“என்னை நம்புவோர் என்றுமே சாகமாட்டார்"
இறந்த மனிதன் ஒருவன் மோட்ச வாயிலில் நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்து புனித பேதுரு சில கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். உன் வாழ்க்கையில் யாரையாவது ஆழமாக அன்பு செய்திருக்கிறாயா? என்று கேட்டார். சிறிது தாமதத்திற்குப் பின் இல்லை என்று பதில் சொன்னான் அந்த மனிதன். இரண்டாவது, உனக்கு யாராவது நண்பர்கள் உண்டா என்று கேட்டபோது, நான் பணியிலே கவனமாக இருந்ததால் நட்பைப் பற்றி எண்ணிப் பார்க்கவில்லை என்றார் அந்த மனிதர். இறுதியாக, குறைந்தபட்சம் ஒரு குழந்தையையாவது அன்பு செய்தாயா என்று பேதுரு கேட்டபோது, மீண்டும் இல்லை என்று பதில் சொன்னார் அந்த மனிதர். இதைக் கேட்ட பேதுரு அவரை நோக்கி, நீ செத்து ரொம்ப வருடங்களாகிவிட்டனவே. ஏன் மிகவும் காலதாமதமாக இங்கு வந்து சேர்ந்தாய் என்றார்.
இறப்பு என்பது உயிர் உடலை விட்டுப் பிரியும்போது மட்டும் நடப்பதில்லை. மாறாக உடலில் உயிர் இருக்கும்போதே செத்த பிணமாக வாழ்கிறார்கள் என்பதைத்தான் இந்தக் கதை சுட்டிக்காட்டுகிறது.
அன்பு செய்யாதபோதும், அடிமைப்பட்டுக் கிடக்கும்போதும், அர்த்தமற்ற வாழ்வு வாழும்போதும் நம்மைத் தழுவி இருப்பது சாவுதான், வாழ்வு அல்ல என்பதை நாம் அறிய வேண்டும். இதைத்தான் இன்றைய மூன்று வாசகங்களும் கோடிட்டுக் காட்டுகின்றன.
1. சமூக அடிமைத்தனத்தால் சாவு
இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேனும் பாலும் பொழியும் புதிய நாடாம் கானான் தேசத்திலே குடியமர்த்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள் இரண்டாக அதாவது, வடக்கு, தெற்கு என, இஸ்ரயேல் என்றும், யூதா என்றும் பிரிந்து பிளவுபட்டு, கடவுளை மறந்து நெறி கெட்டுப்போனதால் யூதா நாட்டு மக்கள் பாபிலோனுக்கும், இஸ்ரயேல் மக்கள் அசீரியாவுக்கும் நாடு கடத்தப்பட்டார்கள்.
இந்த யூத மக்களை அந்த நாட்டு மக்கள் சிறைப்பிடித்து, சித்திரவதை செய்து கொடுமைப்படுத்தினார்கள். அனைத்தையும் இழந்து அணு அணுவாகச் செத்துக் கொண்டிருந்தார்கள். இதைத்தான் இன்றைய முதல் வாசகம் (எசே. 37:12-14) எசேக்கியேல் நூல் எடுத்துரைக்கிறது. இந்த மக்களின் அடிமை வாழ்வு, பள்ளத்தாக்கில் கிடந்த உலர்ந்த எலும்புகளுக்கு இணையாக இருப்பதாக ஆண்டவர் எசேக்கியேலுக்கு கனவில் காட்சித் தந்து தெரிவிக்கிறார். நீ கனவில் கண்டதை இஸ்ரயேல் மக்களுக்குப் போய் எடுத்துரை என்றும் அனுப்புகிறார்.
இத்தகைய சாவுக்கு இணையான அடிமைத்தனம் இன்று பல்வேறு வழிகளில் காட்சி தருகின்றது. சாதி வெறியாக, இனவெறியாக, நுகர்வு வெறியாக, பொருளாதார ஏற்றத் தாழ்வாக, ஏழ்மையாக மக்களைச் சாகடித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய அடிமைத்தனத்தில் வாழ்வோரின் நிலை செத்துப்போனவரின் நிலையைவிட மோசமானது. ஆனால் இத்தகைய மக்களுக்கும் வாழ்வதற்கு வழி உண்டு என்ற நம்பிக்கையை எசேக்கியேல் மூலமாக, இறைவன் உலர்ந்த எலும்புகளில் உயிர் வருவதின் மூலமாகக் காட்டுகிறார்.
2. பாவ அடிமைத்தனத்தால் சாவு
அடிமைத்தனத்தின் ஊற்றாக இருப்பதுதான் பாவ வாழ்வு. இந்தப் பாவ அடிமைத்தனத்தைக் குறித்துத்தான் தூய பவுல் அடிகளார் இன்றைய இரண்டாம் வாசகத்தில் பேசுகிறார். ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாக இருக்க முடியாது என்றும், பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாகும் (உரோ. 8:8-9) என்றும் குறிப்பிடுகிறார். இதைத்தான் தெளிவாகப் பாவத்திற்குக் கிடைக்கும் கூலி சாவு (உரோ. 6:23) என்றும் சொல்கிறார். இத்தகைய பாவ அடிமைத்தனத்திலிருந்து, அதனால் வரும் சாவிலிருந்து நமக்கு விடுதலை கொடுக்கவே இயேசு வந்தார். எனவேதான் புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதும்போது (1 கொரி. 15:55) சாவு முற்றிலும் ஒழிந்தது. வெற்றி கிடைத்தது. சாவே உன் வெற்றி எங்கே! சாவே உன் கொடுக்கு எங்கே! என்று சவால் விடுகிறார். உயிர்த்தெழுதலும், வாழ்வும் நானே. என்னில் விசுவாசம் கொள்பவர் இறப்பினும் வாழ்வார் (யோவா. 11:25) என்று கூறிய இயேசு லாசரின் கல்லறைக்குச் சென்று லாசரே வெளியே வா (யோவா. 11:43) என்று கூறி செத்து நாற்றமெடுக்கும் லாசரின் உடலுக்கு உயிர் கொடுத்துத் தன் மாட்சிமையை வெளிப்படுத்துகிறார். இதேபோல் அன்று சிரியா நாட்டுத் தளபதி நாமான் என்பவன் யோர்தானில் எலிசா தீர்க்கத்தரிசி கூறியதுபோல குளித்துக் குணமாகியவுடன், இஸ்ரயேல் தவிர வேறு எந்த நாட்டிலும் கடவுள் இல்லை என இப்போது உறுதியாக அறிந்து கொண்டேன் (2 அரச 5:15) என்றான்.
நாம் பாவிகள் என்று ஏற்றுக்கொள்ளும் அனைவருக்கும் வாழ்வு உண்டு. எனவேதான் இயேசு சொன்னார்: நீதிமான்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன் (மத். 9:13) என்று. நீதிமான்கள் என்று தங்களையே காட்டிக்கொண்ட பரிசேயர், சதுசேயர் பாவ அடிமைத் தனத்தால் நடைப்பிணங்களாக இருந்தார்கள். எனவே இயேசு இவர்களை பரிசேயர்களே, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே உங்களுக்கு ஐயோ கேடு என்றார்.
3. நம்பிக்கையின்மையால் சாவு
உணவு இல்லாமல் ஒரு மனிதன் 70 நாட்கள் வாழலாம். தண்ணீர் இல்லாமல் 10 நாட்கள் வாழலாம். காற்று இல்லாமல் 6 நிமிடங்கள் வாழலாம். ஆனால் நம்பிக்கை இல்லாமல் ஒரு நிமிடம் கூட நாம் வாழ முடியாது. வாழக் கூடாது. எனவேதான் இயேசு சொல்கிறார்: “என்னை நம்புவோர் என்றுமே சாகமாட்டார்" (யோவா. 6:47). "லாசர் இறந்தபோது நான் இல்லாமல் போனது பற்றி மகிழ்கிறேன். நீங்கள் நம்புவதற்கு நல்ல வாய்ப்பு" (யோவா.11:42) என்றார் இயேசு. நம்பிக்கை என்பது கடையில் வாங்கும் பொருள் அல்ல. தூய ஆவியானவர் தரும் அருட்கொடைகளில் ஒன்று. படைகளின் ஆண்டவரே! உம்மை நம்பும் மனிதர் பேறுபெற்றோர் (திபா.84:12).
நம்புவோம்
இஸ்ரயேல் மக்கள் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டார்கள். அவர்கள் வாழ்க்கையிலே அன்று பயங்கர சுனாமி. எதிரிகள் இஸ்ரயேலைச் சூரையாடி, அந்நாட்டு மக்களைச் சிறைப்பிடித்து அவர்களைச் சித்திரவதை செய்தார்கள். அந்த மக்கள் அனைத்தையும் இழந்து அணுஅணுவாக செத்துக்கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் ஆண்டவர் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல, எசேக்கியேல் என்னும் இறைவாக்கினரைக் கனவு ஒன்று காணவைத்தார். இதோ அந்தக் கனவு: ஆண்டவரின் ஆவியார் எசேக்கியேலைத் தூக்கிக்கொண்டு போய் ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தினார். அங்கே எங்கு பார்த்தாலும் உலர்ந்த எலும்புகள். அப்போது கடவுளின் ஆவியார் எசேக்கியேலைப் பார்த்து, நீ இந்த எலும்புகளுக்கு இறைவாக்குரை (எசே 37:4) என்றார். ஆண்டவர் ஆணையிட்டபடியே, எசேக்கியேல் இறைவாக்கு உரைக்க, எலும்புகள் நகர்ந்து ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ள, அவற்றின்மீது நரம்பும், தசையும் பிடிக்க, எங்கு பார்த்தாலும் சடலங்கள். அப்போது ஆண்டவரின் ஆவியானவர் கட்டளையிட்டபடி, எசேக்கியேல், உயிர் மூச்சே வா, நீ வந்து இறந்த இவர்களுக்குள் புகு. அப்பொழுது இவர்கள் உயிர் பெறுவர் (எசே 37: 9) என்று சொல்ல, சடலங்களுக்குள் கடவுளின் ஆவி புக, எல்லாச் சடலங்களும் எழுந்து நிற்க, எங்கு பார்த்தாலும் உயிர்பெற்ற மனிதர்கள்.
நீ கனவில் கண்டதை, இறந்து விடுவோமோ. மடிந்து விடுவோமோ என அஞ்சி வாழும் இஸ்ரயேல் நாட்டு மக்களிடம் போய்ச் சொல் என்று கடவுள் எசேக்கியேலிடம் சொல்ல, எசேக்கியேல் கடவுள் சொன்னதை, மக்களிடம் போய்ச் சொன்னார், அவர் சொன்னதைக் கேட்ட மக்கள் சற்று ஆறுதல் அடைந்தார்கள்.
காலச் சக்கரம் சுழன்றது. நாள்கள் இரவு பகலென மாறின. ஆண்டுகள் உருண்டோடின! இறந்தவர்கள் யாரும் உயிர்த்தெழவில்லை! மக்களின் எதிர்நோக்கும், நம்பிக்கையும், அன்பும் ஆட்டம் காணத்துவங்கின! அப்படிப்பட்ட நேரத்தில்தான், இயேசு ஆண்டவர். இலாசரின் கல்லறை முன்னால் நின்றார்; கல்லை அகற்றி விடுங்கள் (யோவா 11:39) என்றார். கல்லறை திறந்தது. இலாசரே, வெளியே வா (யோவா 11:43) என்று இயேசு கூறியதும், இறந்த இலாசர் உயிரோடு வெளியே வந்தார். எசேக்கியேல் வழியாகக் கடவுளால் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதி இயேசுவால் நிறைவேற்றிவைக்கப்பட்டது. அன்று இஸ்ரயேல் மக்களுக்கு ஏற்பட்ட சந்தேகம். குழப்பம், கலக்கம் இன்று நமக்கும் ஏற்படத் தேவையில்லை! உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கைக் கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கைக்கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார் (யோவா 11:25-26) என்று இயேசு வாக்குறுதி அளித்திருக்கின்றார்.
உணவு இல்லாமல் 70 நாள்கள் வாழலாம். தண்ணீர் இல்லாமல் 10 நாள்கள் வாழலாம். காற்று இல்லாமல் 6 நிமிடங்கள் வாழலாம். ஆனால் நம்பிக்கை இல்லாமல் ஒரு வினாடி கூட வாழ முடியாது, ஏன் வாழவும் கூடாது. ஆகவே இயேசுவின் வல்லமை மீது, இயேசுவின் வார்த்தை மீது முழு நம்பிக்கையை வைப்போம். நாளைய வாழ்வை மலரச் செய்யப்போவது இன்றைய நமது நம்பிக்கையே.
நம்பிக்கை என்பது கடையில் வாங்கக்கூடிய பொருள் அல்ல : ஓர் அருள் ! நமக்குள் வாழும் தூய ஆவியார் (உரோ 8:8-11) தரும் வரங்களில் ஒன்று நம்பிக்கை (1கொரி 12:9]. இது கேட்பவர்களுக்குக் கொடுக்கப்படும் (லூக் 11:9-13).நமக்கு வேண்டிய நம்பிக்கையை நமக்குள் வாழும் கடவுளின் ஆவியாரிடமிருந்து பெற்று நாம் நாளும் வளமுடன் வாழ்வோம். படைகளின் ஆண்டவரே! உம்மை நம்பும் மானிடர் நற்பேறு பெற்றோர்! (திபா 84:12) என்கின்றார் திருப்பாடல்கள் ஆசிரியர்.
மேலும் அறிவோம் :
வெள்ளத்(து) அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்(து) அனையது உயர்வு (குறள் : 595).
பொருள் : நீரின் மிகுதிக்கு ஏற்றுவாறு நீர்ப்பூவாகிய தாமரைத் தண்டின் நீளம் அமையும்: அதுபோன்று மக்கள் ஊக்கத்திற்குத் தக்கவாறு வாழ்வின் உயர்வு விளங்கும்!
"அனைத்து நோய்களையும் இயற்கை வைத்தியம் மூலம் குணப்படுத்த முடியும்” என்று கூறிய மூலிகை வைத்தியரிடம், எவ்வளவுதான் இயற்கை வைத்தியம் பார்த்தாலும், ஒருவர் சாகும்போது 'அவர் இயற்கை எய்தினார்' என்றுதான் செய்தி வரும்" என்று நான் கூறியபோது அவருடைய முகம் வாடிவிட்டது. நவீன மருத்துவ உலகம் ஒருவருடைய சாவைத் தள்ளிப்போட முடியுமே தவிர, சாவைத் தடுத்து நிறுத்த முடியாது. இறவாமைக்கு மருந்து என்ன? என்று ஒரு ஞானியைக் கேட்டதற்கு அவர் கூறியது: "இறவாமல் இருக்கவேண்டுமென்றால், பிறவாமல் இருந்திருக்க வேண்டும்."
இறப்பு என்பது தவிர்க்க முடியாத இயற்கையின் நியதி. இறப்பு என்பது ஒருவகையான தூக்கம். இறந்தவர்கள் தூங்குகின்றனர் என்று இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து வெளிப்படுத்துகிறார். இலாசர் இறந்து விட்டார்; ஆனால் கிறிஸ்து தம் சீடர்களிடம் கூறுகிறார்; "நம் நண்பன் இலாசர் தூங்குகிறான். நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன்" (யோவா 11:11), அவ்வாறே யாயீர் மகள் இறந்துவிட்டபோது கிறிஸ்து கூறுகிறார்: "சிறுமி இறக்கவில்னல்; உறங்குகிறாள்" (மாற் 5:39), சாவு என்பது உறக்கம்; பிறப்பு என்பது உறக்கத்திலிருந்து விழிப்பது என்று வள்ளுவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உறங்குவது போலும் சாக்காடு; உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.(குறள் 339)
கிறிஸ்துவே கல்லறையில் மூன்று நாள் துஞ்சினார் (உறங்கினார்). அதன் பிறகு அவர் உயிர்த்தெழுந்தார். எனவே "துஞ்சினோரின் முதற்கனி அவரே” (1 கொரி 15:20) என்று குறிப்பிடுகிறார் பவுல்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் அவர் கூறுகிறார்: "இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவர்..சாவுக்குரிய உங்கள் உடலையும். உயிர்த்தெழச் செய்வார்" (உரோ 8:11). எனவே இறந்து தூங்குகின்றவர்கள் அவர்களுக்கு உரிய காலத்தில் உயிர்த்தெழுவர்.
இலாசரின் கல்லறையில் கிறிஸ்து உள்ளங்குமுறிக் கலங்கிக் கண்ணீர் விட்டு அழுதார் ( யோவா 11:33-35). இதன் மூலம் கிறிஸ்து உண்மையான மனிதர் என்பது புலப்படுகிறது. ஆனால், "இலாசரே வெளியே வா" என்று சிம்மக் குரலில் கூப்பிட்டு அவரை உயிர்த்தெழச் செய்ததன் மூலம் அவர் உண்மையான கடவுள் என்பதை எண்பிக்கிறார். இலாசரை உயிர்த்தெழச் செய்ததன் மூலம் அவர் எல்லாக் காலத்து எல்லா மக்களுக்கும் விடுக்கும் செய்தி: “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்" (யோவா 11:25).
கடவுள் "இறந்தவர்களை வாழ்விப்பவர்" (உரோ 4:17). அவர் மறுமையில் மட்டுமல்ல, இம்மையிலும் நிறைவாழ்வின் ஊற்றாகத் திகழ்கின்றார். மின் விசிறி ஏன் ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது? ஏனெனில் அதற்கு போகவேண்டிய முகவரி தெரியவில்லையாம். அவ்வாறே. இன்றைய முதல் வாசகத்தில், எங்கே போவது என்ற முகவரி தெரியாமல் நாட்டையும் வீட்டையும் உடைமைகளையும் இழந்து, அந்நிய நாட்டில் அடிமைகளாக வாழ்ந்த இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர் எசேக்கியேல் மூலம் கடவுள் நம்பிக்கை ஊட்டுகிறார். அவர்களைக் கல்லறையிலிருந்து வெளியேற்றி, அவர்கள்மீது தமது ஆவியைப் பொழிந்து, மீண்டும் அவர்களை அவர்களது சொந்த நாட்டில் குடியமர்த்தப் போவதாக வாக்களிக்கின்றார் (எசே 37:12-14). மறுமையில் அல்ல, இம்மையிலேயே அவர்களுக்கு கடவுள் புதிய வாழ்வை வாக்களிக்கின்றார். இன்றைய பதிலுரைப்பாடலும், "எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே” என்று கூறுகிறது (திபா 130:8).
இம்மையிலேயே நாம் உயிர்ப்பின் மக்களாக வாழ வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். இலாசர் கல்லறையிலிருந்து வெளியே வந்த போது அவரது கைகளையும் கால்களையும் கட்டியிருந்த கட்டுகளை அவிழ்த்துவிடச் சொல்லுகிறார் கிறிஸ்து (யோவா 11:44). எனவே நாம் எல்லாவிதக் கட்டுகளிலிருந்தும் விடுதலை பெற்று உரிமை மக்களாக வாழ வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம்.
யோவானின் இறையியல் கருத்தின்படி நிறைவாழ்வு இம்மையிலேயே தொடங்கிவிட்டது என்பதை அறிக. "என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் ஏற்கெனவே சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்து விட்டார்கள்" (யோவா 5:24). இதே கருத்தை பாரதியார் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
செத்தபிறகு சிவவோகம் வைகுந்தம்
சேர்ந்திடலாம் என்றே எண்ணி இருப்பவர்
பித்த மனிதர்....... இத்தரை மீதினிலே இந்த நாளில்
இப்போதே மூக்தி சேர்ந்திட நாடிச்
சுத்த அறிவு நிலையில் களிப்பவர்
தூயவராம் என்று இங்கு ஊதேடா சங்கே.
பாரதியார்,வேதாந்த பாடல்கள், 9 சங்கு.
ஒரு பாட்டி, "சாமி! எனக்குக் கடவுளிடமிருந்து இன்னும் மரண ஓலை வரலை" என்று என்னிடம் மிகவும் வருத்தத்துடன் கூறினார். சிலர் திருமண ஓலைக்காகக் காத்திருக்கின்றனர்; சிலரோ மரண ஓலைக்காகக் காத்திருக்கின்றனர். அனைவரும் காசோலைக்காகக் காத்திருக்கின்றனர். காத்துக் காத்து சிலருக்கு கண் பூத்து விட்டது!
மரண ஓலை வருகின்றபோது வரும்! அதற்காக நாம் காத்திருக்கத் தேவையில்லை. இறுதி மூச்சுவரை நாம் புதிய வானகத்தையும் புதிய வையகத்தையும் படைக்க அரும்பாடுபட வேண்டும். இம்மை வாழ்வே மறுமை வழ்வாக மாறுகின்றது. விண்ணகம் சென்ற ஒருவர் பேதுருவிடம் "நான் மண்ணகத்தில் ஓர் இன்பமும் அனுபவிக்கவில்லை" என்றார். பேதுரு அவரிடம், "மண்ணக இன்பங்களைச் சுவைக்கத் தெரியாத நீங்கள் விண்ணாக இன்பங்களை எவ்வாறு சுவைக்க முடியும்” என்று கூறி அவரை மண்ணக இன்பங்களைச் சுவைக்கும்படி மண்ணகத்திற்குத் திருப்பி அனுப்பினாராம். இவ்வுலகில் முறையான இல்லற வாழ்வை வாழ்கின்றவர்கள் விண்ணாகத்திலுள்ள தெய்வத்திற்குச் சமம் என்கிறார் வள்ளுவர்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும். (குறள் 50)
இம்மையில் நாம் செம்மையாக வாழும் ஒவ்வொரு நாளும் விண்ணகத்தின் முன்சுவையாகும். விண்ணகத்திற்கு நாம் செல்லுவதற்கு முன், விண்ணகத்தை இம்மண்ணகத்திற்குக் கொண்டு வரவேண்டும். சாவுக் காலாச்சாரத்திற்குச் சாவுமணி அடித்து, வாழ்வு காலாச்சாரத்தை உயிர்த்தெழச் செய்வது காலத்தின் கட்டாயமாகும். அனைத்து நிலைகளிலும் மானிட உயிரைப் பேணிக் காக்க வேண்டும்.
"கடவுள் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொருத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே" (லூக் 20:38).
உள்ளத்துக்கு உயிர் = அன்பு + நம்பிக்கை
அண்மையில் ஈஸ்டர் வாழ்த்து அட்டை ஒன்று என் சிந்தையைக் நவர்ந்தது. முகப்பில் காலியான கல்லறை. அதன்முன் ஏற்கனவே அதிலிருந்து இயேசு வெளியேறிவிட்டது போன்ற உணர்வைத் தரும் காட்சி. அடியில் இந்த வார்த்தைகள்: May you discover empty tombs all your life - காலமெல்லாம் வாழ்நாளில் காலியான கல்லறையைக் காண என் வாழ்த்துக்கள்.
காலியான கல்லறையில்தானே நமது விசுவாசம் கட்டி எழுப்பப் படுகிறது! எப்பொழுதும் காலியான கல்லறையைக் காண்பதில்தானே கிறித்தவ வாழ்க்கை பொருளும் நிறைவு பெறுகிறது!
இன்று மனிதன் தன் வாழ்வைக் கல்லறையாக்கி உள்ளே புதையுண்டு கிடக்கிறான்; புழுங்கி மடிகிறான்.
இது மனச்சாவு யுகம் - an era of Psychological death!
வளர்ந்து வரும் மருத்துவச் சாதனைகள் இன்று உடலுக்கு ஆயுளைக் கூட்டுகின்றன. (புதிய புதிய மருந்துகள்... புதிய புதிய நோய்கள், புதிரான நோய்கள்) ஆனால் உள்ளங்களின் சாவு கூடிக் கொண்டே போகிறது. உயிருள்ள உடல் அவ்வுடலுக்குள்ளே உயிரற்ற உள்ளம். உடல் சாவு ஒரு முறையே. மனச்சாவோ கணத்துக்குக் கணம் - கணக்கே இருக்காது.
மனச்சாவு உடல் சாவை விடக் கொடியது. இறந்து போவதை விடக் கொடுமையானது. உயிரோடு இருந்தும் உயிரற்றவராய் உலவுவது, நடைப் பிணமாய் நடமாடுவது... 'கோமா நிலை' வேதனையானது. கோமா என்பது மயக்க நிலையில் உயிர் இருக்கும், உயிரோட்டம் இருக்காது. இதயம் இயங்கும், எதுவுமே உடலில் செயல்படாது. இருந்தும் இறந்த நிலை. வாழ்வின் மிகப்பெரிய சோகம் நாம் சாகிறோம் என்பதல்ல, வாழும் போதே நமக்குள்ளே நம்பிக்கை, மகிழ்ச்சி என்று எது எதுவோ செத்துக் கொண்டிருப்பதுதான்!
கற்பு என்பது தனிமனிதனின் மனத்துக்கு, உடலுக்கு, சமூகத்துக்கு மனிதன் பண்பாட்டின் மிக உன்னத நிலையில் தீர்மானித்து ஏற்படுத்திய கடிவாளம். சமூகத்திற்கு அவசியமான கட்டுப்பாடு. ஆனால் அதையும் மனித நேயக் கண்கொண்டு பார்க்க வேண்டாமா?
வன்முறைக்கு ஆளாகிக் கற்பிழந்த மனைவியை வீட்டில் சேர்த்துக் கொள்ளாத கணவனைப் பார்த்திருக்கிறோம். அந்த வன்கொடுமையைவிட இவனது இரக்கமின்மை கொடியதன்றோ!
மனித நேயம் இல்லையென்றால், பண்பாட்டின் உச்சகட்டத்தில் மனிதன் ஏற்படுத்திக் கொண்ட இலட்சியங்கள், வரம்புகள் எல்லாமே வெறும் அருத்தமற்ற கோடுகள்தாம்.
இப்போது புரிகிறதா இயேசுவின் நிமிர்ந்த பார்வை?
“அம்மா, நீ குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா? நானும் தீர்ப்பளிக்கவில்லை. இனிப் பாவம் செய்யாதே". (யோ.8:10-11)
சோக மௌனத்தில் சவ ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. கல்லறைத் தோட்டத்தை அடைந்தது. குருவானவர் செபம் சொல்ல சவப்பெட்டியை மூடி ஆணி அடிக்க முயலும் வேளையில் பிணம் மெல்ல அசைந்தது. உள்ளிருந்து கையொன்று மூடியை ஆணி அடிக்கவிடாமல் தடுத்தது. திறந்து பார்த்தால் பிணமாய் இருந்தவன் பேச ஆரம்பிக்கிறான்: 'நான் சாகவில்லை' என்கிறான். அங்கிருந்த பெரிய மனிதர் ஒருவர் அதற்குப் பதில் சொன்னார்: “நீ இறந்து போய் விட்டதாக மருத்துவ நிபுணர்களும் சமய வல்லுநர்களும் - திருச்சபையும் சமூகமும் முடிவெடுத்து விட்டார்கள். அவர்கள் முடிவில் தவறு இருக்க முடியாது. எனவே நீ புதைக்கப்பட வேண்டிய பிணம் தான். பதில் கொடுத்ததும் மூடி வைத்து ஆணி அடித்துக் குழியில் வைத்து மண்ணிட்டு நிரப்பி தலைமாட்டில் ஒரு சிலுவையையும் நட்டுத் திரும்பியது அந்தக் கூட்டம்!
இன்றைய நற்செய்தியில் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கும் - இயேசு மட்டும் அங்கு இல்லாமல் இருந்திருந்தால்!
தவறு செய்வதற்குச் சூழ்நிலையை உருவாக்கிவிட்டு வறியவனைத் தண்டிப்பதற்குத் தயாராகும் சமூகம், சட்டத்திற்குள் தன்னை - தனது பொறுப்பற்ற தன்மையை மறைத்துப் பாதுகாத்துக் கொள்கிறது.
உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, அதை மீட்க வந்தவர் இயேசு (யோ.3:17). நம் கவனத்தை ஈர்ப்பது இயேசு அந்தப் பெண்ணைத் தீர்ப்பிடவில்லை என்பது மட்டுமல்ல. தீர்ப்பிட வந்தவர் வெரையும் தீர்ப்பிடவில்லை என்பதுதான். "உங்களில் குற்றமில்லாதவன் முதற்கல்லை எறியட்டும்”. தீர்ப்பிட வேண்டும் என்று வந்தவர்களுக்குத் தீர்ப்பிட வாய்ப்பளிக்கிறார். ஆனால் தீர்ப்பிடத் தகுதியற்றவர்கள் என்று அவர்களை உணர வைத்ததுதான் இயேசு நிகழ்த்திய மாபெரும் அற்புதம்.
நாம் அனைவரும் பாவிகள். (1யோ.1:8). "என் இதயத்தைத் தூய தாக்கிவிட்டேன். நான் பாவம் நீக்கப் பெற்றுத் தூய்மையாய் இருப்பவன் என்று யாரால் சொல்லக் கூடும்?" நீதிமொழிகள் 20:9 விடும் சவால் இது.
"நல்லவர்கள் எல்லோரும் வெள்ளையாகவும் தீயவர்கள் எல்லோரும் கருப்பாகவும் கடவுளின் படைப்பில் இருப்பார்கள் என்று வைத்துக் கொண்டால் நாம் எப்படி இருப்போம்?" என்று ஆசிரியர் கேட்க ஒரு மாணவன் சொன்னானாம்: “வரிக்குதிரை போல இருப்போம் வரி வரியா கோடு கோடா கருப்பும் வெள்ளையுமாகக் கலந்து". அறிவார்ந்த பதில்! எந்த மனிதனும் முழுமையாக நல்லவனுமில்லை. முழுமையாகக் கெட்டவனுமில்லை.
தன்னிலை உணர்ந்தவர்களாய் நாமும் "கடந்ததை மறந்துவிட்டு முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு பரிசுபெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்" (பிலி.3;13-14)
"நானும் தீர்ப்பிடேன் - இனிப் பாவம் செய்யாதே”. எவ்வளவு பொருத்தமான பதில்! இது அவளுக்குப் பாவம் செய்யக் கொடுக்கப்பட்ட அனுமதிச் சீட்டு அன்று, மறுவாழ்வு தந்த மாமருந்து!
பாவிகள் எல்லோரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. மன்னிக்கப்பட வேண்டியவர்கள் என்பது இயேசுவின் புதிய சட்டம்.
நேற்றையப் பொழுதை இறை இரக்கத்துக்கு வீட்டுவிடு
இன்றையப் பொழுதை இறையன்பில் செலவிடு
நாளையப் பொழுதை இறை நம்பிக்கையில் விடியவிடு.
"கல்லை அகற்றிவிடுங்கள்"
"மரண வியாபாரி இறந்தான்" (“The Merchant of Death is Dead") என்ற தலைப்பில் 1888ம் ஆண்டு, ஏப்ரல் 13ம் தேதி பத்திரிகையில் செய்தியொன்று வெளியானது. அந்தச் செய்தி யாரைக்குறித்து எழுதப்பட்டிருந்ததோ, அந்த 'வியாபாரி' அந்த நாளிதழை அன்று வாசித்தார். நம்முடைய இறப்புச் செய்தியை நாமே வாசிக்கும் வாய்ப்பு நம்மில் யாருக்கும் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். இந்த அனுபவத்தைப் பெற்றவர் ஆல்பிரட் நொபெல் (Alfred Nobel). அவரது சகோதரர் Ludvig Nobel இறந்ததைக் குறிப்பிடுவதற்குப் பதில் ஆல்பிரட் இறந்துவிட்டதாக பத்திரிகையில் தவறான செய்தி வெளியானது. ஆல்பிரட் அந்தச் செய்தியைத் தொடர்ந்து வாசித்தார். தன்னைப் பற்றி பத்திரிகை உலகம் என்ன நினைக்கிறது என்பதை அவர் தெரிந்து கொண்டார்.
ஆல்பிரட் நொபெல் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர் என்பதை நாம் அறிவோம். எனவே அவரைப் பற்றி வெளிவந்த செய்திகள் அவ்வளவு சிறப்பாக இல்லை. பல்லாயிரம் உயிர்களை கொன்று பணம் சம்பாதிக்கும் ஒரு பயங்கர மனிதர் அவர் என்பதை, செய்திகள், பல வடிவங்களில் சொல்லியிருந்தன.
நாம் இறந்தபின், நம்மைப்பற்றி சொல்லப்படும் கருத்துக்கள் நமது உண்மை நிலையைத் தோலுரித்துக் காட்டும். ஆல்பிரட் தன்னைப் பற்றிய மரணச் செய்தியைப் படித்ததால், அறிவொளி பெற்றார் என்றே சொல்லவேண்டும். வெடிமருந்தால் தான் சம்பாதித்த செல்வத்தை எல்லாம் நொபெல் விருதுகள் வழுங்கும் அறக்கட்டளையை நிறுவுவதற்கு அவர் அளித்தார். இந்த ஒரு செயலால், அவர் வரலாற்றில் இன்றும் வாழ்கிறார்.
வரலாற்றில் புகழ்பெற்ற பலர் தங்கள் கல்லறையில் எழுதக்கூடிய வாக்கியங்களைத் தாங்களே சொல்லிச் சென்றுள்ளனர். 1931ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 10ம் தேதி இவ்வுலகிலிருந்து விடைபெற்ற புகழ்பெற்ற கவிஞர் கலீல் கிப்ரான் அவர்களின் கல்லறையில் எழுதப்பட்டுள்ள வரிகள் இவை: “என் கல்லறையில் இந்த வார்த்தைகளை எழுதி வையுங்கள். நானும் உங்களைப் போல் உயிரோடுதான் இருக்கிறேன். உங்கள் அருகிலேயே நிற்கிறேன். கண்களை மூடி, சுற்றிலும் பாருங்கள்... உங்களுக்கு முன் நான் நிற்பதைக் காண்பீர்கள்.”
கல்லறை நமது முடிவல்ல, நமது வாழ்வு இன்னும் தொடர்கிறது என்பதை நமக்கு நினைவுபடுத்தும் ஒரு நற்செய்தியை இன்று நாம் கேட்கிறோம். இயேசு இலாசரைக் கல்லறையில் இருந்து உயிருடன் எழுப்பும் புதுமையை இன்று நற்செய்தியில் வாசிக்கிறோம் (யோவான் நற்செய்தி 11: 1-45). நாம் கடந்த இரு வாரங்களாய் சொன்னதுபோல், யோவான் நற்செய்தி வெறும் நிகழ்ச்சியை மட்டும் குறிப்பிடுவதில்லை. மாறாக, அந்நிகழ்வின் வழியாக, ஓர் இறையியல் பாடம் நமக்கு வழங்கப்படுகிறது.
இயேசு ஆற்றிய புதுமைகளிலேயே மிகப் புகழ்பெற்ற புதுமையாகக் கருதப்படுவது இயேசு இலாசரை உயிர்ப்பிக்கும் புதுமை. இறந்தவர்கள் பலரை இயேசு உயிர்ப்பித்திருக்கிறார் என்பது நமக்குத் தெரியும். நயீன் நகர விதவையின் மகன், தொழுகைக் கூடத்தலைவனான யாயீர் என்பவரின் மகள் என்று பலரை உயிர்ப்பித்திருக்கிறார். ஆனால், இலாசரை உயிர்ப்பித்ததில் ஒரு தனி சிறப்பு உண்டு. ஏனையோர் இறந்த ஒருசில மணித்துளிகளில் இயேசு அவர்களைச் சாவினின்று மீட்டார். இலாசரையோ நான்காம் நாள் உயிர்ப்பித்தார்.
இறந்த ஒருவரின் ஆன்மா அவருடன் கல்லறையில் மூன்று நாட்கள் இருக்கும், மூன்றாம் நாள் அந்த ஆன்மா உடலிலிருந்து நிரந்தரமாக பிரிந்துவிடும், அதன் பின்னர் அந்த உடல் அழுகிப்போக, அழிந்துபோக ஆரம்பிக்கும்... இதுவே யூதர்கள் மத்தியில் நிலவி வந்த நம்பிக்கை. இலாசர் இறந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன. எனவே அவரது உடல் அழிய ஆரம்பித்திருக்கும். அந்த நேரத்தில் இயேசு அங்கு வந்து சேர்ந்தார். இயேசுவைக் கண்டு மார்த்தா, மரியா என்ற இரு சகோதரிகளும் ஒருவகையில் ஆறுதல் அடைந்தாலும், அவர் தாமதமாக வந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால், என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்" (யோவான் 11: 21,32) என்ற தங்கள் ஆதங்கத்தையும், ஏக்கத்தையும் சொல்கின்றனர்.
வாழ்வின் இக்கட்டான சூழ்நிலைகளில் இறைவன் தாமதிப்பதாக எத்தனை முறை நாம் உணர்ந்திருக்கிறோம். எதிர்பார்க்கும் நேரத்தில், எதிர்பார்க்கும் விதத்தில், எதிர்பார்க்கும் இடத்தில் கடவுள் வருவதில்லை. எதிர்பாராத வகையில் நம் வாழ்வில் நுழைவதுதான் கடவுளின் அழகு. தாமதமாய் வந்த இயேசுவிடம் தன் ஆதங்கத்தைக் கூறிய மார்த்தா, உடனேயே இயேசுவின் மீது தான் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையையும் எடுத்துரைத்தார். மார்த்தா இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்” என்றார். (யோவான் 11: 21-22) மார்த்தாவின் இந்த நம்பிக்கை, இலாசரை உயிர்ப்பித்த புதுமைக்கு வழிவகுத்தது.
இயேசு இலாசரைக் கல்லறையிலிருந்து எழுப்பிய இந்தப் புதுமை ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைத்த ஆதி கிறிஸ்தவர்களது நம்பிக்கையை வளர்ப்பதற்கு பெரிதும் உதவியது என்று விவிலிய ஆய்வாளர்களும், திருச்சபை வரலாற்று அறிஞர்களும் சொல்கின்றனர். ஆதி கிறிஸ்தவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை நாம் அறிவோம். அடுத்த நாள், அடுத்த மணி நேரம் உயிருடன் இருப்போமா என்ற கேள்வி இவர்கள் கழுத்தைச் சுற்றிக் கொண்ட ஒரு கருநாகத்தைப் போல் எப்போதும் இவர்களை நெருக்கிக் கொண்டே இருந்தது. இறந்து, புதையுண்டு, அழிந்துபோன தங்களையும், தங்கள் திருச்சபையையும் கல்லறைகளை விட்டு உயிருடன் வெளியே கொண்டுவருவார் இறைவன் என்ற நம்பிக்கையை வளர்க்க இலாசர் புதுமை உதவியது.
இதே எண்ணங்களை இன்றைய முதல் வாசகமும் நமக்குச் சொல்கிறது. பாபிலோனிய அடிமைத்தனத்தில் ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டிருந்த இஸ்ரயேல் மக்களை கடவுள் மீண்டும் உயிர்த்தெழச் செய்வார் என்று இறைவாக்கினர் எசேக்கியேல் கூறுகிறார். எலும்புக்கூடுகள் பரவிக்கிடந்த ஒரு நிலத்தில் இறைவனின் ஆவி வீசியபோது, அந்த எலும்புக்கூடுகள் படிப்படியாக தசையும், தோலும் பெற்று உயிருள்ள மனிதர்களாய், ஒரு பெரும் படையாய் எழுந்த அற்புதக்காட்சியை 37ம் பிரிவில், முதல் 11 இறைவாக்கியங்களில் விவரிக்கும் இறைவாக்கினர், அதைத் தொடர்ந்து இன்றைய வாசகத்தில் நாம் கேட்கும் ஆறுதலும், நம்பிக்கையும் தரும் இந்த வார்த்தைகளைக் கூறுகிறார்.
இறைவாக்கினர் எசேக்கியேல் 37 12-14
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டுவருவேன். உங்களுக்கு இஸ்ரயேல் நாட்டைத் திரும்பக் கொடுப்பேன். அப்போது, என் மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக்கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள். என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள்.
துருக்கி மற்றும் சிரியா நாடுகளில், இவ்வாண்டு பிப்ரவரி 6ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தைப் பற்றிய வேதனை செய்திகளை நாம் தொடர்ந்து கேட்டுவந்தோம். ஆயிரமாயிரம் மக்களைப் பலிகொண்ட அந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளிலிருந்து உயிர்கள் மீட்கப்பட்டதையும் நாம் அறிந்தோம். நிலநடுக்கம் ஏற்பட்ட அந்த வேளையில் தாய் ஒருவர், பெண் குழந்தையைப் பெற்றெடுத்த பின் உயிர் துறந்தார். மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், இறந்துபோன தாயின் தொப்புள் கொடியுடன் இணைக்கப்பட்டு, உயிரோடு இருந்த குழந்தையைக் காப்பாற்றிய செய்தியைக் கேள்விப்பட்டோம். அதையடுத்து, பல நூறு உயிர்கள் அந்த இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டதையும், ஒருவர், நிலநடுக்கம் ஏற்பட்டு, 13 நாள்களுக்குப் பின் மீட்கப்பட்டதையும் கேள்விப்பட்டோம். கல்லறைகளிலிருந்து நம்மை உயிருடன் கொணரும் சக்தி இறைவனுக்கு உண்டு என்பதற்கு, துருக்கி, மற்றும் சிரியாவில் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்நாளெல்லாம் சாட்சிகளாக வாழ்வர் என்று நம்பலாம்.
உயிரற்ற பிணமோ, உருவும், உணர்வுமற்ற களிமண்ணோ, கடவுள் கைபட்டால் புதுமைகளாய் மாறும். ஆனால், இந்தப் புதுமை நிகழ்வதற்கு கடவுள் இருந்தால் மட்டும் போதாது. நாமும் அவரோடு ஒத்துழைக்கவேண்டும் என இறைவன் விரும்புகிறார். “இப்போதுகூட (அதாவது, நம்பிக்கையற்ற இச்சூழலிலும் கூட) நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்” (யோவான் 11:22) என்று மார்த்தா கூறிய அந்த நம்பிக்கைச் சொற்களில், இந்த ஒத்துழைப்பு ஆரம்பமானது. இயேசு, இதே நம்பிக்கையை, ஒத்துழைப்பை, இலாசர் கல்லறையைச் சுற்றி நின்றவர்களிடமும் உருவாக்க நினைத்தார். எனவே, மூன்று கட்டளைகளைத் தந்தார். முதல் கட்டளை அங்கிருந்த யூதர்களுக்கு.
"கல்லறை வாயிலை மூடியிருக்கும் கல்லை அகற்றிவிடுங்கள்." இது இயேசு வழங்கிய முதல் கட்டளை. "கல்லே அகன்று போ." என்று இயேசு சொல்லியிருந்தால், ஏன், நினைத்திருந்தாலே போதும்.. அந்தக் கல் அகன்று போயிருக்கும். அவரது உயிர்ப்பின்போது இயேசுவின் கல்லறையைத் தேடி வந்த பெண்கள், அந்தக் கல்லை யார் நமக்கு அகற்றுவார்கள் என்று பேசிக்கொண்டு வந்தபோது, (காண்க. மாற்கு 16:3) ஏற்கனவே கல் அகற்றப்பட்டிருந்ததல்லவா? அதேபோல், இயேசு, இங்கும் தன் வல்லமையால், கல்லறையின் கல்லை அகற்றியிருந்தால், சூழ நின்றிருந்தவர்கள் அவரை இன்னும் அதிகம் நம்பியிருப்பார்கள். இந்தப் புதுமைக்கு இன்னும் அதிக மெருகு கூடியிருக்கும்... இப்படி எண்ணத் தோன்றுகிறது எனக்கு.
இயேசுவின் எண்ணங்களுக்கும், நமது எண்ணங்களுக்கும் அதுதான் வேறுபாடு. இயேசு புதுமைகள் செய்தது தன் வலிமையை, கடவுள் தன்மையைக் காட்சிப்பொருளாக்க அல்ல. புதுமைகளின் வழியே மக்களின் மனங்களில், வாழ்வில் மாற்றங்கள் உண்டாக்க வேண்டும் என்பதே அவர் எண்ணம். அந்தக் கல்லறையைச் சுற்றி நின்றவர்கள் நான்காம் நாளில் ஒன்றும் நடக்காது என்ற அவநம்பிக்கையுடன் அஙகு வந்தவர்கள். அவர்கள் கொண்டிருந்த அந்த அவநம்பிக்கையை இயேசு உடைக்க விரும்பினார். நான்கு நாட்கள் என்ன, நாலாயிரம் வருடங்கள் ஆனாலும் கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்த விரும்பினார்.
கல்லறையிலிருந்து இலாசரை உயிரோடு எழுப்ப அந்த மக்களுக்கு சக்தி இல்லாமல் இருக்கலாம். ஆனால், அந்தக் கல்லறையின் கல்லை அகற்றும் சக்தி அவர்களுக்கு உண்டு என்று இயேசுவுக்குத் தெரியும். எனவே, மனிதர்களால் முடிந்தவற்றை மனிதர்களே செய்யட்டும் என்று இயேசு இந்தக் கட்டளையைத் தருகிறார். நம்மால் முடிந்ததை நாமே செய்வதைத்தான் இறைவன் விரும்புகிறார்.
இயேசு, அங்கிருந்தவர்களிடம், கல்லறையை மூடியிருந்த கல்லை அகற்றச் சொன்னார். கல்லை அகற்றுவதில் மற்றொரு பிரச்சனை இருந்தது. அதை மார்த்தா நேரடியாகவே இயேசுவிடம் கூறுகிறார். நான்கு நாட்கள் ஆகிவிட்டன. நாற்றம் எடுக்குமே என்ற பிரச்சனை. மார்த்தா இறந்தகாலத்தில் வாழ்ந்தார். இயேசு அவரை நிகழ்காலத்திற்கு, எதிர்காலத்திற்கு அழைத்தார். இறந்தகாலம் அழிந்து, அழுகி, நாற்றம் எடுக்கும். அங்கேயே இருப்பது நல்லதல்ல. அந்த இறந்தகாலத்தை மூடியிருப்பது பெரும் கல்லானாலும், மலையே ஆனாலும், அதை அகற்றி, அடுத்த அடி எடுத்துவைக்க இயேசு அழைக்கிறார்.
இயேசு கொடுத்த இரண்டாவது கட்டளை இலாசருக்கு: "இலாசரே, வெளியே வா." இறந்த பிணமாய், கட்டுண்டு கிடந்த இலாசர் இயேசுவின் குரல் கேட்டு, கட்டுகளோடு வெளியே வந்தார். எல்லாம் முடிந்துவிட்டது, அழிந்துவிட்டது என்று புதைக்கப்பட்டுள்ள நம் கனவுகளும் கடவுளின் குரல் கேட்டால் மீண்டும் உயிர் பெறும். இறைவனின் குரல் கேட்டும் கல்லறைகளில் தங்களையே மூடிக்கொள்ளும் பலரை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கலாம்.
முன்னொரு காலத்தில் வாழ்ந்த ஓர் அரசனைப் பற்றிய ஒரு கதை இது. கொஞ்சம் அருவருப்பூட்டும் கதை என்றாலும், சொல்லியாக வேண்டும். ஏனெனில் இங்கு ஒரு நல்ல பாடம் நமக்குக் காத்திருக்கிறது. இந்த அரசன் பல பயங்கரமான சித்திரவதைகளைக் கண்டுபிடித்து, அவற்றை மக்கள்மேல் திணித்தவன். அந்தச் சித்ரவதைகளில் ஒன்று இது: மரண தண்டனை பெற்ற குற்றவாளியை ஒரு பிணத்தோடு கட்டிவிடுவார்கள். அதுவும் முகத்துக்கு நேர் முகம் வைத்து, குற்றவாளியையும், பிணத்தையும் சிறிதும் அசையமுடியாத வண்ணம் கட்டி, ஒரு இருண்ட குகையில் தள்ளிவிடுவார்கள். குற்றவாளி அந்த பிணத்தோடு தன் எஞ்சிய வாழ்நாட்களைக் கழிக்கவேண்டும்... இதற்கு மேல் இந்த தண்டனையை நான் விவரிக்க விரும்பவில்லை.
அருவருப்பூட்டும் இந்தச் சித்ரவதையை நம்மில் பலர் நமக்கேத் தேர்ந்தெடுக்கிறோம். இறந்த காலம், பழைய காயங்கள் என்ற பிணங்களைச் சுமந்து வாழும் எத்தனை பேரை நாம் அறிவோம்? அல்லது, எத்தனை முறை இறந்தகாலம் என்ற பிணத்துடன், இருளில் நாம் வாழ்ந்திருக்கிறோம்? நாமாகவே நமக்கு விதித்துக்கொண்ட இந்தச் சித்திரவதைகளிலிருந்து, இந்த இருளான கல்லறைகளிலிருந்து மீண்டும் வெளிவர தவக்காலமும், இன்றைய நற்செய்தியும் நமக்கு அழைப்புவிடுக்கின்றன. நமது கல்லறைகளிலிருந்து வெளியேறுவோம்.
வெளியே வரும் இலாசரைக் கண்டதும், இயேசு மீண்டும் மக்களுக்குத் தரும் மூன்றாவது கட்டளை: "கட்டுகளை அவிழ்த்து அவனைப் போக விடுங்கள்." உயிர் பெற்று வந்துள்ள இலாசரால் தன் கட்டுகளைத் தானே அவிழ்த்துக்கொள்ள முடியாது. அந்த நல்ல காரியத்தை அவரைச் சுற்றி இருப்பவர்களே செய்யமுடியும். நடை பிணங்களாக வாழும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். ஒருவேளை, அந்நிலையில் நாமும் அவ்வப்போது இருந்திருக்கிறோம். இந்த நடை பிணங்களைக் கட்டியிருக்கும் கட்டுகளை அவிழ்க்க இறைவன் நமக்கு கட்டளைகள் இடுகிறார்.
இறந்தகாலக் காயங்களைச் சுமந்து இறந்து கொண்டிருக்கும் நம்மைக் கல்லறைகளிலிருந்து இறைவன் வெளிக்கொணர வேண்டும் என்று மன்றாடுவோம். கல்லறைகளை விட்டு வெளியேறும் பலரது கட்டுகளை அவிழ்த்து, அவர்களை விடுவிக்கும் பணியில் இன்னும் ஆர்வமாய் ஈடுபடவும் இறையருளை இறைஞ்சுவோம்.
“உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே”
இறந்தபின் வாழ்வேனா?
இயேசு கிறிஸ்து வாழ்ந்ததற்கு ஏறக்குறைய நாநூறு ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்தவர் சாக்ரடீஸ். கிரேக்க நாட்டைச் சேர்ந்த இவர், “கற்பிக்கப்பட்ட எதையுமே ஏற்றுக்கொள்ளக் கூடாது; அறிவினால் சீர்தூக்கிப் பார்த்து, ஏற்புடையதாக இருப்பதை மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும்”, “எல்லாவற்றையும் கேள்வி கேளுங்கள்” என்று சொல்லி, இளைஞர்களைத் திசை திருப்புகின்றார் என்று ஆட்சியாளர்களால் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் தள்ளப்பட்டு, ஹெம்லாக் என்ற விஷம் கொடுக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
இவர் இறப்பதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பாக இவரது நண்பர் கிரிட்டோ இவரிடம், “நீங்கள் இறந்த பின் வாழ்வீர்களா?” என்றொரு கேள்வியைக் கேட்டார். அதற்கு இவர், “அது எனக்குத் தெரியாதே!” என்று வருத்தத்தோடு சொன்னார்.
உலகின் முதல் அறிஞராகக் கருதப்பட்ட சாக்ரடீசிற்குத் தாம் இறந்தபின் வாழ்வோமா? என்று தெரியவில்லை; ஆனால், தவக் காலத்தின் ஐந்தாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, உயிர்த்தெழுதலும் வாழவுமான இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து வாழும் ஒருவர் இறப்பினும் வாழ்வார் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
உயிர் பெற்ற இஸ்ரயேல் மக்கள்!
“நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது” (விப 20: 2,3) என்று கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிட்டிருந்தார். தங்களை அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து விடுவித்து, பாலும் தேனும் பொழியும் வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டில் குடியமர்த்திய கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து இஸ்ரயேல் மக்கள் அவருக்கு உண்மையாய் இருந்திருக்க வேண்டும். அவர்களோ கடவுளை மறந்து, வேற்று தெய்வங்களை வழிபட்டதால் வட நாட்டவர் அசீரியர்களாலும், தென் நாட்டவர் அதாவது, யூதா நாட்டினர் பாபிலோனியர்களாலும் நாடு கடத்தப்பட்டார்கள். இதனால் மக்கள், ஆண்டவர் தங்களைக் கைநெகிழ்ந்து விட்டதாகவும், அவர் தங்களை மறந்துவிட்டார் (எசா 49: 14) என்று நினைத்து அழுது புலம்பினார்கள்.
இந்நிலையில், ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் எசேக்கியேலிடம், நான் மக்களின் கல்லறையைத் திறந்து, அவர்களை வெளியே கொண்டு வருவேன் என்றும், மக்கள்மீது என் ஆவியைப் பொழிவேன்; அவர்களும் உயிர் பெறுவார்கள் என்றும் கூறுகின்றார். அதை இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம். ஆண்டவராகிய கடவுள் எசேக்கியேலிடம் கூறிய இவ்வார்த்தைகள், நாடு கடத்தப்பட்டு அன்னிய மண்ணில் அடிமைகளாய் இருந்த யூதா நாட்டினர் அவர்களின் சொந்த நாட்டிற்குக் கூட்டி வரப்படுவர் என்ற பின்னணியில் இருந்தாலும், ஆண்டவர் இயேசு வருகையினால் தூய ஆவியாரைப் பெற்றுக் கொள்ளும் அவர்கள் உயிர் பெறுவார்கள் என்ற சிந்தனையைத் தருகின்றது. இது இன்றைய நாளில் நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 130 இல் சொல்லப்படுவதுபோல, “ஆண்டவரிடமே பேரன்பும் மீட்பும் உள்ளது” என்ற கருத்தினை உறுதி செய்வதாய் இருக்கின்றது.
உயிர்பெற்ற இலாசர்!
நற்செய்தி நூல்களில், இயேசு நயின் நகர்க் கைம்பெண்ணின் மகன், தொழுகைக் கூடத் தலைவர் யாயிரின் மகள், தன் நண்பர் இலாசர் ஆகிய மூவரை உயிர்த்தெழச் செய்ததைப் பற்றி வாசிக்கின்றோம். இதில் சிறப்பு என்னவெனில், நயின் நகர்க் கைம்பெண்ணின் மகனையும், தொழுகைக்கூடத் தலைவரான யாயிரின் மகனையும் அவர்கள் இறந்த நாளிலேயே இயேசு உயிர்த்தெழச் செய்திருப்பார். இலாசரைப் பொறுத்தவரையில், இயேசு அவரை நான்காம் நாளில்தான் உயிர்த்தெழச் செய்கின்றார். இதன்மூலம் அவர் தான் இறைமகன் எனவும், தான் உயிர்த்தெழுதலும் வாழ்வும் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கின்றார்.
ஏற்கெனவே யூதர்கள் இயேசுவைக் கொல்ல முயன்றிருந்தார்கள் (யோவா 8: 59; 10: 31) அப்படியிருந்தும், அவர் இலாசர் இருந்த பெத்தானியாவிற்குச் சென்றதற்குக் காரணம், தந்தைக் கடவுளின் திருவுளத்தின்படி, தான் மாட்சியுறவும், சீடர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தவும்தான். இதனை இயேசு கடவுளை நோக்கி எழுப்புகின்ற, “தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கின்றீர் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும் பொருட்டே இப்படிச் சொன்னேன்” என்ற இறைவேண்டல் மூலமாக அறிந்துகொள்ளலாம்.
இயேசு இவ்வாறு கடவுளிடம் வேண்டிவிட்டு, இறந்து நான்கு நாள்களான, அதே நேரத்தில் கைகளிலும் கால்களிலும் முகத்திலும் துணி சுற்றப்பட்டிருந்த இலாசரை உயிர்த்தெழச் செய்தபிறகு, யூதர் பலர் அவர்மீது நம்பிக்கை கொள்கின்றார்கள். இயேசுவிடம் நம்பிக்கை கொள்வது இன்றியமையாதது. ஏனெனில், அவரிடமே வாழ்வு உள்ளது.
நாம் உயிர்பெற என்ன செய்வது?
இறந்தவர்களைப் போன்று இருந்த இஸ்ரயேல் மக்களும், இறந்த இலாசரும் உயிர்பெற்றார்கள். இவர்களைப் போன்று நாமும் உயிர்பெற என்ன செய்ய வேண்டும் என்பதை இன்றைய இரண்டாம் வாசகம் நமக்குத் தெளிவுபடுத்துகின்றது.
யோவான் நற்செய்தியில் இயேசு கிறிஸ்து சொல்வது போல, “பாவம் செய்யும் அனைவரும் பாவத்திற்கு அடிமை” (யோவா 8: 34). பாவத்திற்கு அடிமையாய் இருப்போர் ஊனியல்பின்படி நடந்தவர்கள், நடப்பவர்கள் என்று சொல்லலாம். இத்தகையோர் கடவுளுக்கு உகந்தவர்களாக இருக்க முடியாது என்பது உண்மை. இதற்கு மாறாக, எவர் ஒருவர் தன்னிடம் உள்ள ஊனியல்பை விட்டுவிட்டு, ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருக்கின்றாரோ, அவரே கடவுளுக்கு ஏற்புடையவர் ஆக்கப்படுவார்; உயிர்பெற்றவராகவும் திகழ்வார்.
இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 130. திருப்பாடல்களில் வரும் ஆறாவது பாவ மன்னிப்புப் பாடலாகும். (மற்றவை 6, 32, 38, 51, 102, 143). பாவம் செய்த மக்கள் தங்கள் பாவத்தினை உணர்ந்தவர்களாய், “ஆண்டவரே, நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்? நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர்” என்று பாடிவிட்டு, இறுதியில், “பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது. மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு” என்று பாடுகின்றார்கள்.
மனித பலவீனத்தால் நாம் ஊனியல்பின்படி நடந்து, இறந்தவர்களைப் போன்று இருந்தாலும், ஆண்டவரின் பேரன்பிலும் இரக்கத்திலும் நம்பிக்கை வைத்து, ஆவிக்குரிய இயல்புகளின் வாழ்ந்தால் நாம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாவும் உயிர்த்தெழுந்த மக்களாகவும் இருக்கலாம். எனவே, நாம் ஊனியல்பை விட்டுவிட்டு, ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்ந்து, நிலைவாழ்வைப் பெறுவோம்.
சிந்தனைக்கு
“மனித வாழ்க்கையின் இலட்சியம் இறப்பு அல்ல, மாறாக, உயிர்த்தெழுதல்” என்பார் இறையியலார். ஆதலால், நாம் நமது வாழ்வின் இலட்சியமான உயித்தெழுதலை அடைய, நம்மிடம் இருக்கும் ஊனியல்பை விட்டுவிட்டு, ஆவிக்குரிய இயல்புகளான நம்பிக்கையும் அன்பையும் இரக்கத்தையும் அணிந்துகொண்டு வாழ்வோம். அதன் வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
நீர் இங்கே இருந்திருந்தால்!
இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டபோது இறைவாக்கினர் எசேக்கியேலும் அவர்களோடு பயணம் செய்தார். எல்லாவற்றையும் இழந்த மக்களுடைய உள்ளத்தில் நம்பிக்கை ஒளியை அணையாமல் தக்கவைப்பதும், தங்கள் கண்முன்னாலேயே எருசலேம் ஆலயம் இடிக்கப்பட்டதைக் கண்டு, இருளிலும் குளிரிலும் பயணம் செய்து, முன்பின் தெரியாத ஓரிடத்தில் அடிமைகளாக இருந்த மக்களுக்கு உற்சாகம் கொடுப்பதும் அவருடைய பணியாக இருந்தது. ஒவ்வொரு நாளும் உடலளவிலும் ஆன்ம அளவிலும் மக்கள் இறந்துகொண்டே இருந்த மக்களுக்கு புதிய இறைநம்பிக்கை ஊட்டுகின்றார். முதலில், அவர்கள் தங்கள் 'கண்டுகொள்ளாத்தன்மையாலும் சிலைவழிபாட்டாலும் சினமூட்டிய நாளில் கடவுளுக்குச் அவர்களுக்கும் கடவுளுக்கும் இடையே இருந்த உறவு அறுந்தது என்கிறார் எசேக்கியேல். ஆனால், அந்த வலி முடிவன்று. 'நான் உங்களை வேற்றினத்தாரிடமிருந்து அழைத்து, பல நாடுகளிடையே கூட்டிச்சேர்த்து, உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பக் கொணர்வேன்' (எசே 36:24) என உரைக்கிறார் ஆண்டவர்.
பாபிலோனிய அடிமைத்தனத்தை கல்லறைக்கு ஒப்பிடுகிறார் எசேக்கியேல். ஆனால், கல்லறை திறக்கப்பட்டு மக்கள் கடவுளின் உயிரைப் பெற்றவர்களாய் மீண்டும் நாடு திரும்புவார்கள். இந்த உருவகம் படைப்பின் தொடக்கத்தில் மண்ணிலிருந்து கடவுள் மனிதரை உருவாக்கி தன்னுடைய உயிரை அவர்கள்மேல் ஊதியதை நினைவுபடுத்துகிறது (காண். தொநூ 2:7). படைப்பின் தொடக்கத்தில் முதற்பெற்றோர் கடவுளை தங்களுக்கு உயிரளிப்பவராக, நண்பராகப் பார்த்தது போல, இஸ்ரயேல் மக்களும் கடவுளை அறிந்துகொள்வார்கள். அவர்களுடைய கடவுள் அவர்களை இறப்பிற்குக் கையளிக்கமாட்டார். இதையே ஆண்டவர், ‘என் 'மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக்கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள்' (காண். எசே 37:13) என உரைக்கிறார்.
இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 8:8- 11) புனித பவுல், உரோமையருக்கு எழுதுகின்ற திருமடலில், இரண்டு வகையான வாழ்க்கை நிலைகளுக்கு - 'ஊனியல்பு வாழ்வு' 'ஆவியில்' வாழ்வு' இடையே இருக்கின்ற முரண்களைப் பதிவுசெய்கின்றார். ஊனியல்பு வாழ்வு இறப்பு நோக்கி ஒருவரை இட்டுச்செல்கிறது. ஆவியில் வாழ்வு அவருக்கு நிலைவாழ்வு தருகிறது. ஆவியின் இருப்புதான் அவசியம். ஆவியார் குடிகொள்ளும்போது ஒவ்வொருவரும் கடவுளின் இல்லிடமாக மாறுகின்றார் (காண். 1 கொரி 3:16). ஆவியைக் கொண்டிருப்பவர்கள் *இயேசுவை இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழச்செய்த ஆவியையே கொண்டிருப்பதால்' அவர்கள் நிலைவாழ்வைக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில், அவர்கள் இறந்தாலும் அந்த ஆவியார் அவர்களை உயிர்ப்பிப்பார். ஆக, அழிவுக்குரிய உடலை அழியா வாழ்வாக மாற்றுவது இறைவனின் ஆவி.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 11:1-45) நாம் வாசிக்கும் இலாசர் உயிர் பெறுதல் நிகழ்வுதான் யோவான் நற்செய்தியில் இயேசு நிகழ்த்தும் ஏழாவதும் இறுதியுமான அறிகுறி. முதல் அறிகுறியை அவர் கானாவில் நிகழ்த்தியபோது அவர் தன்னுடைய மாட்சியை வெளிப்படுத்தினார். சீடர்கள் அவர்மேல் நம்பிக்கை கொண்டனர் (காண். யோவா 2:11). இந்த இறுதி அறிகுறி நிகழ்விலும், 'கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான்' (காண். யோவா 11:4) என்றும், 'நீ நம்பினால் கடவுளின் மாட்சியைக் காண்பாய் என நான் உன்னிடம் கூறவில்லையா?' (காண். யோவா 11:40) என்றும் இயேசு சொல்கின்ற வார்த்தைகள், இங்கேயும் கடவுளின் மாட்சி வெளிப்படப்பாகிறது என்பதையும், பலர் அவர்மேல் நம்பிக்கை கொள்வர் (காண் யோவா 11:45) என்பதையும் காட்டுகின்றன. கடவுளின் மாட்சியை அறிதல் என்பது அவருடைய இருப்பையும் செயல்பாட்டையும் கண்களால் கண்டுணர்வது - விடுதலைப் பயண நிகழ்வில் ஒளிரும் மேகத்தையும் எரியும் நெருப்புத்தூணையும் காண்பது போல... (காண். விப 14-15).
ஒத்தமைவு நற்செய்திகள் (மத்தேயு, மாற்கு, லூக்கா) இயேசு இறந்தவர்களுக்கு உயிர். கொடுப்பதை பதிவு செய்திருந்தாலும், இலாசர் உயிர் பெறுதலை அவர்கள் பதிவு செய்யவில்லை. அதற்கு எதிர்மாறாக, யோவான் இலாசர் உயிர்ப்பை மட்டும் பதிவு செய்கிறார். மேலும், யோவான் மற்ற அற்புத நிகழ்வுகளைப் பதியும்போதெல்லாம், “பிரச்சனை-தீர்வு-போதனை' என பதிவு செய்கிறார். எ.கா. பிறவியிலேயே பார்வை அற்றவர் பார்வை பெறுதல். ஆனால், இங்கே, 'போதனை-பிரச்சனை- தீர்வு' என தலைகீழாக இருக்கின்றது. இறந்தவர் உயிர்பெற்றவுடன் நிகழ்வை முடித்துவிடுகிறார். யோவான். உயிர்ப்பு, நம்பிக்கை, இறப்பு, யூதர்கள், இயேசுவின் கருணை என நிறைய இறையியல் கருத்துகள் ஒன்றோடொன்று பின்னிக்கிடக்கின்றன.
இலாசரின் இறப்பு நிகழ்வில் லாசர் மட்டுமல்ல, இயேசுவைத் தவிர எல்லாக் கதைமாந்தர்களுமே கல்லறைக்குள்தான் இருக்கின்றனர்:
- சீடர்கள் இயேசுவை முழுமையாக புரிந்துகொள்ளவில்லை. இயேசுவை அவர்கள் புரிந்துகொள்ளும்போதெல்லாம் அதில் ஓர் அரைகுறைத்தனமும், அவசரமும் தெரிகிறது. அரைகுறைத்தனம் அவர்களின் கல்லறை.
- யூதர்கள் இயேசுவை நம்பவே இல்லை. நம்பிக்கையின்மை அவர்களின் கல்லறை.
- மார்த்தா இயேசுவை பாதி நம்புகிறார். 'ஆண்டவரே, நீர் இங்கு இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்' என்கிறார். ஆனால், கல்லறைக்கு அருகில் இயேசு சென்றபோது, 'ஐயோ, நாற்றம் அடிக்குமே' என அவரைத் தடுக்கின்றார். பாதி நம்பிக்கை அவரின் கல்லறை.
- மரியா இயேசுவை நம்பினாலும், அவர் இன்னும் அழுது முடித்தபாடில்லை. தன் சகோதரனின் இழப்பு தந்த வெற்றிடத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த வெற்றிடத்தைக் கண்ணீர் வடித்து மூடிவிட நினைக்கின்றார். அழுகை அவரின் கல்லறை.
- இலாசர் இறந்துவிட்டார். இறப்பு அவரின் கல்லறை. மற்றும்
- 'இயேசு யார்?' - இந்த அறியாமைதான் வாசகர் ஒவ்வொருவரின் கல்லறை.
இந்தக் கல்லறைகளிலிருந்து அனைவரும் விடுவிக்கப்படுவார்களா?
முதலில், இந்த நிகழ்வின் ஒரு சில சொல்லாடல்களைப் புரிந்துகொள்வோம்:
1.பெத்தானியா
நாசரேத்துக்குப் பின் இயேசு தனது இரண்டாம் இல்லமாக நினைத்தது பெத்தானியாவைத்தான். நான் புனித நாடுகளுக்குச் சென்ற போது, உண்மையாகவே இயேசு இங்கு இருந்த இடம் என நான் என் உள்ளுணர்வில் உணர்ந்தது பெத்தானியா மட்டும்தான். 10க்கு 10 பழமையான வீடு. அந்த இல்லத்திற்குள் சென்றவுடன், 'நானும் இங்கு இருந்திருக்கிறேன்' என்ற உணர்வை அந்த வீடு தருகிறது. இயேசுவும், லாசர், மார்த்தா, மரியாவும் பேசியதை, சிரித்ததை இந்தச் சுவர்கள் கண்டிப்பாகஉள்வாங்கி இருக்கும். இந்தச் சுவர்களின்மேல் காதுகளை வைத்துக் கேட்டால் நாமும் அதை உணரலாம். ‘நீங்க எப்படி பிறந்தீங்க? இடையர்கள், ஞானியர் எத்தனை பேர்? எகிப்துக்கு ஏன் ஓடிப்போனீங்க? அங்க இருந்த எப்ப வந்தீங்க? கோவிலில் ஏன் காணாமல் போனீர்கள்? அது என்ன? இது என்ன?' என இரண்டு சகோதரிகளும் இயேசுவை கேள்விகள் கேட்டு துளைத்திருப்பார்கள். இலாசர் அப்போது மௌனமாகத்தான் இருந்திருக்க வேண்டும். இந்தப் பிள்ளைகளின் பெற்றோர் ஒருவேளை இவர்கள் பிறந்த சில ஆண்டுகளில் இறந்திருக்க, இவர்கள் மூவரும் துணைக்குத் துணையாக வளர்ந்திருக்கலாம். இப்படி இயேசு அன்பு கொண்டிருந்த ஓர் இடத்தில் இழப்பு வந்துவிடுகிறது. இலாசர் இறந்துவிடுகிறார். இனி இயேசு இந்த இல்லத்திற்குள் வந்தால் அவரை வரவேற்கும் மூன்று உயிர்களில், ஒரு உயிர் மறைந்துவிடுகிறது.
'உன் நண்பன் நோயுற்றிருக்கிறான்" என்று இயேசுவுக்கு தூதர்களை அனுப்புகின்றனர் மார்த்தாவும் மரியாவும், தூது அனுப்பும் அளவிற்கு இருக்கிறார்கள் என்றால், ஓரளவு பணக்காரர்களாகத்தான் இருந்திருக்க வேண்டும். அல்லது ஏழைகளாக இருந்து எப்பாடுபட்டாவது இயேசுவுக்கு செய்தி அனுப்பி இருக்க வேண்டும். செய்தி கேட்டவுடன் இயேசு புறப்படவில்லை. 'இந்த நோய் இறப்பில் போய் முடியாது. என்று சொல்லிவிட்டு இலாசர் இறக்கும்வரை காத்திருக்கின்றார். கானாவில் இரசம் தீர்ந்தபோதும் இயேசு இப்படித்தான் தள்ளிப்போடுகின்றார்.
2. தூக்கம்
‘இலாசர் இறந்துவிட்டதை,' ‘இலாசர் தூங்குகிறார்' எனச் சொல்கிறார் இயேசு (காண். மத் 27:52, 1 கொரி 7:39, 11:30, 15:6, 1 தெச 4:13- 15). 'இறப்பை' தூக்கத்திற்கு உருவகிப்பது மற்ற இலக்கியங்களிலும் காண்கிறோம். 'உறங்குவது போலும் சாக்காடு' என்கிறார் வள்ளுவர் (குறள் 339). ‘தூக்கம் என்பது குறுகிய சாவு. சாவு என்பது நீண்ட தூக்கம்' என்கிறார் ஷேக்ஸ்பியர். இயேசு சொல்வதை அப்படியே எடுத்துக்கொள்கின்றனர் சீடர்கள். ஆகையால்தான், 'ஆண்டவரே, அவர் தூங்கினால் நலமடைவார்' என்று பதில் சொல்கின்றனர்.
3. என்னை நம்புவதற்கு இது ஒரு வாய்ப்பு
பிறவியிலேயே பார்வை அற்றவர் பார்வை பெறும் நிகழ்விலும், 'இவர் இப்படி பிறந்தது கடவுளின் மாட்சி வெளிப்படவே' (யோவா 9:3) என்கிறார் இயேசு. தான் கையாளவேண்டிய இழப்பு என்னும் எதிர்மறை நிகழ்வை ஒரு பிரச்சனையாகப் பார்க்காமல், ஒரு வாய்ப்பாகப் பார்க்கிறார் இயேசு. இலாசர் உயிர்பெறும் நிகழ்வின் இறுதியில், "மரியாவிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரை நம்பினர்' எனப் பதிவு செய்கிறார் யோவான். ஆக, கடவுளின் மாட்சி வெளிப்படுகிறது. அந்த வெளிப்படுத்துதலுக்கு மனிதர்கள் தரும் பதில்தான் நம்பிக்கை.
4. கல்லறையில் வைத்து நான்கு நாள்கள்
இலாசர் இறந்து கல்லறையில் வைத்து நான்கு நாள்கள் ஆயிற்று என்பது இரண்டு இடங்களில் (11:17, 39) பதிவு செய்யப்படுகிறது. யூதர்களின் நம்பிக்கை என்னவென்றால், ஒருவர் இறந்த பின் அவருடைய ஆன்மா மூன்று நாள்கள் கல்லறையைச் சுற்றி வரும். நான்காம் நாளில் இறந்தவரின் முகம் மாற ஆரம்பிக்கும்போது அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் வேறு எங்காவது சென்றுவிடும். ஆக, 'நான்காம் நாள்' என்பது இலாசரின் ஆன்மா அங்கு இல்லை என்பதை உருவகப்படுத்துகிறது. மேலும், ஒன்றுமில்லாமையில் தான் இயேசுவின் அற்புதம் நிகழ்கிறது என்பதையும் இங்கே யோவான் உள்ளிடுகிறார். மார்த்தா இயேசுவிடம், 'நான்கு நாள் ஆயிற்றே. நாற்றம் அடிக்குமே' என்கிறார். இயேசுவின் சமகாலத்தில் எகிப்தியர்கள் மட்டுமே இறந்த உடலை அதிக நாள்கள் பத்திரப்படுத்தும் வகை அறிந்திருந்தனர். யூதர்கள் வெறும் நறுமணத் தைலத்தை மட்டுமே பயன்படுத்தக் கற்றிருந்தனர். அவர்கள் இறந்தவர்களின் உடலில் பயன்படுத்தும் வாசனை திரவியங்களின் நறுமணம் மூன்று நாள்கள் மட்டுமே தாங்கக்கூடியவை. நான்காம் நாளிலிருந்து உடல் வெளிப்படுத்தும் கெட்ட நாற்றத்திற்கு அவைகளால் ஈடுகொடுக்க முடியாது.
5. இறுதிநாள் உயிர்த்தெழுதலின்போது அவனும் உயிர்த்தெழுவான்.
தானியேல் 12:2 காலத்திலிருந்தே இறந்தவர் உயிர்ப்பு,' 'இறுதிநாள்' போன்ற புரிதல்கள் யூதர்கள் நடுவில் இருந்தன (காண். திப 23:6-8, மாற் 12:18-27). மார்த்தாவும் இதே புரிதலைக் கொண்டிருக்கிறார். அந்த நாளில் எல்லாரும் உயிர்ப்பதுபோல இலாசரும் உயிர்ப்பார் என்று நம்பிக்கை கொண்டிருக்கின்றார். 'ஆண்டவரே. நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்கமாட்டான்' என்று மார்த்தா அளவற்ற நம்பிக்கை கொண்டிருந்தாலும், 'இறந்தவரை இயேசு என்ன செய்ய முடியும்?' என்ற சந்தேகமும் கொண்டிருக்கின்றார்.
6. மரியா அவர் காலில் விழுந்து
மார்த்தா இயேசுவைத் தேடி ஓடியதுபோல மரியா ஓடவில்லை. பாவம் குழந்தை! இன்னும் அழுது முடிக்கவில்லை. மார்த்தா இதற்கிடையில், ‘ஆம் ஆண்டவரே, நீரே மெசியா, நீரே இறைமகன், நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்' என நம்பிக்கை அறிக்கை செய்கின்றார். ஆனால், மரியாவோ எதுவும் பேசாமல் அதே நம்பிக்கை அறிக்கையை ஒரே ஒரு செயலால் செய்துவிடுகின்றார்: 'இயேசுவின் காலில் அவர் விழுகின்றார்.'
7. வந்து பாரும்
அவனை எங்கே வைத்தீர்கள்?' என்ற கேள்விக்கு, 'வந்து பாரும்' என்கின்றனர் மார்த்தாவும், மரியாவும். தன் முதற்சீடர்களிடம், 'வந்து பாரும்' என்று இயேசு சொன்னது இங்கே இயேசுவுக்கே சொல்லப்படுகிறது. 'வந்து பாரும்' என்பதை நாம் பல அர்த்தங்களில் எடுத்துக்கொள்ளலாம்: 'வந்து பாரும் உன் நண்பனை,' 'வந்து பாரும் எம் சகோதரனை,' ‘வந்து பாரும் கல்லறையை,' 'வந்து பாரும் மனுக்குலத்தின் காயத்தை,' 'வந்து பாரும் எங்கள் கண்ணீரை:' வானத்திலிருந்து இறங்கி நம்மை 'வந்து பார்த்தவருக்கு, கல்லறைக்கு 'வந்து பார்ப்பது' ஒன்றும் பெரிதல்லவே. ஆகையால், வேகமாக உடன் செல்கின்றார்.
8.இயேசு கண்ணீர்விட்டு அழுதார்
கிரேக்க பதம் உள்ளபடியே மொழிபெயர்க்கப்பட்டால், 'இயேசு கோபப்பட்டார் அல்லது நொந்துகொண்டார்' என்றுதான் இருக்க வேண்டும். 'கண்ணீர்விட்டு அழுதார்' என்பது அவரின் உணர்வை ரொமான்டிசைஸ் பண்ணுவதுபோல இருக்கிறது. இறப்பு வரும்போது கண்ணீர் வருவது இயல்பு. ஆனால் சில நேரங்களில் நமக்கு கோபம் வரும். வழக்கமாக நமக்கு கடவுளின்மேல் தான் கோபம் வரும். இங்கே இயேசுவுக்கு இறப்பின் மேலும், பாவத்தின் மேலும், தன்னை நம்பாத மனிதர்கள் மேலும் கோபம் வருகிறது.
9. அது ஒரு குகை
பெத்தானியாவிற்கு திருப்பயணம் செல்பவர்களை இலாசர் கல்லறைக்கும் அழைத்துச் செல்வார்கள். பெரிய கிணறு போல இருக்கும் இந்த இடம். இதனுள்ளே இறங்கிச் செல்லலாம். இவ்வளவு ஆழத்தில் வைத்துவிட்டு மேலே ஒரு கல்லைப் புரட்டி வைத்திருப்பார்கள். இவ்வளவு ஆழத்திலிருந்து இலாசர் எப்படி மேலே வந்தார் என்பதும், அவருடைய கால்களும், கைகளும் கட்டப்பட்டிருந்தாலும் அவர் எப்படி மேலே வந்தார் என்பதும் இயற்பியல் விதிக்கு மாறாக இருக்கின்றன. ஆனால், இதுவே அற்புதம். 'கல்லை அகற்றியது' மனிதர்கள்தாம் என்றாலும், இலாசரை. வெளியே கொண்டுவந்தவர் கடவுளே.
இந்நிகழ்வை இன்று நாம் எப்படி நம் வாழ்வோடு பொருத்திப்பார்ப்பது?
1. இறப்பு என்னும் எதார்த்தம்
அழுகை, கண்ணீர், சோகம், இறப்பு இல்லாத உலகத்தைக் கற்பனை செய்து பார்ப்பது என்பது மனித இயல்புக்கே முரணானது. மனித இயல்பு தன்னிலேயே குறைகளைக் கொண்டது. இங்கே அழுகை, அழுகல், கண்ணீர், கசப்பு, கருணை எல்லாம் சேர்ந்து இருக்கும். இவற்றில் ஒன்றை மற்றொன்றிலிருந்து பிரித்துப் பார்ப்பது தவறு. உயிர்ப்பு மட்டும்தான் மேன்மை என நினைக்கக்கூடாது. ஏனெனில் இலாசரின் உயிர்ப்பு அவரின் கொலைக்கு வித்திடுகிறது. ஏனெனில், ‘தலைமைக் குருக்கள் இலாசரையும் (இயேசுவோடு சேர்த்துக்) கொன்றுவிட திட்டமிடுகிறார்கள்" (12:10). ஆக,இயேசு இலாசருக்கு உயிர் தந்தாரே ஒழிய, அழியா வாழ்வைத் தரவில்லை. யாயிரின் மகள், இலாசர், நயீன் நகரத்து இளைஞன் இவர்கள் மூவரும் வாழ்க்கையை இரண்டாம் முறை வாழ (ரெசுசிடேஷன்) வாய்ப்பு பெற்றார்களே தவிர, அழியா வாழ்வை (ரெசுரெக்ஷன்) பெறவில்லை. மேலும், இன்று இறப்பே இல்லாத மனிதர்களை உருவாக்க அறிவியல் முயற்சி செய்தாலும், விபத்து, வன்முறை போன்றவற்றால் மனிதர்களின் உயிர் போகும் ஆபத்து உள்ளது என்பதை அறிவியல் ஏற்றுக்கொள்கிறது. ஆக, நாம் நம் அன்றாட இறப்பை ஒவ்வொரு நாளும் நாம் இறந்துகொண்டே இருக்கிறோம். நம் உடலின் செல்கள் இறந்து கொண்டே இருக்கின்றன - சாதாரண எதார்த்தமாக எடுத்துக்கொள்வதே சால்பு. 'எனக்கு கல்லறையே கிடையாது' என மறுப்பதை விட அல்லது மறுதலிப்பதை விட, 'என் வாழ்வின் கல்லறை 'இதுதான்' என நம் அன்றாட இறப்புகளையும், இறுதி இறப்பையும் ஏற்றுக்கொள்வதே ஞானம்.
2.உடனிருப்பு
இயேசு பெத்தானியாவிலிருந்து தூரத்தில் இருக்கிறார். பெத்தானியாவுக்கு வருகிறார். பின் ஊரின் நடுவில் நிற்கின்றார். பின் கல்லறைக்கு அருகில் 'வருகின்றார். ஆக, இவ்வாறாக இயேசுவின் நெருக்கம் கூடிக்கொண்டே வருகின்றது. ஆக, நம் வாழ்வின் கல்லறைக்கு வெகுதூரத்தில் அவர் நிற்பது போல தோன்றலாம். அல்லது சில நேரங்களில் நம் அருகில் வருவதற்கு அவரே காலம் தாழ்த்தலாம். ஆனால், கண்டிப்பாக அவர் வருவார். நம் கல்லறைகள் நாற்றம் அடித்தாலும் அவர் துணிந்து அங்கே நிற்பார்.
3.வாழ்வைப் பற்றிய புரிதல்
முதலில், கடவுளே உயிரின் உரிமையாளர், அவரே வாழ்வின் சொந்தக்காரர். நாமெல்லாம் அவரிடம் அதை இரவல் வாங்கியிருக்கிறோம். இரவல் கொடுத்தவன் அதை ஒருநாள் நிச்சயம் கேட்பான். அவன் கேட்கும்போது அதை நாம் தர மறுத்தல் அநீதி, இரண்டாவதாக, வாழ்க்கை ஒரு வட்டம், சுழற்சி. நம்முடைய முன்னோர் விட்டுச்சென்ற பண்பாடு, மொழி, நாகரீகம் ஆகியவற்றை நாம் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டும். நாம் வந்த இடத்திற்கே திரும்ப வேண்டும் என்பது தான் வாழ்வின் நியதி, மூன்றாவதாக, வாழ்க்கை அல்லது உயிர் என்பது குழும அனுபவம். ஒருவர் மற்றவரோடு நாம் கொண்டுள்ள இனிய உறவிலும், கடவுளோடு உள்ள உறவிலும், நம்முடைய இறந்த முன்னோர்களோடு கொண்டுள்ள உறவிலும், நாம் பிறந்த இந்த மண்ணின்மேல் கொண்ட உறவிலும்தான் அதைக் கண்டுணர முடியும். சமூக விலகலும் தனிமைப்படுத்துதலும் சிலகாலம் தான். என்னுடைய வாழ்வை நான் இனிமையாக வாழக் கற்றுக்கொண்டால் இறப்பைப் பற்றிய கவலை எனக்கு வராது.
இறுதியாக,
‘ஆண்டவரே, உம் நண்பர்கள். நலமற்றிருக்கிறார்கள்' என்ற செய்தி இன்றும் நம் ஆண்டவரின் காதுகளை எட்டுகின்றது. ஆனால், அவர் அன்றுபோல இன்றும் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார். கடவுளின் பொறுமை மனித நம்பிக்கையின் அளவுகோல். 'ஆண்டவரே இங்கு இருந்திருந்தால்' என்று புலம்புவதை விடுத்து, 'தூங்கினால் நலமடைவான்' என்பதற்கிணங்க, கொஞ்சம் தனிமையில், நம் உள்ளம் என்னும் கல்லறையில் சிறிது நாள்கள் நம்மையே அடைத்துக்கொண்டு தூங்குவோம். கல்லறைகளைத் திறக்க வல்லவர் நம் அருகில். அவரிடமே உள்ளது 'பேரன்பும் மீட்பும்' (காண். திபா 130).
இறைவன் தரும் நிலைவாழ்வு!
என் ஆடுகள் வாழ்வு பெறும்பொருட்டே நான் பூமிக்கு வந்துள்ளேன் என நம் ஆண்டவர் இயேசு யோவான் 10:10லே கூறியுள்ளார். நாம் வாழ்வதற்காகவே படைக்கப் பட்டவர்கள். அந்த வாழ்வை நிறைவாக மகிழ்வாக வாழ்ந்தால் நிலைவாழ்வுக்கு தகுதியுடையோராகலாம். நம்மைத் தகுதி படுத்துவது நம் கடவுள் மட்டுமே. ஆனால் நாமோ அதை மறந்து பல நேரங்களில் உயிரோடிருக்கும் போதே கல்லறைகளில் இறந்தவர்களாக வாழ்கிறோம். அக்கல்லறைகளைத் திறந்து உயிரற்றவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கும் நமக்கு புதிய ஆவியையும் புத்துயிரையும் நிலை வாழ்வையும் வழங்க காத்திருக்கிறார் நம் இறைவன்.
இன்றைய நற்செய்தி பகுதியில் இறந்த இலாசரை இயேசு உயிர்ப்பிக்கும் பகுதியை நாம் வாசிக்கிறோம். இலாசர் இறந்ததால் உயிரற்று இருந்தது அவருடைய உடல் மட்டுமல்ல. மாறாக அவருடைய சகோதரிகளான மார்த்தா மற்றும் மரியா இவர்களின் வாழ்வும் தான். அன்றைய யூத சமுதாயத்தில் பெண்களை இரண்டாம் பட்சமாக கருதிய நிலையில் தன் சகோதரனை இழந்த அப்பெண்களின் வாழ்வு எவ்வளவு இருண்டு போயிருக்கும் என நம்மால் உணரமுடிகிறதல்லவா.
இயேசு நான்கு படிநிலைகளில் அக்குடும்பத்திற்கு நிறைவாழ்வு அளிப்பதை நாம் காண்கிறோம்.
- *****முதலாவதாக இயேசு அவர்களுக்கு அளித்த ஆறுதல்.
- *****இரண்டாவதாக உன் சகோதரன் உயிர்த்தெழுவான் என்ற வாக்குறுதி
- *****மூன்றாவதாக கல்லறையிலிருந்து வெளிவந்த இலாசரின் கட்டுகளை அவிழ்த்து அளித்த விடுதலை
- *****நான்காவது உயிர்ற்ற இலாசர் மட்டுமல்லாது தன் சகோதரனை இழந்த ஆதரவற்ற அப்பெண்களுக்கு இயேசு அளித்த புதுவாழ்வு
இச்செயலை செய்ததன் மூலம் இயேசு செய்த மிக முக்கிய பணி என்னவெனில் தந்தையை மகிமைப்படுத்தி அவருடைய வல்லமை தன் வழியாக செயல்படுகிறது என்ற நம்பிக்கையை மார்த்தா, மரியா,தன் சீடர்கள், இச்செயலைக் கண்டவர்கள் ஆகியோருக்கு வழங்கியது.
இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து புதிய ஆவியை அளிப்பேன் என உறுதி கூறுகிறார். இரண்டாம் வாசகத்தில் கிறிஸ்து நம்முள்ளே இருந்தால் நாம் இறந்து போனாலும் கூட வாழ்பவர்களே என வாசிக்கிறோம்.
அன்புக்குரியவர்களே உயிரற்ற நிலையில் இருக்கும் நாமும் உயிர் பெற வேண்டுமா? நிலைவாழ்வு அல்லது புது வாழ்வு அடைய வேண்டுமா? நாம்செய்ய வேண்டியது இதுதான். இறைவனிடம் அல்லது இயேசுவிடம் ஆறுதலைத் தேடவேண்டும். அவருடைய வாக்குறுதியை உள்ளத்தில் இறுத்த வேண்டும். நம்மைக் சுற்றியுள்ள எல்லா தீய கட்டுகளையும் இயேசு அவிழ்க்க அனுமதிக்க வேண்டும். அவர் தரும் புதுவாழ்வை வாழ முயலவேண்டும். அனைத்திற்கும் மேலாக அவரை முழுமையாய் நம்ப வேண்டும். அவ்வாறு செய்தால் நமக்கும் நிலை வாழ்வு நிச்சயம்.
இறைவேண்டல்
வாழ்வின் ஊற்றே இறைவா! உடலிலும் உள்ளத்திலும் ஆன்மாவிலும் நாங்கள் அனுபவிக்கின்ற உயிரற்ற நிலையை நீக்கி உமது நிலைவாழ்வைத் தருவீராக. ஆமென்.
