மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக் காலம் மூன்றாம் ஞாயிறு
1-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எசாயா 9: 1-41| கொரிந்தியர்‌ 1:10-13,17|மத்தேயு 4: 12-23

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


ஓர் ஆசிரமத்தின் தலைவர் ஓர் ஊருக்குச் சென்றார். அங்குள்ள இளைஞர்களிடம் பேசி தன் ஆசிரமத்திற்கு ஆள் சேர்க்கச் சென்றார். ஆசிரமத்தைப் பற்றியதை விளக்கிய பின் ஓர் இளைஞன் வந்தான். 'குருவே ஆசிரமத்தில் நான் சேர வேண்டும் என்றான். 'உன் பெயர் என்ன?' என்று கேட்டார். 'ஓட்டை வண்டி ஆரோக்கியம்' என்றான். 'அது என்ன' என்றார். 'ஆரோக்கியம் என்பது என் பெயர். ஓட்டை வண்டி என்றால் அது என் குடும்பப் பெயர்.' 'குடும்பத்தை அடியோடு மறந்தால்தான் ஆசிரமத்தில் வாழ முடியும். உன்னிடம் குடும்பப் பாசம் உள்ளது. எனவே நீ ஆசிரமத்திற்கு வரமுடியாது' என்றார்.

இரண்டாவது ஒருவன் வந்தான். 'உன் பெயரென்ன?' என்று கேட்டார். ‘அந்தோணி முதலி' என்றான். 'அந்தோணி என்பது உன் பெயர். முதலி என்பது என்ன?' என்று கேட்க, 'அது என் சாதிப்பெயர்' என்றான். 'சாதிப் பற்றுடையவர் ஆசிரமத்திற்கு வர இயலாது' என்றார்.

மூன்றாவது ஒருவன் வந்தான். 'உன் பெயர் என்ன என்று கேட்க, அருளப்பன் என்றான். 'மகிழ்ச்சி. வரலாம்' என்றார் ஆசிரமத் தலைவர். ஆனால் நான் வருமுன் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன் என்றான். சொல் என்று அனுமதிக்க, ஆசிரமத்தில் காலையில் என்ன சாப்பிடுவீர்கள் என்று கேட்க, 'இட்லி' என்றார். 'குருவே எனக்கு எத்தனை இட்லி தருவீர்கள்?' எனக் கேட்டான். குரு கோபமுடன், 'சாப்பாட்டு இராமனுக்கு ஆசிரமத்தில் இடமில்லை' என்றார். இறுதியாக ஒருவன் வந்தான். 'உன் பெயர் என்ன? என்று கேட்க, தாசன் என்றான். உன் பெயரின் பொருள் தெரியுமா என்று கேட்டார். அனைவருக்கும் பணிபுரியும் அடியான். குரு மகிழ்ந்து தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார்.

இன்றைய நற்செய்தியிலே இறைமகன் இயேசு தான் விரும்பிய சீடர்களைத் தேர்ந்தெடுத்தார். என்னைப் பின் செல் என்று அழைத்தவுடன் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின் சென்றார்கள் என்று நற்செய்தி அறிவிக்கிறது. இன்று இயேசு நம்மையும் அழைக்கிறார்.

நாம் விண்ணரசைப் பற்றிக் கொள்ள மனம் மாற வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கின்றார் (மத்.4:17). ஒரு மனித வாழ்வில் மூன்று காரணங்களால் இருள் படரலாம். (1) நோயினால் (2) பாவத்தால் (3) மரணத்தால்

1. நோய்: பார்வையற்ற குருடன் பர்த்திமேயு (மாற்கு 10:46-52) எரிக்கோ சாலையோரத்தில் இருந்த குருடர் பர்த்திமேயு, இயேசு அந்த பக்கமாகச் செல்வதை உணர்ந்து, தாவீதின் மகனே என் மேல் இறங்கும் என்று இருமுறை அழைக்க, இயேசு அவன் கண்களைத் தொட்டு அவர் விருப்பப்படி அவருக்குப் பார்வைக் கொடுத்து மூடியிருந்த கண்களைத் திறந்துவிட்டார். இயேசுவின் அருள் அவரை ஒளியின் மகனாக மாற்றியது.

2. கல்வாரியின் கள்வன் (லூக். 23:42-43) அன்று சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசுவின் இருபக்கத்திலும் கள்வர்கள் இருவர் தொங்கினார்கள். ஒருவர் இயேசுவைப் பழித்தார். மற்றவனோ இயேசுவே நீ ஆட்சி உரிமை பெற்று வரும்போது என்னை நினைவில் கொள்ளும் என்றார். நீ இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பாய் எனக் கூறினார். அந்தக் கள்வரின் உள்ளம் இயேசுவின் கருணை வெள்ளத்தால் நிரம்பி ததும்பியது. அவன் இறையொளியைக் காணும் பேறு பெற்றார்.

3. மரண நிழல் (லூக். 7:11-17) நயின் என்ற ஊருக்குள்ளே வாழ்ந்த கைம்பெண்ணின் ஒரே மகன் இறந்துவிட்டான். ஆறுதல் சொல்ல யாருமே இல்லை. ஆனால் இயேசு அந்த விதவையின் வாழ்க்கையில் ஒளியேற்ற முன் வந்து பாடையை நிறுத்தி இளைஞனே எழுந்திரு என்று கூறி எழுப்பிவிட்டார்.

இந்த இயேசுதான் உலகின் ஒளியாக வந்தார் (யோவா. 8:12). நானே உலகின் ஒளி என்னைப் பின் செல்பவர் இருளில் நடவார். உயிரின் ஒளியைக் கொண்டிருப்பார் என்றார். ஆம்! நாம் மனம் மாறி இயேசுவை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இறைவா, எங்களுக்கு விண்ணரசு வேண்டும்

இன்றைய நற்செய்தியில் இயேசு, மனம் மாறுங்கள். ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது (மத் 4:17) என்கின்றார். விண்ணரசு என்பதற்கு ஓர் அழகான விளக்கத்தைப் புனித பவுலடிகளார் உரோமையருக்கு எழுதியுள்ள திருமுகத்தில் தந்துள்ளார்: இறையாட்சி என்பது நாம் உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாகத் தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டது (உரோ 14:17), நாம் விண்ணரசுக்குள், இறையாட்சிக்குள் நுழைய விரும்பினால், அதாவது நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை அனுபவிக்க விரும்பினால், முதலில் மன மாற்றத்திற்கு நம்மையே நாம் உட்படுத்திக்கொள்ள வேண்டும்.

நீதி என்பது அவரவர்க்கு உரியது அவரவர்க்குக் கிடைப்பதில் அடங்கியுள்ளது. இந்த உலகத்திலே மனிதர்களாகப் பிறந்த அனைவர்க்கும் ஆண்டவரின் மீட்பைப் பெற உரிமை உண்டு. ஆனால் மனிதர்கள் அவர்களுக்கு உரிய ஆசியைப் பெற முதலில் விண்ணகத் தந்தை தூயவராக இருப்பது போல அவர்களும் தூயவர்களாக வாழ முன்வரவேண்டும் (மத் 5:48). இந்தக் கருத்தைத் தெளிவாக லூக் 19:1-10 என்ற பகுதி நமக்கு எடுத்து இயம்புகின்றது!

சக்கேயு மனம்திரும்பத் தயாராக இருந்தபோதுதான் இயேசு அவருக்கு நீதி வழங்குகின்றார். அவரைப்பார்த்து : இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று (லூக் 19:9அ) என்று கூறுகின்றார். விண்ணரசின் ஒரு பகுதியான அமைதியும் மனம் மாறுகின்றவர்களுக்கே கிடைக்கும். அவள் உள்ளத்தில் அமைதி இல்லை! வெளியே சிரித்து உள்ளே அழுதுகொண்டிருந்தாள். எங்கோ, எப்படியோ. யாரிடமோ அவள் தன்னுடைய அமைதியைத் தொலைத்துவிட்டாள்:

இருள் அகற்றும் ஒளிவிளக்கைத் தேடி அலைந்தாள் (முதல் வாசகம்). தேடுவது கிடைப்பதில்லை : கிடைப்பதை நாம் தேடுவதில்லை என்பார்கள். ஆனால் அன்று அவள் தேடியது கிடைத்தது கிடைக்கக்கூடியதை அவள் தேடியதால்!

லூக் 7:36-50: அவள் படிகச் சிமிழை உடைத்தபோது அவள் உள்ளமும் உடைந்தது. அவள் தைலத்தை சிமிழிலிருந்து ஊற்றியபோது அவள் இதயத்திலிருந்த பாவத்தையும் இயேசுவின் பாதத்திலே அவள் ஊற்றினாள். உடலை இருளாக்கிய கண்கள் ஒளிபெறட்டும் என்பதற்காக அவள் அழுதாள். இந்தக் கூந்தலால்தானே மற்றவரை என் காலடியில் கட்டிப்போட்டேன்; இந்தக் கூந்தல் புனிதமடையட்டும் எனச்சொல்லி அவள் இயேசுவின் பாதத்தைக் கூந்தலால் துடைத்தாள். மனிதர்களை முத்தமிட்டு பாவம் செய்த இந்த உதடுகள் பரிசுத்தம் அடையட்டும் எனச்சொல்லி தனது உதடுகளால் இயேசுவின் பாதத்தை முத்தமிட்டாள்.

அவள் அவரைத் தொட்டவுடன், சேற்றிலே மலர்ந்த செந்தாமரையானாள்: சிப்பியிலே பிறந்த முத்தானாள் : மண்ணிலே பிறந்த மாணிக்கமானாள் - உலகத்திலிருந்து பெற முடியாத அமைதியை அவள் அன்று துய்த்தாள்.

மகிழ்ச்சி மனம் மாறுகின்றவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும் (லூக் 15:32அ) என்று எப்போது காணாமற்போன மகனின் தந்தை கூறினார்? அந்த ஊதாரி மகன் மனம் திரும்பி வந்தபோது !

மனம் மாறுதலுக்கு இரண்டு பக்கங்கள் உள்ளன : ஒன்று நாம் பாவி என்பதை, சக்கேயுவைப் போல, பாவியான பெண்ணைப் போல, ஊதாரி மகன் போல ஏற்றுக்கொள்வது : மற்றொன்று இயேசுவின் பாதத்தில் விழுந்து - அவருடைய பிரதிநிதியாம் அருள் பணியாளரின் முன் பிரசன்னமாகி - சுவாமி என் பாவங்களை மன்னியும் என்று சொல்வது. மனம் மாற. மனமார முன்வந்து, எல்லாப் பாவங்களையும் (இரண்டாம் வாசகம்) விட்டுவிட்டு நீதியையும், அமைதியையும். மகிழ்ச்சியையும் துய்த்து இந்த மண்ணகத்திலேயே விண்ணகத்தைக் காண்போம்! மேலும் அறிவோம்:

பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் (குறள்:6).

பொருள்: மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து புலன்கள் வாயிலாகத் தோன்றும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியவன் இறைவன். அத்தூயவனது மெய்யான ஒழுக்க நெறியைப் பின்பற்றி நடந்திடுவோர் நீடிய புகழுடன் வாழ்வர்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

எட்டாம் வகுப்பு மாணவர்களிடம் வகுப்பு ஆசிரியர் அவர்களுடைய முக்கியமான பிரச்சினை என்னவென்று கேட்டதற்கு அவர்கள்: “எங்கள் பெற்றோர்கள்" என்றனர். பிள்ளைகள் தங்களுடைய பெற்றோர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெற விரும்புகின்றனர். கல்லூரி மாணவர்களின் தாரக மந்திரம்: "கல்லூரிக்குக் அடிப்போம்; தேர்விலே 'பிட்' அடிப்போம்; பெண்களைச் 'சைட்' அடிப்போம்". இது கல்லூரி மாணவர்களின் கனாக்காணும் காலங்கள்! ஒரு கணவர் தம் மனைவியிடம், "நீ என்ளை உன் நாயைப் போல நடத்து; நாயோடு கொஞ்சி விளையாடுவதுபோல என்னுடனும் கொஞ்சி விளையாடு; நாயுக்கு வயிறு நிறைய சாப்பாடு போடுவது போல எனக்கும் வயிறு நிறைய சாப்பாடு போடு, எல்லாவற்றிற்கும் மேலாக, நாயை இரவிலே அவிழ்த்து விடுவதுபோல, என்னையும் அவிழ்த்துவிடு; தேடாதே" என்றார். இது ஒரு கணவர் காணும் விடுதலை வாழ்வு!

இன்றைய உலகிலே எல்லாருமே எவ்விதக் கட்டுப்பாடு மின்றிச் சுதந்திரப் பறவையாகப் பறக்க விரும்புகின்றனர். ஆனால், விடுதலைப் பெருமூச்சு விடுவதற்குப் பதிலாக ஏக்கப் பெருமூச்சு விடுகின்றனர். விடியலைத் தேடுபவர்கள் அமாவாசை இருட்டில் அகப்பட்டு அவதிப்படுகின்றனர். எங்கே விடுதலை? என்று வினவுகின்றனர். இவ்வினாவுக்கு விடையளிக்கிறது இன்றைய அருள்வாக்கு வழிபாடு. கடவுள் இஸ்ரயேல் மக்களை எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து விடுவித்து, அவர்களுடன் உடன்படிக்கை செய்தார். ஆனால் அந்த மக்களோ கடவுளுக்குக் கீழ்ப்படியாமல், அவருடைய கட்டளைகளை மீறி, பிற இனத்தெய்வங்களை வழிபட்டனர். அதன் விளைவாகப் பல்வேறு நாடுகளுக்கு அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். கி.மு. 5ஆம் நூற்றாண்டில் பாபிலோனியாவுக்கு யூதர்கள் அடிமைகளாகச் சென்றனர்.

50 ஆண்டுகள் அடிமை வாழ்வுக்குப் பின்னர், சீருஸ் அவர்களுக்கு விடுதலை அளித்தார். அவர்கள் எருசலேம் திரும்பி. ஆலயத்தை மீண்டும் கட்டி எழுப்பி ஆண்டவரை வழிபட முயற்சி எடுத்தனர். எஸ்ரா என்ற சட்ட வல்லுநர் மக்களுக்குச் சட்ட நூலை வாசித்தபோது அவர்கள் அழுதனர் (முதல் வாசகம்). கடவுளும் அவருடைய அருள்வாக்கு அடங்கிய மறைநூலும் அவர்களுக்கு விடுதலை கொடுத்தது. கடவுளை விட்டு அகலும் எவரும் அடிமைகளாகின்றனர்; கடவுளை நெருங்கும் எவரும் விடுதலை பெறுகின்றனர். கடவுளுக்கு வெளியே தேடும் விடுதலை வெறும் பகற்கனவே! இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து நாசரேத்து தொழுகைக் கூடத்தில் இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து தம்மைக் குறித்து எழுதப்பட்ட பகுதியை (எசா 61:1-2) வாசித்து, மக்களிடம் கூறியது: "நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று" (லூக் 4:21). மறைநூலின் மையம் கிறிஸ்து. மறைநூலில் எழுதப்பட்ட எல்லா இறைவாக்குகளும் கிறிஸ்துவில் நிறைவடைகின்றன. மறைநூல் கிறிஸ்துவுக்குச் சாட்சியம் அளிக்கிறது (யோவா 5:39). முற்காலத்தில் இறைவாக்கினர் வாயிலாக முன்னோரிடம் பேசிய கடவுள் இறுதிக் காலத்தில் கிறிஸ்து வழியாகப் பேசியுள்ளார் (எபி 1:1).

கிறிஸ்து மக்களுக்கு வழங்கிய செய்தி விடுதலைச் செய்தி. எளியவர்களுக்கு நற்செய்தி சொல்லவும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு உரிமை வாழ்வு வழங்கவும் அவர் இவ்வுலகிற்கு வந்தார். கிறிஸ்து கொண்டு வந்த விடுதலை வெறும் புறவிடுதலை மட்டுமல்ல, மாறாக அக விடுதலை, ஆன்மீக விடுதலை, அவர் யூதர்களிடம் கூறியது: செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை. மகன் உங்களுக்கு விடுதலை அளித்தால்தான் நீங்கள் உண்மையில் விடுதலை பெற்றவராய் இருப்பீர்கள்" (யோவா 8:34-36). கிறிஸ்து தான் உலகின் பாவங்களைப் போக்கும் உண்மை யான செம்மறி (யோவா 1:29). அவர் பலருடைய பாவ மன்னிப்புக்காக இரத்தம் சிந்தினார் (மத் 26:28). நாம் பாவத்திலிருந்து விடுதலை பெற வேண்டும். 38 ஆண்டுகளாகத் தீராத நோயால் அவதிப்பட்ட ஒருவரைக் குணப்படுத்திய கிறிஸ்து. மீண்டும் அவரைப் பார்த்த போது அவரிடம் கூறியது: "பாரும்! நீர் நலமடைந்துள்ளீர், இதை விடக் கேடான எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப்பாவம் செய்யாதீர்" (யோவா 5:14). ஒரு தீய செயல் மற்றொரு தீய செயலுக்கு வித்திடுவதால், தீக்குப் பயப்படுவதை விடத் தீய செயலுக்குப் பயப்பட வேண்டும்.

தீயலை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப்படும். (குறள் 202)

அழிவுக்குச் செல்லும் அகலமான பாதையில் செல்லாது, வாழ்வுக்கு இட்டுச் செல்லும் இடுக்கமான வாயிலின் வழியாகச் செல்ல அழைப்பு விடுக்கிறார் ஆண்டவர் (மத் 7:13-14). பாவங்களில் எல்லாம் கொடிய பாவம் வடிகட்டிய தன்னலம். பிறரைப் பற்றி அலட்டிக் கொள்ளாத நிலை. இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் திருச்சபையை, இறைமக்கள் சமூகத்தை ஓர் உடலுக்கு ஒப்பிடுகிறார். உடலில் ஒர் உறுப்பு துன்புற்றால், உடல் முழுவதும் துன்புறுகிறது. உடலில் ஓர் உறுப்பு இன்புற்றால், முழு உடலும் இன்புறுகிறது (1 கொரி 12:26). அவ்வாறே நாமும் பிறருடைய துன்பத்தை நம்முடைய துன்பமாகவும், பிறருடைய இன்பத்தை நம்முடைய இன்பமாகவும் கருதி, அழுவாரோடு அழுது மகிழ்வாரோடு மகிழ வேண்டும் (உரோ 12:15) நமக்குச் சமுதாய அக்கறை வேண்டும். பிறருடைய துன்பத்தை நம்முடைய துன்பமாகக் கருதாவிட்டால், நம்மிடம் பகுத்தறிவு இருந்தும் அது பயனற்றது.

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின் நோய்
தம் நோய்போல் போற்றாக் கடை (குறள் 315)

ஒரு பெரியவர் ஒரு குடும்பத் தலைவரிடம், “மனிதராகப் பிறந்ததற்கு நாலு பேருக்கு நன்மை செய்ய வேண்டும்" என்றார். அதற்குக் குடும்பத் தலைவர். "நானும் நாலு பேருக்கு நன்மை செய்கிறேன். அவர்கள் எனது மனைவியும் எனது மூன்று பிள்ளைகளும்" என்றார். நமது அன்பு நமது குடும்பம் என்னும் குறுகிய வட்டத்துக்குள் முடங்கிவிடாமல் மற்றவர்களையும் அரவணைக்கும் உலகளாவிய அன்பாக இருக்கவேண்டும். புறநானூற்று ஆசிரியர் இந்த உலகம் இன்னும் அழியாமல் இருப்பதற்குக் கூறும் காரணம்: இவ்வுலகில் இன்னும் தனக்காக வாழாமல் பிறருக்காக வாழும் மனிதர் ஒரு சிலர் இருப்பதால்.

உண்டால் அம்ம இவ்வுலகம்... தமக்கென முயலா நோன்தான்,
பிறர்க்கென முயலுநர் உண்மையானே" (புறம் 182)

பாவத்திலிருந்து குறிப்பாகத் தன்னலத்திலிருந்து விடுதலை அடைந்து, உலகம் தரமுடியாத அமைதியைப் பெற்று மகிழ்வோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இருளைப்‌ பழிப்பதை விட ...

யோர்தான்‌ ஆற்றில்‌ திருமுழுக்கு, பாலைவனத்தில்‌ சோதனைகள்‌ என்று உடனடியாகத்‌ தன்‌ பொது வாழ்க்கையைத்‌ தொடர்கிறார்‌ இயேசு.

இத்தாலிய மொழியில்‌ ஒரு பொன்மொழி உண்டு. “எங்கே போகிறோம்‌ என்பதைத்‌ தெளிவாகத்‌ தெரிந்த ஒருவனுக்கு உலகமே ஒதுங்கி நின்று வழிவிடுகிறது. என்பதுதான்‌ அது. திடமான நம்பிக்கை, தெளிவான குறிக்கோள்‌, திண்ணமாய்‌ வெற்றியடையும்‌ உறுதி உடைய ஒருவனால்‌ எதையும்‌ சாதிக்க முடியும்‌.

அத்தகைய ஒருவரைப்‌ பாரதநாடு அண்ணல்‌ காந்தி, ஜெயப்பிரகாஷ்‌ நாராயணன்‌ போன்றவர்களில்‌ கண்டது. அவர்களுக்கெல்லாம்‌ எங்கே போகிறோம்‌, எது நோக்கி நாட்டை நடத்துகிறோம்‌ என்பதெல்லாம்‌ தெளிவாக இருந்தது. அதனால்‌ பெரும்‌ புரட்சியைக்‌ கொண்டு வர முடிந்தது. நாட்டைச்‌ சூழ்ந்திருந்த இருளான "நிலைக்கு ஒளியூட்ட முடிந்தது. ஒளி பெற்ற தலைமையால்‌ தான்‌ ஒளி கொடுக்க முடியும்‌.

எல்லாக்‌ காலங்களுக்கம்‌ எல்லா மக்களுக்கும்‌. ஒளியும்‌ "ஆற்றலும்‌ தரக்கூடிய ஒரு தலைவனை, ஒரு வழிகாட்டியை இயேசுவில்‌ காண்கிறோம்‌. “பிற இனத்தார்‌ உன்‌ ஒளி நோக்கி வருவர்‌. மன்னர்‌ உன்‌ உதயக்கதிர்‌ நோக்கி நடைபோடுவர்‌”” (எசா. 60:3) என்பது இயேசுவில்‌ நிறைவேறியது. “காரிருளில்‌ நடந்து வந்த மக்கள்‌ பேரொளியைக்‌ கண்டார்கள்‌. சாவின்‌ நிழல்‌ சூழ்ந்துள்ள நாட்டில்‌ குடியிருப்போர்‌ மேல்‌ சுடரொளி உதித்துள்ளது” (எசா. 9:2) என்று.இறைவாக்கினர்‌ எசாயா சொன்னதும்‌ இயேசுவைப்‌ பற்றியே!

இன்றைய நற்செய்தியில் இறைமகன் இயேசு செயல்பட்ட இடங்களாக, செபுலோன், நப்தலி, கடலோரமாய் உள்ள கப்பர்நகூம், பிற இனத்தார் வாழும் கலிலேயா ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. இறைவாக்கினர் எசாயா பார்வையில் அவை இருள் சூழ்ந்தவை; சாவின் நிழல் படர்ந்தவை. திருமுழுக்கு யோவானின் பிறப்பில் அவருடைய தந்தை செக்கரியா தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு உரைத்த இறைவாக்கு: "இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளி தரவும், நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது" (லூக். 1:78,79). இருளிலும் இறப்பின் நிழலிலும் நமக்கு ஒளியூட்டும் இளஞாயிறு இயேசு என்பது தானே இந்த இறைவாக்கு!

ஒளியை எதுவும் கறைப்படுத்த முடியாது. கறைகளையே சுட்டெரிக்கும். ஒளி மட்டுமே புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து இயங்க முடியும். ஒளிக்கே உரிய தனித் தன்மையோடும் ஆற்றலாரும், எதிரிகளின் தாக்குதலிலும் துன்பத்தின் இருளிலும் வாழ்ந்த செபுலோன், நப்தலி நாடுகளின் மக்கள் விடுதலைக்காகச் செயல்பட்டார். இயேசுவின் நற்செய்தியும், அருங்குறிகளும் இயேசுவை அப்பகுதி மக்களுக்குப் பேரொளியாகக் காட்டின.

இறைப்பற்றுக் கொண்டவராய், இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவராய் ஆலயத்திலேயே வாழ்ந்த முதியவர் சிமியோன் குழந்தை இயேசுவைக் கையில் ஏந்தி கடவுளைப் போற்றிச் சொன்னதும் சிந்திக்கத்தக்கது. "மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள மீட்பை என் கண்கள் கண்டு கொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி. இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை” (லூக். 2:30-32).

அடிமைத்தனம், இருள், அழிவின் அவலம் மண்டிக்கிடக்கும் இடத்திலே இயேசு மீட்பராக, ஒளியாக, வாழ்வாக, விடுதலை வீரராக விளங்குவார். இருளின் தளங்களாக நமது வாழ்க்கையில் பல உண்டு. அச்சம், நோய், வேதனை, பாவம், விரக்தி, தனிமை, பிளவுகள், பிரிவினைகள், தவறுகள், மன அழுத்தங்கள் எல்லாமே இருளின் தாக்கங்கள்தாம். எனவே இயேசுவின் ஒளி நமக்குத் தேவை. இயேசு என்ற ஒளியில் நடப்பவர்களுக்குத் தீங்கு ஏதும் இல்லை. "உலகின் ஒளி நானே. என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்க மாட்டார். வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” (யோ.8:12) என்றார் இயேசு. இயேசுவின் உடனிருப்பில் சாவின் நிழலோ பயமோ இல்லை. கடலில் புயலில், “போதகரே, சாகப் போகிறோமே, உமக்குக் கவலையில்லையா?” என்று கதறியபோது, இயேசு கேட்டார்: “ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?" (மார்க். 4:35-40).நிழலின் அருமை வெயிலில் தெரியும். ஒளியின் மகிமை இருளில் தெரியும். இருளைப் பழிப்பதைவிட ஒளியேற்றுவது மேலன்றோ!

இறைவன் ஒளியென்றால் இறைவனின் சாயலான மனிதனும் ஒளிதான். ஆகவேதான் இயேசு சொன்னார்: “நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள் ... உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்” (மத். 5:14-16). நாம் ஒளியின் மக்களா? இருளின் மக்களா?

இயலாமைகள், பலவீனங்கள் எல்லாம் இறைவன் செயல்படும் இடங்கள் ஆகிட வேண்டும். உடல் ஊனம் வாழ்வின் பெரிய சோகம் என நினைத்த காலங்கள் மலையேறிவிட்டன. ஊனம் இருந்தும் அதையே வெற்றிமலையின் படியாக மாற்றியவர்கள் உண்டு. 1961ஆம் ஆண்டு கோமா என்னும் இடத்தில் உலக அழகிப் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் பார்பரா என்ற பெண் இரண்டாவது பரிசு பெற்றாள். பேரும் புகழும் பணமும் கிட்டியது. 1964ஆம் ஆண்டு அவள் காலில் புற்றுநோய். காலை வெட்டி எடுத்துவிட்டார்கள். ஆனால் அந்த அழகியோ ஊனமுற்ற பிள்ளைகள் வாழும் இல்லத்தைத் தன் உறைவிடமாக்கிக் கொண்டாள். ஊனமுற்ற குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்கும் நல்லாசிரியை ஆனாள்.

அவள் அப்போது தனக்குள் மிகவும் உற்சாகம் தரக்கூடிய வார்த்தைகளைச் சொல்லிக் கொள்வாள். “நான் இவர்களுக்கு இருளில் ஓர் ஒளி. நான் என் காலைத்தான் இழந்தேன். என் வாழ்வை அல்ல. என் வாழ்வு என்னோடு இருக்கும் வரை மற்றவர்களை வாழவைப்பேன். மற்றவர்களுக்கு இருளில் ஒளியாய் இருப்பேன்."

இந்த உலக அழகி எப்படி ஊனமுற்ற சிறுவர்களுக்கு ஆசிரியையாய் இருந்து அவர்களது வாழ்வின் இருளிலும் ஒளியாய் இருந்தாளோ, அதுபோல இயேசுவும் நமக்கு இருளில் ஒளியாய் இருக்கிறார். புற்றுநோயினால் பாதிப்புக்கு ஆளாகி கால் இழந்த காரிருள் சூழலிலும். “நான் வாழ்வை இழக்கவில்லை” என்ற ஒளியைக் கண்டாள். இதே செய்தியைத் தான் இன்றைய வழிபாட்டு இறைவாக்குகளும் உணர்த்துகின்றன.

அந்நிய நாட்டின் படையெடுப்புக்கு இரையாகி அடிமைத்தனத்துக்கும் அழிவுதரும் அவலத்துக்கும் உட்பட்டிருந்த நாட்டுக்குக் கடவுள் மீட்பைக் கொண்டு வருவார் என்று முன்னறிவிக்கிறார் இறைவாக்கினர் எசாயா (முதல் வாசகம்) “அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர். அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர். அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை உடைத்தெறிந்தீர்.”(எசா. 9:1,2,4) என்று வர இருக்கும் விடுதலையை, மீட்பை, மாட்சியை அறிவிக்கிறார் இறைவாக்கினர்.

இறைவாக்கு இயேசுவில் நிறைவேறுகிறது; எங்கே அடிமைத்தனம் கோலோச்சுகிறதோ, அங்கே மீட்பாக விடுதலையாக, எங்கு இருள் மண்டிக்கிடக்கிறதோ, அங்கு போரொளியாக மாட்சியாக இயேசு வருகிறார் என்பதே நற்செய்தி.

நாமும் ஒளியாகத் திகழ அழைக்கப்படுகிறோம். அதற்கு என்ன செய்ய வேண்டும்? நீ சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் இயேசுவாக இரு. நீ சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் இயேசுவைப் பாரு. Be Jesus to everyone you meet and see Jesus in everyone you meet.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம் 3ம் ஞாயிறு – இந்திய குடியரசு நாள்

சனவரி 26, வருகிற வியாழனன்று, இந்தியாவில் 74வது குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது. பல்லாயிரம் ஆண்டுகள் மன்னர்களால் ஆளப்பட்ட இந்தியா, சில நூறு ஆண்டுகள், அன்னியர்களால் ஆளப்பட்டது. இவ்வாறு, முடியாட்சியை சுமந்து வருந்திய இந்திய மக்கள், இனி வேறு யாரும் எங்களை ஆட்சி செய்யவேண்டாம்; எங்களை நாங்களே ஆட்சி செய்வோம் என்று உலகறியப் பறைசாற்றிய நாள் குடியரசு நாள். இந்த வரலாற்றுப் பின்னணி, நம் மனங்களை உண்மையிலேயே பெருமையுறச் செய்கிறது. 21ம் நூற்றாண்டில், உலகிலேயே மிகப் பெரிய குடியரசு நாடு இந்தியாதான் என்ற உலகச்சாதனை, நம்மை மேலும் தலைநிமிரச் செய்கிறது.

இந்த வரலாற்றுப் பெருமைகளை விழுங்கிவிடும் வேதனை எண்ணங்களும் மனதை நெருடுகின்றன. கடந்த 73 ஆண்டுகளாக, குறிப்பாக, அண்மைய ஆண்டுகளில், இந்தியாவில் நடைபெற்றுவரும் ஆட்சியைச் சிந்திக்கும்போது, இது மக்களால் நடத்தப்படும் குடியாட்சியா அல்லது, குடியாட்சி என்ற போர்வையில் ஒரு சில முடிசூடா மன்னர்கள் நடத்தும் சர்வாதிகார ஆட்சியா என்ற கேள்வி மனதை வதைக்கிறது.

குடியாட்சி’ அல்லது ‘மக்களாட்சி’ என்ற சொல்லுக்கு, மக்களுக்காக, மக்களால், மக்களைக் கொண்டு அமைக்கப்படுவதே மக்களாட்சி என்று முன்னாள் அமெரிக்க அரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் அவர்கள் அளித்துள்ள இலக்கணம் அனைவரும் அறிந்த ஒன்று. அந்த இலக்கணத்தை எண்ணிப்பார்க்கும் இவ்வேளையில், லிங்கன் அவர்கள் சொன்ன வேறொரு கூற்றையும், மக்களாட்சியோடு இணைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. நம் கவனத்தை ஈர்க்கும் அவரது கூற்று இதுதான்: எல்லா மனிதரையும் ஒரு சில நேரங்களில் நீ ஏமாற்றலாம். எல்லா நேரங்களிலும் ஒரு சில மனிதரை ஏமாற்றலாம். ஆனால், எல்லா மனிதரையும், எல்லா நேரங்களிலும் உன்னால் ஏமாற்ற முடியாது.

உலகின் மாபெரும் குடியரசு அல்லது, குடியாட்சி என்று பெயரளவில் இயங்கிவரும் இந்திய அரசில் நிகழும் அனைத்து ஏமாற்று வேலைகளையும் மக்கள் புரிந்துகொண்டு, அடுத்துவரும் தேர்தல்களில் தகுதியான தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் தெளிவை மக்கள் பெறவேண்டும் என்று மன்றாடுவோம். இந்திய மக்களுக்கு, குறிப்பாக, வறுமையில் வாடும் பல கோடி இந்திய மக்களுக்கு, இந்த குடியரசு நாள், மக்களாட்சியை நிலைநாட்டும் ஒரு நாளாக அமையவேண்டும் என்று இறைவனிடம் மன்றாடுவோம். உண்மையான மக்களாட்சியை நிலைநாட்டிய பின், நாம் குடியரசு நாளை சிறப்பாகக் கொண்டாட முடியும். அதுவரை, குடியரசு நாள் கொண்டாட்டங்கள் வெறும் சடங்காகவே இருக்கும்.

குடியரசு நாள் கொண்டாட்டங்கள் என்று சொல்லும்போது, இந்தியாவில் எதைக் கொண்டாடுகிறோம் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். குடியரசு நாளன்று, மக்களாட்சியைப் பறைசாற்றும் அம்சங்களைக் கொண்டாடுவது பொருத்தமானது. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக, புதுடில்லியில் நடைபெறும் அணிவகுப்பு ஒன்றே குடியரசு நாளின் முக்கிய கொண்டாட்டம் என்று உலகிற்குக் காட்டப்படுகிறது. இந்த அணிவகுப்பில், மக்களின் கலாச்சாரங்கள் அணிவகுத்துச் செல்கின்றன என்றாலும், இந்திய அரசின் இராணுவ வலிமையே பெருமளவு விளம்பரப்படுத்தப்படுகின்றது. இதுதான் குடியரசு நாள் கொண்டாட்டமா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

கொண்டாட்டங்கள் ஆடம்பரமாய், ஆர்ப்பாட்டமாய், பிரமாதமாய், பிரமிப்பூட்டுவதாய் இருக்கவேண்டும் என்பது, உலகில் பல நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் பின்பற்றும் சிந்தனை. இந்நிறுவனங்களின், கட்சிகளின் ஆரம்பவிழாக்கள் பல கோடி ரூபாய் செலவில் அமர்க்களமாய் இருக்கும்; எதிர்பார்ப்பை உருவாக்கும். இவ்விதம் ஆரம்பிக்கப்பட்ட பல நிறுவனங்கள், பல அரசியல் கட்சிகள், வரலாற்றில் எவ்விதச் சுவடும் பதிக்காமல் சென்றுள்ளன. இவற்றிற்கு எடுத்துக்காட்டுகள் சொல்லத் தேவையில்லை.

இவற்றிற்கு முற்றிலும் மாறுபட்ட ஓர் எடுத்துக்காட்டாக, புனித அன்னை தெரேசா அவர்கள் ஆரம்பித்த பிறரன்பு மறைப்பணியாளர்கள் துறவு சபையை நாம் சிந்தித்துப் பார்க்கலாம். உடலெல்லாம் புண்ணாகி, நாற்றம் எடுத்து, சாக்கடைக்கருகில் சாகக்கிடந்த ஒரு நோயாளிக்குச் செய்த பணியில் ஆரம்பமானது இச்சபை. பிறந்த நாட்டைவிட்டு, வேறொரு நாட்டில் தனியொரு பெண்ணாக அன்னை தெரேசா அவர்கள் ஆரம்பித்த அற்புதப் பணிக்கு எந்த ஆரம்பவிழாவும், ஆர்ப்பாட்டமும் இல்லை. அப்பெண்ணின் மன உறுதியைக் கண்டு இன்னும் 12 பெண்கள் அவருடன் சேர்ந்தனர். இவ்விதம் ஆரம்பமான பிறரன்புச் சகோதரிகள் சபை, இன்று உலகெங்கும் எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் பணிகளைத் தொடர்கின்றது.

இந்திய மக்கள், முதல் குடியரசு நாளைக் கொண்டாடிய அதே 1950ம் ஆண்டு, அன்னை தெரேசா அவர்கள், பிறரன்பு மறைப்பணியாளர்கள் துறவு சபையையும் நிறுவினார். மிக அமைதியாக ஆரம்பமான இந்த துறவு சபை, கடந்த 73 ஆண்டுகளாய் தனக்கென தனித்துவமிக்க ஒரு வரலாற்றை உருவாக்கியுள்ளது.

பிறரன்புப் பணியில் தன்னையே முழுமையாக அர்ப்பணித்த ஒரு பெண், அவரைச் சுற்றி 12 பெண்கள் என்ற இந்த வரலாற்றுக் குறிப்பு, நம் நினைவை 20 நூற்றாண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. அந்த நினைவு, இன்றைய நற்செய்தியில் பதிவாகியுள்ளது. இயேசு தன் பணிவாழ்வை ஆரம்பித்த நிகழ்வையும், தன் பன்னிரு சீடர்களில் ஒரு சிலரை அழைத்ததையும், இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம். ஆர்ப்பாட்டம் ஏதுமற்ற, அடக்கமான, ஆழமான ஆரம்பம் இது.

இயேசு ஆரம்பித்த பணிவாழ்வினை ஒளியுடன் ஒப்புமைப்படுத்தி, இறைவாக்கினர் எசாயாவும், நற்செய்தியாளர் மத்தேயுவும் குறிப்பிடுகின்றனர். “காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது.” (எசாயா 9: 2; மத்தேயு 4: 16)

ஒளி ஓர் அழகிய உருவகம். அட்டகாசமான, அர்த்தமற்ற ஆரம்பங்களையும், அமைதியான, அர்த்தமுள்ள ஆரம்பங்களையும் இயற்கையில் நாம் காணும் மின்னல், சூரியஒளி என்ற இருவகை ஒளியுடன் ஒப்புமைப்படுத்தலாம். அட்டகாசமான ஆரம்பங்கள் மின்னலைப் போன்றவை. பளீரெனத் தோன்றி மறையும் ஒவ்வொரு மின்னலும் பலகோடி 'வாட்ஸ்' (Watts) மின்சக்தி கொண்டது. ஒரே ஒரு மின்னல் உருவாக்கும் சக்தியைப் பயன்படுத்தமுடிந்தால், மும்பை அல்லது சென்னை போன்ற பெருநகரங்களுக்குப் பல மாதங்களுக்குத் தேவையான மின்சக்தி தரமுடியும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், மின்னலின் சக்தியைச் சேமித்துவைக்கும் கருவிகள் இல்லாததால், மின்னல்கள் பயனில்லாமல் தோன்றி மறைகின்றன. பல சமயங்களில், மின்னல்களால் தீமைகள் விளைவதும் உண்டு. அட்டகாசமான, ஆடம்பரமான ஆரம்பங்கள், மின்னலைப் போன்றவை.இதற்கு மாறானது சூரியஒளி. இரவு முடிந்து பகலவன் எழும்போது, பளீரென உதயமாவதில்லை. அமைதியாய், ஆர்ப்பாட்டமில்லாமல், சிறு, சிறு ஒளிக் கீற்றுக்களாய் சூரியன் உதயமாகிறது. இப்படி அமைதியாய் ஆரம்பித்து, அகிலத்தை ஒவ்வொரு நாளும் நிறைக்கும் சூரியஒளியால், பல்லாயிரம் உயிர்கள் பயனடைகின்றன. இயேசுவின் பணி வாழ்வு, ஆதவனைப்போல் ஆரம்பமானது.

இயேசு என்ற தலைவன், தன் பணிவாழ்வின் ஆரம்பத்தில், மக்கள் முன் சொன்னதாக, மத்தேயு, மாற்கு ஆகிய இரு நற்செய்தியாளர்களும் பதிவுசெய்துள்ள வார்த்தைகள் இவையே: "மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது." (மத்தேயு 4: 17) இந்த வார்த்தைகளைத் தொடர்ந்து, இயேசு செய்த முதல் வேலை... தன் பின்னே வரும்படி ஒரு சில மீனவர்களை அழைத்தது...

ஆடம்பரம், ஆர்ப்பாட்டம் என்ற உலகக் கண்ணோட்டத்தில் பார்த்தால், இயேசு தன் பணிவாழ்வை ஆரம்பித்த விதம் ஏமாற்றம் தருவதாக உள்ளது. ஒரு பிரம்மாண்டமான புதுமையைச் செய்து அவர் தன் பணியை ஆரம்பித்திருக்கலாம். இதைத்தான் அலகையும் அவருக்குச் சொல்லித்தந்தது. எருசலேம் தேவாலயத்தின் உச்சியில் இருந்து குதிக்கச்சொன்னது. ஆனால், இயேசு தன் பணிவாழ்வை ஆரம்பித்தவிதம் அமைதியாக இருந்தது. அவர் முதன்முதலாகச் சொன்ன வார்த்தைகள் புதிராகவும் இருந்தன. "மனம் மாறுங்கள்" என்று மக்களுக்குச் சொன்னார். "என் பின்னே வாருங்கள்" என்று மீனவர்கள் ஒரு சிலரிடம் சொன்னார். கிறிஸ்தவ வாழ்வின் இரு முக்கிய அம்சங்கள் இவை: மனமாற்றம், இயேசுவைப் பின்தொடர்தல்.

மனமாற்றம் அனைவருக்கும் தேவையான ஓர் அழைப்பு. இதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இயேசுவைப் பின்தொடர்தல் என்பது துறவறத்தார், அருள் பணியாளர்கள் ஆகியோருக்குத்தான்; அனைவருக்கும் அல்ல என்பது பொதுவாக நாம் எடுக்கும் முடிவு. ஆழச் சிந்தித்தால், மனம் மாறுவதும், இயேசுவைப் பின்தொடர்வதும் ஒன்றோடொன்று தொடர்புடையது, இவை ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் விடப்படும் அழைப்பு என்ற உண்மைகள் விளங்கும்.

மாற்றம் என்பது பழைய நிலையை விட்டு விலகி, புதிய நிலைக்குச் செல்வது. வேலை மாற்றம், வீடு மாற்றம், படிப்பு மாற்றம் என்ற இந்த மாற்றங்கள், வெளிப்புற மாற்றங்கள். ஓரளவு எளிதான மாற்றங்கள். உள்ளமாற்றம், மனமாற்றம் என்பது மிகவும் கடினமானது. நமது மனதில் ஆணிவேர்விட்டு வளர்ந்துவிட்ட எண்ணங்கள், ஆசைகள், பழக்கங்கள் இவற்றை மாற்றி, புதிய எண்ணங்களைக் கொண்டுவருவது எளிதல்ல. இவ்வகை மாற்றங்கள் உருவாக ஒரு முக்கிய உந்துதலாக இருக்கக்கூடியது, அன்பு, பாசம், காதல்... நாம் மற்றொருவர்மீது ஆழமான ஈடுபாடு கொள்ளும்போது, அந்த மற்றொருவருக்காக நம்மிடம் எத்தனையோ அடிப்படை மாற்றங்களைச் செய்துகொள்ள தயாராகிறோம்.

கிறிஸ்தவ வாழ்வின் இரு முக்கிய அம்சங்களான மனம் மாறுங்கள், என் பின்னே வாருங்கள் என்ற இந்த இரு அழைப்பினையும் நாம் இந்தக் கோணத்தில் இணைத்துப் பார்க்கமுடியும். இயேசுவின் மீது ஆழமான ஈடுபாடு கொண்டு, அவரைப் பின்செல்ல நாம் ஆரம்பித்தால், மாற்றங்கள், மனமாற்றங்கள், வாழ்வின் அடிப்படை மாற்றங்கள் எளிதில் உருவாகும். இயேசுவினால் ஈர்க்கப்பெற்று, அவரது அழைப்பை ஏற்று, சீடர்கள் அவரைப் பின்சென்றனர். தங்கள் வாழ்வின் ஆதாரங்களான மீன்பிடிக்கும் தொழில், தங்கள் படகுகள், தங்கள் தந்தை என்று அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு இயேசுவைப் பின்சென்ற சீடர்களின் வாழ்வு முற்றிலும் மாறியது.

மாற்றத்தைப் பற்றிப் பேசும்போது, 'மாற்றம் நாமாக இருப்போம்' என்ற தலைப்புடன், குடியரசு நாளையொட்டி, சில ஆண்டுகளுக்குமுன் நாளிதழ் ஒன்றில் வெளியான ஒரு செய்தி மனதில் தோன்றுகிறது (‘Let’s be the change’ – The Hindu, January 24, 2014). இச்செய்தி வெளியான அவ்வாண்டு, பாராளுமன்றத் தேர்தல் அணுகிவந்ததால், அந்தத் தேர்தலும், குடியரசு நாளும் இளையோர் மனதில் உருவாக்கும் ஒரு முக்கிய எண்ணம் என்ன என்று அந்த நாளிதழ், இளையோரிடம் கருத்து கேட்டிருந்தது. அதற்கு, இளையோரில் பலர் கூறியது இதுதான்: "இந்தியாவில் எத்தனையோ நல்ல மாற்றங்கள் தேவை. அந்த மாற்றங்கள் என்னிடமிருந்து ஆரம்பமாகவேண்டும் என்று விரும்புகிறேன்" என்ற கருத்து, பல இளையோரிடமிருந்து வந்தது.

மிகவும் அற்புதமான ஒரு கருத்து இது. இந்த உறுதி, இன்றைய இளையோர் அனைவரிடமும் பரவினால், நிச்சயம் இந்தியா ஒரு தலைசிறந்த குடியரசாக உலகில் தலைநிமிர்ந்து நிற்கும். நாளையத் தலைமுறையினர் இந்தியாவை நல்வழியில் அழைத்துச் செல்வர் என்று நம்பிக்கை கொள்வோம். நாம் ஒவ்வொருவரும், குறிப்பாக, கிறிஸ்தவ நம்பிக்கை கொண்ட இளையோர் ஒவ்வொருவரும், உண்மையான மாற்றம் பெற்று, (மனமாற்றம் பெற்று) கிறிஸ்துவை இன்னும் நெருக்கமாக பின்பற்றும் உறுதி பெறவேண்டும் என்று மன்றாடுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

என் கப்பர்நாகும் எங்கே?

இந்தப் பிரபஞ்சத்தில் நமக்கென்று ஒரு இடம் இருக்கிறது. அந்த இடத்தைக் கண்டுபிடித்தலே நம் வாழ்வின் இலக்கு. எந்த இடத்தில் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமோ, எந்த இடத்தில் நாம் எல்லாரையும் அணைத்துக்கொள்கிறோமோ. எந்த இடத்தில் நாம் கனிதந்து வளர்கிறோமோ அந்த இடமே நம் இடம். அந்த இடமே நம்முடை கப்பர்நாகும்!

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 9:1-4), 'செபுலோன் நாடு, நப்தலி நாடு" என்று உருவகமாகவும், நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 4:12-23), 'செபுலோன் நாடு, நப்தலிநாடு, பெருங்கடல்வழிப் பகுதி, யோர்தானுக்கு அப்பால் உள்ள நிலப்பரப்பு. பிற இனத்தவரின் கலிலேயப் பகுதி என்று உருவகமாகவும், 'கப்பர்நாகும்' என்று நேரிடையாகவும் அழைக்கப்படுகிறது கப்பர்நாகும்.

கலிலேயக் கடலின் (ஏரியின் கரையோரமாய்) ஹஸ்மோனியர்களின் ஆட்சிக்காலத்தில் (கிமு 2 ஆம் நூற்றாண்டு) ஏற்படுத்தப்பட்டு ஏறக்குறைய கிபி 11ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட போரினால் ஆட்கள் வெளியேறி இன்று வெறும் தூண்களும் உடைந்த வீடுகளும் கற்களும் எஞ்சி நிற்கும் நகரம் தான் கப்பர்நாகும். இயேசுவின் சமகாலத்தில் இது ஒரு மீனவ நகரம். இந்நகரின் மக்கள்தொகை 'ஏறக்குறைய 1500. திருத்தூதர்கள் பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் மற்றும் மத்தேயு ஆகியோரின் சொந்த ஊர் இது. இங்கேதான் இயேசு நூற்றுவர்தலைவனின் மகனைக் குணமாக்குகிறார். முடக்குவாதமுற்ற ஒருவரை நான்கு பேர் கூரையைப் பிரித்து இறக்கியதும் இங்கேதான். கப்பர்நாகும் எதிர்மறையான பதிவையும் விவிலியத்தில் பெற்றுள்ளது: பெத்சாய்தா, கொராசின் நகரங்களோடு, இயேசு கப்பர்நாகுமையும் சபிக்கின்றார் (காண். மத் 11:23).

இயேசு நாசரேத்தை விட்டு அகன்று கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார்' என்று இன்றைய நற்செய்தி வாசகம் தொடங்குகின்றது.

ஏன் கப்பர்நாகுமுக்குச் செல்ல வேண்டும்?
இரண்டு நிலைகளில் இந்தக் கேள்விக்கு விடை தரலாம். ஒன்று. நாசரேத்து இயேசுவின் தனிவாழ்வின் அல்லது மறைந்த வாழ்வின் மையம். இந்த மையத்திலிருந்து விலகும் இயேசு தன் பொதுவாழ்வின் அல்லது பணிவாழ்வின் மையமாக கப்பர்நாகுமைத் தேர்ந்துகொள்கிறார். இரண்டு, மேன்மக்களும், அரசக்குடிகளும் வாழ்ந்த எருசலேமை. அல்லது சமாரியர்களின் புனித தலம் என்றழைக்கப்பட்ட கெரிசிம் நகரைத் தேர்ந்துகொள்ளாமல், அந்நியப் படையெடுப்புகளால் சூறையாடப்பட்ட பிறப்பில் யூதர்களாக இருந்தாலும் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியதால் புறவினத்தார் என்று நிலையில் கருதப்பட்டு வஞ்சிக்கப்பட்ட மக்கள் வாழ்ந்த இடமாகிய கப்பர்நாகுமைத் தேர்ந்துகொள்வதன் வழியாக. தன்னுடைய இறையாட்சிப் பணி மேன்மக்களுக்கும். அரசகுடிகளுக்கும் அல்ல, அது புனித இடம் சார்ந்ததும் அல்ல, மாறாக, வலுவற்றவர்களுக்கும். வெகுசன மக்களுக்கும் உரியது என்பதை இயேசு தெளிவுபடக் கூறுகிறார்.

ஆக, இயேசுவைப் பொருத்தவரையில், "இப்பிரபஞ்சத்தில் இது என்னுடைய இடம்' என்று இயேசு தெரிந்து கொண்ட இடம் 'கப்பர்நாகும்'.

விவிலியத்தில் 'இடம்' மிகவும் முக்கியமானது. முதல் ஏற்பாட்டில் இதை மிக அழகாகக் காணலாம். 'பாபேல்' என்ற இடத்தில் ஒன்றாகக் கூடியிருந்தவர்களை வெளியேற்றி அவர்களை பல நாடுகளுக்கு இடம்பெறச் செய்கின்றார் கடவுள். ஊர் என்ற இடத்தில் வாழ்ந்த ஆபிரகாமை கானானுக்கு இடம் மாற்றுகிறார். பெயர்செபாவில் குடியேறிய யாக்கோபு காரானுக்கு இடம் பெயர்கின்றார். யாக்கோபு மீண்டும் பெத்தேலுக்கு வருகின்றார். யோசேப்பு அங்கிருந்து விற்கப்பட்டு எகிப்துக்குச் செல்கின்றார். எகிப்தில் ஆளுநராகித் தன் தந்தையையும் வீட்டாரையும் அங்கே அழைத்துக்கொள்கின்றார். அங்கிருந்து விடுதலைப் பயணம் தொடங்குகிறது. இஸ்ரயேல் மக்கள் கானான் நாட்டிற்கு வருகின்றார்கள். இந்த இடமாற்றம் அல்லது இடம்பெயர்தல் ஒரு நிகழ்வு அல்ல, மாறாக, அது இறைவனின் நோக்கம் நிறைவேறுகின்ற ஒரு நிகழ்வு. ஏனெனில், ஒவ்வொருவரும் இடம் மாறும்போது விவிலியத்தில் அவருடைய வாழ்க்கை தலைகீழ் மாற்றம் அடைகிறது. அந்த மாற்றத்தில் கடவுள் செயலாற்றுகிறார் என்பதை அந்தக் கதைமாந்தர் அறிந்துகொள்கிறார்.

நம்முடைய மரபிலும் திருமணத்திற்குப் பின் மனைவி கணவருடைய இடத்திற்குச் செல்கிறாள். படிப்பு அல்லது வேலையின் பொருட்டு ஆண் இடம் மாறுகின்றான். இடமாற்றம் என்பது வாழ்வு மாற்றம் என்பதை நாம் நம்முடைய வாழ்வியல் அனுபவமாகவும் உணர்ந்திருப்போம்.

இயேசு கப்பர்நாகுமிற்கு வருகின்றார்
இதுதான் தன்னுடைய இடம்' என்று அவர் அதை அறிந்துகொள்கிறார். இந்த இடத்தில் இயேசு மூன்று செயல்கள் செய்வதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. அல்லது இன்றைய நற்செய்தி வாசகத்தை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்:
அ. நற்செய்தி அறிவிப்பு (மத் 4:12-17)
ஆ. முதல் சீடர்கள் அழைப்பு (4:18-22)
இ. திரளான மக்களுக்குப் பணி (4:23)
முதலில், 'மனம் மாறுங்கள். ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது' என்ற நற்செய்தியை அறிவிக்கிறார். இரண்டாவதாக, தன்னுடைய விண்ணரசுப் பணிக்கான நுகத்தடித் தோழர்களாக. உடனுழைப்பாளர்களாக, திருத்தூதர்களாகத் திகழ நால்வரைத் தெரிவு செய்கிறார். இறுதியாக, அப்பகுதிகளில் சுற்றி வந்து மக்களிடையே இருந்த நோய்நொடிகளைக் குணமாக்குகின்றார்.

இதுதான் பிரபஞ்சத்தில் தன்னுடைய இடம் என்பதை இயேசு எப்படிக் கண்டுகொள்கின்றார்? இதற்கு மூன்று காரணங்களை நாம் நற்செய்தி வாசகத்தில் பார்க்கலாம்.

அ. இறைவாக்கு நிறைவேறுகிறது
தன்னுடைய பணிவாழ்வை இயேசு எசாயா இறைவாக்கினரின் நிறைவாகப் பார்க்கிறார். இந்த இறைவாக்கையே இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம். வடக்கே இஸ்ரயேல் மக்கள் போர்களால் அலைக்கழிக்கப்பட்ட நேரம், அசீரியாவின் படையெடுப்பால் அடிமைகளாக நாடுகடத்தப்பட்ட நேரத்தில் இறைவாக்குரைக்கும் எசாயா, வரவிருக்கும் அரசர் பற்றிய முன்னறிவிப்பில், இருளிலும் அடிமைத்தனத்தில் குளிரிலும் இருந்தவர்களுக்கு ஒளி உதித்தது என்று அறிவிக்கின்றார். மேலும், மகிழ்ச்சி, அக்களிப்பு. களிகூர்தல் என்று மூன்று நிலைகளில் அவர்கள் தாங்கள் இழந்த மகிழ்ச்சியைக் கண்டுகொள்கிறார்கள். மேலும், நுகம், தடி, மற்றும் கொடுங்கோல் ஒடித்துப்போடப்படுவதால் அடிமைத்தனம் முற்றிலும் அழிகிறது. ஆக, இதிலிருந்து இயேசுவின் பணி மற்றவர்கள் இழந்த மகிழ்ச்சியை அவர்களுக்குத் திரும்ப வழங்கவும், மற்றவர்களின் அடிமைத்தனத்தை அழிப்பதும் என்பது தெரிகிறது.

நம்முடைய வாழ்விலும் பிரபஞ்சத்தில் நம் இடத்தைக் கண்டறிவதற்கான முதல் படி இதுதான்: எனக்கென இறைவன் முன்குறித்து வைத்த நோக்கத்தை நான் அறிவது.' இது சிலருக்கு எளிதாகவும் உடனடியாகவும், இருக்கலாம். சிலருக்கு மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகலாம்.

ஆ. பாதை மாற்றம்
தன்னுடைய முதல் சீடர்களை அழைக்கின்ற இயேசு அவர்களின் பாதையை மாற்றுகின்றார். கடலில் ஈரமாகி நின்றவர்களின் கால்கள் புழுதியில் நடக்குமாறு அவர்களின் பாதையைத் திருப்பிவிடுகின்றார். என்னால் மற்றவர்களின் வாழ்க்கை திரும்ப வேண்டும். இது அடுத்த அறிகுறி. இன்று என்னால் எத்தனை பேருடைய வாழ்க்கைப் பாதை மாற்றம் பெற்றிருக்கிறது?

இ. நோய் குணமாதல்
நோய் என்பது குறைவு. அக்குறைவை நிறைவாக்குகிறார் இயேசு. இயேசுவைச் சந்தித்த அனைவரும் குறைகள் நீங்கி நிறைவாகச் செல்கின்றனர்.

என்னுடைய இடத்தை 'நான் கண்டுபிடித்தவுடன் என்னுள் இருக்கும் எல்லாக் குறைகளும், தீய எண்ணங்களும் மறைய ஆரம்பிக்கும். நான் உள்ளத்தில் நலம் பெறுவேன். என்னுடைய வறுமை, அறியாமை, குறுகிய எண்ணம், கோபம், குற்றவுணர்வு என எல்லாம் மறைய ஆரம்பிக்கும். ஏனெனில், நான் என்னுடைய உள்ளத்தை நேர்முக எண்ணங்களால் நிரப்பத் தொடங்குவேன்.

ஆக, இறைவனின் நோக்கம் நிறைவேறும்போது, என் வாழ்வுப் பாதை மாற்றம் அடைந்து நான் மற்றவரின் பாதையைத் திருப்பும்போது, நான் என் குறைகளையும் மற்றவர்களின் குறைகளையும் களைய முற்படும்போது நான் பிரபஞ்சத்தின் என்னுடைய இடத்தைக் கண்டறிந்தவன் ஆவேன். வெறும் படத்திற்கும் யூரோ நோட்டுக்களுக்குமான வித்தியாசத்தை உணர ஆரம்பிப்பேன். இதுதான் நான், இதற்காக என்னுடைய பணியைக் கூர்மைப்படுத்த ஆரம்பிப்பேன்.

நம் எல்லாருக்கும் இரண்டு வாழ்க்கை இருக்கிறது. இருப்பது ஒரு வாழ்க்கைதான் என்று எண்ணும் அந்த நாளில் என்னுடைய இரண்டாம் வாழ்க்கை தொடங்குகிறது. அந்த இரண்டாம் வாழ்க்கைதான் என்னுடைய கப்பர்நாகும். அகுஸ்தினாரும் தன்னுடைய 36 வது வயதில் தன்னுடைய கப்பர்நாகுமாம் கடவுளைக் கண்டுகொள்கிறார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 1:10-13,17) பவுல், கொரிந்து நகரத் திரு அவையில் விளங்கிய பிளவுகளைக் கடிந்துகொள்கின்றார். 'நான் பவுலைச் சார்ந்தவன். நான் கேபாவைச் சார்ந்தவன், நான் கேபாவை சார்ந்தவன், நான் அப்பொல்லோவைச் சார்ந்தவன், நான் கிறிஸ்துவைச் சார்ந்தவன் என்று சொல்லி பிளவுபட்டுக் கிடக்கின்றனர் கொரிந்து மக்கள். வெளிப்புற அடையாளத்தைப் பற்றிக்கொண்டிருப்பது நாம் நம்முடைய கப்பர்நாகுமிற்கு இன்னும் வரவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது. கப்பர்நாகுமிற்கு வந்த நபர் பிரிவினை பாராட்ட மாட்டார். அடுத்தவரோடு தன்னை எது இணைக்கிறது என்று தவிர, மற்றவரிடமிருந்து எது தன்னைப் பிரிக்கிறது என்பதை அவர் பார்க்க மாட்டார்.

இறுதியாக,
இன்று நான்‌ எங்கே இருக்கிறேன்‌? என்னுடைய கப்பர்நாகுமை நான் கண்டுபிடித்துவிட்டேனா? என்னுடைய கப்பர்நாகுமில்‌ மூன்று விடயங்கள்‌ இருக்க வேண்டும்‌: ஒன்று, என்னுடைய வாழ்வின்‌ நோக்கம்‌. இரண்டு, என்னுடைய நுகத்தடித்‌ தோழர்கள்‌, நண்பர்கள்‌, அல்லது வாழ்க்கைத்துணை. மூன்று, என்னுடைய வாழ்வால்‌ என்‌ குடும்பமும்‌' மற்றவர்களும்‌ அடையும்‌ பலன்‌. இதையே உருவமாகச்‌ சொல்ல வேண்டுமென்றால்‌, என்‌ வாழ்வின்‌ நோக்கம்‌ என்பது வேர்‌, நுகத்தடித்‌ தோழர்கள்‌ என்பவர்கள்‌ தண்டு, நான்‌ கொடுக்கும்‌ பலன்‌ நான்‌ விரிக்கும்‌ கிளைகள்‌, அவை கொடுக்கும்‌ கனிகள்‌. இந்த மூன்றும்‌ ஒன்றோடொன்று இணைந்தீருப்பவை.

“நான்‌ ஆண்டவரிடம்‌ ஒரு விண்ணப்பம்‌ செய்தேன்‌: அதையே நான்‌ நாடித்‌ தேடுவேன்‌; ஆண்டவரின்‌ இல்லத்தில்‌ என்‌ வாழ்நாள்‌ எல்லாம்‌ நான்‌ குடியிருக்க வேண்டும்‌. ஆண்டவரின்‌ அழகை நான்‌ காண வேண்டும்‌' என்று தன்னுடைய கப்பர்நாகுமை .ஆண்டவரில்‌ தேடுகின்றார்‌ திரூப்பாடல்‌ ஆசிரியர்‌ (காண்‌. 27:4)

இயேசு பணியைத்‌ தொடங்கிய உடைந்த ஊராக நான்‌ இருந்தாலும்‌. என்னையும்‌ கப்பர்நாகுமாக நினைத்து அவர்‌ என்னிடம்‌ வருகிறார்‌. எதற்காக? “என்‌ கப்பர்நாகும்‌ எங்கே” என்று காட்டுவதற்காக!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கடவுளே நம் வாழ்வின் ஒளி!

இன்று என்னுடைய கைபேசியில் வந்த இந்த குறுந்தகவல் என் மனதைத் தொட்டது. "ஒரு ரூபாய் எழுதுகோல் பலருக்கு அறிவொளி ஊட்டுகிறது. ஒரு லட்சம் கைபேசி பலருடைய கண்பார்வையை கெடுக்கிறது " என்பதே அப்பதிவு. கைப்பேசியால் பலர் கண்ணொளியை மட்டுமல்ல அறிவொளியையும் இழக்கின்றனர் என்ற சிந்தனையைத் தருவதாக இச்செய்தி அமைந்துள்ளது. கண்ணொளியும் அறிவொளியும் ஒரு மனிதனுக்கு மிக அவசியம். இந்த செய்திக்கும் நற்செய்தி பகுதிக்கும் ஒரு தொடர்பு இருப்பதாக நான் உணர்கிறேன். கண் பார்வை என்பது நம் வாழ்வுக்கு முக்கியம். விவிலியத்தில் கண்தான் உடலுக்கு விளக்கு எனக் கூறப்பட்டுள்ளது. உடலுக்கு ஒளி தேவை. உலகிற்கு ஒளி தேவை. அவ்வாறே நம் ஆன்ம வாழ்வுக்கு ஒளி என்பது மிக மிக அவசியம். அந்த ஒளி கடவுளைத் தவிர வேறு யாரும் இருக்கமுடியாது.

இன்றைய முதல் வாசகத்தில் காரிருளில் வாழ்ந்த மக்கள் பேரொளியைக் கண்டனர் என மொழியப்பட்டுள்ளது. இதே வார்த்தைகளை மத்தேயு நற்செய்தியாளரும் நற்செய்தியில் உறுதிப்படுத்துகிறார். காரிருள் என்ற வார்த்தை மனிதனின் பாவ வாழ்வைக் குறிக்கிறது. போரொளி என்ற வார்த்தை கடவுளின் இரக்கத்தைக் குறிக்கிறது. ஆம் காரிருளில் வாழ்ந்த மக்கள் கடவுளின் இரக்கம் என்ற பேரொளியைக் கண்டு மீட்படைகின்றனர் என்ற ஆழமான சிந்தனையை இவ்வாசகங்கள் நமக்குத் தருகின்றன.

என்னதான் நம்மைச் சூழ்ந்து ஒளி இருந்தாலும் நம் கண்கள் மூடி இருந்தால் நாம் இருளில் தான் இருப்போம். அதேபோல கடவுள் நமக்கு ஒளியாய் இருந்தாலும் நாம் மனம் திறந்தால்தான் அவருடைய ஒளி நம் உள்ளங்களை நிரப்பும். அதற்கான ஒரு அரைகூவலாகவும் இந்நற்செய்தி அமைகிறது. ‘‘மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” என்று இயேசு பறைசாற்றினார் என நாம் வாசிக்கிறோம். இவ்வார்த்தைகள் கடவுள் என்னும் ஆன்ம ஒளி நம் உள்ளங்களை நிரப்ப மனம்மாற்றம் என்னும் திறவுகோல் தேவைப் படுவதை உணர்த்துகிறதல்லவா.

அன்புக்குரியவர்களே! இன்றைய பதிலுரைப்பாடலிலே ஆண்டவரே என் ஒளி ,அவரே என் மீட்பு என நாம் தியானிக்கிறோம். அவரை நம் ஒளியாக மீட்பாக நாம் அனுபவிக்க வேண்டுமெனில் நம் மனதை அவரிடம் திருப்பி அவருடைய ஒளி நம்முள்ளங்களில் பாய்ந்தோட அனுமதிக்க வேண்டும். அப்போது பாவம், பலவீனம், அடிமைத்தனம், உலக இயல்பு எனும் காரிருளில் வாழ்கின்ற நம் இதயங்களும் நிச்சயம் பேரொளியைக் காணும் என்பதில் ஐயமில்லை. சிந்திப்போம். மனம்மாறுவோம்.

இறைவேண்டல்
பேரொளியாம் இறைவா எம் உள்ளத்தின் காரிருளை உம் ஒளியால் அகற்றுவீராக. ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ser