மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக்காலத்தின் 5ஆம் ஞாயிறு
2-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
யோபு 7:1-4,6-7|1கொரிந்தியர் 9:16-19, 22-23;|மாற்கு 1:29-39

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


குணமளிக்கும் ஆண்டவர்

கதை

வீதி வழியாக சென்றுகொண்டிருந்த ஒருவன் தவறி ஒரு ஆழமான குழியில் விழுந்துவிட்டான். அவ்வழியே சென்ற ஒருவன் குழியில் விழுந்து கிடப்பவனைப் பார்த்து உனக்கு இரண்டு கண்கள் இருந்தும் பார்த்துப் போகத் தெரியலையா! இனிமேலாவது பார்த்துப் போகக் கற்று கொள் என புத்தி சொல்லி நகர்ந்துவிட்டார். இரண்டாவது அதேவழியே வந்த ஒருவன் ஐயோ சகோதரா! குழியில் விழுந்துவிட்டாயா? எப்படியாவது கற்களைப் பிடித்து வெளியே வர முயற்சி செய் என்று கூறி அவனும் நகர்ந்து விட்டான். மூன்றாவதாக வந்தவரோ, கீழே இறங்கி அந்த மனிதனை மேலே தூக்கிக் கொண்டு வந்தார்.

ஆம்! அவர்தான் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. அவர் அறிவுரை மட்டும் கூறவில்லை. விலகிச் செல்லவில்லை. மக்கள் மீது பரிவுகாட்டியதோடு நழுவவில்லை. மாறாக மக்களின் நிலைக்கு இறங்கி வந்து அவர்களை எல்லாவிதத் துன்பங்களிலும் இருந்துவிடுவித்தார். எனவே எசாயா மிகத் தெளிவாகச் சொல்கிறார்: அவர் நம் பிணிகளை ஏற்றுக்கொண்டார். நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார் (எசாயா 53:4).

இன்றைய நற்செய்தியில் இயேசு கிறிஸ்து சீமோன் பேதுருவின் மாமியாரைக் குணப்படுத்துகிறார். பல்வேறு பிணிகளால் அவதிப்பட்ட மக்களையும் குணப்படுத்துகிறார். எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் உதவிக்கரம் நீட்டுகிறார். எனவே திருத்தூதர் பணியிலே புனித லூக்காஸ் கூறுகிறார்: அவர் எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார் (தி.ப. 10:38):

இரண்டாவது, இயேசு செபத்தையும், செயலையும் இணைப்பதைப் பார்க்கிறோம். இவை இரண்டும் நாணயத்தின் பிரிக்க முடியாத இரு பக்கங்கள் போல இயேசுவின் வாழ்வில் வெளிப்படுகிறது. நன்மையான காரியங்களை ஓய்வின்றி செய்து கொண்டே போகிறார். அதே நேரத்தில் தனிமையான இடம் தேடிச்சென்று இரவில் மலையில் இறை வேண்டல் செய்கிறார். எந்த அளவுக்கு செபத்தில் ஈடுபட்டாரோ அந்த அளவுக்குப் பணியிலும் ஈடுபட்டார்.

மூன்றாவது, கிறிஸ்து மனிதருடைய ஆன்மீகத் தேவை களையும், உடல் சார்ந்த தேவைகளையும் வெவ்வேறாகப் பிரிக்காமல் இரண்டையும் ஒன்றாக இணைக்கிறார்.

  1. ஐந்து அப்பங்களைக் கொண்டு மக்களுக்கு உணவளிக்கிறார். தானே உயிர்தரும் உணவு என்பதையும் உணர்த்துகிறார்.
  2. பார்வை இன்றி இருந்த குருடனைப் பார்க்க வைக்கிறார்.
  3. உடன் தானே உலகின் ஒளி என்பதையும் வெளிப்படுத்துகிறார்.
  4. இறந்துபோன லாசரை உயிர் பெற்று எழச் செய்கிறார். தானே உயிர்த்து எழுதலும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.
  5. (இயேசுவைப்போல திருச்சபையும் மக்களின் துயர் துடைக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துள்ளது)

இன்றைய முதல் வாசகத்திலே யோபுவைப் பாருங்கள். துன்பச் சுமை தாங்க முடியாமல் நெஞ்சம் குமுறுகிறார். அமைதியில்லை. தூக்கம் இல்லை. கண்களில் ஒளியில்லை. வாழ்வில் நம்பிக்கை இல்லை. ஆனால் இறுதியில் துன்பம் அவருடைய நம்பிக்கையை வலுப்பெறச் செய்கிறது. காயப்படுத்தினாலும் கட்டுப் போட்டவர் அவரே! அடித்தாலும் ஆற்றுகின்றவர் அவரே (யோபு5:18) என்ற ஆழமான உண்மையை உணர்ந்தார் யோபு.

ஓர் இளைஞர் ஒரு பங்கு தந்தையிடம், நாள் முழுவதும் என்ன செய்கிறீர்கள் என்று கேட்க, அவர் கோபத்துடன் என் வீட்டில் இருக்கிறேன், நடப்பேன், உட்காருவேன், சாப்பிடுவேன், படுப்பேன், சுருட்டு பிடிப்பேன் அதைக் கேட்பதற்கு நீர் யார்? என்று கேட்டார். சிறிது நேரம் சென்று பங்குத் தந்தை அந்த இளைஞனிடம், நாள் முழுவதும் கடவுள் என்னப்பா செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்டார். அவனோ, கடவுள் அவர் வீட்டில் இருப்பார் - நடப்பார் - உட்காருவார் - சாப்பிடுவார் - படுப்பார் அதை கேட்க நாம் யாரு சாமி? என்றான்.

ஆம், இவ்வாறுதான் நாம் கடவுளைப் பற்றி நினைக்கிறோம். அவரோ வானகத்தில் நிம்மதியாக இருக்க, நாமோ வையகத்தில் துன்பம் தாங்காமல் பெருமூச்சு விடுவதாக நினைக்கிறோம்.

அன்பார்ந்தவர்களே! கடவுள் நம்மோடு இருக்கிறார். நம்மோடு வெயிலில் காய்கிறார். மழையில் நனைகிறார். அவரே நம் பிணிகளை ஏற்று, நம் நோய்களைச் சுமந்துகொள்கிறார்.

உங்கள் கவலைகளை எல்லாம் அவரிடம் விட்டுவிடுங்கள். ஏனென்றால் அவர் உங்கள்மேல் கவலை கொண்டுள்ளார் (1 பேதுரு 5:7).

இந்த உண்மையானது நமது துன்பத்தில் நமக்கு ஆறுதல் தருகிறது. குழியில் விழுந்துவிட்ட நம்மைத் தூக்கி எடுப்பவர் அவரே.

ஆனால் ஓர் உண்மையை நாம் நன்கு உணர வேண்டும். அமெரிக்காவில் ஜனாதிபதியாக ஆப்ரகாம் லிங்கன் இருந்த போது உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. சோகமான முகத்தோடு காணப்பட்ட லிங்கனைப் பார்த்து அமைச்சர் ஒருவர் - நீங்கள் ஒன்றும் பயப்படாதீர்கள். கடவுள் நம் பக்கம் இருக்கிறார். வெற்றி நமதே, தோல்வி நம்மை அணுகாது என்றார்.

அதற்கு லிங்கன் அமைதியாக, கடவுள் நம் பக்கம் இருக்கிறாரோ, இல்லையோ அது எனக்குத் தெரியாது. ஆனால் நானும் இந்த நாடும் அவர் பக்கம் இருக்க வேண்டுமே. நாம் அவர் அருகில் இருந்தால்தான் நமக்குத் தோல்வி அணுகாது என்றார்.

முடியுரை:

செபிப்பவர் பக்கத்தில் கடவுள் இருப்பார். செபத்தால் இறைவனோடு இணைகிறோம். நானே திராட்சைச் செடி, நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும், நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னை விட்டுப் பிரிந்து உங்களால் ஒன்றும் செய்ய முடியாது (யோவா. 15:5) என்றார் இயேசு.

எனவே காலையிலும், மாலையிலும், பகலிலும், இரவிலும் எப்போதும் செபிப்போம். இறைவல்லமையைப் பெறுவோம் (1 தெச. 5:17). ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இன்றும் வரம் தந்துகொண்டிருக்கின்றேன் என்கின்றார் இயேசு. அன்று யோபு புலம்பியது போல (முதல் வாசகம்) இன்றும் புலம்புகின்ற மனிதர்கள் நம் நடுவே உண்டு மலருக்கு மணமழகு தேனுக்குச் சுவையழகு கடலுக்கு நீரழகு நீருக்கு மீனழகு! மீனுக்குக் கண்ணழகு! கண்ணுக்கு இமையழகு என் வாழ்வில் எந்த அழகும் இல்லை! நான் செல்லும் பயணத்தில் பாதுகாப்பு இல்லை! நான் நடத்தும் குடும்பத்தில் சமாதானம் இல்லை! இதோ ஒரு புதுக்கவிதை விதை விதைத்தான் விவசாயி வளர்ந்தது - விதையல்ல வாங்கிய கடனுக்கு வட்டி கடன் தொல்லை! கற்பனை தொல்லை! நான் என்ன செய்வேன்? எங்கு செல்வேன்? ஒன்றுமே புரியவில்லை!

எல்லாவற்றிற்கும் மேலாக
உடலிலும் நோய்!
உள்ளத்திலும் நோய்!
ஒரு பக்கம் நோயின் தொல்லை!
மறு பக்கம் பேயின் தொல்லை! 

இதோ இப்படி அழுது புலம்புகின்றவர்களுக்கு அன்று மட்டுமல்ல (நற்செய்தி) இன்றும் வரம் தந்துகொண்டிருக்கின்றேன் என்ற நற்செய்தியை இயேசு தருகின்றார் (இரண்டாம் வாசகம்).

இதோ ஆண்டவராம் இயேசு இன்றும் மக்களின் பிணிகளைக் (நற்செய்தி) குணமாக்குகின்றார் என்பதற்கு ஓர் உதாரணம்.

நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் என்பர் பிலிப்பைன்ஸ் நாட்டில் வாழும் திருமதி மேரி சரோஜா என்பவர் பாவம் அந்தப்பெண் எல்லா வசதிகளும் இருந்தும் உடலிலே நோய்! என்ன நோயென்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை! எத்தனையோ மருத்துவர்கள், எத்தனையோ மருந்துகள்! எந்தப் பலனும் இல்லை! இறுதியாக மேரி சரோஜாவின் கண்கள் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதாவின் பக்கம் திரும்பின.

பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து தம் கணவரோடு மேரி சரோஜா வேளாங்கண்ணிக்கு வந்தார். அன்னையை நோக்கி உருக்கமாகச் செபித்தார். அம்மா ஆரோக்கிய மாதாவே வெகுதூரத்திலிருந்து உமது உதவியை நாடிவந்திருக்கும் என்னை கடைக்கண் பாருமம்மா! எனக்கு என்ன வியாதி என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை தாயே! உன்னையன்றி எனக்கு வேறு தஞ்சமில்லை தாயே! எப்படியாவது என்னை குணமாக்குமம்மா! உமது திருமகன் இயேசுவிடம் எனக்காகப் பரிந்துபேசுமம்மா என்று மெழுகாக உருகிச் செபித்தார்.

செபித்துக்கொண்டிருந்தபோது திடீரென ஒரு தீய ஆவி அவரைவிட்டு ஓடியது. புனித ஆரோக்கியமாதா மேரி சரோஜாவிற்காகப் பரிந்து பேச, மன்றாட செபிக்க, வல்லமை மிக்க இயேசு மேரி சரோஜாவைப் பிடித்திருந்த தீய ஆவிக்கு ஆணையிட்டார்.

தீய ஆவி மேரி சரோஜாவை மேலே தூக்கி கீழே போட்டது. கீழே விழுந்த மேரி சரோஜா எழுந்தார். கொஞ்ச நேரம் மூச்சுத்திணறல் மூடியிருந்த கண்கள் மெதுவாகத் திறந்தன பூரண சுகம். ஆம். இன்றும் இயேசு நம் நடுவே அரும் அடையாளங்களைச் செய்துகொண்டுதான் இருக்கின்றார். இன்று நமக்கு வேண்டியதெல்லாம் அன்று இயேசுவைத் தேடிவந்த மக்களிடம் நின்று நிலவிய ஆழமான, மறையாத மங்காத நம்பிக்கையொன்றே!

மேலும் அறிவோம் :

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது (குறள் 8).

பொருள்:
அறக்கடலாகத் திகழும் சான்றோனாகிய இறைவன் அடியொற்றி நடப்பவர், ஏனைய பொருளும் இன்பமும் ஆகிய கடல்களை எளிதாகக் கடந்து செல்வர் ஏனையோர் பிற துன்பங்களிலிருந்து மீள முடியாது தவிப்பர்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

வீதிவழியாகச் சென்று கொண்டிருந்த ஒருவர் தவறி ஒரு குழியில் விழுந்து விட்டார். அவ்வழியே மூவர் சென்றனர். முதலாவது நபர் குழியில் விழுந்துகிடந்தவரைப்பார்த்து, "உனக்கு இரண்டு கண்கள் இருந்தும் பார்த்துப்போகத் தெரியலையே! இனிமேலாவது பார்த்துப் போகக் கற்றுக்கொள்' என்று அறிவுரை வழங்கி அகன்று விட்டார். இரண்டாவது நபர், ஐயோ சகோதரா குழியில் விழுந்து விட்டாயா? எப்படியாவது வெளியே வர முயற்சி செய்யேன்" என்று கூறி அவர்மேல் தமக்கு இருந்த பரிவைக் காட்டி நழுவிவிட்டார். மூன்றாவது நபரோ குழியில் இறங்கி அவரை வெளியே தூக்கிவிட்டார். அந்த மூன்றாவது நபர்தான் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அவர் மக்களுக்கு அறிவுரை மட்டும் வழங்கி அகன்று போகவில்லை; மக்கள் மீது பரிவு காட்டியதோடு நழுவவில்லை. மாறாக, அவரே மக்களுடைய நிலைக்கு இறங்கி வந்து அவர்களை எல்லாவிதத் துன்பங்களிலிருந்தும் விடுவித்தார். உண்மையில், அவர் நம் பிணிகளை ஏற்றுக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார் (எசாயா 53:4).

இன்றைய நற்செய்தியில் இயேசு கிறிஸ்து சீமோன் பேதுருவின் மாமியாரைக் குணப்படுத்தியதுடன், பல்வேறு பிணிகளாலும் தீய சக்திகளாலும் துன்புற்ற பலரையும் குணப்படுத்துகிறார். அவர் எல்லா மக்களுக்கும், எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும், எல்லாவிதங்களிலும் உதவிக்கரம் நீட்டினார். சுருக்கமாக, அவர் எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார். (திப 19:38).

கிறிஸ்து செபத்தையும் செயலையும் வெவ்வேறாகப் பிரிக்காமல், அவை இரண்டையும் ஒன்றிணைக்கிறார். இரவில் மலைக்குச் சென்று தனிமையில் இறைவேண்டல் செய்கின்றார். பகலில் மக்களிடம் சென்று அவர்களுக்குப் பணிபுரிகிறார். அவர் எந்த அளவுக்கு செபத்தில் ஈடுபட்டாரோ அந்த அளவுக்கு மக்கள் பணியிலும் ஈடுபட்டார். அவருடைய செபவாழ்வு அவருடைய செயல்வாழ்வுக்கு எவ்விதத்திலும் தடையாக அமையவில்லை. அவ்வாறே அவரது பணிவாழ்வு அவரது செபவாழ்வுக்கு எவ்விதத்திலும் இடையூறாக அமையவில்லை. கிறிஸ்து மனிதருடைய ஆன்மீகத் தேவைகளையும் உடல் சார்ந்த தேவைகளையும் வெவ்வேறாகப் பிரிககாமல், அவை இரண்டையும் ஒன்றிணைக்கிறார். மக்களுடைய உடற் பிணிகளைக் குணமாக்கியதோடு அவர்களுடைய பாவங்களையும் மன்னிக்கிறார்.

ஆன்மா - உடல் என்று மனிதனைக் கூறுபோடாமல் முழுமனிதனுக்கும் நலமளிக்கிறார்.

கிறிஸ்து இம்மை வாழ்வையும் மறுமை வாழ்வையும் வெவ்வேறாகப் பிரிக்காமல், அவை இரண்டையும் ஒன்றிணைக்கிறார். ஐந்து அப்பங்களைக் கொண்டு மக்களுக்கு உணவளித்த அவர், 'நானே உயிர் தரும் உணவு' என்பதை உணர்த்தினார். பார்வையின்றிப் பிறந்த ஒருவருக்குப் பார்வை அளித்த அவர் 'நானே உலகின் ஒளி' என்பதைச் சுட்டிக் காட்டினார். இறந்துபோன இலாசரை உயிர்த்தெழச் செய்த அவர் 'நானே உயிரும் உயிர்ப்பும்' என்பதை உணர்த்தத் தவறவில்லை. இயேசுவின் அடியொற்றி நாமும் செபத்தோடு செயலையும், ஆன்மீகத் தேவைனளுடன் உடலின் தேவைகளையும், இம்மை நலன்களோடு மறுமை நலன்களையும் ஒன்றிணைத்து, எல்லாருக்கும் எல்லாவிதத்திலும் பணிபுரிவோம். சுருககமாக, எல்லாருக்கும் எல்லாம் ஆகுவோம் (1 கொரிந்தியர் 9:22)

இயேசுவைப் போலவே திருச்சபையும் மக்களின் துயர்துடைக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துள்ளது. இருப்பினும் துன்பம் ஒரு தொடர் கதையாகவே உள்ளது. துன்பமே இல்லாதவர் இரண்டே பேர் ஒருவர் இன்னும் பிறக்கவில்லை; மற்றொருவர் ஏற்கெனவே இறந்துவிட்டார். அப்படியானால் மண்ணில் வாழும் அனைவரும் துன்புறுகின்றனர். இது இயற்கையின் நியதி. பறவை பிறந்தது பறப்பதற்காக. மனிதன் பிறந்தது துன்புறுவதற்காக.

இன்றைய முதல் வாசகத்தில் யோபு துன்பத்தின் சுமை தாங் முடியாமல் நெஞ்சம் குமுறுகிறார்.அவருக்கு அமைதியில்லை, தூக்கமில்லை; கண்களில் ஒளியில்லை; வாழ்வில் நம்பிக்கையில்லை. ஆனால் இறுதியில் துன்பம் அவருடைய கடவுள் நம்பிக்கையை வலுப்பெறச் செய்கிறது. காயப்படுத்தினாலும் கட்டுப்போடுபவர் அவரே; அடித்தாலும் ஆற்றுகின்ற கை அவரதே (யோபு 5.18) என்ற ஆழமான இறையியல் உண்மையை அவர் உணர்ந்தார்.

ஒர் இளைஞன் தன் பங்குத்தந்தையிடம், 'நாள் முழுவதும் என்ன செய்கிறீர்கள்?' என்று கேட்க, அவர் கோபத்துடன் 'என் வீடடில் நான் இருக்கிறேன்: நடப்பேன், உட்காருவேன். படுப்பேன், சுருட்டுப் பிடிப்பேன், குடிப்பேன் அதைப்பற்றிக் கேட்பதற்கு நீ யாருடா? என்று கேட்டார். சிறிதுநேரம் கழித்து பங்குத் தந்தை அந்த இளைஞனிடம், 'நாள் முழுவதும் கடவுள் என்னடா செய்துகொண்டிருக்கிறார்? என்று கேட்டதற்கு, அவன் 'கடவுள் அவர் வீட்டில் இருக்கிறார். அவர் நடப்பார். உட்கார்வார். படுப்பார், சுருட்டுப் பிடிப்பார். குடிப்பார் அதைப்பற்றிக் கேட்க நாம் யாரு சாமி? : பதிலடி கொடுத்தான்.

இவ்வாறு தான் நாம் கடவுளைப் பற்றி நினைக்கிறோம். அவர் வானகத்தில் நிம்மதியாயிருக்க, நாமோ வையகத்தில் துன்பம் தாங்காமல் ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறோம். கடவுள் இருக்கின்றாரா அவருக்கு உண்மையிலேயே நம்மீது அக்கறை உண்டா? என்று வினவுகின்றோம்.

நம் கடவுள் நம்மோடு இருக்கிறார். நம்மோடு வெயிலில் காய்கிறார். மழையில் நனைகிறார். நம் துன்பத்தைத் தாங்கிக் கொள்வதற்குச் சக்தியையும் கொடுக்கிறார். நம் சக்திக்கு அப்பாற்பட்ட துன்பத்தை ஒரு போதும் அவர் நம்மீது சுமத்தமாட்டார். நம்மைக் குழியில் விழச் செய்பவர் கடவுள் அல்ல; குழியில் விழுந்து விட்ட நம்மை வெளியே துக்கி விடுகின்றவரே கடவுள்!

அவரே நம் பிணிகளை ஏற்று, நம் நோய்களைச் சுமந்து கொள்கிறார். அடித்தாலும் அரவணைக்கிறார். காயப்படுத்தினாலும் குணமாக்குகிறார். இவ்வுண்மையானது நம் துன்பத்தில் நமக்கு ஆறுதல் அளிப்பதாக அவர் என்னைக் கொன்றாலும் அவரிடத்தில் நம்பிக்கை வைப்பேன்" என்ற யோபுவின் நம்பிக்கையுணர்வு நம் உள்ளத்தில் வேரூன்றி வளர்வதாக துன்பம் நம்மைத் தூய்மைப்படுத்தி நமது விசுவாசப் பார்வையை மேலும் கூர்மைப்படுத்துவதாக.

துன்பம் தொடர்ந்துவந்தபோதும்-நாம்
சோர்ந்துவிடலாகாது பாப்பா
அன்பு நிறைத் தெய்வம் உண்டு துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா - (பாரதி)
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இயேசுவின்‌ பணி விடுதலைப்பணி

எத்தனை எதிரிகள்‌ நமக்கு - நமக்குள்ளும்‌ நம்மைச்‌ சுற்றிலும்‌! -
உடலுக்குப்‌ பகையான நோய்கள்‌, பிணிகள்‌.
மனதுக்குப்‌ பகையான கவலைகள்‌, சஞ்சலங்கள்‌.
ஆன்மாவுக்குப்‌ பகையான பாவங்கள்‌, பலவீனங்கள்‌.

அனைத்துக்கும்‌ பின்னே இருந்து நம்மை ஆட்டி அலைக்கழிக்கும்‌ அலகையான தீய சக்திகள்‌. இந்தச்‌ சூழலில்‌, ““அந்தோ! இரங்கத்‌ தக்க மனிதன்‌ நான்‌! சாவுக்குள்ளாக்கும்‌ இந்த உடலினின்று என்னை விடுவிப்பவர்‌ யார்‌?” (உரோ. 7:24) என்று திருத்தூதர்‌ பவுலோடு நாமும்‌ சேர்ந்து கதறுகிறோம்‌. “நம்‌ ஆண்டவர்‌ இயேசு கிறிஸ்துவின்‌ வழியாய்க்‌ கடவுள்‌ தாம்‌ விடுவிப்பார்‌'” (உரோ. 7:25). புற இனத்துத்‌ திருத்தூதரின்‌ பிசிறடிக்காத இறை நம்பிக்கை!

நீதிமன்றத்திலே கொலை வழக்கு நடந்து கொண்டிருந்தது. தன்னுடைய கட்சிக்காரர்‌ குற்றமற்றவர்‌ என்று வழக்கறிஞர்‌ ஒருவர்‌ வாதாடிக்‌ கொண்டிருந்தார்‌. அப்போது அவருக்கு ஒரு தந்தி வந்தது. அதை வாங்கிப்‌ பிரித்துப்‌ படித்தார்‌. பின்பு முகத்தில்‌ எவ்விதச்‌ சலனமும்‌ இல்லாமல்‌ அதை மடித்துத்‌ தன்‌ சட்டைப்‌ பையில்‌ வைத்துவிட்டுத்‌ தொடர்ந்து வாதாடினார்‌. இறுதியில்‌ அவருடைய கட்சிக்காரர்‌ குற்றமற்றவர்‌ என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

எல்லாம்‌ முடிந்தபிறகு அவருடைய நண்பர்களான வழக்கறிஞர்கள்‌ அவரைச்‌ சூழ்ந்துகொண்டு அவர்‌ கைகளைக்‌ குலுக்கி அவரைப்‌ பாராட்டினார்கள்‌. அப்போது ஒருவர்‌, “தந்தி ஒன்று வந்ததே என்ன விடயம்‌?” என்று கேட்க, தன்னுடைய மனைவி இறந்துவிட்டதாகத்‌ தந்தி வந்திருக்கிறது என்று சொல்ல அனைவரும்‌ அதிர்ச்சிக்கும்‌ ஆச்சரியத்திற்கும்‌ ஆளானார்கள்‌.

“என்னங்க, மனைவி இறந்ததை விடவா வழக்கு உங்களுக்கு முக்கியமாய்ப்‌ போயிற்று? நீதி அரசரிடம்‌ தெரிவித்துவிட்டு நீங்கள்‌ கிளம்பியிருக்கலாமே!” என்று கேட்டனர்‌. அதற்கு அவர்‌ சொன்னார்‌: “இறந்து போன மனைவி மீண்டும்‌ உயிரோடு வரப்போவதில்லை. ஆனால்‌ நான்‌ தொடர்ந்து வாதாடாவிட்டால்‌, குற்றமற்ற என்‌ கட்சிக்காரரின்‌ உயிர்‌ அநியாயமாகப்‌ போயிவிடுமே! அதனால்தான்‌ நான்‌ தொடர்ந்து வாதாடினேன்‌”. இப்படிச்‌ சொன்னவர்‌ யார்‌ தெரியுமா? இவர்தான்‌ நமது நாட்டின்‌ “இரும்பு மனிதர்‌” என்று அழைக்கப்பட்ட சர்தார்‌ வல்லபாய்‌ பட்டேல்‌!

வாழ்க்கையில்‌ நாம்‌ எல்லோருமே போராட்டங்களைச்‌ சந்தித்துக்‌ கொண்டே இருக்கின்றோம்‌. “மண்ணில்‌ வாழ்வதே மனிதருக்குப்‌ போராட்டம்தானே”. (யோபு. 7:1) “இன்னல்மிகு இரவுகள்‌ எனக்குப்‌ பங்காயின. படுக்கும்போது எப்போது எழலாம்‌ என்பேன்‌. இரவோ நீண்டிருக்கும்‌. விடியும்‌ வரை புரண்டு உழல்வேன்‌” (7:3-4) என்பது யோபுவின்‌ கண்ணீர்க்கதை. ஆனால்‌ அந்தப்‌ போராட்டங்களில்‌ மூழ்கி வாழ்க்கையைத்‌ தொலைத்துவிடாமல்‌ இருப்பதுதான்‌ உண்மையான அருத்தம்‌ நிறைந்த வாழ்வு.

“காயப்படுத்தினாலும்‌கட்டுப்போடுபவர்‌ அவரே. அடித்தாலும்‌ ஆற்றுகின்ற கை அவரதே” (யோபு. 5:18). இதுவே யோபுவின்‌ தளராத நம்பிக்கை. திருத்தூதர்‌ பவுல்‌ நற்செய்தியை அறிவிப்பதில்‌ தனது வாழ்க்கைக்கு அருத்தம்‌ தேடிக்கொண்டார்‌ (2ஆம்‌ வாசகம்‌). ஏதோ ஒரு விதத்தில்‌ வலுவிழந்த மக்களுக்கு.வளமும்‌ வலுவும்‌ சேர்ப்பதில்‌ தனது வாழ்வுக்குப்‌ பொருளும்‌ பொலிவும்‌ கண்டார்‌. அதோடு ஓர்‌ இடத்தில்‌ ஒடுங்கிப்‌ போகாமல்‌ எல்லா மக்களோடும்‌ சரி நிகராய்‌ பழகுவதில்‌, உலகளாவிய சகோதரத்துவத்தில்‌ வாழ்வின்‌ அருத்தத்தைக்‌ கண்டு கொண்டார்‌.

இயேசுவின்‌ பணி விடுதலைப்பணி. உடல்‌ நோய்களிலிருந்து விடுதலை, மனச்‌ சுமைகளிலிருந்து விடுதலை, பாவக்கட்டுக்களிலிருந்து விடுதலை, அலகையின்‌ ஆதிக்கத்திலிருந்து விடுதலை. இந்த விடுதலைப்‌ பணிக்கு உரமூட்டுவதாக அமைவது இயேசு தன்‌ தந்தையுடன்‌ கொண்ட உறவு. இறை வேண்டலில்‌ தன்‌ பணியின்‌ தெளிவையும்‌ ஊக்கத்தையும்‌ பெற்றார்‌ இயேசு. நாமும்‌. செபிக்க வேண்டும்‌ என்று வலியுறுத்தினார்‌. “சோதனைக்கு உட்படாதபடி செபியுங்கள்‌”” (லூக்‌. 22:40) “மனந்தளராது எப்போதும்‌ விழித்திருந்து செபியுங்கள்‌” (லூக்‌. 18:1-8).

“உடைந்த உள்ளத்தோரைக்‌ குணப்படுத்துகின்றார்‌. அவர்களின்‌ காயங்களைக்‌ கட்டுகின்றார்‌'” (தி.பா. 147:3). எனவே நம்முடைய கடவுளைப்‌ புகழ்ந்து பாடுவது நல்லது என்றுபதிலுரைப்பாடல்‌ நமக்கு அழைப்பு விடுக்கின்றது. உடைந்த உள்ளம்‌ துன்பத்தின்‌ அடையாளம்‌. இறைவன்‌ ஒருவரே ஆறுதல்‌ அளிக்கக்கூடியவர்‌. புனித அந்தோனியார்‌ திரைப்படத்தில்‌ “ஆனந்தமானது அற்புதமானது” என்று தொடங்கும்‌ பாடலில்‌ நம்பிக்கையூட்டும்‌ நான்கு வரிகள்‌:

நம்பிக்கையுடனே இறைவனைத்‌ தேடு  
நாளையப்‌ பொமுதே அவன்‌ வருவான்‌  
நன்மை தீமையில்‌ அவனை நாடு  
நன்மை மட்டுமே அவன்‌ தருவான்
‌

எல்லா ஆசீருக்கும்‌ ஆணிவேர்‌ நம்பிக்கையே! “நம்பிக்கை நார்‌ மட்டும்‌ நம்‌ கையில்‌ இருந்தால்‌ உதிர்ந்த பூக்கள்‌ கூட ஒவ்வொன்றாய்‌ வந்து ஒட்டிக்‌ கொள்ளும்‌” என்கிறார்‌ கவிஞர்‌ ஒருவர்‌.

கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்த யோபுவுக்குத்‌ துன்பத்திற்கு மேல்‌ துன்பம்‌. மனைவியே யோபுவிடம்‌ “இன்னுமா மாசின்மையில்‌ நிலைத்திருக்கிறீர்‌? கடவுளைப்‌ பழித்து மடிவதுதானே!” என்று சாடியபோது, “நீ அறிவற்ற பெண்‌ போல்‌ பேசுகிறாய்‌. நன்மையைக்‌ கடவுளிடமிருந்து பெற்ற நாம்‌, ஏன்‌ தீமையைப்‌ பெறக்‌ கூடாது?” என்று கூறி ஆழமான இறை நம்பிக்கையை வெளிப்படுத்தினார்‌. விளைவு? இழந்த அனைத்தையும்‌ இருமடங்காகப்‌ பெறவில்லையா? ““அவரிடம்‌ நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்‌ கொண்ட ஒவ்வொருவருக்கும்‌ கடவுளின்‌ பிள்ளைகளாகும்‌ உரிமையை அளிப்பவர்‌”: (யோ. 1:12) நம்‌ கடவுள்‌.

வாழ்க்கை என்றால்‌ ஆயிரம்‌ இருக்கும்‌ 
வாசல்தோறும்‌ வேதனை இருக்கும்‌ 
வந்த துன்பம்‌ எது என்றாலும்‌ 
வாடி நின்றால்‌ ஓடுவதில்லை 
எதையும்‌ தாங்கும்‌ இதயம்‌ இருந்தால் 
இறுதி வரைக்கும்‌ அமைதி இருக்கும்‌. 
நம்பிக்கை பிறக்கும்‌.

இன்றைய நற்செய்தி நம்‌ வாழ்வுக்கும்‌ பல பாடங்களைக்‌ கற்றுத்‌ தருகிறது.

1. இயேசுவின்‌ ஆற்றலால்‌ குணமடைந்த பேதுருவின்‌ மாமியார்‌ உடனே எழுந்து மற்றவர்களுக்குப்‌ பணிவிடை செய்வதில்‌ ஆர்வமுடன்‌ ஈடுபடுகிறார்‌ (மார்க்‌. 131) நமக்குத்‌ தரப்படும்‌ உடல்‌ நலமும்‌ உரிமையும்‌ மற்றவர்களுக்குப்‌ பணிவிடை செய்வதற்காகவே.

2. எவ்வகைப்‌ பிணியாளரும்‌ நம்பிக்கையுடன்‌ இயேசுவிடம்‌ வந்தால்‌ குணம்‌ பெற்றே திரும்பிச்‌ செல்வர்‌. குறிப்பாகப்‌ பிறருக்காக நாம்‌ செய்யும்‌ பரிந்துரை மன்றாட்டு எவ்வளவு ஆற்றல்‌ உள்ளது என்பதை நாம்‌ உணர்கிறோம்‌ (மார்க்‌. 1:32).

3. பாவத்தில்‌, சாவில்‌, நோயில்‌, புயல்‌ போன்ற இயற்கைச்‌ சீற்றங்களில்‌. இயேசு அலகையின்‌ ஆதிக்கத்தைப்‌ பார்க்கிறார்‌. அதனால்தான்‌ காற்றை, கடலை, காய்ச்சலைக்‌ கடிந்து கொள்கிறார்‌ (லூக்‌. 4:37, மார்க்‌ 1:34).

4. இயேசு மெசியா என்பது கடவுளின்‌ திட்டப்படி உரிய காலத்தில்‌ உரிய முறையில்‌ வெளிப்பட வேண்டும்‌. எனவே தீமையின்‌ தலைவன்‌ தவறான நேரத்தில்‌ தவறான முறையில்‌ இயேசு மெசியா என்று அறிக்கையிட இயேசு அனுமதிக்கவில்லை (மார்க்‌. 1:34).

5. பொழுது விடியும்‌ வேளையில்‌ இயேசு தனிமையான இடத்திற்குச்‌ சென்றார்‌. (மார்க்‌. 1:35). இயேசுவுக்குத்‌ தனிமையும்‌ செபமும்‌ தேவை என்றால்‌, நமக்கு எவ்வளவு அதிகமாகத்‌ தேவை?

6. இறையாட்சிப்‌ பணி என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில்‌ முடங்கிக்‌ கிடக்கின்ற ஒன்று அல்ல (மார்க்‌ 1:38). “நாம்‌ அடுத்த ஊர்களுக்கும்‌ போவோம்‌. அங்கும்‌ நான்‌ நற்செய்தியைப்‌ பறைசாற்ற வேண்டும்‌.”

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

உடைந்த உள்ளத்தோரை ஆண்டவர் குணப்படுத்துகிறார்

தமிழ்நாட்டின் ஓரியூரில் தலை துண்டிக்கப்பட்டு மறைசாட்சியாக உயிர் துறந்த இயேசு சபை துறவியான புனித அருளானந்தரின் (ஜான் டி பிரிட்டோவின்) விழாவை, ஒவ்வோர் ஆண்டும், பிப்ரவரி 4ம் தேதி, கொண்டாடுகிறோம். இன்று, பிப்ரவரி 4, ஞாயிற்றுக்கிழமை என்பதால், இப்புனிதரின் விழாவைக் கொண்டாடுவதில்லை. இருப்பினும், இந்த ஆண்டு, இந்த விழாவை நினைவுகூர ஒரு சிறப்பு காரணம் உள்ளது. ஓரியூரில், புனித அருளானந்தரின் திருத்தலத்தலமாக அமைந்திருக்கும் ஆலயம், அண்மையில் (நவம்பர் 9, 2023), திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் ‘மைனர் பசிலிக்கா’ (Minor Basilica) என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பணிபுரியும் அனைத்து இயேசு சபைத் துறவிகளின் பாதுகாவலராகவும், மதுரை உயர்மறைமாவட்டம், மற்றும், சிவகங்கை மறைமாவட்டம் ஆகியவற்றின் பாதுகாவலராகவும் விளங்கும் புனித அருளானந்தரின் பரிந்துரையால், கிறிஸ்துவுக்கும் அவருடைய நற்செய்திக்கும் துணிவுள்ள சாட்சிகளாக நாம் வாழ்வோமாக!

கடந்த இரு ஞாயிறு வழிபாடுகளில், இறை வார்த்தை, நற்செய்தி மற்றும் நற்செய்தியை பறைசாற்றும் அதிகாரம் உள்ளவர்கள் என்ற கருத்துக்களைச் சிந்தித்தோம். நற்செய்தியைப் பறைசாற்றுவதில் ஒரு முக்கிய அம்சமாக இருப்பது, குணமளிக்கும் பணி. இயேசு தான் வாழ்ந்த நாள்களில், நற்செய்தியை, வாய்வழி வார்த்தைகளால் மட்டுமல்லாமல், தன் வாழ்வாலும், செயல்களாலும் பறைசாற்றினார். குறிப்பாக, அவரது குணமளிக்கும் பணி, அவர் பறைசாற்றிய நற்செய்தியின் முக்கிய அம்சமாகத் திகழ்ந்தது. நாம் அனைவரும் குணமளிக்கும் கருவிகளாக வாழ்வது எப்படி என்பதைச் சிந்திக்க, இந்த ஞாயிறு வழிபாடு நம்மை அழைக்கிறது.

பல்வேறு வழிகளில் சிதைந்து, உருக்குலைந்திருக்கும் இன்றைய உலகிற்கு குணமளிக்கும் பணி மிக அவசியத் தேவையாக உள்ளது என்பதை யாரும் மறுக்க இயலாது. குணமடைதல் என்பது, முதலில் நம்மிடமிருந்து ஆரம்பமாகவேண்டும். அது, பின்னர், குணமளிக்கும் பணியாக, அடுத்தவர்களையும் சென்றடையும். குணமடைவோம் என்ற நம்பிக்கை, நமக்குள் துளிர்விடுவதே, நலமடைவதன் முதல் படி. இந்த எண்ணத்தைப் புரிந்துகொள்ள, பள்ளி ஆசிரியர் ஒருவரின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு உதவியாக இருக்கும்.

அந்த ஊர் பள்ளியில், ஓர் இளம் பெண், புதிதாக வேலைக்குச் சேர்ந்தார். அந்த வார இறுதியில், பள்ளியின் நிர்வாகி அவரை அழைத்து, கூடுதலாக ஒரு பணியை கொடுத்தார். அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை, அவர், அருகில் இருந்த மருத்துவமனைக்குச் சென்று, அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு சிறுவனுக்கு கணக்குப் பாடம் சொல்லித் தரவேண்டும் என்பதே அந்தப் பணி. புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர் என்பதால், நிர்வாகி சொன்னதற்கு மறுப்பு சொல்லமுடியாமல், அந்தப் பெண் அடுத்த நாள் மருத்துவ மனைக்குச் சென்றார். படுக்கையில் கிடந்த அந்தச் சிறுவனைப் பார்த்ததும், அவருக்குப் பெரும் அதிர்ச்சி. ஒரு தீ விபத்தால் உடலெங்கும் வெந்துபோய் படுத்துக்கிடந்தான் அச்சிறுவன். இவனுக்குக் கணக்குப் பாடம் சொல்லித்தர வேண்டுமா என்று, அந்த இளம் பெண்ணின் மனம் தடுமாறியது. இருந்தாலும், இவ்வளவு தூரம் வந்துவிட்டோமே என்பதாலும், நிர்வாகி சொல்லிவிட்டார் என்பதாலும், அவனுக்கு அரைமணி நேரம் கணக்குப் பாடம் சொல்லித் தந்தார். தீக்காயங்களுடன் கிடந்த அவனை நிமிர்ந்து பார்க்கவும் தைரியம் இல்லாமல், ஏதோ சமாளித்து, அவனுக்குப் பாடம் சொல்லித்தந்தார், அந்த இளம்பெண். வேதனையில் முனகிக் கொண்டிருந்த அச்சிறுவன், அவ்வப்போது தலையை ஆட்டினான். மீண்டும் அடுத்த ஞாயிறு வருவதாகச் சொல்லி புறப்பட்டார், இளம்பெண். உடலெல்லாம் எரிந்து, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனுக்கு, கணக்குப் பாடம் சொல்லித்தந்தது, அவருக்கே வேதனையாக இருந்தது. அடுத்த ஞாயிறு, பள்ளி நிர்வாகியிடம், ஏதாவது சாக்குபோக்கு சொல்லி தப்பித்துக்கொள்ளலாம் என்று எண்ணியபடியே, வீட்டுக்குத் திரும்பினார்.

இருந்தாலும், அடுத்த ஞாயிறு வந்தபோது, அந்த இளம்பெண் அச்சிறுவனைப் பார்க்க எண்ணினார். அவனுக்குப் பாடம் சொல்லித் தரவில்லையென்றாலும், அவனைப் பார்க்க வேண்டும்போல் தோன்றியது அவருக்கு. அவர் அங்கு சென்றபோது, மருத்துவமனை வாசலிலேயே அச்சிறுவனுடைய அம்மா அந்த இளம்பெண்ணைச் சந்தித்தார். "நீங்கள்தான் என் மகனுக்கு போன வாரம் கணக்கு சொல்லித் தந்தீர்களா?" என்று கேட்டார். உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு சிறுவனுக்கு கணக்கு சொல்லித்தந்தது எவ்வளவு பைத்தியக்காரத்தனமான செயல் என்பதை அந்தத் தாய் தன்னிடம் சொல்லப்போகிறார் என்று எதிர்பார்த்து, அந்த இளம்பெண் பயந்தார். "கணக்குப் பாடம் சொல்லித் தரவேண்டும் என்று மேலிடத்திலிருந்து உத்தரவு வந்ததால்தான் நான் அப்படிச் செய்தேன்..." என்று தயங்கி, தயங்கி அந்த இளம் பெண் சமாதானம் சொல்ல ஆரம்பித்தார். அந்தத் தாயோ, இளம்பெண்ணின் கரங்களை இறுகப் பற்றிக்கொண்டார். அவர் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. "நீங்கள் எவ்வளவு பெரிய உதவி செய்துள்ளீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது" என்று அந்தத் தாய் சொன்னதும், இளம்பெண்ணுக்கு ஒரே ஆச்சரியம். அந்தத் தாய் தொடர்ந்தார்: "சென்ற ஞாயிறு, நீங்கள் வருவதற்கு முன், என் மகன், தான் உயிர் பிழைக்கமாட்டோம் என்று, அவனே தீர்மானித்துவிட்டான். எனவே, உண்ண மறுத்தான், மருந்து சாப்பிட மறுத்தான். ஆனால், நீங்கள் கணக்குப்பாடம் சொல்லித்தந்த நாளிலிருந்து என் மகனிடம் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 'எனக்கு கணக்குப் பாடம் சொல்லித்தர ஓர் ஆசிரியரை என் பள்ளி அனுப்பியுள்ளது என்றால், நான் கட்டாயம் மீண்டும் பள்ளிக்குத் திரும்புவேன் என்று என் பள்ளியில் உள்ளவர்கள் நம்புகிறார்கள் என்றுதானே அர்த்தம்!' என்று என் மகன் சொல்ல ஆரம்பித்துவிட்டான். நீங்கள் வந்து சென்ற நாளிலிருந்து, தான் பிழைத்துக்கொள்வோம் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை, என் மகனுக்குப் பிறந்துவிட்டது. இந்த ஒரு வாரத்தில் அவனிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கண்டு, ‘டாக்டர்’களே ஆச்சரியப்படுகின்றனர். எல்லாம் நீங்கள் செய்த அற்புதம்" என்று, அந்தத் தாய் கண்ணீரோடு சொல்லச் சொல்ல, அந்த இளம்பெண்ணின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.

ஒருவர் குணம் அடைவது, அவரது ஆழ்மனதில் எழும் நம்பிக்கையில் ஆரம்பமாகிறது என்ற அடிப்படை உண்மை, இக்கதையில் வெளிச்சமாகிறது. இதையே இன்றைய ஞாயிறு வாசகங்களும் நமக்குச் சொல்லித்தருகின்றன. 2020ம் ஆண்டு கோவிட்-19 பெருந்தொற்று மனித குலத்தை ஆட்டிப்படைக்கத் துவங்கியது முதல், இன்றுவரை, நோயுறுதல், குணமாதல் என்ற எண்ணங்கள் நம்மிடையே மிக அதிகமாகப் பேசப்படுகின்றன. இனி, கோவிட்-19 கிருமி அவ்வப்போது, நம்மைச் சுற்றிச்சுற்றி வரும், அத்துடன் வாழப்பழகிக்கொள்வது நல்லது என்ற மனநிலை நம்மில் உருவாகியிருப்பதையும் மறுப்பதற்கில்லை. கோவிட்-19 கிருமியைவிட, அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டுள்ள வெறுப்பு, வன்முறை, போர், சுற்றுச்சூழல் சீரழிவு ஆகிய மிக ஆபத்தானக் கிருமிகளையும் நாம் சமாளிக்கவேண்டியுள்ளது. இத்தகைய ஒரு சூழலில், நோய்களைக் குறித்த நம் கண்ணோட்டத்தையும், அவற்றை நாம் எதிர்கொள்ளும் வழிகளையும் புரிந்துகொள்ள, இன்றைய ஞாயிறு வாசகங்கள் நமக்கு உதவியாக உள்ளன.

நமது நோய்கள் குணமாவதற்குக் காரணங்கள் என்னென்ன? மருந்து, மாத்திரை, மருத்துவ சிகிச்சை இவற்றால் மட்டும் ஒருவர் குணமாகமுடியாது. நலமடைவோம் என்ற நம்பிக்கை, ஒருவர் மனதில் உதிப்பதுதான், அவருக்குத் தேவையான, மிக அவசியமான, முதல் படி. அந்த நம்பிக்கையை, மருத்துவர் தரவேண்டும் என்று, பொதுவாக நாம் எதிர்பார்க்கிறோம். நோயுற்றவரோ, அல்லது, அவரது குடும்பத்தினரோ, மருத்துவர்களிடம், "உங்களை, கடவுள்போல நம்பியிருக்கிறோம்" என்று சொல்வதையும், அந்த மருத்துவர்களில், கடவுள் நம்பிக்கையுள்ள ஒரு சிலர், "நான் மருந்தும், மாத்திரையும் தான் தரமுடியும், கடவுள்தான் குணம் தரமுடியும்" என்ற உள்ளார்ந்த உண்மையைச் சொல்வதையும் நாம் கேட்டிருக்கிறோம், அனுபவத்தில் உணர்ந்திருக்கிறோம். மருத்துவர்கள் மீதும், மருந்துகள் மீதும் நம்பிக்கை இருப்பது அவசியம்தான். ஆனால், அவற்றை விட, நம்மீதும், நம்மைக் காக்கும் கடவுள் மீதும் நம்பிக்கை கொள்வது மிகவும் அவசியம்.

சில வேளைகளில், இந்த நம்பிக்கை எதிர்பாராத வழிகளில் வந்து சேர்வதையும் நாம் அறிவோம். தீக்காயங்களுடன் போராடி, மனம் வெறுத்து, மரண வாயிலை நோக்கி நடந்துகொண்டிருந்த அச்சிறுவனுக்கு, கணக்குப்பாடம் சொல்லித் தரவந்த ஆசிரியர், அவரையும் அறியாமல், அச்சிறுவனுக்கு நம்பிக்கை பாடங்களைச் சொல்லித்தரவில்லையா? நம்பிக்கைப் பாடங்களை நாம் கற்றுக்கொள்ள, இந்த ஞாயிறு வழிபாடு நம்மை அழைக்கிறது.

குணம் பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாதபோது, நலமடைவது கடினமாகிப் போகிறது. முடிவில், இயலாமலும் போகலாம். நம்பிக்கையற்ற நிலையில் இருக்கும் ஒருவருக்குள் உருவாகும் மன அழுத்தங்களை இன்றைய முதல் வாசகம் நமக்குக் காட்டுகிறது. யோபு நூலிலிருந்து எடுக்கப்பட்ட இந்த வாசகம், துன்பங்களால் நொறுங்கிப்போன ஒருவரது உள்ளத்திலிருந்து எழும் அவலக் குரலாய் ஒலிக்கிறது.

மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போரட்டந்தானே?... இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின. படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்! இரவோ நீண்டிருக்கும்; விடியும்வரை புரண்டு உழல்வேன். (யோபு 7: 1,3-4)

இப்போது நாம் கேட்ட இந்த வரிகளை நம்மில் பலர், பலநேரங்களில், பலவிதங்களில் சொல்லியிருக்கிறோம். துன்பங்கள் நம்மைச் சூழும்போது, நம்மிடமிருந்து முதலில் விடைபெறுவன, உணவும், உறக்கமும். துன்பம், ஒரு சூறாவளிபோல நம்மைத் தாக்கும்போது, வேரோடு பிடுங்கப்பட்ட மரத்தைப்போல... சுழல்காற்றில் சிக்கிய ஒரு சருகைப் போல... புயலில் சிக்கியப் படகைப் போல... என்றெல்லாம் நாம் நம்மையே உருவகப்படுத்திக் கொள்கிறோம். துன்பங்களால் நிலைகுலைந்து அலைபாயும் வாழ்வை யோபும் ஓர் உருவகத்தால் கூறியுள்ளார். என் நாள்கள் தறியின் ஓடுகட்டையினும் விரைந்தோடுகின்றன; அவை நம்பிக்கையின்றி முடிவடைகின்றன (யோபு 7:6) என்று கூறியுள்ளார்.

உருவகங்களில் நாம் பேசிக் கொண்டிருப்பதால், மற்றுமோர் உருவகத்தையும் நாம் சிந்தித்துப் பார்க்கலாம். துன்பம், புதைமணலைப் போன்றது. புதைமணலில் சிக்கியவர்கள், புதைமணலிலேயே தங்கள் கவனம் முழுவதையும் செலுத்தி, அங்கேயே தங்கி, போராடிக் கொண்டிருந்தால், அந்தப் புதைமணலுக்குள் இன்னும் ஆழமாகப் புதைந்துபோகும் ஆபத்து உண்டு. புதைமணலில் இருந்து நாம் கரையேற வேண்டுமெனில், உறுதியான ஓர் இடத்தில் நிற்கும் மற்றொருவரின் உதவி நமக்குத் தேவை. அவர், நமது கரம் பற்றி, நம்மை மேலே இழுத்தால், நாம் அங்கிருந்து வெளியேற முடியும். புதைமணலில் சிக்கியிருந்த யோபு அங்கேயே தங்கிவிடவில்லை. இறைவன் மீது அவர் கொண்ட நம்பிக்கை அவரை, புதைமணலிலிருந்து விடுவித்து, உறுதியான பாறையின் மீது நிறுத்தியது என்பதை நாம் அறிவோம். யோபைப் போல, இறைவன் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொள்ள, இன்றைய நற்செய்தி நமக்கு அழைப்பு விடுக்கிறது. உடல் நோயாலும், மன நோயாலும் பாதிக்கப்பட்ட பலருக்கு, இயேசு குணமளிக்கும் நிகழ்ச்சியை, மாற்கு நற்செய்தியில் (மாற்கு 1:29-39) நாம் கேட்கிறோம்.

இன்றைய நற்செய்தியில், இரு பகுதிகள், நம் கவனத்தை ஈர்க்கின்றன. குணமளிக்கும் இந்தப் புதுமைகளை இயேசு ஒய்வுநாளில் செய்தார் என்பது ஒரு பகுதி. ஒய்வுநாளன்று எந்த வேலையும் செய்யக்கூடாது என்பது யூதர்களின் முக்கியமான ஒரு சட்டம். இயேசு அதை மீறினார். அவரைப் பொருத்தவரை, குணமளிப்பது என்பது, வேலையே அல்ல; அது, உண்பது உறங்குவது போன்ற ஒரு தினசரி கடமை என்று இயேசு எண்ணியதால், தன் கடமையை, தயங்காது செய்தார். மேலும், ஒரு மனிதரைக் குணமாக்க, எந்தச் சட்டத்தையும் மீறலாம் என்பதையும் இயேசு தெளிவுபடுத்தினார்.

அடுத்து, இன்றைய நற்செய்தியின் இறுதிப் பகுதி நம்மை சிந்திக்க அழைக்கிறது. சீமோனின் மாமியார் குணமான செய்தி அந்த ஊரில் காட்டுத் தீயைப்போல் பரவியதால், ஊர் முழுவதும் திரண்டு வந்திருந்தது. அவர்களுக்குக் குணமளிப்பதை தன் கடமையாகக் கருதி இயேசு பணியாற்றினார். அன்றைய கடமைகளை நிறைவு செய்த இயேசு, மக்கள் கூட்டம் தந்த புகழில் மயங்கிப் போகாமல் இருக்க, இறைவனை நாடிச் சென்றார். அடுத்தநாள் அவரைத் தேடிச்சென்ற சீடர்கள், “எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்” (மாற்கு 1:37) என்று கூறி, அவரை மீண்டும் ஊருக்குள் அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால், இயேசுவோ, 'நற்செய்தியைப் பறைசாற்றவே தான் வந்திருப்பதாக’க் கூறி, தன் பணிகளைத் தொடர, வேறு இடங்களுக்குப் புறப்பட்டார்.

எவ்வித புகழையும் தேடாமல், இயேசு அமைதியாக தன் குணமாக்கும் பணியைத் தொடர்ந்தார். பலனை, புகழை எதிர்பாராமல் பணிகள் செய்பவர்களைப்பற்றி சிந்திக்கும்போது, கதையொன்று நினைவுக்கு வருகிறது:

மற்றவர்களுக்கு நன்மைகள் செய்வதையே தன் வாழ்வின் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த ஒரு மகானுக்கு முன் இறைவன் தோன்றினார். அந்த மகானின் அற்புத வாழ்வுக்குப் பரிசாக, அவருக்கு பிடித்த ஒரு வரத்தை கேட்கச் சொன்னார் இறைவன். தனக்கு எதுவும் வேண்டாம் என்று, அந்த மகான் மறுத்தார். இருந்தாலும், இறைவன் விடுவதாகத் தெரியவில்லை. இறுதியாக, அந்த மகான், "இறைவா, என் நிழலைத் தொடும் அனைவரும் குணம் பெறும்படி வரம் தாரும்" என்று கேட்டார். இறைவன் அந்த வரத்தை மகிழ்வோடு தருவதாகச் சொன்னார். உடனே மகான் ஒரு நிபந்தனையைச் சொன்னார்... "எப்போதெல்லாம் என் நிழல் எனக்குப் பின்னே விழுகிறதோ, அந்த நிழலுக்கு மட்டுமே இந்தச் சக்தியை நீர் தரவேண்டும்" என்று அந்த மகான் வேண்டிக்கொண்டார். இவ்வாறு, தனக்குப்பின் அற்புதங்கள் நிகழ்கின்றன என்பதை அறியாமல் வாழ்ந்த அந்த மகானின் பெயரையும் மக்கள் மறந்துவிட்டனர். எனவே அவரை “புனித நிழல்” என்றே அழைத்துவந்தனர்

.

நாம் இன்று இறைவனிடம் மூன்று வரங்களுக்காக மன்றாடுவோம்:

முதலாவது, குணம் பெறவேண்டும் என்ற நிலையில் நாம் இருந்தால், அல்லது நமது நெருங்கிய உறவுகள் இருந்தால், நாம் குணம் பெறுவோம், அவர்கள் குணம் பெறுவார்கள் என்ற நம்பிக்கை நமக்குள் விதைக்கப்பட வேண்டும் என்று மன்றாடுவோம்.
இரண்டாவது, தீயில் வெந்துகிடந்த அச்சிறுவன் குணமாவதற்கு உதவிகள் செய்கிறோம் என்பதே தெரியாமல் உதவிசெய்த அந்த இளம்பெண்ணைப் போல, தனக்குப் பின்விழும் நிழலால் மக்கள் குணமாகவேண்டும் என்று வேண்டிக்கொண்ட அந்த மகானைப்போல, எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், பிறருக்கு நன்மைகள் செய்யும் மனநிலையை இறைவன் நமக்கு வழங்கவேண்டும் என்று செபிப்போம்.
மூன்றாவதாக, நலமளிக்கும் பணிகளுக்கு இடையூறாக வரும் நிபந்தனைகள், சட்டங்கள் போன்றவற்றை புறம்தள்ளி, நமது பணிகளைத் தொடரும் உறுதி, நமக்குள் உருவாகவேண்டும் என்றும் மன்றாடுவோம்.

இன்றைய வழிபாட்டில் நாம் பயன்படுத்தும் பதிலுரைப்பாடலில் ஒலிக்கும் அழகிய, ஆறுதலான சொற்கள் இன்றும் இனி வரும் நாள்களிலும் நம் உள்ளங்களிலும், இல்லங்களிலும் ஒலிக்கவேண்டும்.
நம்முடைய கடவுளைப் புகழ்ந்து பாடுவது நல்லது; அவரைப் புகழ்வது இனிமையானது; அதுவே ஏற்புடையது. உடைந்த உள்ளத்தோரைக் குணப்படுத்துகின்றார்; அவர்களின் காயங்களைக் கட்டுகின்றார். (திருப்பாடல் 147:1,3)

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பணியாளர் – பொறுப்பாளர் – தலைவர்

க்வோரா என்ற இணையதளத்தில் வினாக்கள் எழுப்பப்பட்டு வாசகர்கள் விடைகளைப் பகிர்வதுண்டு. கடந்த வாரம் கேட்கப்பட்ட வினாக்களில் ஒன்று இது: ‘உங்கள் மகள் உங்கள்மேல் ஏற்படுத்திய தாக்கம் என்ன?’

இக்கேள்விக்கு வாசகி ஒருவர் பின்வருமாறு விடையளிக்கின்றார்: ‘நுழைவுத்தேர்வு ஒன்றுக்குத் தயாரித்துக் கொண்டிருந்த என் மகள், தேர்வின் இறுதி நாளில் என்னிடம், ‘அம்மா! இதுவே என் வாழ்வில் நான் எழுத வேண்டிய இறுதித் தேர்வாக இருக்கட்டும். தேர்வுத் தயாரிப்புக்கான வலியை என்னால் தாங்க இயலவில்லை. 15 இலட்சம் பேருடன் மோத என்னால் இயலாது. தினமும் எனக்குக் கொஞ்சம் சோறு கொடுங்கள். தூங்க ஓர் இடம் கொடுங்கள். நான் இந்த வீட்டிலேயே இருந்துவிடுகிறேன். புத்தகங்கள் வாசிப்பதிலும், திரைப்படங்கள் பார்ப்பதிலும், உறவினர்களைச் சந்திப்பதிலும், நண்பர்களோடு உரையாடுவதிலும் என் நேரத்தைக் கழித்துக்கொள்கிறேன்’ என்றாள். இந்தக் காலக் குழந்தைகள் எதிர்கொள்ளும் மனச்சோர்வை நான் அறிந்துகொண்டேன். ஆனால், வாழ்க்கையின் இனிமையான இரகசியங்கள் அனைத்தும் துன்பங்களைக் கடந்து வருவதில் தான் அடங்கியிருக்கின்றன என்பதை என் மகளுக்குச் சொல்ல இயலாமல் தவிக்கிறேன். இதுவே அவள் ஏற்படுத்திய தாக்கம்!’

நிற்க.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். யோபு 7:1-4,6-7) நாம் காணும் யோபின் வார்த்தைகள் மேற்காணும் விடையில் வரும் மகளின் வார்த்தைகள் போல உள்ளன: ‘மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போராட்டந்தானே?’ நேர்மையாளரின் துன்பம் பற்றியும், ஒருவர் தாங்க இயலாத அளவுக்கு அனுமதிக்கப்படும் துன்பம் பற்றியும் பேசுகிறது யோபு நூல். நேர்மையாளராகவும் பாவமற்றவராகவும் வாழ்ந்த யோபு திடீரென ஒரு நாள் தன் பிள்ளைகள், கால்நடைகள், உடைமைகள் என அனைத்தையும் இழந்து, உடல் எல்லாம் கொப்புளங்களால் நிரம்பி வழிய, ஆழ்ந்த துன்பத்திற்கு ஆளாகிறார். தன் துன்பத்திற்குக் காரணம் தன்னைப் பற்றிக் கடவுளும் அலகையும் மேற்கொண்ட உரையாடல் என்பது யோபுக்குத் தெரியாது. வருந்துகிறார், புலம்புகிறார், கொந்தளிக்கிறார் யோபு. ஆன்மீக அளவில் அந்நியப்பட்டவராய், உடலளவில் துன்புறுபவராய், சமூக அளவில் ஒதுக்கப்பட்டவராய் மாறுகிறார் யோபு. கோபமும் கிளர்ச்சியும் கொண்ட அவரால் தன் துன்பத்தின் தோற்றுவாயைக் காண இயலவில்லை. அவருடைய துன்பத்திற்கான காரணம் என்று நண்பர்கள் கொடுத்த இறையியல் காரணங்கள் ஆழமற்றவையாக இருந்தன. அவர்களால் இன்னும் அதிகச் சோர்வுக்கு உள்ளாகிறார் யோபு.

யோபு கடவுளோடு உரையாடும் பகுதியான முதல் வாசகத்தில், ‘கூலியாள்களின் நாள்,’ ‘நிழலுக்கு ஏங்கும் அடிமை,’ ‘காத்திருக்கும் வேலையாள்,’ ‘வெறுமையான திங்கள்,’ ‘தறியின் ஓடுகட்டை’, ‘வெறுங்காற்று’ என்னும் பல்வேறு உருவகங்களால் தன் துன்பத்தை விவரிக்கின்றார். வாழ்க்கை மிகக் குறுகியதாக இருந்தாலும், அதில் மாந்தர் படும் துன்பம் அளவுக்கதிகமாக இருக்கிறது. கடின உழைப்பு, அடிமையின் வேலை, வேலையாளின் காத்திருத்தல் போன்றவை இந்த உலகில் நடக்கும் அநீதியான துன்பத்தை அடிக்கோடிடுவதோடு இந்த உலகில் உள்ள அனைத்தும் வெறுமையையும் துன்பத்தையுமே தருகின்றன எனச் சொல்கின்றன யோபுவின் சொற்கள். தூக்கமின்மையிலும் ஓய்வின்மையிலும் கடக்கின்றன யோபுவின் நாள்கள். இதற்கு மேல் துன்புறத் தன்னால் இயலாது என்பது போல, ‘என் கண்கள் மீண்டும் நன்மையைக் காணா’ என விரக்தியில் சோர்ந்து போகின்றார் யோபு.

இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 9:16-19,22-23), நற்செய்திக்காக அனைத்தையும் ஏற்றுக்கொள்வதாக அடிக்கோடிட்டுக் காட்டுகிறார் பவுல். இயேசுவின் மேல் நம்பிக்கை கொண்டதற்காக மக்களைத் துன்புறுத்திய பவுல், இயேசுவின் மேல் நம்பிக்கை கொண்டவராய் தானே துன்புறுபவராக மாறுகின்றார். அவருடைய இதயம்-பணி, இயல்பு-இயக்கம் என அனைத்திலும் கிறிஸ்துவே நிறைந்து வழிகிறார். ஆக, நற்செய்தி அறிவித்தல் என்பது கட்டாயமும் அவசியமும் என்ற நிலை ஏற்படுகிறது பவுலுக்கு.

தன் பணி நிறைவேற வேண்டும் என்பதற்காக இரண்டு துன்பங்களை ஏற்கின்றார் பவுல். முதலில், தன் குழுமத்திடமிருந்து எந்தவொரு கைம்மாறும் எதிர்பாராமல் நற்செய்தி அறிவிக்க உறுதி ஏற்கிறார். தான் பெறுகின்ற கைம்மாறுக்காக அல்லாமல் இலவசமாக நற்செய்தியை அறிவிப்பதன் வழியாக, நற்செய்தி என்பது விலைமதிப்பற்றது என்பதையும் உணர்த்துகிறார் பவுல். இரண்டாவதாக, தனக்கெனச் சமூகத்தில் ஓர் உயர்ந்த நிலை இருந்தாலும், அந்த நிலையையும் விடுக்க முன்வருகின்றார் பவுல்: ‘நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக் கொண்டேன்.’ தன் உழைப்புக்கு ஏற்ற எந்தவித கைம்மாறும் இல்லாத துன்பத்தையும், அனைவருக்கும் அடிமையாகும் துன்பத்தையும் நற்செய்திக்காக ஏற்க முன்வருகிறார் பவுல்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 1:29-39), மனிதத் துன்பத்திற்கான இயேசுவின் பதிலிறுப்பை வாசிக்கின்றோம். இயேசுவின் வழக்கமான ஒரு நாள் வேலையை நற்செய்தி வாசகம் நம் கண்முன் கொண்டுவருகிறது: இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவிக்கின்றார், நோயுற்றோருக்கு நலம் தருகின்றார். நோயுற்றோர் நலம் பெறுதல் என்பது இறையாட்சியின் வெளிப்பாடாக இருந்தது. ஏனெனில், நோய் என்பது தீமையின் ஆதிக்கம் என்று கருதப்பட்டது.

நற்செய்தி வாசகம் மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது. முதல் பிரிவில், சீமோனுடைய மாமியாரின் காய்ச்சலைக் குணமாக்குகிறார் இயேசு. சீமோனின் மாமியார் வீட்டில் இருக்கிறார். அந்த வீடுதான் அவருடைய உலகம். அந்த வீட்டை அவர் நிர்வகித்தார், அந்த வீட்டுக்கு வந்தவர்களை உபசரித்தார். சமூகம் வரையறுத்த அந்த வேலைகளை அவர் துன்பமெனக் கருதவில்லை. நோயினால் வருந்திய அவர் வீட்டுக்குள்ளேயே செயலற்றவராகக் கிடந்தார். இயேசு அவருடைய கையைப் பிடித்துத் தூக்கியதன் வழியாக, தன் முழுமையையும் நிறைவையும் அவருடன் இணைத்துக்கொள்கிறார். எழுந்த அவர் உடனடியாகத் தன் உலகத்தை இயக்கத் தொடங்குகின்றார். ஆக, இயேசுவின் கரம் மானுடத்தின் துன்பம் நீக்கும். இரண்டாவது பிரிவில், அந்த ஊரில் இருந்த நோயாளர்கள், தீய ஆவி பிடித்தோர், மற்றும் பல்வேறு பிணிகளால் வருந்திய அனைவருக்கும் நலம் தருகின்றார் இயேசு. இயேசு தீய ஆவியின்மேல் கொண்டிருந்த அதிகாரம் இங்கே புலனாகிறது. மூன்றாவது பிரிவில், ‘எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்’ என்று இயேசுவிடம் சொல்லப்பட்டபோது, ‘ஆஹா! இங்கிருத்தல் நலம்! எல்லாரும் நம்மை அறிவர்! நமக்கு வேண்டியதெல்லாம் கிடைக்கும்!’ என்ற இன்பத்தின் வழியைத் தேடாமல், ‘நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம்!’ என இலக்குத் தெளிவுடன் புறப்படுகின்றார் இயேசு. தான் செல்கின்ற வழியில் துன்பங்கள் பல இருக்கும் என்று தெரிந்தாலும், இயேசு துன்பத்தையே தெரிவு செய்கின்றார்.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு, துன்பத்துக்கான மனித பதிலிறுப்புகளை வரையறுக்கிறது. துன்பத்தின் நடுவில் சோர்வு மற்றும் விரக்தியடைந்த யோபு, கடவுளிடமிருந்து விலகாமல் நிற்கின்றார். துன்பத்தையும் ஏழ்மையையும் தன்மேல் ஏற்றுக்கொண்டு நற்செய்தி அறிவித்தல் என்னும் தன் இலக்கோடு சமரசம் செய்யாமல் இருக்கிறார் பவுல். நற்செய்தி வாசகத்தில் தன் இறைவேண்டல் வழியாகவும், உடனிருப்பு வழியாகவும் மனிதத் துன்பத்தைத் தன்மேல் ஏற்றுக்கொள்கின்றார் இயேசு.

நம் மனித உடலும் மனமும் இயல்பாகவே துன்பத்தை வெறுக்கின்றன. சில கலாச்சாரங்களில், சிறுவர் சிறுமியர்கள் இளவல் பருவம் அடைந்தவுடன், அவர்களைக் கட்டாயத் துன்பத்துக்கு உட்படுத்துவர். காடுகளில் அவர்களை அலைந்து திரியச் செய்தல், தன் உணவைத் தானே சேகரித்தல், தனியாக வாழக் கற்றுக்கொள்தல், வேலை தேடுதல் எனப் பல்வேறு துன்பங்களை அவர்கள் ஏற்க வேண்டும். அப்படி அவர்கள் துன்பம் ஏற்பதன் வழியாகவே, அவர்கள் விழுமியங்களில் வளர முடியும் என்பது நம்பிக்கை.

நாம் முதலில் கண்ட அந்தப் பெண்ணுடைய மகள்போல இருந்தால் துன்பம் போய்விடுமோ? இல்லை! இன்பம் என நினைத்த அனைத்தும் அந்தப் பெண்ணுக்குத் துன்பமாக மாறலாம். வீட்டிலேயே இருப்பதால் மனம் சோர்வடையலாம். உறவினர்களிடம் அதிகமாகப் பேசுவதால் சண்டைகள் வரலாம். நண்பர்களோடு உரையாடுவதால் தேவையற்ற பிரச்சினைகள் வரலாம். போதிய உடற்பயிற்சி இராததால் நோய்கள் வரலாம். ஆக, இன்பம் காலப்போக்கில் துன்பமாக மாறிவிடும்.

ஆக, துன்பம் என்பது ஒரு வாழ்வியல் எதார்த்தம். இன்று நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் துன்பத்தை நாம் எப்படி ஏற்றுக்கொள்வது?

(அ) பணியாளர்போல

யோபு தன் வாழ்வை ஓர் அடிமையின் வாழ்வுக்கு ஒப்பிடுகிறார். துன்பத்தைச் சுமையாகவே பார்க்கிறார். யோபு தன் துன்பம் காரணமாகச் சற்றே புலம்பினாலும் பொறுமை காக்கிறார். துன்பம் வரும்போது பெரும்பாலும் நாம் வேகமாகச் செயல்படுகிறோம். நம் மூளையும் பரபரப்பாகி நம்மை ஏதாவது செய்யத் தூண்டுகிறது. இந்நேரங்களில் நாம் எடுக்கும் செயல்கள் இன்னும் அதிகமான தீமைகளை வருவிக்கின்றன. பரபரப்பாக இருப்பவர்கள் அடிமைகள்.

(ஆ) பொறுப்பு ஏற்பது

நற்செய்தி அறிவிப்பைத் தன் சுமை என்று பார்க்காமல், பொறுப்பு எனப் பார்க்கிறார் பவுல். அடிமை அல்லது பணியாளர் தனக்குக் கொடுக்கப்படும் அனைத்தையும் சுமை எனப் பார்ப்பார். ஆனால், பொறுப்பாளரோ அனைத்தையும் விரும்பி ஏற்கிறார். பொறுப்புணர்வுடன் அவற்றைக் கையாளுகிறார். பணியாளர் தலைமைத்துவத்தைவிட பொறுப்பாளர் தலைமைத்துவம் மேன்மையானது.

(இ) தலைவராக இருப்பது

தம் நாள் முழுவதும் தாம் நிறையப் பணிகள் செய்தாலும், நிறையப் பேரைச் சந்தித்தாலும் எவற்றையும் யாரையும் பற்றிக்கொள்ளவில்லை இயேசு. தம் வாழ்வைத் தம் கட்டுக்குள் வைத்திருக்கிறார். ஆகையால்தான், தனிமையாக இறைவேண்டல் செய்யக் நேரம் கண்டுபிடிக்கிறார். மற்றவர்கள் அவரைத் தேடினாலும் தம் இலக்கு நோக்கிப் பயணம் செய்கிறார். எந்தவிதமான கவனச் சிதறல்களுக்கும் இடம் கொடுக்க மறுக்கிறார்.

இறுதியாக,

யோபு தன்னைப் பணியாளர் என நினைக்கிறார். பவுலோ தன்னைப் பொறுப்பாளர் என உணர்கிறார். இயேசுவோ தலைவராகத் திகழ்கிறார். பணியாளர் என்னும் நிலையில் அனைத்தும் நமக்குச் சுமையாக இருக்கிறது. பொறுப்பாளராக மாறும்போது சற்றே துன்பம் அகல்கிறது. தலைவர் நிலையில் நமக்கு நிகழும் அனைத்தும் நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும் அதிகாரம் அல்லது ஆற்றல் பிறக்கிறது.

‘உடைந்த உள்ளத்தோரை ஆண்டவர் குணப்படுத்துகிறார்’ (காண். திபா 146) எனப் பாடுகிறார் திருப்பாடல் ஆசிரியர் (பதிலுரைப் பாடல்).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

எல்லார்க்கும் எல்லாமுமாக!

மூளை வளர்ச்சி குறைபாடுடைய குழந்தைகளுக்காக பணிசெய்யும் சகோதரி ஒருவரிடம் நான் "இந்த பணி உங்களுக்கு சவாலாக இல்லையா? கஷ்டமாக இல்லையா? " என்று கேட்டேன். அப்போது அந்த சகோதரி என்னிடம் இந்த வார்த்தைகளைக் கூறினார். "சவால் தான். கொஞ்சம் கஷ்டம் தான். இருந்தாலும் இப்பணியில் நான் பல பரிமாணங்களை உணர்வதால் ஆசிர்வாதமானதாக மனநிறைவு உள்ளதாக உணர்கிறேன்" என்று கூறினார். மேலும் நான் விளக்கம் கேட்பதற்கு முன் தாமாகவே " என்னுடைய இந்த பணியில் என்னிடம் வரும் குழந்தைகளுக்கு ஆசிரியராக மட்டுமின்றி, தாயாக, தோழியாக, பராமரிப்பவராக தேவைக்கேற்ப மாறுகிறேன். அவர்களுடைய பெற்றோர்களுக்கு ஒரு வழிகாட்டியாக, சகோதரியாக, ஆறுதல் தருபவராக இருக்கிறேன்." இந்த ஆனந்தம் சவால்களை சந்திக்க உதவுகிறது " என்று கூறிய முடித்தார்.

இவ்வார்த்தைகளை கேட்ட போது பவுலடியார் இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூறிய எல்லாருக்கும் எல்லாமும் ஆனேன் என்ற வார்த்தைகளை நான் நினைவுகூர்ந்தேன்.

அன்புக்குரியவர்களே நாம் வாழும் சமூகத்தில் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கும் போது எல்லாருக்கும் எல்லாமுமாக நாம் இருந்தால் அது எப்படிப்பட்ட மகிழ்ச்சியான சமூகமாக இருக்கும். அதுவல்லவா இறைச்சமூகம். எல்லாருக்கும் எல்லாமுமாக என்ற வார்த்தை நமக்கெல்லாம் பெரிய காரியமாகத் தோன்றுவதால் நாம் அதை தள்ளி வைத்திருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. நம் அன்றாட வாழ்க்கையில் நாம் காண்கின்ற, பழகுகின்ற மனிதர்களிடத்தில் அவருடைய சூழலையும் தேவையையும் அறிந்து நம்மால் இயன்ற சின்னச் சின்ன காரியங்களை செய்யும் போது நாம் எல்லாருக்கும் எல்லாமுமாக மாறுகிறோம் என்பதே உண்மை. அதை பிறர் உணர வேண்டும் சொல்லிக்காட்ட வேண்டும் என்பது அவசியமில்லை. நம் மனதே அதன் நிறைவை பெறும்.

தனிமையில் இருப்பவர்களோடு சிலநிமிடம், பசித்தோருக்கு உணவு, கவலைப்பட்டோர்க்கு ஆறுதல், தவறியோருக்கு வழிகாட்டல், முயல்வோர்க்கு உற்சாகம் என தேவைக்கும் சூழலுக்கும் தகுந்தாற்போல நாம் பல பரிமாணங்களை சுமக்கும் போது பவுல் கூறிய இறைவார்த்தை நம்மிலும் நிறைவுபெறும்

.

அதற்கு நாம் இருமுக்கிய பண்புகளை நமதாக்க வேண்டும். 1.இறைவனோடு இணைந்திருப்பது 2.எல்லாரையும் சமமாய் கருதுவது

இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியவர் நம் ஆண்டவர் இயேசு. இன்றைய நற்செய்தியில் தன்னுடைய பணிகளையெல்லாம் முடித்தபின் இறைவனோடு ஒன்றிணைந்து உறவாடும் இயேசுவை நாம் காண்கிறோம். அத்தோடு யூதர்களை மட்டுமல்லாது அனைவரையும் சமமாகக் கருதி ஒரு இடத்தில் மட்டுமல்ல ஊர் ஊராக சென்று மக்களின் பிரச்சினைகளையும் துன்பங்களையும் சரிசெய்து "எல்லாருக்கும் எல்லாமுமாக விளங்குகிறார் இயேசு.

இயேசுவைப்போல பவுலை போல நம்மோடு உள்ளவர்களுக்கு எல்லாமுமாய் வாழ முயல்வோமா? !

இறைவேண்டல்

எல்லாமுமான இறைவா! எங்களால் இயன்ற அளவாவது தேவையறிந்து சூழலறிந்து "எல்லாருக்கும் எல்லாமுமாக " விளங்க எமக்கு உம் அருள் வரங்களைத் தாரும். ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ser