மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

ஆண்டவருடைய பாடுகளின் வெள்ளி
இரண்டாம் ஆண்டு

சாம்பல் புதன்
இன்றைய வாசகங்கள்:-
எசாயா 52: 13-53: 12 | எபிரேயர் 4: 14-16; 5: 7-9 | யோவான் 18: 1-19: 42

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

சில ஆண்டுகளுக்குமுன் அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகரில் வாழ்ந்த மனிதர் ஒருவர் ஏதோ ஒன்றைத் தேடி எண்ணற்ற செப் வழிபாடுகளில் பங்குகொண்டார். வழிபாடு நடத்தியவர்களெல்லாம் மிக அருமையாக அறிவுரை வழங்கினார்கள். ஆனாலும் அவர் தேடியது அவருக்கக் கிடைக்கவில்லை! தான் தேடியது கிடைக்கவில்லையே என்ற கவலையில் படுத்தபடுக்கையானார். அவர் மரண வேளையிலிருந்தபோது அவருக்காகச் செபிக்க போதகர் ஒருவர் அவர் வீட்டுக்குச் சென்றார். அவரது படுக்கையின் பக்கத்தில் மண்டியிட்டு மன்றாடினார். அப்பொழுது அவருடைய கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் கீழே விழுந்தன. ஆண்டவரே இந்த அன்பு மகனை எடுத்துக்கொள்ளாதேயும் என உருக்கமாக செபித்தார். அதைப் பார்த்த படுக்கையிலே படுத்திருந்த மனிதர், இத்தனை ஆண்டுகளாக, நான் எதைத் தேடினேனோ அது இன்று எனக்குக் கிடைத்துவிட்டது. மற்ற போதகர்களெல்லாம் அவர்கள் விரும்பியதை எனக்குக் கொடுத்தார்கள். ஆனால் இவரோ நான் விரும்பியதை எனக்குக் கொடுத்திருக்கின்றார். என்னை அன்பு செய்யும் ஒருவரைத் தேடினேன். இனி எனக்குக் கவலையில்லை எனச் சொல்லி எழுந்து அமர்ந்தார்; அவரும் மாபெரும் போதகரானார்.

இதோ நமக்காக கண்ணீரைச் சிந்தி, நமக்காகத் தம் உயிரைத் தந்து நம்மீது அளவில்லா அன்பைப் பொழிந்திருக்கும் இயேசுவை ஒருமுறை உற்றுப்பார்ப்போம். மனம் திரும்ப விரும்பாத எருசலேமைப் பார்த்து அழுதவர் இவர்! (லூக் 19:41-44). இலாசரின் இறப்பைக் கண்டு அழுதவர் இவர்! (யோவா 11:35). நமது வேண்டுதல்கள் கேட்கப்படவேண்டும் என்பதற்காக கண்ணீர் சிந்தி கதறி மன்றாடியவர் இவர்! (எபி 5:7).

நமது ஆண்டவராகிய இயேசு நம்மீது அவர் கொண்டிருக்கும் ஆழமான அன்பை வெளிப்படுத்த கண்ணீரை மட்டுமல்ல, தமது உயிரையே நமக்குக் கொடுத்திருக்கின்றார் (யோவா 19:30).

எனக்காகக் கண்ணீர் சிந்தி, தம் உயிரையே கொடுத்த ஆண்டவர் இயேசு என்னோடு இருக்கும்போது எனக்கு எந்தக் குறையும் இருக்காது; அப்படியே
என் வாழ்க்கையில்,
முள் குறுக்கிட்டால் அதை அவர் மலராக மாற்றிடுவார்;
தேள் குறுக்கிட்டால் அதை அவர் தேனாக மாற்றிடுவார்;
சாவு குறுக்கிட்டால் அதை அவர் வாழ்வாக மாற்றிடுவார்
என நம்பி நமது வாழ்க்கைப் பயணத்தைத் தொடருவோம். தம் உயிரையே எனக்காகக் கொடுக்க முன்வந்திருக்கும் இயேசு. சாதாரண வரங்களை நான் கேட்கும்போது அவற்றை எனக்குக் கொடுக்காமலிருப்பாரோ? என நம்மையே நாம் கேட்டுக்கொள்வோம்.
மேலும் அறிவோம் :

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர் (குறள் : 228).

பொருள் :
வறியவர்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து அவர் மகிழ்வதைக் கண்டு அருளுடையவர் அடையும் இன்பம் பெரிதாகும். அத்தகைய இன்பத்தைப் பற்றித் தெரியாதவரே தாம் சேர்த்த பொருளை ஏழை எளியோருக்கு வழங்காது பிறர் கொண்டு போக இழக்கும் இரக்கம் அற்றவர் ஆவர்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இயேசு கிறிஸ்து மூன்று ஆண்டுகள் பல்வேறு இடங்களில் போதித்தார். வீட்டிலே போதித்தார்; வீதியிலே போதித்தார்; மலையிலிருந்து போதித்தார்: பாலைநிலத்தில் போதித்தார்; ஆலயத்தில் போதித்தார். ஆனால், இறுதியாக அவர் சிலுவையிலிருந்து போதித்தலை ஈடு இணையற்ற போதனை. சிலுவையில் தொங்கிய அவர் வாயிலிருந்து உதிர்ந்த ஏழு முத்துக்களைப் பெரிய வெள்ளியாகிய இன்று கவனமுடன் கேட்போம்: ஆழ்ந்து சிந்திப்போம், செயல்வடிவம் கொடுப்போம்.

1. முதல் முத்து "தந்தையே, இவர்களை மன்னியும்; ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" (லூக் 23:34).

தம்மைச் சிலுவையில் அறைந்த கொலைபாதகர்களுக்காகத் தந்தையிடம் மன்னிப்புக் கேட்கின்றார். நமக்குத் தீமை செய்தவர்களைச் சபிக்கின்றோம்; பழிக்குப் பழிவாங்கத் துடிக்கின்றோம் ஆனால் இயேசுவோ தீமை செய்கிறவர்களுக்காகப் பரம தந்தையிடம் பரிந்து பேசுகிறார். இயேசுவைப் பின்பற்றி நம் பகைவர்களை மன்னித்து, அவர்கள் புரிந்த குற்றங்களை மறந்து, அவர்களுக்கு நன்மை செய்வோம். பிறர் குற்றங்களை மனத்திலே நீண்டகாலம் வைத்திருந்தால், நமது மனம் புண்ணாகிச் சீழ்வடியும். நாம் குணமடைய பிறருடைய பிழைகளை மன்னிப்பது அவசியமாகும், "உங்கள் பகைவரிடம் அன்பு கூருங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்” (லூக் 6:27), "இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்துவிடல்,”

2. இரண்டாம் முத்து "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” (லூக் 23:43).

இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட இருகள்வர்களில் ஒருவர் இயேசுவிடம், "இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்" என்று மன்றாடினான். இயேசுவின் அரசு ஒருநாள் நிறைவாக வரும் என்று அவன் நம்பினான். இயேசு அவனிடம், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" என்றார்.
வாழ்நாள் முழுவதும் கொலையும் களவும் செய்த கள்வனுக்கு இயேசு பேரின்ப வீட்டை வாக்களிக்கிறார். இவ்வாறு அவனுக்கு நம்பிக்கை அளித்து, அவன் மூலமாக நமக்கும் நம்பிக்கை அளிக்கிறார், ஒருவர் தமது வாழ்க்கையில் எந்தக் கட்டத்திலும் மனம் மாறலாம் எனக்கு வயதாகிவிட்டது: நான் பாவப் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டேன், இனி என்னைத் திருத்திக்கொள்ள முடியாது, எனது வாழ்ககை அஸ்தமாகிவிட்டது; எனக்கு இனி விடியல் இல்லை என்று அவநம்பிக்கை அடையக்கூடாது. இயேசுவிடம் சென்று, இதயம் திறந்து பேசுவோம். அவர் நிச்சயமாக நமது குணத்தை மாற்றி, வாழ்வை மாற்றுவார். நமக்குப் புதுப் பொலிவும் வலிவும் கிடைக்கும். "நம்பிக்கை வேண்டும் நம் வாழ்வில். இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்,"

3. மூன்றாம் முத்து 'அம்மா, இவரே உம் மகன்; இவரே உம் தாய்" (யோவா 19:26)

இயேசு தமது இறுதிக்களி இரத்தம்வரை சிந்தி எல்லாவற்றையும் தியாகம் செய்துவிட்டார். அவருடைய ஆடைகளைப் படைவீரர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். எஞ்சி இருந்தது சிலுவை அருகில் நின்று கொண்டிருந்த அவரது தாய் மட்டுமே. அத்தாயையும் "இதே உம் தாய்" என்று கூறி யோவாளிடம் ஒப்படைத்து, அதன் மூலம் அத்தாயை உலக மக்கள் அனைவாக்கும் தாயாகத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டார். யோவான் மரியாவை ஏற்றக்கொண்டதுபோல, நாமும் அவரை நம் தாயாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில், இயேசுவின் உயிலை, இறுதி விருப்பத்தை நாம் ஏற்றக்கொள்ளாதவர்கள் ஆகிறோம். இயேசு தம்மையும் தமது தாயையும் நமக்களித்ததுபோல், நாமும் நமக்குள்ள அனைத்தையும் பிறர்க்கு அளிக்க முன்வர வேண்டும்.

4. நான்காம் முத்து “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?"

இயேசு சிலுவையில் அடைந்த கொடிய வேதனை, எல்லாராலும் தனிமைப்படுத்தப்பட்டது "எல்லாரும் என்னைவிட்டு ஓடிவிடுவீர்கள். இருப்பினும் நான் தனியாக இல்லை. என் தந்தை என்னோடு இருக்கிறார்” என்று ஆணித்தரமாகக் கூறிய இயேசு "என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று எவ்வாறு கூறலாம்? இயேசு கூறிய இவ்வாக்கியம் திருப்பா 22-இன் தொடக்கம். இத்திருப்பாவில் கூறப்பட்டது அவரில் நிறைவேறியது. அவர் இத்திருப்பா முழுவதையும் சொல்லிச் செபித்திருப்பார். இத்திருப்பா அவநம்பிக்கையின் வெளிப்பாடு அல்ல, மாறாக நம்பிக்கையின் வெளிப்பாடு.
நம் வாழ்க்கையில் நாம் எல்லாராலும் ஏன் கடவுளாலும்கூட கைவிடப்பட்ட ஒரு கசப்பான உணர்வை அடையலாம், ஆனால் நாம்ஒருபோதும் அவநம்பிக்கை அடையலாகாது. "அடிப்பவரும் அவரே. அணைப்பவரும் அவரே, காயப்படுத்துகிறவரும் அவரே, காயத்தைக் குணப்படுத்துபவரும் அவரே" என்ற மன உறுதிப்பாடு தமக்கு வேண்டும்.

5. ஐந்தாம் முத்து "நான் தாகமாயிருக்கிறேன்" (யோவா 19:28)

"யாராவது தாகமாயிருந்தால் என்னிடம் வரட்டும், என்னில் நம்பிக்கை கொள்பவன் குடிக்கட்டும்.* மற்றவர்களின் தாகத்தைத் தனளிக்க வந்த இயேசு தமது தாகத்திற்குத் தண்ணீர் கேட்கிறார், அவரது தாகம் உடல் தாகம் என்பதைவிட, இதயத் தாகம், ஆன்மத் தாகமாகும். அனைவரையும் மீட்க வேண்டும் என்ற தாகம். அவருக்குப் கசப்பு கலந்தக் காடியைக் கொடுத்தார்கள், ஆனால் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை, இயேசுவின் தாகத்தைத் தணிக்க வேண்டுமென்றால், தண்ணீர் இல்லாமல் தவிப்போர்க்குத் தண்ணீர் கொடுக்க வேண்டும். "தாள் தாகமாய் இருந்தேன், எனக்குக் குடிக்கக் கொடுத்தீர்கள்."

6. ஆறாம் முத்து "எல்லாம் நிறைவேறிற்று” (யோவா 19:30)

இயேசு எந்த நோக்கத்திற்காக இவ்வுலகத்திற்கு வந்தாரோ அந்த நோக்கம் நிறைவேறிவிட்டது. சிலுவைச் சாவின் வழியாக அவர் உலகை மீட்க வேண்டுமென்ற கடவுளுடைய திட்டத்தை நிறைவேற்றிய நிலையில் "எல்லாம் நிறைவேறிற்று" என்று மறைநூல் நிறைவேறும் வண்ணம் மனநிறைவுடன் கூறினார். அவருடைய பகைவர்கள் அவருடைய சாவுடன் அவர் கதை முடிந்துவிட்டது என்று அக்களித்தனர். ஆனால் இயேசுவோ தமது சாவால், *எல்லாம் நிறைவேறிவிட்டது, அதாவது, முழுமை பெற்றுவிட்டது" என்று பெருமிதத்துடன் கூறுகின்றார், கடவுள் நம்மிடம் ஒப்படைத்துள்ள கடமையைச் செய்து முடிக்கும்போது, நாமும், "எல்லாம் நிறைவேறியது” என்று மன நிறைவுடன் கூறமுடியும்.
மனிதரின் பார்வையில் இயேசுவின் இறப்பு ஒரு படுதோல்வி; ஆனால் கடவுளின் பார்வையில் அது மாபெரும் வெற்றி. அவ்வாறே, நமது வாழ்வும் மனிதரின் பார்வையில் ஒரு படுதோல்வியாகக் காட்சி அளிக்கலாம், ஆனால் கடவுளோடு இணைந்து நமது கடமையைச் செய்யும்போது, தோல்வியும் வெற்றியாக மாறும். பிறர்க்காக நாம் வாழும்போது, நமது சாவு முடிவில்லா வாழ்வாகிறது.

7. ஏழாவது முத்து "தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்" (லூக் 23:46).

இயேசு உயிர் விட்டபோது கதிரவன் ஒளி கொடுக்க மறுத்துவிட்டது; புவியெங்கும் இருள் பரவியது: கற்பாறைகள் வெடித்தன; நிலம் நடுங்கியது. இயற்கையின் தலைவர் இறப்பதைக் கண்டு இயற்கையே அழுதது. இயேசுவின் சாவை ஒரு சிலர் வேடிக்கைப் பார்த்தனர்; ஒருசில பெண்கள் அழுதனர், ஒரு சிலர் மார்பில் அறைந்து கொண்டனர். ஆனால் இயேசுவோ, ஒரு குழந்தை தன் தாயின் மடியில் கண்மூடி அமைதியாய் உறங்குவதுபோல, கடவுளின் கரங்களில் தமது ஆவியை ஒப்படைத்து இறுதி மூச்சை விடுகிறார். நாமும் கடவுளின் அரவணைப்பில் உயிர் விடும் வரம் வேண்டுவோம்.
இயேசு உயிர் நீத்ததைக் கண்ட, சிலுவை அடியில் நின்ற நூற்றுவர் தலைவன், "உண்மையில் இவர் கடவுளின் மகன்" என்று அறிக்கையிட்டார், நாமும் அவருடன் சேர்ந்து விசுவாச அறிக்கையிடுவோம். இயேசுவின் சாவு கடவுளின் சாவு: இயேசுவின் சாவு மனிதரின் மீட்பு.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

சிலுவையடிக்கு வரட்டும்

இரவாகட்டும் பகலாகட்டும் எப்பொழுதெல்லாம் என்னைச் சுற்றிலும் அமைதி தவழ்கிறதோ, நிம்மதி நிலவுகிறதோ, அப்பொழுதெல்லாம் எங்கிருந்தோ வரும் ஒரு சோகக்குரல் - துயரக் குரல் என்னை உலுக்குகிறது. முதன்முறையாகக் கேட்ட போது குரல் வந்த திசை நோக்கிச் சென்றேன். குரலுக்குரியவரைத் தேடினேன். அக்குரல் சிலுவையிலிருந்து வந்தது. குரலுக்குரியவர் பாடுகளின் எல்லையிலே வேதனையின் விளிம்பிலே மரச்சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தார், மண் புழுவாய்த் துடித்துக் கொண்டிருந்தார். அருகிலே சென்று “இறக்கி விடுகிறேன்" என்று சொல்லி கால்களில் துளைத்திருந்த ஆணிகளைக் கழற்ற முயன்றேன். ஆனால் அவரோ விட்டு விடு. உன்னால் மட்டும் முடியாது. உலகில் உள்ள ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு குழந்தையும் ஒன்று திரண்டு வந்தால் அன்றி, என்னைச் சிலுவையினின்று இறக்க முடியாது. என் வேதனையைக் குறைக்க முடியாது' என்றார். உடனே நான் “உலகம் முழுவதும் என்றைக்கு உம் சிலுவையடிக்கு வரப்போகிறது? உம் வேதனை தீரப் போகிறது? உலகம் கிடக்கட்டும். இதோ நான் இருக்கிறேன். என்னால் ஏதாவது செய்ய முடியும் என்றால் சொல்லும்” என்றேன். “அப்படியா?” அவர் சொன்னார் “முதலில் இந்த இடத்தை விட்டுப் போ. உலகெங்கும் போ. ஊர் ஊராகப் போ. உன்னைச் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் சொல். உனக்காக ஒரு மனிதன் சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கிறான் என்று".

எனது கற்பனை அன்று; ஓர் ஆங்கிலக் கவிஞன் காவியமாக்கிய கடவுளின் சோகக்கதை. கல்வாரி என்பது என்றோ ஒருநாள் நடந்து முடிந்த பழைய நிகழ்ச்சி அல்ல. இன்றும் ஒவ்வொரு மனித வாழ்விலும் நடந்து கொண்டிருக்கும் தெய்வத்தின் துயர நிகழ்ச்சி என்பதை அழகாகச் சித்தரிக்கும் அற்புதமான கவிதை.

உனக்காக, எனக்காக, ஒவ்வொரு மனிதனுக்காக அங்கே இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கிறார். வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறார்.

ஏன் இந்த நிலை? வாய் திறந்து சொல்லும் நிலையில் அவர் இல்லை. அதோ இன்னும் துடித்துக் கொண்டிருக்கிறதே அந்த இதயத்தில் சாய்ந்து உற்றுக்கேள். அவரது இதயம் இப்படித் துடித்துக் கொண்டிருக்கும்... அன்பு, பாவம்... பாவம், அன்பு, அன்பு பாவம் என்று. ஆம் அனைத்துக்கும் காரணம் 1.பாவம் - அன்பு என்ற ஒன்று மட்டும் இல்லாதிருந்தால் என்றோ உலகை அழித்திருக்கக் கூடிய மனிதனின் பாவம்.
2. அன்பு - பாவத்தால் உலகம் அழிவதைப் பார்த்துச் சகிக்காத கடவுளின் அன்பு.

ஆம், பாவம் கடவுளைப் பழிவாங்கிவிட்டது. அன்பு கடவுளைப் பலியாக்கிக் கொண்டது. தெய்வத்தைப் பொருத்தவரை அது அன்புப் பலி. மனிதனைப் பொருத்தவரை அது கடவுள் கொலை. பாவம் அன்புக்கு இழைத்த கொடுமை சிலுவை.

அதோ சிலுவையில் இருகைகள் விரித்த நிலையில் இயேசு இருப்பது ஏன் தெரியுமா? இத்தாலிக் கவிஞர் தாந்தேயின் பார்வையில் அன்புக்கும் பாவத்துக்குமிடையே நடந்த போராட்டத்தின் விளைவாம்!

ஆதியில் மனிதன் கடவுளோடு கைகோர்த்துத் திரிந்தானாம். பாவம் நுழைந்தது. அன்புறவு அறுந்தது. பிரிவு. பிளவு. பாவம் மலிய மலிய இடைவெளியும் விரிந்தது. கடவுளை விட்டு மனிதன் ஒடினான். ஓடினான். ஓடிக்கொண்டே இருந்தான். அவனைத் தடுத்து ஆட்கொள்ள கடவுள் துரத்தினார். துரத்தினார். துரத்திக் கொண்டே இருந்தார்.

மனிதனோ அழிவின் வாசலுக்கே சென்று விட்டான். நரகம் எங்கே இருக்கிறது? கல்வாரிக்குப் பின்னேயாம்! பாவப்படுகுழியில் புரண்டு நரகத்தில் விழப்போகும் மனிதனைத் தடுப்பதற்காகத் தன் சக்தியை எல்லாம் - அன்புதானே அவரது சக்தி - ஒன்று திரட்டி அவனுக்கு முன்னே ஓடிச்சென்று தன் இரு கைகளையும் விரித்தார்.

விரித்த அந்த அன்புக் கைகளைச் சிலுவையில் அறைந்துவிட்டு - ஆணி கொண்டு பிணைத்துவிட்டுக் கீழே குனிந்து தன் இச்சைப்படி சென்றான் மனிதன்.

கடவுள் கைகளை விரித்தது மனிதன் தன் பாவத்தால் அவரைச் சிலுவையில் அறைந்து கொல்வதற்காகவா? அழிவை நோக்கிச் செல்லும் மனிதனைத் தடுத்து ஆட்கொள்வதற்காகவன்றோ!

கடவுளின் விலை என்ன? 30 வெள்ளிக் காசுகள் என்கிறான் மனிதன். மனிதனின் விலை என்ன? என் குருதி, என் உயிர் என்கிறார் இறைவன்.

இரு ஒருபுறம் இருக்கட்டும். இன்று இயேசுவைச் சிலுவையில் இருந்து இறக்க வேண்டுமா? “ஒவ்வொரு மனிதனும் கல்வாரியின் உச்சிக்கு வந்தால் ஒழிய...” ஆண்டவர் அழைக்கிறார்.

வாருங்கள் சிலுவையடி நோக்கி மலை ஏறுவோம். ஆனால் யாரைப்போல? பரிசேயர், படைவீரர், பொதுமக்கள் என்று எத்தனையோ பேர் அங்கே சென்றார்கள். ஆறுதலாக நின்றவர்கள் மூன்று பேர் மட்டுமே.

களங்கமின்மைக்குச் சின்னமான அன்னை மரியா. அர்ப்பணத்துக்கு அடையாளமான திருத்தூதர் யோவான். தவறான வாழ்க்கைக்காக மனத்துயர் கொண்ட மகதலா மரியா. இந்த மூன்று பேரில் ஒருவராக மாறாதவரை, சிலுவையடிக்குச் செல்ல எவருக்கும் உரிமையில்லை ; தகுதியும் இல்லை !

நாம் அத்தனை பேரும் அன்னை மரியா போல மாசற்றவர்கள் அல்லர்; யோவான் போல முழுநேர இறையாட்சி ஊழியர்கள் அல்லர்; நம் சார்பாக, நம் பதிலாள் போல் நிற்பவர் மகதலா மரியா, பாவியாக வாழ்ந்து இயேசுவின் கனிந்த பார்வையில் மனமுருகி மனம் மாறியவர்.

மலை ஏறுவது கடினமாயிற்றே, பழக்கமில்லையே என்ற தயக்கமா? மலையேறுவது கடினம் தான். பாவத்தை நினைப்பது, வருந்துவது, திருந்துவது, அறிக்கையிடுவது அனைத்துமே கடினம்தான். ஆனால் எந்தப் பாவத்துக்காக மன்னிப்புப் பெறுவதும், விட்டுவிலக உறுதிபூணுவதும் கடினமாக இருக்கிறதோ, அந்தப் பாவத்துக்காக - அதே பாவத்துக்காக - அதோ அங்கே சிலுவையில் தொங்கிக் கொண்டிருப்பது இன்னும் அதிகக் கடினமாக இருக்கிறது!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

“நம் குற்றங்களுக்காகக் காயமடைந்த இயேசு”

நிகழ்வு ஒருநாள் கடவுள் ஓரூரில் இருந்த இரண்டு இளைஞர்களுக்கு முன்பாகத் தோன்றி, அவர்களிடம் ஒரே அளவிலான இரண்டு சிலுவைகளைக் கொடுத்து, “இதை நான் சொல்கின்ற இடம் வரைக்கும் தூக்கிக்கொண்டு வாருங்கள்” என்றார். இருவரும் அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு, கடவுள் குறிப்பிட்ட அந்த இடத்தை நோக்கிச் சிலுவையைத் தூக்கிக்கொண்டு வரத் தொடங்கினார்கள். முதல் இளைஞர் அந்த நாள் மாலைக்குள்ளாகவே சிலுவையைக் கடவுள் சொன்ன இடத்திற்குத் தூக்கிக்கொண்டு போய்விட்டார். இரண்டாவது இளைஞரால் மறுநாள் மாலைதான் சிலுவையைக் கடவுள் சொல்ல இடத்திற்குத் தூக்கிக்கொண்டு போக முடிந்தது. இதைப் பார்த்துக் கடவுளிடம் அவரிடம், “நீ ஏன் இவ்வளவு தாமதமாகச் சிலுவைத் தூக்கிக்கொண்டு வருகின்றாய்?” என்றார். அதற்கு அந்த இளைஞர், “நீர் அவனுக்கு கொடுத்த சிலுவையை விடவும் எனக்குக் கொடுத்த சிலுவையின் எடை கூடுதலாக உள்ளது. அதனால்தான் என்னால் இந்தச் சிலுவையை இவ்வளவு தாமதாகக் கொண்டுவர முடிந்தது” என்றார். “உண்மையில் நீ சொல்லக்கூடிய காரணம் சரியானதில்லை” என்று அந்த இளைஞரிடம் பேசத் தொடங்கிய கடவுள், “அந்த இளைஞரால் நேற்று மாலையே தன்னிடம் கொடுக்கப்பட்ட சிலுவையை இங்குக் கொடுவர முடிந்ததென்றால், அதற்கு முக்கியக் காரணம், அவர் தனக்குக் கொடுக்கப்பட்ட சிலுவையை மனமுவந்து சுமந்தார் என்பதுதான். அவர் தனக்குக் கொடுக்கப்பட்ட சிலுவையை மனமுவந்து சுமந்ததால் சுமை எளிதானது; ஆனால், நீ ‘எனக்கு இவ்வளவு பெரிய சிலுவை கொடுக்கப்பட்டுவிட்டதே!’ என்று உனக்குக் கொடுக்கப்பட்ட சிலுவையை விருப்பமின்றியும் வேண்ட வெறுப்பாகவும் சுமந்தாய். அதனாலேயே நீ சுமந்து வந்த சிலுவையின் எடை கூடுதலாக இருந்தது போன்று உனக்குத் தெரிந்திருக்கின்றது” என்றார். ஆம், வாழ்க்கையில் வரும் எந்தவொரு சிலுவையையும் அல்லது சுமையையும் மனவிருப்பத்தோடு சுமந்தால், அது சுகமான சுமைதானே! இன்று நாம், நம் ஆண்டவர் இயேசு நமக்காகச் சிலுவை சுமந்து சென்றதையும், அதில் இறந்ததையும் நினைத்துப் பார்க்கின்றோம். இயேசுவின் பாடுகள், அவர் அடைந்த துன்பங்கள் நமக்குக் என்ன செய்தியை உணர்த்துகின்றன என்று சிந்தித்துப் பார்ப்போம். பாவம் செய்யாதிருந்தும் பாவிகளுக்குரிய தண்டனையைப் பெற்ற இயேசு
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில், “நம் தலைமைக் குரு பாவம் செய்யாதவர்” என்று வாசிக்கின்றோம். பிலாத்துகூட இயேசு கிறிஸ்துவைக் குறித்துக் கூறும்பொழுது, “மரண தண்டனைக்குரிய குற்றம் ஒன்றும் இவனிடம் நான் காணவில்லை” (லூக் 23: 22) என்றே கூறுகின்றார். இப்படிப் பாவம் செய்யாத, மரண தண்டனைக்குரிய குற்றம் எதுவும் காணவியலாத இயேசு எதற்காக நாட்டைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கும் துரோகிகளுக்கும் கொடுக்கப்படும் சிலுவைச் சாவுக்கு உள்ளாக வேண்டும் என்ற கேள்வியைக் கேட்டுப் பார்த்தோமெனில், அதற்கு இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் இடம்பெறும், அவர் நம் குற்றங்களுக்காகச் சிலுவைச் சாவுக்கு உள்ளானார் என்பதுதான் பதிலாக வரும்.

ஆம், இயேசு உலகில் பாவங்களைப் போக்க வந்த கடவுளின் ஆட்டுக்குட்டி (யோவா 1: 29); அவர் சிலுவையின்மீது தம் உடலில் நம் பாவங்களைச் சுமந்தவர். ஆதலால், பாவம் செய்யாத இயேசு, பாவிகளுக்குரிய தண்டனையைப் பெற்றது நம்மீது கொண்ட அன்பினால்தான் என்று உறுதியாகச் சொல்லலாம்.

கத்தாத செம்மறியான இயேசு
பாவிகளுக்குக் கொடுக்கப்பட்ட சிலுவைச் சாவு, பாவமே செய்யாத இயேசுவுக்குக் கொடுக்கப்பட்டது என்று மேலே பார்த்தோம். இவ்வாறு தனக்குக் கொடுக்கப்பட்ட சிலுவைச் சாவை அல்லது தண்டனையை வேண்டா வெறுப்பாக அல்ல, தந்தையின் திருவுளம் என்று விரும்பி ஏற்றுக்கொள்கின்றார் இயேசு (லூக் 22: 42). இன்னும் சொல்லப்போனால், இன்றைய முதல்வாசகத்தில் நாம் வாசிப்பது போன்று, உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போன்று அவர் வாயைத் திறவாயிருந்தார்.

விசாரணையின்போது இயேசு ஏரோது, தலைமைக் குரு கயபா, பிலாத்து ஆகியோர் முன்பாக இழுத்துச் செல்லப்பட்டபொழுது தான் குற்றமற்றவர் என்று நிரூபித்திருக்கலாம் அல்லது அவரே சொல்வது போல், யூதர்களிடம் காட்டிக்கொடுக்கப்படாதவாறு அவரது காவலர்கள் போராடியிருக்காலம்; இயேசு இது எதையுமே செய்யாமல் கத்தாத செம்மறியாவே இருக்கின்றார். இதன்மூலம் அவர் தந்தைக் கடவுளுக்கு உகந்ததையே செய்து (யோவா 8: 29), அவரை மாட்சிப்படுத்துகின்றார் (யோவா 17: 4). இயேசு கிறிஸ்து தந்தைக் கடவுள் தன்னிடம் கொடுத்த வேலைகளை செய்து முடித்து, அவரை மாட்சிப் படுத்தியது போல, நாம் ஒவ்வொருவரும் தந்தைக் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றிக் கடவுளை மாட்சிப்படுத்த வேண்டும். இது நம் ஒவ்வொருவருடைய தலையாய கடமை என்பதை மறந்துவிடக்கூடாது

மாட்சியுறும் இயேசு
ஒரு கத்தாத செம்மறியாய், பாவிகளுக்குக் கொடுக்கப்பட்ட சிலுவைச் சாவை பாவமே செய்யாத இயேசு ஏற்றுக்கொண்டு தந்தைக் கடவுளை மாட்சிப்படுத்தினார் என்று பார்த்தோம். அவர் தந்தைக் கடவுளை மாட்சிப்படுத்தியதால், தந்தைக் கடவுளும் அவரை மாட்சிப்படுத்துகின்றார். அவர் எவ்வாறு மாட்சிப்படுத்தப்படுவார் என்பதை இன்றைய முதல் வாசகத்தில் வரும் முதல் இறைவார்த்தை மிக அழகாக எடுத்துச் சொல்கின்றது.

“இதோ, என் ஊழியர் சிறப்படைவார்; அவர் மேன்மைப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டு, பெரிதும் மாட்சியுறுவார்” என்று துன்புறும் ஊழியராம் இயேசு எவ்வாறு மாட்சியுருவார் என்கிறார் ஆண்டவர். திருத்தூதர் பவுலும் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில் (பிலி 2: 9-10) இது தொடர்பாக மிக அழகாகக் கூறுவார். எனவே, இயேசு எப்படி தன்னையே கையளித்துக் கடவுளில் மாட்சிப்படுத்தினாரோ, அப்படி நாமும் இறைவனின் திருவுளம் நிறைவேற நம்மையே கையளித்து தந்தையை மாட்சிப்படுத்துவோம். எதிர்வரும் துன்பங்களையும் சவால்களையும் சிலுவைகளையும் மனவுறுதியோடு தாங்கிக்கொள்வோம்.

சிந்தனை
‘திருஅவையின் உண்மையான பெருமை சிலுவையில் அடங்கியுள்ளது’ என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். எனவே, நாம் சிலுவையைச் சிறுமையாகப் பார்க்காமல், நமது பெருமையாகப் பார்த்து, அது சுட்டிக்காட்டும் தியாகம், அன்பு, மன்னிப்பு ஆகிய பண்புகளை நமது வாழ்வில் கடைப்பிடித்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நான் காணும் சிலுவை

2015ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒரு சர்வே நடத்தப்பட்டது. 'மக்களுக்குப் பரிச்சயமான அடையாளங்கள் எவை?' என்தே ஆய்வின் தலைப்பு. 'மெக்டொனால்ட்ஸை' குறிக்கும் 'எம்' என்ற ஆங்கில எழுத்து, ஆப்பிள் நிறுவனத்தின் 'கடித்த ஆப்பிள்', ஸோனி நிறுவனத்தின் வளைந்த கோடு, என பல அடையாளங்களோடு இணைத்து, 'சிலுவை' என்ற அடையாளமும் தாளில் குறிக்கப்பட்டிருந்தது. ஆய்வின் இறுதியில் அதிகம் பரிச்சயமான அல்லது அறிமுகமான அடையாளம் 'எம்' என்று கண்டுபிடிக்கப்பட்டது. வெறும் 30 சதவிகித மக்களே சிலுவை என்றால் என்ன என்பதை அறிந்தவர்களாக இருந்தனர்.
இன்று நாம் அருவருப்பான ஒன்றைப் பார்த்தால் 'ஹாரிப்ல்' என்கிறோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் உரோமையர்கள் 'எக்ஸ் க்ருசே' ('சிலுவையிலிருந்து') என்பார்கள். மனிதர்கள் பார்வையில் அருவருப்பான ஒன்றை இன்று நாம் மகிமையின் சின்னமாகக் கொண்டாடுகிறோம்.
சிலுவை நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று. எங்கு பார்த்தாலும் சிலுவை நம் கண்முன் நிற்கிறது.
கணிதத்தில் க்ராஸ் என்பது கூட்டல் அல்லது பெருக்கல்.
அல்ஜிப்ராவில் க்ராஸ் என்பது வெறுமை.
டிராஃபிக்கில் க்ராஸ் என்றால் ஆம்புலன்ஸ்
பேட்டரியிலும், இரத்த வகையிலும் க்ராஸ் என்பது பாஸிட்டிவ்.
அடையாளங்களில் க்ராஸ் என்றால் 'தடை செய்யப்பட்டது' ஏ பி சி டி இயில் க்ராஸ் என்றால் எக்ஸ்
சாலைகளில் க்ராஸ் என்றால் சந்திப்பு
உரோமை எழுத்தில் க்ராஸ் என்றால் பத்து
விடைத்தாளில் க்ராஸ் என்றால் தவறு
ஏடிஎம் பின்னை பதிவு செய்யும் போது க்ராஸ் என்றால் சீக்ரெட்
இப்படி திரும்பும் எல்லாப் பக்கமும் தெரியும் க்ராஸ் நமக்குச் சொல்வது என்ன?
'சிலுவை' என்றால் என்னைப் பொறுத்தவரையில் 'வாழ்வின் அடுத்த பக்கம்.'
இளமையிலிருந்து பார்க்கும் அதன் அடுத்த பக்கம் முதுமை சிலுவை.
பிறப்பின் சிலுவை இறப்பு.
விருப்பின் சிலுவை வெறுப்பு.
உடல்நலத்தின் சிலுவை நோய்.
நாம் ஒன்றை எடுக்கும்போதே அதன் அடுத்த பக்கமும் வருகிறதே. அந்த அடுத்த பக்கம்தான் சிலுவை. ஒரு புத்தகத்தின் முதல் பக்கத்தை திறக்கும் நாம் அதன் கடைசி பக்கத்தில் அதை மூடித்தான் வைக்க வேண்டும். திரைப்படத்தின் தொடக்கத்தைப் பார்க்கும் நாம் அதன் முடிவையும் வாசிக்க வேண்டும். ஒன்றைத் தொடங்கும்போது அதன் முடிவும் நம் முன் வந்துவிடுகிறது. அந்த அடுத்த பக்கம்தான் சிலுவை.
சிலுவை என்றால் நம் நொறுங்குநிலை.
சிலுவை என்றால் நம் உறுதியில்லாத நிலை.
சிலுவை என்றால் நம் உடையும்நிலை.
சிலுவையை நோக்கிய நம் பார்வையை மூன்று நிலைகளில் விவிலியம் பதிவு செய்கிறது:
அ. 'இந்தச் சிலுவை உமக்கு வேண்டாம்' என இயேசுவிடம் சொல்கிறார் பேதுரு.
சில நேரங்களில் நாமும் சிலுவை வேண்டாம் என நினைக்கிறோம். ஆனால் இது எதார்த்தம் அல்ல.
ஆ. 'இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கும்' என்கின்றனர் வழிப்போக்கர்கள்.
இந்நிலையில் நாம் சிலுவையிலிருந்து பாதியிலிருந்து ஓடிவிட நினைக்கிறோம்.
இ. 'நீர் அரசுரிமை பெற்று வரும்போது என்னை நினைவுகூறும்' என்கிறார் நல்ல கள்வன்.
இவர்தான் சிலுவையை சரியாகப் புரிந்தவர். சிலுவையை அரியணையாகவும், இயேசுவை அரசராகவும், அவரின் முள்முடியை அரச கிரீடமாகவும், கையின் ஆணிகளை ஆயுதங்களாகவும் பார்க்க இவரால் மட்டுமே முடிந்தது.
ஆக, சிலுவையின் மறுபக்கத்தையே பார்க்க வைத்தவர் இவரே.
வாழ்வின் மறுபக்கம்தான் சிலுவை.
நம் வாழ்வில் சிலுவை என்னும் நொறுங்குநிலையை, உறுதியில்லாத நிலையை, உடையும்நிலையை நாம் எப்படி எதிர்கொள்வது?
(அ) மௌனத்தால்
இன்றைய முதல் வாசகத்தில் துன்புறும் ஊழியன் நான்காம் பாடலிலிருந்து வாசிக்கக் கேட்டோம். இங்கே, தான் அடிக்கப்பட்ட போதும், நொறுக்கப்பட்டபோதும் அமைதி காக்கின்றார் ஊழியன். இங்கே அமைதி என்பது வெறும் 'ஸைலன்ஸ்' அல்ல. மாறாக, எதிர்ப்பைப் பதிவு செய்யும் போராட்டக் குரல். பேச மறுப்பதும் ஒரு வகையான போராட்டமே. அந்த அமைதி எதிரியை அவமானம் அடையச் செய்யும்.
(ஆ) பலி பீடமாக மாற்றுவதால்
இன்றைய இரண்டாம் வாசகத்தில் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், இயேசு சிலுவையில்தான் தலைமைக்குருவாக மாறுவதாக எழுதுகின்றார். சிலுவையை இயேசு இப்படித்தான் பார்த்தார். தன்னையே கடவுளுக்குப் பலியாக ஒப்புக்கொடுத்தார். அதையே பாவம் போக்கும் பலியாகக் கடவுள் ஏற்றுக்கொண்டார்.
(இ) எல்லாம் நிறைவேறிற்று
இப்படிச் சொல்லி இயேசு உயிர்விடுவதாக யோவான் நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார். தன் வாழ்வின் இறுதிவரை தன் வாழ்வைத் தன் கட்டுக்குள் வைத்திருந்தார் இயேசு. இன்று நாம் நம்முடைய வாழ்வை நம் கட்டுக்குள் வைத்திருக்கிறோமா அல்லது மற்றவர்களின் விமர்சனங்களுக்கு உட்படுத்தி, மற்றவர்கள் சொல்வது போல, செய்வது போல வாழ முயற்சி செய்கிறோமா?
இறுதியாக, நவம்பர் 18, 1998 அன்று அமெரிக்க ஐக்கிய நாடுகளின் லிங்கன் சென்டரில் வயலின் கச்சேரி ஒன்று நடந்தது. அதனால் என்ன? அரங்கம் என்றால் கச்சேரிகள் நடக்கத்தானே செய்யும். அன்றைய நாளில் வயலின் வாசிக்க இட்ஸாக் பெர்ல்மன் என்பவர் அழைக்கப்பட்டிருந்தார். இவர் பெரிய வயலின் இசைக் கலைஞர். ஆனால், போலியோ நோயினால் அவதியுற்றதால் மிகவும் சூம்பிய கால்களை உடையவர். கைத்தடிகள் இன்றி அவரால் நடக்க முடியாது. அரங்கமே நிறைந்த அன்று தன் கைத்தடிகளை ஊன்றி மேடைக்கு வந்தார் இட்ஸாக். அனைவரின் கண்களும் இவர்மேல் இருந்தன. சபையோரை வணங்கிவிட்டு வயலினைக் கையில் எடுத்த இவர் வாசிக்கத் தொடங்கினார். வாசிக்கத் தொடங்கிய நொடியில் வயலினின் நான்கு கம்பிகளில் ஒன்று அறுந்து தொங்கியது. அரங்கம் சற்றென அதிர்கிறது. 'இவர் மறுபடியும் கைத்தடிகள் கொண்டு கீழே இறங்கி வந்து இதைச் சரி செய்து வாசிக்கத் தொடங்குவார்' என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருந்த வேளையில், ஒரு நொடியும் இடைவெளி இல்லாமல் வெறும் மூன்று கம்பிகளைக் கொண்டு நாற்பத்தைந்து நிமிடங்கள் தொடர்ந்து அழகாக வாசிக்கின்றார் இட்ஸாக். அரங்கமே எழுந்து நின்று அவரை வாழ்த்துகிறது. 'ஒரு கம்பி அறுந்தவுடன் நீங்கள் அதை மாற்றிவிட்டுத்தான் வாசிப்பீர்கள் என்று நாங்கள் நினைத்தோம்' என்கிறார் நிகழ்ச்சி தொகுப்பாளர். அதற்கு இட்ஸாக், 'நல்ல இசைக்கலைஞனின் இசை அவனுடைய கையில் இருக்கும் வீணையில் அல்ல. அவனிடம்தான் இருக்கிறது' என்றாராம்.
வெறும் மூன்று கம்பிகளை வைத்து வாசித்த இட்ஸாக் போல, வெறும் மூன்று ஆணிகளில் தொங்கி கடவுளையும் மனுக்குலத்தையும் இணைக்கும் அழகிய ஸிம்பொனியை வாசித்தார் இயேசு.
நிராகரிக்கப்படுதல் (ரிஜெக்ஷன்), கைவிடப்படுதல் (அபேன்டன்மன்ட்), காட்டிக்கொடுக்கப்படுதல் (பிட்ரேயல்), மறுதலிக்கப்படுதல் (டினையல்), அவமானப்படுத்தப்படுதல் (ஹ்யுமிலியேஷன்), சிலுவையில் அறையப்படுதல் (க்ருஸிஃபிக்ஷன்) என்று அவருடைய வாழ்வு உறுதியற்ற நிலையில், வலுவற்ற நிலையில், நொறுங்குநிலையில் இருந்தாலும், அவர் குறுக்கு வழிகளைத் தேடவில்லை, எதார்த்தத்தை மறுக்கவில்லை, தப்பி ஓடவில்லை.
எதிர்கொண்டார்.
இன்று நான் காணும் சிலுவை என்னில் எழுப்பும் உணர்வு என்ன?
'இதோ! மனிதன்!' எனத் தொங்குகிறார்.
அந்த மனிதனில் நான் என்னைக் காண்கிறேன்.
'நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்' என்னும் வரிகள், 'நான் யார்? நான் யாருக்காக?' என்ற கேள்விகளை என் முன்னே வைக்கின்றன.
அவற்றுக்கான என் பதிலிறுப்பு என்ன?

'மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்.
நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்.
அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.'
(எசாயா 53:4-5)
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ser
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு