிடம், “நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்” என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.
தங்கள் அருள்பணியில் நிகழ்ந்தவற்றை, ஆர்வத்துடன், பரபரப்புடன் பகிர்ந்துகொண்ட சீடர்களுக்கு இயேசு சொன்ன வார்த்தைகள் ஏமாற்றத்தைத் தந்திருக்க வேண்டும். 'நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்'
மேலோட்டமாகப் பார்க்கும்போது, இயேசுவின் இந்தக் கட்டளை போருத்தமற்றதாகத் தெரிகிறது. மக்கள் மத்தியில் அட்டகாசமாகப் பணிபுரிந்து திரும்பி வந்துள்ள சீடர்களைப் பாலைநிலத்திற்குப் போகச் சொன்னதற்குப்பதில், "சீடர்களே, பிரமாதம், இன்னும் பல இடங்களுக்குச் சென்று போதியுங்கள், அருஞ்செயல்களை ஆற்றுங்கள்" என்று இயேசு உற்சாகப்படுத்தி அனுப்பியிருக்க வேண்டாமா?
தன்னலம் மிக்க ஒரு சராசரித் தலைவன் தன்னுடைய சீடர்களுக்கு இவ்விதக் கட்டளையைத் தந்திருப்பார். சராசரித் தலைவனுக்குத் தேவையானதெல்லாம், அவரது கொள்கைகள், அவரது பெயர் மக்கள் மத்தியில் மீண்டும், மீண்டும் ஒலிக்கவேண்டும். இந்தச் சுயநலத் தேவைக்காக தன் தொண்டர்களைத் தலைவன் பயன்படுத்திக் கொள்வார். தொண்டர்களை இவ்விதம் பயன்படுத்தி, தன் தேவைகள் நிறைவடைந்ததும், அவர்களைத் தூக்கி எறியும் எத்தனைத் தலைவர்களை நாம் பார்த்திருக்கிறோம்?
தங்கள் சுயநலத்திற்காகப் பிறரைப் பயன்படுத்தும் தலைவர்களைப்போல், தவறாக வழிநடத்தும் போலியான மேய்ப்பர்களைப்பற்றியும், அவர்களை இறைவன் எவ்விதம் தண்டிப்பார் என்பதைப்பற்றியும் இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா தெளிவாகக் கூறுகிறார். போலி மேய்ப்பர்களைத் தண்டிப்பதாகக் கூறும் இறைவன், ஆடுகளைப் பேணிக்காக்கும் நல்ல மேய்ப்பர்களை அனுப்புவதாகவும் வாக்களிக்கிறார். இந்த வாக்குறுதியின் உச்சகட்டமாக இறைவன் அனுப்பியவரே இயேசு. அந்த நல்ல ஆயன் தன் சீடர்கள்மீது உண்மையான அக்கறை கொண்டிருப்பதை இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம்.
நல்லாயன் இயேசுவுக்கு, தன் பணிகளும், கொள்கைகளும் முக்கியம்தான். ஆனால், அதே வேளை, அப்பணிகளைச் செய்யும் சீடர்களும் மிகவும் முக்கியம். பணி செய்துத் திரும்பியுள்ள சீடர்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களை ஓய்வெடுக்கும்படி பணிக்கிறார் இயேசு.
உடலுக்கும், உள்ளத்திற்கும் புத்துயிர் தரும் மருந்து ஓய்வு. உடல் ஓய்வெடுக்கும் நேரத்தில் நமது உள்ளம் விழித்தெழுந்து, நாம் செய்த வேலைகளை, நமது அன்றைய நாளை அலசிப்பார்க்கவும் வாய்ப்பு கிடைக்கும். வாய்ப்பு கிடைக்கும்போது, அல்லது வாய்ப்புக்களை உருவாக்கிக்கொண்டு வாழ்வை அலசிப்பார்ப்பது பல வழிகளில் பயனளிக்கும். ஒவ்வொரு நாளும் இந்த அலசலுக்கு நேரம் ஒதுக்கினால், பல பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். இதைத்தான் புனித லொயோலா இஞ்ஞாசியார் தன் ஆன்மீகப் பயிற்சிகளில் நமக்குக் கற்றுத்தந்துள்ளார்.
புனித இஞ்ஞாசியார் கற்றுக்கொடுத்த ஆன்மீகப் பயிற்சிகளில் ஒரு முக்கியக் கூறு... ஒவ்வொரு நாளும் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களை ஒதுக்கி, அந்நாளைப் பற்றிய ஆன்மீகத்தேடலை மேற்கொள்வது. 'ஆன்மீக ஆய்வு' என்ற இந்த பயிற்சிக்குப் புனித இஞ்ஞாசியார் தலையாய இடம் கொடுத்திருந்தார். ஒரு நாளில் தியானம், செபம் என்ற மற்ற ஆன்மீக முயற்சிகளில் ஈடுபட ஒருவருக்கு நேரம் இல்லை என்றாலும், ஆன்மீக ஆய்வுக்குக் கட்டாயம் நேரம் ஒதுக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். துறவு வாழ்வில் நுழைந்தபோது இந்தப் பயிற்சியின் ஆழம் எனக்கு அதிகம் விளங்கவில்லை. ஆனால், வயதில் வளர, வளர, அறிவு தெளிய, தெளிய இந்த பயிற்சியின் ஆழம் எனக்குப் புரிந்தது. புனித இஞ்ஞாசியார் கற்றுத்தந்த இந்த ஆன்மீக ஆய்வு, துறவு வாழ்வில் உள்ளவர்கள் மட்டும் பின்பற்றும் வழிமுறை அல்ல. நம் அனைவருக்குமே தேவையான ஒரு சிறந்த பாடம்.
காலையில் எழுந்தது முதல், இரவு படுக்கப் போகும்வரை, பல நூறு வேலைகளால் நமது நாள் நிறைந்துவிடுகிறது. இவற்றில், மேலோட்டமாகச் செய்யும் பணிகள், முழு ஈடுபாட்டுடன் செய்யும் பணிகள் என்று பலவகைப் பணிகள். ‘இராக்கெட்’ வேகத்தில் மிகத் துரிதமாக இயங்கும் இவ்வுலகில், உண்பது, குளிப்பது, உடற்பயிற்சி செய்வது, உறங்குவது போன்ற தனிப்பட்டத் தேவைகளை நிறைவேற்றினோமா என்ற கேள்வி பல நாட்கள் நமக்குள் எழும் அளவுக்கு நாம் வேகமாகச் செல்கிறோம்.
எ அதேபோல், நமது குடும்ப உறவுகளுக்குத் தேவையான நேரமும் ஈடுபாடும் தருகிறோமா என்ற கேள்விகளும் எழுகின்றன. இப்படி இயந்திரமாக இயங்கும் நாம், ஒவ்வொரு நாளும் பத்து, பதினைத்து நிமிடங்கள் அமைதியில் அமர்ந்து, அந்த நாளைச் சீர்தூக்கிப் பார்த்தால், தெளிவுகள் பல பிறக்கும். குடும்பத்தில் ஏதேனும் பிரச்சனைகள் உருவானால், அவற்றை முளையிலேயே கிள்ளி எறிய இந்த ஆன்மீக ஆய்வு பயன்தரும். நம்முடைய நலனுக்காக, இறைவனுடன் நாம் செலவிடும் இந்த சில மணித்துளிகள் நிச்சயம் பயனளிக்கும்.
மின்காந்தத் திறனை உலகறியச் செய்த Michael Faraday, ஒரு முறை அறிவியல் வல்லுனர்கள் கூட்டமொன்றில் ஒரு மணி நேரம் உரை நிகழ்த்தினார். அந்த ஒரு மணி நேரமும் அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் அம்மேதை சொன்ன கருத்துக்களில் ஆழ்ந்திருந்தனர். ஒரு மணி நேரம் சென்றதே தெரியவில்லை. அவரது உரை முடிந்ததும், அனைவரும் எழுந்து நின்று நீண்ட நேரம் கரவொலி எழுப்பினர். இங்கிலாந்து அரசனான ஏழாம் எட்வர்ட் அப்போது Walesன் இளவரசராக இருந்தார். அவரும் அக்கூட்டத்தில் பங்கேற்று, அறிவியல் மேதை Faradayஐப் புகழ்ந்தார். கரவொலி மீண்டும் அரங்கத்தை நிறைத்தது. திடீரென, அரங்கத்தில் அமைதி நிலவியது. ஏனெனில், மேதை Faraday அங்கிருந்து அவசரமாகக் கிளம்பிச் சென்றார். அரங்கத்திற்கு அருகில் இருந்த ஒரு கோவிலில் அப்போது நண்பகல் செபத்திற்காக மணி ஒலித்திருந்தது. இளவரசர், இன்னும் பிற அறிவியல் வல்லுனர்கள் தன்னைச் சுற்றியிருந்தாலும், Faraday அந்த நேரத்தை இறைவனுக்கென ஒதுக்கியதால், கூட்டத்திலிருந்து, புகழ் மழையிலிருந்து விலகி, இறைவனை நாடிச்சென்றார். நம் அனைவருக்கும் தேவையான ஒரு பாடம் இது.
என்னதான், பணிகள் இருந்தாலும், எவ்வளவுதான் பேரும் புகழும் நம்மைச் சூழ்ந்திருந்தாலும் இறைவனைத் தேடிச்செல்லும் நேரங்கள் நம் ஒவ்வொரு நாள் வாழ்விலும் இருந்தால், இன்னும் நாம் உயர்வடைய வழியுண்டு. 'நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்' என்று தன் சீடர்களிடம் இயேசு கூறியதன் பொருளை ஓரளவு உணர்ந்திருப்போம் என்று நம்புகிறேன்.
பாலைநிலத்தில், தனிமையைத் தேடிச்செல்வது அங்கேயேத் தங்குவதற்கு அல்ல, மாறாக, தனிமையில் பெற்ற இறை அனுபவத்தை, வாழ்வைப்பற்றி தனிமையில் அறிந்துகொண்ட தெளிவுகளை மீண்டும் மக்களிடம் பகிர்ந்துகொள்ளவே அந்தத் தனிமை. இதை நமக்குச் சொல்லித்தருகிறது இன்றைய நற்செய்தியின் இறுதிப் பகுதி. பாலை நிலத்திற்கு இயேசுவும், மற்ற சீடர்களும் சென்றுள்ளனர் என்பதை அறிந்துகொண்ட மக்கள் அங்கும் அவர்களைத் தேடிச்சென்றனர். இவ்வாறு தேடிச்சென்ற மக்கள் மேற்கொண்ட முயற்சிகளை மாற்கு நற்செய்தி அழகாக விவரிக்கிறது: மாற்கு நற்செய்தி 6: 33
திருத்தூதர்களும், இயேசுவும் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்து கொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்குமுன் அங்கு வந்து சேர்ந்தனர்.
நகரங்களிலிருந்து பாலைநிலத்திற்கு மக்கள் வந்தனர் என்ற பகுதி நகரத்தையும், பாலைநிலத்தையும் இணைத்து நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. திசைகாட்டும் அடையாளங்கள், வழிகாட்டும் அடையாளங்கள் நகரங்களில் மலிந்துகிடக்கும். ஆனால், நகரங்களில் நம்மைத் திசைத்திருப்ப, நாம் வழிதவறிச் செல்லத் தூண்டும் பலர் இருப்பார்கள். இயேசுவின் காலத்திலும் இஸ்ரயேல் நகரங்களில் தவறான வழிகாட்டிய போலி மேய்ப்பர்கள் பலர் இருந்தனர். இவர்களின் தவறான வழிகாட்டுதலால் சலித்துப்போன மக்கள், தங்களைச் சரியான வழியில் நடத்தும் இயேசுவைத் தேடி நகரங்களைவிட்டு, பாலை நிலத்திற்குச் சென்றனர். பாலை நிலமென்றும் பாராமல், தங்களைத் தேடி வந்த மக்களைக் கண்டதும் இயேசு நடந்துகொண்டது நமக்கு மீண்டும் ஒரு பாடமாக அமைகிறது.
மாற்கு நற்செய்தி 6: 34
இயேசு கரையில் இறங்கியபோது, பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். பணிகளில் மூழ்கியதால், உண்ணவும் நேரமின்றி தவித்த சீடர்களுடன் பாலை நிலத்தை நாடிச் சென்ற இயேசு, அங்கும் மக்கள் தங்களைத் தேடி வந்துள்ளனர் என்பதை அறிந்ததும், தனது தேவைகள், தன் சீடர்களின் தேவைகள் ஆகியவற்றைப் புறந்தள்ளி, மீண்டும் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியைத் துவக்கினார் என்று இன்றைய நற்செய்தி முடிவடைகிறது.
இரண்டு சிந்தனைகளை இன்று நாம் மனதில் ஆழமாகப் பதிப்போம். வேலைகளில் மூழ்கித் தத்தளிக்கும் நாம், ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் ஒதுக்கி, இறைவனுக்கும், நம்முடைய நலனுக்கும் தகுந்த இடத்தை வழங்க முயல்வோம். நமது தேவைகளுக்காக ஒதுக்கும் நேரங்களிலும் அடுத்தவர் தேவை அதிகம் என்பதை நாம் உணர்ந்தால், நமது தேவைகளை ஒதுக்கிவிட்டு, அடுத்தவருக்கு உதவிக்கரம் நீட்டும் தாராள மனதை இறைவன் நமக்குத் தரவேண்டும் என்று மன்றாடுவோம்.
பரிவுநிறை தலைமை
நம் தமிழில், ‘வேலியே பயிரை மேய்ந்ததுபோல‘ என்னும் சொலவடை உண்டு. இன்று பயிர்களுக்கும் வயல்களுக்கும் வேலிகள் கம்பிக்கட்டு, ஹாலோ ஃப்ளாக், பூப்போட்ட சிமெண்ட தகடுகள் கொண்டு இடப்படுகின்றன. உயிரற்ற இந்த வேலிகள் பயிர்களை மேய்வதில்லை. ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நம் வயல்வெளிகளைப் பார்த்தால், ‘வேலிப்பயிர்கள்’ நமக்கு நினைவுக்கு வரும் – அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர் வேலிகளே கிடையாது, அடையாளக் கம்புகள் மட்டுமே நடப்பட்டிருக்கும்!
அகத்தி, ஆமணக்கு, சூரியகாந்தி, முட்செடிகள் போன்றவை வேலிப்பயிர்களாக இடப்பட்டன. இவை பயிர்களை மேய்வதுண்டு. எப்படி? செடிகளுக்கு வர வேண்டிய தண்ணீர், உரம் போன்ற ஊட்டத்தை இவை அதிகமாக எடுத்துக்கொண்டு, அல்லது செடிகளுக்கு வேண்டிய சூரிய வெயிலைக் கொடுக்காமல் இவை மறைத்துக்கொண்டால், அல்லது திருடர்கள் வரும்போது ஒளிந்துகொள்வதற்கு உகந்த பாதுகாப்பு இடமாக மாறிக்கொண்டால் வேலிகள் பயிர்களை மேய வாய்ப்புண்டு.
சில இடங்களில் வேலிகளாக மனிதர்கள் நிறுத்தப்பட்டார்கள். ‘மனித வேலிகள்‘ பகலிலும் இரவிலும் காவல் காப்பார்கள். மனித வேலிகள் உரிமையாளர்களின் நீட்சிகள். அதாவது, உரிமையாளர் தான் அங்கே நிற்பதற்குப் பதிலாக கூலி கொடுத்து மற்றவர்களை நிற்கச் செய்கிறார். மனித வேலிகள் சில நேரங்களில் விலைபோவதுண்டு. திருடர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் அவர்கள் துணைநின்றால் கனிகள் பறிக்கப்படுவதும், பயிர்கள் அழிக்கப்படுவதும் நேரிடும். இத்தகைய வேலிகளால் உரிமையாளருக்கு இழப்பு ஏற்படுகிறது. மனித வேலிகள் பயிர்களைக் காப்பதற்குப் பதிலாக அழிக்கின்றன எனக் கண்டறிகிற உரிமையாளர் மனித வேலிகளை அகற்றிவிட்டு, தானே பயிர்களைப் பாதுகாக்கவோ, அல்லது கம்பி வேலிகளை அமைத்து, கண்காணிப்பு கேமரா பொருத்தி அவற்றைப் பாதுகாக்கவோ தொடங்குகிறார்.
மனித வேலிகள் வெறும் கூலிகளே! கூலி அல்லது பணம் யார் அதிகம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு வேலை செய்வார்கள். ஆனால், உரிமையாளரோ பயிர்களை அன்பு செய்பவர், அவற்றின் வளர்ச்சி கண்டு மகிழ்பவர், தளர்ச்சி கண்டு வருந்துபவர். பரிவுகொண்டு அவற்றை மீண்டும் நன்னிலைக்கு உயர்த்துபவர்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவராகிய இயேசு பரிவுநிறைந்த தலைவராக நிற்கிறார். பரிவுநிறை தலைமைகொண்டு நம் தனிப்பட்ட, குடும்ப, சமூக வாழ்க்கையை அமைத்துக்கொள்ள நம்மை அழைக்கிறார்.
நற்செய்தி வாசகத்தின் சூழல், ‘பணியிலிருந்து திரும்புதல்.’ இயேசு தம் சீடர்களுக்கு அதிகாரம் அளித்து அவர்களைத் திருத்தூதுப் பணிக்கு அனுப்புகிறார். பணி முடிந்து அவர்கள் திரும்பி வருகிறார்கள்.
இந்த வாசகப் பகுதி மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது: (அ) மேய்ப்புப் பணி அறிவிக்கை. (ஆ) மேய்ப்புப் பணி ஓய்வு. (இ) மேய்ப்புப் பணி பரிவு.
(அ) மேய்ப்புப் பணி அறிவிக்கை (Pastoral reporting)
பணிக்குச் சென்ற திருத்தூதர்கள் திரும்பி வந்து ‘தாங்கள் செய்தவை, கற்பித்தவை அனைத்தையும்’ இயேசுவிடம் அறிவிக்கிறார்கள். குழுவேலையில் இது முதன்மையான ஒன்று. யார் நம்மை அனுப்புகிறாரோ, அவரிடம் திரும்பிச் சென்று பணி முடிந்துவிட்டது அல்லது பணி பற்றிய செயல்நிலையை அறிவிப்பது. பணி முடிந்துவிட்டது என அனுப்பியவர் உணர்ந்துகொள்வதற்கும், அதைத் திறனாய்வு செய்து மேம்படுத்துவதற்கும், அனுப்பியவருக்கும் அனுப்பப்படுபவருக்கும் உள்ள உறவை மேம்படுத்திக்கொள்வதற்கும் இந்த அறிவிக்கை பயன்படுகிறது. மேலும், புறப்படுகிற அனைவருமே வீடு திரும்ப வேண்டும் என்னும் வாழ்க்கைப் பாடத்தையும் இது கற்பிக்கிறது.
நம் முதல் கேள்வி, ஒவ்வொரு நாள் விடியலின்போதும் கடவுள் நம்மைப் பணிக்கு அனுப்புகிறார். நம் குடும்பத்தில், சமூகத்தில், குழுமத்தில், பணித்தளத்தில் நாம் இயங்குமாறு நம்மை அனுப்புகிறார். நாம் ஒவ்வொரு மாலையிலும் அவரிடம் திரும்பிச் சென்று அறிவிக்கை செய்கிறோமா? அவரின் காலடிகளில் அமர்ந்து, ‘ஆண்டவரே, இதுதான் நான் செய்தேன்! இதைத்தான் நான் பேசினேன்! இவர்களையெல்லாம் நான் சந்தித்தேன்!’ என அவரிடம் பேசுகிறோமா? அப்படிப் பேசும்போது நாமும் அமைதி பெறுகிறோம். நம் பணியையும் உறவையும் கடவுளின் திருமுன்னிலையில் திறனாய்வு செய்து நம் ஆற்றலை கூர்மைப்படுத்திக்கொள்கிறோம்.
(ஆ) மேய்ப்ப்புப் பணி ஓய்வு (Pastoral rest)
பணியின் நிறைவால் மகிழ்ந்திருக்கிற இயேசு, அவர்களின் பாதையைச் சற்றே திருப்பி ஓய்வுக்கு அனுப்புகிறார்: ‘நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்!’ தொடர்ந்து மாற்கு எழுதுகிறார்: ‘பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.’ அருள்பணி நிலையில் நான் இச்சொற்களைப் பார்க்கும்போது, சில நேரங்களில் ‘உண்பதற்குக் கூட நேரம் இல்லாத நிலை’ இருக்கிறது. பொதுநிலை வாழ்வில் இருப்பவர்களும் இதே அனுபவம் பெற்றிருப்பார்கள். இயேசு ஓய்வுக்குச் சீடர்களை அனுப்புகிறார்.
ஓய்வு என்றால் என்ன? ‘ஓய்வு’ என்றால் மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி தரக்கூடிய நேர அளவு எனச் சொல்லலாம். ஆனால், அதையும் தாண்டி, ‘ஓய்வு’ என்பது ‘நான் இல்லாமலும் இந்த உலகம் இயங்கும். நான் இன்றியமையாதவன் அல்ல’ என்ற தாழ்ச்சி உணர்வு பெறுவதற்கும் உதவுகிறது. சீடர்கள் பணிவாழ்வில் பல நபர்களைச் சந்திக்கிறார்கள். அவர்கள் வருவதும் போவதுமாக இருக்க இவர்களுக்கு மகிழ்ச்சி. ‘என்னைத் தேடி நிறையப் பேர் வருகிறார்கள்! என்னை எல்லாரும் அறிந்திருக்கிறார்கள்! நான் அவர்களுக்காக இருக்கிறேன்!’ என்னும் ‘புகழ் சோதனை’ அவர்களைச் சூழ்கிறது.
இந்தச் சோதனைக்குள் விழுந்தால் என்ன ஆகும்? மற்றவர்களுக்கு நாம் நேரத்தைக் கொடுத்துக்கொண்டே நம் முதன்மைகளை மறந்துவிடுவோம். அவர்கள் தங்களுக்குரியதைப் பெற்றுச் சென்றுவிடுவார்கள். ஆனால், நமக்கென உள்ள ஆற்றலும் நேரமும் உடல்நலமும் பறிபோய்விடும். இச்சோதனையில் நாம் விழவே கூடாது! ‘நான் இல்லாமலும் இந்த உலகம் இயங்கும்!’ என்ற கற்றலை நான் பெற வேண்டுமெனில், என்னையே கட்டாயப்படுத்தி நான் ஓய்ந்திருக்க வேண்டும்.
இரண்டாவது கேள்வி: நாம் பணிக்கும் பயணத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பது போல நம் ஓய்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமா? பணிகளுக்காக நாம் முதலில் தியாகம் செய்வது நம் ஓய்வையே. ஓய்வுதான் முதன்மையான உடற்பயிற்சி என்பதை நாம் உணர்ந்துகொள்வோம். இன்றைய பரபரப்பான உலகம் நாம் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும், வளங்களைப் பெருக்கிக்கொண்டே இருக்க வேண்டும், நிறைய நபர்களைத் தெரிந்திருக்க வேண்டும் என நம்மை விரட்டிக்கொண்டே இருக்கிறது. நாமும் தொடர்ந்து ஓடுகிறோம்! இன்ஸ்டாகிராமில் காணொலி பார்க்கும்போது கூட, ‘இன்னொன்று! இன்னொன்று!’ எனப் பார்த்துப் பார்த்து நம் உணர்வுகளுக்கு விருந்தளிக்க விரும்புகிறோம். ஆனால் விளைவு என்ன? சோர்ந்து போகிறோம், பசித்திருக்கிறோம், தனித்திருக்கிறோம்! ‘ஓய்வு’ கடவுளின் மேலான கொடை. ஆகையால்தான், ‘நான் அளிக்கும் அமைதியின் (ஓய்வின்) நாட்டிற்குள் நுழையவே மாட்டீர்கள்’ (காண். எபி 3:11) எனக் கடிந்துகொள்கிறார் கடவுள். ஓய்வின் மேன்மையை நமக்கு உணர்த்தவே அவர் படைப்பின் இறுதியில் ஏழாம் நாள் ஓய்ந்திருந்தார். ‘அமைதிக்காகவே (ஓய்வுக்காகவே) படைக்கப்பட்ட எம் இதயங்கள் உம்மில் அமைதி (ஓய்வு) காணும்வரை அமைதியின்றி (ஓய்வின்றி) இருக்கின்றன’ என அறிக்கையிடுகிறார் புனித அகுஸ்தினார். ஓய்வின் வழியாக நாம் நம்மையே புதுப்பிக்கிறோம்.
(இ) மேய்ப்புப்பணி முதன்மை (Pastoral priority)
இயேசுவும் அவருடைய சீடர்களும் படகேறித் தனிமையான ஓரிடத்திற்குச் செல்கிறார்கள். அவர்கள் செல்வதை மக்கள் கண்டு அவர்களுக்கு முன்னால் நடந்து சென்று இடத்தை அடைகிறார்கள். அவர்களுடைய ‘திக்கற்ற’ நிலை கண்டு அவர்கள்மேல் பரிவுகொள்கிறார் இயேசு. ‘அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள்மேல் பரிவுகொண்டு அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்’ எனப் பதிவு செய்கிறார் மாற்கு. ஓய்வுக்கென இயேசு சென்றாலும், சூழல் கண்டு தன் மேய்ப்புப்பணி முதன்மையை மாற்றுகிறார். மக்கள்மேல் பரிவுகொள்வதே இயேசுவின் முதன்மையாக இருக்கிறது. நாம் அல்ல, நம் சூழலே நம் பணியின் போக்கை நிர்ணயிக்கிறது எனக் கற்றுக்கொடுக்கிறார் இயேசு.
மூன்றாவது கேள்வி: நம் வாழ்வின் முதன்மையாக அக்கறையும் பரிவும் இருத்தல் வேண்டும். ‘நான் இவர்களுக்கு இதைச் செய்யாவிட்டால் இவர்களுக்கு என்ன ஆகும்?’ எனக் கேட்பதே பரிவு. அந்தப் பரிவு உடனடியான செயல்பாட்டுக்கு நம்மை இட்டுச் செல்கிறது. நல்ல சமாரியன் (காண். லூக் 10) பரிவு என்னும் உணர்வால் உந்தப்பட்டே செயல்படுகிறார். தந்தை இளைய மகன்மேல் கொண்ட பரிவினால் ஓடிச் செல்கிறார் (காண். லூக் 15). நம் குடும்ப உறவிலும் பணி வாழ்விலும் ‘பரிவு’ மிகவும் அடிப்படையானது. நீதியின் அடிப்படையில் அல்ல, மாறாக, பரிவின் அடிப்படையில் நாம் செயல்படும்போதே உறவுகளைத் தக்கவைத்துக்கொள்ள நம்மால் இயலும்.
மேய்ப்புப் பணி முதன்மையில் தலைவர்கள் தவறுவதை – ‘வேலியே பயிரை மேய்ந்ததுபோல‘ – இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. ‘என் மேய்ச்சலுக்குட்பட்ட ஆடுகளை அழித்துச் சிதறடிக்கும் மேய்ப்பர்களுக்கு ஐயோ கேடு!’ என்னும் எச்சரிக்கையோடு தொடங்குகிறது எரேமியாவின் இறைவாக்கு. யூதா நாட்டினர் பாபிலோனியாவுக்கு நாடு கடத்தப்படுமாறு அவர்களைச் சிலைவழிபாட்டுக்குத் தூண்டியவர்கள் அரசர்களே. ஆயர்நிலையில் இருந்த அரசர்களும், போலி இறைவாக்கினர்களும், குருக்களும் மக்களைக் கடவுளின் உடன்படிக்கையிலிருந்து திருப்புகிறார்கள். அவர்களைக் கடிந்துகொள்கிற கடவுள், ‘தாவீதுக்கு ஒரு நீதியுள்ள தளிர் தோன்றச் செய்வேன் … ஆண்டவரே நமது நீதி!’ என வாக்குறுதி தருகிறார். தாவீது அரசரின் வழிமரபில் வருகிற இயேசுவே நீதியுள்ள தளிர் என்பது நம்முடைய கிறிஸ்தவப் புரிதலாக இருக்கிறது.
இன்றைய இரண்டாம் வாசகத்தின் இரண்டு கருத்துகள் நற்செய்தி வாசகத்தோடு நன்றாகப் பொருந்துகிறது: (அ) ‘பகைமை என்னும் சுவரை இயேசு உடைத்தார்’ – மக்களுக்கும் தமக்கும் உள்ள இடைவெளி என்னும் சுவரை பரிவு வழியாகத் தகர்த்தெறிகிறார். (ஆ) ‘ஓய்வை’ (அமைதியை) நற்செய்தியாக அறிவிக்கிறார்.
பதிலுரைப்பாடலில், ஆண்டவரைத் தன் ஆயர் என அழைத்து மகிழ்கிற தாவீது, ‘உம் அருள்நலமும் (நன்மைத்தனமும்) பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்’ எனப் பாடுகிறார் (காண். திபா 23). ஆண்டவராகிய கடவுளை நம் தலைவர் (ஆயர்) எனக் கொண்டாடும் நாம், அவரிடம் அறிவிக்கை செய்வோம். அவர் தருகிற ஓய்வைக் கண்டடைவோம். பரிவு என்பதை நம் முதன்மையாகவும் கொள்வோம். இவ்வாறாக, பரிவுநிறை தலைமையை அவரிடம் கற்றுக்கொண்டு, அதையே நம் குடும்பத்திலும் குழுமத்திலும் வாழ்வாக்க முயற்சி செய்வோம்.
ஆயனின் மந்தைகளாய் ....ஆடுகளுக்கு ஆயர்களாய்
ஒரு பள்ளிக்கு புதிய ஆசிரியர் ஒருவர் பணியமர்த்தப்பட்டார். அவருக்கென்று ஒரு வகுப்பு தரப்பட்டது. அவருக்கு கொடுக்கப்பட்ட வகுப்பில் அதிக எண்ணிக்கையில் உள்ள மாணவர்கள் நன்கு படிப்பவர்களாக இருந்தார்கள். ஆசிரியர் தொடக்கத்தில் மிகச் சிறப்பாக தன் வகுப்பு மாணவர்களை வழிநடத்திச் சென்றார். அந்த ஆசிரியர் சற்று கலைத்திறமைகள் உடையவராக இருந்ததால் அவரிடம் பல்வேறு பொறுப்புகளும் கொடுக்கப்பட்டிருந்தன. காலப்போக்கில் அப்பொறுப்புகளிலேயே மூழ்கிய ஆசிரியர் தன் வகுப்பு மாணவர்களை வழிநடத்தும் முதன்மைப்பணியை மறந்தார். இறுதியாக அந்தபள்ளியிலேயே அந்த வகுப்பு மாணவர்கள் மட்டும் மிகவும் பின்தங்கியவர்களாய் ஆனார்கள்.
மேலே குறிப்பிட்டுள்ள நிகழ்வு நமக்கெல்லாம் சுட்டிக்காட்டுவதென்ன? நல்ல தலைவர்கள் அல்லது வழிகாட்டிகள் இல்லாவிட்டால் அவரைத் தொடர்வர்களின் வாழ்வு கரையேறாது என்பதுதான். சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நல்ல தலைவர் கிடைக்க வேண்டுமென்று நாம் பல நாட்களாக மன்றோடினோமே ஏன்? ஏனென்றால் நாடும் மக்களும் முன்னேற்ற பாதைக்கு செல்ல வேண்டும் என்பதற்காகத்தானே.
அன்புக்குரியவர்களே இன்றைய வாசகங்கள் ஒரு ஆயன் அல்லது ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும்,தன்னைத் தொடர்பவர்களை எவ்வாறெல்லாம் வழிநடத்த வேண்டும் என்பவற்றை கோடிட்டு காட்டுகிறது.நல்ல ஆயன் தன் ஆடுகளை கூட்டிச்சேர்க்க வேண்டும். அவைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். ஆபத்துகளிலிருந்து காக்க வேண்டும். இத்தகைய ஆயனுக்குரிய பண்புகள் பழைய ஏற்பாட்டுகாலத்தில் தந்தை கடவுளிடமும் நற்செய்தி பகுதிகளில் மூலம் இயேசுவிடம் அவருடைய உயிர்ப்புக்கு பின் ஆவியானவர் தொடக்க முதல் இன்று வரை திருஅவையை வழிநடத்துவதிலும் இருப்பதை நாம் உணர்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
ஒரு தலைவனுக்கு வேண்டிய முக்கிய பண்பு பரிவு. அது இயேசுவிடம் அதிகமாய் வெளிப்பட்டதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கெல்லாம் உணர்த்துகிறது. ரோமை அதிகாரத்தாலும் பணக்கார உயர்தர யூதர்களின் அடக்கு முறையாலும் மக்கள் சிதறுண்டு துன்புற்று கிடந்ததை பார்த்து இயேசு பரிவு கொண்டார். அவர்களிடம் நல்லதைச் சொன்னார். நன்மைகள் செய்தார். தம் போதனைகளால் வழிநடத்தினார். தொடர்ந்து ஆயர்களாகப் பணியாற்ற சீடர்களை உருவாக்கினார்.
இன்று நமக்கும் இரண்டு அழைப்புகள் கொடுக்கக்கடுகின்றன. முதலாவதாக ஆயனாம் ஆண்டவரை நம்பி அவர் மந்தையில் இருப்பது.ஆம் ஆண்டவரை நம்பி அவர் வார்த்தைகளைக் கேட்டு அவர் திரு உளத்திற்கு பணிந்து வாழ்ந்தால் நம் வாழ்வு ஏற்றம் பெறும் இரண்டாவதாக ஆயனின் வழியில் நாமும் நல் ஆயர்களாய் வாழ்வது. ஆம் நம்மால் இயன்ற அளவு பிறரை நல்வழிப்படுத்திடவும், தீமைக்கு எதிராக குரல்கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒற்றுமையுடன் வாழ வழிவகுக்கும் நல் ஆயர்களாக வாழவும் அழைக்கப்படுகிறோம். நாம் எக்காரணத்தை கொண்டும் பிரிவினைகளை ஏற்படுத்தக் கூடாது. இவற்றையெல்லாம் செய்ய முனைந்தால் நாமும் நல்லாயர்களே. முயல்வோமா !
இறைவேண்டல்
ஆயனே எம் ஆண்டவரே! உம் மந்தையின் ஆடுகளாகவும் அதே நேரத்தில் சமூகத்தில் நல்ல வழிகாட்டிகளாகவும் நாங்கள் விளங்கிட வரமருளும். ஆமென்.
பொதுக்காலம் 16-ஆம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (எரே. 23:1-6)
இறைவன் கண்ணுக்கு புலப்படாதவர், அவருக்கு உருவம் கிடையாது. அவர் மனித உணர்விற்கும் உறவிற்கும் அப்பாற்பட்டவர் என்று தங்களுக்கு தாங்களே வரையறைகளை வைத்து உண்மை இறைவனை உதறித்தள்ளி வாழ்ந்தவர்கள் இஸ்ராயேல் மக்கள். இந்த இஸ்ராயேல் மக்களுக்கு இறைவன் தன்னை ஒர் சாதாரண மனிதனாக வெளிப்படுத்துகிறார். இறைவன் தன்னை ஓர் ஆசானாகவோ அல்லது அறிஞராகவோ வெளிப்படுத்தவில்லை. மாறாக, ஒர் ஆயனாக வெளிப்படுத்துகின்றார். இஸ்ராயேல் மக்களுக்கு ஆடு வளர்க்கும் தொழிலே முதல் தொழிலாக இருந்துது. எனவே ஆயனின் பண்புகளும் கடமைகளும் ஆழப்பதிந்த ஒன்றாக இருந்திருக்கும். இஸ்ராயேல் மக்களின் வாழ்வோடு ஒன்றிப்போன ஒன்றாக இருந்திருக்க வேண்டும். இஸ்ராயேல் தலைவர்கள் தாங்கள் வழி தவறிபோனதோடு மட்டுமல்லாமல் மக்களையும் தவறான வழியில் நடத்தி வந்தனர். எனவேதான் இறைவன் தன்னையே காப்பவராக, மேய்ப்பவராக, வழிநடத்துபவராக, எல்லாவற்றிற்கும் மேலாக, நல்ல ஆயனாக இறைவாக்கினர் எரேமியா வழியாக வெளிப்படுத்துகின்றார்.
இரண்டாம் வாசகப் பின்னணி (எபே 2:13-18)
எபேசு நகர மக்களில் பாதிக்கு மேற்பட்டோர் புற இனத்தவராக இருந்தனர். யூத கிறிஸ்தவர்களுக்கும் புற இன கிறிஸ்தவர்களுக்குமிடையே பல ஏற்றத்தாழ்வுகள் நிலவி வந்தன. யூத கிறிஸ்தவர்கள் தங்களை உயர்ந்தவர்களாக எண்ணி வந்தனர். இந்த சூழலில் தான் தூய பவுலடியார் இயேசுவின் பாடுகள், சிலுவை மரணம், உயிர்ப்பு இவை மனிதரிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகள் அனைத்தையும் நீக்கிவிட்டதை தெளிவாக எழுதுகிறார். திருமுழுக்கு பெற்ற அனைவரும் சமம். கிரேக்கரானாலும், யூதரானாலும், பிற இனத்தவரானலும், அடிமையானாலும் எல்லோரும் இயேசுவின் பெயரால் பெற்ற திருமுழுக்கினால் சகோதரர்கள் என்ற நிலையை, உறவை அடைகிறார்கள். எனவே இயேசு நல்ல தலைவர், வழிகாட்டி என்பதனை தூய பவுல் எபேசு நகர மக்களுக்கு தெளிவாக எழுதுகின்றார்.
நற்செய்தி வாசகப் பின்னணி (மாற்கு 6:30-34)
இயேசு தன்னையே நல்ல ஆயனாக அறிமுகப்படுத்துகிறார். ஏன்? உரோமையரின் அடிமைத்தனத்தில் வாழ்ந்த யூதர்கள் உரோமை அரசு அலுவலர்களாலும், தலைமை குருக்கள், பரிசேயர்கள், சதுசேயர்களாலும் ஏமாற்றப்பட்டு, ஒடுக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு வந்தார்கள். இந்த யூத மக்கள் தங்களின் முகவரி இழந்தவர்களாய் வாழ்ந்து வந்தனர். என்றாவது மீட்டி வராதா என்ற ஏக்கத்தில் இருந்த மக்களுக்கு இயேசுவின் போதனை ஆறுதல் தந்தது. இயேசுவை தேடிவந்த மக்களின் முகங்களில் ஏமாற்றம் தெரிந்தது, ஏக்கம் இருந்தது. எனவே இயேசு அவர்கள் மீது பரிவு கொள்கிறார்.
மறையுரை
“பூரிவு கொண்டார்” என்ற ஒரே வாக்கியத்தை மட்டும் இந்த மறையுரை நூலில் சிந்திக்கலாம். இந்த பரிவு அன்பில் கலந்த பரிவு. இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்ந்தால் “Compossion” என்று சொல்லலாம். இந்த பரிவில் கலந்த அன்பு எத்தகையது? ஓர் தாயானவள் தன் பேறுகால வேதனையில் தன் உயிரை எல்லாம் ஒன்றிணைத்து பேறுகால வேதனையை தாங்கி பிள்ளையை பெற்றெடுப்பாள். பெற்ற சிறிது நேரத்திலேயே தன் வலியையெல்லாம் மறந்து தன் குழந்தையை தன் மார்போடு அணைத்து தன்னையே அறியாமல் பாலுட்டூபவளே அதனை விட சிறந்த அன்பு யேசுவின் அன்பு அதனைவிட சிறந்த பரிவு இயேசுவின் பரிவு விவிலிய பக்கங்களை புரட்டிப் பார்த்தால் இயேசுவின் அன்பு எல்லையற்றது பரந்து கிடப்பதை காணலாம். எல்லோரும் இவள் விபச்சாரி இவளைக் கல்லால் எரிந்து கொல்லவேண்டும் என்றனர் ஆனால் இயேசு மட்டும் "பாவம் செய்யாதே சமதானமாய் போ" என்றார். சக்கேயு பாவி, சக்கேயு சபிக்கப்பட்டவன் என்று எல்லோ ராலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட போது, இவனும் அபிரகாமின் மகன் என்றார். இயேசு (லூக்கா 19:1-10) குருட்டுப்பயயலே கத்தாதே சும்மாயிறு என்று சுற்றியிருந்தவர்கள் எல்லோரும் அதட்டிய போது இயேசு மட்டும் பார்த்திமேயூ என் பக்கத்தில் வா, உனக்கு பார்வை தருகின்றேன் என்றார் (மாற்கு 10:46) இவன் ஊதாரி, சொத்தை எல்லாம் விற்று தின்றவன் என்று ஊரே குற்றம் சாட்டிய போதும் இவன் இறந்திருந்தான் இப்போது உயிர்பெற்று விட்டான் என்ற தந்தையின் அன்பை தரணிக்கு சொன்னவர் இயேசு (லூக்கா 15:11-32) இப்படி இயேசுவின் அன்பை அடுக்கிக் கொண்டே செல்ல லாம். எல்லையில்லாமல் அன்பு செய்யும் இறைவனை நாம் எப்படி அன்பு செய்கிறோம்? இன்று நம்மிடையே அன்பு எப்படி இருக்கின்றது.
“அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசை கொள்வதன் அர்த்தமென்னடா
காசில்லாதவன் உருவத்திலே”
என்ற பாடல் வரிகள் இன்றைய அன்பின் உண்மை நிலையை விளக்குகின்றது. ஐந்து வயதில் அண்ணன் தம்பி 10 வயதில் பங்காளி இதுதான் அன்பின் இன்றைய நிலை, ஏன் இந்த நிலை? நமது அன்பு பரிவில் நிலைத்திருப்பதை விட்டுவிட்டு பணத்தில் நிலைத்திருப்பதால் தான் அப்படியென்றால் இயேசுவுக்கு மட்டும்தான் இந்த அன்பு சாத்தியமா? இல்லை எல்லோருக்கும் உண்டு. அன்னை மரியாளுக்கும் சூசைக்கும் இந்த அன்பும் கணவன் மனைவி உறவும் இன்று நமக்கு சாத்தியம் இல்லையா? அல்லது தோபித்துக்கும் தொபியாவுக்கும் இருந்த மகன் தந்தை உறவு இன்று நமக்கு ஏன் சாத்தியமில்லை? உண்டு இயேசுவை போல நாமும் களைப்- பிலும் சோர்விலும் பிறரை முழுமையாக அன்பு செய்யும் போது. மாம் நனைக்கலாம் இவர்கள் அனைவரும் விவிலிய கதா-பாத்திரங்கள், ஆனால் நொடிக்கு நொடி மாறிக் கொண்டிருக்கும் இந்த உலகில் உண்மை அன்பு எப்படி சாத்தியம் என்று 3 வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் நடந்த சம்பவம் ஒன்றை செய்தித். தாளில் வாசித்து நினைவுக்கு வருகின்றது.
அது காலை நேரம் எல்லோரும் பரபரப்பாக அவரவர்கள் அலுவலில் ஈடுபட்டிருந்தார்கள். தனியார் மருத்துவமனை ஒன்றில் இளைஞன் ஒருவன் கையில் துப்பாக்கியை எடுத்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுடத்துவங்கினன். எல்லோரும் உயிர்பிழைத்தால் போதும் என்று ஒடிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பெண் மட்டும் அவனை நோக்கி வருகின்றாள். அவளிடம் பயம் இல்லை. இந்த இளைஞனோ அவளை குறிவைக்கிறான் இவளோ சிறிதும் தயக்கமின்றி அவன் அருகில் வந்து அவனை அணைத்து முத்தமிட தொடங்குகிறாள். இளைஞன் கையிலிருக்கும் துப்பாக்கியை கீழே போடும் வரை முத்தமிட்டு கொண்டே இருக்கிறாள். அவனும் துப்பாக்கியை தாக்கி எறிந்து விட்டு காவலர்களிடம் சரணடைகிறான். பத்திரிகை நிபுணர்களும் தொலைக்காட்சி நிபுணர்களும் அந்த பெண்மணியிடம் எல்லோரும் உயிருக்காக அஞ்சி ஓடிக் கொண்டே இருக்க உங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு தைரியம் வந்தது என்பதற்கு அவள் அன்புக்காக ஏங்கும் இயேசுவை இந்த இளைஞனிடம் கண்டேன் என்றாள். அன்பு செய்வது எல்லோருக்கும் முடியும் எல்லாருக்கும் சத்தியம் எப்போதும் இயேசுவைப் போல உழைப்பாலும் களைப்பிலும் சோர்விலும் இலவசமாய் அன்பை கொடுக்கும் போது அன்பை தாராளமாய் கொடுக்கும் போது ' இயேசுவை அன்பு செய்யவும், இயேசுவை போல அன்பு செய்யவும், ' இயேசுவாய் அன்பு செய்யவும் முடியும்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
1. இறைவன் தன்னை ஆயனாக வெளிப்படுத்துகிறார். இன்று பல பிரிவினை சபைகள் உருவ வழிபாட்டிற்கு தவறான விளக்கம் கொடுத்து மக்களிடையே பல குழப்பங்களை ஏற்படூத்தி வருகின்றனர். அவர்களின் கேள்விகளுக்கெல்லாம் பதிலாக இன்றைய வார்த்தை வழிபாடு அமைந்துள்ளது
2. இயேசு களைப்புடன் வந்த சீடர்கனை ஓய்வு எடுக்க சொல்கின்றார். இயேசு ஒரு நல்ல தலைவனாக இங்கு பணி செய்கின்றார். பணியாளனின் உழைப்பை மட்டுமே கருத்தில் கொண்டு அவனை கசக்கி பிழியாமல் அவனின் ஓய்வை காண்கின்றார்.
ஆண்டவர் ஆயர்.
ஒரு நல்ல ஆயர் ஆடுகள் மேல் இரக்கம் உடையவர், கனிவுடையவர். இன்றைய நற்செய்தியில் “அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள்மீது பரிவுகொண்டு, அவர்களுக்கு பலவற்றைக் கற்பித்தார்” (மாற். 6 : 4) என்பதை, இம்முதல் வாசகழும் இதே கருத்தை விளக்குவதைக் காண்க.
ஆண்டவர் நம் ஆயர்
திருப்பாடல் ஆசிரியர் “ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறைவு இல்லை” (திபா. 23) என்பார். வாசகத்தில் வரும். ஆயராகிய நம் கடவுளும் ஆடுகளின் மேல் அக்கறை கொண்டவர்; மந்தையை சிதறடிக்கும் போலி ஆயர்களை, மந்தையின் எதிரிகளைத் துரத்தியடித்து, தம் கோலும் கைத்தடியும் கொண்டு, மந்தையைப் பாதுகாத்து, வழி நடத்துவார் (திபா. 23). நற்கழனிகளுக்குக் கொண்டு சென்று, அவற்றிற்கு உண்ண உணவும் அருந்த நீரும் அளிப்பார். எனவேதான், “பசும்புல்வெளி மீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். என்னுடைய எதிரிகளின் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்'” என்பார் திருப்பாடல் ஆசிரியர் (திபா, 23). இந்த ஆயன் பாதுகாப்பிலும் கண் காணிப்பிலும் ஆடுகள் “அச்சமுறா;. திகிலுறா; காணாமலும் போகா,” என்கிறார் ஆண்டவர்” (எரே. 23 : 4). இத்தகைய ஆயரைக் கொண்டுள்ள நாம் கலக்கமுறுவதற்கு என்ன இருக்கிறது? “அவர்கள்மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்” (மாற். 6 : 34) என்ற சொற்கள் நமக்கு திடமளிப்பனவாக. நாம் ஆண்டவருக்குப் பணிந்து நடக்கும் ஆடுகளாக இருக்கிறோமா? அல்லது, பாழாக்கும் ஆயர்களுக்கு நம்மை அடகு வைக்கிறோமா? ஆண்டவர் மட்டுமே நம் ஆயராயிருக்கு மட்டும் நமக்குக் குறையேதுமிராது என்பதை உணர்ந்து இந்த நல்ல ஆயருக்கு, அவரது மதிப்பீடுகளுக்கு அடிபணிந்து நடப்போமா?
ஆண்டவர் நம் அரசர்.
தாவீது அரசரின் குலக்கொழுந்து நம் ஆயர். “அவனது அரசை நான் என்றும் நிலைநிறுத்துவேன். நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான்” (2 சாழு. 7 : 19 - 14) என்பது நம் அரசராகிய கிறிஸ்துவைப் பற்றிக் கூறப்பட்டனவன்றோ? “அரசராக இருந்து அவர் ஆட்சி செய்வார்'' (23: 5). அவர் நீதியை நிலைநாட்டுபவராக இருப்பார். அவரது பெயர் “ஆண்டவர் நமது நீதி” (23 : 6) என்பதே. அரசரின் அணிகலன் நீதியே என்பதை நாம் அறிவோம். அந்த நீதியுள்ள அரசரின் மக்களாக வாழவிரும்பும் நாமும் நீதிக்கு எடுத்துக்காட்டுகளாய் வாழவேண்டும். நாம் நீதியுள்ள வாழ்க்கை வாழ்வதோடு நீதிக்காகக் குரல்கொடுத்துப் போராடவும் தயங்கக் கூடாது. எங்கெல்லாம் அநீதி தலைவிரித்தாடுகிறதோ, அங்கெல்லாம் நம் குரல் ஒலிக்க வேண்டும். “நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவுபெறுவர்” (மத். 5 : 6) என்பது நீதிக்காக உழைப்பதில் நாம் காட்ட வேண்டிய வேட்கையைக் குறிக்கிறது எனலாம். நீதிக்காகப் பசியும் தாகழும் கொள்கிறோமா? அல்லது எது எவ்வாறிருந்தால்தான் என்ன? நமக்கு எதற்கு தொல்லைகள் என்று வாளாதிருக்கிறோமா? நீதிக் கடவுளோடு கைகோர்த்து நடப்போம். அதே வேளையில் நம்மை நீதிக்காகப் பாடுபடத் தூண்டுபவர் இறைவனே என்பதை உணர்வோம். இந்த உணர்வே நமக்கு உறுதியையும் நம்பிக்கையும் அளிக்கும் (12 : 6). “வல்லமைமிக்க அரசரே! நீதியை நீர் விரும்புகின்றீர்; நேர்மையை நிலைக்கச் செய்கின்றீர்; யாக்கோபினரிடையே நீதியையும் நேர்மையையும் நீர்தாமே நிலைநாட்டுகின்றீர்”” (திபா. 99 : 4) என்று அவரைப் போற்றுவோமா? “வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன” (திபா. 97 : 6). அறிவுள்ள மனிதர்களாகிய நாம் ....? ? ?
ஆண்டவர் நமது நீதி.
இரண்டாம் வாசகம் எபே. 2:13-18
கிறிஸ்து மக்கள் அனைவருக்கும் சமாதானம் கொண்டு வந்தார் என்பது இன்றைய வாசகக் கருத்து. கிறிஸ்து இயேசுவில் திருமுழுக்குப் பெற்ற அனைவரும் அவரது சகோதரர்களே, இறைப் பிள்ளைகளே. எனவே நம்மிடையே குலம், சாதி, பணம், பதவி இவற்றின் அடிப்படையிலே யாதொரு வேறுபாடும் இருக்கக்கூடாது (காண் கலா. 3 : 27 – 28).
தொலைவிலிருந்து அருகே
நாம் எல்லோருமே பாவத்தால் கடவுளை விட்டு அகன்றுவிட்ட நிலையிலே உள்ளோம்; அவரிடமிருந்து தொலைவில் பிரிந்துவிட்டோம். எனவே, சாதி வெறுப்பினால், பணத் திமிரால், அதிகார மமதையால் கிறிஸ்து நமக்கே உரியவர்; கோவில் பணி, அதன் நடைமுறைகள் நம்முடையன; பிறர் அதில் தலையிடக்கூடாது என்று எல்லாம் எண்ணுவதும் தவறிலும் தவறு. கிறிஸ்து இயேசுவில் கீழ் இனத்தவரும் இல்லை, மேல் இனத்தவரும் இல்லை. அவர்முன் நாம் எல்லோரும் “தொலைவிலிருந்து அருகிலே கொண்டுவரப் பட்டவர்கள்” என்பதை உணர்ந்து, சாதி அடிப்படையிலே, மத அடிப்படையிலே பிறரை இனப்படுத்துவதைத் தவிர்ப்போம்! “சாதிகள் இல்லையடி பாப்பா” என்று பாடினார் பாரதியார். ஆண் சாதி, பெண் சாதியன்றி பிற சாதி யாமறியோம் என்ற முறையிலே எல்லோரையும் ஓரினம் ஓர் குலமாக நாம் அணைத்துக் கொள்வோமா? நம் தமிழகத் திருச்சபையின் அடிப்படைத் தேவைகளில் இது முதன்மையானது என்பதை உணர்வோமா? கோவிலில் மட்டுமன்று, வீடுகளிலும், வீதிகளிலும், ஏன் கல்லறைகளில்கூட, சிலரை நாம் தொலைவில் வைத்துவிட்டோமே ! இது நியாயமா? இயேசு அருகிலே கொணர்ந்தவரை நாம் தூர வைப்பது இயேசுவையே பழிப்பதன்றோ? நம்மையும் தொலைவிலிருந்துதானே அவர் கூட்டிவந்துள்ளார்? எனவே நம்மில் இனி “தொலைவு”, “அருகில்” என்ற பாகுபாடு மறையவேண்டும். அதற்காகக் கங்கணம் கட்டி உழைப்போமா? அன்றாடம் நம்முடைய வாழ்விலே இப்பண்பாட்டை வளர்ப்போம். பின் பங்கிலே, ஊரிலே, நாட்டிலே குல, இன, சாதி வேறுபாடுகளை அகற்ற முயற்சி செய்வோம்.
செயலாற்றும் கிறிஸ்து!
சிலுவையிலே கிறிஸ்துவின் இதயம் குத்தித் திறக்கப்பட்டது ஒர் அறிகுறி. எருசலேம் திருக்கோயிலின் திரைச் சீலைகள், தலைமைக் குருவை பிற குருக்களிடமிருந்தும், குருக்களை மக்களிடமிருந்தும் பிரித்து வைத்தன. கிறிஸ்துவின் இறப்பிலே இத்திரைச் சீலைகள் கிழிக்கப்பட்டுவிட்டன. அவரின் திறக்கப்பட்ட இதயம் இதன் அறிகுறி. எனவே, திரைச்சீலை கிழிந்து, தடை மதில் உடைந்தது. இனித் திருத்தூயகம் அனைவர் நுழையும் இடமாகிறது. கிறிஸ்துவின் இரத்தம் அனைவரின் பாவங்களையும் கழுவிவிட்டது. அவரே நம்மிடையே பகைமையும் விரோதத்தையும் போக்கிச் சமாதானத்தைக் கொண்டு வந்துள்ளார். அவர் வழியாகவே நாம் எல்லோரும் ஒரு குலமாகத் தந்தையிடம் தேவ ஆவியார் வழி அணுகிவரும் பேறு பெற்றுள்ளோம் (எபே 2 : 18).
நாம் இப்போது ஒரு புதிய மனுக்குலம் (எபே 2: 15). இயேசுவால் கட்டப்பட்ட ஒரு புதிய ஆலயம். “உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவியார் தங்கும் கோவில்” (1கொரி. 6:19). இங்கே திரைச்சீலைகள் கிடையா; இங்கே தடைமதில்கள் கிடையா. எனவே, கிறிஸ்துவின் சிலுவை, அவரது திரு இரத்தம், அவரது ஊனுடல் நமக்குக் கொடுத்துள்ள “சமாதான நற்செய்தியை” (2 : 17) நாம் நம் அன்றாட வாழ்விலே செயல்படுத்துவோமா? ஏழையென்றும் அடிமையென்றும் எவனுமில்லை நம்மிடையே; இழிவு பெற்ற மனிதர் என்போர் நம்மிடையே எவனுமில்லை என்பதை உணர்வோம். இறைவன் முன் நாம் எல்லோரும் மீட்கப்பட்ட தலீத்துகளே !
கிறிஸ்துவே நம் சமாதானம்.
நற்செய்தி மாற்கு 6:30-34
ஐந்து அப்பங்களை இயேசு பலுக்கிய நிகழ்ச்சியின் முன்னுரையாக வருகிறது இன்றைய வாசகம். இயேசுவினுடையவும் அவருடைய சீடருடையவும் “இரு முனை" வாழ்வை இப்பகுதி சுட்டுகிறது. செயல்புரியும் இயேசுவுக்குச் செபம் தேவை; செபம் செய்த இயேசவுக்குச் செயல் கடமை. செபமும் செயலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக அமைந்து இயேசுவினுடைய வாழ்வைச் செம்மைப்படுத்துகின்றன எனலாம். ஆசான் வழியே மாணவன் வழி என்பதை உணர்வோமா?
செபம் வேண்டும்
திருத்தூதரும் சரி, இயேசுவும் சரி, நாள் முழுவதும் நற்செய்தியைப் போதிப்பதில் ஈடுபட்டனர். அதே வேளையில் போதனையே போதும், செயலே எல்லாம் என்ற நிலையிலே அவர்கள் அமைந்துவிடவில்லை. “தனிமையான இடத்துக்கு” இயேசு அவர்களை அழைத்துச் செல்கிறார் என்று 2 தடவை இவ்வாசகத்தில் வருகிறது (மாற் 6 : 31 - 32) தனிமையான இடத்திற்குச் செல்வது என்பது நற்செய்திகளிலே, ஒய்வெடுக்கச் செல்வதைக் குறிக்கும்; அதே வேளையிலே, செபம் செய்யச் செல்வதையும் சுட்டும் (காண் மாற்.1: 35). இரவிலே மலைக்குச் சென்றார் இயேசு என்பதும், அவரது செப வாழ்வைச் சுட்டுவதாகும். இயேசு செபத்தின் இன்றியமையாமையை உணர்ந்தவர். எனவேதான், “சோதனைக்குட்படாதபடி விழித்திருந்து செபியுங்கள்” (14 :38) என்றார். “கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்” (மத். 7 : 7) என்றார். பவுலும், “இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்” (1 தெச. 5 : 46 - 17) என்றார். நாம் கற்பனை செய்வதற்கு மேலானவையெல்லாம் செபம் பெற்றுத் தருகிறது என்பதை உணர்வோம். உணர்ந்து, உருக்கமாக நமது தேவைகளுக்காக, பிறரின் தேவைகளுக்காக, நாட்டின் நலனுக்காகச் செபிப்போம்.
செயல் வேண்டும்
நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மட்டுமன்று; பிறருக்காக, பிறர் நலனுக்காக நாம் செயல்பட வேண்டும். நான், எனது, எனக்கு என்பதைச் சிறிது தள்ளி வைத்துவிட்டு, பிறரது நிலையை, ஏழைகளின், நசுக்கப்பட்டோரின் நிலையைச் சற்றுக் கவனிப்போம். எல்லா மனிதரும் சுடவுளின் சாயல் என்பதை உணர்வோம் (தொநூ. 1 : 26 - 27). கடவுளின் பிரதிபலிப்புகள் துன்புற்று நலிவதைக் காண்போம். இதற்கு நாம் தூரம் தொலைபோக வேண்டியதில்லை. நம்மைச் சுற்றியே எத்தனை பேர் நசுக்கப்பட்ட சடவாழ்வு வாழ்கின்றனர்? இவர்கள் வாழ்கின்றார்கள் என்பதைவிட, செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறலாமன்றோ! இயேசுவும் அவர் சீடரும் “உண்பதற்குச் கூட நேரமில்லை” (8 : 3) என்ற முறையிலே நற்செய்தி போதித்தனர்; நோயுற்றோரைக் குணப்படுத்தினர்; பசியால் வருந்தியோருக்கு உணவளித்தனர். தம்மைப் பின்பற்றிய கூட்டம் ““ஆயனில்லா ஆடுகள் போலிருந்ததால் அவர்கள் மீது மனமிரங்கி நெடுநேரம் இயேசு போதிக்கலானார்”' (6 : 84) என்பது நமக்குப் பாடமாயமைய வேண்டும். ஒய்வு தேடிய இயேசு, ஒய்வைத் தள்ளிவிட்டுச் செயற்படுகிறார். என்னே அவரது செயல் வேகம்?
“மனமிரங்கினார்'” என்ற சொல்லுக்குக் “குலை நடுங்கினார்'” என்பது அடிப்பொருளாகும். பிறர் துன்பம் கண்டு இயேசு குலை நடுங்கியது போல், “பிறர் கண்ணில் நீர் வடிந்தால் என் நெஞ்சம் உருகுதையா” என்று நாம் கூறமுடியுமா? நமது திருச்சட்டமாகிய அன்பை இயேசு நம் இதயங்களில் பொறித்து வைக்க நாம் அனுமதிப்போமா? (எரே. 31: 33). செயல் வாழ்வுதான். நம் செப வாழ்வு; விசுவாச வாழ்வு இவற்றிற்கு வலுக்கொடுக்கிறது என்பதை உணர்வோமா? நம் வாழ்வில் செபமும் அன்புச் செயல்களும் ஒன்றுபட்டு நடக்கும் முறையிலே நம் நடத்தையை அமைப்போமா? செபம் மட்டுமே நம் வாழ்க்கையை ஆக்கிரமிக்கும் போது நாம் செத்தவர்கள் ஆகிறோம் (யாக் 2 :18- 17). செயல் மட்டுமே நம்மை ஆக்கிரமிக்கும்போது நாம் வெறும் இயந்திரங்களாக மாறி விடுகிறோம். எனவே, “அன்பின் வழியாய்ச் செயலாற்றும் நம்பிக்கை ஒன்றே” (கலா. 5: 6) நம்மை ஆட்கொள்ளட்டும்.
அவர்கள் மீது மனமிரங்கினார்.