மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

தூய ஆவியார் பெருவிழா
இரண்டாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
திருத்தூதர் பணிகள் 2:1-11 | கலாத்தியர் 5:16-25 | யோவான் 15:26-27; 16:12-15

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்

மனித இதயத்தில்‌ குடிபுகுந்த ஆவியானவர்‌

அன்றாட வாழ்வில்‌ பல இன்ப துன்பங்களைச்‌ சந்திக்கிறோம்‌. மனித வாழ்வு வளர்ச்சியை நோக்கிப்‌ பயணம்‌ செய்யும்போது, அவ்வப்போது தடுமாற்றம்‌, மேடு பள்ளங்களைச்‌ சந்திக்கிறோம்‌. அப்படிப்பட்ட சூழ்நிலையில்‌ நம்மை வழிநடத்த ஒரு துணை 'தேவைப்படுகிறது. அந்த துணையாளர்தான்‌ தூய ஆவியானவர்‌. படைப்பின்‌ தொடக்கமே தூய ஆவியின்‌ செயல்பாடுதான்‌. தூய ஆவியானவர்‌ தண்ணீரின்‌ மீது அசைவாடிக்‌ கொண்டிருந்தார்‌ (தொ.நூ. 1:2). அவரால்‌ படைப்பாற்றல்‌ உருவானது. மனிதன்‌ தனிமையாய்‌ இருப்பது நல்லதல்ல என்பதை அறிந்த கடவுள்‌ அவனுக்கு சரி நிகராக ஒரு துணையை உருவாக்கினார்‌. துணை இருக்கும்போது நம்பிக்கை பிறக்கிறது. விரக்தி, வேதனைகளைப்‌ பகிர்ந்து கொள்ள முடிகிறது. உள்ளத்திற்கு உறுதி கிடைக்கிறது. இக்கட்டான சூழ்நிலையில்‌ தூய ஆவியின்‌ ஆற்றலையும்‌, செயலாக்கத்தையும்‌ நாம்‌ புரிந்துகொள்கிறோம்‌. தடுமாறும்‌ மனிதனை, பாதை மாறிச்‌ செல்லும்‌ மனிதனை இயேசுவிடம்‌ அழைத்துச்‌ செல்லும்‌ மகத்தான பணியைச்‌ சிறப்பாகச்‌ செய்பவர்‌ தூய ஆவியானவர்‌. தூய ஆவியானவர்‌ கடவுளுக்கும்‌, மனிதனுக்கும்‌ இடையே ஓர்‌ இணைப்புப்‌ பாலம்‌, இடைநிலையாளர்‌, ஒருங்கிணைப்பாளர்‌ எனலாம்‌.

தந்தையின்‌ விருப்பங்களை இம்மண்ணுலகில்‌ நிறைவு செய்வதற்கு, அனைத்துத்‌ துன்பங்களையும்‌ தாங்கிக்கொள்ள பக்குவப்பட்ட மனநிலையை, தூய ஆவியின்‌ வழியாகவே இறைமகன்‌ இயேசு பெற்றுக்கொண்டார்‌. விண்ணகம்‌ சென்ற இயேசு, தூய ஆவியானவரை அனுப்பினார்‌. ஆவியானவர்‌. மிகுந்த வல்லமையோடு இறங்கி வந்தார்‌. பயந்து நடுங்கிய திருத்தூதர்கள்‌ துணிவோடு போதிக்கவும்‌, பல மொழிகளில்‌ பேசவும்‌ தொடங்கினர்‌. வலுவற்ற நிலையில்‌ இருந்த அவர்களுக்கு தூய ஆவியானவர்‌ துணை நின்றார்‌ (உரோ. 8:26).

தூய ஆவியின்‌ கொடைகளைப்‌ பெற்றவர்கள்‌ சோதனைகளைக்‌ கடந்து, சாதனைகள்‌ படைப்பார்கள்‌. இயேசுவின்‌ திருமுழுக்கு, பாலைவனச்‌ சோதனை, கலிலேயாவில்‌ பொதுப்பணி தொடக்கம்‌ இதை தெளிவாக்குகிறது (லூக்‌. 3:21-45). குழப்பம்‌ வரும்போதெல்லாம்‌ இயேசுவைத்‌ தந்தையிடம்‌ அழைத்துச்‌ சென்றவர்‌ தூய ஆவியானவர்‌. பணி வாழ்வின்‌ வழியாக, தான்‌ பெற்ற அனுபவத்தைத்‌ தனது சீடர்களுக்கும்‌ பகிர்ந்து கொடுத்தார்‌. உயிர்த்த இயேசு இரண்டு முறை உங்களுக்குச்‌ சமாதானம்‌ என்று . கூறி, தூய ஆவியானவரை அனுப்பினார்‌ (யோவா. 20:19-21). இந்த சமாதானத்தை நமக்கு அளிப்பவர்‌ தூய ஆவியானவரே. நானும்‌ தந்தையைக்‌ கேட்பேன்‌. அவர்‌ மற்றொரு துணையாளரை உங்களுக்குத்‌ தருவார்‌. அவர்‌ உங்களோடு என்றும்‌ இருப்பார்‌, அவர்‌ உண்மையின்‌ ஆவியானவர்‌ (யோவா. 14:16-17). கிறிஸ்து வாக்களித்த தூய ஆவியை நாம்‌ திருவருட்சாதனங்கள்‌ வழியாகப்‌ பெற்றுக்கொள்கிறோம்‌.

ஆதிக்‌ கிறிஸ்தவர்களிடம்‌ ஒரே மனம்‌, ஒரே உள்ளம்‌, கூடி செபித்தல்‌, தேவைக்கு ஏற்ப பகிர்தல்‌ இவைகள்‌ அனைத்தையும்‌ செயலாக்கம்‌ பெறச்‌ செய்தது தூய ஆவியின்‌ ஆற்றலே. அவர்களின்‌ அகத்திலிருந்து தூய ஆவியின்‌ ஆற்றல்‌ வெளிப்பட்டதால்தான்‌ பல இடங்களுக்குச்‌ சென்று போதித்தனர்‌. பொதுவுடைமை நோக்கில்‌ உறவுகளில்‌ மேம்பாடு கண்டனர்‌.

இருவர்‌ படகில்‌ ஏறி அக்கரையில்‌ உள்ள வீட்டுக்குச்‌ செல்லும்‌ முன்‌ படகை கரையோர மரத்தில்‌ கட்டிவிட்டு, வீட்டிற்குத்‌ தேவையான உணவுப்‌ பொருட்களை வாங்கினர்‌. பின்பு மதுக்கடைக்குச்‌ சென்று நன்கு குடித்துவிட்டு வந்து படகில்‌ ஏறி மிகுந்த உற்சாகத்துடன்‌ தண்டு வலித்தனர்‌. நீண்ட நேரத்திற்குப்‌ பிறகு போதை தெளிந்தது. கரையில்‌ உள்ள மரத்தில்‌ படகு கட்டப்பட்டிருப்பது நிதானம்‌ வந்த பிறகுதான்‌ அவர்களுக்குத்‌ தெரிந்தது. தூய ஆவியைப்‌ பெற்ற பிறகும்‌ வாழ்வில்‌ மாற்றமும்‌, வளர்ச்சியும்‌ இல்லாமல்‌ பழைய நிலையிலேயே வாழும்‌ மனிதர்களையும்‌ பார்க்கிறோம்‌. இப்படிப்பட்ட மனிதர்கள்‌ புது வாழ்வு பெற தூய ஆவியானவர்‌ அழைப்பு விடுக்கின்றார்‌.

தூய ஆவியின்‌ செயலாக்கம்‌

குடும்ப உறவுகளில்‌ தடுமாறும்‌ மனிதனை, நல்‌ வழிப்படுத்துவது தூய ஆவியே. அந்த ஆவியால்‌ செயலாக்கம்‌ பெறும்போது அங்கே அமைதி பிறக்கிறது. உறவுகள்‌ அனைவரையும்‌ ஒருமுகப்படுத்துகிறது. கடவுளின்‌ ஆவியானவர்‌ தண்ணீரின்‌ மீது அசைவாடிக் கொண்டிருந்தார்‌. உலக தொடக்கமே ஆவியின்‌ செயல்பாடாக அமைந்தது (தொ.நூ. 1:2).

அந்நேரமுதல்‌ கடவுளால்‌ ஏவப்பட்டவராய்‌ அவர்‌ இறைவாக்கு உரைத்தார்‌ (எண்‌. 24:1).

ஆண்டவரின்‌ ஆவி என்னைத்‌ தூக்கிக்கொண்டு போய்‌ ஒரு பள்ளத்தாக்கின்‌ நடுவில்‌ விட்டது (எசே. 37:1).

ஆண்டவரின்‌ ஆவி என்‌ மேலே. அவர்‌ என்னை அருட்பொழிவு செய்துள்ளார்‌ (லூக்‌. 4:18).

இயேசு அலகையால்‌ சோதிக்கப்பட்டார்‌. தூய ஆவியின்‌ துணையால்‌ வெற்றி பெற்றார்‌ (மத்‌. 4:11).

தாயின்‌ வயிற்றிலிருக்கும்போதே அவர்‌ தூய ஆவியால்‌ முற்றிலும்‌ ஆட்கொள்ளப்பட்டார்‌ (லூக்‌. 1:15.)

வானதூதர்‌ மரியாவிடம்‌, தூய ஆவி உன்‌ மீது வருவார்‌. உன்னத கடவுளின்‌ வல்லமை உன்‌ மீது நிழலிடும்‌ (லூக்‌. 1:35) என்றார்‌.

இயேசு திருமுழுக்குப்‌ பெற்று செபித்துக்‌ கொண்டிருந்த போது வானம்‌ திறந்தது. தூய ஆவி புறா வடிவில்‌ அவர்‌ மீது இறங்கினார்‌ (லூக்‌. 3:22).

ஒரு தாய்‌ கருவுறும்போது தாயின்‌ சுவாசத்திலேயே குழந்தை உயிர்‌ வாழ்கிறது. அந்த சுவாசம்‌, ஆதியிலே ஆவியானவர்‌ மனிதன்‌ மேல்‌ ஊதிய சுவாசமே. இன்றைக்கும்‌ அது தலைமுறை தலைமுறையாக, பிள்ளைகளின்‌ பிள்ளைகளாகத்‌ தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. வயிற்றுக்குள்‌ தாயினுடைய சுவாசத்தினால்‌ உயிர்‌ வாழ்கின்ற குழந்தை, உலகத்தில்‌ பிறக்கும்போது தானாகவே சுவாசிக்க ஆரம்பித்துவிடுகிறது. இது எத்தனை ஆச்சரியமான செயல்‌. இந்தக்‌ காட்சியை சற்றே கற்பனை செய்துப்‌ பாருங்கள்‌. நமக்கு ஆவிக்குரிய நுரையீரல்‌ இருக்கிறது என்று வைத்துக்‌ கொள்வோம்‌. கிறிஸ்து நம்மீது ஊதி தூய ஆவியைப்‌ பெற்றுக்‌ கொள்ளுங்கள்‌ என்று சொல்லும்போது அந்த ஆவிக்குரிய சுவாசப்‌ பைகள்‌ இயங்கத்‌ தொடங்குகின்றன. அப்போது நாம்‌ அனைவரும்‌ இறைவனுக்குச்‌ சொந்தமானவர்களாக முத்திரையிடப்படுகிறோம்‌.

"நாம்‌ கூடி செபிக்கும்போது அங்கே இறைவன்‌ இருக்கிறார்‌. தூய ஆவியால்‌ நிரப்பப்படுகிறோம்‌. எனக்கு உறுதியூட்டும்‌ இறைவனின்‌ துணையால்‌ எதையும்‌ செய்ய எனக்கு ஆற்றல்‌ உண்டு (பிலி, 4:13)

உலகத்‌ தொடக்கத்தில்‌ மனித இதயத்தில்‌ குடிபுகுந்த ஆவியானவர்‌ இன்றும்‌ நம்மை வழிநடத்தி வருகிறார்‌. துன்பத்தில்‌ தோள்‌ கொடுக்கிறார்‌. நமது போராட்ட வாழ்வுக்கு மத்தியில்‌ சமாதானத்தின்‌ தூதுவராக நமக்குள்‌ இருந்து செயல்படுகிறார்‌. நமக்கு ஆற்றல்‌ தந்து ஆன்மீக வாழ்வில்‌ வளமைக்‌. காண தூய ஆவியின்‌ துணை வேண்டி செபிப்போம்‌.

சிந்தனைக்கு
ஒரு கண்ணாடிக்‌ குடுவையைத்‌ தண்ணீர்‌ ஊற்றி நிரப்பினால்‌ உள்ளே இருக்கும்‌ எல்லா வாயுவும்‌ மெல்ல மெல்ல வெளியே போய்விடும்‌. அதுபோல நம்‌ உள்ளத்தில்‌ இருக்கின்ற அசுத்த நினைவுகள்‌, சிந்தனைகள்‌, தீய செயல்பாடுகள்‌ எல்லாம்‌ வெளியே போக வேண்டுமென்றால்‌ நமக்குள்ளே தூய ஆவியானவர்‌ ஊற்றப்பட வேண்டும்‌. அவர்‌ நம்‌ உள்ளத்தில்‌ நிரம்பி வழியும்போது அசுத்தங்கள்‌ தானாகவே விலகிவிடும்‌. அப்போது நமது இதயமும்‌, செயல்பாடுகளும்‌ பரிசுத்தமானதாக இருக்கும்‌.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

அச்சம் அகற்றி அமைதியில் வாழ்வோம்

 1. தூய ஆவியார் நமக்கு என்னென்ன நன்மைகளைச் செய்வார்? கடவுளின் மாபெரும் செயல்களைப் பற்றி நமக்கு எடுத்துரைப்பார் (முதல் வாசகம்).
 2. இயேசு கிறிஸ்து ஆண்டவர் என்ற உண்மையை நமக்குச் சுட்டிக்காட்டுவார் (இரண்டாம் வாசகம்).
 3. நமது மனத்திலிருக்கும் அச்சத்தை அகற்றி அமைதியை அளிப்பார் (நற்செய்தி).

தூய ஆவியார் யார்?

ஒரு கிராமத்திலிருந்து புனித இடங்களையெல்லாம் சுற்றிப்பார்க்க 100 பேர் புறப்பட்டனர். அவர்களுடைய திருப்பயணத்தில் ஒரு நாள். ஒரு காட்டின் நடுவே ஓடிக்கொண்டிருந்த ஆறு ஒன்றில் குளித்துவிட்டு 100 பேரும் கரையேறினர். பயணத்தைத் தொடர்வதற்கு முன்னால் ஒருவர் எல்லாரையும் எண்ணினார். ஒருவர் குறைந்தார். ஒருவரை ஆறு அடித்துச்சென்றுவிட்டது எனச் சொல்லி அத்தனைபேரும் கண்கலங்கினர். அந்த நேரத்தில் அந்தப்பக்கமாக ஞானமே உருவான குரு ஒருவர் வந்தார்! அந்த ஞானி அவர்களைப் பார்த்து, ஏன் இந்த சோகம்? என்றார். அந்த மக்கள் நடந்ததைச் சொன்னார்கள். குரு எண்ணினார்! சரியாக 100 பேரும் இருந்தார்கள்! குரு, "எண்ணியவர் தன்னை எண்ணிக்கையில் சேர்க்க விட்டுவிட்டார். அதனால்தான் இந்தக் குழப்பம்" என்றார். ஞானம் பெற்ற மக்கள் ஞானிக்கு நன்றி சொல்லி, பயணத்தைத் தொடர்ந்தனர்.

இந்தக் கதையிலே வந்த ஞானியைப் போன்றவர்தான், இல்லை, இல்லை, ஞானிகளுக்கெல்லாம் ஞானியாக விளங்குபவர்தான், இல்லை, இல்லை ஞானத்தின் ஊற்றுதான் தூய ஆவியார்.

நம்மைப்பற்றி எண்ணிப்பார்க்காமல் நாம் வாழ்வதுதான் நாம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்குக் காரணம்! இந்த உண்மையைச் சுட்டிக்காட்டுபவர்தான் தூய ஆவியார்.

இதோ தூய ஆவியார் நம்மோடு இவ்வாறு பேசுகின்றார் :

உன்னையே நீ உற்றுப்பார் ! திருமுழுக்கு நாளன்று உனக்குள் வாழ வந்த நான் உன்னில் உடனிருப்பதை நீ அறிவாய்! அந்த அறிவு இறைவனின் மாபெரும் செயல்களைப்பற்றி உன்னைச் சிந்திக்க வைக்கும்; இயேசு கிறிஸ்து ஆண்டவர் என்பதை உனக்குப் புரியவைக்கும்; அச்சத்தை அகற்றி அமைதியில் உன்னை வாழவைக்கும்.

மேலும் அறிவோம் :

அச்சம் உடையார்க்(கு) அரண்இல்லை ஆங்கில்லை
பொச்சாப்(பு) உடையார்க்கு நன்கு (குறள் : 534).


பொருள் : உள்ளத்தில் அஞ்சி நடுங்குபவர்க்குப் புறத்தே எத்தகைய பாதுகாப்பு இருந்தும் பயனில்லை. அதேபோன்று, மனத்தகத்தே மறதி உடையவர்க்கு எவ்வளவு செல்வம் சேர்ந்தாலும் அவற்றால் பயன் எதுவும் விளையாது!

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

"பரிசுத்த ஆவியார் எப்போது வருகிறார்?"

ஒரு பங்குத் தந்தை தனது பங்கிலே தங்குவதில்லை, ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றியபின் உடனடியாக, "மோட்டார் சைக்கிளில்" மாயமாக மறைந்து விடுவார். ஒரு ஞாயிறு அன்று திருப்பலி திறைவேற்றிய உடனே "மோட்டார் சைக்களில்' வழக்கம் போல் பறந்து சென்ற அவர், ஒரு பெரிய குழியில் விழுந்து விட்டார்; வெளியே வரமுடியாமல் திணறினார், அவ்வழியே சென்று பங்கு மக்கள், "இவர் அடுத்த ஞாயிற்றுக்கிழமை தான் நமக்குத் தேவைப்படுவோர், அதுவரை அவர் இக்குழியிலேயே கிடக்கட்டும்" என்று சொல்லிவிட்டுச் சென்றனர்.

இன்று சுத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து மக்கள் பல்வேறு சபைகளுக்குச் செல்வதற்குப் பல காரணங்கள் கூறுகின்றனர், அக்காரணங்களில் ஒன்று. "பங்குத் தந்தைக்கு மேய்ப்புப்பணி சார்ந்த அக்கறையில்லை, அவர் பங்கில் தங்குவதில்லை, பங்கு மக்களை அவர்களின் வீடுகளுக்குச் சென்று சந்திப்பதில்லை."

இப்பின்னணியில் இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கும் 'நல்லாயன் உவமை” முக்கியத்துவம் பெறுகிறது. பழைய உடன்படிக்கையில், கடவுளுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே நிலவிய உறவு ஓர் ஆயனுக்கும் அவருடைய ஆடுகளுக்கும் இடையே நிலவிய உறவுக்கு ஒப்பிடப்பட்டுள்ளது (எசா 40:11; எரே 23:3-4; எசே 34:11-18: திபா 23).

நல்லாயனுடைய தனிப்பண்புகள்: "அவர் இரவும் பகலும் தன் ஆடுகளுடன் இருக்கிறார். அவற்றின்மீது அக்கறை கொண்டு, அவற்றின் தேவைகளை நிறைவுசெய்து, அவற்றிற்காகத் தம் உயிரையும் கொடுத்து, அவற்றைக் கொடிய விலங்குகளிடமிருந்து பாதுகாக்கிறார்."

ஆனால், போலி ஆயர்கள் தங்கள் ஆடுகளை மேய்க்காமல் தங்களையே மேய்த்துக் கொண்ட அவலநிலையில் (எசா 24:7-8). 'என் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன்' என்று கடவுள் வாக்களித்தார் (எரே 3: 11:5), கடவுளால் வரக்களிக்கப்பட்ட ஒப்புயர்வற்ற ஆயர் இயேசு கிறிஸ்துவே. அவர் தம் ஆடுகள் ஒவ்வொன்றையும் தனிப்பட்ட முறையில் அறிந்து, அன்புசெய்து. அவற்றிற்காகத் தன் இன்னுயிரையும் கையளிக்கிறார். மேலும் அவரது மந்தையைச் சாராத மற்ற ஆடுகளையும் கூட்டிச் சேர்த்து ஒரே மேய்ப்பன் கீழ் ஒரே மந்தையை உருவாக்குகிறார் (யோவா 10:14-16), நல்லாயன் கிறிஸ்துவைப் பின்பற்றி, திருப்பணியாளர்கள், குறிப்பாக பங்குத்தந்தையர்கள். தங்களுடைய பங்கில் தங்கியிருந்து, சிறுவர்களிடம் அவர், "பரிசுத்த ஆவியார் எப்போது வருகிறார்?" என்று கேட்டார், அதற்கு அவர்கள்: "ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறார்” என்று பதில் சொன்னார்கள். இது கதையல்ல, நிஜம்! ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறவர் தூய ஆவியார் அல்ல. அவர் நம்பிக்கை கொள்வோர் உள்ளத்தில் நிரந்தரமாகக் குடி கொண்டுள்ளார், "தூய ஆவியாரின் நிரந்தரமான இயக்கத்தில் விசுவாசத்தில் வாழ்கிறவரே கிறிஸ்துவர்", கிறிஸ்தவர் களுக்கு அருமையான இலக்கணம் இது! உண்மையில், திருத்தூதர் பவுல், 'கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களோ கடவுளின் மக்கள்' (உரோ 8:14) என்றும், 'கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல' (உரோ 8:9) என்றும், "தூய ஆவியின் தூண்டுதலன்றி 'இயேசு ஆண்டவர்' என்று எவரும் கூற இயலாது' (1கொரி 12:13) என்றும் கோடிட்டுக் காட்டியுள்ளார். தூய ஆவியார் நம்மை அகநிலையிலும் புறநிலையிலும் இயக்கி வருகிறார், அகநிலையில் நம்முள் குடியிருந்து நம்மை அவரது ஆலயமாக்கிப் புனிதப்படுகிறார். புறநிலையில் நம்மை இயேசுவுக்குச் சாட்சிகளாகத் திகழச் செய்கின்றனர்.

நமது நாட்டு ஞானிகள் நமது உடலைப் பற்றி இழிவாகப் பேசுவர், நமது உடல் 'ஒரு புழுக்கூடு: வெறும் கட்டை.' காற்றடித்தால் கீழே விழுகின்ற தென்னமட்டை; பாம்பு கழற்றிப் போடும் சட்டை; அதை உற்றுப்பார்த்தால் வெறும் லொட லொட்டை' என்றெல்லாம் கூறுவர், ஆனால் தூய பவுல், " நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா?" (1கொரி 3:16) என்று கேட்கிறார். மேலும், காமச்சகதியில் புரண்ட கொரிந்தியர்களுக்கு, "உடல் பரத்தமைக்கு அல்ல, ஆண்டவருக்குரியது (1கொரி 6:13) என்று உரைக்கிறார்.

ஒரு 'குண்டு' அம்மா பங்குத் தந்தையிடம், "நானுமா பரிசுத்த ஆவியின் ஆலயம் என்று கேட்டதற்கு, பங்குத் தந்தை அவரிடம், "நீங்கள் பரிசுத்த ஆவியின் 'பசிலிக்கா' என்றாராம்!

தூய ஆவியார் நமது உள்ளத்தின் இனிய விருந்தினர், விருந்தினர்களை மென்மையாக, அனிச்ச மல்) ரைப் போல் நடத்த வேண்டும், வித்தியாசமாக அவர்களைப் பார்த்தால், அவர்கள் முகம் வாடிவிடும் என்கிறார் வள்ளுவர்

'மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து, நோக்கக் குழையும் விருந்து' (குறள் 90)

நமது உள்ளத்தின் விருந்தினரான தூய ஆவிக்கு நமது முறைகெட்ட சொல்லாலும் செயலாலும் வருத்தம் வருவிக்கவோ (எபே 4:30). அல்லது அவரது செயல்பாட்டைத் தடுக்கவோ (1தெச 5:19) கூடாது.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

சுடரொளியே வழிகாட்டு

நூறு, நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னே இத்தாலி யினின்று இங்கிலாந்து நோக்கிப் புறப்பட்டது கப்பல் ஒன்று. அந்தக் கப்பலின் மேல் தளத்தில் அறிவின் சிகரம், மேதை - பிற்காலத்தில் கத்தோலிக்குத் திருச்சபையில் கர்தினாலாக உயர்ந்து நின்ற - நியூ மென் ஒருவித மனக் குழப்பத்தில் அமைதியின்றி நடந்து கொண்டிருக்கிறார். உண்மை எது? அது எங்கிருக்கிறது? இயேசுவின் உண்மை வழியை உணர்த்தும் சபை எது? தான் இதுவரை வாழ்ந்து வந்த ஆங்கிலிக்கன் சபையா? தனக்கு முன் காட்சி தரும் கத்தோலிக்கு சபையா?... அந்த மனப் போராட்டத்தில் அவர் உள்ளம் துடித்துப் பாடியது தான் “Lead kindly light” என்ற அழியாத அமரத்துவம் பெற்ற ஆங்கிலப் பாடல்:

சூழ்ந்திடும் இருளில் ஊழல்கின்றேன்
அன்புச் சுடரொளியே வழிகாட்டு
பாழ்இருள் இரவிது வீடோ தொலைவினில்
பரிவொளியே வழிகாட்டு
பாதையின் முடிவில் உள்ளதோர் காட்சி
பார்த்திட வேண்டிலேன் - இங்கென்
பாதம் பெயர்த்திட ஓரடி போதும்
பரஞ்சுடரே வழிகாட்டு
என்னை நீ அழைத்துச் செல் என நின்னை
ஏழையேன் இறைஞ்சியதில்லை
என்றுமே முரடாய் என்வழி சென்றேன்
என்னினும் வழிகாட்டு
பகட்டொளி உலகப் படரிலே படர்ந்தேன்
பயம் என்னைப் பற்றிய போதும்
அகம்பிடித் தலைந்தேன் அதையெல்லாம் எண்ணாது
அருஞ்சுடரே வழிகாட்டு.

"உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும் போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்” (யோ.16:13) என்ற இயேசுவின் வாக்குறுதியே நியூமெனைப் பாட வைத்தது.

உண்மையின் ஆவியானவர் எப்படியெல்லாம் மனித வாழ்வில் செயல்படுகிறார்!

நியூமென் கத்தோலிக்குத் திருச்சபையைத் தழுவிய போது அவர் விட்டுக் கொடுத்தது ஏதோ ஒரு கொள்கையை மட்டுமல்ல. தனது வழியை, தானே தெரிந்து கொள்ள வேண்டிய உரிமையை முழுதும் தூய ஆவியிடம் ஒப்படைத்தார். அதனால்தான் அவருடைய மனமாற்றத்தைத் தூய பவுல், தூய அகுஸ்தின் போன்றவர்களின் மனமாற்றத்தோடு ஒப்பிடலாம். தனது வாழ்வின் கதியை, தானே நிர்ணயிக்க வேண்டிய மாபெரும் பொறுப்பை தூய ஆவியிடம் ஒப்படைக்கத் துணிவும் தியாகமும் வேண்டும். கண்ணை மூடிக் கொண்டு கடவுளின் அழைப்பை ஏற்று அவர் எங்கு நடத்திச் சென்றாலும் சரி என்ற மனப்பான்மையோடு அவரைப் பின் சென்றது ஒரு கண நேரத்தில் தோன்றிய உணர்ச்சியின் விளைவு அன்று. அது நீண்ட மனப்போராட்டத்தில் பிறந்த தூண்டுதலே யாகும். இதையே தன்னை முழுவதும் கையளித்தல் என்கிறோம். இயேசு எதிர்பார்க்கும் மனநிலை இது!

தன்னை முழுவதும் தூய ஆவியிடம் கையளித்தல் என்பது உடைத்து உருவாக்க நாம் கொடுக்கும் அனுமதியாகும். அப்போது அச்சுறுத்தும் ஆவியாகக் கூடத் தோன்றுவார். ஆவியானவரைப் பயன்படுத்தும் மக்களாக இல்லாமல் அவரால் பயன்படுத்தப்படும் கருவிகளாக வாழுவோம்.

உயிருள்ள இறைவனின் ஆவியே என்னுள் எழுந்தருளும்
உடையும் என்னை உருவாக்கும்
நிரப்பும் என்னைப் பயன்படுத்தும்
தனியாக ஒருமையிலும் (என்னுள்) குழுவாகப் பன்மையிலும் 
(எம்முள்) உணர்ந்து அர்ப்பணித்துப் பாட வேண்டிய பாடல் இது.

எதனால் நிரப்புகிறார்? தனது வரங்களினால், கொடைகளினால், கனிகளினால் நிரப்பிப் புத்துயிர் அளிக்கும் ஆற்றலே தூய ஆவி.

ஆவியின் அருங்கொடைகள் 9 என்று பவுல் ஒரு பட்டியல் தருகிறார். ஞானம் நிறைந்த சொல் வளம், அறிவு செறிந்த சொல் வளம், நம்பிக்கை, பிணி தீர்க்கும் அருள்கொடை, வல்ல செயல் செய்யும் ஆற்றல், இறைவாக்குரைக்கும் வரம், ஆவிக்குரியவற்றைப் பகுத்தறியும் திறன், பரவசப் பேச்சு, அப்பேச்சை விளக்கும் ஆற்றல் (1 கொரி. 12:8-11)

ஆவியின் வரங்கள் (ஆறா? ஏழா?) என இறைவாக்கினர் எசாயா சொல்வது: ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத் திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப் பற்றிய அச்சம் (எசாயா 11:2).

ஆவியின் கனிகளோ 9. அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை , கனிவு, தன்னடக்கம். (கலா.5:22)

இவற்றில் வரங்களும் கொடைகளும் மானியம் போல இறைவன் நமக்கு அருள்பவை. அவற்றைவிட முக்கியமானவைகள் கனிகள். இவை தூய ஆவியோடு ஒத்துழைத்து நாமே வளர்த்துக் கொள்ள வேண்டிய பண்புகள். கனியைக் கொண்டே மரத்தை அறிகிறோம்.

இந்த வரங்கள், கொடைகள், கனிகள் எந்த அடிப்படையில் தொகுக்கப்பட்டன என்பதே கேள்விக்கும் சிந்தனைக்கும் உரியது. அவை பற்றி எந்தக் குறிப்பும் நற்செய்தி ஏடுகளில் இல்லை. "இயேசு அவர்கள் மேல் ஊதி தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று ஆவியின் கொடையாக வாக்களித்தது ஒன்றே ஒன்றுதான். அது மன்னிக்கும் வரம் "எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப் படும், எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” (யோவான் 20:22,23).

திருச்சபையின் முக்கிய செயல்பாடுகள் இரண்டு. இரண்டுக்குமே ஊற்று தூய ஆவியே.

1. செபம். “தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார். எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது. தூய ஆவியார் தாமே சொல் வடிவம் பெற முடியாத நம்முடைய பெருமூச்சுக்களின் வாயிலாய் நமக்காகப் பரிந்து பேசுகிறார்” (உரோமை. 8:26)

2. அன்பு. (மன்னிக்கும் அன்பு) “நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது. (உரோமை 5:5).

எல்லாவற்றிற்கும் மேலாக, தூய ஆவியே கடவுள் நமக்குத் தந்த மிகப் பெரிய கொடை. (லூக். 11:13)

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

தூய ஆவியாராம் துனையாளர்

நிகழ்வு

ஆப்பிரிக்க மக்கள் நடுவில் அருள்பணியாளர் ஒருவர் மறைப்பணி செய்து வந்தார். இவர் தனக்கு நேரம் கிடைக்கின்றபொழுதெல்லாம் திருவிவிலியத்தை அந்த மக்கள் பேசும் மொழியில் மொழிபெயர்த்து வந்தார். இவ்வாறு இவர் திருவிவிலியத்தை மொழிபெயர்க்கும்போது இவரால் ‘துணையாளர்’ என்ற சொல்லுக்கு அவர்கள் பேசும் மொழியில் சரியான சொல்லைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து இவர் தீர ஆய்வு செய்துகொண்டிருக்கும்பொழுது, ஒருநாள் முரடன் ஒருவன் சாதாரண பெண்மணி ஒருவரைக் கடுமையாகத் தாக்கினான் என்பதற்காக வலிமையான ஒருவர் அந்த முரடனைக் கட்டி வைத்து அடித்தார். அப்பொழுது மக்களெல்லாம், ‘செங்கா–முக்வசி’, செங்கா–முக்வசி’ (Nsenga-Mukwashi) என்று ஒரே குரலில் ஆர்ப்பரித்தார். இவருக்கு ‘செங்கா முக்வசி’ என்ற சொல்லின் பொருள் புரியவில்லை. உடனே இவர் அருகில் இருந்த ஒரு பெரியவரிடம், “இச்சொல்லின் பொருள் என்ன?” என்று கேட்டதற்கு அவர், “ஒருவருக்கு அதிலும் குறிப்பாகப் பாதிக்கப்பட்ட ஒருவருக்குத் துணையாக இருப்பவருக்குப் பெயர்தான் செங்கா – முக்வசி” என்றார்.

இதைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்த அருள்பணியாளர், ‘இத்தனை நாள்களும் நாம் தேடிக்கொண்டிருந்த சொல் கிடைத்துவிட்டது’ என்று, “உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு ‘செங்கா – முக்வசி’யை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்” (யோவா 14: 26) என்று மொழிபெயர்த்தார்.

ஆம், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இவ்வுலகத்தை விட்டுப் போவதற்கு முன்பாகத் தன் சீடர்களிடம் தூய ஆவியராம் ‘செங்கா-முக்வசியை’ அதாவது துணையாளரை அனுப்புவதாகச் சொன்னார். அவர் சொன்னதுபோன்றே அவர்களிடம் அவர் தூய ஆவியாராம் துணையாளரை அனுப்புகின்றார். அதைத்தான் இன்று தூயஆவியார் பெருவிழாவாகக் கொண்டாடுகின்றோம். இப்பெருவிழா நமக்கு உணர்த்துகின்ற செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.

சான்று பகரச் செய்வார்

பாஸ்காப் பெருவிழாவிற்கு அடுத்து வருகின்ற ஐம்பதாம் நாளில் கொண்டாடப்படுகின்ற பெருவிழாதான் பெந்தக்கோஸ்துப் பெருவிழா. அறுவடைப் பெருவிழா என அழைக்கப்படும் இப்பெருவிழாவிற்கு எருசலேமைச் சுற்றி இருபது மைல்கள் தொலைவில் உள்ள யூதர்கள் கட்டாயம் வருவார்கள். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் பதினாறு நாடுகளைச் சார்ந்த யூதர்கள் எருசலேமில் கூடியிருக்கின்றார்கள். இயேசுவின் சீடர்களும் அங்கு ஒன்றாகக் கூடியிருக்கின்றார்கள். அப்பொழுது பிளவுற்ற நாவுகள் இயேசுவின் சீடர்கள்மீது இறங்கி வர, அவர்கள் தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்டு, வெவ்வேறு மொழிகளில் பேசத் தொடங்குகிறார்கள். இதில் வியப்பு என்னவெனில் இதை அங்குக் கூடியிருந்த மக்கள் யாவரும் திருத்தூதர்கள் பேசியதைத் தத்தம் மொழிகளில் கேட்டார்கள் என்பதுதான்.

பழைய ஏற்பாட்டில் மக்கள் தங்கள் பெயரை நிலைநாட்டுவதற்காகக் கோபுரம் கட்டியபொழுது, ஆண்டவராகிய கடவுள் அவர்கள் மொழியில் குழப்பத்தை உண்டாக்கியதாக நாம் வாசிக்கின்றோம் (தொநூ 11: 7); ஆனால், பெந்தக்கோஸ்து நாளில் திருத்தூதர்கள பேசியதைத் திரண்டிருந்த மக்கள் யாவரும் தத்தம் மொழிகளில் கேட்கின்றார்கள். இதுவே தூய ஆவியாரின் வருகைக்கு மிகப்பெரிய சான்றாக இருக்கின்றது. ஆண்டவராகிய இயேசு தன் இறுதி இராவுணவின்போது சீடர்களிடம், “தூய ஆவியார் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள்” என்று கூறியிருப்பார். இதை நாம் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கின்றோம். பெந்தக்கோஸ்து நாளில் திருத்தூதர்கள் அதிலும் குறிப்பாகப் பேதுரு இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சான்று பகர்வதும், அதன் மூலம் ஒரே நாளில் மூவாயிரம் பேர் ஆண்டவர் இயேசுவில் நம்பிக்கை கொள்வதும் ஆண்டவரின் வார்த்தைகள் உண்மை என்பதை நிரூபித்துக் காட்டுகின்றன.

முழு உண்மையை நோக்கி வழிநடத்துவார்

“தூய ஆவியார் வரும்போது..... நீங்களும் சான்று பகர்வீர்கள்” என்று சொன்ன இயேசு, தொடர்ந்து தன் சீடர்களிடம், “அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்” என்கின்றார். நாம் வாழும் இவ்வுலகில் நம்மைத் தவறாக வழிநடத்துவதற்குப் பலர் இருக்கின்றார்கள். எத்தனையோ பேர் தவறான நண்பர்களின் வழிநடத்துதலால் சீரழிந்த வரலாறை நாம் அறிவோம். இத்தகைய சூழ்நிலையில் தூய ஆவியார் நம்மை முழு உண்மையை நோக்கி வழிநடத்துவார் என்பது உண்மையில் நாம் பெறும் மிகப்பெரிய பேறு. தூய ஆவியார் நம்மை முழு உண்மையை நோக்கி வழி நடத்துவார் எனில், அவரே உண்மையாக இருக்கின்றார் (1 யோவா 5: 6) என்பதுதான் கூடுதல் சிறப்பாக இருக்கின்றது.

அமெரிக்காவைச் சார்ந்த மிகப்பெரிய கண்டுபிடிப்பாளர் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் (George Washington Carver 1864-1943) முன்னூறுக்கும் மேற்பட்ட அரிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்துள்ள இவர், சொல்லக்கூடிய ஒரு முக்கியமான செய்தி, “அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் நான் எழுந்து, தூய ஆவியாரிடம் வேண்டுகின்றபொழுது, அவர் எனக்கு என்ன செய்யவேண்டும் என்பதை வெளிப்படுத்துவார். அப்படித்தான் நான் முன்னூறுக்கு மேற்பட்ட கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தேன்” என்பதாகும்.

ஆம், தூய ஆவியாரிடம் நாம் வேண்டுகின்றபொழுது அவர் நம்மை முழு உண்மையை நோக்கி வழிநடத்துவார் என்பது உறுதி.

தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழ்வோம்

தூய ஆவியார் வரும்போது இயேசுவைப் பற்றிச் சான்று பகர்வோம்; தூய ஆவியார் நம்மை முழு உண்மையை நோக்கி வழிநடத்துவார் என்ற நம்பிக்கைச் செய்திகளை இன்று நாம் கொண்டாடும் தூய ஆவியார் பெருவிழா நமக்கு எடுத்துக் கூறுகின்ற அதே வேளையில், நாம் ஒவ்வொருவரும் தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழவேண்டும் என்ற அழைப்பையும் இப்பெருவிழா நமக்குத் தருகின்றது.

புனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில், “தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழுங்கள். அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள்” என்கிறார். நாம் ஏன் தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழவேண்டும் என்பதற்குப் புனித பவுல் இரண்டு முதன்மையான காரணங்களைக் குறிப்பிடுகின்றார். ஒன்று, நாம் கடவுளின் ஆவியார் குடிகொண்டிருக்கும் கோயில் (1 கொரி 3: 16), இரண்டு, கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்களாகிய நாம் நமது ஊனியல்பைச் சிலுவையில் அறைந்துவிட்டோம். இத்தகைய காரணங்களால் நாம் தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழக் கடைமைப்பட்டிருக்கின்றோம்.

இன்று பலர் தங்களுடைய ஊனியல்புக்கு ஏற்ப வாழும் அவலநிலை தொடர்கின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் ஒவ்வொருவரும் தூய ஆவியார் தங்கும் கோயில் என்ற உண்மையை உணர்ந்து, தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு பெற வாழ்ந்திட்டால், அதைவிடச் சிறப்பான செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. நாம் தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழ்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை

‘கிறிஸ்தவ சமூகத்தில் அமைதியைக் கொண்டுவரும் தூய ஆவியார் அதன் உறுப்பினர்கள் தாழ்ச்சியுள்ளவர்களாக, பிறரைப் பற்றித் தவறாகப் பேசாதவர்களாக இருப்பதற்குக் கற்றுத் தருகிறார்’ என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். எனவே, நம் நடுவில் அமைதியைக் கொண்டுவரும் தூய ஆவியாரை ஏற்றுக்கொண்டவர்களாய் அவரது தூண்டுதலுக்கேற்ப வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

உம் ஆவியை அனுப்பி

புத்த மடாலயம் ஒன்றைச் சந்திக்க இளவல் ஒருவர் வந்தார். வந்தவருக்கு ஆச்சர்யம். மடலாயத்தில் இரு மொட்டுகள் தியானம் செய்துகொண்டிருந்தனர். இளவலுக்கு ஆச்சர்யம். அந்த மொட்டுகள் ஒருவரிடம், 'என்ன செய்கிறீர்கள்?' எனக் கேட்டார். 'தியானம் செய்கிறேன்' என்றார் மொட்டு. 'இந்த வயதில் என்ன தியானம் செய்கிறீர்கள்?' கேட்டார் இளவல். 'என் சுவாசத்தைக் கவனிக்கிறேன். சுவாசம் ஒன்றுதான் உண்மை. நம் பிறப்பு முதல் இறப்பு வரை நம்முடன் இருப்பது சுவாசம் தான். சுவாசம் நின்றவுடன் வாழ்க்கை முடிந்துவிடுகிறது. நம் தனிமையில், தூக்கத்தில், நடையில், அழுகையில், சிரிப்பில் அனைத்திலும் உடனிருப்பது சுவாசம்தான். நாம் கோபம் கொண்டால் சூடாவது சுவாசம். நாம் பரபரப்பாக இருந்தால் பதற்றம் அடைவது சுவாசம். அமைதியாக இருந்தால் இலுகுவாக இருப்பது சுவாசம். சுவாசக் காற்று உள்ளே செல்வதையும், சுவாசித்த காற்று வெளியே வருவதையும் உணர்தலே தியானம்' என்று சொல்லிவிட்டுத் தன் தியானத்தைத் தொடர்ந்தார் மொட்டு.

நாம் சுவாசிக்கும் காற்றின் அருமையை இந்த நாள்களில் நாம் மிகவும் அதிகமாகவே உணர்கிறோம்.

பெருந்தொற்றின் முதல் அலையின்போது நாம் 'மாஸ்க்' அணிந்தோம். இரண்டாம் அலையில் இப்போது நாம் 'ஆக்ஸிஜன் மாஸ்க்' அணியும் நிலைக்கு வந்துவிட்டோம்.

இருபது ஆண்டுகளுக்கு முன், 'தண்ணீரை யாராவது விலைக்கு வாங்குவாங்களா?' என்று கேட்டோம். இன்று தண்ணீரை நாம் விலைகொடுத்தே வாங்குகிறோம். குடிக்கும் நீர் இப்போது காசில்லாமல் கிடைப்பதில்லை. சுவாசிக்கும் காற்றை வாங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. இனி கட்டப்படும் கட்டடங்களும், 'தொற்றொதுக்கத்திற்கான அறை, ஆக்ஸிஜன் சிலிண்டர் சேமிப்பு அறை' என்று இணைத்தே கட்டப்படும். 'இங்கே ஆக்ஸிஜன் கிடைக்கும்' என எல்லாக் கடைகளிலும் எழுதப்பட்டிருக்கும்.

நம் தாய்த் திருஅவை இன்று தூய ஆவியார் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கிறது. இன்று நம் திருஅவையின் பிறந்தநாள். வாரங்கள் எனப்படும் யூதர்களின் திருவிழாவின் நிறைவுநாளான பெந்தகோஸ்தே திருநாளில் கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் உருவாகி, நெருப்புப் போன்ற பிளவுற்ற நாவுகள் அன்னை கன்னி மரியா மேலும் திருத்தூதர்கள்மேலும் இறங்கியது இன்று. பூட்டிய அறைக்குள் கிடந்தவர்களுக்கு புதிய ஆக்ஸிஜனாக வந்து சேர்கிறார் தூய ஆவியார். புதிய பிறப்பு அடைந்தவர்களாக அவர்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்குகின்றனர். இந்த நிகழ்வை நம் கண்முன் கொண்டு வருகிறது இன்றைய முதல் வாசகம்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் வரும் வரிகளை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்:

'தூய ஆவியின் துணையால் வாழ்கிறோம். எனவே, அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயல்வோம்'

- 'ஊனியல்பு' மற்றும் 'ஆவிக்குரிய இயல்பு' என்னும் இரு இயல்புகள் பற்றி எடுத்துரைக்கின்ற பவுல், ஆவிக்குரிய இயல்போடு வாழுமாறு கலாத்தியத் திருஅவைக்கு அறிவுறுத்துகின்றார்.

ஆவிக்குரிய இயல்போடு வாழ்வது என்றால் என்ன?

இதைப் புரிந்துகொள்ள நாம் முதல் ஏற்பாட்டுக் கதை மாந்தர் சிம்சோன் (சாம்சன்) வாழ்க்கையை எடுத்துக்கொள்வோம். சிம்சோனின் பிறப்பு முதல் அவருடைய இறப்பு வரை ஆவியாரின் உடனிருப்பை அவருடைய வாழ்க்கையில் நாம் பார்க்கின்றோம். அவருடைய பிறப்பை விவிலிய ஆசிரியர் இப்படிப் பதிவு செய்கின்றார்:

'அப்பெண் (மனோவாகின் மனைவி) ஒரு மகனைப் பெற்றெடுத்து அவனுக்குச் சிம்சோன் எனப் பெயரிட்டார். பையன் வளர்ந்து பெரியவன் ஆனான். ஆண்டவர் அவனுக்கு ஆசி வழங்கினார். சோராவுக்கும் எசுத்தாவேலுக்கும் இடையே அவன் இருக்கும்போது ஆண்டவரின் ஆவி அவனைத் தூண்டத் தொடங்கினார்' (காண். நீத 13:24-25).

இங்கே, 'தூண்டத் தொடங்குதல்' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரேய வார்த்தையின் பொருள், 'இங்கேயும் அங்கேயும் நகர்த்துதல், அல்லது அலைக்கழித்தல், அல்லது இழுத்தடித்தல்' என்பதாகும். ஆக, ஆவியார் அல்லது ஆவி அவரை ஒரே இடத்தில் தங்க வைக்காமல் இங்கும் அங்கும் அலைக்கழிக்கிறார்.

இதுதான் தூய ஆவியாரின் முதல் பணி.

அவரைப் பெற்றுக்கொண்ட எவரும் ஒரே இடத்தில் இருப்பதில்லை. உடனடியாக இயக்கத்திற்கு உட்படுவர்.

அன்னை கன்னி மரியாவின் வாழ்க்கையிலும் இதைப் பார்க்கலாம். 'தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும்' (காண். லூக் 1:35) என்று வானதூதர் கபிரியேல் மரியாவுக்கு மங்கள வார்த்தை சொன்ன அடுத்த நிமிடம், மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து செல்கின்றார் (காண். லூக் 1:39).

இதுதான் ஆவியாரின் இயக்கம். இந்த இயக்கத்தையே நாம் திருத்தூதர் பணிகள் நூலிலும் வாசிக்கின்றோம். பேதுரு உடனடியாக நற்செய்தி அறிவிக்கத் தொடங்குகின்றார். திருத்தூதர்கள் பல்வேறு இடங்களுக்குப் பயணமாகிறார்கள். சிம்சோன் ஆண்டவருடைய ஆவி தன்னோடு இருப்பதை மறந்துவிடுகின்றார்.

அந்நாளில் இஸ்ரயேலின் எதிரிகளாக இருந்த பெலிஸ்தியர்கள், இலேகி என்னும் இடத்தில் சிம்சோனைத் தாக்கிக் கொல்ல முயன்றபோது, 'ஆண்டவரின் ஆவி அவர்மீது ஆற்றலுடன் இறங்கியது. அவர் கையில் இருந்த கயிறுகள் நெருப்பில் எரிந்த சணலைப் போல் ஆக, அவர் கையிலிருந்த கட்டுகள் தளர்ந்து வீழ்ந்தன' (நீத 15:14).

சிம்சோனின் பணி வாழ்வில் ஆண்டவரின் ஆவி உடன் வந்து, அவருக்கு வலிமை தருகின்றார். ஆவியாரால் வலுவூட்டப்படுகின்ற சிம்சோன், கழுதையின் தாடை எலும்பைக் கொண்டு ஆயிரம் பெலிஸ்தியரைக் கொன்று போடுகின்றார். இயேசு தன் பணி வாழ்வின் தொடக்கத்தில், தான் ஆற்றுகின்ற உரையில், 'ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது. ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்' (லூக் 4:18) என அறிக்கையிடுகின்றார்.

சிம்சோன் ஆண்டவருடைய ஆவியை மீண்டும் மறந்துவிடுகின்றார்.

தன் வாழ்க்கை முழுவதும் ஓய்வுக்காக அலைந்து திரிகின்ற சிம்சோன் தெலீலாவின் மடியில் ஓய்ந்திருக்கின்றார். ஆனால், அதுவே அவருடைய இறுதி ஓய்வின் தொடக்கமாக இருக்கிறது.

விவிலிய ஆசிரியர் இந்நிகழ்வின் சோகத்தைப் பின்வருமாறு பதிவுசெய்கின்றார்:

'அவர் தம் தூக்கத்திலிருந்து விழித்து, 'முன்பு போல் இப்போதும் என்னை விடுவித்துக் கொண்டு வெளியே செல்வேன்' என்று சொன்னார். ஆனால், ஆண்டவர் அவரிடமிருந்து அகன்று விட்டார் என்பதை அவர் உணரவில்லை' (நீத 16:20).

'ஆண்டவர் தன்னிடமிருந்து அகன்று விட்டார்' என்பது, ஆண்டவரின் ஆவி தன்னைவிட்டு அகன்று விட்டது என்பதை அவர் அறியவில்லை. இதைவிட ஒரு மனிதருடைய வாழ்வில் சோகம் இருக்க முடியாது. நம் ஒட்டு, உறவு, நண்பர், நலவிரும்பிகள் நம்மை விட்டு அகன்றாலும் தாங்கிக்கொள்ளலாம். ஆனால், ஆண்டவர் நம்மைவிட்டு அகன்றால் என்ன செய்வது?

இதே போன்ற நிகழ்வு இன்னொரு இடத்திலும் நடக்கிறது. இஸ்ரயேலின் முதல் அரசனாகக் கடவுள் தேர்ந்துகொண்ட சவுலின் வாழ்வில் நடக்கிறது: 'ஆண்டவரின் ஆவி சவுலை விட்டு நீங்க, ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி அவரைக் கலக்கமுறச் செய்தது' (காண். 1 சாமு 16:14). சிம்சோனை விட சவுலின் நிலை இன்னும் பரிதாபமாக இருக்கிறது. ஆண்டவரின் ஆவி நீங்கியதோடல்லாமல், தீய ஆவி வந்து அவரைப் பற்றிக்கொள்கிறது.

சிம்சோன் தான் கடவுளுக்கான ஒரு நாசீர் என்பதை மறந்து, நாசீருக்கான மூன்று விதிகளையும் மீறுகின்றார்: (அ) இறந்த சிங்கத்தின் உடலைத் தொடுகின்றார், (ஆ) தேனை உட்கொள்கின்றார், (இ) தன் தலையை மழிக்குமாறு அனுமதிக்கின்றார். இருந்தாலும், ஆண்டவர் தான் தேர்ந்துகொண்டவரைத் தொடர்கிறார்.

'மழிக்கப்பட்ட அவரது தலைமுடி வளரத் தொடங்கியது' (காண். நீத 16:22) எனப் பதிவு செய்கின்றார் ஆசிரியர். நிகழ்வின் இறுதியில், தாகோனின் ஆலயத்தில் மக்கள் கூடியிருந்தபோது, சிம்சோன் ஆண்டவரை நோக்கி, 'என் தலைவராகிய ஆண்டவரே! இந்த முறை மட்டும் என்னை நினைவுகூரும். எனக்கு ஆற்றல் அளியும்' (காண். நீத 16:28) என மன்றாடுகின்றார். ஆண்டவர் அவரை மறக்கவில்லை. சிம்சோன்தான் ஆண்டவரை மறந்துவிட்டார்.

சவுலின் வாழ்விலும் அதே நிலைதான். தன்னிடமிருந்த ஆண்டவரை மறந்துவிடுகிறார் சவுல்.

'தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள். அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள்' எனச் சொல்கின்ற பவுல், அவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவை என்று சுட்டிக்காட்டி, ஒன்றைத் தெரிந்துகொள்ளவும் மற்றதை விட்டுவிடவும் அழைக்கின்றார்.

ஒன்றைப் பற்றிக்கொண்டு மற்றதை விடுதல் நம் வாழ்வில் மிக மிக அவசியம்.

சிம்சோனும் சவுலும் இதில் தவறிவிடுகிறார்கள்.

எல்லாவற்றையும் பற்றிக்கொள்ள வேண்டும் என நினைக்கிறது மனித உள்ளம். ஆனால், எல்லாவற்றையும் எல்லா நேரத்திலும் பற்றிக்கொள்தல் நம்மால் இயலாது. ஒன்றை இழந்தால்தான் நான் இன்னொன்றைப் பெற முடியும். அல்லது இன்னொன்றைப் பெறுவதற்காக நான் ஒன்றை இழந்தே ஆக வேண்டும்.

கலாத்திய நகரத் திருஅவையினர் ஒரே நேரத்தில் பரத்தைமை, கெட்ட நடத்தை, காம வெறி, சிலை வழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் ஆகியவற்றையும், அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் ஆகியவற்றையும் பற்றிக்கொள்ள விரும்பினர். ஆனால், இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானவை என்பதை மறந்துவிட்டனர். காமவெறியும் களியாட்டமும் கொள்பவர் எப்படி அடுத்தவரை அன்பு செய்வார்? பொறாமை கொள்பவர் எப்படி மற்றவர் மேல் கனிவு காட்டுவார்? தன்னடக்கம் இல்லாதவர் தன்னையே பெரியவராகக் கருதி மற்றவர்களுக்கு அடையே பிரிவை வளர்ப்பார் அல்லவா?

ஆக, ஆண்டவருடைய ஆவியார் நம் வாழ்வின் இயக்கமாகவும், இயல்பாகவும் இருக்கிறார்.

நாம்தான் பல நேரங்களில் அவரை மறந்துவிடுகின்றோம்.

இலவசமாக நம்மைச் சுற்றிக் கொண்டிருக்கும் ஆக்ஸிஜன் போல, திருமுழுக்கின் போது நமக்கு இலவசமாகக் கிடைத்ததால் என்னவோ, ஆவியாரை நாம் மறந்துவிட்டோம்.

நாம் சுவாசிப்பதே காற்று இல்லாத போதுதான் நம் நினைவுக்கு வருகிறது.

நாம் ஊனியல்பின்படி நடக்கும்போதும், அதனால் நம் மனம் அமைதி இழக்கும்போதும்தான், ஆவியார் இல்லாதது நம் நினைவுக்கு வருகிறது. சில நேரங்களில் அப்போதும் ஆவியார் நம் நினைவுக்கு வருவதில்லை.

ஆக்ஸிஜன் தேடி நாம் அலைய வேண்டியதில்லை. நம்மைச் சுற்றிலும் அது இருக்கின்றது.

ஆவியாரைத் தேடி நாம் அருங்கொடை இல்லங்களுக்கு அலையத் தேவையில்லை. அவர் நம்முடன் நம் சுவாசமாக இருக்கின்றார். அதனால்தான், பவுல், 'தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயல்வோம்' என்கிறார்.

இத்தூய ஆவியாரே நம்மை உண்மையை நோக்கி வழிநடத்துவார் என்கிறார் இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில்.

மறந்துபோன நம் சுவாசத்தை நினைவூட்ட வந்த ஆக்ஸிஜன் தட்டுப்பாடு போல,

மறந்துபோன நம் ஆன்மிக சுவாசத்தை நினைவூட்ட வருகிறது இன்றைய திருநாள்.

இன்று ஆக்ஸிஜனுக்காக மன்றாடும் நாம், ஆவியாருக்காகவும் மன்றாடுவோம்.

திருப்பாடல் ஆசிரியர் போல,

'ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!

... ... ... நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும்.
உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்படுகின்றன!' (திபா 104).

இன்று பெந்தகோஸ்தே பெருவிழாவில் இறங்கி வருகின்ற தூய ஆவியார், நம் இந்தியத் திருநாட்டின் முகத்தைப் புதுப்பிப்பாராக!

நம் அன்புக்குரியவர்களின் முகங்களிலிருந்து ஆக்ஸிஜன் மாஸ்க்குகள் விரைவில் அகலவும், அனைவரின் முகங்களும் ஆவியாரால் புதுப்பிக்கபடவும் மன்றாடுவோம்.

சுவாசிப்பது வேண்டுமானால் நாமாக இருக்கலாம். ஆனால், சுவாசம் அவரே!

'இறைவா! என்று திரும்பும் எங்கள் இயல்பு வாழ்க்கை?
என்று காண்போம் நாங்கள் எங்கள் அன்புக்குரியவர்களை?
பார்த்துப் பார்த்துப் பழகிய உறவுகளை
பாராத நிலைக்குத் தள்ளியது ஏனோ?
காகிதப் பூ எனக் கருதிப் பக்குவமாய் அன்பு செய்த எம் பெற்றோரை,
உடன் பிறந்தோரை, பிள்ளைகளை, கணவர்களை, மனைவியரை,
பிளாஸ்டிக் பைகளில் அள்ளிக் கொண்டு போடும் அவல நிலை ஏனோ?
எல்லாரும் கைகளை விரித்த நிலையில்,
எங்கள் கரங்கள் இன்று உம்மை நோக்கி!'

ுதிய மொழிகள் பேச வேண்டாம் நாங்கள்!
எங்கள் மொழி பேச எங்கள் முகக்கவசங்களை அகற்ற எங்களுக்கு அருளும்!

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

தூய ஆவியாரின் தூண்டுதலின் படி வாழ்வோமா!

ஒரு அருட்சகோதரி என்னிடம் பகிர்ந்து கொண்ட ஒரு நிகழ்வு. அவருடைய ஆரம்ப பயிற்சி காலத்திலே குழும அனுபவத்திற்காக சென்றபொழுது அவ்வில்லத்திலிருந்த மற்றொரு அருட்சகோதரி இவரை அன்பியக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அன்பியம் நடக்கின்ற வீட்டிற்குச் சென்ற உடன் அவ்வருட்சகோதரி பயிற்சியில் இருக்கும் சகோதரியிடம் இறைவார்த்தைப் பகிர்வைச் செய்யுமாறு கூறிவிட்டாராம். முதலில் சற்று தயங்கிய இச்சகோதரி பிறகு தயக்கத்தோடு ஒப்புக்கொண்டார். ஆயினும் முன்னரே கூறியிருந்தால் ஏதாவது ஒரு பகுதியை நன்கு வாசித்துத் தயார் செய்திருக்கலாமே என்ற ஒரு சிந்தனை அவர் மனதிற்குள் இருந்தது. அத்தோடு அன்பியத்திற்கு வந்திருப்பவர்கள் எல்லாரும் தன்னை விடப் பெரியவர்கள், அனுபவம் மிக்கவர்கள், என்றெல்லாம் பய உணர்வுகள் தோன்றியது. பின் ஒருவழியாகத் தன் மனதை மாற்றிக்கொண்டு அமைதியாகக் கண்களை மூடி இவ்வாறு செபித்தார்." தூய ஆவியாரே நானல்ல. நீர் தான் பேசப்போகிறீர். என் நாவில் தங்கும். என்னை வழிநடத்தும்" . அவ்வாறு செபித்த பிறகு தூய ஆவியாரின் வழிநடத்துதலை உண்மையாக உணர்ந்தவராய் இறைவார்த்தையைப் பகிர்ந்ததாக அவர் என்னிடம் பகிர்ந்து கொண்டார். அன்றிலிருந்து இன்றுவரை தான் எச்செயலைச் செய்தாலும் தூய ஆவியை விரும்பி அழைப்பதாகவும் அவரின் தூண்டுதலை உணர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று நாம் தூய ஆவியாருடைய விழாவைக் கொண்டாடுகிறோம்.

"நான் சென்று உங்களுக்குத் துணையாளரை அனுப்புவேன். அவர் உங்களுக்கு அனைத்தையும் தெளிவுபடுத்துவார். அவர் நான் சொன்னவற்றிற்கு சான்று பகர்வார் "என இயேசு கூறிய வார்த்தைகளை கடந்த நாட்களில் நாம் தியானித்தோம்.

வாக்களிக்கப்பட்ட அத்துணையாளர் சீடர்கள் மீது இறங்கி அவர்களை திடப்படுத்திய அந்தாளைத் தான் நாம் இன்று கொண்டாடுகிறோம். அவ்விழா "பெந்தேகோஸ்தே பெருவிழா " எனவும் அழைக்கப்படுகிறது.

வெற்றிடமாய் இருந்த அவ்வுலகை கடவுள் தன் படைப்புக்களால் அலங்கரித்த போதே தூய ஆவியார் இருந்தார் என்பதை நாம் தொடக்க நூலில் வாசிக்கிறோம். தந்தை கடவுளின் மீட்புத் திட்டத்தில் தூய ஆவியாரின் பங்கு அளப்பரியது.

இவ்வுலகத்தை மீட்க வந்த இயேசு எனும் மெசியா தூய ஆவியாரால் கன்னியாக இருந்த மரியாவிடம் கருவானார். இயேசு கருவானதிருந்து அவருடைய வாழ்க்கையின் ஒவ்வொரு படிநிலையிலும் தூய ஆவியானவர் இயேசுவை வழிநடத்தினார் என விவிலியம் சான்று பகர்கின்றது. இயேசுவின் நாற்பது நாள் தவம், அவர் சோதனைகளை வெற்றிகொண்ட நிகழ்வு,திருமுழுக்கு, தாபோர் மலைமேல் உருமாறிய நிகழ்வுகளெல்லாம் தூய ஆவியார் இயேசுவுடன் வழிநடந்தார் என்பதற்குச் சான்றுகள்.

அதே தூய ஆவியார் இயேசுவின் வழிநடந்த சீடர்களை ஆட்கொண்டு அவர்களை கடவுளின் மீட்புத்திட்டத்தின் கருவிகளாகப் பயன்படுத்தினார். இன்றைய முதல் வாசகம் அதற்கு மிகச் சிறந்த உதாரணம். இறைவார்த்தையை அறிவிக்கும் வல்லமையை தூய ஆவியார் சீடர்களுக்கு அளித்தார். அவர்களின் பயத்தை நீக்கினார். எதிரிகளின் முன் நின்று இயேசுவுக்குச் சான்று பகர திடம் தந்தார். தூய ஆவியார் இன்று வரை திருஅவை உறுப்பினர்களான நம் ஒவ்வொருவரையும் வழிநடத்திக் கொண்டிருக்கிறார். இல்லையெனில் திரு அவை என்றோ முடங்கிப்போயிருக்கும்.

நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் தூய ஆவியாருடைய வழிநடத்துதலை நம்மால் உணரமுடியும். கிறிஸ்தவ பாரம்பரியத்தில் வளர்ந்த நாம் அனைவருமே ஒவ்வொரு நாளையும்,ஒவ்வொரு செயலையும் தந்தை மகன் தூய ஆவியின் பெயரால்தான் தொடங்குகிறோம். நம்முடைய கூட்டங்களைத் தூய ஆவியாரின் பாடலோடு தொடங்குகிறோம். இவையெல்லாம் நம்முடைய முன்னோர்கள் தூய ஆவியாரின் வழிநடத்துதலை அனுபவித்து அவ்வனுபவத்தையே நமக்கும் விட்டுச் சென்றுள்ளார்கள் என்பதையல்லவா உணர்த்துகின்றது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய ஆவியானவரின் தூண்டுதலின் படி வாழ புனித பவுல் நம்மை அழைக்கின்றார். ஆவியார் நம்முடன் இருந்தால் தேவையற்ற உலக நாட்டங்களில் சிக்கி அழிந்து போகாமல் நம் வாழ்வு கனிகொடுக்கும் வாழ்வாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. வளர்ந்து வரும் இவ்வுலகம் நம்மைப் பணம், பதவி, சிற்றின்பம், பொழுதுபோக்கு போன்றவற்றிற்குத்தான் அழைத்துச் செல்கின்றது. நாமும் அவற்றுள் நாளுக்கு நாள் விழுந்து கொண்டே இருக்கிறோம். தூய ஆவியாரை நாம் நாடுவோம். அவர் நம் மனச்சான்றாக இருந்து நல்லற்றை நாடவும் அவற்றையே செய்யவும் நம்மைத் தூண்டுவார். இறைவனை நம்முள் உணரவைப்பார்.

இறைவேண்டல்

தூய ஆவியாரே எம்முள் எழுந்து வாரும். இறைவனுக்கு உகந்தவற்றை மட்டுமே செய்ய எம்மைத் தூண்டியருளும். ஆமென்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

ஆவியாரின் நெறியின்படி நடப்பபோம்

இறைஇயேசுவில் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே!

உங்கள் அனைவருக்கும் நமது கத்தோலிக்கத் திருஅவையின் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நமது தாய்த் திருஅவை பெந்தேகோஸ்து திரு நாளைக் கொண்டாடுகிறது. அதன்படி ஆவியாரின் அபிஷேகம் பெற்று நமது திருத்தூதுப் பணியை நாம் செய்ய இந்நாளில் அழைக்கப்படுகிறோம். கத்தோலிக்கத் திருஅவையில் தூய ஆவியார் சற்று மறக்கப்பட்ட ஒரு நபராகவே பலகாலம் இருந்தார் என்பதை நாம் மறுக்க முடியாது. அருங்கொடை செபக் குழுக்களில் ஏற்பட்ட மறுமலர்ச்சி ஆவியாரின் செயல்பாடுகளை சரியாகப் புரிந்து கொள்ளவும், அதேவேளையில் கருத்து பிறழ்வு ஏற்படவும் வழிகோலியது. ஆனால் இன்றைய நாள் நாம் சரியாகப் புரிந்து கொள்ள நம்மை அழைக்கிறது.

பிளவுண்ட நாவுகள் வடிவில் இறங்கிய ஆவியார் பிளவுபட்ட நமது உள்ளங்களை இணைத்து, மானுடத்தை பேண, பாதுகாக்க அழைக்கிறார். ஆவியாhரை நாம் தந்தையிடமிருந்தும், மகனிடமிருந்தும் புறப்படும் ஆவியார் என அழைக்கப்படுவதால் ஆவியாரின் செயல்பாடுகள் மூவொரு இறைவன் சார்ந்த சற புரிதலில் சற்று தயக்கத்தை ஏற்படுத்துகிறது. எவ்வாறு புரிந்து கொள்வது?

தூய ஆவியார் என்பவர் கடவுளின் ஆவியார் என்பதே. படைப்பின் கதைக் கூற்றின் தொடக்கத்தைப் பார்த்தால், நீரின் மீது அசைவாடியவரும், ஆதாமுக்குள் ஊதப்பட்டவரும், அரசர்கள், இறைவாக்கினர்கள் மேல் பொழியப்பட்டு இறைவாக்கை தைரியத்துடன் எடுத்துரைக்க ஊக்கம் கொடுத்தவரும், இயேசுவின் திருமுழுக்கு நாளில் ‘என் அன்பார்ந்த மகன் இவரே இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்’ என்று சொன்னவரும் இவரே. இந்த ஆவியார், இயேசு தன் சீடர்களுக்கு வழங்கிய உன்னதமான ஒரு பரிசு. யோவான் 20:22-ல் பார்க்கிறோம் அவர் அவர்கள் ஊதி தூய ஆவியரைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று தூய ஆவியாரை வழங்கியதாக பார்க்கிறோம். இயேசு வழங்கிய இந்த பரிசு நமது கட்புலன்களால் புரிந்து கொள்ள முடியாது. இந்த ஆவியார் ஆற்றலாக நம்மை வழிநடத்துகிறார் என்பதைனை இன்றைய முதல் வாசகம் தெளிவுபடுத்துகிறது. ஆம்! சீடர்கள் அறிவித்த நற்செய்தியை அவர்கள் அவரவர் சொந்த மொழிகளில் கேட்டது ஆவியாரின் ஆற்றலேஎன்பதை நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.

இவ்விழாவின் வழி நமக்கு புதிய வாழ்வு வாழ வழி வகுக்கிறது. அதற்கான வழிகளை இன்றைய இரண்டாம் வாசகம் தெளிவாகக் கூறுகிறது. ஆவியாரைப் பெற்றவர்கள் நாம் என்றால் அதற்கு ஏற்ற வாழ்வு வாழ்வதும் நமது கடமை. குடிவெறி, காமவெறி, பில்லிசூனியம் போன்ற தவறான செயல்பாடுகளில் ஈடுபடுவோர் ஆவியாரைப் புறக்கணிக்கின்றனர். ஆவியாரின் உண்மைச் சீடன் என்பவன் அன்பு - அமைதி தூதனாய், மகிழ்ச்சியை விதைப்பவனாய், பொறுமை வாழ்வியலாக, பிறர்மீது பரிவு உள்ளவனாய், நன்னயம், கனிவு, தன்னடக்கம் போன்றவை உள்ளவர்களாய் நாம் மாற வேண்டியது நம் கடமையாக உள்ளது. நாம் தூய ஆவியாரின் துணையாடு உள்ளோமெனில் அந்த ஆவியாரின் நெறியில் நடப்பதுதானே நல்லது. எனவே ஆவிக்குரிய செயல்பாடுகளின்படி நடக்க முயல்வோம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

முரண்களை முறிப்பவர் ஆவியானவர்…

2017ஆம் ஆண்டு உலகமே இந்தியாவை குறிப்பாக தமிழகத்தைத் திரும்பி பார்க்க வைத்தது ஒரு மாபெரும் போராட்டம். சிறியவர் தொடங்கி பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் தங்களின் ஆதரவை அளித்து, ஊக்கமும் ஆக்கமும் கொடுத்து உற்சாகமூட்டிய போராட்டம் அது. உலக நாடுகளே பிரெஞ்சுப் புரட்சிக்கு பின்பு ஒன்றை கருத்துக்காய் ஒன்று திரண்ட போராட்டம் என்று வர்ணனை கொடுக்கும் அளவிற்கு உருமாறியது இந்த போராட்டம். தைப் புரட்சி, மெரினாப் புரட்சி, இளைஞர்கள் புரட்சி என சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்ட இப்போராட்டம் சனவரி 16, 2017 முதல் சனவரி 23, 2017 வரை நடைபெற்றது. எதற்கான போராட்டம் இது? மனிதர்கள் ஒன்றுசேர்ந்து தங்கள் வாழ்வாதாரத்தின் ஒரு பகுதியாக இருந்த விவசாயின் உழவுக்கு உற்றத்துணையாக இருக்கும் காளையின் நலன்களுக்காகவும், ஜல்லிக்கட்டு விளையாட்டுக்காகவும், அழிக்கப்பட நினைத்த தமிழரின் இனக்கூற்றையும், தமிழர் கலாச்சாரத்தையும், பண்பாட்டைப் பக்குவமாய் கையாண்டு தரணியில் தலைநிமிர்ந்து நின்றனர் இப்போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள். ஏன் இந்தப் போராட்டம் உருவானது? என்று கேள்வி கேட்டால், அதற்கான பதில் ஒன்றே ஒன்றுதான்: ‘முரண்களை களைவதற்கு எடுக்கப்பட்ட முழுமையான முயற்சி’ மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு கைகட்டி நிற்கும் கெதிக்கு தீனி போடும் வண்ணம் மாட்டைக் குறித்த அரசியல் அங்கே நிகழ்ந்தது. இதனால் ஏற்பட்ட முரண்கள்தான் இப்போராட்டத்தின் பின்னணி.

சனவரி 16, 2017 அன்று மதுரை, அலங்காநல்லூரில் தொடங்கிய போராட்டத்தை அகில உலகமே கண்டது. கண்டனம் தெரிவித்தது. பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, சரியான பார்வையை மக்களுக்கு கொடுத்து, தேவையானவற்றை உருவாக்கி, தேவையற்றவைகளை வாழ்வியல் பக்கங்களிலிருந்து நீக்கி, மக்களுக்கும், விவசாயிகளுக்கும், ஏன் அனைத்து மாந்தர்களுக்கும் போராட்டத்திற்கு பின்னணியாக உருவான சில முரண்களை எடுத்துக்கூறி அநீதியாக, அநியாயமாக செயலாற்ற நினைத்தவர்களின் முடிவுகளும், எண்ணங்களும், கையெழுத்திடபட்ட கோப்புகளும் முறிக்கப்பட்டன. காளைகளைக் காப்பாற்றுவதற்கான உரிமையையும், விளையாட்டு நடத்துவதற்கான அனுமதியும் பெறப்பட்டன. அவனியில் தென்பட்ட சில முரண்களை முறியடிக்க தேவைப்பட்டது இந்த மெரினா புரட்சி. இத்தகைய சிறப்புக்குரிய செயல்பாடுகள் எல்லாம் ஒருங்கே அமையப்பெற்ற போராட்டத்தின் பெயர் “ஜல்லிக்கட்டு போராட்டம்”.

இறைஇயேசுவில் இனியவர்களே!
அன்னையாம் திருஅவையோடு இணைந்து இன்று நாம் தூய ஆவியானவரின் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். ‘பெந்தகோஸ்தே பெருவிழா’ என்று அழைக்கப்படும் இப்பெருவிழாதான் ‘திருஅவையின் பிறந்தநாள்’ எனச் சொல்லப்படுகின்றது. திருஅவை உதித்த நாளாகவும் இதை நாம் வரலாற்றில் காண்கின்றோம். தூய ஆவியாரின் வருகை திப 1: 14இல் பார்ப்பது போன்று, அன்னை மரியாவும், திருத்தூதர்களும், சகோதரர்களும், சில பெண்களும் ஒன்றுக்கூடி மாடியறையில் ஒரே மனதோடு இறைவனிடம் வேண்டியதன் பலனாக, அவர்கள் தூய ஆவியின் பொழிவைப் பெற்றனர். திப 2:2இல் வாசிப்பது போன்று “திடீரென்று கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் வானித்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது”. இதுதான் தூய ஆவியார் பொழிவின் அடையாளம். இதைத்தான் பெந்தகோஸ்தே பெருவிழா என்று அழைக்கின்றோம். திக்கு தெரியாமல் தவித்த திருத்தூதர்களுக்கும், பயத்தினால் நடுங்கி செய்ய இயலாத நற்செய்தி அறிவிப்பு பணிகளுக்கும் உத்வேகம் தரும் வண்ணம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வாக்களித்தது போலவே துணையாளராம் தூய ஆவியானவரை இன்றைய நாளில் இறைமகன் இயேசு கிறஸ்து வழங்குகிறார்.

யோவான் நற்செய்தி 20: 22இல் இயேசு திருத்தூதர்களுக்கு உயிர்த்த பின்பாக தோன்றுகிறார். அப்போது அவர் எல்லாவற்றையும் சொன்ன பின் ‘அவர்கள் மேல் ஊதி’, “தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று ஆவியின் அபிஷேகத்தை அங்கே கொடுக்கிறார். அதுமட்டுமல்லாமல் “என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தருவார். நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவு+ட்டுவார்” (யோவான் 14:26) என்றும் கூறியிருக்கிறார். அப்படியென்றால், துணையாளராம் தூய ஆவியார் நம்மில் செய்ய இருக்கும் ஆற்றல்மிக்க செயல்பாடு அல்லது பணி எதுவென ஆராய்கையில் ஒன்றே ஒன்றுதான்: “தூய ஆவியாரே அனைத்தையும் துருவி ஆய்கிறார்” (1கொரி 2:10).

இத்தகைய ஆராய்கின்ற பணிதான் வாழ்வில் நிகழ்கின்ற பல முரண்களை முறியடிக்க உதவுகின்றன. வாழ்க்கை என்பது வாழ்வதற்கு தானேன்றி சாவதற்கானது அல்ல. ஏனென்றால், நாம் இறந்தோரின் மக்கள் அல்ல, வாழும் கடவுளின் மக்கள். இத்தகைய சிந்தனையோடு இன்றைய நாள் வாசகங்களில் காணப்படும் வாழ்வியல் முரண்களை எப்படி தூய ஆவியானவர் முறிக்கிறார் என்பதையும், அதன் வழியாக நமக்கு அவர் எவ்வாறு வாழ்வை கொடுக்கிறார் என்பதையும் சற்று ஆழமாக சிந்தித்துபார்க்க அழைப்பு கொடுக்கின்றது இத்தூய ஆவியாரின் பெருவிழா!

லூக் 2: 34இல் இயேசு பிறந்த பின்பு, அன்னை மரியாவும் சூசையப்பரும் இயேசுவைக் கோவிலில் அர்ப்பணிக்க கொண்டு செல்கின்றனர். அப்போது சிமியோன் என்னும் பெரியவர் குழந்தையை கையில் ஏந்தி ஆசி வழங்கி, “ இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும். எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்” என்றார். இதன் அடிப்படை நோக்கமே: இயேசு இம்மண்ணுலகில் முரண்பட்டதையெல்லாம் முறையாக மாற்ற வந்தவர் என்றே பொருள் கொடுக்கிறது. அதுதான் உண்மையும்கூட. இயேசு விண்ணேற்றம் அடைந்த பின்பு திருத்தூதர்களும் இயேசுவோடு பயணித்தவர்களும் திசை மாறி பயணித்துவிட கூடாது என்பதை காட்டிலும், நான் சொன்னவற்றிலிருந்து பிறழ்ந்து போய்விடக்கூடாது, போதனையை தவறாக வழங்கி விடக்கூடாது. தன்னை குறித்த பார்வையை மிகுதியாக்கிக் கொண்ட இறையரசை நிறுவாமல் விட்டுவிடக்கூடாது என்பதற்காகவே துணையாளராம் தூய ஆவியை இந்நாளில் வழங்குகிறார். ஏனென்றால், சீடர்கள் அச்சமிகுதியால் அடைப்பட்டு கிடந்தனர். அவர்களின் பயம் பக்குமடைந்த அவர்களின் வாழ்வை இன்னும் பயனற்ற, பயமுற்ற காரியங்களால் தகர்த்துவிடக் கூடாது என்பதில் இயேசு தெளிவாய் இருந்தார். எனவேதான் இன்றைய முதல் வாசகத்திலும், இரண்டாம் வாசகத்திலும் தெளிவாக குழுமத்திற்கும், தனிமனித வாழ்விற்கும் தேவையான படிப்பினைகளை வழங்குகிறார். அதுதான் அவர்களின் முரண்களாக எடுத்துச்சொல்லி, வாழ்விற்கான தேடலைக் கொடுத்து வழியமைத்து வைக்கிறார். ஆவியின் வழிகாட்டுதலை அவர்களின் வாழ்வில் உருவாக்குகிறார்.

முதல் வாசகத்திலே,
பெந்தகோஸ்தே என்னும் நாள் வந்தபோது என தொடங்கும் பகுதியில் பயத்தாலும், அச்சத்தாலும், பதற்றத்தாலும், அடைப்பட்ட வீட்டுக்குள் கிடந்த திருத்தூதர்கள் மீது ஆவியானவரின் அபிஷேகம் பொழியப்படுகிறது. ஓங்கி ஒலிக்கும் சத்தத்துடன், நெருப்புபோன்ற பிளவுற்ற நாவுகளாக ஒவ்வொருவரின் மீது வந்து இறங்குகிறது. அவர்களை இயக்க வைக்கிறது. செயலற்று ஒடுக்கி வீட்டிற்கு முடங்கியவர்களை, தூய ஆவியின் துணையோடு இடிமுழுங்குவது போன்று இறைவாக்கு உரைக்க தூண்டியெழுப்புகிறார் துணையாளர். இந்த நிகழ்வானது ஒரு குழுமத்தை அடிப்படையாக கொண்டது. ஏனென்றால், தூய ஆவியின் வருகையால் அங்கிருந்த திருத்தூதர்கள், அனைத்து நாடுகளிலிருந்து வந்திருந்த மக்களை எதிர்கொள்கிறார். மக்களை எதிர்கொள்வது எப்போது பல முரண்களை உள்ளடக்கிய படலம். வெவ்வேறு நாட்டவர், பற்பல மொழியினர், சட்டங்கள், சவால்கள், வழிபாட்டு முறைகள் இப்படி எல்லாவற்றிலும் தனித்துவத்தோடு கொண்டு நிற்கும் மக்களின் நடுவில் உரையாற்ற தொடங்குகின்றனர் இயேசுவின் திருத்தூதர்கள். எவ்வாறு இயேசு பன்னிரண்டு வயதில் மறைநூல் அறிஞர்களுக்கு நடுவே அச்சமின்றி நற்செய்திக்கு விளக்கமளித்தாரோ அதே போன்று யாருக்கும் பயப்படாமல் தைரியமாய் இறைவாக்கு உரைக்கிறார்கள் இயேசுவின் திருத்தூதர்கள். அங்கு இருந்தவர்கள் அவரவர் மொழியில் கேட்டு புரிந்து கொள்கிறார்கள். இது தூயஆவியின் உடனிருப்பால் நிகழ்ந்த மிகப்பெரிய முறியடிப்பு செயல். பெற்றவர்கள் மக்கள் பெற தடையாக இருப்பதை குறித்து, அதாவது முரண்களை குறித்து முறையாக பேச ஆரம்பிக்கின்றனர்.

அதன் விளைவே, திப 2:37இல் “அவர்கள் இதைக் கேட்டு உள்ளம் குத்தப்பட்டவர்களாய் பேதுருவையும் மற்றத் திருத்தூதர்களையும் பார்த்து, “சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள்” என வாசிக்கின்றோம். இதுதான் திருத்தூதர்கள் வழியாக மக்களின் வாழ்வில் தென்பட்ட முரண்களை களைவதற்கான முதல் புள்ளி. இது தூய ஆவியின் வருகையாலே நிகழ்ந்தது என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. முதல் வாசக பின்னணியில் அவர்களுக்கு இருந்த முரண்கள் என்னென்ன என சிந்திக்கையில், வதந்தி, இயேசுவைக் குறித்த தவறான போதனை, பிரிவுகள், அச்சவுணர்வு, பயந்த சூழல், அறமற்ற வாழ்வு, இயேசுவின் இறப்பைக் குறித்த சந்தேகங்கள், இயேசுவின் வழியை விட்டுவிட்டு வாழ்ந்த மக்கள் கூட்டம். இத்தகைய முரண்கள் குழுமத்தில் இருப்பவரிடத்தில் காணப்பட்டதால் அது முதலில் களையப்படுகிறது. இதைத்தான் முதல் வாசகமாக பெற்றுள்ளோம்.

இரண்டாம் வாசகத்திலே,
தனிமனித வாழ்வு பற்றி பேசப்படுகிறது. விவிலியத்தில் குழுமத்திற்கு எந்தளவு முக்கியத்துவம் இருக்கின்றதோ அந்தளவிற்கு தனிமனிதருக்கும் இருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. தூய ஆவியின் வருகை குழும வாழ்வில் அறியப்பட்ட முரண்களை நீக்கியதாக பார்க்கின்றோம். அதே வேளையில் விவிலியத்தில் தனி மனிதர்களின் வாழ்வில் உதித்த முரண்களையும் களைந்திட உதவுகிறது தூய ஆவியின் வருகை. பழைய ஏற்பாட்டில் நீதித்தலைவர்கள் நூலில் சிம்சோன் என்னும் மனிதரின் வாழ்வில் தூய ஆவியாரின் செயல்பாடு எப்படி நிகழ்கிறது என்பதை நாம் அறிவோம் (நீத 13: 24-25). பாவச் சேற்றில் விழுந்த தாவீது எவ்வாறு மீட்கப்பட்டார் என்பதும், அவரின் வாழ்வில் ஆவியானவரின் செயலாற்றல் எப்படி நிகழ்ந்தது என்பதையும் (திருப்பாடல்கள் 51) அறிவோம். புதிய ஏற்பாட்டில் அன்னை மரியாவுக்கு கபிரியேல் வானதூதர் தோன்றி, “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும்” (லூக் 1:35) என்று கூறி ஆவியின் அபிஷேகம் தனிமனித வாழ்வில் எவ்வாறு நிகழ்ந்தது என்று எடுத்துரைக்கிறார் லூக்கா நற்செய்தியாளர். இந்த பின்னணியில் நம்முடைய வாழ்வு எப்படி ஆவிக்குரிய இயல்பாக மாற வேண்டுமென்பதைச் சிந்தித்து பார்க்க அழைப்பு கொடுக்கிறது இன்றைய இரண்டாம் வாசகம். கிறித்தவராய் வாழ விரும்புபவர்கள் ஊனியல்பின் பண்புகளைத் தவிர்த்து, ஆவிக்குரிய பண்புகளால் தங்களை அணிசெய்வதுதான் தூய ஆவியாரின் உடனிருப்பு. தவறாக செல்லும் நம்முடைய பாதையை சரியான திசை நோக்கித் திருப்புதற்கு பெயர்தான் ‘தூய ஆவியின் பொழிவு’. இத்தகு பொழிவுதான் நம் தனிப்பட்ட வாழ்வில் நிகழும் எண்ணற்ற முரண்களை முறிக்கும் செயல்களைச் செய்கிறார். அந்த முறிவே என்றும் முறியா இறையுறவில் நம்மை இணைக்கிறது. புனித பவுல் கலாத்திய திருஅவைக்கு எழுதிய தன் மடலில் அங்கு காணப்பட்ட பல முரண்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பணியைச் செய்கிறார். கலாத்திய திருஅவையில் யூதமயமாக்கும் கிறிஸ்தவர்கள் சிலர் புகுந்து பவுல் எடுத்துரைத்த போதனைக்கு எதிராக பேசினர். இதன் பின்னணியில்தான் பவுல் அங்குள்ள தூய ஆவியின் துணையோடு சரியான வழிகாட்டுதல்களைக் கொடுக்கிறார். அதில் மிக முக்கியமான பகுதியாக இருப்பதுதான் இன்றைய இரண்டாம் வாசகம். ‘கிறிஸ்தவரின் உரிமை வாழ்வு’ என்ற தலைப்பிலே பவுல் வழங்கிய அறிவுரைப் பகுதிதான் இது. இன்னும் குறிப்பாக தூய ஆவியானவரின் வருகை நம்மை உடல் சார்ந்த வாழ்வுக்கு அல்ல. மாறாக, ஆன்மா சார்ந்த வாழ்வுக்கு, ஆவிக்குரிய வாழ்வுக்கு நம்மை அழைத்து செல்லும் என்று உரைக்கிறார். எனவே அம்மக்களிடையே காணப்பட்ட முரண்களை முறிப்பதற்காக தூய ஆவியின் கனிகள் வழங்கப்படுவதாக சொல்கிறார். காய் நிலையில் இருக்கும் மனித வாழ்வை கனியாக மாற்ற உதவுகிறார் தூய ஆவியானவர். ஆகவே பின் வரும் முரண்கள் முறிக்கப்பட்டு, தூய ஆவியின் தூண்டுதலால், முறிவுபடா இறையுறவில் பங்கேற்க வழிகாட்டப்படுகிறது. கலா 5:19,20 இல் காணப்படும் தூய ஆவிக்கு எதிரான செயல்பாடுகள், அதாவது,

தனிமனித வாழ்வின் முரண்கள்:
பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலை வழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை சச்சரவு, சீற்றம், பொறாமை, பிளவு, பிரிவினை, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம்

முறிவுபடாமல் வாழ கடவுள் கொடுக்கும் தூய ஆவியின் கனிகள்:
அன்பு, மகிழ்ச்சி, நம்பிக்கை, பொறுமை, அமைதி, பரிவு, நன்னயம், கனிவு, தன்னடக்கம்

இறைஇயேசுவில் பிரியமானவர்களே, இந்த முரண்களுக்கும் முறிவுபடா இறையுறவுக்கும் இடையில் நிகழும் பொறுப்பற்ற வாழ்வை பொறுப்புமிக்கதாக மாற்றுவதற்குதான் தூய ஆவியானவர் துணையாளராக நமக்கு கொடுக்கப்பட்டுள்ளார். இதைத்தான் மிகத் தெளிவாக நற்செய்தியில் நாம் வாசிக்க கேட்கிறோம். தூய ஆவியானவர் நம்மிடம் உள்ள முரண்களை முறியடைப்பதற்கு கீழ்க்காணும் மூன்று வழிகளில் செயலாற்றுகிறார். அதை நமதாண்டவர் இயேசு கிறிஸ்துவே அதை வழங்குகிறார்:

1. உண்மையை நோக்கி வழிநடத்துதல்
2. சான்று பகருதல்
3. என்னிடம் கேட்டு உங்களுக்கு அறிவித்தல்
ஆகவே, தூய ஆவியானவரின் பெருவிழா நமக்கு சொல்லும் ஒரே ஒரு பாடம் எதுவெனில், நாம் குழுமமாகவோ அல்லது தனியாகவோ, எப்படி வாழ்ந்தாலும் எங்கெல்லாம் தூய ஆவியாரின் தூண்டுதல் இருக்கிறதோ அங்கே துண்டிக்கப்படும் உறவுகள், ஏற்படும் முரண்கள் எல்லாவற்றையும் ஆண்டவரின் ஆவியானவர் அக்னிமயமாய் உதித்து, முரண் களைந்து முறையான வாழ்விற்கு நம்மை இட்டுச் செல்வார். அப்போது இன்றைய பதிலுரைப்பாடலில் தாவீது பதில்மொழி பாடியது போன்று நாமும் பாடுவோம்.

“ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்” (திருப்பாடல்கள் 104:29)

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு