மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

தூய்மைமிகு மூவொரு கடவுள் பெருவிழா
இரண்டாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
இணைச்சட்டம் 4: 32-34, 39-40 | உரோமையர் 8: 14-17 | மத்தேயு 28: 16-20

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்
ஒரு நாட்டைப்‌ பேரரசன்‌ ஒருவன்‌ ஆண்டு வந்தான்‌. அவனுக்கு ஏழைகள்‌ என்றால்‌ உயிர்‌. அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும்‌ செய்து வந்தான்‌. அவனது பிறந்த நாள்‌ வந்தது. அவன்‌ ஒரு வினோதமான பரிசை அளிப்பதாக அறிவித்தான்‌. என்‌ பிறந்த நாள்‌ அன்று யார்‌ எனக்குப்‌ பரிசு கொடுத்தாலும்‌ அதை போல பத்து மடங்கு அவகளுக்குப்‌ பரிசு கிடைக்கும்‌. ஆனால்‌ அரை மணி நேரம்தான்‌ அரசனால்‌ பரிசுகள்‌ ஏற்றுக்கொள்ளப்படும்‌ என்று அறிவித்தான்‌.

பிறந்த நாளில்‌ அரண்மனைக்கு முன்னாள்‌ ஆயிரக்கணக்கான மக்கள்‌ பரிசுகளோடு காத்திருந்தார்கள்‌. பெரிய பெரிய பணக்காரர்கள்‌ அத்தனை பேரும்‌ அரண்மனைக்குள்‌ நுழைந்தனர்‌. ஏழைகள்‌ அரண்மனைக்குள்‌ நுழைய முடியவில்லை. அரை மணி நேரத்திற்குப்‌ பிறகு கதவு சாத்தப்பட்டது. அரசனின்‌ அரியணையை எளிதில்‌ அடைய முடியாது. ஏனெனில்‌ பல தடுப்புச்‌ சுவர்கள்‌ உண்டு. பணக்காரர்கள்‌ இறுதியாக சிம்மாசனத்தை அடைந்தனர்‌. ஆனால்‌ அரசன்‌ இல்லை. அங்கே சேவகன்‌ மட்டும்தான்‌ இருந்தான்‌. அரசனோ வெளியில்‌ நின்று ஏழைகளிடம்‌ பரிசு பெற்றுக்கொண்டிருந்தான்‌. இதை அறிந்த பணக்காரர்‌ கதவை நோக்கி ஓடினர்‌. ஆனால்‌ ஏழைகள்‌ பரிசு கொடுத்தப்‌ பின்தான்‌ கதவு திறக்கப்பட்டது. பணக்காரரோ எங்களை ஏமாற்றிவிட்டீர்‌ என அரசனிடம்‌ சொன்னார்கள்‌. அரசனோ! நீங்கள்‌ என்னைப்‌ புரிந்து கொள்ளவில்லை. நான்‌ எப்போதும்‌ ஏழைகள்‌ பக்கம்தான்‌ நிற்பேன்‌ என்பது உங்களுக்குத்‌ தெரியாதா! இந்தக்‌ கதையில்‌ வந்த அரசன்‌ போன்றவர்தான்‌ நம்‌ மூவொரு தெய்வம்‌. பால்‌ குடிக்கும்‌ தன்‌ மகனைத்‌ தாய்‌ மறப்பாளோ. கருத்தாங்கியவள்‌ தன்‌ பிள்ளை மீது இரக்கம்‌ காட்டாதிருப்பாளோ? இவர்கள்‌ மறந்தாலும்‌ நான்‌ உன்னை மறக்கமாட்டேன்‌ (எசா. 49:15) என்கிறார்‌ இந்த மூவொரு தேவன்‌. புதிய ஏற்பாட்டிலே இறைவனின்‌ அன்பின்‌ மேலான வாக்குறுதியைக்‌ காண்கிறோம்‌. தன்‌ ஏக மகன்‌ மீது நம்பிக்கைக்‌ கொள்ளும்‌ எவரும்‌ அழியாமல்‌ நிலைவாழ்வு பெரும்‌ பொருட்டு அந்த மகனையே அளிக்கும்‌ அளவுக்குக்‌ கடவுள்‌ உலகின்‌ மீது அன்புகூர்ந்தார்‌ (யோவா. 3:16).

 1. ஆம்‌ அந்த மூவொரு தேவன்‌ அன்பே உருவானவர்‌. எனவேதான்‌ புனித யோவான்‌ கூறுகிறார்‌: கடவுள்‌ அன்பாய்‌ இருக்கிறார்‌ (1 யோவா. 4:8)
 2. எகிப்தில்‌ இருந்து விடுவித்தார்‌. அன்று பாலைவனத்தைக்‌ கடக்க சோலை வனத்திற்கு அழைத்துச்‌ சென்றார்‌. ஆம்‌, இதில்‌ அன்பின்‌ வடிவம்‌ வெளிப்படுத்தப்படுகிறது.
 3. இயேசு யோர்தான்‌ தண்ணீரை விட்டு வெளியேறும்போது வானம்‌ திறக்கப்படுகிறது (மத்‌. 3:16, 17).
 4. குரல்‌ வடிவில்‌ தந்தை தன்னை வெளிப்படுத்துகிறார்‌.
 5. மனித வடிவில்‌ மகன்‌ காட்சித்‌ தருகிறார்‌.புறா வடிவில்‌ பரிசுத்த ஆவியைக்‌ காண்கிறோம்‌.

முடிவரை

இப்படிப்பட்ட மூவொரு தெய்வத்தின்‌ அன்பைப்‌ பெற நாம்‌ என்ன தகுதியைப்‌ பெற்றிருக்க வேண்டும்‌?

 1. முதலாவதாக நமது வாழ்வை நாம்‌ சீர்திருத்த வேண்டும்‌. பாவ வாழ்வைவிட்டுப்‌ புதிய வாழ்வுக்குக்‌ கடந்து செல்ல வேண்டும்‌.
 2. இறைவார்த்தைக்கு நாம்‌ செவிமடுக்க வேண்டும்‌.
 3. பகைமை நீக்கி ஒருவர்‌ ஒருவரை மன்னித்து சமாதானத்தைப்‌ பெற்றுக்கொள்ள வேண்டும்‌. ஏனெனில்‌ இயேசுவின்‌ அன்பு முடிந்த கதையல்ல. சிறுகதையும்‌ அல்ல. அது ஒரு தொடர்‌ கதை.
 4. மன ஒற்றுமையைப்‌ பெற வேண்டும்‌ - எப்படி ?

கதை

நீல நிறம்‌ கலந்த தண்ணீரைப்‌ பாருங்கள்‌. அதில்‌ தண்ணீரை ஊற்றிக்‌ கொண்டே இருந்தால்‌ அங்கே என்ன நடக்கும்‌. ஓர்‌ சங்கமம்‌ நிகழும்‌. ஊற்றப்படும்‌ தண்ணீரின்‌ அளவு அதிகரிக்க அதிகரிக்க பாத்திரத்தில்‌ உள்ள நீல நிறம்‌ மறைந்து, நிறமற்ற நிலையை அடையும்‌. இதேபோல்‌ அன்பே உருவான இறைவன்‌ தரும்‌ ஆவியின்‌ அருளை நம்மில்‌ ஊற்ற, நம்‌ இதயம்‌ மாற்றம்‌ பெறும்‌. தூய ஆவியின்‌ இதயம்‌ பெறுவோம்‌.

கல்லான இதயம்‌ எடுக்கப்பட்டு, கனிவுள்ள, உணர்வுள்ள இதயம்‌ பெறுவோம்‌ (எசே. 36:26).

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

மூவொரு இறைவன் யார்?

மோசே காலத்தில் மாபெரும் செயல்களைப் புரிந்தவரே தந்தை இறைவன் (முதல் வாசகம்).
எப்படிப்பட்ட கட்டளைகளைப் பின்பற்றி வாழவேண்டும் என்பதைக் கற்பித்தவர் மகன் இயேசு (நற்செய்தி).
நம்மைக் கடவுளின் பிள்ளைகளாக்கி, இன்று வழிநடத்தி வருபவர் தூய ஆவியார் (இரண்டாம் வாசகம்).
மூவொரு இறைவனால் நமக்குக் கிடைக்கும் வரங்கள் யாவை?

1. நமக்குள் அதிசயங்கள் நிகழும்.
2. நாம் எப்படி வாழவேண்டும் என்ற உண்மை நமக்கு விளங்கும்.
3. நாம் கடவுளின் மக்களாகும் பேற்றினைப் பெறுவோம்.

மூவொரு இறைவனைப் பற்றிய அறிவை எப்படிப் பெறுவது?
பட்டாம்பூச்சியும், தட்டாம்பூச்சியும் ஒருநாள் சந்தித்துக்கொண்டன. தட்டாம்பூச்சி பட்டாம்பூச்சியைப் பார்த்து : பூப்பூவா பறந்துபோகும் பட்டுப்பூச்சி அக்கா ... நீ பளபளன்னு போட்டிருப்பது யாருகொடுத்த சொக்கா? என்றது!

மேலும் ஒரு கேள்வி ! என் சிறகுகள் வெள்ளையாக இருக்கின்றன! ஆனால் உன்னுடைய சிறகுகள் மட்டும் எப்படி இப்படி கலர் கலரா இருக்கின்றன? என்றது தட்டாம்பூச்சி!

அதற்கு பட்டாம்பூச்சி: நீ உன் தாயின் வயிற்றிலிருந்து நேரடியாக வந்துவிடுகின்றாய்! நான் அப்படி அல்ல. பிறக்கும்போது புழுவாகப் பிறந்து, பிறகு கூட்டுப்புழுவாகி, கூட்டுக்குள் நாற்பது நாள்கள் கடும் தவம் செய்தேன். தவத்தின் முழுமையை அடைந்தபோது கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வந்தேன். தவமின்றி அழகில்லை; வரமில்லை என்றது.

நமது அறிவு அழகுள்ளதாகி அழகே உருவான மூவொரு இறைவனின் பாதங்களை அடைய விரும்பினால் நாம் தவம் செய்யவேண்டும். அதாவது அமைதியான இடத்திலே அமர்ந்து தியானம் செய்யவேண்டும்.

தியானத்திற்குக் கீழ்க்கண்ட விவிலியப் பகுதிகளைப் பயன்படுத்தலாம் :

மத் 3:11, 12:32, 28:19, மாற் 13:11, 14:36, லூக் 4:1, 6:36, 10:21, 11:13, யோவா 1:33, 3:35, 6:44, 8:41, 10:30, 14:26, 20:22.

மேலும் அறிவோம் :

உற்றநோய் நோன்றல் உயிர்க்(கு)உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்(கு) உரு (குறள் : 261).

பொருள் :
தமக்கு நேரும் துன்ப துயரங்களைத் தாங்கிக் கொள்வதும், பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் இருப்பதுமே தவத்திற்குரிய வடிவமாகும்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

வேதியர் ஒருவர் திருமண ஒலை எழுதுவதற்கு வந்த மாப்பிள்ளைக்குத் தேவையான மந்திரங்களைக் கற்றுக் கொடுத்து, அவரைப் பங்குத் தந்தையிடம் அழைத்துச் சென்றார். வேதியர் பங்குத் தந்தையின் பின்புறம் நிற்க, மாப்பிள்ளை பங்குத் தந்தையின் முன்புறம் நின்றார். பங்குத் தந்தை மாப்பிள்ளையிடம், "ஒரே கடவுள் எத்தனை ஆட்களாக இருக்கிறார்? என்று கேட்டார். மாப்பிள்ளை பதில் கூறமுடியாமல் மேலும் கீழும் விழித்தார். பங்குத் தந்தையின் பின்புறம் நின்று கொண்டிருந்த வேதியர் மூன்று விரலைக் காட்டினார். அதைப் பார்த்த மாப்பிள்ளை பங்குத் தந்தையிடம், "சாமி! வேதியர் ஏற்கெனவே என்னிடமிருந்து மூன்று ரூபாய் வாங்கிக் கொண்டார். இப்போது மறுபடியும் மூன்று ரூபாய் கேட்கிறார். இது சரியா?" என்றார்!

கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதைப் பகுத்தறிவுள்ள எவரும் எளிதாக அறிந்து கொள்ள முடியும். ஆனால், ஒரே கடவுள் மூன்று ஆள்களாக, அதாவது, தந்தை, மகன், தூய ஆவியராக இருப்பதைப் பகுத்தறிவால் மட்டும் அறிய இயலாது. அதற்கு இறை வெளிப்பாடு தேவை, "கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை), தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள் தன்மை கொண்டவருமால் ஒரே மகளே அவரை வெளிப்படுத்தினார்" (யோவா 1:18) "தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியாம் , மகனும், அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமின்றி, வேறு எவரும் தந்தையை அறியார்" (மத் 11:27).

கிறிஸ்துவே மூவொரு கடவுளை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். தாம் தந்தையிடமிருந்து வந்ததாகவும், தந்தையிடம் திரும்பிப் போவதாகவும், விண்ணகம் சென்றபின் தூய ஆவியாரை அனுப்ப இருப்பதாகவும் சீடர்களுக்கு அவர் தெள்ளத் தெளிவாகக் கூறினார் (யோவா 14:13-16). இன்றைய நற்செய்தியில், உயிர்த்த ஆண்டவர் விண்ணகம் செல்லுமுன் தம் சீடர்களிடம், "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் என் சீடராக்குங்கள். தந்தை மகள் தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்" (மத் 28:19) என்று கூறுகிறார்.

எனவே, கிறிஸ்துவே அதை நமக்கு வெளிப்படுத்தியால், கடவுளைப் பொருத்தமட்டில் 'ஆள் வகையில் தனித் தன்மையையும், இறையியல்பில் ஒருமையையும், மகத்துவத்தில் சமத்துவத்தையும் ஏற்றுக் கொண்டு, இருந்தவரும், இருக்கிறவரும் வரவிருக்கிறவருமான (திவெ 1:18), தந்தை , மகன், தூய ஆவியாரை ஆராதித்து மகிமைப்படுத்துவோம்.

மூவொரு கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவை திருத்தூதர் பவுல் தமது வாழ்த்துரையில் பின்வருமாறு வெளிப்படுத்தியுள்ளார்: "ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக" (2கொரி 13:13), இந்த வாழ்த்துரையைத் தான் திருச்சபையும் திருப்பலியின் ஆரம்பத்தில் நமக்கு வழங்குகிறது.

தந்தையின் தனிப்பண்பு அன்பு: மகனின் தனிப்பண்பு அருள்; தூய ஆவியாரின் தனிப்பண்பு நட்புறவு, தந்தை நம்மை அன்பு செய்து, நம்மைத் தொடர்ந்து பாதுகாக்கின்றார். கிறிஸ்து தமது அருளால் நம்மை மீட்டுக் கொண்டிருக்கிறார். தூய ஆவியார் தமது நட்புறவால் நம் உள்ளத்தில் குடியிருந்து நமக்குப் புத்துயிர் அளித்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு மூவொரு கடவுளோடு நமது வாழ்வு என்றுமே பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது.

மூவொரு இறைவன் நாம் வணங்குவதற்குரிய மறைபொருள் மட்டுமல்ல, நமது அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டிய மறைபொருளுமாவார், தந்தை தமது மகனை முழுமையாக அன்பு செய்து, அவருக்குத் தம்மை முழுமையாக கையளிக்கிறார், அவ்வாறே மகனும் தந்தையை அன்பு செய்து, அவருக்குத் தம்மை முழுமையாகக் கையளிக்கிறார். இவர்களுடைய பரஸ்பர அன்பிலிருந்து பிறப்பவர்தான் தூய ஆவியார். மூவொரு இறைவனின் அன்பு வாழ்வைக் குடும்ப வாழ்வும் பிரதிபலிக்கிறது. கணவனும் மனைவியும் ஒருவர் மற்றொருவரை அன்பு செய்து தங்களை முழுமையாகக் கையளிக்கின்றனர். இவ்விருவரின் பரஸ்பர அன்பின் கனிதான் குழந்தை. எனவே ஒவ்வொரு குடும்பமும் மூவொரு இறைவனின் குடும்பத்தை அடித்தளமாகக் கொண்டுள்ளது என்றால் அது மிகையாகாது.

மேலும், மூவொரு கடவுள், தந்தை மகன் ஆவியார், ஒருவர் மற்றவருடைய தனித்தன்மையை மதிக்கின்றனர். ஒருவர் மற்றவரை மகிமைப்படுத்துவதிலேயே குறியாக இருக்கின்றனர். தத்தை மகனையும், மகன் தந்தையையும். தூய ஆவியார் மகனையும் மகிமைப்படுத்துகின்றனர்.

இம்மூவொரு கடவுளைப் பின்பற்றி நமது குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் ஒருவர் மற்றவருடைய தனித்தன்மையை ஏற்று, மதித்து, நமது மகிமையைத் தேடாமல் மற்றவர்களின் மகிமையைத் தேடி, பிறர்க்கு நம்மை முழுமையாகக் கையளித்து ஒருவருக்கொருவர் 'அன்பின் அடிமைகளாக' (கலா 5:13) வாழக்கற்றுக் கொள்ளலாம்.

ஒரு வறண்ட ஆற்றில், ஒரு சிறிய குழியில் மட்டும் சிறிதளவு தண்ணீர் இருந்தது. அதில் ஒரு பெரிய மீன் ஆனந்தமாக நீந்திக் கொண்டிருந்தது. அதைப்பார்த்த ஒரு குரங்கு, மீன் தண்ணீரில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்று திளைத்து, அதற்கு முதல் உதவி செய்யும் எண்ணத்துடன், அதைத் தண்ணிரிலிருந்து வெளியே எடுத்துத் தரையில் போட்டது. சிறிது நேரத்தில் மீன் துடிதுடித்து செத்துவிட்டது. அதைக்கண்ட குரங்கு, “மீன் சாக வேண்டிய நேரம் வந்து விட்டதால், அது செத்துவிட்டது. ஆனால், அது மறையுரை மொட்டுக்கள்.

தண்ணீரில் மூச்சுத் திணறிச் சாகாமல், தரையில் நிம்மதியாகச் சாக, நான் உதவி செய்துள்ளேன்" என்று தன்னைத்தானே பாராட்டிக் கொண்டது. குரங்கு மீனை அன்பு செய்தால், அம்மீனைத் தண்ணீரில் வைத்துத் தான் அன்பு செய்திருக்க வேண்டும். மாறாக, தானிருப்பது போலவே மீனும் தரையில் இருக்க வேண்டும் என்று விரும்பி, அதை அதன் இயல்பான சூழலிலிருந்து வெளியே கொண்டு வந்து சாகடித்திருக்கக்கூடாது.

நாமும் மற்றவர்களை அன்பு செய்யும் போது. அவர்களுடைய தனித்தன்மையை, விருப்பு வெறுப்புக்களை மதித்து அன்பு செய்ய வேண்டும், அதற்கு மாறாக, அவர்களை நம்மைப்போலாக்க முயற்சிப்பது அவர்களது ஆளுமையைக் கொலை செய்வதற்கு ஒப்பாகும். பிறருடைய தனித்தன்மையை மதித்தும், பிறருடன் இணைத்தும் செயல்படும்போது | மூவொரு கடவுளை நம் வாழ்வில் பிரதிபலிக்கிறோம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

ஓதற்கு அரியவன் இறைவன்

திரினிடாட் (Trinidad) என்ற தீவு ஒன்று உண்டு. திரித்துவத்தின் (மூவொரு கடவுளின்) பெயரால் அழைக்கப்படுகிறது அத்தீவு. அத்தீவிற்கு அப்பெயரைச் சூட்டியவர் கிறிஸ்டோபர் கொலம்பஸ். எந்த ஒரு வேலையைத் தொடங்கு முன்னும், எந்த ஒரு கடிதத்தை எழுதுமுன்னும் தூய திரித்துவத்தின் பெயரால்' என்று தான் தொடங்குவார். புதிய உலகைக் கண்டுபிடிக்கும் தனது திட்டம் பற்றி அறிவியல் அறிஞர்கள், இறையியல் வல்லுனர்கள் கூடியுள்ள குழுவில் விளக்கும் போது "மூவொரு கடவுளின் பெயரால் உங்கள் முன்னே நிற்கிறேன்" என்றார். 1598 ஆம் ஆண்டில் தனது மூன்றாம் கடற்பயணத்தைத் தொடங்கினார். "தான் கண்டுபிடிக்கும் முதல் இடத்தைத் திரித்துவத்திற்கு அர்ப்பணிப்பேன்" என்று நேர்ந்தார். அவ்வாறு முதல்முதலில் அவர் கண்டுபிடித்த இடத்திற்கு அவர் இட்ட பெயர்தான் திரினிடாட்.

மூவொரு கடவுளின் வெளிப்பாடு கிறிஸ்தவ வாழ்வின், நம்பிக்கையின் மையம். நியூட்டன் போன்ற மேதைகள் மூவொரு கடவுளின் மீது வைத்திருந்த பற்று, பக்தி, நம்பிக்கை ஆழமானது. விவிலியத்திலும் வாழ்விலும் தம்மை வெளிப்படுத்திய மூவொரு இறைவனை அனுபவித்து உணர்ந்தவர்கள். அன்பு மயமான இறைவனின் அன்பிற்குள் மூழ்கித் திளைத்துத் தம் வாழ்வின் ஆழத்தைக் கண்டு பிடித்தவர்கள்.

தூய தாமஸ் அக்குவினாஸ் கடவுளைப் பற்றிய தன்னுடைய சிந்தனைகள், புரிதல்களை “Summa Theologica” என்ற தலைப்பில் மூன்று பகுதிகளாக எழுதியிருக்கிறார். முதலிரண்டு பகுதிகளை முடித்து விட்டு மூன்றாவது பகுதியை எழுதிக் கொண்டிருந்த நேரம், 1273 டிசம்பர் 6ஆம் நாள் நேப்பிள்ஸ் நகரில் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருக்கும் போது இறையனுபவத்துக்கு ஆட்பட்டு விடுகிறார். இந்த இறையனுபவத்துக்கு ஆட்பட்ட பின்பு, தனது நூலின் மூன்றாவது பகுதியைத் தொடர்ந்து எழுத ஆர்வம் காட்டவில்லை. மூன்றாவது பகுதியை விரைவில் முடித்து விடுவார் என்று எதிர்பார்த்திருந்த அவரது சபையினருக்கு இது ஏமாற்றமாக இருந்தது.

எனவே அவரைக் கட்டாயப்படுத்தி அவரது அறையில் அமர வைத்து எழுதச் சொல்லியும் அவர் எழுத ஆர்வம் காட்டவில்லை. கடைசியாக, சபைத் தலைவர் "கீழ்ப்படிதல் என்ற வார்த்தைப் பாட்டின் பெயரால் நீர் எழுதத் தொங்கிய அந்த நூலை முடிக்கும்படி உமக்கு நான் ஆணையிடுகிறேன் என்று சொன்னபோது தாமஸ் அக்குவினாஸ் இவ்வாறு பதிலளித்தாராம்: "தலைவர் தந்தை அவர்களே, என்னை ஆட்கொண்ட அந்தக் குறுகிய கால இறைஅனுபவத்தோடு ஒப்பிடும் போது, நான் கடவுளைப் பற்றி எழுதியவை அனைத்தும் ஒன்றுமில்லாமைக்குச் சமம் - எல்லாம் தூசும் வைக்கோலும் போல.

எப்படி மூன்று ஆட்கள் ஒரே கடவுளாக இருக்க முடியும் என்று புரிந்து கொள்ள முயற்சி செய்வதனாலோ, விவாதிப்பதனாலோ நாம் கடவுளைப் புரிந்து கொள்ளப் போவதில்லை, மாறாக, செபம் மற்றும் தியானம் வழியாக இறைவனால் ஆட்கொள்ளப்படும் போது, இறைவனை அனுபவப் பூர்வமாக உணரும் போது, நம்முடைய அறிவுப் பூர்வமான குழப்பங்கள் நம்மை விட்டு அகல ஆரம்பிக்கின்றன.

மூவொரு கடவுள் ஆய்வுக்குரியவரல்லர். அனுபவத்துக்குரியவர். தூய தாமஸ் அக்குவினாஸ் சொல்வார்: “கடவுளைப் பற்றிப் பேசாமல் நம்மால் இருக்க முடியாது. ஆனால் அவ்வாறு பேசும் போது, நம்மால் உளறத்தான் முடியுமேயொழிய தெளிவாகப் பேச முடியாது'.

வாய் வார்த்தைகளால் கடவுளை நிரூபிப்பது கடினம். ஏன் அப்படி? அது, நிழல் என்றால் என்ன என்று ஒரு பார்வையற்றவருக்கு விளக்க முயற்சி செய்வது போன்ற செயல். பார்வையற்றவர் வெளிச்சத் தையே பார்த்திராதவர் அல்லவா! எனவே அவருக்கு ஒளி என்றாலே என்னவென்று தெரியாது. அப்படியிருக்கும்போது ஒளி உருவாக்கும் நிழலைப் பற்றி அவருக்கு எப்படி விளக்குவது? கடவுளின் படைப்பையே வார்த்தைகளால் விளக்கி விவரிக்க முடியாதெனில், அதைப் படைத்த கடவுளை எப்படி விவாதத்தால் வார்த்தைகளால் புரிய வைக்க முடியும்? அதனால்தான் "உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் இறைவன்" என்கிறது பெரிய புராணம்.

உச்சரிப்புக்கு அடங்காத உயிர் மூச்சு ஒன்று ஆன்மாவின் ஆழத்தில் ஊன்றப்பட்டுள்ளது. அதற்குப் பெயர்தான் அனுபவம் ஆராய்ச்சியைக் கடந்தது.

அன்பு என்றால் என்ன? பதில் சொல்லுங்கள்! அறிவுக்கோ விளக்கத்துக்கோ உரிய பொருள் அல்ல அது. அனுபவத்திற்குரிய பொருள். அழகும் அவ்வாறே. கற்பும் அவ்வாறே.

கடவுளும் அத்தகையவரே! ஆராய்ந்து அல்ல, அனுபவித்து உணரப்பட வேண்டியவர். “நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது" (யோவான் 16:12). கடவுள் ஒருமறைபொருள் என்பதே அதன் பொருள். எனவே இயேசு தொடர்ந்து சொல்வார்: “உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி வழிநடத்துவார்” (16:13).

"அம்மையப்பன்” ''சத்(உண்மை ) சித் (அறிவு) ஆனந்தன் (இன்பம்)” இவையெல்லாம் கடவுள் பற்றிய மனிதக் கண்ணோட்டங்கள். இறைவன் தாமே தன்னைப் பற்றி வெளிப்படுத்தியது: "தந்தை, மகன், தூய ஆவி' என்ற திரித்துவத் தத்துவம்.

ஜூனாய்டு என்ற ஞானியிடம் சீடன் ஒருவன் வந்து கேட்டான் "உங்களிடம் கடவுள் ஞானம் என்கிற முத்து இருப்பதை உணர்கிறேன். மற்றவர்களும் அதைப்பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். அந்த முத்து எனக்குக் கொஞ்சம் தேவை. அதை எனக்கு விலைக்கோ அல்லது இலவசமாகவோ கொடுங்கள்'' ஞானி என்ன பதில் சொன்னார் தெரியுமா?

''சீடனே, உனக்கு நான் அதை விற்க முடியாது. ஏனென்றால் அதன் விலையை உன்னால் கொடுக்க முடியாது. இனாமாகக் கொடுக்கலாம் என்றால், அதை நீ மதிக்க மாட்டாய். அதனால் என்னைப் போலவே நீயும் கடவுள் என்ற அந்த ஆழ்கடலில் மூழ்கி எழுந்திரு. நீயும் ஒரு முத்து எடுத்து வரலாம் என்றார்.

14ஆம் நூற்றாண்டில் மெய்ஸ்டர் எக்ஹார்ட் என்ற துறவி சுவைத்துச் சொன்னார்:"கடவுள் சிரித்தார். திருமகன் பிறந்தார் தந்தையும் மகனும் சிரித்தார்கள். தூய ஆவி பிறந்தார்.

தந்தை மகன் தூய ஆவி மூவரும் சிரித்தார்கள். இந்த உலகம் பிறந்தது''.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

“அன்புருவான மூவொரு கடவுள்” தூய்மைமிகு மூவொரு கடவுள்

நிகழ்வு

ஒரு பங்குத்தளத்தில் புதிதாக ஒரு கோயிலைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். கோயிலில் கண்ணாடி சன்னல்களைப் பொருத்துவதைத் தவிர்த்து, மற்ற எல்லா வேலைகளும் ஏறக்குறைய நிறைவடைந்திருந்தன. கண்ணாடி ஜன்னலில் யாரை வரைவது, என்ன வண்ணத்தில் வரைவது என்ற விவாதம் கோயில் திருப்பணிக் குழுவினரிடம் ஏற்பட்டது. அவர்களில் ஒருவர், “கடவுள் கடலையும் அதிலுள்ள யாவையும், வானத்தையும் அதிலுள்ள யாவையும் படைத்தார் என்பதைக் குறித்துக்காட்டும் வகையில் அவரை நீல நிறப் பின்புலத்தில் வரையலாம்” என்றார். அவரைத் தொடர்ந்து இன்னொருவர், “இயேசுவே இவ்வுலகின் ஒளி என்பதைக் குறித்துக்காட்டும் வகையில் அவரை மஞ்சள் நிறப் பின்புலத்தில் வரையலாம்” என்றார். இறுதியாக ஒருவர், “தூய்மைக்கு இலக்கணமாக இருக்கும் தூய ஆவியாரைக் குறிக்கும் வகையில் அவரை வெள்ளை நிறப் பின்புலத்தில் வரையலாம்” என்றார்.

எல்லாரும் பேசி முடித்ததும், அவர்களோடு இருந்த ஓவியர் அவர்களிடம், “தந்தை, மகன், தூய ஆவியார் என்று தனித்தனியாக, தனிதனி நிறத்தில் வரைவதற்குப் பதிலாக, அவர்கள் மூவொரு கடவுளாக இருப்பதால் நீலம், மஞ்சள், வெள்ளை ஆகிய மூன்று நிறங்களையும் சேர்ப்பதால் வரும் பச்சை நிறைத்துக்கொண்டு அவர்களைப் பச்சை நிறத்தில் வரைந்தால் என்ன?” என்று கேட்க, அவர்கள் அனைவரும், “இந்த யோசனை நன்றாக இருக்கின்றதே!” என்று சம்மதித்தார்கள். இதன்பிறகு ஓவியர் மூன்று நிறங்களையும் சேர்ப்பதால் வரும் பச்சை நிறத்தைக் கொண்டு கண்ணாடி சன்னல்களில் மூவொரு கடவுளின் ஓவியத்தை வரைந்தார். அது பார்ப்பதற்கு மிக அற்புதமாக இருந்தது.

ஆம், தந்தை, மகன், தூய ஆவியர் என்று மூன்று ஆள்களாக இருந்தாலும் கடவுள் ஒரே கடவுளாகத்தான் இருக்கின்றார். அதைத்தான் இன்று நாம் மூவொரு கடவுள் விழாவாகக் கொண்டாடுகின்றோம். இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.

படைத்துக் காக்கும் கடவுள்

திருவிவிலியத்தில் அதிலும் குறிப்பாகப் பழைய ஏற்பாட்டில் மூவொரு கடவுளுக்கான சான்றுகள் நேரடியாக இல்லாவிட்டாலும், ஒருசில சான்றுகள் இருக்கின்றன. “மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம்” (தொநூ 1: 26) என்ற வார்த்தைகளும், “வாருங்கள், நாம் கீழே போய் அங்கே ஒருவர் மற்றவரின் பேச்சைப் புரிந்துகொள்ள முடியாதபடி, அவர்கள் மொழியில் குழப்பத்தை உண்டாக்குவோம்” (தொநூ 11: 7) என்ற வார்த்தைகளும், “ஆபிரகாம் கண்களை உயர்த்திப் பார்த்தார்; மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார்” (தொநூ 18: 2) என்ற வார்த்தைகளும் பழைய ஏற்பாட்டில் இடம்பெறும் மூவொரு கடவுளைக் குறித்த சான்றுகளாக இருக்கின்றன. புதிய ஏற்பாட்டில், இயேசு பிறப்பின் முன்னறிவிப்பும் (லூக் 1: 26- 28), இயேசுவின் திருமுழுக்கும் (லூக் 4: 22), யோவான் நற்செய்தி 15 ஆம் அதிகாரம் முதல் 18 ஆம் அதிகாரம் வரை வரும் பகுதிகளும், இன்றைய நற்செய்தி வாசகமும் மூவொரு கடவுளைக் குறித்த சான்றுகளாக இருக்கின்றன.

இணைச்சட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் மூவொரு கடவுளைப் பற்றிச் சொல்லவில்லை என்றாலும், கடவுள் இஸ்ரயேல் மக்களை எப்படிப் பாதுகாத்தார் என்பதை எடுத்துக்கூறுகின்றது. மோசே இஸ்ரயேல் மக்களிடம் கூறுவதாக வரும் முதல் வாசகம், யூதா நாட்டினர் பாபிலோனில் அடிமைகளாக... கடவுள் தங்களைக் கைநெகிழ்ந்துவிட்டார் என்று நம்பிக்கை இழந்து வாழ்ந்த காலத்தில் (கி.மு. 587- 539), அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், கடவுள் அவர்களைத் தமக்கென உரிமையாக்கிக் கொண்டதையும், அவர்களோடு அவர் பேசியதையும், அவர்களை காத்து வழிநடத்தியதையும் நினைவுபடுத்துவதற்காக எழுதப்படுகின்றன. மேலும் இஸ்ரேல் மக்கள் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் எல்லாம் நலமாகும் என்பதையும், கடவுள் கொடுக்கும் நாட்டில் நெடுநாள் வாழ்வார்கள் என்பதையும், ஆண்டவராகிய கடவுள் தன் மக்களை படைத்துப் பாதுகாக்கின்றார் என்பதையம் எடுத்துச் சொல்வதாக இருக்கின்றது.

பலியான இயேசு

தம் மக்களைத் தந்தைக் கடவுள் பாதுகாத்துப் பராமரிக்கின்றார் என்ற செய்தியை இன்றைய முதல்வாசகம் எடுத்துக்கூறும் அதே வேளையில், இன்றைய நற்செய்தி வாசகம் மூவொரு கடவுளில் இரண்டாம் ஆளாகவும், நமக்காகப் பலியானவருமான இயேசு கிறிஸ்து தம் சீடர்களிடம், “நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்” என்று அழைப்பு விடுப்பதை எடுத்துக்கூறுகின்றது.

இவ்வுலகிற்கு மீட்பளிக்க விரும்பிய கடவுள், தம் மகனை இவ்வுலகிற்கு அனுப்பினர். அவர் கல்வாரி மலையில் தம்முயிரைப் பலியாகத் தந்து, நம்மை மீட்டர். இப்படிப்பட்டவர் தம் சீடர்களிடம், “நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்” என்று அன்புக் கட்டளை கொடுக்கின்றார். எல்லா மக்களினத்தாரையும் இயேசுவின் சீடராக்குவது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அதற்கு ஒருவர் இயேசுவைப் பற்றிக் கற்பிப்பதோடு நின்றுவிடாமல், கற்பிப்பதன்படி வாழவேண்டும். தேவைப்பட்டால் இயேசுவுக்காகவும், அவரது நற்செய்திக்காகவும் பலியாகத் தரவேண்டும். அப்படிச் செய்வதன் வழியாகவே, நமக்காகப் பலியாக இயேசுவின் கட்டளையான எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள் என்ற கட்டளையை நிறைவேற்ற முடியும்.

இயக்கும் தூய ஆவியார்

ஸ்காட்லாந்தைச் சார்ந்த பிரபல மறைப்போதகர் நார்மன் மாக்லியோத் (Narman Macleod). இவர் அடிக்கடி சொல்லக்கூடிய வார்த்தைகள் இவை: “விண்ணகத்தில் நம்மை அன்புச் செய்யத் தந்தையும், நமக்காகப் பலியான இயேசுவும், நாம் நல்வழியில் நடக்க நம்மைத் தூண்டி எழுப்பும் தூய ஆவியாரும் இருக்கின்றார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இறுதியில் அனைவரும் ஒன்றாகக் கூடிவர ஓர் இல்லமும் இருக்கின்றது.”

நார்மன் மாக்லியோத் சொல்லக்கூடிய வார்த்தைகள்தான் எத்துணை ஆழமான! தந்தைக் கடவுள் நம்மை அன்பு செய்கின்றார் எனில், இயேசு கிறிஸ்து நமக்காகப் பலியானார் எனில், தூய ஆவியார் நம்மை நற்செயல்கள் செய்ய நம்மைத் தூண்டி எழுப்புவராக, வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், தூய ஆவியார் நம்மை இயக்குபவராக இருக்கின்றார். புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இரண்டாம் வாசகத்தில், “கடவுளின் ஆவியால் இயக்கப்படுகின்றவர்களே கடவுளின் மக்கள்” என்கிறார். அப்படியானால் நமக்குள் இருக்கும் தூய ஆவி (1 கொரி 3: 16) அல்லது கடவுளின் ஆவி நம்மை இயக்குகிறார் என்று உறுதியாகச் சொல்லலாம். திருஅவையின் தொடக்கக் காலம் முதல் இன்றுவரை அது வேகமாக வளர்ந்துகொண்டிருக்கின்றது என்றால், அதற்கு முக்கியமான காரணம், அதை இயக்கும் தூய ஆவியார்தான். இன்று நம்மை அதே தூய ஆவியார்தான் இயக்கிக் கொண்டிருக்கின்றார்.

எனவே, தந்தையின் பேரன்பிலும், இயேசுவின் வழிகாட்டுதலிலும் நாம் என்றும் இருக்கத் தூய ஆவியாரால் தொடர்ந்து இயக்கப்பட அவரிடம் நம்மையே கையளிப்போம்.

சிந்தனை
‘கடவுள் மூவொரு கடவுள் இல்லை எனில், அவர் அன்பானவராக இருக்க முடியாது. ஏனெனில், அன்பிற்கு அன்புசெய்பவர், அன்பு செய்யப்படுபவர், அவர்களுக்கு இடையே இருக்கும் உறவு ஆகிய மூன்றும் தேவைப்படுகின்றன’ என்பார் பீட்டர் கிரிப்ட் என்ற அறிஞர். எனவே, அன்பு வடிவாக இருக்கும் மூவொரு கடவுளைப் போன்று நாமும் ஒருவர் மற்றவரை அன்புசெய்து, ஒன்றித்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

உறவும் பணியும்

கடந்த வாரம் டுவிட்டரில் ஒரு புகைப்படம் வலம் வந்தது. ஒரு மருத்துவமனையின் கொரோனா வார்டில் பணி புரியும் ஆண் மருத்துவர் ஒருவர் அதிகாலையில் தன் இல்லம் திரும்புகின்றார். இல்லம் திரும்பி ஓய்வெடுக்க விரும்பிய சில நொடிகளில் மீண்டும் பணிக்கு வருமாறு அழைப்பு பெற்று புறப்படுகின்றார். அந்த நேரத்தில் அவரிடம் ஓடி வருகிறாள் அவளுடைய மகள். அவளுக்கு ஏறக்குறைய 4 அல்லது 5 வயது இருக்கும். தன்னை அள்ளி எடுக்குமாறு அந்தக் குழந்தை தன் கைகளை மேலே தூக்குகிறார். அவருக்கும் அவரை அள்ளி எடுக்க ஆசை. ஆனால், மருத்துவ உடையில் இருக்கிறார். உடனே, அருகிலிருந்த பெரிய பாலித்தின் பேக் ஒன்றைத் தன் குழந்தையின்மேல் போர்த்தி, பாலித்தீன் பையோடு அக்குழந்தையைத் தழுவிக்கொள்கிறார்.

தன் அன்புக்குரிய குழந்தையை பாலித்தீன் பை சுற்றிக் கட்டிப் பிடிப்போம் என்று அவர் ஒருபோதும் நினைத்திருக்க வாய்ப்பில்லை.

பெருந்தொற்று நம்மை நம் அன்புக்குரியவர்களிடமிருந்து நம்மை அந்நியப்படுத்தினாலும், அன்பு செய்வதற்கான வழிகளை மானுடம் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறது. அந்த அன்பு மருத்துவர் தந்தை போல.

எந்தப் பெருந்தொற்றும் மானுடத்தை அழித்துவிட முடியாது.

இறுதியில், மானுடம் வெல்லும்.

இன்று நாம் நம் கடவுளை மூவொரு இறைவன் என்று கொண்டாடி மகிழ்கின்றோம்.

இந்த மறைபொருள் பற்றி புனித அகுஸ்தினார் சிந்தித்துக் கொண்டே கடற்கறையில் நடந்துகொண்டிருந்தபோது, அங்கே தோன்றிய குழந்தை, 'கடல் தண்ணீரை ஒரு சிறிய குழிக்குள் நிரப்ப முயல்வது எவ்வளவு மதியீனம்!' என்று கேட்டுவிட்டு மறைந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. ஆனால், புனித அகுஸ்தினாரைத் தவிர வேறு யாரும் இந்த மறைபொருள் பற்றி அதிகம் பேசவில்லை. பேசிய மற்றவர்கள் எல்லாம் அகுஸ்தினார் பேசியதைத்தான் வேறு வார்த்தைகளில் சொன்னார்கள்.

அகுஸ்தினார், 'அன்பு' என்ற உணர்வை இங்கே ஓர் உருவகமாகக் கையாண்டு தமதிருத்துவத்தின் (மூவொரு கடவுளின்) பொருளைப் புரிந்துகொள்ள விழைகின்றார். அன்பில் மூன்று பகுதிகள் உள்ளன: (அ) அன்பு செய்பவர், (ஆ) அன்பு செய்யப்படுபவர், (இ) இருவருக்கிடையே பரிமாறப்படும் அன்பு. அன்பு என்ற ஒன்றே இந்த மூன்று பகுதிகளையும் இணைத்தாலும், மூன்றும் தனித்தனியாக இருக்கின்றன என்பதை நாம் மறுப்பதில்லை.

மூவொரு கடவுள் பற்றிய புரிதலில் இதுவே முதன்மையானது. அதாவது, இவர்கள் மூவரும் ஒன்று என்றாலும், இவர்கள் வேறு வேறான நபர்கள்.

அகுஸ்தினார் இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வு பற்றி ஓரிடத்தில் மறையுரை வைக்க வேண்டிய தேவை இருந்தது. இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வில், 'மகன் வேறு,' 'தந்தை வேறு,' 'தூய ஆவியார் வேறு' என்று நம்மால் எளிதில் பிரித்துப் பார்க்க முடியும். மகன் தண்ணீருக்குள் இருக்கிறார். தந்தை வானத்தில் இருக்கிறார். தூய ஆவியார் இரண்டுக்கும் நடுவில் ஆகாயத்தில் இருக்கிறார். மூன்று பேரும் தனித்தனியாக அவர்கள் பிரிந்துதானே இருக்கிறார்கள். அப்படி இருக்க, அவர்கள் எப்படி ஒரே கடவுள் என்றும், பிரிக்க இயலாதவர்கள் என்றும் சொல்ல முடியும்? என்று அவருடைய மூளை கேள்வி கேட்கிறது. (அகுஸ்தினாரின் கேள்வி கேட்கும் திறன் நம்மை வியப்புக்கு உள்ளாக்குகிறது). இந்த இடத்தில் அவர் இன்னொரு உருவகத்தைக் கண்டுபிடிக்கின்றார்: நினைவு (memory), புரிதல் (understanding), விருப்பம் (will).

ஒரு கதையை நாம் நினைவில்கொள்ள வேண்டுமெனில், அந்தக் கதையைப் புரிந்துகொள்ளவும், நினைவில் வைத்திருக்க விருப்பம் கொள்ளவும் வேண்டும்.

ஒரு கதையைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், அவற்றின் வார்த்தைகளை நினைவில்கொள்ளவும், அவற்றை எண்ணிப்பார்க்க விருப்பம் கொள்ளவும் வேண்டும்.

ஓரு கதையை நாம் விரும்ப வேண்டுமெனில், அதை நினைவில் கொள்ளவும், புரிந்துகொள்ளவும் வேண்டும்.

மூன்றையும் செய்யக் கூடியது மூளைதான். ஆனால், மூன்றையும் வேறு வேறு செயல்களாகச் செய்கிறது. ஆக, அவற்றைப் பிரிக்க முடிவது போலத் தெரிந்தாலும், பிரிக்க இயலாதவையாக அவை இருக்கின்றன.

அப்படியே, கடவுளும், தந்தை-மகன்-தூய ஆவியாரும் என்கிறார் அகுஸ்தினார்.

மூவொரு கடவுள் மறைபொருளை இன்று நாம் எப்படிப் புரிந்துகொள்வது?

மூவொரு கடவுள் தங்களிலேயே உறவு நிலையில் இருக்கின்றார்கள் என்றும், அவர்களுக்கென்று ஒவ்வொருவருக்கும் ஒரு பணி இருக்கிறது என்றும் வரையறுக்கிறது நம் கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி (காண். எண்கள் 267, 255).

ஆக, உறவும் பணியும் இங்கே அடிப்படையாக இருக்கின்றன.

உறவும் பணியும் மனித வாழ்வின் அடிப்படையான கூறுகளாக இருக்கின்றன. ஏனெனில், நாம் நம்மில் காண்பதைத்தான் கடவுளில் காண்கிறோம் என்கிறது சமூகவியல்.

பகுப்பாய்வு உளவியலின் தந்தை என அழைக்கப்படுகின்ற சிக்மண்ட் ஃப்ராய்ட், மனித வாழ்க்கையை 'லீபன் உன்ட் ஆர்பைடன்' (lieben und arbeiten) என்று வரையறுக்கின்றார். 'அன்பும்' 'பணியும்' - இதுதான் நம் வாழ்வின் மொத்தச் சுருக்கம். இந்த இரண்டும் தான் நம் அடையாளங்களாக இருக்கின்றன.

எடுத்துக்காட்டாக, நான் யாருடைய மகன் என்ற உறவு நிலையிலும், நான் என்ன பணி செய்கிறேன் என்ற நிலையிலும்தான் நான் அறியப்படுகின்றேன். இந்த இரண்டுக்காகவும்தான் நம் மனித உள்ளம் ஏங்குகிறது. ஆகையால்தான், நம்மால் தனியாக இருக்க முடிவதில்லை. ஏதாவது பணி நம்மிடமிருந்து பறிக்கப்பட்டால், அல்லது பணிசெய்ய வேண்டாம் என்று நாம் தடுக்கப்பட்டால் நம்மால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

மூவொரு கடவுள், தங்களுக்கிடையே, தந்தை-மகன்-உறவின் கனி என்னும் நிலைகளில் ஒருவர் மற்றவரோடு உறவில் இருக்கின்றனர். அது போல, தந்தை படைக்கின்றார், மகன் மீட்கின்றார், ஆவியார் வழிநடத்துகின்றார். எனவே, மூன்று பணிகளை அவர்கள் செய்கின்றனர். இன்றைய முதல் வாசகத்தில் தந்தையாகிய கடவுள் செய்கின்ற படைப்பு மற்றும் பராமரிப்புப் பணி பற்றி மோசே இஸ்ரயேல் மக்களுக்கு எடுத்துச் சொல்கின்றார். இரண்டாம் வாசகத்தில், ஆவியார் நம் உள்ளத்தில் அமர்ந்துகொண்டு, கடவுளை, 'அப்பா! தந்தையே!' என அழைக்குமாறு நம்மைத் தூண்டி எழுப்புகின்றார். நற்செய்தி வாசகத்தில், இயேசு தன் உடனிருப்பு எந்நாளும் இருக்கிறது என்று வாக்களிக்கின்றார். ஆக, மூன்று ஆள்களாக அவர்கள் மூன்று பணிகளைச் செய்கின்றனர். ஆனாலும், அவர்கள் ஒரே ஆளாக – ஒரே புத்தி, ஒரே ஞானம், ஒரே உணர்வு - இருக்கின்றனர்.

மூவொரு கடவுள் எப்படி? என்று கேட்பதை விட, மூவொரு கடவுள் ஏன்? என்று கேட்பதே சிறப்பு.

மனித வாழ்வின் அடிப்படை அலகுகளான 'உறவு' மற்றும் 'பணி' ஆகியவற்றை வரையறை செய்வதற்கு மூவொரு இறைவன் நமக்கு அளவுகோலாக இருக்கின்றார்.

எப்படி?

'மகிழ்ச்சி' மற்றும் 'வளர்ச்சி' - இவ்விரண்டும்தான் உறவு மற்றும் பணியில் அடிப்படையாக இருக்க வேண்டியவை.

இன்று நான் ஒருவர் மற்றவருடன் இணைந்திருக்கும் உறவினால் நான் மகிழ வேண்டும், நான் வளர வேண்டும். அதுபோலவே நான் செய்யும் பணியிலும். நான் செய்யும் பணியால் எனக்கு மகிழ்ச்சி கிடைக்க வேண்டும், அந்தப் பணி செய்வதன் வழியாக நான் வளர வேண்டும்.

மகிழ்ச்சியும் வளர்ச்சியும் இணைந்து செல்தலே உறவுக்கும் பணிக்கும் அழகு.

இன்றைய நாளில், நம்மில் பலர் தங்கள் உறவுகளைப் பிரிந்து, உறவுகளை இழந்து நிற்கின்றோம். பணிகள் செய்ய இயலாமல் முடங்கிக் கிடக்கின்றோம். வைரஸ் நம்மை விட்டு நீங்காது என்ற எதிர்மறையான குரல்கள் வலுத்து வருகின்றன. அச்சம், கலக்கம், பயம் எல்லோர் முகங்களிலும் அப்பிக் கிடக்கின்றது. யாரும் யாருக்கும் ஆறுதல் சொல்லும் நிலையில் இல்லை. எல்லாவற்றையும் எல்லாரையும் நோய் தாங்கும் பொருள்களாக, நபர்களாகப் பார்க்கத் தொடங்கிவிட்டோம். ஒரே இல்லத்திற்குள் தனித் தனித் தீவுகளாகிவிட்டோம். அன்றாட வேலைக்குச் சென்றால்தான் வீட்டில் அடுப்பெரியும் என்ற நிலையில் உள்ள பல குடும்பங்களில் சேமிப்பும் இல்லாத நிலையில், வறுமையா? கொரோனாவோ? – எது முந்திக்கொண்டு நம்மை அழிக்கப் போகிறது? என்ற எண்ணத்துடன் எழுகின்றோம். இறப்பை விட இறப்பு பற்றிய அச்சம் நமக்கு அதிகம் அச்சம் தருகிறது. படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர், கடவுளை வேண்டுவோர், கடவுளை ஏற்காதோர் என அனைவரையும் அள்ளிக்கொண்டு போகிறது பெருந்தொற்று.

முன்பை விட இன்று நமக்கு மூவொரு கடவுள் நமக்கு அதிகம் தேவைப்படுகிறார். நாம் தனிநபர் அல்லர், நம்மைச் சுற்றியும் உறவுகள் இருக்கின்றன எனச் சொல்கின்றார் நம் கடவுள்.

பதிலுரைப்பாடலின் ஆசிரியர் (திபா 33) நாம் அவரையே பற்றிக்கொள்வோம்: 'ஆண்டவர் நம் உயிரைச் சாவினின்று காக்கின்றார். அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். நாம் ஆண்டவரையே நம்பியிருக்கின்றோம். அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார் ... உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எம்மீது இருப்பதாக!'

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

"மூவொரு கடவுளின் உறவுகளா நாம்! "

இன்றைய நாளில்
நம்முடைய தாய்த் திருஅவையோடு இணைந்து மூவொரு கடவுள் பெருவிழாவினை மிகச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றோம். மூவொரு கடவுள் பெருவிழா ஒரு மறையுண்மை கொண்டாட்டமாகும். கடவுள் மூன்று ஆட்களாக இருக்கிறார் என்பது நம்முடைய கிறிஸ்தவ நம்பிக்கையின் மறைபொருள். மூவொரு கடவுள் மூன்று ஆட்களாக இருந்தாலும் ஒரே உள்ளம் கொண்டவர்கள். தந்தையாம் கடவுள் படைத்தவராகவும் ஆண்டவர் இயேசு நம்மை பராமரிப்பவராகவும் தூய ஆவியார் நம்மைப் பலப்படுத்தப்படுத்துபவராகவும் இருக்கின்றனர். படைப்பின் தொடக்கத்திலேயே மூவொரு இறைவனின் செயல்பாட்டைக் காணமுடிகின்றது.

தந்தையாம் கடவுள் படைப்பின் தொடக்கத்தில் படைத்தவராகவும் வார்த்தை வடிவில் மகனாகிய இறைவனும் நீரின் மீது அசைவாடிய தூய ஆவியாகிய இறைவனும் பிரசன்னமாகியிருந்தனர். மூவொரு கடவுளால் இந்த உலகம் ஆற்றலோடு படைக்கப்பட்டது.

பழைய ஏற்பாட்டில் ஆபிரகாமுக்கு மூன்று மனிதர்கள் காட்சியளித்தனர். இந்த மூன்று ஆட்களையும் மூவொரு கடவுளோடு விவிலிய அறிஞர்கள் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். புதிய ஏற்பாட்டிலே ஆண்டவர் இயேசு திருமுழுக்கு பெறும்போது தந்தை மகன் தூய ஆவியாரின் ஒன்றிப்பு அங்கு நடைபெற்றது. இயேசு தம் சீடர்களை நற்செய்திப் பணி செய்ய அனுப்பும் பொழுது "தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள் "என்று அறிவுறுத்தி அனுப்பினார். இதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம். திருத்தூதர் பவுல் மூவொரு கடவுளின் ஆசிரை கொரிந்தியருக்கு எழுதப்பட்ட திருமடலில் " ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக " (2கொரி: 13: 13) என்று வாழ்த்தியுள்ளார். இவ்வாறாக மூவொரு கடவுளின் முக்கியத்துவத்தை திருவிவிலியத்தில் பல சான்றுகளைக் கொண்டு காணமுடியும்.

மூன்று என்பது கிறிஸ்தவத்தில் முக்கியமான எண்ணாக கருதப்படுகின்றது.

விவிலியத்தில் மூன்று என்பது முழுமையை சுட்டிக்காட்டும் எண்ணாக கருதப்படுகின்றது. கடவுள் மூன்று ஆட்களாய் இருக்கின்றார். இயேசு மூன்று முறை சோதிக்கப்பட்டார். இயேசு மூன்று முறை சோதிக்கப்பட்டதற்கு காரணம் இயேசு சோதனைகளை முழுமையாக வென்றவர் என்பதைச் சுட்டிக்காட்டவே .

இயேசுவுக்கு நெருங்கிய மூன்று சீடர்கள் இருந்தனர். இதற்கு முக்கிய காரணம் முழுமையை சுட்டிக் காட்டுவதற்காகவே ஆகும். கடவுள் தாவீதுக்கு மூன்று வாய்ப்புகளைக் கொடுத்தார். இயேசு இந்த உலக மீட்பிற்காக சிலுவையில் அறையப்பட்டு இறந்து மூன்றாம் நாள் மாட்சியோடு உயிர் பெற்று எழுந்தார். இது முழுமை நிறைந்த வெற்றியை சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. இவ்வாறாக மூன்று என்ற எண் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது.

மூவொரு கடவுள் விழா நமக்கு சுட்டிக்காட்டும் செய்தி என்னவென்று சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம். முதலாவதாக உண்மையான ஒற்றுமையின் அடையாளமாக இருக்கின்றனர். ஒரே கடவுள் மூன்று ஆட்களாக தங்கள் கடமைகளைச் செய்கின்றனர். மூன்று ஆட்களாக இருந்தாலும் ஒரே கடவுள் தான். ஏனெனில் அவர்கள் ஒரே திருவுளம், ஒரே இலக்கு, ஒரே மனநிலையைக் கொண்டுள்ளனர். மூவொரு கடவுளின் ஒன்றிப்பு மனநிலை ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகின்றது. குறிப்பாக குடும்ப வாழ்வில் இணைந்துள்ள கணவனும் மனைவியும் மூவொரு இறைவனின் மனநிலையை கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் இன்றைய காலச் சூழலில் குடும்பங்களில் அதிகமான பிரச்சனை இருப்பதற்குக் காரணம் மூவொரு இறைவனின் மனநிலையை கொண்டிருக்காமல் இருப்பதாகும். ஒரே சிந்தனையையும் ஒன்றிப்பையும் தங்கள் குடும்ப வாழ்வில் கொண்டிருக்கும் பொழுது அவர்களின் வாழ்வு மகிழ்வும் அன்பும் நிறைந்ததாக இருக்கும்.

இரண்டாவதாக, மூவொரு கடவுள் கிறிஸ்தவ வாழ்வின் அடித்தளமாக இருக்கின்றனர். ஏழு அருள்சாதனங்களும் மூவொரு கடவுளின் அருளையும் ஆசியையும் ஒன்றிப்பையும் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. திருமுழுக்கின் வழியாக மூவொரு கடவுளின் ஆசீர் கிடைக்கின்றது. இதன் வழியாக முதல் பெற்றோர் வழியாக வந்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு திருஅவையின் உறுப்பினர்களாக மாற வாய்ப்பு கிடைக்கின்றது. ஒப்புரவு அருள்சாதனத்திலும் மூவொரு கடவுளின் வழியாக மன்னிப்பு கிடைக்கின்றது. நற்கருணையும் மூவொரு கடவுளின் ஆசியால் நம் உழைப்பின் பயனான சாதாரண அப்பத்திலிருந்தும் இரசத்திலிருந்தும் நமக்கு ஆன்ம உணவு கிடைக்கின்றது. உறுதிப்பூசுதல் அருள் சாதனத்திலும் மூவொரு கடவுளின் அருளால் தூய ஆவியின் கொடைகளும் கனிகளும் கிடைக்கின்றது. திருமணம் என்னும் அருள்சாதனத்திலும் மூவொரு கடவுளின் ஆசியால் திருமண உடன்படிக்கை நடைபெறுகின்றது .குருத்துவ அருள்பொழிவிலும் மூவொரு கடவுளின் அருள்பொழிவால் சாதாரண மனிதர் இயேசுவின் பிரதிநிதியாக அருள்பொழிவு செய்யப்படுகிறார். நோயில் பூசுதல் அருள்சாதனத்திலும் நோய்வாய்ப்பட்டிருக்கும் மனிதர் நலம் பெறுகிறார். இவ்வாறாக ஏழு அருள்சாதனத்திலும் மூவொரு கடவுளின் முக்கியத்துவத்தை காணமுடிகின்றது. மூன்றாவதாக, மூவொரு கடவுள் உண்மையான உறவுக்குச் சான்று பகர்கின்றனர். கடவுள் மூன்று ஆட்களால் செயல்பட்டு உறவில் ஒரே உள்ளத்தால் நிறைந்திருந்தனர். நம்முடைய அன்றாட வாழ்விலும் உறவுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். பிறருடைய துன்பத்திலும் இன்பத்திலும் பங்குகொள்ளவும் உடனிருக்கவும் முயற்சி செய்வோம். அவ்வாறு வாழ்கின்ற பொழுது நாமும் மூவொரு கடவுளின் உறவுகளாக மாறுவோம்.

இறைவேண்டல் :
மூவொரு கடவுளே! உம்மைப் போல நாங்களும் ஒற்றுமையிலும் அருளிலும் உறவிலும் ஒரே திருவுளத்திலும் இணைந்திருக்க அருளைத் தாரும். ஆமென்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

உறவு வாழ்வின் முகவரி - மூவொரு இறைவன்

திருச்சிக்கு அருகே முக்கொம்பு என்ற பகுதியில் காட்டு வேலை செய்து கொண்டிருப்பவர் திருமதி. சரோஜா. இவருடைய கணவர் பெயர் முருகேசன். அவர் கொத்தனார் வேலை செய்கிறார். இருவருக்கும் திருமணம் ஆகி ஏறக்குறைய 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர். தினந்தோறும் திருச்சி நகரப் பகுதிக்கு கொத்தனார் வேலைக்கு வரும் முருகேசன் கைதேர்ந்த வேலையாள். மிக நேர்த்தியாக வேலை செய்ய கூடியவர். திறமையான முறையில் கட்டிட வேலையாளாக இருக்கும் இவருக்கு பொதுவாக ஆண்களுக்குள்ள குடிப்பழக்கம் உண்டு. தினமும் 300, 400ரூபாயை மதுக்கடையில் மொய் வைக்காமல் வரமாட்டார். வருபவர் சும்மாவும் இருக்கமாட்டார். அலப்பறை கொடுப்பதும், கண்டபடி மனைவி, பிள்ளைகளை அடிப்பதுமாக வாழ்வை நடத்தினார். ஒரு நாள் திடீரென வேலை செய்யும் இடத்தில் முதல் மாடியிலிருந்து சாரம் வழுக்கி கீழே விழுந்தார். ஒரு கால் முறிந்தது. உடலின் பல இடங்களில் சரியான காயம் வேறு. திருச்சி அரசு பொது மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டார். சில நாட்கள் கழித்து, ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை முடிந்த பின்னர் வீடு திரும்பினார். அப்போது படுத்த படுக்கையாய் இருந்த தன் கணவனை கண்ணும் கருத்துமாய் பார்த்தார் சரோஜா. ஒவ்வொரு நாளும் அவருக்கு தேவையானவற்றை செய்வதில் மிகுந்த சிரமமும், வேதனையும் அடைந்தார். இருப்பினும் கொஞ்சம்கூட முகம் சுழிக்காமல் என்னதான் இருந்தாலும் இவர் என் கணவர். என் துணையாக கடவுள் கொடுத்தவர் என்றும், விரைவில் எழுந்து நடப்பார் என்ற நம்பிக்கையோடும் பொழுதுகளைக் கழித்தார். அவரின் நம்பிக்கை வீண்போகவில்லை. நலமுடன் நடக்கவும், பழைய நிலைமைக்கு திரும்பவும் மாறியதை எண்ணி மகிழ்ந்தாள். அப்போது எதிர்பாராத விதமாய் ஒன்று நிகழ்ந்தது. திடீரென்று முருகேசன் தன் மனைவியின் காலில் விழுந்து என்னை மன்னித்துவிடு சரோ என்று கண்ணீரால் அவளின் காலை நனைத்தார். உன் அன்பைப் புரிந்துகொள்ளாமல் நடந்துவிட்டேன். உன் பாசத்தை அறியா பாவியாகிவிட்டேன் என்று கதறினார். அவரைத் தேற்றிய மனைவி, விடுங்க இதுக்கெல்லாம் போய் அழாமலா? நீங்க என் உயிருங்க. நாம சந்தோஷமா இருக்கங்கன்னுதான் திருமண உறவையே கடவுள் கொடுத்தாரு. சின்ன விபத்துக்காய் நம் உறவில் விரிசல் வரலாமா? சிறிய வருத்தங்களுக்காய் நம் உறவில் உரசல்கள் வரலாமா? என்று கேட்டார். உள்ளங்கள் ஒன்றிணைந்தால் உறவு வாழ்வு நிச்சயம் நம் முகவரியாகும் என்பதே இத்தம்பதியர் வாழ்வு கொடுக்கும் படிப்பினை.

இறைஇயேசுவில் இனியவர்களே,

இன்று நாம் அன்னையாம் திருஅவையோடு இணைந்து மூவொரு இறைவன் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். இதை உறவின் சங்கமம், உறவு வாழ்வின் அடையாளம், உறவு வாழ்வின் முகவரி என்ற அடைமொழிகளால் வர்ணிக்கலாம். மூவொரு இறைவனாக திகழும் தந்தை, மகன், தூய ஆவியானவர் ஆகிய மூவருமே ஆள்தன்மையில் மூவராய் இருந்தாலும் ஒரே கடவுளாய் இருக்கிறார்கள். இந்த ஒரே என்ற ஒன்றை தன்மைதான் உறவு வாழ்வின் முகவரியாக இருக்கின்றது. அவர்களுக்குள் இருக்கும் உறவு வாழ்வுதான் நம் கிறித்தவ வாழ்வின் முகவரியாக இருக்கின்றது. மூவொரு இறைவன் பெருவிழா என்ற நோக்கில் அணுகும் இவ்விழாவானது அவ்வளவு எளிதாக புரிந்துகொள்ள முடிகின்ற ஒரு விழா கிடையாது. இதன் ஆழத்தையும், அர்த்தத்தையும் அறிவாலும், அறிவியலாலும் சோதனை செய்து பார்ப்பதற்கு அப்பாற்பட்டது. இந்த உறவு வாழ்வு அனுபவத்தில் உதிக்கும் அற்புத வாழ்வு. இதைத்தான் இன்றைய மூன்று வாசகங்களும் நமக்குத் தெளிவான பார்வையைக் கொடுக்கின்றன.

கிறித்தவர்களாகிய நாம் எந்தவொரு செயலைத் தொடங்கினாலும், ஏன் தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே ஆமென் என்று சொல்லி தொடங்குகின்றோம். நன்றாக கவனித்தால் நாம் தொடங்கும் அனைத்திலும் ஒரு உறவு பரிமாற்றம் நிகழும். உதாரணமாக, புதிய வீட்டை மந்திரிக்கின்றோம். அப்போது மூவொரு இறைவன் பெயரால் செபிக்கின்றோம், தீர்த்தம் தெளிக்கின்றோம், வீட்டைப் புனிதப்படுத்துகின்றோம். அப்படிச் செய்கையில் எது அங்கே உறுதிசெய்யப்படுகிறது. வீட்டில் தங்குவோர் கடவுளின் உறவாக வாழ இவ்வீடு கடவுளால் கொடுக்கப்பட்டுள்ளதை உணர்தல் அவசியம். அதே போன்று இவ்வீட்டைத் தேடி வருவோர் உறவு பாராட்ட விரும்புகின்றனர் என்பதே மறைமுக ஆசீர்வாதமாய் இருக்கின்றது. மனித வாழ்வு என்பது உறவு வாழ்வின் அடையாளம் என்பதை ஆழமாய் வெளிப்படுத்தவே மூவொரு இறைவன் பெருவிழா!

முதல் வாசகத்திலே,
இணைச்சட்டப் புத்தகத்திலே, மோசே மக்களை நோக்கிக் கூறியதாக ஒரு உரையாடல் நமக்கு வழங்கப்படுகிறது. அதில் நான்கு கேள்விகளை அவர் எழுப்பி நம் உறவு வாழ்வின் அடித்தளமே யாவே இறைவன்தான் என்று பறைசாற்றுகின்றார். மாபெரும் செயல் நடந்ததுண்டா? , வேறு எந்த மக்களினமாவது வாழ்ந்துண்டா? இதுபோல் கேள்விப்பட்டதுண்டா? தமக்கென உரிமையாக்கிக் கொள்ள முன்வரும் கடவுள் உண்டா? இத்தகைய கேள்விகள் அனைத்துமே தன் உடன்படிக்கையின் பயனாய் உருவாக்கிய மக்கள் மீது கடவுள் கொண்ட அன்புறவை ஆழமாய் வெளிப்படுத்துவதாக அமைகின்றது. இதைத்தான் தன்னுடைய தலைமுறைகள் ஒவ்வொன்றும் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதை மிகத் தெளிவாக முதல் வாசகம் வலியுறுத்துகின்றது.

இரண்டாம் வாசகத்திலே,
புனித பவுல் உரோமை நகர மக்களுக்கு எழுதுகையில் தூய ஆவியால் இயக்கப்படும் நாம் கடவுளை தந்தை என அழைக்கும் உரிமையைப் பெற்றிருக்கின்றோம். எனவே நாம் அப்பா தந்தையே என அழைக்கும் போது கடவுளின் பிள்ளையாகிறோம். இது உறவு வாழ்வின் அடையாளம். நம்முடைய உறவு வாழ்வின் முகவரியாக இது இருக்கின்றது. இந்த மாட்சியில்தான் நாம் பங்குபெறுகின்றோம்.

நற்செய்தியிலே,
நாம் பார்க்கின்ற உறவு வாழ்விற்கான முழுமையான தொடர்பினை இயேசு கிறிஸ்து உருவாக்குகின்றார். விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு உண்டு என்று சொன்ன இயேசு மக்களினத்தைச் சீடராக்குங்கள் என்றும், தந்தை மகன் தூய ஆவியாரின் பெயரால் திருமுழுக்கு கொடுங்கள் என்றும் உரைப்பது உறவு வாழ்வின் முகவரியாக கொடுக்கப்படுகின்றது. மோசேயின் வார்த்தையும், புனித பவுலின் வார்;த்தையும் ஒன்றுசேர்த்து இன்று புதிய வடிவம் கொடுக்க விரும்புகின்றார் இயேசு. திருமுழுக்கு பெறும் போது நாம் என்னவாகின்றோம். இரண்டு செயல்பாடுகள் நடக்கின்றன. முதலாவது நாம் கடவுளின் பிள்ளையாகவும், இரண்டாவது, திருஅவையின் உறுப்பினராகவும் மாறுகின்றோம். இவ்விரண்டுமே உறவு வாழ்வுதான். இதன் வழியாக நமக்கு முகவரி கொடுக்கிறார் கடவுள்.

இத்தகைய பின்னணியில் எவ்வாறு மூவொரு இறைவனின் பெருவிழாவை நாம் கொண்டாட வேண்டுமென்றால், இறைவன் கொடுத்த இந்த உறவு வாழ்வு நம்மில் அழகிய முகவரியைத் தருகின்றதா? அல்லது கடவுள் கொடுத்த முகவரியை தகர்த்து இருக்கின்றதா? தந்தை, மகன், தூய ஆவியானவர் ஆகிய மூவரும் தொடக்க முதலே விவிலியத்தை உறவு வாழ்வின் முகவரியாக நம்மிடத்திலே கொடுத்திருக்கின்றனர். அதிலே தந்தையும், மகனும், தூய ஆவியானவரும் எவ்வாறு நம்மிடத்திலே உறவின் அடையாளமாய் திகழ்கின்றனர் என்பதைப் பின்வரும் விவிலியப் பகுதிகள் மிகவும் தெளிவாக கொடுக்கின்றன. அவை:
1.படைப்பின் தொடக்கத்தில் தந்தையாகிய இறைவனும், வார்த்தை வடிவில் மகனாகிய இறைவனும், நீரின்மீது அசைவாடியவாறு துhய ஆவியாகிய இறைவனும் பிரசன்னமாகியிருந்தனர். (தொநூ. முதல் பிரிவு)

2.கடவுள் ஆபிரகாமுக்கு மூன்று மனிதர்களாகக் காட்சியளிக்கின்றார் (தொ.நுh.18:1,2).

3.இயேசு கிறி;ஸ்து திருமுழுக்கு பெறும்போது, தந்தை “இவரே என் அன்பார்ந்த மகன்” என்று சாட்சியம் கூற துhய ஆவி புறா வடிவில் இறங்கி வருகிறார் (லூக்.3:21,22).

4.இயேசு தம் சீடரை அனுப்பும்போது “தந்தை, மகன், துhய ஆவியின் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்” என்று அறிவுறுத்துகிறார் (இன்றைய நற்செய்தி).

5.ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும், துhய ஆவியின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக” என்கிறார் புனித புவுல் (2கொரி.13:13).

6.லுhக்கா நற்செய்தியாளர், பழைய ஏற்பாட்டை தந்தையின் காலமாக, நற்செய்தியை மகனின் காலமாக, திருச்சபையின் காலத்தை (பெந்தகோஸ்து நிகழ்வுக்குப் பின் வரும் காலத்தை) தூய ஆவியின் காலமாக உருவகப்படுத்துகிறார்.

7.யோவான் 14ம் பிரிவில் இயேசு, தன்னை பற்றியும், தந்தையைப் பற்றியும் துணையாளராம் துhய ஆவியைப் பற்றியும், மூவருக்கிடையேயான உறவைப் பற்றியும், இந்த மூவருக்கும், மனிதருக்குமிடையேயான உறவைப் பற்றியும் பேசுகின்றார்.

எனவே இந்த மூவொரு இறைவனின் பெருவிழா உறவு வாழ்வின் முகவரியாக இன்றைய நாளிலே நமக்கு கொடுக்கப்படுகின்றது. ஆனால் கடவுள் கொடுத்த இந்த வாழ்வை இழந்து நிற்கும் வேளையில், அதைப் புதுப்பிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கின்றது. இதைத்தான் இன்றைய பெருவிழா ஒரு பெரிய கேள்வியாக நம்மிடத்திலே வைக்கின்றது.

அண்மையில் நம்முடைய திருத்தந்தை பிரான்சிஸ் எழுதிய மடலான ‘அனைவரும் உடன் பிறந்தோர்’ (“குசுயுவுநுடுடுஐ வுருவுவுஐ” ) என்பதில் இந்த கொரனா பெருந்தொற்றின் காலத்தில் நாம் ஒருவர் மற்றவருக்கு உதவக் கூடிய, தோழமையுணர்வு பாராட்டக் கூடிய, உறவை வளர்த்துகொள்ள கூடிய, அன்பினாலும் அரவணைப்பினாலும் நம்மை உடுத்திக்கொள்ள அழைப்புகொடுத்தார். இதுவும்கூட நாம் கொண்டிருக்க வேண்டிய உறவு வாழ்வின் அடையாளங்கள் என்பதில் மாற்றுச் சிந்தனை கிடையாது. இது மூவொரு இறைவன் நமக்கு வழங்கியிருக்கின்ற மேலான கொடை. இத்தகைய கொடையை நாம் தினத்தோறும் அழிப்பதில் குறியாக இருக்கின்றோம். புனித பவுல் கலாத்திற்கு எழுதிய திருமுகத்திலே ஊனியல்பின் செயல்பாடுகளாக கொண்ட காரியங்களைப் பட்டியல் இடுகின்றார்: பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலைவழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை, சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிளவு, பிரிவினை, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் (கலா 5:19-20) இவையனைத்தும் நம்மில் இருக்கும் கொடையான உறவு வாழ்வை அளிக்கும் பண்புகள். இதை முழுவதுமாக ஏதோ ஒரு வகையில் நம் வாழ்வில் நாம் கடைபிடிப்பதால் தான் நம்மில் உதிக்கும் உறவு வாழ்வின் முகவரி நிலை தடுமாறி முச்சந்தியில் நிறுத்தப்படுகின்றது.

சற்று யோசித்துப்பாருங்கள், நம் உறவு வாழ்வு எத்தகைய புரிதலுடன் நம்மிடம் செயலாற்றுகின்றது என்று: நம்முடைய வாழ்வில் சில நெறிமுறைகளைத் தவிர்த்துவிட்டு, நெறிகேடுகளை அணிந்துகொண்டதால்தான் இவ்வளவு சிரமங்கள் நம் வாழ்வில் தோன்றுவதாக நம் திருத்தந்தை பிரான்சிஸ் தவக்காலச் சிந்தனையாக கடந்த ஆண்டு நமக்கு கொடுத்தார். மார்ச் 9 ஆம் தேதி 24 மணிநேர தொடர் நற்கருணை ஆராதனைக்கு அழைப்பு கொடுத்த அவர், உறவு வாழ்வு சிதைவதற்கு 24 காரணங்களைச் சொன்னார். அவற்றில் ஒருசிலவற்றை அடையாளப்படுத்த விழைகிறேன்.

1. ஆணவம் (தொநூ 3:1-23), 2. பொறாமை (தொநூ 45: 3-10), 3. வீண் பழிசுமத்துதல் (தானி(இ) 2: 8-62), 4. சந்தேகம் (தோபித்து 2: 11-14), 5. சோம்பல் (2தெச 3:6-12), 6. ஏற்றுக்கொள்ளாமை (மத் 10:40-42) இன்னும் பல. இவைகள் எங்கே இருக்கின்றனவோ அங்கே உறவுகள் சிதைக்கப்படுகின்றன. உறவு வாழ்வின் முகவரியாய் கொடுத்த நம் வாழ்வின் முகவரி முகம் தெரியாத மனிதர்களின் வழியாகவும், முகத்திற்கு முன் நிற்கும் மனிதர்கள் வழியாகவும் அழிக்கப்படுகின்றன என்று உண்மையை உரக்கச் சொல்கின்றது இப்பெருவிழா.

இறைவன் கொடுத்த இந்த உறவு வாழ்வு எப்படி முறிந்துபோனது, உறவு வாழ்வின் முகவரி எப்படி மறைந்துபோனது? என்று சிந்திக்கின்றபோது மூவொரு இறைவனில் காணப்படும் மூன்று முக்கியமான பண்பியல்புகள் நம்மில் இல்லாமல் போனதால் இன்று முகவரியற்று நிற்கின்றோம். என்னென்ன மூன்று பண்புகள்:

1. ஒன்றித்த வாழ்வு
2. முழுமையான வாழ்வு
3. அன்புள்ள வாழ்வு

இந்த மூன்று பண்புகள் மூவொரு இறைவனில் மிக ஆழமாக அடையாளப்படுத்தப் பட்டது. இதுவே உறவு வாழ்வின் முகவரியாகவும் இருந்தது. யோவான் 3:16இல் இந்த அன்புள்ள வாழ்வும், யோவான் 17:21இல் ஒன்றித்த வாழ்வும், மத்தேயு 5:48இல் நிறைவான அல்லது முழுமையான வாழ்வும் எடுத்துரைக்கப்படுகின்றது. அதை கொடையாகவே நம் அருளடையாளங்கள் ஒவ்வொன்றின் வழியாக நம் கிறித்தவ வாழ்விற்கு இறைவன் கொடுத்திருக்கிறார். எந்தவொரு அருளடையாளமும் மூவொரு இறைவன் பெயரிலேயே வழங்கப்படுகின்றது. அவற்றில் உறவு வாழ்விற்கான முகவரியும் அங்கே கொடுக்கப்படுகின்றது.

திருமுழுக்கு - பிள்ளைக்குரிய முகவரி
உறுதிப்பூசுதல் - ஆவிக்குரிய முகவரி
நற்கருணை - உடனிருப்பிற்குரிய முகவரி
ஒப்புரவு- பாவ மன்னிப்பிற்குரிய முகவரி
நோயில் பூசுதல் - குணமளிப்பின் முகவரி
திருமணம் - இல்லற வாழ்வின் முகவரி
குருத்துவம் - பணி வாழ்வின் முகவரி

இத்தனை முகவரிகளும் முழுமையாக, ஒன்றித்த உணர்வுடன், அன்புள்ள இதயத்தோடு வாழ பயிற்றுவித்து, என்றென்றும் நாம் மகிழ்வுடன் உறவு வாழ்வின் முகவரிகளாய் வாழ ஆற்றல் அளித்து, இறையனுபவம் பெற்றிட வழியமைத்துகொடுக்கின்றது இந்த மூவொரு இறைவன் பெருவிழா! சிதைந்த உள்ளத்தோடு, வாட்டமுள்ள முகத்தோடு, பண்பற்ற வாழ்வோடு நம் உறவினை பேணாமல், இறைவன் தந்த உறவு வாழ்வின் முகவரியை மீண்டும் புதுப்பித்திட தொடர்ந்து செபிப்போம். இறையருள் பெறுவோம்!! அப்போது புனித பவுல் சொல்வது போன்று என்றென்றும் நம்மில் இறைவனின் அருட்துணையிருக்கும்:

“ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் உங்களோடு இருப்பதாக!” (2கொரி 13:13)

ser
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு