இறைவன் இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து மோசே வழியாகத் தேனும் பாலும் பொழியும் கானான் தேசத்தில் கொண்டு வந்து சேர்த்துக் காப்பாற்ற விரும்பினார். அதற்காகச் செங்கடலை இரண்டாகப் பிளந்து வழிநடத்திக் கொண்டு வந்தார். பசியாக இருந்தவர்களுக்கு வானத்திலிருந்து மன்னாவைப் பொழிந்தார். ஆனால் குடிக்கத் தண்ணீர் கிடைக்கவில்லையே என்பதற்காக இந்த மக்கள் மோசேயுக்கு எதிராக எழுந்தனர். அவரைக் கல்லால் எறிந்து கொல்லும் அளவுக்கு மக்கள் மோசேயைக் கொடுமைப் படுத்தினார்கள். ஆனால் கடவுள் அந்த மக்களை அவர்கள் பாவத்திற்காக தண்டிக்க விரும்பவில்லை. மாறாகப் பாறையை உடைத்து தண்ணீர் வெளிப்படச் செய்து அவர்களின் தாகத்தைத் தீர்த்தார் (வி.ப. 17:6). கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை (லூக். 1:37) என்ற வானதூதர் கபிரியேலின் கூற்றுப்படி, ஒன்றும் நடக்காது என்று நினைத்த மக்கள் மத்தியில் கடவுளால் எல்லாம் கூடும் என்பதைக் கடவுள் காண்பித்தார்.
இப்படிப்பட்ட அன்பே உருவான கடவுள் ஒரு நாள் மனிதரோடு நேருக்கு நேர் மனித உருவில் பேச விரும்பினார். இதைக் குறித்துதான் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலில் (எபி. 1:1) அதன் ஆசிரியர் பற்பல முறையிலும், பல வகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாட்களில் தன் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார் என்பது நிறைவு பெறுவதை இன்றைய நற்செய்தி நன்றாகப் படம் பிடித்துக்காட்டுகிறது.
இயேசு கடவுளின் அன்பின் உருவம். கடவுள், எவரும் அழியாமல் நிலை வாழ்வு பெறும் பொருட்டுத் தன் மகனையே அளிக்கும் அளவுக்கு உலகின் மீது அன்புகூர்ந்தார் (யோவா. 3:16) என வாசிக்கிறோம். கங்கையும் காவிரியும் இணைந்தாலும் அவை கடவுளின் கருணைக்கு ஈடாகாது. அன்புதான் இன்ப ஊற்று. அன்புதான் உலக மகாசக்தி. கோழி தன் குஞ்சுகளை இறக்கைக்குள் ஒன்று சேர்ப்பதுபோல (லூக். 13:34) தன் மக்களை ஒன்று சேர்க்க வந்த தந்தையின் அன்பின் வடிவம்தான் இயேசு.
இன்றைய நற்செய்தி இயேசுவின் அன்புக்குச் சான்று பகர்கிறது. சமாரியர்கள் என்றாலே, ஒதுக்கப்பட்டவர், தீட்டுப்பட்டவர் என்று புறம்பாக்கி வைக்கப்பட்ட சமுதாயம். எனவே எந்த யூதரும் சமாரியர்களோடு உறவு கொள்வதும் இல்லை, பேசவும் கூடாது. இந்த நிலையில், தன் சமூகத்தில் மனிதப் பிறப்பு எடுத்த இயேசு முதல் எந்த ஒரு யூதனும் சமாரியருடன் பேசுவது கூடாது. இரண்டாவது ராபி எனப்படும் இயேசு ஒரு சமாரியப் பெண்ணுடன் பேசுவது பெருங்குற்றம். ஏன்! ஆறு ஆடவருடன் வாழ்க்கை நடத்திய ஒரு சமாரிய விபச்சாரியுடன் பேசுவது என்பது மாபெரும் குற்றம். ஆனால் இயேசுவோ பட்டப் பகலில் மதிய வேளையில் இந்த சமாரியப் பெண்ணோடு உரையாடல் நடத்துகிறார். இவள் ஒரு சமாரியப் பெண் அதுவும் பெரும் பாவி என்று தெரிந்தும் அவளை வெறுக்கவில்லை, புறக்கணிக்கவும் இல்லை. அவளைச் சபிக்கவும் இல்லை. மாறாக ஓர் அன்பான உரையாடல் வழியாக, ஆற்றுப்படுத்துதல் வழியாக அவள் மனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுகின்றார். அவளிடத்தில் உறைந்து கிடந்த சாதி, மத, சட்ட ரீதியான, ஒழுக்கக் கேடான தடைகளையெல்லாம் ஒவ்வொன்றாக வெளியே கொண்டுவர, முழுவதும் திருந்தியவளாய் தண்ணீர் மொள்ள வந்ததை மறந்து, குடத்தைக் கிணற்றங்கரையிலே விட்டு விட்டு, ஜீவ ஊற்றாம் இயேசுவை இதயத்தில் ஏந்தி ஊருக்குள் சென்று இயேசுவைப் பற்றிய உண்மையை அறிக்கையிடுகின்றாள்.
ஒரு நல்ல குடம், ஒரு கீறல் விழுந்த குடம். ஒரு தொழிலாளி தினமும் இரு குடங்களையும் தூரத்தில் இருக்கும் கிணற்றில் உள்ள நல்ல தண்ணீரைத் தோளில் சுமந்து ஊருக்குள் கொண்டு வந்து காசு பெறுவது வழக்கம். ஒரு குடம் நிறைய இருப்பதால் முழுமையாகப் பணம் கிடைத்தது. ஆனால் இன்னொரு குடம் கீறல் இருந்ததால் தண்ணீர் சுமந்து வரும் வழியெல்லாம் வழிந்து குறைந்த குடமாக இருந்ததால் பணமும் குறைவாகக் கிடைத்தது. அவன் நடந்து வரும் பாதையோ ஒரு முதலாளியின் இடமாகும். ஒருநாள் கீறல் விழுந்த குடம் இந்த தொழிலாளியைப் பார்த்து, ஐயா! என்னால் ஒரு பயனுமில்லையே! வரும் வழியெல்லாம் தண்ணீரை ஒழுக விட்டு உங்களுக்குப் பணம் சம்பாதித்துத் தர முடியாதவராகி விட்டேனே! என்னைத் தூக்கி எறிந்துவிடுங்கள் என்றது. அப்போது அந்தத் தொழிலாளி சொன்னான், நீ உடைந்த உதவாக்கரை என்று எண்ணாதே, வரும் வழியெல்லாம் செழிப்புடன் பூத்துக் குலுங்க வைத்துள்ளாய். இதனால் முதலாளி எனக்குப் பரிசு தரக் காத்திருக்கிறார் என்றார் அந்தத் தொழிலாளி. ஆம்! இப்படி உடைந்த, ஒன்றுக்கும் உதவா நிலையில் ஓடி ஒளிந்த மோசேயை ஆண்டவர் தேர்ந்தெடுத்து இஸ்ரயேல் மக்களை வழிநடத்தவும், தாகத்தைத் தீர்க்க பாறையை உடைத்து தண்ணீர் வழங்கவும் சித்தமானார். ஊர் அறிய, நாடறிய விபச்சாரி என்று பெயர் எடுத்த சமாரியப் பெண் என்றுமே தாகம் தீராத ஊற்றைக் கண்டேன் என அறிவித்தாள்.
அந்த உண்மையான ஊற்று, உயிருள்ள நீர், நம் ஆண்டவர் இயேசு. யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும், குடிக்கட்டும் (யோவா. 7:37) என்கிறார்.
இயேசுவே எப்பொழுதுமே உண்மை பேசிய உமது மனத்தை
எனக்குக் கடனாகத் தாரும்
இயேசுவின் காலத்தில் பாலஸ்தீன நாட்டை அல்லது இஸ்ரயேலை மூன்று பகுதிகளாகப் பிரித்திருந்தார்கள். வடக்கே கலிலேயா, தெற்கே யூதேயா கலிலேயாவுக்கும், யூதேயாவுக்கும் நடுவே சமாரியா இருந்தது. அந்தச் சமாரியா பகுதியில் சிக்கார் என்னும் ஊர். அந்த ஊரிலே ஈசாக்கின் மகன் யாக்கோபு அவருடைய மகன் யோசேப்புக்குக் கொடுத்த கிணறு இருந்தது. ஒருமுறை நான் புண்ணிய பூமிக்குச் சென்றபோது இந்தக் கிணற்றின் கரைக்குச் சென்றிருக்கின்றேன். இந்தக் கிணற்று நீரை நான் குடித்திருக்கின்றேன். இஸ்ரயேல் நாட்டிலேயே இந்தக் கிணற்றின் தண்ணீர்தான் மிகவும் சுவையானது. இந்தக் கிணற்றுக்கு அந்த ஊர்ப்பெண்கள் தண்ணீர் எடுக்க வருவார்கள். அவர்களில் ஒருத்தி மாபெரும் பாவி. அந்தப் பாவியைச் சந்திப்பதற்காக ஊதாரிப் பிள்ளை உவமையில் வரும் ஊதாரிப் பிள்ளைக்காக காத்திருந்த தந்தையைப் போல இயேசு காத்திருந்தார். யாருக்காக இயேசு காத்திருந்தாரோ அந்தப் பெண் வந்தாள்.
அவள் 5 ஆண்களோடு குடும்பம் நடத்தியவள். இயேசுவைச் சந்தித்தபோது அவள் ஆறாவது ஆணோடு வாழ்ந்துகொண்டிருந்தாள்.
தண்ணீர் எடுக்க வந்தவளிடம் இயேசு, பெண்ணே, நான் உனக்கு தாகமே எடுக்காத தண்ணீரைத் தருகின்றேன் என்றார். அவர் தாகமே தராத தண்ணீர் என்று குறிப்பிட்டது வரங்களையும் கனிகளையும் தரும் ஆற்றல்மிக்க தூய ஆவியாரையே.
அந்தப் பாவியோ, அப்படிப்பட்ட தண்ணீரை எனக்கு உடனே தாரும் என்றாள். இயேசுவோ, நான் தருகின்றேன். ஆனால் முதலில் நீ போய் உன் கணவரை அழைத்து வா என்றார். அவள் நினைத்திருந்தால் அவள் யாரோடு சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தாளோ அவனை அழைத்து வந்து இவர்தான் என் கணவர் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் அவள் இயேசுவிடம் பொய் சொல்ல விரும்பவில்லை.
அவள் ஒரு பெரிய பாவியாக இருந்தாலும் அவளிடம் உண்மையைச் சொல்லும் குணம் இருந்தது. எனக்குக் கணவரென்று யாருமில்லை என்று கூறிவிட்டாள். இயேசுவுக்கு உண்மை என்றால் மிகவும் பிடிக்கும். பிலாத்து இயேசுவைப் பார்த்து, நீ எதற்காக இந்த உலகத்தில் பிறந்தாய்? என்று கேட்டான். அதற்கு இயேசு, உண்மைக்குச் சான்று பகரவே, சாட்சி சொல்லவே, நான் உலகத்தில் பிறந்தேன் (யோவா 18:37-38) என்றார்.
ஆக, இயேசு பிறந்தது உண்மையை எடுத்துரைக்க. இயேசு வளர்ந்தது உண்மையை எடுத்துரைக்க, இயேசு இறந்தது உண்மையை எடுத்துரைக்க, இயேசு உயிர்த்தது உண்மையை எடுத்துரைக்க. ஆகவே, உண்மை என்றால் இயேசுவுக்கு மிகவும் பிடிக்கும்.
சமாரியப் பெண் பெரிய பாவியாக இருந்தாலும், அவளிடம் உண்மை பேசும் குணமிருந்ததால் இயேசு அவளுடைய பாவங்களையெல்லாம் மன்னித்து அவளுக்கு முதல் நற்செய்தியாளர் என்னும் பட்டத்தை அளித்தார். முதன் முதலில், இயேசுதான் மெசியா. இயேசுதான் கிறிஸ்து. இயேசுதான் ஆண்டவர் என்பதை உலகுக்கு அறிக்கையிட்டவள் அந்தச் சமாரியப் பெண்தான்.
அவள் சொன்ன உண்மைக்கு முன்னால் அவள் செய்த பாவங்களெல்லாம் ஒன்றுமில்லாமல் போயின. இது தவக்காலம். இந்த தவக்காலத்தில் நாம் இயேசுவிடமிருந்து பாவ மன்னிப்பு பெற ஓர் அருமையான வழி நீங்களும் நானும் உண்மை பேச முன் வருவதாகும். இயேசு உண்மை விரும்பியாக இருப்பதால் பொய் சொல்கின்றவர்களை அவர் ஒருபோதும் ஆசிர்வதிப்பதில்லை.
இதோ இந்த உண்மையை எடுத்துச்சொல்ல கதை ஒன்று! காட்டுக்குள் விறகு வெட்டி ஒருவன் விறகு வெட்டிக்கொண்டிருந்தான். அவன் விறகு வெட்டிக்கொண்டிருந்த இடத்திற்குப் பக்கத்தில் ஓர் ஆழமான கிணறு! கை நழுவி கோடரி கிணற்றுக்குள் விழுந்தது! செய்வதறியாது கலங்கிநின்ற விறகு வெட்டியின் முன்னால் கடவுள் தோன்றினார்! கடவுள் விறகு வெட்டியைப் பார்த்து. என்ன பிரச்சினை? என்றார்! விறகு வெட்டி நடந்ததைச் சொன்னான்! நான் உனக்கு உதவி செய்கின்றேன் எனச் சொல்லி, கடவுள் முதலில் ஒரு தங்கக் கோடரியை எடுத்துக்காட்டினார். விறகுவெட்டி, இது இல்லை என்று சொல்லிவிட்டான்! பிறகு வெள்ளிக் கோடரி ஒன்றைக் கடவுள் எடுத்துக் காட்டினார். இதுவும் என்னுடையது இல்லை என்று சொல்லிவிட்டான். கடவுள் மூன்றாவதாக இரும்புக்கோடரி ஒன்றை எடுத்துக் காட்டினார். விறகு வெட்டி, இதுதான் என்னுடையது என்றான். கடவுளோ. நீ உண்மை பேசியதால், தங்கக் கோடரியையும், வெள்ளிக் கோடரியையும் உனக்குப் பரிசாகத் தருகின்றேன் என்று சொல்லி, தங்கக் கோடரியையும், வெள்ளிக் கோடரியையும் விறகு வெட்டியிடம் கொடுத்து மறைந்துவிட்டார். உண்மை பேசுகிறவர்களைக் கடவுளுக்கு மிகவும் பிடிக்கும்.
இயேசு மலைப் பொழிவிலே (மத் 5:37) நீங்கள் பேசும்போது ஆம் என்றால் ஆம் என்று இருக்கட்டும், இல்லை என்றால் இல்லை என்று இருக்கட்டும்; இதைத்தவிர மற்ற அனைத்தும் சாத்தானிடமிருந்து வருகின்றன என்று கூறுகின்றார்.
ஆம். இயேசு நாம் எப்பொழுதும் உண்மையைப் பேச வேண்டும் என்று விரும்புகின்றார். உண்மையைப் பேசுகின்றவர்களின் பாவங்கள் அனைத்தையும் அவர் மன்னிக்கத் தயாராக இருக்கின்றார்.
யோவா 8:1-11-இல் பாவத்தில் பிடிபட்ட பெண், தான் ஒரு பாவி என்ற உண்மையை ஏற்றுக்கொண்டதால் அவளுக்குப் பாவ மன்னிப்புக் கிடைத்தது.
லூக் 19:1-10-இல் சக்கேயு தான் பாவி என்ற உண்மையை ஏற்றுக்கொண்டதால் அவனுக்குப் பாவ மன்னிப்பு கிடைத்தது.
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதற்குப் பெயர்தான் பொய் !
இந்தத் தவக்காலத்திலே பொய்யைத் தவிர்த்து உண்மைக்கு முதலிடம் கொடுப்போம்! அப்போது நமது பாவங்கள் செந்தூரம் போல சிவப்பாக இருந்தாலும் இயேசு அவற்றைக் கழுவி வெண்பனியிலும் நம்மை வெண்மையாக்குவார்.
இன்று இதுவே நமது மன்றாட்டாக இருக்கட்டும்: எங்கும். எப்பொழுதும், எதிலும் உண்மையைப் பேசிய இயேசுவே! உமது மனத்தை சற்றுக் கடனாகத் தாரும்! நாங்கள் உம்மிடம் வரும்போது அதை உம்மிடம் திருப்பிக் கொடுத்துவிடுகின்றோம். ஆமென்.
மேலும் அறிவோம்:
தன்நெஞ்(சு) அறிவது பொய்யற்க : பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும் ( குறள் : 293).
பொருள் : தன் உள்ளத்தில் தெளிவாகத் தெரிந்த உண்மையை மறைத்துப் பொய் சொல்லக் கூடாது! அவ்வாறு பொய் பேசினால் பின்னர் அவன் நெஞ்சே அவனைக் குற்றம் சாட்டித் துன்புறுத்தும்!
காதலர் இருவர் ஓர் ஆழமான கிணற்றுக்குள் பேசிக் கொண்டிருந்தனர், ஏன்? என்று அவர்களைக் கேட்டதற்கு, "எங்கள் காதல் ஆழமான காதல்" என்றனர். யோவான் நற்செய்தி மிகவும் ஆழமான நற்செய்தி. மற்ற ஒத்தமை நற்செய்தியாளர்களைவிட யோவான் நற்செய்தி கிறிஸ்துவின் தனித்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இத்தனித்தன்மையை இந்த ஆண்டு தவக்கால மூன்று ஞாயிறுகளும் மையப்படுத்துகின்றன.
சமாரியப் பெண்ணுடன் கிறிஸ்து உரையாடி, "வாழ்வு தரும் தண்ணீர் நானே" (காண்: யோவா 4:10) என்ற உண்மையை வெளிப்படுத்துகிறார் (தவக்காலம் 3-ஆம் ஞாயிறு), பிறவியிலேயே பார்வையற்ற ஒருவர்க்குப் பார்வை அளித்து, "நாளே உலகின் ஒளி" (யோவா 9:5) என்ற உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார் (தவக்காலம்.) 4-ஆம் ஞாயிறு). இலாசரைக் கல்லறையிலிருந்து உயிர்த்தெழச் செய்து, "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே" (யோவா 11:25) என்னும் மாபெரும் உண்மையை உயர்த்திப் பிடிக்கிறார் (தவக்காலம் 5-ஆம் ஞாயிறு). எனவே கிறிஸ்துவின் தனித்தன்மையை உணர்த்துவதே யோவான் நற்செய்தியின் குறிக்கோள். இந்தப் பின்னணியை மறந்து மறையுரை ஆற்றுவது யோவானின் நற்செய்தியைப் பிரதிபலிக்காது; அது நுனிப்புல்லை மேய்வதாகும்.
இன்றைய முதல் வாசகத்தில் பாலைதிலத்தில் தண்ணீர் கேட்டு முறையிட்ட இஸ்ரயேல் மக்களுக்குக் கடவுள் பாறையிலிருந்து தண்ணீர் கொடுக்கிறார். கிறிஸ்துவே அந்தப் பாறை (1 கொரி 10:4) என்று விளக்கம் கூறுகிறார் பவுல். விவிலியம் முழுவதுமே கிறிஸ்துவையே மையமாகக் கொண்டுள்ளது. அவருக்கு வெளியே ஒன்றுமில்லை. சமாரியப் பெண் படிப்படியாக கிறிஸ்து யார் என்ற முழு உண்மையை அறிகிறார். முதல் நிலையில் அவர் கிறிஸ்துவை "ஐயா” என்று அழைக்கிறார்; அவரைச் சாதாரண மனிதராக, ஒரு யூதனாகப் பார்க்கிறார். இரண்டாம் நிலையில் அப்பெண் கிறிஸ்துவை "ஓர் இறைவாக்கினராகக் காண்கிறார்" (யோவா 4:19), மூன்றாம் நிலையில் அவர் அவரை "மெசியாவாக" இனம் காண்கிறார் (யோவா 4:29). இறுதி நிலையில் அவரும் மற்றச் சமாரியரும் கிறிஸ்துவை "உலசு மீட்பராக"க் (யோவா 4:42) கண்டு ஏற்றுக் கொள்கின்றனர்.
சமாரியப் பெண்ணுடன் கிறிஸ்து நடத்திய உரையாடல் மறைக்கல்வி முறையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. கிறிஸ்து யார் என்பதைப் படிப்படியாக உணர்த்துவதே மறைக்கல்வியின் இலக்கு. கிறிஸ்துவை “உலக மீட்பராக" ஏற்றுக் கொள்வதற்கு வழிவகுப்பதே மறைக்கல்வியின் இறுதிப்பயன். திருச்சபை எந்தவொரு கோட்பாட்டியலையும் முன்வைக்காமல், கிறிஸ்து என்ற ஆளை முன்வைக்கிறது.
மனமாற்றம் அடைந்த சமாரியப் பெண் ஓர் ஊர் முழுவதையும் கிறிஸ்துவிடம் கொண்டுவந்த ஒரு நற்செய்திப் பணியாளராக உருவெடுக்கின்றார். "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையுடன் செயல்படுகின்றார். உண்மையான மறைக்கல்வி, மறைக்கல்வி பயிலுகின்றவர்களிடம் நற்செய்திப்பணி ஆர்வத்தையும் உருவாக்க வேண்டும். இல்லையென்றால், அது முழுமையான மறைக்கல்வி ஆகாது.
சமாரியப் பெண் சுற்றி வளைத்துக் கொண்டு கிறிஸ்துவுடன் விவாதிக்கின்றார்; சாதிப்பிரச்சினை, வழிபாடு, ஆலயம் ஆகிய பலவற்றைப் பற்றி கிறிஸ்துவுடன் பேசித் தன்னைப் பற்றி ஒன்றுமே கூறவில்லை. கிறிஸ்து அவருடைய அந்தரங்க வாழ்வைச் சுட்டிக் காட்டுகின்றார். "உம் கணவரைக் கூட்டிக்கொண்டு வாரும்" (யோவா 4:16) என்று கூறி அப்பெண் தன்னுணர்வு பெறச் செய்கின்றார். அந்நிமிடமே அவர் புதுப்பிறவி எடுக்கின்றார். புதுப்படைப்பாக மாறுகிறார். கிறிஸ்துவின் உரையாடல் அப்பெண்ணின் வாழ்வை மாற்றியது. இன்று விவாதம் செய்யப் பலர் உள்ளனர்; ஆனால் உரையாடல் நடத்தத்தான் ஆள்கள் இல்லை!
ஓர் இளைஞன் தன்னுடைய 'பேண்ட்' பின்பக்கம் கிழிந்திருந்ததால் சட்டையை வெளியேவிட்டு அந்தக் கிழிசலை மறைப்பான். முன்பக்கம் சட்டை கிழிந்திருந்தால் சட்டையைப் ''பேண்ட்'க்குள்ளே விட்டு அந்தக் கிழிசலை மறைப்பான். ஒருமுறை அவனுடைய 'பேண்ட்' பின்னாலும் சட்டை முன்னாலும் கிழிந்து போய்விட்டது. பின்பக்கம் சட்டையை வெளியேவிட்டு 'பேண்ட்ஸின்' கிழிசலையும், முன்பக்கம் சட்டையை 'பேண்ட்ஸ்'க் குள்ளே விட்டுச் சட்டையின் கிழிசலையும் மறைத்தான்.
அவ்வாறே நமது வாழ்க்கையின் கிழிசல்களை மூடி மறைக்கின்றோம்; பல்வேறு மூடிகளை அணிந்து மிகத் திறமையுடன் நடிக்கிறோம். மற்றவர்களைப் பற்றியும் மற்றக் காரியங்களைப் பற்றியும் விமர்சனம் செய்கின்றோம். இவ்வாறு திசை திருப்பும் யுக்தியைக் கையாளுகின்றோம். சமாரியப் பெண்போல் நமது உண்மை நிலையை என்று ஏற்றுக்கொள்கின்றோமோ அன்றுதான் நமது மனமாற்றம் தொடங்கும். மற்றவர்களுடைய குற்றத்தை நாம் காண்பது போன்று நமது குற்றத்தையும் கண்டால் நமக்குத் தீமை எதுவும் வராது.
"ஏதிலார் குற்றம்போல் நம்குற்றம் காண்கிற்பின்
தீதுஉண்டோ மன்னும்உயிர்க்கு" (குறள் 190)
இறுதியாக நாம் கடவுளை எந்த இடத்தில் (சமாரியாவில் அல்லது எருசலேமில்) வழிபடுகின்றோம் என்பது முக்கியமல்ல; மாறாக உள்ளார்ந்த வழிபாடு நடத்துவதே முக்கியம் என்ற உண்மையைக் கிறிஸ்து சமாரியப் பெண் வழியாக நமக்கு வெளிப்படுத்துகின்றார். *கடவுளை அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும்" (யோவா 4:23).
நெஞ்சமே கோவில் நினைவே சுகந்தம் அன்பே
மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே-தாயுமானவர்.
நெஞ்சத்தைக் கோவிலாக்கி, நினைவை மல்லிகையாக்கி, அன்பை மஞ்சள் நீராக்கிக் கடவுளை வழிபடும் காலம் எக்காலம்!
தண்ணீர்! தண்ணீர்!
அன்னை தெரசாவின் அன்புப் பணியை அடையாளப்படுத்தும் வகையில் அன்னை நிறுவிய கன்னியர் இல்லங்களில் பளிச்செனக் கண்ணில் படுபவை இரண்டு ஆங்கில வரிகள். 1) இல்ல முகப்பில் “Let us do something beautiful for God” கடவுளுக்காக ஏதாவது அழகானது செய்வோம். இது அவரது துறவுப் பயணத்துக்கான இலக்கு! 2) சிற்றாலயத்தில் பாடுபட்ட திரு உருவம். அதன் அருகில் ““I thirst” தாகமாய் இருக்கிறது. இது அவரது அருள் பணிக்கான உந்து சக்தி
கல்வாரியின் "தாகமாய் இருக்கிறது" (யோ.19:28) - இயேசு வாழ்நாளெல்லாம் கொண்டிருந்த தாகத்தின் கொடுமுடி. இயேசுவின் அன்பர்களது வாழ்வுக்கும் பணிக்கும் உந்துதலும் அர்த்தமும் உணர்வும் நிறைவும் தரும் எழுச்சி முழக்கம்.
தாகம் கொடியது. நீரில்லா வறட்சி கொடியது. (ஆமோ.8:11) "மனிதர் மட்டுமல்ல, செடி கொடிகளும் 'தண்ணீர் தண்ணீர்' என்று தாகத்தினால் கதறுகின்றன. தண்ணீர் தேவைப்படுகிற போது வினாடிக்கு 10இலட்சம் வீதம் மிக உயர் அதிர்வெண்களைக் கொண்ட ஒலியை எழுப்புகின்றன” என்று விவசாய நிபுணர் ஹாம்லின் ஜோன்ஸ் தன் ஆராய்ச்சியில் தெளிவுபடுத்துகிறார் (தினமணி 1989 ஜூன் 3) தண்ணீர் இல்லாத போது பூமி காய்ந்து வெடித்துப் பிளக்கிறது - மனித உதடுகள் கூடத்தான்.
"தண்ணீர்! தண்ணீர்1 இது தமிழ்த்திரைப்படத்தில் அத்திப்பட்டு மக்களின் தாகக் குரல் மட்டுமல்ல. பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்களின் முணுமுணுப்பாக எழுந்த முறையீடும் கூட. இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து விடுவித்து எப்படியெல்லாம் வழிநடத்தினார் இறைவன்! அத்தனையும் மறந்து குடிக்கத் தண்ணீர் கிடைக்கவில்லை என்பதற்காக மோசேக்கு எதிராக முறுமுறுத்து எழுந்தனர். பாவம், "மோசே ஆண்டவரிடம் இந்த மக்களோடு நான் என்ன செய்வேன்? இன்னும் கொஞ்சம் போனால் என்மேல் கல்லெறி வார்களே' என்று கதறினார்" (வி.ப.17:4). அது மட்டுமல்ல, கடவுள் அவர்கள் நடுவே இருக்கிறாரா இல்லையா என்று சந்தேகப்படத் தொடங்கினார் (வி.ப.17:7)
ஆனால் கடவுள் அந்த மக்களை அவர்கள் பாவத்துக்காகத் தண்டிக்கவில்லை. மாறாகப் பாறையிலிருந்து நீர் ஊற்றெடுக்கச் செய்து அவர்களின் தாகத்தைத் தணித்தார். தாகத்தைத் தீர்த்தது மட்டுமல்ல, இறைவனின் உடனிருப்பையும் உணர்த்தியது. "கிறிஸ்துவே அப்பாறை" (1 கொரி.10:4) என்கிறார் திருத்தூதர் பவுல்.
இந்தத் தண்ணீர்ப் பிரச்சனையை வைத்தே ஆன்மீகத்தாகப் பிரச்சனையை எழுப்பித் தீர்வு காணும் இயேசுவின் அற்புதச் செயல் வியப்புக்குரியது!
"குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்" (யோ.4:8) என்று சமாரியப் பெண்ணை இயேசு கேட்டது தனது தாகத்தைத் தணித்துக் கொள்ளவா? அவர் தண்ணீர் பருகினாரா? ஆன்மதாகத்தின்முன் அவரது உடல்தாகம் எப்பொழுதோ பறந்துவிட்டது. தொலைந்த ஆடுகளைத் தேடும் பண்பு, உயர்ந்தவனோ, தாழ்ந்தவனோ, புனிதனோ பாவியோ, ஆணோ, பெண்ணோ, மனித மாண்புடன் செயல்படும் தீரம், தனக்கு உணவும் பானமும் தந்தையின் திருவுளமே என்ற உறுதிப்பாடு. போன்ற வழக்கமான கருத்துக்களுக்கிடையே இழையோடும் எண்ணம் தாகம் தீர்க்கும் “வாழ்வு தரும் தண்ணீர்” பற்றியது.
அந்தச் சமாரியப் பெண்ணின் ஆன்மா வறண்டு காய்ந்து வெடித்துக் கிடந்தது. அவளது ஆன்மதாகம் நொடிக்கு நொடி மிக உயர் அதிர்வெண்களைக் கொண்ட ஒலியை எழுப்பியது. அது மற்ற மனிதர்களின் காதில் விழவில்லை. இறைமகன் இயேசுவின் மென்மை யான செவிகளில் எதிரொலித்தது. அவளது ஆன்மீகத் தேவையை உணர்ந்தார். ஆற்றுப்படுத்தும் கலையை அற்புதமாக வெளிப்- படுத்தினார்.
"நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது. நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்" (யோ.4:14) என்று இயேசு சொன்னதன் உட்பொருளை அவள் உணாரவில்லை. அதன் சொற்பொருளை மட்டுமே எடுத்துக் கொண்டாள். "வாழ்வு தரும் தண்ணீர்”. இயேசு தரும் வெளிப்பாட்டை, இறை ஞானத்தை, தெய்வீக உயிரோட்டத்தைக் குறிக்கும்.
"யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும். என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும்... அவருடைய உள்ளத்திலிருந்து வாழ்வு தரும் தண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்து ஓடும்'' என்ற இயேசுவின் கூற்று, அது தூய ஆவியைக் குறித்தே சொன்னது என்ற நற்செய்தியாளர் யோவானின் விளக்கம் ஒப்பீட்டுச் சிந்தனைக்குரியது (யோ.7:37-39). இந்த வாழ்வு தரும் தண்ணீரைப் பெற்றதன் அடையாளமே சமாரியப் பெண்ணின் மனமாற்றம்.
சமாரியப் பெண்ணைப் பொருத்தவரை அவள் வழியாகவே கடவுளை நோக்கி ஒரு சாலை அமைக்கிறார் இயேசு. சுய தரிசனம் நிச்சயமாகத் தெய்வ தரிசனத்தில் கொண்டு போய் நிறுத்தும்
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தான் இருந்தானே. - திருமூலர்
நம்மைப் பற்றி நாம் அறிந்திருப்பது, நம்மைப் பற்றிப் பிறர் அறிந்திருப்பது, தம்மைப் பற்றி இறைவன் அறிந்திருப்பது. மூன்றையும் தெரிந்து கொள்ளும் போது முழுமையாகத் தெரிந்து கொள்கிறோம்.
என்று சமாரியப் பெண் மனம் மாறினாளோ, அன்று தன்னையே முழுமையாகப் புரிந்து கொண்டாள் - தனது தனி வாழ்வு பற்றி, தனது இனத்தைப் பற்றி, தனது சமயத்தைப் பற்றி. என்று தன்னைப் புரிந்து கொண்டாளோ அன்று ஆண்டவனையும் அறிந்து கொள்கிறாள் - சாதாரண யூதராக என்று தொடங்கி அவரை மெசியாகவாக, உலக மீட்பராக. இயேசுவின் சாட்சியாகவும் மாறுகிறாள்.
சுயதரிசனமும் தெய்வ தரிசனமும் நம் தாகத்தைத் தணிக்கும், பிறர் தாகத்தைத் தீர்க்கப் பணிக்கும்.
இயேசுவும் சமாரியப் பெண்மணியும்
2017ம் ஆண்டு மார்ச் மாதத்தில், தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெரு நாடு, பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அவ்வேளையில் உருவான சகதி வெள்ளத்திலிருந்து ஓர் இளம்பெண் வெளியேறிய நிகழ்வு, (Woman escapes raging mudslide in Peru) தலைப்புச் செய்தியானது.
தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், தண்ணீரும், சகதியும் இணைந்து வெள்ளமெனப் பாய்ந்து செல்கின்றன. இந்தச் சகதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட, Evangelina Chamorro Diaz என்ற இளம்பெண், கையில் அகப்பட்ட மரக்கிளை ஒன்றை இறுகப்பற்றி, சகதியிலிருந்து வெளியேறி வந்தார். (Sky News)
பாய்ந்து செல்லும் தண்ணீரில் எதிர் நீச்சல் அடிப்பதே பெரும் சவால். இந்தப் பெண், சுழன்று செல்லும் சகதியில் எதிர் நீச்சல் அடித்து வெளியேறியது அவரது உடல், உள்ள வலிமையை பறைசாற்றுகிறது. இழுத்துச் செல்லும் சகதியின் சக்திக்கு, தன்னைக் கையளித்துவிடாமல், எதிர் நீச்சலடித்து, போராடி, கரைசேர்ந்த, 32 வயது நிறைந்த Evangelina அவர்கள், இன்றைய ஞாயிறு சிந்தனைக்கு அடித்தளமிடுகிறார்.
இவ்விளம்பெண்ணின் பெயர், முதலில், நம் கவனத்தை ஈர்க்கிறது. Evangelina என்ற பெயரின் பொருள், 'நற்செய்தி'. சகதியிலிருந்து மீண்டெழுந்த இவ்விளம்பெண், இன்னும் பல ஆண்டுகள், ஒரு நற்செய்தியாக வாழ்வார் என்பதை நாம் எதிர்பார்க்கலாம். சகதியிலிருந்து வெளியேறி, நற்செய்தியாக வாழும் Evangelina அவர்கள், இன்றைய நற்செய்தியில் (யோவான் 4: 5-42) நாம் சந்திக்கும் சமாரியப் பெண்ணை நினைவுக்குக் கொணர்கிறார்.
இயேசுவின் காலத்தில், ஆணாதிக்கச் சமுதாயத்தில், ஒரு பெண்ணாக, சமாரியப் பெண்ணாக வாழ்வதென்பது, கடுமையான எதிர் நீச்சல்தான். அதிலும், இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ள பெண், ஐந்து கணவர்களுடன் வாழ்ந்தபிறகு, ஆறாவது மனிதரோடு வாழ்பவர். அவரை இந்நிலைக்கு உள்ளாக்கியது, அவருடன் வாழ்ந்த ஆண்களா அல்லது, அவரது சொந்த முடிவா என்பது தெரியவில்லை. ஆனால், பொதுவாக, நம் சமுதாயத்தில், முடிவெடுக்கும் நிலையில் பெண்கள் இல்லையெனினும், அவர் மீது பழிகள் சுமத்தப்படுவதை நாம் அறிவோம். மதம், நன்னெறி, ஊர் கட்டுப்பாடு என்ற பல அளவுகோல்களின் அடிப்படையில், ஊரிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்ட இப்பெண் மீது, கண்டனச் சேறு எப்போதும் வீசப்பட்டிருக்கவேண்டும்.
இன்றைய நற்செய்தியின் அறிமுக வரிகளில், "அப்போது ஏறக்குறைய நண்பகல்" (யோவான் 4:6) என்ற குறிப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தப்பெண், தன் சொந்த ஊரிலேயே, எவ்வளவு தூரம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார் என்பதை, நற்செய்தியாளர் யோவான் இந்த சிறு குறிப்பின் வழியே உணர்த்துவதாக, ஒருசில விவிலிய விரிவுரையாளர்கள் கூறியுள்ளனர்.
எந்த ஊரிலும், பெண்கள், காலையில், சிறு, சிறு குழுக்களாக, பல கதைகள் பேசியபடி கிணற்றிற்குச் சென்று, நீர் எடுத்து வருவது வழக்கம். இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் இப்பெண்ணோ, நண்பகலில் நீர் எடுக்கச் செல்கிறார். காரணம் என்ன? அவரும், மற்றவர்களோடு காலை நேரத்தில் நீர் எடுக்கச் சென்றிருப்பார். ஆனால், அவ்வேளையில், மற்ற பெண்கள், அவரைப்பற்றி ஏளனமாகப் பேசி, கண்டனத் தீர்ப்புக்கள் வழங்கியிருப்பர். நடத்தை சரியில்லாத அவர், அந்தக் கிணற்றில் நீர் எடுத்தால், கிணற்று நீரே தீட்டுப்பட்டுவிடும் என்று சொல்லி அவரை மற்ற பெண்கள் தடுத்திருக்கக்கூடும். ஏனைய பெண்கள் விடுத்த கண்டனக் கணைகளால் காயப்படவேண்டாம் என்ற நோக்கத்தில், அவர், ஆள் நடமாட்டம் அதிகமில்லாத நண்பகல் வேளையில் தண்ணீர் எடுக்கச் சென்றிருப்பார். தான் வாழும் சமுதாயம், தன்மீது வாரியிறைத்த சேற்றையும், சகதியையும் கழுவமுடியாமல் வாழ்ந்துவந்த அப்பெண்ணை, அச்சகதியிலிருந்து மீட்டு, நற்செய்தியை அறிவிப்பவராக மாற்றுகிறார், இயேசு. இந்த அற்புதத்தை, இன்றைய நற்செய்தியாக நாம் பகிர்ந்துகொள்கிறோம்.
உயிர்ப்புத் திருவிழாவை நோக்கி, நாம் தவக்காலப் பயணத்தை மேற்கொண்டுள்ளோம். இந்த உயிர்ப்புப் பெருவிழாவுடன் தொடர்புடைய மூன்று அடையாளங்கள் - தண்ணீர், ஒளி, வாழ்வு. இந்த ஞாயிறன்றும், இதைத் தொடரும் இரு ஞாயிறுகளிலும், இம்மூன்று அடையாளங்களை வலியுறுத்தும் நற்செய்தி வாசகங்கள் நமக்குத் தரப்பட்டுள்ளன. இயேசு, சமாரியப் பெண்ணைச் சந்திப்பதும், தண்ணீர் குறித்து பேசுவதும், இந்த வாரம் தரப்பட்டுள்ள நிகழ்ச்சி (யோவான் 4: 5-42). பார்வை இழந்த ஒருவருக்கு, இயேசு, பார்வை வழங்குவதும், ஒளியைக் குறித்துப் பேசுவதும், அடுத்த வாரம் நாம் வாசிக்கும் நற்செய்தி (யோவான் 9: 1-41). இறந்த இலாசரை உயிர்ப்பித்து, வாழ்வைப் பற்றி இயேசு பேசுவது, மூன்றாம் வாரம் தரப்பட்டுள்ள நற்செய்தி (யோவான் 11: 1-45).
மேலும், தவக்காலத்தின் உயிர் நாடியான மாற்றம் என்ற கருத்து, இந்த மூன்று நிகழ்வுகளிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சமாரியப் பெண்ணின் நெறி பிறழ்ந்த வாழ்விலும், அவர் கொண்டிருந்த இறை நம்பிக்கையிலும் மாற்றம் நிகழ்கின்றது. பார்வை இழந்தவர், தன்னை குணமாக்கியவர் யார் என்பதை அறியாமலேயே அவர் மீது நம்பிக்கை கொண்டு, அவரை, பரிசேயர்களுக்கு முன் உயர்த்திப் பேசுகிறார். பின்னர், இயேசுவைச் சந்தித்ததும், முழு நம்பிக்கையுடன் அவரிடம் சரணடைகிறார். மூன்றாவது நிகழ்வில், உயிரிழந்து, புதைக்கப்பட்ட இலாசர், மீண்டும் உயிர் பெற்றெழும் உன்னத மாற்றம் நிகழ்கிறது.
சமாரியப் பெண்ணிடம் மாற்றங்களை உருவாக்க, இயேசு தேர்ந்தெடுத்த பள்ளிக்கூடம்... ஒரு கிணற்று மேடு. அதுவும், யூதர்களின் வெறுப்புக்கும், ஏளனத்திற்கும் உள்ளான சமாரியர் வாழ்ந்த பகுதியில் இருந்த ஒரு கிணற்று மேடு. ஆச்சரியங்களைத் தருவதில் இயேசுவை மிஞ்ச, இனி ஒருவர் பிறந்துதான் வரவேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. யோவான் நற்செய்தியில் இன்று நாம் சந்திக்கும் இயேசு, நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்... சொல்லப்போனால், அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார். ஒரு சராசரி யூதர் செய்யக்கூடாத பல செயல்களை இயேசு துணிந்து செய்கிறார். பல நூறு ஆண்டுகள், பகைமை, பிரிவு, பிளவு ஆகிய உணர்வுகளில் ஊறிப்போயிருந்த யூதர், சமாரியர் என்ற இரு குலத்தவரின் பிரதிநிதிகளாக, இயேசுவும், சமாரியப் பெண்ணும், கிணற்றடியில் சந்திக்கின்றனர்.
இயேசு அந்தச் சமாரியப் பெண்ணிடம் வலியச்சென்று "குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்" (யோவான் 4:8) என்று கேட்கிறார். வெகு எளிதாக, மேலோட்டமாக ஆரம்பமான இந்த உரையாடல், வெகு ஆழமான உண்மைகளைத் தொடுகின்றது. நற்செய்தியில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து உரையாடல்களிலும், யோவான் நற்செய்தி 4ம் பிரிவில் இயேசுவுக்கும், சமாரியப் பெண்ணுக்கும் இடையே நிகழும் இந்த உரையாடல்தான் மிக நீளமானது. இந்த உரையாடலின் முடிவில், ஊரால் ஒதுக்கப்பட்டிருந்த ஒரு பெண், அந்த ஊரையே இயேசுவின் பாதம் கொண்டு வந்து சேர்த்த பெருமையைப் பெறுகிறார். இறைவனைப்பற்றிப் பேச, யாருக்கு, சிறிதும் தகுதியில்லை என்று உலகம் ஒதுக்கிவைத்ததோ, அவர்களே, இயேசுவை உலகறியச் செய்த தலைசிறந்த சாட்சிகள் ஆயினர் என்பதை, விவிலியமும், திருஅவை வரலாறும், மீண்டும், மீண்டும் கூறியுள்ளன.
இந்த நற்செய்திப் பகுதி, இன்றைய உலகில் நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளைக் குறித்து சிந்திக்க அழைக்கிறது. கிணற்று மேட்டில் நடக்கும் ஓர் உரையாடல் இது. கிணற்று மேடு, டீக்கடை, ஊரின் நடுவே உள்ள ஆலமரத்தடி என்று, வெகு சாதாரண, வெகு எளிய இடங்களில், சமுதாயம், அரசியல், வாழ்வின் அடிப்படைத் தத்துவங்கள் அலசப்படுவது, நமக்கெல்லாம் தெரிந்ததுதான். மிகச் சாதாரணமான இவ்விடங்களில் இறைவனைப் பற்றியப் பாடங்களையும் கற்றுக்கொள்ளலாம் என்பதை, கிணற்று மேட்டில் நடக்கும் உரையாடல் வழியே, இயேசு, இன்று நமக்கு உணர்த்துகிறார்.
அடுத்ததாக, தன் தாகத்தை தணிக்க தண்ணீர் கேட்கும் இயேசுவிடம் சமாரியப் பெண், யூதர்களுக்கும், சமாரியருக்கும் இடையே நிலவும் பாகுபாடுகளை நினைவுறுத்துகிறார். தவித்த வாய்க்குத் தண்ணீர் தருவதிலும், சமுதாயப் பிரிவுகள் குறுக்கிடுவதை, இந்த உரையாடல் தெளிவாக்குகிறது.
தண்ணீரைப்பற்றி பேசும்போது, நெருடலான பல எண்ணங்கள் மனதில் அலைமோதுகின்றன. இறைவன் தந்த அற்புதக் கொடைகளில் ஒன்றான தண்ணீரை, பல வழிகளில் நாம் சீரழித்துள்ளோம். தண்ணீர் தொடர்பாக மனித சமுதாயம் இழைத்துள்ள பல குற்றங்களில், சமுதாயத்தைப் பிரிக்கும் ஓர் ஆயுதமாக தண்ணீரை நாம் மாற்றியுள்ளோம் என்பதே, நமது பெரும் குற்றம். சாதிக்கொரு கிணறு, குளம் என்று நாம் உருவாக்கிய அவலம், இன்றும் பல இடங்களில் தொடர்கின்றது.
தண்ணீரை மையப்படுத்தி வேறு வகையான பிரிவுகள் இன்று உருவாகியுள்ளன. தண்ணீர், ஒரு பொருளாதார முதலீடு என்பதை உணர்ந்துள்ள பல செல்வர்கள், தண்ணீரைத் தனியுடைமையாக்கி வரும் கொடூரம் பெருகிவருகிறது. தவித்த வாய்க்குத் தண்ணீர் தந்த நம் பண்பாடு குறைந்து, மறைந்து, தண்ணீரைக் காசாக்கும் வியாபாரம் வளர்ந்து வருகிறது. இந்த வியாபாரத்தால், தண்ணீர், 'நீலத் தங்கமாய்' (Blue Gold) மாறி வருகிறது.
தண்ணீர் இவ்வுலகினர் அனைவருக்கும் உரிய சொத்து என்பதை நினைவுறுத்த, ஐ.நா. நிறுவனம் ஒவ்வோர் ஆண்டும், மார்ச் 22ம் தேதியை, உலகத் தண்ணீர் நாள் என்று சிறப்பிக்கிறது. இந்த நாளையொட்டி, நியூ யார்க் நகரில் மார்ச் 22 முதல் 24 முடிய ஐ.நா. நிறுவனத்தில் தண்ணீர் கருத்தரங்கு பன்னாட்டளவில் நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கில் மக்களின் நலனை முன்னிறுத்தும் முடிவுகள் எடுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி பல சமுதாய அமைப்புகள் போராடி வருகின்றன. அவற்றில், Avaaz என்ற அமைப்பு, உலக மக்களின் பொதுசொத்தான நதிகளைக் காப்பதற்கு உலக மக்கள் இணைந்து விண்ணப்பிக்க வேண்டும் என்ற போராட்டத்தை நடத்திவருகிறது.
பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆலைகளிலிருந்து வெளியாகும் அமிலம் கலந்த கழிவுகளால் உலகில், நைல், கங்கை, அமேசான் போன்ற மாபெரும் நதிகள் சிறிது, சிறிதாக இறந்துவருகின்றன. அதேபோல், இந்நதிகள், வர்த்தக நிறுவனங்கள் பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களின் குப்பைத் தொட்டிகளாகவும் மாறி வருகின்றன. இந்தப் போக்கை தடுத்து நிறுத்தவில்லையெனில் இன்னும் 2 ஆண்டுகளில், உலகின் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பேர் தண்ணீரின்றி தவிக்கும் நிலை உருவாகும் என்ற காரணத்தை முன்னிறுத்தி, நதிகளைக் காக்கும் போராட்டத்தின் குரல் ஐ.நா. கருத்தரங்கில் ஒலிக்க வேண்டும் என்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவின் மற்றொரு காந்தி என்ற புகழுக்குரியவரும், இயற்கையைப் பாதுகாக்கப் பல வழிகளிலும் போராடி, 2021ம் ஆண்டு தன் 94 வயதில் இறையடி சேர்ந்த பசுமை பரட்சி வீரருமான சுந்தர்லால் பகுகுணா அவர்களின் கூற்று நினைவில் கொள்ளவேண்டிய ஒன்று: "முதல், இரண்டாம் உலகப் போர்கள் ஐரோப்பிய நாடுகளின் தீராதப் பேராசை பசியால் உருவாயின. மூன்றாம் உலகப் போரென்று ஒன்று வந்தால், அது நீரைப் பங்கிடுவது குறித்துதான் எழும்." தண்ணீரை ஒரு பிரிவினை ஆயுதமாகப் பயன்படுத்துவோருக்கும், தனியுடமைத் தங்கமாகப் பாவிக்கும் சுயநலச் செல்வந்தர்களுக்கும், சமாரியக் கிணற்றடியில் நடத்திய ஒரு பாடத்தின் வழியாக, இயேசு சாட்டையடி வழங்குகிறார்.
இறைவனின் கொடையான தண்ணீரை, சாதி, இனம், பொருளாதாரம் என்ற கூறுகளில் பிரித்துள்ளது போதாதென்று, இறைவனையும், பல காரணங்களுக்காக, பிரித்து, கூறுபோடும் மடமை முயற்சிகளில் மனித சமுதாயம் ஈடுபட்டுள்ளது என்பதையும், இயேசு, இன்றைய நற்செய்தியில் சுட்டிக்காட்டுகிறார். இறைவனைத் தொழுவதற்கு, மலைகளையும், எருசலேம் புனித நகரையும், தேடாதீர்கள் என்று கூறும் இயேசு, தொடர்ந்து அந்த சமாரியப்பெண்ணிடம் கூறும் அழகிய எண்ணங்கள் இன்றைய நற்செய்தியில் பதிவாகியுள்ளன:
இயேசு சமாரியப் பெண்ணிடம், “அம்மா, என்னை நம்பும். காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள்... உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர். தம்மை வழிபடுவோர் இத்தகையோராய் இருக்கவே தந்தை விரும்புகிறார். கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும்” என்றார். (யோவான் 4: 21,23-24)
இறைவனைச் சிறைப்படுத்தும் இலக்கணங்கள் அனைத்தும் இன்றைய நற்செய்தியில் அழிக்கப்படுகின்றன. அதேபோல், மனிதர்கள்மீது நாம் சுமத்தும் பாகுபாடுகள், முத்திரைகள் எல்லாம் அழிக்கப்படுகின்றன.
மனிதர்கள் வகுத்த வரம்புகளைத் தாண்டிய, உண்மை இறைவனை உள்ளத்தில் கண்டு, அவரை உள்ளத்தில் வழிபடுவதற்கு இந்தத் தவக்காலம் நமக்கு உதவட்டும்.
அதேபோல், தவித்த வாய்க்குத் தண்ணீர் தருவதிலும் பிளவுகளை வளர்த்துவரும் நம் சமுதாயம், பாகுபாடுகளைத் தாண்டி, உயிருள்ள ஊற்றான இறைவனைப் பருகவும் இந்த தவக்காலம் நமக்கு உதவுவதாக.
சமுதாயம் உருவாக்கியுள்ள பெண்ணடிமைத்தனம் என்ற சகதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் பெண்கள், இறை நம்பிக்கை என்ற கிளைகளைப் பற்றி, இந்த சகதி வெள்ளத்திலிருந்து வெளியேறுவதற்குத் தேவையான துணிவைப் பெறவேண்டும் என்று மன்றாடுவோம்.
நம்பிக்கைதானே எல்லாம்
ஏழையின் நம்பிக்கை!
அதிகாலை இரண்டு மணி இருக்கும். திடீரெனத் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த செல்வந்தர் ஒருவர் மீண்டுமாகத் தூங்க முயன்றபோதும் முடியவில்லை. இதனால் அவர் சிறிது நேரத்திற்குத் தன் வீட்டுப் பால்கனியில் நடந்தார். அப்போதும் அவருக்குத் தூக்கம் வராததால், ‘வீட்டில் இருந்த மகிழுந்தை எடுத்துக்கொண்டு ஊருக்கு வெளியே போய்த் திரும்பி வந்தால் மனம் அமைதி கொள்ளும்’ என நினைத்துக்கொண்டு, மகிழுந்தை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினார்.
சிறிது தூரத்தில் ஒரு கோயில் இருந்தது. அந்தக் கோயில் அந்த நேரத்திலும் திறந்தே இருந்தது. கோயிலுக்குள் சென்று, கடவுளிடம் வேண்டினால் அமைதி கிடைக்கும் என நினைத்துக்கொண்டு அவர் உள்ளே சென்றார். அங்கே ஒருவர் கடவுளின் திருவுருவத்திற்கு முன்பாக முழந்தாள் படியிட்டு வேண்டிக் கொண்டிருந்தார். அவரை வியப்போடு பார்த்த செல்வந்தர், “உங்களுக்கு என்ன ஆயிற்று? ஏன் இந்த நேரத்தில் இங்கு வந்து வேண்டிக் கொண்டிருக்கின்றீர்கள்?” என்று கேட்டார் .அந்த மனிதரோ, “என்னுடைய மனைவிக்கு நாளைக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற இருக்கின்றது. அறுவைச் சிகிச்சை நடைபெறாவிட்டால் என் மனைவி இறக்கக்கூடும்; ஆனால், அறுவைச் சிகிச்சை செய்ய என்னிடத்தில் பணமில்லை. அதனால்தான் நான் இங்கு வந்து கடவுளிடம் வேண்டிக் கொண்டிருக்கின்றேன்” என்று கண்களில் நீர் மல்கச் சொன்னார்.
அவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு, அவர்மீது இரக்கம் கொண்ட செல்வந்தர். தனது மகிழுந்தில் இருந்த பணத்தை எடுத்து அவரிடம் கொடுத்து, “இதை வைத்துக் கொண்டு, உங்கள் மனைவிக்கு நல்லமுறையில் அறுவைச் சிகிச்சை செய்யுங்கள்” என்றார். பின்னர் செல்வந்தர் அந்த மனிதரிடம், “இன்னும் பணம் தேவைப்பட்டால் இதில் என்னுடைய முகவரியும் தொடர்பு எண்ணும் இருக்கின்றன. என்னை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்” என்று சொல்லித் தன்னுடைய முகவரியை அவரிடம் கொடுத்தார்.
அதை வாங்க மறுத்த அந்த மனிதர், “அவருடைய முகவரி என்னிடம் இருக்கின்றது. அது போதும்” என்றார். “யாருடைய முகவரி?” என்று செல்வந்தர் திருப்பிக் கேட்டதும், “உங்களை இந்த நேரத்திற்கு இங்கு அனுப்பி வைத்திருக்கின்றாரே கடவுள். அவருடைய முகவரி... கடவுள் நான் கேட்டதைத் தருவார் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. அது உங்கள் வழியாகக் கிடைத்தது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி” என்று புன்னகைத்தார் அந்த மனிதர்.
தான் ஒருவருடைய மகிழ்சிக்குக் காரணமாகிவிட்டோம் என்ற மனநிறைவோடு நிம்மதியாகத் தூங்கச் சென்றார் செல்வந்தார்.
ஆம், ஆண்டவர் தனக்கு உதவுவார் என்று இந்த நிகழ்வில் வரும் ஏழை நம்பினார். அவர் நம்பியது போன்றே கடவுள் அவருக்கு ஒரு செல்வந்தர் வழியாக உதவினார். தவக் காலத்தின் மூன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நம்பிக்கையே எல்லாம், நம்பிக்கையினாலேயே நாம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக முடியும் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
இஸ்ரயேல் மக்களின் நம்பிக்கையின்மை!
ஆபிரகாம் தன் ஒரே மகன் ஈசாக்கைப் பலியிடக் கூட்டிச் செல்லும்போது, “இதோ நெருப்பும், விறகுக் கட்டைகளும் இருக்கின்றன. எரிபலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே?” என்று கேட்பார் ஈசாக்கு.. இதற்கு ஆபிரகாம், “எரிபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பொறுத்தவரையில் ‘கடவுளே பார்த்துக் கொள்வார்” (தொநூ 22:8) என்று அற்புதமாகப் பதிலளிப்பார். ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கிடம் சொன்னது போன்று, கடவுளே பார்த்துக் கொண்டார்.
இப்படியெல்லாம் கடவுள் தன்மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு யாவற்றையும் செய்திருக்கும்போது, பார்த்துக்கொண்டபோது, அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து, வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டிற்கு இஸ்ரயேல் மக்கள் சென்றுகொண்டிருக்கும்போது, அவர்கள் ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளாமல், அவரது ஊழியர் மோசேக்கு எதிராக முறுமுறுப்பதைப் பற்றி இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம். உண்ண உணவும், பகலில் மேகத் தூண் மூலமாகவும், இரவில் நெருப்புத் தூண் மூலமாகவும் இஸ்ரயேல் மக்களைப் பாதுகாத்து வந்த கடவுள், அவர்களுக்குத் தண்ணீர் மட்டும் தாராமால் இருந்துவிடுவாரா? என்ன? நிச்சயம் தருவார். தந்தார். மக்கள்தான் கடவுளின் பராமரிப்பில் நம்பிக்கை வைக்காமல் செயல்பட்டு, அவரைச் சோதித்தார்கள்.
சமாரியப் பெண்ணின் நம்பிக்கை
“இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பட்டுள்ளன” (யோவா 20: 31) என்று நற்செய்தியாளர் யோவான், தனது நற்செய்தி நூலை முடிக்கும் முன்னதாகக் கூறுவார். இன்றைய நற்செய்தி வாசகம், சமாரியப் பெண்மணி ஒருவர் எப்படி இயேசுவை இறைமகன் என ஏற்றுக்கொண்டார் என்பதைப் பற்றிச் சான்று பகர்கின்றது.
யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் இடையே எப்போதும் பூசல் இருந்துகொண்டே இருந்தது. காரணம், சமாரியர்கள் ஒரு காலகட்டத்தில் யூதர்களாக இருந்தாலும், அவர்கள் அசீரியர்களை மணந்ததால், தூய்மைவாதம் பேசிய யூதர்கள் சமாரியர்களை யூதர்களாகவே ஏற்றுக்கொள்ளவில்லை. இதனாலேயே அவர்களுக்கிடையே பூசலும் சண்டை சச்சரவுவும் இருந்தன. இது இயேசுவின் காலத்திலும் தொடர்ந்தது.
இந்நிலையில் இயேசு யூதருக்கும் சமாரியருக்கும் இடையே இருந்த பூசலை மறந்து, சமாரியப் பெண்மணியோடு, அதுவும் பொதுவிடத்தில் பேசுகின்றார். இயேசு அவரிடம் வாழ்வளிக்கும் தண்ணீர், உண்மையான வழிபாடு ஆகியவற்றையெல்லாம் பற்றிப் பேசியதைப் பார்த்து, இயேசு வெறும் இறைவாக்கினர் மட்டுமல்ல, அவர் மெசியா, இறைமகன் என நம்பி ஏற்றுக்கொள்கின்றார் சமாரியப் பெண்மணி. முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் கடவுளையும் அவரது பராமரிப்பையும் நம்பாதபோது, சமாரியப் பெண்மணி இயேசுவின்மீது நம்பிக்கை கொள்வது நமக்கு வியப்பை அளிக்கின்றது. சமாரியப் பெண்மணி இயேசுவை நம்பி ஏற்றுக்கொண்ட அதே நேரத்தில், நாம் இயேசுவைப் போன்று எல்லைகளைக் கடந்து உறவாடவும் அன்பு செய்யவும் தயாராக இருக்கவேண்டும்.
நம்பிக்கையுடையோர் கடவுளுக்கேற்புடையோர்!
கடவுளுக்கேற்ற செயல் எது எனப் பேசும்போது, இயேசு, “கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கேற்ற செயல்” (யோவா 6: 29) என்பார். அந்த வகையில், சமாரியப் பெண்மணி கடவுள் அனுப்பிய இயேசுவை நம்பி, அவருக்கேற்ற செயலைச் செய்தார்.
உரோமையருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் நம்பிக்கையாலேயே கடவுளுக்கு ஏற்புடையவர் ஆனோம்; நம்பிக்கையால்தான் அருள்நிலை கிடைத்துள்ளது என்கிறார். மானிடர் யாவரும் கடவுள் கொடுத்த மேன்மையை இழந்த நிலையில் (உரோ 3:23), கடவுள் நம்மீது கொண்ட பேரன்பினால் தம் ஒரே மகனை அனுப்பி, பாவிகளாகிய நம்மை மீட்டார். அதனால்தான் நாம் அவரிடம் நம்பிக்கை கொள்கின்றபோது மட்டுமே அவருக்கு ஏற்புடையவர்களாக முடியும் (எபி 11:6). இதனை நாம் நம் மனத்தில் இருத்தி, ஆண்டவர்மீது நம்பிக்கை வைப்போம்; அந்த நம்பிக்கையை நமது செயலில் வெளிப்படுத்துவோம்.
சிந்தனைக்கு
‘கடவுள்மீது நம்பிக்கை வையுங்கள்; ஏனெனில், கடவுள் உங்கள்மீது நம்பிக்கை வைத்துள்ளார்” என்பார் எட்வின் லூயின் கோல். ஆதலால், நாம் கடவுள்மீது நம்பிக்கை வைத்து, அவருக்கு ஏற்புடையவர்களாவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
குடிக்க எனக்கு தண்ணீர் கொடு!
ஒரு வாளியில் நான்கு லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். இந்த நான்கு லிட்டர் தண்ணீருக்குள் நீங்கள் அன்றாடம் காஃபிக்கு சுகர் கலக்கும் சிறிய கரண்டியை எடுத்து, அக்கரண்டியால் ஒரு கரண்டி தண்ணீரை எடுங்கள். இப்போது இந்தக் கரண்டியில் உள்ள தண்ணீரை உங்கள் ஆள்காட்டி விரலால் தொட்டு ஒரு சொட்டு தண்ணீரை எடுங்கள்.
நம்முடைய பூமியில் உள்ள எல்லா தண்ணீர் வளங்களும் நான்கு லிட்டர் தண்ணீர் போன்றவை. இவற்றில் ஒரு கரண்டி தவிர மற்றெல்லா தண்ணீரும் பயன்படுத்த முடியாதவாறு கடல்நீராக இருக்கின்றது. அந்த ஒரு கரண்டித் தண்ணீரில் ஒரு சொட்டு தவிர மற்ற தண்ணீர் முழுவதும் பனிப்பாறைகளாக பூமியின் இரு துருவங்களிலும், மலைகளிலும் உறைந்து கிடக்கின்றன. ஆள்காட்டி விரலில் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த ஒற்றைத் துளி தண்ணீர்தான் நீங்களும் நானும் பயன்படுத்துவதற்கு இந்த பூமிப் பந்து வழங்கும் தண்ணீர்.
இந்த ஒற்றைத் துளித் தண்ணீரை பச்சை நீர், நீல நீர், சாம்பல் நீர் என மூன்றாகப் பிரிக்கலாம். பச்சை நீர் என்பது நாம் சுவாசிக்கும் காற்றில், விழும் பனித்திவலைகளில், நிலத்திற்கு அடியில் இருக்கும் தண்ணீர், நீல நீர் என்பது ஆறுகள், குளங்கள், மற்றும் ஏரிகளில் இருக்கும் தண்ணீர், சாம்பல் நீர் என்பது நம்முடைய வீட்டின், தொழிற்சாலையின் கழிவாக வெளியேறும் தண்ணீர். இந்த பூமிப்பந்து உருவானபோது தண்ணீர் எந்த அளவு இருந்ததோ, அதே அளவு தண்ணீர்தான் இன்றும் பூமியில் இருக்கிறது. தண்ணீர் சுழன்றுகொண்டே இருக்கின்றது.
நம்முடைய தமிழர் பண்பாடு நீர்ப் பண்பாடு. மேற்கத்திய அல்லது ஆரியப் பண்பாடு நெருப்பு பண்பாடு. தட்பவெப்ப அடிப்படையில் நாம் அதிகமாக வெயில் அடிக்கும் பகுதியில் இருக்கிறோம். வெயிலில் வாடுபவர்களுக்கு தண்ணீர்தான் அவசியம். ஆகையால்தான், நம்முடைய சைவ வழிபாட்டில் தெய்வங்களுக்கு நீராட்டுகிறோம். பூப்பெய்த பெண்ணுக்கு நீராட்டுகிறோம். அடிக்கடி நம்முடைய இல்லங்களைத் தண்ணீர்விட்டுக் கழுவுகிறோம். மேலும், நீர்ப்பண்பாட்டில் நீர் தெய்வமாகக் கருதப்பட்டது. ஆகையால்தான், 1900ஆம் ஆண்டுகளில் காலரா போன்ற தண்ணீர் நோய்கள் வந்தபோது மக்கள் தண்ணீரைச் சுடவைக்க அஞ்சினர். தெய்வத்தை நெருப்பால் சுடுவதைவிட காலராவால் மடிவது மேல் என்று சொல்லி உயிர்விட்ட மக்களைப் பற்றி 'காவல் கோட்டம்' என்ற நூலில் பதிவுசெய்கிறார் திரு. சு. வெங்கடேசன். ஆனால், ஆரியப் பண்பாடு நெருப்பு பண்பாடு. ஆகையால்தான் தெய்வங்களுக்கு அவர்கள் நெருப்பு காட்டுகின்றனர், ஆரத்தி எடுக்கின்றனர், ஹோமம் குண்டம் வளர்க்கிறார்கள். அவர்கள் குளிர்நாட்டிலிருந்து வந்தவர்கள். அவர்களுக்கு தண்ணீர் எதிரி. இன்று, இவர்கள் தண்ணீரை மட்டுமல்ல, தண்ணீர்ப் பண்பாட்டைக் கொண்டிருக்கும் தமிழர்களையும் எதிரிகளாகப் பார்க்கின்றனர்.
மூன்றாம் உலகப் போர் என ஒன்று நடந்தால் அது தண்ணீருக்கான போராகத்தான் இருக்கும் என்று அரசியல் அறிஞர்கள் எச்சரிக்கின்றனர். தண்ணீர் அரசியல்தான் இன்று எங்கும் நடக்கிறது.
மேலும், நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் தண்ணீர் மறைநீராக இருக்கிறது. ஒரு முட்டையில் 20 லிட்டர் மறைநீரும், ஒரு கிலோ அரிசியில் 5000 லிட்டர் மறைநீரும், நாம் அணியும் ஒரு ஜீன்ஸ் பேண்ட்டில் ஏறக்குறைய 10000 லிட்டர் மறைநீரும் இருக்கிறது. அதாவது, இவை என் கைக்கு வர இவ்வளவு தண்ணீர் செலவழிக்கப்பட வேண்டும். இன்று மேற்கத்திய நாடுகள் கீழைத்தேய நாடுகளின் தண்ணீர் ஆதாரத்தை தங்களுடைய மூலதனமாகக் கொண்டு வாழ முற்படுகின்றன.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 4:5-42), சமாரியாவில் உள்ள சிக்கார் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்த இயேசு, பயணக் களைப்பால் கிணற்றருகே அமர, அங்கு வந்த சமாரிய இளவல் ஒருத்தியிடம், 'குடிக்க எனக்கு தண்ணீர் கொடு!' என்று கேட்கின்றார். இன்றைய முதல் வாசகத்தில் (காண். விப 17:3-7), தாகத்தால் பாலைநிலத்தில் அலைக்கழிக்கப்படுகின்ற இஸ்ரயேல் மக்கள், மோசேயிடமும் அவர் வழியாக ஆண்டவரிடமும், 'எங்களைத் தண்ணீர் இல்லாமல் சாகடிக்கவா எங்களை அழைத்து வந்தீர்?' என முணுமுணுக்கின்றனர்.
நம் வாழ்வின் மையமாக இருக்கும் தண்ணீர் இன்றைய இறைவார்த்தை வழிபாட்டின் மையமாகவும் இருக்கிறது.
இரண்டு வாரங்களாக யூட்யூபில் அழகான விளம்பரம் ஒன்று வருகிறது. 'எங்க ஊருக்கு நடுவுல ஒருநாள் ஒருத்தர் ஷவர் வைத்த பாத்ரூம் கட்டினார்' என்று தொடங்கும் ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் அந்த விளம்பரத்தின் இறுதியில், 'நகரத்தில் ஒரு நபர் ஒரு நேரம் குளிக்கப் பயன்படுத்தும் ஷவர் தண்ணீரில் ஒரு கிராமம் முழுவதும் ஒருநாள் தண்ணீர் பருகும்' என்ற வாசகம் தண்ணீரின் அருமையை, அவசியத்தை நமக்கு உணர்த்துகிறது.
இன்றைய இறைவார்த்தை வழிபாட்டில் இரண்டு கதைகளைப் பார்க்கிறோம்.
முதல் கதையில் இஸ்ரயேல் மக்கள் செங்கடலைக் கடந்து சீனாய் மலை நோக்கிச் செல்லும் பாலைநிலத்தில் நிற்கின்றனர். அங்கு தண்ணீர் இல்லை. சில மாதங்களுக்கு முன்தான் அவர்களுடைய கடவுள் செங்கடலை இரண்டாகப் பிளந்து கட்டாந்தரையில் அவர்களை நடக்கச் செய்து பாரவோனின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வந்தார். பசி வந்தால் பற்றும் பறக்கும் என்பார்கள். ஆனால், தாகம் வந்தால் தன்னைப் படைத்தவரையே கேள்விக்குள்ளாக்குகிறது மானுடம். அதுதான் இங்கேயும் நடக்கிறது. 'நீர் எகிப்திலிருந்து எங்களை வெளியேறச் செய்தது எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் கால்நடைகளையும் தாகத்தால் சாகடிக்கவா?' எனக் கேட்கின்றனர். இவர்களின் கேள்வி மேலோட்டமாக தண்ணீருக்கான தேடலாக இருந்தாலும், இவர்களின் ஆழ்மனதில், 'நம் ஆண்டவர் நம்மோடு இருக்கிறாரா?' என்ற கேள்வியே நிரம்பி நிற்கிறது. 'ஆண்டவர் நம்மோடு இருந்தால் நமக்குத் தாகம் எடுக்காதே. அப்படி தாகம் எடுத்தாலும் அவர் நமக்குத் தண்ணீர் தருவாரே' என்ற எண்ணத்தில்தான் ஆண்டவரின் இருப்பைச் சந்தேகிக்கின்றனர் மக்கள்.
இரண்டாவது கதையில், இயேசு சமாரிய இளவல் ஒருவரிடம், 'குடிக்க எனக்கு தண்ணீர் கொடும்' எனக் கேட்கின்றார். முதலில் இவள் ஒரு பெண். இயேசுவின் சமகாலத்தில் இரண்டாம் தரமாக நடத்தப்பட்ட பாலினம் பெண் இனம்.இவள் ஒரு சமாரியப்பெண். பூகோள அடிப்படையில் பார்த்தால் யூதேயாவிற்கும் கலிலேயாவிற்கும் இடையே உள்ள பகுதியே சமாரியா. கிமு 732ல் அசீரியர்கள் இஸ்ரயேல் மீது படையெடுத்த அவர்களைத் தங்கள் நாட்டுக்கு அடிமைகளாகக் கடத்திச் செல்கின்றனர். அங்கிருந்து மீண்டு வந்த மக்கள் அசீரியர்களுடன் திருமண உறவிலும் ஈடுபடத் தொடங்குகின்றனர். இப்படியாக யூதர்களும், அசீரியர்களும் இணைந்து உருவானதுதான் சமாரிய இனம். யூத ரத்தத்தை மற்றவர்களுடன் கலந்ததால் மற்ற யூதர்கள் இவர்களைத் தீண்டத்தகாதவர்கள் என்றும் தீட்டுப்பட்டவர்கள் எனவும் கருதினர். மேலும் சமாரியர்கள் யூத விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களை மட்டுமே தங்கள் விவிலியமாகக் கொண்டவர்கள். யூத மக்கள் இறைவனை எருசலேமில் வழிபட்டதுபோல சமாரியர்கள் கெரிசிம் என்ற மலையில் யாவே இறைவனை வழிபடுகின்றனர். இப்படியாக கடவுள் வேறு, விவிலியம் வேறு, தூய்மையில் குறைவு என இருந்த மக்களில் ஒருவரான சமாரியப் பெண்ணைச் சந்திக்கின்றார் இயேசு. இதில் இயேசு இரண்டு மரபுமீறல்களைச் செய்கின்றார்: ஒன்று, யூதர்கள் சமாரியர்களோடு பண்ட பாத்திரங்களில் கையிடுவதில்லை. ஆனால் இயேசு அதையும் மீறி சமாரியப்பெண்ணிடம் 'தண்ணீர்' கேட்கின்றார். இரண்டு, யூத ஆண்கள், இன்னும் அதிகமாக யூத ரபிக்கள் பெண்களிடம் பொதுவிடங்களில் பேசுவது கிடையாது. அதையும் மீறி பெண்ணிடம் உரையாடுகின்றார் இயேசு. இவள் 'ஒரு மாதிரியான பெண்.' பெண்கள் காலை அல்லது மாலையில்தான் நீர் எடுக்க கிணற்றுக்கு வருவர். இந்தப் பெண் நண்பகலில் வருகின்றார். 'யாரும் தன்னைப் பார்த்துவிடக்கூடாது' என்பதற்காகவா? அல்லது ஊர் வாயில் விழக்கூடாது என்பதற்காகவா? அல்லது மற்ற பெண்களும் அவரை ஒதுக்கிவிட்டார்களா? இந்தப் பெண்ணின் அறநெறி பற்றி நற்செய்தியில் ஒன்றும் குறிப்பிடப்படவில்லை. 'இவர் ஐந்து கணவரைக் கொண்டிருந்தார்' என்பதிலிருந்து இவர் அறநெறி பிறழ்வில் இருந்தவர் என நாம் முடிவுசெய்யக்கூடாது. ஏனெனில் 'லெவிரேட் திருமணம்' என்னும் 'கொழுந்தன் திருமணமுறையில்' இவர் திருமணம் செய்திருக்கலாம். இருந்தாலும், இவரின் நண்பகல் வருகை நமக்கு நெருடலாக இருக்கிறது.
ஆக, பிறப்பாலும், பின்புலத்தாலும், பிறழ்வாலும் காலியான குடமாக தண்ணீர் எடுக்க வருகின்றார் இவர். இயேசுவுக்கு இந்தப் பெண்ணின் பிறப்பும், பின்புலமும், பிறழ்வும் கண்களுக்குத் தெரியவில்லை. அவரின் கண்களுக்குத் தெரிவதெல்லாம் இந்தப் பெண்ணின் இடுப்பில் இருந்த காலிக்குடம் மட்டும்தான். 'குடிக்க எனக்கு தண்ணீர் கொடும்!' என்கிறார் இயேசு. ஏற்கனவே கிணற்றருகில் இருப்பவர் இயேசு. ஆனால் இந்தப் பெண்ணோ இப்போதுதான் வருகின்றார். முறைப்படி பெண்தான் இயேசுவிடம் தண்ணீர் கேட்டிருக்க வேண்டும். அல்லது இந்தப் பெண் தண்ணீர் இறைப்பதை இயேசு பார்த்துக்கொண்டே இருந்துவிட்டு, 'கொஞ்சம் வாட்டர் ப்ளீஸ்' என்று கேட்டிருக்கலாம்.
'தண்ணீர்' என்ற வார்த்தையை மையமாக வைத்து உரையாடல் தொடங்கி தொடர்கிறது.
'நீர் எப்படி தண்ணீர் கேட்கலாம்?'
'தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை'
'நான் தரும் தண்ணீர்'
'தாகம் எடுக்காது'
'அந்த தண்ணீரை எனக்குத் தாரும்'
என தண்ணீரே உரையாடலின் முக்கிய வார்த்தையாக இருக்கிறது.
வெகு சில நிமிடங்களே தாகம் தீர்க்கும் மிகச் சாதாரண தண்ணீரை எடுக்கச் சென்ற இளவலிடம் இயேசு இறையியல் பேச ஆரம்பிக்கின்றார். இதுதான் கடவுளின் பண்பு. நாம் ஒரு தேவை என அவரிடம் சென்றால், அந்த தேவையைக் கடந்து அடுத்தடுத்த நிலைக்கு அவர் நம்மை அழைத்துச் செல்கின்றார். 'உனக்கு ஐந்து கணவர்கள் உண்டு' என இயேசு சொல்வதை 'உனக்கு ஐந்து கடவுளர்கள் உண்டு' எனவும் மொழிபெயர்க்கலாம். ஏனெனில் இயேசுவின் காலத்துச் சமாரியர்கள் ஐந்து கடவுளர்களை வழிபட்டனர் (காண். 2 அரசர்கள் 17:24). அத்தோடு விடவில்லை இயேசு. 'இந்த மலையிலும் அல்ல. அந்த மலையிலும் அல்ல. கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்பிற்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர்' எனச் சொல்கிறார் இயேசு. 'நீர் இறைவாக்கினர் என நான் கண்டுகொண்டேன்' என அறிக்கையிட்ட சமாரியப்பெண்ணிடம், 'நானே அவர் - நானே கிறிஸ்து' என தன்னை வெளிப்படுத்துகிறார் இயேசு.
நிக்கதேம் என்ற யூத ஆணுக்கு இரவில் கிடைக்காத இந்த வெளிப்பாடு, பெயரில்லாத இந்த சமாரியப் பெண்ணுக்கு நண்பகலில் கிடைக்கிறது. இதுவும் கடவுளின் செயல்பாடே.
இறைவனின் அருள்நிலையைத் தாங்கமுடியாத அந்த கண்ணீர் குடம் தான் கொண்டுவந்த தண்ணீர் குடத்தை அப்படியே போட்டுவிட்டு ஊருக்குள் ஓடுகிறது. இந்த இளவல் யாரிடமிருந்து தன்னை மறைத்துக்கொள்ள நினைத்தாளோ அவர்களை நோக்கி ஓடுகிறாள். அதாவது, 'என்னை ஏற்றுக்கொள்ள ஒருவர் இருக்கிறார்' என்ற உறுதி வந்தவுடன், 'என்னை ஏற்றுக்கொள்ளாமல் எத்தனை பேர் இருந்தாலும் அவர்களைப் பற்றிக் கவலையில்லை' என அவர்களை நோக்கி ஓடுகின்றாள் இளவல்.
இதற்கிடையில் உணவு வாங்க ஊருக்குள் சென்ற சீடர்கள் திரும்பி வருகின்றார்கள். தான் இதுவரை பேசிக்கொண்டிருந்ததை விட்டுவிட்டு சம்பந்தமேயில்லாத ஒரு டாபிக்கை எடுத்துப் பேசிகின்றார் இயேசு. 'அறுவடை இருக்கு, அரிவாள் இருக்கு, கதிர்கள் முற்றி இருக்கு, வேலைக்காரங்க சம்பளம் வாங்குறாங்க' என்ற இயேசுவின் பேச்சு நகைச்சுவையைத் தருகின்றது.
ஊருக்குள் சென்ற இளவல், 'நான் செய்த எல்லாவற்றையும் என்னிடம் சொன்ன மனிதரை வந்து பாருங்கள். அவர் மெசியாவாக இருப்பாரோ?' என மக்களுக்கு அறிவிக்கின்றார். 'வந்து பாருங்கள்' என்ற வார்த்தையை இயேசு தன் முதற்சீடர்களைப் பார்த்துச் சொல்கிறார். மேலும், பிலிப்பு நத்தனியேலிடம் சொல்லும் வார்த்தையும் இதுவே. இங்கே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். 'இவர்தான் மெசியா' என உறுதியாக அறிவிக்காமல், 'இவராக இருப்பாரோ!' என தயக்கம் காட்டுகிறார் இளவல். இறையனுபவத்தில் தயக்கம் மிக அவசியம். சில நேரங்களில், 'இதுதான் இறைவன். இதுதான் இறையனுபவம்' என கடவுளுக்கு செக்ரட்டரி மாதிரி அவரை முற்றிலும் அறிந்தவர்போல நாம் பேசுகிறோம். பல மதங்கள் தொட்டில் கட்டி ஆடும் நம் இந்திய மரபில் இந்த தயக்கம் இன்னும் அதிகம் அவசியமாகிறது. இல்லை என்றால், 'என் கடவுள்தான் பெரியவர்' என நாம் அடுத்தவரை தள்ளிவைக்க ஆரம்பித்துவிடுவோம்.
இளவலின் பேச்சைக் கேட்டு சமாரிய நகரத்தார் அனைவரும் இயேசுவிடம் வருகின்றனர். அந்த மக்களின் தாராள உள்ளத்தையும் நாம் பார்க்க வேண்டும்.'யார் சொன்னா?' என்பது முக்கியமல்ல. 'என்ன சொன்னாள்?' என்பதுதான் முக்கியம் என இயேசுவை நோக்கி புறப்படுகின்றனர். தங்கள் ஊரில் தங்குமாறு இயேசுவிடம் கேட்கின்றனர். தாங்கள் இறையனுபவம் பெற்றவர்களாக, 'இப்போது உன் பேச்சைக் கேட்டு நாங்கள் நம்பவில்லை. நாங்களே அவர் பேச்சைக் கேட்டோம். அவர் உண்மையில் உலகின் மீட்பர்' என அறிந்துகொண்டோம் என நம்பிக்கை அறிக்கை செய்கின்றனர்.
நம் நம்பிக்கை வாழ்வும் இப்படித்தான் இருக்க வேண்டும். குருக்களின் மறையுரை, வழிபாடு, ஞாயிறு மறைப்போதனை, வகுப்புகள் என நிறைய வழியில் நாம் இயேசுவைப் பற்றி அறிந்திருக்கலாம். ஆனால், அந்த அறிவு முழுமையானது அல்ல. அனுபவம் வழியாக இயேசுவை அறிய புறப்பட வேண்டும்.
'இறைவாக்கினர்,' 'கிறிஸ்து,' 'மீட்பர்' என அடுத்தடுத்த அடையாளத்தைப் பெறுகின்றார் இயேசு.
இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்களும், நற்செய்தி வாசகத்தில் சமாரியப் பெண்ணும் அவருடைய ஊராரும் தண்ணீர் கேட்பவர்களாக மாறுகின்றனர். இவர்களின் மற்றும் நமது தாகத்தைத் தீர்ப்பவர் கடவுள் ஒருவரே. இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 5:1-2,5-8), தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம்மேல் பொழியப்பட்டுள்ளது என்கிறார் பவுல்.
'எனக்கு தாகமாய் இருக்கிறது' என்பதை இயேசு இங்கே மறைமுகமாகவும், சிலுவையில் நேரிடையாகவும் (காண். யோவா 19:28) சொல்கிறார் இயேசு. இன்று நாமும் தாகமாய் இருக்கிறோம் - நேரிடையாக, மறைமுகமாக. என் தாகம் தணிக்க நான் சில நேரங்களில் கானல் நீரை நோக்கிச் சொல்கிறேன். ஆனால், கானல்நீர் ஒருபோதும் தாகம் தணிக்காது. சில நேரங்களில் அழிவைத் தரும் கசப்பு நீரையும் நான் குடித்துக்கொண்டிருக்கிறேன். வாழ்வின் ஊற்றாம் இறைவனை அருகில் வைத்துக்கொண்டு சாவின் சாக்கடை நீரை நான் ஏன் குடிக்க வேண்டும்? வாழ்வின் நீரைப் பெற்ற நான் என்னுடைய காலிக்குடத்தை அப்படியே போட்டுவிட்டு என் ஊரை நோக்கிப் புறப்பட வேண்டும்.
தண்ணீர் எடுக்கச் சென்றவள் வாழ்வின் ஊற்றைக் கண்டுகொள்கிறாள். தண்ணீர் கேட்டு முணுமுணுத்தவர்கள் இறைவனின் இருப்பை உறுதிசெய்துகொள்கின்றனர்.
'குடிக்க தண்ணீர் கொடு!' என்ற இயேசுவின் வேண்டுதலில் தண்ணீர் எதற்காக என்ற தெளிவு இருக்கிறது. தெளிவு இருக்கும் இடத்தில் தண்ணீர் வீணாவதில்லை. இதுவே என்னுடைய இறைவேண்டலாக இருந்தால், நான் ஆண்டவரைச் சோதிக்க மாட்டேன் (காண். திபா 95).
வாழ்வின் ஊற்றை நோக்கி!
தவக்காலத்தின் மூன்றாம் வாரத்தில் நாம் அடிஎடுத்து வைக்கிறோம். இந்த நாளில் கடவுள் நம்மிடம் விரும்புவது என்னவெனில் நாம் உலகம் சார்ந்த தற்காலிகமானற்றை, குறைவானவற்றை, நிலையில்லாதவற்றை விடுத்து நம்மோடு இருக்கும் கடவுளைக் கண்டறிந்து நிறைவானவற்றை, நிலையானவற்றை, நிரந்தரமானவற்றை நமதாக்கிக் கொண்டு கடவுளை உள்ளத்தில் வழிபட வேண்டும் என்பதையே.
தூய ஆவியாரின் பாடலில் நாம் "ஆத்ம தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே " அன பாடுவதுண்டல்லவா. ஆத்ம தாகம் என்பது என்ன? அந்த தாகம் கடவுளுக்கான தாகம். கடவுளை உண்மையாய் வழிபடுபவர்களுக்கும் அவரைத் தேடுபவர்களுக்கும் வருகின்ற தாகம். அப்படிப்பட்ட தாகத்தை நாம் கொண்டிருந்தால் கடவுள் வாழ்வின் ஊற்றாய் நம்மில் பொங்கி வருவார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஒரு அருமையான நிகழ்வு தரப்பட்டுள்ளது. சமாரியப் பெண்ணுக்கும் இயேசுவுக்கும் இடையேயான அந்த அழகிய உரையாடல் நம் வாழ்க்கைக்கு பல பாடங்களை கற்றுத்தருவதாக உள்ளது.
சமாரியப்பெண் யூத ஆண்மகனாக இயேசு தன்னிடம் நீர் கேட்பதைக் குறித்து வியந்தார். ஏனெனில் யூதர்கள் சமாரியரை ஒதுக்கி வைத்திருந்தனர். இந்நிலையில் இயேசு அப்பெண்ணிடம் தன்னை வெளிப்படுதத்தலானார். கடவுள் யாரையும் ஒதுக்கி வைப்பதில்லை என்பதை இதிலிருந்து நாம் அறிகிறோம்.
நான் தரும் நீரைப் பருகுகிறவர்களுக்கு தாகம் இராது என இயேசு கூறியதை சமாரியப் பெண் முதலில் தவறாகப் புரிந்து கொண்டார். அந்த தண்ணீரை தான் பருகிவிட்டால் வாழ்நாள் முழுதும் தண்ணீர் எடுக்கும் வேலை இருக்காது என அவர் எண்ணியிருக்கலாம். ஆனால் இயேசு அப்பெண்ணைப் பற்றிய உண்மையை அவளிடமே கூறி, அவளுடைய நிலையை உணரவைத்து தற்காலிக தாகம் தீர்க்கும் தண்ணீரை விட ஆன்ம தாகத்தை தீர்க்கும் தண்ணீரையே தேட வேண்டுமென அப்பெண்ணுக்கு உணர்த்தினார். மேலும் அத்தாகத்தைத் தீர்க்கும் வாழ்வின் ஊற்றாக மெசியாவாக தன்னையே அவர் வெளிப்படுத்தினார். இச்செய்தியின் மூலம் நம் வாழ்வில் நம்மோடு இருக்கும் வாழ்வின் ஊற்றாகிய கடவுளை நாம் கண்டறிய வேண்டும், அவரை நம் ஆன்ம தாகத்தை தீர்ப்பவராக உணரவேண்டும் என்பதை நாம் அறிகிறோம்.
உண்மையான வழிபாட்டின் பொருளையும் இன்று இயேசு உணர்த்துகிறார். கடவுளை சமாரியப்பெண்போல மலையில் வழிபட்டால் போதும் எனவோ ,நம்மில் பலரைப் போல ஆலயத்தில் வழிபட்டால் போதும் எனவோ நாம் கொண்டிருக்கும் மனநிலையை நாம் அகற்ற வேண்டும். கடவுளை நாம் நமது உள்ளத்தில் வழிபடுவதே உண்மையான வழிபாடு.அவ்வாறு அவரை உள்ளத்தில் வழிபட்டால் அச்சமாரியப் பெண் தன் நம்பிக்கையை அந்த ஊருக்கே அறிவித்து அவர்களையும் இயேசுவை நம்பச் செய்தது போல நாமும் சான்று பகர முடியும்.
எனவே வாழ்வின் ஊற்றாம் இறைவனை நோக்கி நமது பயணம் இருக்கட்டும். நமது உள்ளத்தில் இறைவனை வழிபட்டு அவருக்கு சான்று பகரும் வாழ்வாய் நம் வாழ்வு அமையட்டும்.
இறைவேண்டல்
அன்பு இறைவா! நீரே எங்கள் வாழ்வின் ஊற்று! எங்கள் ஆன்ம தாகத்தை தீர்ப்பவர்! என உணர்ந்து உம்மை உள்ளத்தில் வழிபட வரமருளும். ஆமென்.
