மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக்காலத்தின் ஆம் ஞாயிறு
2-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
யோனா 3:1-5, 10 | 1கொரிந்தியர் 7:29-31 | மாற்கு 1:14-20

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


-->

எரியும் புதரில் மோயீசனை அழைத்தார் இறைவன்.

மெல்லிய காற்றில் எலியாசை அழைத்தார் இறைவன்

இடியின் ஒலியில் பவுலை அழைத்தார் இறைவன்

கடலில் வலை விரித்த அந்திரேயா, பேதுரு இவர்களை அழைத்தார் இயேசு!

மீன்பிடித்துக் கொண்டிருந்த சாதாரண மக்களாகிய இவர்களை அழைத்த உடன் அவர்களும் உடனே தம் படகையும், வலைகளையும் விட்டு முன்பின் தெரியாத இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அலெக்ஸ், ஷிலா என்ற இரு இளம் மருத்துவர்கள் வாழ்க்கைக்கு ஒப்பந்தம் செய்து கணவன் மனைவியாகத் தங்களை அர்ப்பணிக்க முடிவெடுத்தார்கள், பெற்றோர் இந்தத் திருமணத்தை ஆடம்பரமாகக் கொண்டாடத் திட்டமிட்டனர். பலரும் இந்த ஆடம்பரத் திருமணத்திற்காக ஆவலோடு காத்திருந்தனர். ஆனால் திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக மருத்துவத் துறையில் இருந்து ஒரு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. 40 மருத்துவர்கள் கொண்ட ஒரு குழு மலேரியாக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்கா மக்களுக்கு மருத்துவப் பணி புரிய ஆறு மாதம் தங்க வேண்டும். அதில் இவர்கள் இருவர் பெயரும் இடம் பெற்றன. எனவே ஆடம்பரத் திருமணத்தை ரத்து செய்து தாங்கள் பணி புரிந்த மருத்துவமனை சிற்றாலயத்தில் அருட்தந்தை ஒருவரால் எளிமையாகத் திருமணம் நிறைவேற்றி, குறிப்பிட்டத் தேதியில் ஆப்பிரிக்கா புறப்பட்டார்கள் இந்த இளம் தம்பதிகள்.

தற்பெருமை, சுய சார்பு எண்ணங்கள், பொறாமை, போட்டி மனப்பான்மை போன்ற தீய வலைகளைக் கிழித்துவிட்டு, பகிர்வு, பாசம், தியாகம், தாழ்ச்சி போன்ற வலைக்குள், நாம் நுழையும் போதுதான் இயேசுவை நாம் பற்றிக்கொள்ள முடியும். இவ்வாறு தான் சீடர்கள் இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள். உள் மாற்றத்தையே பெற்று சாதாரண மீனவர்களாக கடலில் உயிரோடு இருந்த மீன்களை கரையிலே கொண்டு சாகடித்தவர்கள், பாவத்தால் இறந்த மனிதர்களை, உயிருள்ள வாழ்வுக்குக் கொண்டு வர உயர்த்தப்பட்டார்கள். மனமாற்றம் அடைந்தார்கள். இதனால் கடல் அல்ல எங்கள் வாழ்வு, கடவுள்தான் எங்கள் வாழ்வின் மையம் என்பதை உணர்ந்தார்கள்.

'ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா'


இறைவன் ஒருவரே நிலையானவர். எதை எதைப் பெற வேண்டும் எனத் திட்டமிடாதே. மாறாக எதை எதை இழக்க வேண்டும் என்று சிந்தித்துப் பார்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மனம் திரும்புவோம்

பாவி ஒருவன் இறந்த பிறகு விண்ணகம் சென்றான். அங்கு செல்பவர்களுக்கு தீர்ப்பு வழங்க கடவுளால் நியமிக்கப்பட்ட நான்கு பேர் இருந்தார்கள். ஒருவர் ஆபிரகாம், மற்றொருவர் தாவீது, இன்னொருவர் புனித பேதுரு, நான்காமவர் புனித லூக்கா. பாவிதன் பாவங்களுக்காக வருந்தி அழுது கொண்டு அவர்கள் முன்னால் நின்றான். அவர்கள் பாவியைப் பார்த்து, நீ செய்திருக்கும் பாவங்கள் பத்துக் கற்பனைகளுக்கு எதிரான பயங்கரப் பாவங்கள். அதனால் உன்னை மோட்சத்திற்குள்ளே விடமுடியாது என்றார்கள்.

உடனே அந்தப்பாவி, ஆபிரகாம், உங்களைப் பற்றி கொஞ்சம் நினைச்சுப் பாருங்க அரசனிடம் உங்கள் மனைவியை உங்க சகோதரின்னு சொல்லி நீங்க பொய் சொல்லலெ என்றான்.

தாவீதைப் பார்த்து, தாவீதே, நீங்க மாற்றான் மனைவியை உங்க மனைவியாக்கிக்கொண்டு, அவளது கணவனைப் போர்க்களத்திற்கு அனுப்பி கொலை செய்யலெ. அதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் என்றான்.

பேதுருவே, நீங்க மூன்று முறை ஆண்டவர் இயேசுவை மறுதலிக்கலெ என்றான் பாவி,

அந்த சமயம் பார்த்து, கடவுள் அந்தப் பக்கமாகச் சென்றார். அங்கே என்ன நடக்குது? அப்படின்னு கேட்டாரு. நீதிபதிகள் நான்கு பேரும், அந்தப் பாவியோட பாவங்களைப் பட்டியல் போட்டு காட்டினாங்க.

அப்போது கடவுள், உங்க நாலுபேரையும் நான் மோட்சத்துக்குள்ளே விட்டப்போ, நான் எதுவுமே கேட்கலியே, சொல்லலியே அப்படின்னு சொல்லிட்டு போயிட்டாரு.

அந்த நாலு பேரும் ஒரே குரலில் பாவியைப் பார்த்து, நீ மோட்சத்துக்குள்ளே வரலாம் அப்படின்னாங்க.

மேலும் அறிவோம் :

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு? (குறள் 436).
பொருள்: முதலில் தன் குறையை அறிந்து அதனைப் போக்கிக்கொண்டு, பிறகு பிறர் குறையைக் காணும் வல்லமை வாய்ந்த ஆட்சியாளர்க்கு எந்தக் குறையும் வராது...

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இறையாட்சி நெருங்கி விட்டது.

தகப்பன் ஒருவர் 10-வது படிக்கும் தன் மகனிடம், "உன்னை இந்த ஜென்மத்தில் திருத்த முடியாது என்றார். அதற்கு அவன், நான் என்ன பரிட்சைப் பேப்பரா திருத்துவதற்கு உங்க வேலையைப் பாத்துக்கிட்டு போப்பா" என்றான். விடைத்தாள் களைத்தான் திருத்த முடியும், மனிதர்களைத் திருத்த முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டான் அந்த இளைஞன். மனிதர்கள் திருந்த வேண்டும், மனிதர்கள் மனமாற்றம் அடைய வேண்டும். இன்றைய அருள்வாக்கிள் மையக்கருத்து மனமாற்றமாகும்.

இறைவாக்கினர் யோனாவின் எச்சரிக்கைக்குச் செவிமடுத்து, நினிவே நகர மக்கள் சாக்கு உடுத்தி, சாம்பலில் அமர்ந்து உண்ணாமலும் குடியாமலும் நோன்பு இருந்தனர். அவர்கள் மனமாறியதைக் கண்ட கடவுள் அவர்களை அழிக்காமல் பாதுகாத்தார். பிற இனத்தைச் சார்ந்த நினிவே மக்களும் கடவுளுக்கு அஞ்சி மனமாறினர். மனிதர் மனமாற முடியும், மனமாறவும் வேண்டும்

"காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி விட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" (மாற் 1:15) தமது நற்செய்திப் பணியின் தொடக்கத்தில், கிறிஸ்து மக்களை மனமாற்றத்திற்கு அழைத்தார்.

மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களை, "என் பின்னே வாருங்கள்" (மாற் 1:17) என்று அழைத்தார். அவர்களும் உடனே தங்கள் படகுகளையும் வலைகளையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர், அவர்கள் நம்பியிருந்த கடலை விட்டுவிட்டு முன்பின் தெரியாத கிறிஸ்துவைப் பின்பற்ற முன் வந்தது மனமாற்றமல்லவா? மனிதர் மனமாறவேண்டும், மனமாறவும் முடியும்,

விவிலியம் சுட்டிக்காட்டும் மனமாற்றம் ஆழமான அடிப்படையான மனமாற்றம் அது உள்மனமாற்றம், இதயமாற்றம், "நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக் கொள்ளவேண்டாம் இதயத்தைக் கிழித்துக் கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்" (யோவே 2:13). கடவுள் ஒருவரையே நமது வாழ்வின் மையமாகவும் ஒப்பற்ற செல்வமாகவும் கருதி வாழ்வதே உண்மையான மனமாற்றம் கடலையும் மீனையும் நம்பி வாழ்ந்த மீனவர்கள் இயேசுவைப் பின்பற்றத் துணிவுடன் முன்வந்தனர். இனி அவர்கள் வாழ்வின் மையம்கடல் அல்ல. கடவுளே!

இன்றைய மனிதரின் மையம் பணமே, இன்றைய உலகின் பாவத்தை "அங்காடியின் சிலைவழிபாடு" என்கிறார் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால், உலகச் சந்தையும் உலக வங்கியும் தான் இன்று நாடுகளை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன. ஒருவர் எப்படி இருக்கிறார் என்பதைவிட அவர் எவ்வளவு பணம் வைத்திருக்கிறார் என்பதே முக்கியம். சமூக ஊடகங்களும் தேவையற்ற தேவைகளை உருவாக்கி, நுகர்வுக் கலாசாரத்திற்கு மனிதரை அடிமையாக்கிவிட்டது.

பணம் வாழ்வுக்குத் தேவைதான் "இனிமையான இல்லறத்திற்குத் தேவையானது பணமா? பாசமா?" என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்தில், பணம்தான் தேவை என்று பேசியவர், "பொருட்பால் இல்லையென்றால், காமத்துப்பாலும் வாங்கமுடியாது. ஏன், ஆவின்பால் கூட வாங்கமுடியாது" என்று அடித்துப் பேசினார். கணவனிடம் பணம் இருந்தால்தான் அவன் 'அத்தான்", இல்லையென்றால் அவர் செத்தான்!

இவ்வுலகச் செல்வங்களை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் அறிவுறுத்துகின்றார் புனித பவுல், "உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவர்போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பதுபோல் நெடுநாள் இராது" (1கொரி 7:31)

இவ்வுலக இன்பங்களைத் துய்க்கும்போது அதிலே மயங்கி விடலாகாது ஒரு பாம்பின் வாயில் ஒரு தவளை. அத்தவளையின் வாயில் ஒரு வண்டு; அந்த வண்டு சிறிது நேரத்திற்கு முன்பு பூவிலிருந்து தேனை எடுத்துத் தன்வாயில் வைத்துக் கொண்டிருக்கிறது. தான் தவளை வாயிலும், தவளை பாம்பின் வாயிலும் இருப்பதை உணராமல், தனக்கு வரவிருக்கும் பேராபத்தைப் பற்றிச் சற்றும் எண்ணாமல், அந்த வண்டு தன் வாயில் இருக்கும் தேனைச் சுவைத்து மயங்கி இருக்கிறது. அவ்வாறு நாமும் இருப்பது அறிவுடமையாகுமா?

இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து விடுவிக்கக் கடவுளுக்கு ஒரு இரவு மட்டும் தேவைப்பட்டது. ஆனால் எகிப்தை அவர்களது இதயத்திலிருந்து விடுவிக்கக் கடவுளுக்கு 40 ஆண்டுகள் தேவைப்பட்டன. ஆம், எகிப்து நாட்டின் வெள்ளரிக்காய், வெங்காயம், வெள்ளைப்பூண்டு. இறைச்சி அம்மக்களின் இதயத்தை விட்டு அகலவே இல்லை. ஏனெனில், "வயிறே அவர்கள் தெய்வம்" (பிலி 319) எனவே இவ்வுலகச் செல்வங்களை ஞானத்துடன் பயன்படுத்தி விண்ணக நலன்களைப் பெறவேண்டும். "நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது" (மத் 6:24). ஆண்டவரின் இந்த அருள்வாக்கு நமது மனமாற்றத்திற்கு ஓர் அறை கூவல்

ஒவ்வேர் ஆண்டும் நமது நாட்டின் குடியரசு விழா கொண்டாடும் பொழுது நாம் கிறிஸ்தவர்கள் என்பதற்காகவே மற்றவர்களை விட நாட்டுப்பற்று அதிகம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். "இறைப்பற்றும் கண்ணியமும் நிறைந்தவர்களாய், தொல்லையின்றி அமைதியோடு வாழ அரசர்களுக்காகவும், உயர் நிலையிலுள்ள எல்லா மனிதர்களுக்காகவும் மன்றாடுங்கள்" (திமோ 2:2)

இரண்டு ஆண் குழந்தைகளுக்கு இலஞ்சராஜ் - ஊழல் ராஜ் என்றும், இரண்டு பெண் குழந்தைகளுக்கு சுரண்டல் ராணி - சுருட்டல்ரானி என்றும் ஒரு பெரியவர் பெயர் சூட்டினார். இலஞ்சமும் ஊழலும், சுரண்டலும் சுருட்டலும் பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்து நமது நாட்டையே உலுக்கி, நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டைகளாக உள்ளன.

நாட்டுத் தலைவர்களும் அரசியல்வாதிகளும் மனமாற்றம் அடையவேண்டும். அடுத்தத் தேர்தலைப் பற்றிக் கவலைப்படுகிறவன் அரசியல்வாதி அடுத்தத் தலைமுறையைப் பற்றிக் கவலைப்படுகிறவன் தேசீயவாதி, அரசியல் தலைவர்கள் தங்களது கட்சியின் நலனை நாடாது. நாட்டின் நலனை நாட வேண்டும். வன்முறையும் பயங்கரவாதமும் முடிவுக்கு வந்து, அன்பும் சகோதரத்துவமும் தழைத்தோங்க மன்றாடுவோம்.

பாரதப் பூமி பழம்பெரும்பூமி
நீரதன் புதல்வர், இந்நினைவகற்றாதீர் - பாரதி

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மனம்‌ மாறு நற்செய்தியை நம்பு

முழக்கங்கள்தாம்‌ இன்றைய உலகை ஆளுகின்றன. வெறும்‌ ஓசைகளாக, வீணான வெத்துவேட்டுக்களாக அவற்றை ஒதுக்கிவிட முடியாது. உதறித்‌ தள்ளக்கூடாது. முறையான முழக்கங்கள்‌ எழுச்சி உணர்வூட்டும்‌. இலட்சிய வெறியூட்டும்‌. எண்ணியபடி செயல்படத்‌ தூண்டும்‌.

எடுத்துக்காட்டாக, பரந்த பாரதத்தின்‌ கடந்தகால வரலாறும்‌ வாழ்க்கைப்‌ போக்கும்‌ எப்படியெல்லாம்‌ திருப்பம்‌ கண்டிருக்கின்றன! முழக்கங்களாலேயே திசைமாறிச்‌ சென்றிருக்கின்றன!

-அன்னியருக்கு அடிமைப்பட்டுக்‌ கிடந்தபோது, “செய்து முடி அல்லது செத்து மடி” காந்தி முழங்கினார்‌. விளைவு? விடுதலை பிறந்தது.

- அண்டை நாட்டினரின்‌ முற்றுகைக்கு ஆளாகிய போது, “ஏர்‌ முனை வாழ்க! போர்‌ முனை வெல்க!” லால்பகதூர்‌ முழங்கினார்‌. எதிரிகளை முறியடிக்க முடிந்தது.

-ஆட்சி உருக்குலைந்தபோது, “வறுமையை ஒழிப்போம்‌, வளத்தைப்‌ பெருக்குவோம்‌'” இந்திரா முழங்கினார்‌. வறுமை ஒழிந்ததோ இல்லையோ, நம்பிக்கை பிறந்தது.

- மத்திய மாநில உறவுகள்‌ சீர்குலைந்தபோது, “உறவுக்குக்‌ கை கொடுப்போம்‌. உரிமைக்குக்‌ குரல்‌ கொடுப்போம்‌” அன்றையத்‌ தமிழக முதல்வர்‌ முழங்கினார்‌. உறவு எப்படியோ, அதற்கான நல்‌ உணர்வுகள்‌ அரும்பின.

- உரிமை இழந்து நெருக்கடி நிலையில்‌ நாடு தத்தளித்தபோது, “சருவாதிகாரத்தை ஒழிப்போம்‌ ஜனநாயகத்தை வளர்ப்போம்‌'' ஜனதா முழங்கியது. மக்களாட்சி மலர்ந்தது.

- உள்கட்சிப்‌ பூசலால்‌ அரசு தடுமாறி நின்றபோது “நேரு மகளே வருக! நிலையாட்சி தருக!” எண்ணங்கள்‌ முழங்கின. நடந்ததை நாம்‌ அறிவோம்‌.

- இன்று கூட “இந்தியாவைக்‌ காப்போம்‌. மக்களை ஏய்ப்போம்‌'' என்பது போலக்‌ குரல்கள்‌ தலைகாட்டத்‌ தொடங்கியுள்ளன. என்ன ஆகுமோ!

அரசியல்‌ உலகில்‌ மட்டுமல்ல, ஆன்மீக உலகிலும்‌ வீறு பெறச்‌ செய்யும்‌ இத்தகைய வீர முழக்கங்கள்‌ வேண்டும்‌. அப்படி மீட்பர்‌ இயேசு முழங்கினாரா? ஆம்‌, விவிலியம்‌ முழுவதும்‌ இழையோடும்‌ மையச்‌ செய்திதான்‌ மார்க்‌ 1:15. “காலம்‌ நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம்‌ மாறி இந்நற்வசய்தியை நம்புங்கள்‌' ஒரே சமயத்தில்‌ இது ஒர்‌ அறிவிப்பும்‌ ஒர்‌ அழைப்பும்‌ ஆகும்‌.

1. இறையாட்சி வந்துவிட்டது என்பது ஓர்‌ அறிவிப்பு. இறையாட்சி! - இதுவே இயேசுவின்‌ உயிர்மூச்சு... இலட்சிய நோக்கு, இதற்காகவே அவர்‌ பிறந்தார்‌, வளர்ந்தார்‌, வாழ்ந்தார்‌, தன்‌ இன்னுயிரை ஈந்தார்‌. முழுக்க முழுக்க இறையாட்சி பற்றி விளக்க எத்தனை உவமைகள்‌ - மத்தேயு நற்செய்தி 13ஆம்‌ பிரிவு முழுதும்‌!

விண்ணரசில்‌ நுழைய:
- எதையும்‌ விலையாகக்‌ கொடுக்கலாம்‌ (worth any price)
7 மத்‌. 13:44. விண்ணரசு நிலத்தில்‌ மறைந்துள்ள புதையலுக்கு ஒப்பாகும்‌. அதைக்‌ கண்டுபிடித்தவன்‌ அதைக்கண்ட மகிழ்ச்சியில்‌ போய்த்‌ தனக்குள்ள யாவற்றையும்‌ விற்று அந்நிலத்தை வாங்கிக்‌ கொள்கிறான்‌. அது போலவே விலையுயர்ந்த முத்தைக்‌ கண்ட வணிகன்‌.

- எதையும்‌ பலியாகக்‌ கொடுக்கலாம்‌ (worth any sacrifice) மத்‌. 18:9. “உங்கள்‌ கண்‌ உங்களைப்‌ பாவத்தில்‌ விழச்‌ செய்தால்‌ அதைப்‌ பிடுங்கி எறிந்து விடுங்கள்‌. இரு கண்ணுடையவராய்‌ எரிநரகில்‌ தள்ளப்படுவதைவிட ஒற்றை கண்ணராய்‌ நிலை வாழ்வில்‌ புகுவது உங்களுக்கு நல்லது.”

- எந்த முயற்சியையும்‌ மேற்கொள்ளலாம்‌ (worth any effort) லூக்‌. 16:16. “யாவரும்‌ இறையாட்சிக்குட்பட நெருக்கியடித்துக்‌ கொண்டு வருகிறார்கள்‌. சுருங்கச்‌ சொல்லின்‌ “இறையாட்சி என்பது நாம்‌ உண்பதையும்‌ (குடிப்பதையும்‌, அடிப்படையாகக்‌ கொண்டதல்ல. மாறாகத்‌ தூய ஆவி அருளும்‌ நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாகக்‌ கொண்டது”' (உரோமை. 14:17). எங்கே கடவுளின்‌ திருவுளம்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட்டு வாழ்ந்து ப்ப டு குக கடவுளரசு உள்ளது.

2. மனம்‌ மாறி நற்செய்தியை நம்புங்கள்‌ என்பது ஓர்‌ அழைப்பு. இறையாட்சியும்‌ மனமாற்றமும்‌ ஒன்றோடு ஒன்று பின்னிப்‌ பிணைந்தது.

காசி ஆனந்தன்‌ எழுதிய கதை ஒன்று இப்படிப்‌ போகிறது. அது ஓர்‌ இலையுதிர்காலம்‌. மரம்‌ மொட்டையாய்‌ நின்றது. புல்‌ மேய்ந்த மாடுகள்‌ மரத்தை இரக்கத்தோடு நோக்கின. “உன்‌ இலைகள்‌ விழுந்து கொண்டிருக்கின்றன. உன்னைப்‌ பார்த்தால்‌ அழ வேண்டும்‌ போல்‌ இருக்கிறது” என்று ஒரு மாடு தழுதழுத்த குரலில்‌ சொன்னது. மரம்‌ உடனே பதில்‌ சொன்னது: “நான்‌ அதைப்‌ பற்றிக்‌ கவலைப்படவில்லை. புதிய தளிர்களுக்காக அவை விழத்தான்‌ வேண்டும்‌”.

இப்படிச்‌ சொன்னவுடன்‌ மரம்‌ நிமிர்ந்தே நின்றது. மேலும்‌ அது சொன்னது: “விழுவதற்கெல்லாம்‌ அழுவதற்கில்லை'… மரம்‌ சொன்னதில்‌ ஞானம்‌ வெளிப்படுகிறது.

மனிதன்‌ விழுவது தோல்வியல்ல. வீழ்ந்தே கிடப்பதுதான்‌ தோல்வி. பழைய பாவச்‌ சேற்றிலேயே மீண்டும்‌ மீண்டும்‌ கிடந்து புரளுவதுதான்‌ கடவுளின்‌ பார்வையில்‌ கண்டனத்திற்கு உள்ளாகிறது. பழைய வாழ்க்கையிலிருந்து மீண்டெழுந்து மனமாறிப்‌ புதிய வாழ்க்கைக்குக்‌ கம்பளம்‌ விரிப்பவர்கள்‌ எல்லாரையும்‌ இருகரம்‌ விரித்து இறைவன்‌ வரவேற்கிறார்‌. எடுத்துக்காட்டு நினிவே மக்கள்‌ (முதல்‌ வாசகம்‌).

வாழ்வுக்கு உரமூட்டும்‌ வலுச்சேர்க்கும்‌ மனமாற்றத்திற்கு இயேசு விடுத்த அழைப்பு இறுதிவரை தொடர வேண்டும்‌ என்றுதான்‌ இயேசு முதல்‌ சீடர்களை அழைத்து, “என்‌ பின்னே வாருங்கள்‌. நான்‌ உங்களை மனிதரைப்‌ பிடிப்பவர்‌ ஆக்குவேன்‌” (மார்க்‌. 1:17) என்றார்‌. இறைவாக்கினர்களும்‌ இயேசுவும்‌ . மக்களை ஆழமான, அடிப்படையான, முழுமையான மனமாற்றத்திற்கு அழைத்தார்கள்‌. பழைய ஏற்பாட்டில்‌ ஆடைகளைக்‌ கிழித்து, சாக்குத்‌ துணியை உடுத்தி, சாம்பலில்‌ அமர்ந்து கடும்‌ தவம்‌ இருந்தனர்‌. அவர்களின்‌ வெளி வேடத்தைக்‌ கண்டித்து உண்மையான மன மாற்றம்‌ என்ன என்பதை இறைவாக்கினர்‌ சுட்டிக்‌ காட்டினார்‌. “நீங்கள்‌ உங்கள்‌ உடைகளைக்‌ கிழித்துக்‌ கொள்ள வேண்டாம்‌. இதயத்தைக்‌ கிழித்துக்‌ கொண்டு உங்கள்‌ கடவுளாகிய ஆண்டவரிடம்‌ திரும்பி வாருங்கள்‌” (யோவேல்‌. 2:13).

தாங்கள்‌ கடவுளுக்குச்‌ சொந்தம்‌ என்பதைக்‌ காட்ட இஸ்ரயேல்‌ மக்கள்‌ தங்கள்‌ பாலுறுப்புக்களை விருத்தசேதனம்‌ செய்தனர்‌. வேண்டியது இதய விருத்த சேதனம்‌ என்கிறது விவிலியம்‌. இயேசுவை மெசியாவாக.ஏற்க மறுத்த யூதர்களைப்‌ பார்த்து, “திமிர்‌ பிடித்தவர்களே, இறைவார்த்தையைக்‌ கேட்க மறுக்கும்‌ செவியும்‌, ஏற்க மறுக்கும்‌ உள்ளமும்‌ கொண்டவர்களே (பழைய மொழிபெயர்ப்பு சொல்கிறது “விருத்தசேதனம்‌ இல்லாத உள்ளமும்‌ செவியும்‌ படைத்தவர்களே” என்று) உங்கள்‌ மூதாதையரைப்‌ போல நீங்களும்‌ தூய ஆவியாரை எப்போதும்‌ எதிர்க்கிறீர்கள்‌” என்று புனித ஸ்தேவான்‌ ஆவேசமாகக்‌ கூறினார்‌ (தி.ப. 7:51). திருத்தூதர்‌ பவுலும்‌ இதய விருத்த சேதனமே உண்மையான விருத்த சேதனம்‌ என்று தெளிவுபடுத்தியுள்ளார்‌. (கொலோ.2:11). “உடலைச்‌ சார்ந்தவற்றில்‌ உறுதியான நம்பிக்கை கொள்ளாமல்‌, கடவுளின்‌ ஆவிக்கு ஏற்ப வழிபட்டுக்‌ கிறிஸ்து இயேசுவைப்‌ பெருமைப்படுத்தும்‌ நாமே உண்மையான விருத்தசேதனம்‌ செய்து கொண்டவர்கள்‌” (பிலிப்‌. 3:3)

எனவே மனமாற்றம்‌ என்பது உள்ளத்தை இறைவனுக்கு முழுமையாகக்‌ கொடுப்பது. இதற்கு எதிராக இருப்பது இதயக்‌ கடினம்‌. “இன்று நீங்கள்‌ அவரது குரலுக்குச்‌ செவி கொடுத்தால்‌ எத்துணை நலம்‌!... உங்கள்‌ இதயத்தைக்‌ கடினப்படுத்திக்‌ கொள்ளாதீர்கள்‌” (தி.பா. 95:7-8).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இறைவார்த்தை ஞாயிறு

அக்பர் மற்றும் பீர்பால் பற்றி நாம் அனைவரும் அறிந்த ஒரு பாரம்பரியக் கதையுடன் நமது சிந்தனையைத் தொடங்குவோம். ஒரு நாள் இரவு, அக்பர் வினோதமான ஒரு கனவு கண்டார். அதாவது, அவர் தனது ஒரு பல்லைத் தவிர அனைத்து பற்களையும் இழந்துவிட்டதாக கனவு கண்டார். இந்தக் கனவால் மிகவும் கலக்கமடைந்த அவர், மறுநாள் காலையில், தனது நாட்டின் அனைத்து ஜோதிடர்களையும் வரவழைத்து, தனது கனவைக் கூறினார். சரியான விளக்கம் தருபவருக்கு பரிசு என்று அறிவித்தார்.

ஜோதிடர்கள் கூட்டமாகக் கூடி ஆலோசனை மேற்கொண்டனர். இறுதியில், அவர்கள், மிகுந்த தயக்கத்துடன் மன்னரை அணுகி, விளக்கம் கூறினர். அதாவது, அரசரின் அனைத்து உறவினர்களும் அவருக்கு முன் இறந்துவிடுவர் என்பதே அவர் கண்ட கனவின் பொருள் என்று கூறினர். அக்பர் இந்த விளக்கத்தால் மிகவும் வருத்தமடைந்தார், எனவே அவர், பரிசு எதுவும் தராமல், அனைத்து ஜோதிடர்களையும் விரட்டிவிட்டார்.

அன்று மாலையில், அக்பர் பீர்பாலை சந்திக்க நேர்ந்தது. அவர் தனது கனவை பீர்பாலிடம் கூறி, அதற்கு விளக்கம் அளிக்கச் சொன்னார். ஜோதிடர்கள் சொன்னதையும் அவரிடம் சொன்னார். பீர்பால் சிறிது நேரம் சிந்தித்தபின், “அரசே, நீங்கள், உங்கள் உறவினர்கள் அனைவரையும்விட நீண்ட, நிறைவான வாழ்க்கை வாழ்வீர்கள் என்பதே இக்கனவின் பொருள்” என்றார். அக்பர் பீர்பாலின் விளக்கத்தைக் கேட்டு, மிகவும் மகிழ்ந்தார், அவருக்கு பரிசுகளை வழங்கினார்.

ஜோதிடர்கள் கூறிய அதே உண்மையை பீர்பால் பேரரசருக்குக் கூறினார். ஆனால் அந்த உண்மையைக் கூற, நல்ல வார்த்தைகளை அவர் பயன்படுத்தினார். வார்த்தைகளின் சக்தியைப்பற்றி கூறும் ஒரு பாரம்பரியக் கதை இது.

வார்த்தைகள், ஆக்கவும், அழிக்கவும் வலிமை வாய்ந்தவை. "தீயினால் சுட்டபுண் உள்ளாறும், ஆறாதே நாவினால் சுட்ட வடு" என்ற குறள் வழியே, வார்த்தைகளின் வலிமையைப் பற்றி வள்ளுவர் நமக்கு உணர்த்தியிருக்கிறார். மனித வார்த்தைகளுக்கே இவ்வளவு வலிமை என்றால், இறைவார்த்தைக்கு உள்ள வலிமையை என்னென்பது?

ஒவ்வோர் ஆண்டும், வழிபாட்டு ஆண்டு, பொதுக்காலத்தின், மூன்றாம் ஞாயிறை, இறைவார்த்தை ஞாயிறு என்று கொண்டாடுவதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
கோவிட்-19 பெருந்தொற்றின் விளைவாக உலகின் அனைத்து நாடுகளும் அவதியுற்றிருந்த 2020ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவார்த்தை ஞாயிறை நம் வழிபாட்டு ஆண்டின் ஒரு பகுதியாக இணைத்தார். வியாதி, மரணம் என்ற வார்த்தைகளையே நாம் பெரும்பாலும் கேட்டு வந்த அந்தக் காலக்கட்டத்தில், இறைவார்த்தை, நம்பிக்கையை வழங்கும் என்ற எண்ணத்தை ஆழப்படுத்த, இஞ்ஞாயிறு உருவாக்கப்பட்டது. இன்று நாம் சிறப்பிக்கும் இறைவார்த்தை ஞாயிறன்று, வார்த்தைகள், அவற்றைக்கொண்டு உருவாக்கப்படும் செய்திகள், நற்செய்தி என்ற கோணங்களில் நம் சிந்தனைகளை மேற்கொள்ள, இன்றைய வாசகங்கள் உதவியாக இருக்கின்றன.

ஒவ்வோருநாளும், உலகெங்கும் நிகழும், கோடிக்கணக்கான உன்னத நிகழ்வுகள், செய்திகளாவதில்லை. ஆனால், ஆயிரத்தில் ஒன்றாக, ஆங்காங்கே நடக்கும் அவலங்கள், செய்திகளாக மாறிவிடுகின்றன. நல்ல செய்திகளைப் புறந்தள்ளிவிட்டு, மோசமான செய்திகளை வெளியிடுவதில், ஊடகங்கள் மிக ஆர்வமாகச் செயல்படுகின்றன. அத்தகையச் செய்திகளையே “மக்கள் விரும்புகிறார்கள்” என்று கூறி, ஊடகங்களில் பணியாற்றுவோர், தங்கள் தவறை நியாயப்படுத்துகின்றனர். இவ்வாறு, ஊடகங்கள் ஒவ்வொருநாளும் காட்டும் அவலமான உலகை எதார்த்தம் என்று நம்பி, நம்பிக்கையிழந்து போகிறோம்.

இந்தியா போன்ற நாடுகளில், அரசின் அடிமைகளாக செயல்படும் ஊடகங்கள், நல்ல பல செய்திகளை இருட்டடிப்பு செய்துவிட்டு, நடுவண் அரசின் துதி பாடிக்கொண்டிருக்கின்றன. அதேவண்ணம், தங்கள் செய்தி நிறுவனத்தின் பார்வையாளர் எண்ணிக்கையைக் கூட்டி, அதன் பயனாக, விளம்பரங்களை வளைத்துப்போடுவதற்கு, ஊடகங்கள் பின்பற்றும் மனசாட்சியற்ற வழிகள் பல உள்ளன. உண்மைகளைத் திரித்து, பரபரப்பான செய்திகளாக மாற்றுதல், செய்திகளை முதலில் தரவேண்டும் என்ற எண்ணத்தில், ஒரு சில வன்முறைகளைத் தூண்டிவிடுதல் போன்ற மனசாட்சியற்ற வழிகள் அவை.

ஊடகங்கள் நம்மீது திணிக்கும் அவலங்கள் போதாது என்று, நம் கைவசம் இருக்கும் 'whatsapp' போன்ற செயலிகள் வழியே, நம்பிக்கையைக் குலைக்கும் செய்திகளை நாமும் பகிர்ந்துவருகிறோம். நம் செல்லிடப்பேசிக்கு வரும் செய்திகள், உண்மையான செய்திகளா, வதந்திகளா என்பதை அறிந்துகொள்ள முயற்சி செய்யாமல், அந்த பரபரப்பு குறைவதற்குமுன், அதைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தில், நம்பிக்கையைக் குலைக்கும் செய்திகளையும், வதந்திகளையும், பகிர்ந்துவருகிறோம்.

இத்தகைய ஒரு பின்னணியில், இன்று நாம் கொண்டாடும் இறைவார்த்தை ஞாயிறு வழிபாட்டில், நற்செய்தியைப் பறைசாற்ற வந்த இறைவாக்கினர் யோனாவையும், இயேசுவையும் மையப்படுத்தி நம் சிந்தனைகளை மேற்கொள்கிறோம்.
இன்றைய முதல் வாசகத்தில், (யோனா 3:1-5,10) “நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், நான் உன்னிடம் சொல்லும் செய்தியை அங்குள்ளோருக்கு அறிவி” என்று இறைவாக்கினர் யோனாவை ஆண்டவர் அனுப்புகிறார். அவர் சொல்லி அனுப்பும் செய்தி என்ன? “இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்.”
இன்றைய நற்செய்தி வாசகம், யோவான் கைது செய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். “காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்று அவர் கூறினார் (மாற்கு 1:14-15) என்ற சொற்களுடன் துவங்குகிறது.

யோனாவுக்கு இறைவன் தந்த செய்தி, இயேசு பறைசாற்றிக் கொண்டே வந்த கடவுளின் நற்செய்தி இவ்விரண்டையும் மேலோட்டமாகப் பார்த்தால், இவை நல்ல செய்திகள் போலத் தெரியவில்லை. ‘நினிவே அழியப்போகிறது’ என்ற செய்தியும், ‘மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்’ என்ற இயேசுவின் வார்த்தைகளும் நல்ல செய்திகளா? ஆம், இவை நல்ல செய்திகள். நற்செய்தியைப் பற்றி ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும் செய்திகள்.

‘நற்செய்தி’ என்ற சொல், கிரேக்க மொழியில் Euangelion என்று கூறப்படுகிறது. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் எழுதிய “Jesus of Nazareth” என்ற நூலில் Euangelion என்ற கிரேக்க வார்த்தைக்கு அவர் தரும் விளக்கம், நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது:
“Euangelion என்ற வார்த்தையை நாம் 'நற்செய்தி' அதாவது, 'நல்ல செய்தி' என்று மொழி பெயர்க்கிறோம். இந்த மொழி பெயர்ப்பு நமக்கு இதமான உணர்வைத் தருகிறது. ஆனால், Euangelion என்ற கிரேக்கச் சொல்லுக்கு, 'நல்ல செய்தி' என்ற மொழிபெயர்ப்பு, முழுமையான பொருளை வழங்கவில்லை.

“Euangelion என்ற வார்த்தை, உரோமையப் பேரரசர்கள் பயன்படுத்திய வார்த்தை. இப்பேரரசர்கள், மக்கள் மீது, முழு அதிகாரம் கொண்டவர்களாக, மக்களையும், இந்த உலகையும் காப்பவர்களாக, தங்களையே எண்ணிவந்தனர். அவர்கள் தந்த செய்திகள் எல்லாமே Euangelion என்று சொல்லப்பட்டது. அச்செய்தி, மகிழ்வான, இதமான செய்தியாக இருந்ததா என்பது கணக்கில்லை. அது, பேரரசரிடமிருந்து வந்த செய்தி என்பதால், பாதுகாக்கும் சக்தி பெற்றதென்று கருதப்பட்டது. அது, வெறும் தகவல்களைத் தரும் செய்தி அல்ல. மாறாக, உலகை மாற்றக்கூடிய, அதிலும், உலகை உயர்ந்ததொரு நிலைக்கு மாற்றக்கூடிய வலிமை பெற்ற செய்தி என்று கருதப்பட்டது.

“உரோமையப் பேரரசர்கள் பயன்படுத்திய Euangelion என்ற கிரேக்கச் சொல்லை நான்கு நற்செய்தியாளர்களும் பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் எழுதியவை அனைத்தையும் ஒருங்கிணைத்து நாம் நான்கு நற்செய்திகள் என்று குறிப்பிடுகிறோம். தன்னை ஒரு கடவுளாக, மனிதர்களைக் காப்பவராக தவறாக எண்ணி வந்த உரோமையப் பேரரசன் பயன்படுத்திய Euangelion என்ற சொல், இயேசுவில் தன் முழுமையானப் பொருளைக் கண்டது. “நாம் இன்று பயன்படுத்தும் ஒரு சில சொற்றொடர்களை Euangelion என்ற வார்த்தையை விளக்க நாம் பயன்படுத்தலாம். தகவலைப் பரிமாற நாம் பயன்படுத்துவது, informative speech. செயல்படத் தூண்டும்வண்ணம் நாம் பேசுவது, performative speech. விவிலியத்திலிருந்து நாம் கேட்கும் ‘நற்செய்திகள்’, நம்மைச் செயல்படத் தூண்டும் செய்திகள்” என்று, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், ‘நற்செய்தி’ என்ற வார்த்தைக்கு விளக்கம் அளித்துள்ளார்.

நற்செய்தி என்ற சொல்லில் நல்ல+செய்தி என்ற இரு வார்த்தைகள், இணைந்துள்ளதைக் காணலாம். 'நல்ல செய்தி' என்றதும், இதமான, மகிழ்வான செய்தி என்று மட்டும் பொருள் கொள்ளக்கூடாது. நம்மை வந்தடையும் நற்செய்தி, பல நேரங்களில், இதமான, மகிழ்வான செய்தியாக இருக்காது. 'நினிவே அழியப்போகிறது' என்பது, எப்படி இதமான, மகிழ்வான செய்தியாக இருக்கமுடியும்? ஆனால், நற்செய்தி என்ற சொல்லுக்கு, நன்மை விளைவிக்கும் செய்தி என்று பொருள் கொண்டால், அதன் முழு அர்த்தமும் விளங்கும். இந்த கோணத்தில் பார்த்தால், ‘நினிவே அழியப்போகிறது’ என்று யோனா குரல் எழுப்பிக் கூறியதும், அந்நகர மக்கள் விழித்தெழுந்தனர். யோனா வழங்கிய அந்தக் கொடூரமான செய்தி, அந்நகரைக் காப்பாற்றியது. எனவே, அது நல்ல செய்தியானது. இவ்வாறு சொல்லப்படும் செய்திகள், கத்தியை நினைவுபடுத்துகின்றன. அறுவைச் சிகிச்சையில், அல்லது சமையலறையில் நாம் பயன்படுத்தும் கத்திகள், குத்தும், வெட்டும், கிழிக்கும். ஆனால், இறுதியில், அந்தக் கத்திகள், நன்மைகளை உருவாக்கும். இந்தப் பொருளில்தான், இறைவார்த்தை, “இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது” (எபிரேயர் 4:12) என்று எபிரேயருக்கு எழுதப்பட்டத் திருமுகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

‘நற்செய்தி’ அல்லது ‘நல்ல செய்தி’யில், இரண்டாவது சொல், ‘செய்தி’. இங்கு ‘செய்தி’ என்ற சொல், வெறும் தகவல் பரிமாற்றம் அல்ல. செயல்களுக்கு நம்மை அழைத்துச்செல்லும் செய்திகள் இவை. மிகத் துரிதமாக தொடர்புகள் நடைபெறும் இந்தக் காலத்தில், நிமிடத்திற்கு நூறு செய்திகள் என்ற அளவில், நமது வாழ்வை, செய்திகள் நிரப்பிவிடுவதால், அவை நம்மைச் செயலிழக்கச் செய்துள்ளன. குறிப்பாக, கோவிட்-19 என்ற கிருமியைப் பற்றிய, உண்மையான, அரைகுறையான, பொய்யான செய்திகள், கடந்த சில ஆண்டுகளாக, நம்மை, அச்சத்தில் மூழ்கடித்து, நம் நம்பிக்கையை வேரறுத்தன. அந்தக் கிருமியைப்பற்றிய செய்திகள் இன்றும் அவ்வப்போது வலம் வந்தவண்ணம் உள்ளன. எதிர்மறை உணர்வுகளை வளர்க்கும் இத்தகையச் செய்திகளுக்கு முக்கியத்துவம் தரும் ஊடகங்களின் வழிகளுக்கு மாற்றாக, நம்பிக்கையை வளர்க்கும் செய்திகளை பரப்பும் நற்செய்தியாளர்களாக நாம் மாறுவது, இன்றைய உலகின் மிக முக்கியத் தேவை!

இறுதியாக ஓர் எண்ணம்... பல நேரங்களில் நாம் வாழ்வில் பகிர்ந்துகொள்ளும் நற்செய்திகள், வாய்வார்த்தைகளாக இருக்கவேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. வாய் வார்த்தைகளை விட, நம் வாழ்வு நற்செய்தியாக மாறவேண்டும் என்பதை, அசிசி நகர் புனித பிரான்சிஸ் சொல்லித் தந்தார்.

ஒரு நாள், அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்கள், ஓர் இளம் துறவியை அழைத்து, "வாருங்கள் நாம் ஊருக்குள் சென்று போதித்துவிட்டு வருவோம்" என்று கூறி, அவரை உடன் அழைத்துச்சென்றார். ஊருக்குள் நுழைந்த்தும், வயலில், அறுவடை செய்துகொண்டிருந்த பணியாள்களுடன், பிரான்சிஸ் இறங்கி வேலை செய்தார். இதைக் கண்ட அந்த இளம் துறவியும் குனிந்து வேலைகள் செய்தார். பின்னர், ஒரு கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்த வயதானப் பெண்மணிக்கு, பிரான்சிஸ், தண்ணீர் இறைக்க உதவினார். இப்படி நாள் முழுவதும், அந்த ஊரில் பலருக்கும் உதவிகள் செய்தார் பிரான்சிஸ். அந்த நாளின் இறுதியில் பிரான்சிஸ் கோவிலுக்குச் சென்றார். அவர் கட்டாயம் அந்நேரத்தில் போதிப்பார் என்று இளையவர் எதிர்பார்த்ததற்கு மாறாக, பிரான்சிஸ், கோவிலில் அமைதியாக செபித்துவிட்டுக் கிளம்பினார்.

இருவரும் மீண்டும் ஊரைவிட்டு வெளியே வந்து, தங்கள் துறவு இல்லத்தை நோக்கிச் சென்றபோது, இளையவர், தன் உள்ளத்தில் நிறைந்திருந்த ஏமாற்றத்தை வெளியிட்டார். "போதிப்பதற்காகத்தானே ஊருக்குள் சென்றோம்? இப்போது, போதிக்காமலேயே திரும்புகிறோமே!" என்று தன் உள்ளக் குமுறலைக் கூறினார். "நாம் தேவையான அளவு இன்று போதித்துவிட்டோம். நமது செயல்கள், வார்த்தைகளை விட வலிமை மிக்கவை. தேவைப்படும்போது மட்டும், வார்த்தைகளை நாம் பயன்படுத்தவேண்டும்" என்று அந்த இளையவருக்கு புனித பிரான்சிஸ் கூறினார்.

“இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்.” என்று இறைவாக்கினர் யோனா வழியாகத் தரப்பட்ட அந்த எச்சரிக்கை, நினிவே மக்களை மனம் மாற்றியது. அவர்களை, அழிவிலிருந்து காத்தது. இன்றைய நற்செய்தியில், "மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று இயேசு விடுத்த அந்த அழைப்பு, பலரை உறக்கத்திலிருந்து விழித்தெழச் செய்தது. அவர்களில், மீன்பிடித் தொழிலாளிகளான, அந்திரேயா, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர், தங்கள் உடைமைகள், உறவுகள் அனைத்தையும் விட்டுவிட்டு, இயேசுவைப் பின்தொடர்ந்தனர்.

நன்மை பயக்கும் செய்திகளைப் பறைசாற்றும் கருவிகளாக நாம் மாறவேண்டும். நாம் பரிமாறும் செய்திகள், வெறும் தகவல் பரிமாற்றமாக இல்லாமல், செயலுக்கு, அதுவும், உன்னதமானச் செயலுக்கு, மக்களைத் தூண்டும் சவால்களாக அமையவேண்டும். அனைத்திற்கும் மேலாக, வாய் வார்த்தைகள் வழியே பகிர்ந்துகொள்ளப்படும் செய்தியைவிட, நம் வாழ்வின் வழியே நற்செய்தியைப் பறைசாற்றும் கருவிகளாக நாம் ஒவ்வொருவரும் மாறவேண்டும் என்று, இந்த இறைவார்த்தை ஞாயிறன்று மன்றாடுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மகிழ்ச்சியோடு தயாராவோம்

விவிலியத்தில்‌ படிக்கவும்‌ தியானிக்கவும்‌ ஆர்வத்தைத்‌ தூண்டுகின்ற நிறைய நிகழ்வுகள்‌ உள்ளன. அதில்‌ ஒன்றுதான்‌ கடவுளின்‌ அழைப்புக்குத்‌ தப்பி ஓட நினைத்த இறைவாக்கினர்‌ யோனாவின்‌ நிகழ்வு.

நினிவே பட்டணம்‌ பிற இனத்தார்‌ வாழும்‌ பட்டணம்‌. சிலை வழிபாடு செய்யும்‌ பிற இனத்தவர்கள்‌. யாவே இறைவனை வழிபடாதவர்கள்‌. பிற இனத்தவர்களிடம்‌ சென்று இறைவாக்கு உரைக்க யோனாவிற்கு விருப்பம்‌ 'இல்லை. கடவுள்‌ யோனாவைக்‌ கூப்பிட்டு நினிவே மக்களிடம்‌ சொல்லும்படி 'இட்ட கட்டளை “40 நாள்களில்‌ நினிவே நகர்‌ அழிய போகிறது.” யோனா நினைத்தார்‌ “கடவுள்‌ இப்படித்தான்‌ சொல்லச்‌ சொல்வார்‌” மக்கள்‌ எல்லாரும்‌ மனம்‌ மாறி கடவுளிடம்‌ திரும்பி விடுவார்கள்‌.

கப்பல்‌ தலைமை மாலுமி கப்பலின்‌ கீழ்‌ தளத்தில்‌ தூங்கிக்‌ கொண்டிருந்த யோனாவைத்‌ தட்டி எழுப்பி செபிக்கச்‌ சொன்னான்‌. அப்போது தான்‌ பெரிய ஆபத்தில்‌ இருந்ததை உணர்ந்த யோனா, என்னை மட்டும்‌ உடனே கப்பலில்‌ இருந்து தூக்கி கடலில்‌ எறிந்து விடுங்கள்‌. கடல்‌ அமைதியாகிவிடும்‌ என்றார்‌. கப்பல்‌ மாலுமியோ, இது கடல்‌ பயண சட்டத்திற்குப்‌ புறம்பானது, என மறுத்தாலும்‌, பேரழிவு அதிகமாகவே யோனாவைத்‌ தூக்கிக்‌ கடலில் எறிந்தார்கள்‌. உடனே கடல்‌ அமைதியானது. கடலில்‌ விழுந்த யோனாவை ஒரு பெரிய மீன்‌ விழுங்கிவிட்டது. மூன்று நாள்கள்‌ மீனின்‌ வயிற்றில்‌ இருந்த போதுதான்‌ கடவுளின்‌ அழைப்பை உணர்கிறார்‌. கடவுளிடம்‌ இருந்து தப்பிச்‌ செல்ல முடியாது. கடவுளின்‌ பார்வையிலிருந்து விலக முடியாது. கடவுளின்‌ அழைப்பைத்‌ தட்டிக்‌ கழிக்க முடியாது. கடவுளின்‌ அழைப்பிற்குக்‌ கீழ்ப்படிய வேண்டும்‌ என்று புரிந்துகொண்டார்‌.

யோனாவின்‌ தெளிவான செய்தியைக்‌ கேட்டு அரசன்‌ முதல்‌ ஆண்டி வரை கோணி உடுத்தினர்‌. மனிதன்‌ முதல்‌ விலங்குகள்வரை சாம்பலில்‌ அமர்ந்து, தங்களின்‌ தீய வழிகளை விட்டு மனம்‌ மாறினர்‌. கடவுள்‌ தங்களை மன்னிப்பார்‌ என நம்பினார்கள்‌. மக்கள்‌ மனம்‌ மாறியதால்‌ கடவுளும்‌ தன்‌ மனத்தை மாற்றிக்கொண்டார்‌. தான்‌ உரைத்த இறைவாக்கு, பொய்யானது போல்‌. உணர்ந்தார்‌. இறைவாக்குப்‌ பணி தோல்வியில்‌ முடிந்ததாக நினைத்தார்‌. கோபமும்‌, வெறியும்‌ தலைக்கேற வெயிலில்‌ சென்று அமர்ந்து கொண்டார்‌. சாகும்வரை இப்படியே கிடந்து சாவேன்‌ என்றார்‌. ஆனால்‌ கடவுள்‌ ஆமணக்கு செடி ஒன்றை முளைக்கச்‌ செய்தார்‌. அது யோனாவிற்கு நிழலைத்‌ தந்தது. அதனால்‌ யோனா சற்று அமைதியாக இருந்தார்‌, மனச்சோர்வு குறைந்தது; மகிழ்ந்தார்‌.

ஆனால்‌ மறுநாள்‌ காலையே அந்த ஆமணக்குச்‌ செடியை காய்ந்து போகச்‌ செய்தார்‌ கடவுள்‌. காய்ந்து போன செடியைப்‌ பார்த்து யோனா மீண்டும்‌ புலம்பத்‌ தொடங்கினார்‌. கடவுள்‌, யோனாவிடம்‌, நேற்று அரும்பி இன்று உலர்ந்த ஆமணக்குச்‌ செடிக்காக வருந்துகிறாயே நினிவே மாநகரில்‌ 1, 20, 000க்கும்‌ மேற்பட்ட மக்கள்‌ இருக்கிறார்கள்‌. அவர்களோடு எண்ணிலடங்கா கால்நடைகளும்‌ உள்ளன. இந்நகருக்கு இரக்கம்‌ காட்டாமல்‌ இருப்பேனா ? என்றார்‌. உங்களை காப்பது போல, உலகில்‌ உள்ள எல்லாரும்‌ என்‌ மக்கள்‌ அவர்களையும்‌ நான்‌ பாதுகாக்க வேண்டாமா ? தாமே எல்லாருக்கும்‌ கடவுள்‌ என்ற உண்மையை யோனாவுக்கு உணர வைத்தார்‌ கடவுள்‌.

யோனாவின்‌ வாழ்க்கை நமக்கெல்லாம்‌ ஒரு நல்ல பாடம்‌.யோனாவின்‌ புத்தகத்தில்‌ எல்லாருமே மனமாற்றம்‌ பெற்றனர்‌. யோனாவே மீனின்‌ வயிற்றில்‌, மனமாற்றம்‌ பெற்றவர்தான்‌. நினிவே மக்கள்‌ சாம்பலில்‌ அமர்ந்து மனமாற்றம்‌ பெற்றவர்கள்தான்‌. கடவுளும்‌ தன்‌ மனத்தை மாற்றிக்கொண்டவர்தான்‌. தீமை செய்தவர்கள்‌ எல்லாரும்‌ கண்டிப்பாக அழிந்துதான்‌ போகவேண்டும்‌ என்று நியதி இல்லை. அவர்கள்‌ கடவுளின்‌ தண்டனையைப்‌ பெற்றே ஆக வேண்டும்‌ என்றும்‌ இல்லை. மனமாற்றத்தை வெளிப்படுத்தினாலே, மாற்றம்‌ எல்லோருக்குமே உண்டு. எனவே மனமாற்றம்‌ என்பதே நற்செய்தி. கடவுள்‌ மீண்டும்‌ மிண்டும்‌ வாய்ப்புகளைக்‌ கொடுத்து மனம்‌ மாற்ற வேண்டும்‌ என்று முயற்சித்தார்‌ என்றால்‌, நாமும்‌ மீண்டும்‌ மீண்டும்‌ தீய வழிகளை விட்டுவிட்டு மனம்‌ மாற்றம்‌ பெறவேண்டும்‌. கடவுளின்‌ பிள்ளைகளாக மாற்றம்‌ பெற்று வாழ்வோம்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நற்செய்தி: பறைசாற்றுதலும் பதிலிறுத்தலும்

ஆண்டின் பொதுக்காலம் 3-ஆம் ஞாயிற்றை ‘இறைவார்த்தை ஞாயிறு’ எனக் கொண்டாடுமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2019-ஆம் ஆண்டு ‘அப்பெர்யுய்த் இல்லிஸ்’ (‘அவர்களுடைய இதயங்களைத் திறந்தார்’) என்னும் திருத்தூது மடல் வழியாக அழைப்பு விடுத்தார். கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தில் வருகிற இந்த ஞாயிறு, இறைவார்த்தை வழியாக கிறிஸ்தவ ஒன்றிப்பு நடைபெற வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது. ‘நற்செய்தி அறிவிப்புக்கான திருப்பேராயம்: மறைத்தூதுப் பணி பற்றிய அடிப்படைக் கேள்விகளுக்கான பிரிவு’ இந்த ஆண்டுக்காக முன்மொழிந்துள்ள மையக்கருத்து: ‘என் வார்த்தையில் நிலைத்திருங்கள்‘ (காண். யோவா 8:31).

இறைவார்த்தையை வாசிக்க, இறைவார்த்தையைத் தியானிக்க, இறைவார்த்தையின் துணையோடு இறைவேண்டல் செய்ய, இறைவார்த்தையின் ஒளியில் நம் வாழ்வைத் தகவமைத்துக்கொள்ள இந்த நாள் நம்மைத் தூண்டி எழுப்புவதாக!

இன்றைய முதல் வாசகத்திலும் மூன்றாவது வாசகத்திலும் நற்செய்தி பறைசாற்றப்படுகிறது, நற்செய்தியைக் கேட்கிறவர்கள் அதற்குப் பதிலிறுப்பு செய்கிறார்கள்.

‘யோவான் கைது செய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவுக்கு வந்தார்’ என்று இயேசுவின் பணித் தொடக்கத்தை அறிமுகம் செய்கின்றார் மாற்கு. மாற்கு நற்செய்தியாளர் தனது நற்செய்தி நூலின் தொடக்கத்தில், ‘கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி’ (1:1) என்று சொல்கின்றார். ஆனால், இங்கே, ‘கடவுளின் நற்செய்தி’ என்னும் சொல்லாட்சியைப் பயன்படுத்துகின்றார். அது என்ன கடவுளின் நற்செய்தி? (அ) இயேசுவே கடவுளின் நற்செய்தி, (ஆ) இயேசு மொழிவதே கடவுளின் நற்செய்தி, மற்றும் (இ) இயேசு வழியாக கடவுள் செயலாற்றும் மீட்புத் திட்டமே கடவுளின் நற்செய்தி என்று மூன்று நிலைகளில் நாம் இந்தச் சொல்லாட்சியைப் புரிந்துகொள்ள முடியும்.

ஆக, இயேசுவின் நற்செய்தியின் மையமாகக் கடவுள் இருக்கின்றார்.

முதலில் நற்செய்தியைப் பொதுவாக எல்லா மக்களுக்கும் பறைசாற்றுகின்றார் இயேசு. அங்கே யாரும் பதிலிறுப்பு செய்வதாக மாற்கு குறிப்பிடவில்லை.

ஆனால், இன்றைய வாசகத்தின் இரண்டாம் பகுதியில், ‘என் பின்னே வாருங்கள்! நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்!’ என்ற இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டவுடன், அவருடைய முதற்சீடர்கள் – சீமோன், அந்திரேயா, யாக்கோபு, யோவான் – அவற்றுக்குப் பதிலிறுப்பு செய்கின்றனர். அவர்களின் பதிலிறுப்பு இரு நிலைகளில் நடக்கிறது: ஒன்று, தங்கள் வலைகளை விட்டுவிடுகின்றனர். இரண்டு, தங்கள் தந்தையை வேலையாள்களோடு விட்டுவிடுகின்றனர்.

இயேசுவின் செய்திக்கு அவர்கள் உடனடியாகப் பதிலிறுப்பு செய்கிறார்கள். இந்த நிகழ்வு மூன்று நிலைகளில் நடக்கிறது: முதலில், அவர்கள் இயேசுவின் செய்தியை தாங்கள் இருக்கும் இடத்தில், தங்கள் அன்றாடப் பணியின் நடுவில் கேட்கின்றனர். இரண்டு, அவர்கள் இயேசுவின் செய்தியை முழுமையாக நம்புகிறார்கள். மூன்று, அவர்கள் தங்கள் பாதுகாப்பு வளையங்களான வலை மற்றும் உறவினர், பணியாளர்களை விட்டுவிடத் துணிகிறார்கள்.

முதல் வாசகத்தில், யோனா நினிவே நகரில் நற்செய்தி அறிவித்த நிகழ்வை வாசிக்கின்றோம். நினிவே நகரம் அசீரிய நாட்டின் தலைநகரம். அசீரியர்கள் கிமு 722-இல் படையெடுத்து வடக்கு இஸ்ரயேலை அடிமைப்படுத்துகின்றனர். அது முதல், அசீரியர்கள்மேல் தீராத பகையும் கோபமும் இஸ்ரயேல் மக்களுக்கு உண்டாகிறது. இந்நிலையில் அசீரியாவை அழிக்க நினைக்கின்ற கடவுள் யோனாவை அனுப்பி அங்கே மனமாற்றத்தின் செய்தியை அறிவிக்கின்றார். தன் சமகாலத்து இஸ்ரயேல் மக்களைப் போல யோனாவும், நினிவே எப்படியும் அழிய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆண்டவருடைய திட்டத்துக்கு ஒத்துழைக்க மறுத்து, ஆண்டவரின் திருமுன்னிலையிலிருந்து தப்பி ஓடுகின்றார். ஆனால், கப்பலிலிருந்து தூக்கியெறியப்பட்ட அவரை வியத்தகு முறையில் மீன் ஒன்றின் வழியாகக் காப்பாற்றுகின்றார் கடவுள். இரண்டாம் முறையாக ஆண்டவராகிய கடவுளின் வாக்கு அருளப்பட்டவுடன், ஆண்டவரின் கட்டளைப்படி நினிவேக்குச் செல்கின்றார் யோனா. மூன்று நாள்கள் கடக்க வேண்டிய தூரத்தை ஒரே நாளில் கடந்து ஓட்டமும் நடையுமாக நற்செய்தியை அறிவிக்கின்றார். ஆனால், என்ன விந்தை! நினிவே மக்கள் உடனடியாகக் கடவுளின் செய்தியை நம்பி நோன்பிருக்கின்றனர்.

பெரியவர்கள் முதல், வலது கை எது இடது கை எது என அறியாத குழந்தைகள் வரை அனைவரும் நோன்பிருக்கின்றனர். ஆண்டவரும் தன் மனத்தை மாற்றிக்கொள்கின்றார்.

இங்கே, ஆண்டவராகிய கடவுளின் செய்தி முதலில் யோனாவுக்குப் பறைசாற்றப்படுகின்றது. முதலில் அதற்குப் பதிலிறுக்க மறுக்கும் அவர் இரண்டாம் முறை பதிலிறுக்கின்றார். ஆனால், நினிவே நகர மக்கள், யோனா வழியாகக் கடவுள் அறிவித்த செய்திக்கு உடனே பதிலிறுப்பு செய்கின்றனர்.

இரண்டாம் வாசகத்தில், பரத்தைமை என்ற செயல் பரவிக்கிடந்த கொரிந்து நகரத் திருஅவையினரிடம் மணத்துறவு பற்றி உரையாடுகின்ற பவுல், இந்த உலகின் நிலையாத்தன்மையை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி, தாங்கள் பெற்ற நம்பிக்கைக்கு ஏற்ற பதிலிறுப்பைத் தங்கள் வாழ்வில் காட்ட அழைப்பு விடுக்கின்றார்.

இவ்வாறாக,

முதல் வாசகத்தில், யோனா கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றுகின்றார். நினிவே மக்கள் தங்கள் மனமாற்றத்தின் வழியாக அதற்குப் பதிலிறுப்பு செய்கின்றனர்.

இரண்டாம் வாசகத்தில், பவுல், கடவுளின் நம்பிக்கையினால் உந்தப்படும் அறநெறி வாழ்க்கைமுறையைச் சுட்டிக்காட்டி, அதற்கேற்ற பதிலிறுப்பைக் காட்ட கொரிந்து நகர மக்களை அழைக்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில், இயேசு கடவுளின் செய்தியைப் பறைசாற்றுகின்றார். முதற்சீடர்கள் நால்வர் அவரைப் பின்பற்றுவதன் வழியாக அதற்குப் பதிலிறுப்பு செய்கின்றனர்.

நற்செய்தியைப் பறைசாற்றுதலும், நற்செய்திக்குப் பதிலிறுத்தலும் நம் வாழ்வில் எப்படி நடைபெற வேண்டும்?

(அ) நற்செய்தியைப் பறைசாற்றுதல்

இன்று நாம் பல தளங்களில் நற்செய்தியைப் பறைசாற்றுகிறோம். பல்வேறு ஊடகங்கள் மற்றும் செயலிகள் நற்செய்திப் பறைசாற்றுதலை எளிமையாக்கி உள்ளன. ஆனால், பல நேரங்களில் மேற்காணும் பறைசாற்றுதல்கள் கடவுள் அல்ல, மாறாக, நாமே முதன்மைப்படுத்தப்படுகிறோம் என்ற உணர்வு வருகிறது. நான் கொடுத்த செய்தியை எத்தனை பேர் பார்த்தார்கள், எத்தனை பேர் விரும்பினார்கள், எத்தனை பேர் பகிர்ந்துகொண்டார்கள், எத்தனை பேர் பாராட்டினார்கள் என்று நம் உள்ளத்தில் எழும் தேடல் சொல்வது என்ன? பறைசாற்றப்படுவது கடவுள் அல்ல! பறைசாற்றுபவர்தான்! யோனா முதலில் கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்ற மறுக்கக் காரணம் அவருடைய முற்சார்பு எண்ணமும், தன்மையப்படுத்தலும்தான். தன்னையும், தன் சார்ந்த இனத்தின் விருப்பு வெறுப்புகளையும் உள்வாங்கிய யோனா, அதன் பின்புலத்தில் கடவுளை அறிவிக்க மறுக்கின்றார்.

இன்று நற்செய்தியைப் பறைசாற்ற மூன்று தடைகள் இருக்கின்றன என்று நாம் சொல்ல முடியும்:

ஒன்று, தயக்கம். அதாவது, ‘நான் எப்படி இதைச் செய்வது?’ என்ற தயக்கம். இத்தயக்கத்தோடு வருவது, ‘என்னால் இயலாது’ என்ற எதிர்மறை உணர்வு.

இரண்டு, எதிர்மறை எண்ணம். ‘நற்செய்தி சொல்லி என்ன ஆகப் போகிறது? இந்த உலகம் அப்படியே தான் இருக்கும். யாரும் மாறப்போவது இல்லை. எதற்கு நேரத்தை மற்றும் ஆற்றலை விரயம் செய்ய வேண்டும்?’ என்ற கேள்விகளோடு நாம் பல நேரங்களில் நம் எதிர்மறை எண்ணங்களில் உறைந்துவிடுகின்றோம்.

மூன்று, தன்மையப் போக்கு. யோனாவைப் போல கடவுளின் நற்செய்தியையும் நம் செய்தியையும் ஒன்று எனப் பல நேரங்களில் குழப்பிக் கொள்கின்றோம்.

(ஆ) நற்செய்திக்குப் பதிலிறுத்தல் – எப்படி?

ஒன்று, தயார்நிலை. நினிவே மக்கள் உடனடியாகத் தவ உடை அணிந்து நோன்பிருக்கின்றனர். முதற்சீடர்கள் உடனயாக தங்கள் வலைகளையும் படகுகளையும் தந்தையையும் பணியாளர்களையும் விட்டுவிட்டு வருகின்றனர். தயாராக இருப்பவர்கள் மட்டுமே பதிலிறுப்பு செய்ய முடியும்.

இரண்டு, வாழ்வின் நிலையாமை. இரண்டாம் வாசகத்தில் இந்த உலக வாழ்வின் நிலையாமை பற்றி எடுத்துச் சொல்கின்றார் பவுல். எதுவும் நிலையற்றதாக இருக்கும் இந்த உலகில், இந்த நொடியில் உடனடியாகக் கடவுளைப் பற்றிக்கொள்ள அழைப்பு விடுக்கின்றார். நாளை என்பது உறுதியாக இல்லாத நிலையில் இன்றே பதிலிறுத்தல் நலம்.

மூன்று, பாதை மாற்றம். ஒரே செயலைத் திரும்பத் திரும்பச் செய்து இன்னொரு விளைவை எதிர்பார்த்தல் நியாயமற்றது. மீன்களைப் பிடித்துக் கொண்டே மனிதர்களைப் பிடிக்க இயலாது. பரத்தைமையில் இருந்துகொண்டே அறநெறியோடு வாழ இயலாது. பாவ நிலையில் இருந்துகொண்டே கடவுளுக்கு அருகில் வர முடியாது. பின்னையதை அடைய முன்னையதை விட வேண்டும்.

இறுதியாக,

கடவுளின் நற்செய்தி நம் வாழ்வில் பறைசாற்றப்படவும், அச்செய்தி நம்மை நோக்கி வரும்போது அதற்கேற்ற பதிலிறுப்பு செய்யவும் முயற்சி எடுத்தல் நலம்.

எனவே, ‘உம் பாதைகளை நான் அறியச் செய்தருளும்’ (காண். திபா 25) என்று அவரிடம் வேண்டுவோம். அவரின் பாதைகளை அறிதல் நற்செய்தி. அந்தப் பாதையில் வழிநடத்தல் நம் பதிலிறுப்பே.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மனமாற்றமும் ............இறைவனின் அழைப்பும்!

ஒரு தந்தைக்கு ஒரே ஒரு மகன். அதிகமான அன்பைக் கொட்டி வளர்த்தார் . ஆனால் மகன் தாறுமாறாக வாழத்தொடங்கினான். ஒருமுறை தன் நண்பர்களோடு சேர்ந்து மகன் புகைபிடித்துக் கொண்டிருந்ததை தந்தை கவனித்தார். வீட்டிற்கு வந்த பின் தந்தை கண்டித்தார். அவன் கேட்ட பாடில்லை.தந்தையும் மகன் திருந்துவான் என ஒவ்வொருமுறையும் சொல்லிப்பார்த்தார். அவன் கேட்கவேஇல்லை. அடிக்கவும் செய்தார் திருந்தவில்லை. இறுதியில் நுரையீரல் பாதிக்கப்பட்டு சிறு வயதியிலேயே படுக்கையில் விழ நேர்ந்தது. அப்போதுதான் தான் செய்த தவறை நினைத்து அவன் வருந்தினான். ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை .....இறந்து போனான்.

இச்சிறுநிகழ்வு நமக்கு எதைக் கூறுகிறது. தந்தையின் வழியாக மனம்மாறி வாழ அழைப்பு கொடுக்கப்பட்டும் அதை நிராகரித்த மகனின் நிலை ....இன்று எத்தனை இளைஞர்கள் மத்தியில் உள்ளது? அதே போல ஆன்ம வாழ்வை காத்துக்கொள்ள மனம் மாற நமக்கு கொடுக்கப்பட்ட அழைப்பை நாம் ஏற்று செயல் படுகிறோமா?

அன்புக்குரியவர்களே பொதுக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு இறைவார்த்தையை உங்களோடு சிந்திப்பதில் மகிழ்ச்சி. இன்றைய இறைவார்த்தை நமக்கு இரு முக்கிய மையச் சிந்தனைகளைத் தருகின்றது. முதலாவது மனமாற்றம். இரண்டாவது இறையழைத்தல். மிக முக்கியமான விடயம் என்னவென்றால் இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தது. ஒன்றில்லையேல் மற்றொன்று இல்லை என்பதே உண்மை.

முதல் வாசகத்தில் நினவே மக்களின் மனமாற்றத்தையும் அதனால் கடவுள் தண்டனை வழங்கும் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டதையும் பற்றி தியானிக்கிறோம். ஆம் உண்மையான மனமாற்றம் என்பது நம் வாழ்க்கைமுறையில் ஏற்படும் மாற்றம் மட்டுமல்ல. மாறாக அது கடவுளின் மனதையே மாற்ற வல்லது. அதே போல புனித பவுல் இவ்வுலகம் நிலையற்றது எனக்கூறி நம் வாழ்வை சீரமைக்க அழைக்கிறார்.

நம் ஆண்டவர் இயேசுவும் தன் பணிவாழ்வின் தொடக்கத்தில் அனைவருக்கும் கொடுத்த அறைகூவல் "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள் " என்பதாகும். அதோடு அவர் நிறுத்திவிடவில்லை மனமாற்ற வாழ்வை தாமும் வாழ்ந்து பிறரும் வாழ வழிகாட்டும் விதமாக தம் முதல் நான்கு சீடர்களை அழைக்கிறார். எதற்காக .....கடவுளுக்காக மனிதர்களைப் பிடிக்க!

அன்பு சகோதரமே .....நாமும் ஒவ்வொரு நாளும் இறைவனால் மனமாறி நற்செய்தியை நம்பி வாழ அழைக்கப்படுறோம். மேலும் இம்மனமாற்ற வாழ்வால் கடவுளுக்காக மனிதர்களை மனந்திருப்பி சேர்க்கவும் அழைப்பு பெற்றவர்கள் நாம். நாம் தவறுவதும், விழுவதும் நம் வாழ்வில் தவிர்க்க முடியாததொன்றாக ஆகிவிட்டது. இருப்பினும் மனம் தளராமல் மீண்டும் மீண்டும் மனமாறுவோமா? கடவுளின் அழைப்பை ஏற்று வாழ்வோமா? இரக்கம் மிகுந்த கடவுள் நமக்கு நிச்சயம் துணை நிற்பார்.

இறைவேண்டல்

அழைக்கும் இறைவனே! எம் பலவீனங்களிலிருந்து மனம்மாறி நம்பிக்கையோடு உம் அழைப்பிற்கு செவிமடுக்க வரமருள்வீராக. ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ser