மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பாஸ்கா காலத்தின் 6-ஆம் ஞாயிறு
1-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
திருத்தூதர்பணி 8:5-8,14-17| 1பேதுரு 3:15-18 | யோவான் 14: 15-21

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


ஒரு சுண்டெலி , ஒரு பூனை தன்னைக் கொன்று தின்று விடுமோ என நடுங்கி, பதுங்கிக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த மந்திரவாதி, உன்னைப் பூனையாக்கவா என்று கேட்க, ஆம் என்று சொன்னது. அவரும் பூனையாக்கினார். நாய் தன்னைக் கடித்து விடுமே என பயந்தபோது, அதை நாயாக மாற்றினார். அய்யோ புலி தன்னைக் கொன்று விடுமே என பயந்தபோது அதைச் சிறுத்தைப் புலியாக மாற்றினார். ஐயோ வேடன் தன்னைச் சுட்டுவிடுவானே என பயந்தது சிறுத்தைப் புலி. எனவே கோபம் கொண்ட மந்திரவாதி உன்னை எப்படி மாற்றினாலும் நீ பயப்படத்தான் செய்வாய். ஏனெனில் உன் இருதயம் எலியின் இருதயம் தானே. அதை மாற்ற முடியாதே என்றார். நாம் நம் இதயத்தை மாற்றினால் தான் தூய ஆவியைப் பெறமுடியும்.

இன்றைய வார்த்தை வழிபாட்டிலே நாம் கடவுளை அன்பு செய்ய அவரது கட்டளையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார். கடைப்பிடிப்போருக்கு தூய ஆவியையும் வாக்களிக்கிறார். நற்செய்தியை ஏற்று இயேசு ஆண்டவர் என்று அறிக்கையிடும் விசுவாசத்தில் தான் தூய ஆவியைப் பெற முடியும் என முதல் வாசகம் நமக்குக் கற்பிக்கிறது. நற்செய்தியை ஏற்றுக்கொண்ட சமாரிய மக்கள் மீது பேதுரு கை வைத்தபோது பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டார்கள்.

இன்றைய மூன்றாம் வாசகத்தில் நீங்கள் என் கட்டளையைக் கடைப்பிடித்தால் என்னை அன்பு செய்வீர்கள். தூய ஆவியைப் பெறுவீர்கள் என்பதை நம் ஆண்டவர் நமக்குக் கற்பிக்கிறார்.

அன்பு செய்கிறோம் என்று நாம் வாயால் சொல்வதால் நாம் தூய ஆவியைப் பெற முடியாது. ஆண்டவர் இயேசு இட்ட கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் (மத். 25:31-40).

 1. பசியாக இருப்பவர்களுக்கு உணவு கொடு
 2. தாகமாய் இருப்பவர்களுக்குக் குடிக்கக் கொடு
 3. அந்நியரை வரவேற்க வேண்டும்
 4. ஆடையின்றி இருப்பவரை உடுத்த வேண்டும்
 5. நோயுற்றோரைச் சந்திக்க வேண்டும்
 6. சிறையுற்றோரைப் பார்க்க வேண்டும்

தூய ஆவியை எளிதாகப் பெற முடியாது. சமாரிய மனிதன் சீமோனைப்போல காசு கொடுத்தும் வாங்க முடியாது (தி.ப. 8:1820). நம் அன்பு வாழ்க்கையால் தான் பெற முடியும்.

 • சாதாரண மனிதர்களைப் பாருங்கள். விவசாயி காலம் காத்திருந்து உழுது, பண்படுத்தி, உரமிட்டு, நீர்பாய்ச்சி, அறுவடை செய்ய என்ன பாடுபடுகிறான்.
 • விளையாட்டு வீரர் தான் ஒரு மாவீரனாகத் திகழ எத்தனையோ தியாகங்கள் செய்ய வேண்டியவர் ஆகிறார். தன் உணவைக் கட்டுப்படுத்தி, தூக்கத்தையும், சுகபோகங்களையும் தியாகம் செய்து தினமும் உடலுக்குப் பயிற்சி கொடுக்கிறார்.
 • ஏன் நீங்களே இன்று தேர்வுக்கு என்ன பரபரப்புடன் இருக்கிறீர்கள். இரவு நேரம் விழித்துப் படிக்கும் நிலை!

இதேபோல நீங்களும் நானும் நம் செயலால் இயேசுவின் கட்டளையைக் கடைப்பிடிக்கவும், ஆதிக்கிறிஸ்தவர்கள் போல நோன்பிருந்து உடலை ஒடுக்கி , கட்டுப்படுத்தி செபிக்கவில்லை என்றால் பரிசுத்த ஆவியைப் பெற முடியாது. ஆவியானவர் இன்றி நாம் செத்தவர்கள்.

இயேசுவின் ஆவியைக் கொண்டிராவிட்டால் நாம் கிறிஸ்தவர்கள் அல்ல (உரோ. 8:9). தூய ஆவி நமக்குச் செய்வதென்ன?

 • நாம் வெற்றி கொள்வோம் (Conquerors)
 • இரக்கமுடையவராக இருப்போம் (Compassion)
 • படைப்பாற்றல் பெறுவோம் (Creative)
 • சேவை மனம் (Service minded)
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

எங்கே இறைவா இருக்கின்றீர்?

உயிர்த்த கிறிஸ்து அவரது ஆவியாரை நமக்குள் ஊற்றியிருக்கின்றார். அந்த ஆவியார் இன்றைய நற்செய்தியிலே இயேசு கூறுவது போல, நமக்குள் தங்கியிருக்கின்றார் (யோவா 14:17).

இதோ வங்கக்கவி இரபீந்திரநாத் தாகூர் சொல்லும் கதையொன்று! அந்தச் சிறுமிக்கு வயது பத்து. கடவுளைக் காண, அவரோடு பேச அவள் காத்திருந்தாள். பல வருடங்கள் உருண்டோடி விட்டன. அவளுக்கு அப்போது வயது எண்பது இருக்கும். அவள் கண்பார்வையை இழந்தாள். ஒரு கிராமத்திலே ஊர்த் திருவிழா! அங்கே அவள் பிச்சையெடுத்துக்கொண்டிருந்தாள். பிச்சைப் பாத்திரத்தில் விழுந்த காசு கூட அவளுக்குக் கிடைக்கவில்லை! அவள் எடுப்பதற்குள் பாத்திரத்தில் விழுகின்ற காசை சிலர் எடுத்துவிடுவார்கள். பிச்சைக்காரர்களிடமே பிச்சையெடுக்கும் கூட்டமொன்று அங்கேயிருந்தது! திடீரென அவள் பெயரைச் சொல்லி யாரோ அழைத்தார்கள். யாரது? என்றாள் கிழவி! அழைத்தவரோ, நான்தான் கடவுள்! உன்னைச் சந்திக்க வந்திருக்கின்றேன் என்றார். அதற்கு அந்தக் கிழவி, உனக்காகப் பாலோடும், பழத்தோடும் காத்திருந்தேன். அப்போது நீ வரவில்லை! இப்போது என்னிடம் ஒன்றுமேயில்லை - உன்னைப் பார்க்கக் கண்களும் இல்லை என்றாள். கடவுளோ, உன் பொருள்களில் எதுவும் எனக்கு வேண்டாம். இந்த உலகம் முழுவதையும் படைத்தவன் நான். அடுத்து, என்னைப் பார்க்க உனக்கு புறக்கண்கள் தேவையில்லை. அகக்கண் அதாவது நம்பிக்கை போதும். இப்பொழுது அமைதியாக கண்களை மூடி அமர்ந்திரு. என்ன நடக்கின்றது என்று பார் என்றார். அந்தக் கிழவி அப்படியே செய்ய, அவள் உள்ளத்திற்குள்ளிருந்து கடவுள் அவளோடு பேசினார். இந்தக் கதையைச் சொல்லிவிட்டு, ஓ இந்தியர்களே! இறைவன் உங்களுக்குள்ளே இருக்கின்றார் என்கின்றார் கவி தாகூர்.

ஆம். இறைவன் நம்மோடு வாழ்கின்றார் இறை ஆவியார் உருவிலே (1யோவா 3:24). புனித பவுலடிகளார் உரோமையருக்கு எழுதியுள்ள திருமுகத்திலே 8-வது இயலில் 9,10,11 ஆகிய இறைவாக்கியங்களில் மூன்று இடங்களில் தூய ஆவியார் நமக்குள் குடிகொண்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

இப்பொழுது நமக்கு வேண்டியதெல்லாம் நம்பிக்கையே - இறைவன் ஆவியாரின் உருவிலே நம்முள் வாழ்கின்றார் என்ற நம்பிக்கையே இப்படிப்பட்ட நம்பிக்கை இருக்கும் இடத்திலே எந்தவிதத் தடுமாற்றத்திற்கும், அச்சத்திற்கும், கலக்கத்திற்கும் இடமிருக்காது.

விப 3:11: அங்கே பார்வோனிடம் செல்லவும், இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து அழைத்து வரவும் தயங்குகின்றார் மோசே. கடவுளோ, நான் உன்னோடு இருப்பேன் என்கின்றார். கடவுளின் வார்த்தைகள் மீது மோசே நம்பிக்கை வைத்து, அவரோடு கடவுள் இருக்கின்றார் என்பதை ஏற்றுக்கொண்டபோது, அவர் கடவுளின் கட்டளையை ஏற்றுக்கொள்கின்றார். லூக் 1:35 : அங்கே வானதூதர் சொன்னதைக் கேட்டுக் கலங்கிய கன்னித் தாயைப் பார்த்து, தூய ஆவி உம்மீது வரும் என்று வானதூதர் சொன்னவுடன் மரியா நம்பினார். தூய ஆவியார் அவரோடு இருப்பார் என்பதை நம்பினார்; அவரின் உதடுகள் உன்னதமான வார்த்தைகளை உச்சரித்தன. நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் (லூக் 1:38) என்றார்.

இறைவன் நம்மோடு வாழும் போது நமக்கு எந்தக் குறையுமிராது (திபா 23). இதனால்தான் தூய ஆவியாரைப் பெறவேண்டுமென்பதில் இயேசுவின் சீடர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள் (முதல் வாசகம்). இதனால்தான் இரண்டாவது வாசகத்தில் புனித பேதுரு, உங்கள் உள்ளத்தில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றுங்கள் (1 பேது 3:15) என்கின்றார். நாம் வாழ்வது தூய ஆவியாரின் காலம். நாம் நம்மருகில் வாழ்வதைவிட மிக நெருக்கமாக நம்மருகே தூய ஆவியார் உருவிலே இறைவன் நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றார். புனித பவுலடிகளாரைப் போல, எனக்கு வலுவூட்டுகின்றவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு (பிலி 4:13) என்று வாழ நாம் முன்வருவோம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

கார் ஓட்டுனர் ஒருவர் காரில் அமர்த்திருந்த தன் முதலாளியிடம், *ஐயா! காரில் ஒரு துளி பெட்ரோல்கூட இல்லை; இனிமேல் ஓர் அங்குலம் கூட முன்னாலே போக முடியாது" என்றார். அதற்கு முதலாளி ஒட்டுனாரிடம் “அப்ப, காரைப் பின்னாலே எடு; வீட்டுக்குப் போகலாம்' என்றாராம்!

பெட்ரோல் இல்லை என்றால், கார் முன்னாலும் போகாது. பின்னாலும் போகாது. அவ்வாறே வாழ்க்கை என்னும் காரில் 'அன்பு' என்னும் பெட்ரோல் இல்லையென்றால் வாழ்க்கைப் பயணம் முன்னாலும் போகாது; பின்னாலும் போகாது.

பட்டுப்போன மரம் மீண்டும் துளிர்ப்பது அரிது; அப்படியானால், பாலைவனத்தில் பட்டுப் போன மரம் துளிர்ப்பது அரிது. அரிது. அவ்வாறே அன்பு அகத்தில் இல்லாத ஒருவரின் வாழ்வு துளிர்ப்பது இயலாத ஒன்றாகும் என்கிறார் வள்ளுவர்.

"அன்பகத்து இல்லாயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம் தளிர்த்தற்று" (குறள் 78)

இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து தம் சீடர்களிடம் கூறுகிறார்; "நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள்" (யோவா 14:15), கிறிஸ்து தமக்குத் தந்துள்ள கட்டளை என்ன? அவரின் ஒரே கட்டளை அன்புக் கட்டளை. “ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்" (யோவா 13:34). கிறிஸ்துவின் இந்த அன்புக் கட்டளையைக் கடைப்பிடிக்க அவர் தம் சீடர்களுக்குத் தூய ஆவியாரை அளிக்க இருப்பதாக வாக்களிக்கிறார் (யோவா 14:16).

தூய ஆவியார் அன்பின் ஆவியார்; நிறை உண்மையை நோக்கி வழிநடத்தும் ஆவியார். கடவுள் ஒருவரே நமது வானகத் தந்தை ; மக்கள் அனைவரும் சகோதரர், சகோதரிகள் (மத் 23:8-9). கிறிஸ்துவே நமது அமைதி. அவர் பூத இனத்துக்கும் பிற இனத்துக்கும் இடையே இருந்த பகைமைச் கவரைத் தகர்த்து இரு இனத்தாரையும் ஓரினமாக்கிப் புதியதொரு மனித இனத்தைப் படைத்தார் (எபே 2:14-16), கிறிஸ்து உருவாக்கிய புதிய மனித இனத்தில் யூதர்-கிரேக்கர். அடிமைகள் - உரிமைக் குடிமக்கள், ஆண்-பெண் என்னும் வேறுபாடில்லை (கலா 3:28). கிறிஸ்துவின் சீடர்கள் ஒரே அப்பத்தில் பங்கு பெறுவதால் அவர்கள் கிறிஸ்துவில் ஓருடலாக உருப்பெறுகின்றனர் (1கொரி 10:17), 'ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' (திருமூலர்), "யாதும் ஊரே: யாவரும் கேளிர்' (கனியன் பூங்குன்றனார்).

கிறிஸ்தவ சமயம் மனித குலத்தை ஒரே குலமாக இணைக்க வேண்டிய புனிதக் கடமையைக் கொண்டுள்ளது. இக்கடமையைக் கண்முன் கொண்டு திருத்தூதர்கள் நற்செய்தியைப் போதித்தனர். அவர்கள் போதனையைக் கேட்ட சமாரியர் மனம் மாற்றமடைந்து திருமுழுக்குப் பெற்றனர். பேதுருவும் யோவானும் அவர்கள் மேல் கைகளை வைக்க அவர்கள் தூய ஆவியைப் பெற்றனர் என்று இன்றைய முதல் வாசகம் கூறுகிறது (திப 8:14-17). இன்றும் கிறிஸ்து தம் அன்பின் ஆவியைப் பொழிந்து எல்லா இனத்தவரையும் ஓரினமாக மாற்றிக் கொண்டிருக்கிறார். கிறிஸ்தவர்களிடையே பிளவு ஏற்படும்போது, அது நற்செய்திப் பரவுவதற்கு மாபெரும் தடையாக உள்ளது. கிறிஸ்தவர்கள், அதுவும் திருப்பணியாளர்கள், துறவறத்தார்கூட, சொத்துரிமைக்காகப் போராடி நீதிமன்றங்களை அணுகுவது மிகவும் வெட்கத்துக்கு உரியதாகவும் வேதனைக்குரியதாகவும் உள்ளது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இருவர் ஒரு பொருளின் மீது உரிமை பாராட்டி நீதிமன்றம் செல்வதால் யாருக்குப் பயன்? ஒரு பசுமாட்டின் மீது இருவர் உரிமை பாராட்டி ஒருவர் அதன் கொம்பைப் பிடித்து இழுக்க, மற்றொருவர் அதன் வாலைப் பிடித்து இழுக்க, நடுவில் வழக்குரைஞர் பசுவின் மடியிலிருந்து பாலைக் கறந்து குடிக்கின்றார். இருவர் ஒரு பொருளுக்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும்போது அதனால் பயனடைவது வழக்குரைஞர், திருப்பணியாளர்கள், துறவறத்தார் நீதிமன்றத்தில் வழக்காடுவதால் பொதுமக்களுக்கு இடறல் ஏற்படுகிறது. அலகை ஆனந்தக் கூத்தாடுகிறது. இது தகுமா? இது நீதியா?

குடும்பத்திலும் கணவன்- மனைவி சண்டைபோட்டு மண முறிவு கேட்டு நீதிமன்றம் செல்கின்றனர். அதனால் இருவருக்கும் எவ்வளவு மன உளைச்சல், பணச் செலவு ஏற்படுகிறது. ஒரு கணவர் ஒன் அறிஞரிடம், “இனிமையான இல்லறத்துக்கு வழி என்ன?" என்று கேட்டதற்கு அவர் கூறியது: "ஒன்று அவளை அடக்கு; அல்லது அவளுக்கு அடங்கு." ஆனால் மற்றோர் அறிஞர் கூறினர்; "விட்டுக்கொடு"

ஒரு கணவர் தன் மனைவியிடம், "இன்னும் 10 நிமிடத்தில் குளிக்கச் சுடுதண்ணீர் கொடுக்காவிட்டால், என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது!" என்றார். மனைவி அவரிடம், “சுடுதண்ணீ ர் வைத்துக் கொடுக்க முடியாது. என்ன நடக்கும்?" என்று கேட்டார். அதற்குக் கணவர், "அப்படியானால் நான் பச்சைத் தண்ணீரில் குளித்துக் கொள்கிறேன்" என்று சொல்லிப் பெட்டிப் பாம்பாகச் சுருண்டு விட்டார்.

விட்டுக் கொடுக்கிறவன் கெட்டுப் போவதில்லை. கெட்டுப் போகிறவன் விட்டுக் கொடுப்பதில்லை. தீமையைத் தீமையால் வெல்லாமல், தீமையை தன்மையால் வெல்லக் கற்றுக்கொள்ள வேண்டும் (உரோ 12:21), இன்றைய இரண்டாம் வாசகத்தில் பேதுரு தமக்குக் கூறும் அறிவுரை: "தீமை செய்து துன்புறுவதைவிட, தன்மை செய்து துன்புறுவதே மேல்" (1 பேது 3:17).

இன்றைய முதல் வாசகத்தில், பிலிப்பு சொன்னவற்றைக் கேட்டு தீய ஆவிகள் உரத்தக் குரலுடன் கூச்சலிட்டுக் கொண்டே வெளியேறின என்று குறிப்பிட்டுள்ளது (திப 8:7), நம்மை ஆட்டிப் படைக்கும் பகைமை என்ற தீய ஆவியை விரட்டுவோம். அன்பே வாழ்வின் உயிர் மூச்சு. கிறிஸ்துவின் அன்புக் கட்டளையை ஆவியாரின் துணை கொண்டு கடைப்பிடிப்போம். அகிலம் முழுவதையும் அன்பால் ஒருங்கிணைப்போமாக!

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

எச்செயலுக்கும் இருசாட்சிகள்

வானதூதர் ஒருவர் எரியும் தீப்பந்தத்தை ஒரு கையிலும் நீர் நிறைந்த வாளியை இன்னொரு கையிலும் வைத்துக் கொன்ற தெருவிலே அலைந்து கொண்டிருந்தார். “இவற்றைக் கொண்டு செய்யப் போகிறீர்?” என்று கேட்ட போது அவர் சொன்னார். "தீப்பந்தத் தால் வானகத்தின் உறைவிடங்களை எரித்துச் சாம்பலாக்கப் போகிறேன். வாளி நீரால் நரகத்தின் நெருப்பை ஊற்றி அனைக்கப் போகிறேன். அப்போதுதான் கடவுளை உண்மையிலேயே நேசிப்பவர் யார் என்று தெரியும்?".

அதாவது நரகத்தின் தண்டனைக்குப் பயந்தோ, மோட்ச பேரின்பத்தை நினைத்தோதான் மக்கள் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிக்க முயல்கிறார்களே தவிர அவர்மீது கொண்ட அன்பாலா அவற்றைக் கடைப்பிடிக்கிறார்கள்?

அச்சத்துக்கு நான் அடிமை என்ற போக்கில் செயல்படு பவர்களே அதிகம். அன்புக்கு நான் அடிமை என்ற பாங்கில் அன்பினால் தூண்டப்பட்டு அன்புக்காகவே அனைத்தையும் செய்யும் நபர்கள் எத்தனை பேர்?

இப்போது புரியும் இயேசு சொன்னதன் உண்மைப் பொருள். "நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள்... என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார்” (யோ.14:15,21)

அன்பின் அடையாளங்களுள் ஒன்று: நாம் யாரை அன்பு செய்கின்றோமோ, அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதுதான். எனவே கிறிஸ்து என்கிற ஆளோடு அன்பினால் பிணைக்கப்பட்டவன் தன் அன்பு அர்ப்பணத்தைக் கிறிஸ்து சொன்னதைச் செய்வதில் காட்டுகிறான். அன்புக்கு அடைக்கும் தாள்ஏது?

இயேசு நமக்குத் தந்த கட்டளைகளை மனிதன் மூன்று கோணங்களில் பார்க்கிறான். எடுத்துக்காட்டாக "உங்களை வலது கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்” (மத்.5:39) என்ற இயேசுவின் கூற்றை அந்த மூன்று கோணங்களில் பார்க்க முயல்வோம்.

1. கட்டளைகள் சுதந்திர உணர்வுக்குக் குறுக்கீடு, ஒரு முட்டுக்கட்டை. எனவே நான் செய்ய வெறுக்கின்ற ஒன்று. மறு கன்னத்தைக் காட்டுவதா? என்ன கோழைத்தனம் இது! குட்டக்குட்டக் குனியும் முட்டாள்தனமில்லையா? முன்னாள் ரஷ்யத் தலைவர் குருசேவ் சொல்கிறார்: “இயேசுவின் பலபோதனைகளில் மனதைப் பறிகொடுத் திருக்கிறேன். மறுகன்னத்தைக் காட்டு என்பது போன்ற சிலசிந்தனை களோடு என் மனம் ஒத்துப் போகாது. எனக்குத் தீங்கு இழைக்கிற வனை அடிக்கிற அடியில் அவன் கழுத்தின் மேல் தலை இருக்காது.

2. கட்டளைகள் வளர்ச்சிக்கான வாய்ப்பு, ஒரு வழி காட்டி, எனவே நான் செய்ய வேண்டிய ஒன்று. “பழிக்குப் பழி என்ற உணர்வோடு செயல்படுபவன் இரண்டு சவக் குழிகளைத் தோண்டுகிறான் - ஒன்று தன் எதிரிக்காக, மற்றது தனக்காக என்கிறது சீனப்பழமொழி. பகைமை, பழிவாங்கும் வெறி இவைகள் உடல் நலக் கேட்டைக்கூட கொண்டு வருகின்றன என்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள்.

3. கட்டளைகள் அன்பு செய்ய அழைப்பு, ஓர் அறைகூவல். எனவே நான் செய்ய விரும்புகிற ஒன்று. இந்த வகையில் தான் இயேசு "உங்களுக்கு என்மீது அன்பு இருந்தால் என் கட்டளைகளை கடைப் பிடிப்பீர்கள் என்கிறார். பகைவரை ஏன் மன்னிக்க வேண்டும், மறு கன்னத்தை ஏன் காட்ட வேண்டும் என்பது கூட நமக்குப் புரியாமல் போகலாம். இயேசு சொல்கிறார் நான் செய்கிறேன் என்பது என் தலைவன் இயேசுவின் மீது நான் வைத்திருக்கின்ற அன்பையன்றோ வெளிப்படுத்துகிறது!

எனவே இன்றைய நற்செய்தி இறைவனின் கட்டளைகளைக் கடைப்பிடிக்கத் தூண்டும் நம் உள்நோக்கத்தை ஆய்வுக்கு உட்படுத்த அழைக்கிறது. அச்சம் காரணமாகவா, கைமாறு கருதியா, இயேசுவின் மீது கொண்ட அன்பாலா, எது தூண்டுகோல்?

கடவுளின் கட்டளைகளை மனிதக் கட்டளையாக்கிவிடும் ஆபத்து ஒன்று உண்டு. “உங்கள் மரபின் பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள்'' (மத்.15:6) என்ற இயேசுவின் எச்சரிக்கையை மனதில் கொள்வது நல்லது. அதனால்தான் "உங்கள் மனச்சான்று குற்றமற்றதாய் இருக்கட்டும் என்கிறார் பேதுரு (1 பேதுரு 3:36) “உங்களுக்குச் செவிசாய்ப்பதா? கடவுளுக்குச் செவிசாய்ப்பதா? இதில் கடவுள் பார்வையில் எது முறையானது?" (தி.ப.4:19) என்று யூதத் தலைமைச் சங்கத்தின் முன் சவால் விட்டவரல்லவா அவர்!

கடவுளின் குரலையும் அலகையின் குரலையும் இனம் பிரித்துப் புரிய வைக்கும் காலக் கண்ணாடி மனச்சான்று. ஆனால் இன்று, எதிர்காலச் செயல்களுக்கு வழிகாட்ட, நன்மை எது தீமை எது என்பதைப் பகுத்து உணர இறைவன் தந்த மனச்சான்றை இறந்த காலத் தீவினைகளுக்குச் சப்பை கட்டச் சாட்சிக் கூண்டில் ஏற்றும் அளவுக்கு, இன்றைய மனிதன் தாழ்ந்துவிட்டான். தகாததைச் செய்துவிட்டு மனச்சான்றுப்படி தானே நடந்தேன் என்று சமாதானம் சொல்கிறானே, அவன் மனச்சான்று என்ன தவறா வரம் பெற்றதா? அப்படிச் சொல்பவன் கடவுள் தந்த களங்கமில்லாத மனச்சான்றுப்படி அல்ல, மீண்டும் மீண்டும் செய்த தீவினைகாளல் தனக்கென மழுங்கடித்துக் கொண்ட கறைபடிந்த மனச்சான்றுப்படி நடப்பவன். பழைய மொழி பெயர்ப்பில் திருத்தூதர் பவுல் சொல்வார்: “என் மனச்சாட்சி என்னை எதிலும் குற்றம் சாட்டவில்லை. ஆயினும் இதனால் நான் குற்றமற்றவன் என்று சொல்ல முடியாது" (1 கொரி. 4:4)

மனச்சான்று மகத்தானது. ஆனால் அதைப் பயன்படுத்த ஒரு பக்குவம், ஒரு பயிற்சி வேண்டும். ஒரு செயலைச் செய்வதற்கு முன் (செய்த பின் அல்ல) அதுபற்றி 1. அறிந்திருக்கிறேனா? (informed) 2. தெளிந்திருக்கிறேனா? (enlightened) 3. நிச்சயமானதுதானா? (certain) 4. நேர்மையானதுதானா? (Honest) என்ற நான்கு கேள்விகளுக்கும் ஆம் ஆம் என்று பதில் வந்தாலொழிய எந்த மனச்சான்றும் பின்பற்றத்தக்கதல்ல.

மனச்சான்று இறைவன் தந்த மாபெரும் கொடையாகும். புலனுக்குப் புலப்படாவிடினும் எச்செயலுக்கும் இரு சாட்சிகள் உண்டு. 1. இறைவன் 2. மனச்சான்று.

நம் மனச்சான்று கூர் இழக்காதிருக்கட்டும்!

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

திக்கற்றவர்களாக விடாத கிறிஸ்து

நாம் வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது, வீட்டிலுள்ளவர்களிடம், "நான் போயிட்டு வரேன்" என்று சொல்வதே, நம் வழக்கம். யாராவது, "நான் போறேன்" என்று சொன்னால், அதை, அமங்கலமான, அபசகுனமான அடையாளம் என்று சொல்கிறோம்; அல்லது, அப்படி சொல்பவர், கோபத்துடன் விலகிச் செல்கிறார் என்பதைப் புரிந்துகொள்கிறோம். நமது தமிழ் இலக்கியங்களில், போருக்குப் புறப்படும் மகனிடமும், தாய், "சென்று வா மகனே, வென்று வா." என்று சொல்லியே அனுப்பிவைத்ததாகக் கேள்விப்படுகிறோம். யாரும் நம்மைவிட்டுப் பிரிந்து செல்லும்போது, அவர்கள் திரும்பி வருவர் என்று எண்ணத்தில் அனுப்பி வைப்பதே, நம்பிக்கை தரும் ஒரு மனநிலை.

"போயிட்டு வரேன்" என்ற தமிழ் சொற்களுக்கு இணையாக, ஆங்கிலத்திலும், அழகான சொற்கள் உள்ளன. ஆங்கிலத்தில் 'Goodbye' அல்லது 'Farewell' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். Goodbye என்ற வார்த்தைக்குள், 'God be with you' என்ற சொற்கள் பொதிந்திருக்கின்றன. பிரிந்து செல்பவர் நலமாக, மகிழ்வாக இருக்கும்படி ஆசீர்வதிக்கும் வார்த்தை, Farewell என்ற வார்த்தை.

தமிழில் நாம் 'பிரியாவிடை' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். 'நான் உன்னைவிட்டுப் பிரியமாட்டேன். இப்போதைக்குத் தற்காலிகமாக விடைபெறுகிறேன்' என்பதைச் சொல்லாமல் சொல்வது, 'பிரியாவிடை' என்ற அந்தச் சொல். இயேசு, தன் சீடர்களுக்கு, இறுதி இரவுணவில் சொன்ன பிரியாவிடையை சென்ற வாரமும், இந்த வாரமும் நாம் நற்செய்தியாக வாசிக்கிறோம்: "நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன்" (யோவான் 14: 18) என்ற வார்த்தைகளை, இன்றைய நற்செய்தியில் கேட்கிறோம். "நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பி வந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்." (யோவான் 14: 3) என்ற வார்த்தைகளை சென்ற வாரம் நற்செய்தியில் கேட்டோம். தன் சீடர்களுடன் தான் நிரந்தரமாய்த் தங்கப்போகும் தந்தையின் இல்லத்தைப்பற்றி சென்ற வாரம் பேசிய இயேசு, இந்த வாரம், அவர்கள் பெறப்போகும் துணையாளரைப்பற்றி பேசுகிறார்: "உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்." (யோவான் 14: 16)

இயேசு தன் சீடர்களுக்கு வழங்கிய பிரியாவிடையைப் பற்றி சிந்திக்கும் இவ்வேளையில், கொரோனா கொள்ளைநோயால், பிரியாவிடை ஏதுமின்றி, உறவுகளின் அருகாமை இல்லாமல், இவ்வுலகைவிட்டுப் பிரிந்து சென்ற பல்லாயிரம் பேரை நினைவில் கொள்வோம். இவர்களில் பலர், மருத்துவர்கள், செவிலியர், அருள்பணியாளர்கள், துறவியர் மற்றும் தனிமையில் விடப்பட்ட முதியோர். யாருக்கும் விடைசொல்ல இயலாமல் இவர்கள் இறந்ததை எண்ணி வேதனையுறும் அதே நேரம், இவர்களைப்போல், ஒவ்வொரு நாளும் இவ்வுலகைவிட்டு விடைபெறும் பல்லாயிரம் பேரையும் எண்ணிப்பார்ப்போம். இவர்கள் அனைவரையும் இறைவன் தன் விண்ணக இல்லத்தில் வரவேற்குமாறு வேண்டிக்கொள்வோம்.

இயேசு தன் சீடர்களுக்கு வழங்கிய பிரியாவிடை நிகழ்வுக்குத் திரும்புவோம். இயேசு தந்த பிரியாவிடை வாக்குறுதிகள், நமது இல்லங்களில் நடைபெறும் ஒரு காட்சியை, நம் மனக்கண்முன் கொண்டுவருகிறது. அப்பாவோ, அம்மாவோ வேலைக்குக் கிளம்புகிறார்கள், அல்லது ஊருக்குக் கிளம்புகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஓரளவு விவரம் தெரிந்த தங்கள் குழந்தைகளை, தாத்தா, அல்லது பாட்டியிடம் விட்டுவிட்டுச் செல்லும் ஒரு காட்சி இது. அவர்கள் கிளம்பும்போது, குழந்தை அழுதால், பெற்றோர், அக்குழந்தைக்கு சில வாக்குறுதிகளைத் தருவார்கள். திரும்பி வரும்போது மிட்டாய், சாக்லேட், பொம்மை வாங்கிவருவதாக இந்த வாக்குறுதிகள் இருக்கும். பல நேரங்களில், குழந்தைகள், இந்த வாக்குறுதிகளால் சமாதானம் அடைந்து, பெற்றோருக்கு ‘டாடா’ சொல்வார்கள்.

பெற்றோர் தந்த வாக்குறுதிகளில், குழந்தைக்கு எது மிகவும் பிடித்த பகுதியாக இருக்கும் என்பதைச் சிந்திக்கலாம். அவர்கள் வாங்கித் தருவதாகச் சொன்ன பொருட்கள், குழந்தைக்கு மகிழ்ச்சியைத் தருமா, அல்லது அந்தப் பொருட்களுடன், தாயோ, தந்தையோ, மீண்டும் வீட்டுக்கு வருவார்கள் என்பது, குழந்தைக்கு மகிழ்ச்சியைத் தருமா? ஒருவேளை, தாயோ, தந்தையோ, திரும்பிவராமல், அந்தப் பொருட்களை, அஞ்சல் வழியாகவோ, வேறொருவர் வழியாகவோ அனுப்பிவைத்தால், குழந்தைகள் முழு மகிழ்ச்சி அடைவார்களா என்பது சந்தேகம்தான். ஆனால், பரிசுப் பொருட்களைத் தாங்கியவண்ணம், தாயோ, தந்தையோ, மீண்டும் வீடு திரும்புவதைக் காணும் குழந்தைகளின் மகிழ்ச்சி, பல மடங்காகும்.

இந்த வாரமும், சென்ற வாரமும், இயேசு, கனிவு மிகுந்த ஒரு பெற்றோரைப் போல், தன் சீடர்களுக்கு, இது போன்ற வாக்குறுதிகளை அளிக்கிறார். என் தந்தையின் இல்லத்தில் நான் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப்போகிறேன் என்றும், தூய ஆவியாரை அனுப்பிவைப்பேன் என்றும் இயேசு சொல்லியிருந்தால், சீடர்களின் மனங்கள் மகிழ்ந்திருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், இவ்விரு வாக்குறுதிகளோடு, தான் திரும்பிவந்து அவர்களை அழைத்துச் செல்வதாகவும், அவர்களோடு என்றும் இருப்பதாகவும் இயேசு சொன்ன சொற்கள், சீடர்களின் மனதில் இன்னும் அதிகமான நிறைவை, நம்பிக்கையைத் தந்திருக்கும்.

பரிசுகள் பலவற்றை ஏந்திக்கொண்டு, இயேசு நம் இல்லம் தேடி, உள்ளம் தேடி வருவதை, ஒரு மறையுரையாளர் (Fr James Gilhooley) அழகாக விவரிக்கிறார். நம் இல்லம் தேடிவரும் இயேசு, தன் முழங்கையை வைத்து நம் இல்லத்தின் அழைப்பு மணியை அழுத்துவாராம். காரணம் என்ன? அவரது இரு கரங்களிலும் பரிசுகள் குவிந்திருப்பதால், அவரது விரல்கள் அழைப்பு மணியை அழுத்தும் நிலையில் இருக்காது என்பதே காரணம் என்று, அந்த மறையுரையாளர் அழகாக விவரிக்கிறார். அற்புதமான கற்பனை இது.

கரங்கள் நிறைய பரிசுகளை ஏந்தி, கடவுள், நம் வீடுதேடி வரும் வேளையில், நாம் வீட்டில் இல்லாமல் போனால் எப்படி இருக்கும் என்பதை, யூதமத இராபி ஹெரால்டு குஷ்னர் (Harold Kushner) அவர்கள், “ஆண்டவரே என் ஆயர்” என்ற 23ம் திருப்பாடலை மையப்படுத்தி எழுதிய நூலில் அழகாக விவரிக்கிறார். அத்திருப்பாடலின் இறுதியில் காணப்படும், உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும் என்ற இறுதி வரியை குஷ்னர் அவர்கள் விவரிக்கும்போது, ஒரு கதையுடன் ஆரம்பிக்கிறார்.

ஓர் ஊரில், வாழ்ந்துவந்த ஒரு முக்கிய புள்ளி, எப்போதும் ஏதோ ஓர் அவசரத்தில் இருப்பதுபோல் எல்லாருக்கும் தெரியும். தொழுகைக் கூடத்திற்குச் சென்றாலும், அங்கும் நிலைகொள்ளாமல் தவிப்பார். தொழுகையின் இறுதிவரை தங்காமல், விரைந்து வெளியேறுவார். இவரைப் பார்த்துக்கொண்டிருந்த யூத குரு, ஒரு நாள் இவரிடம், "நான் உங்களைப் பார்க்கும்போதெல்லாம், நீங்கள், ஏதோ ஓர் அவசரத்தில் இருப்பதுபோலவே தோன்றுகிறீர்களே. ஏன் இந்த அவசரம்?" என்று கேட்டார். அந்த முக்கிய புள்ளி, குருவிடம், "நான் வாழ்வில் பலவற்றைச் சாதிக்க விரும்புகிறேன். வெற்றி, செல்வம், புகழ், இவற்றைத் தேடி, எப்போதும் நான் ஓடிக்கொண்டே இருப்பதால், இந்த அவசரம்" என்று கூறினார்.

"சரியான பதில் இது" என்று கூறிய குரு, மேலும் தொடர்ந்தார்: "வெற்றி, செல்வம், புகழ் எல்லாம் உங்களுக்கு முன் செல்வதாக நினைக்கிறீர்கள். கைநழுவிப் போய்விடுமோ என்ற பயத்துடன், நீங்கள் எப்போதும் இவற்றைத் துரத்திக் கொண்டிருக்கிறீர்கள்... சரி... கொஞ்சம் மாற்றி சிந்தித்துப் பாருங்களேன். நீங்கள் துரத்திச்செல்லும் பரிசுகள், உங்களுக்கு முன் செல்லாமல், உங்கள் பின்னே உங்களைத் தேடிக்கொண்டு வரலாம் இல்லையா? கடவுள், இந்தப் பரிசுகளையெல்லாம் ஏந்திவருவதாகவும் எண்ணிப் பார்க்கலாமே! அப்படி அவர், உங்கள் வீடு தேடி வரும்போது, நீங்கள் இப்பரிசுகளைத் துரத்திக்கொண்டு போயிருந்தால், கடவுள் வரும் நேரத்தில், நீங்கள் வீட்டில் இருக்க மாட்டீர்கள். கடவுள் உங்களைச் சந்திக்காமல், உங்களுக்கு இந்தப் பரிசுகளைத் தரமுடியாமல், திரும்ப வேண்டியிருக்குமே!" என்று, அந்த யூத குரு கூறினார். செல்வத்தையும், புகழையும் தேடி, நாம் ஓடிக் கொண்டிருக்கும்போது, இறைவன், இவற்றையெல்லாம் நமக்குத் தருவதற்கு, நம்மைத் தேடி வரக்கூடும் என்பது, அழகான எண்ணம், மாற்றி சிந்திக்க வைக்கும் ஓர் எண்ணம்.

பரிசுகளைப்பற்றி, அதுவும், கை நிறைய பரிசுகளைச் சுமந்துவரும் இயேசுவைப்பற்றி பேசும்போது, ஒரு கற்பனைக் கதை, நினைவுக்கு வருகிறது. ஒருவருக்கு பரிசுப்பொருள் வந்திருந்தது. பரிசு வந்திருந்த 'பார்சல்' மிக அழகாக இருந்தது. தங்க இழைகளால் ஆன 'ரிப்பனால்' கட்டப்பட்டு, மானும், குருவியும் போட்ட வண்ணக் காகிதத்தில் சுற்றப்பட்டு... பரிசுப்பொருள் வந்திருந்தது. "பரிசு என்ன சார்?" என்று அருகிலிருந்தவர் கேட்டார். பார்சலை வைத்திருந்தவர், "கொஞ்சம் பொறப்பா! இந்தக் காகிதத்தைப் பாத்தியா? மானும், குருவியும்... அடடே மயிலும் இருக்கே... அதுவும், எத்தனை 'கலர்'ல இருக்கு..." என்று அவர் ‘பார்சலை’ வியந்துகொண்டேயிருந்தார். அருகிலிருந்தவர் பொறுமை இழந்தார். பரிசு வந்தால், உள்ளிருப்பதைப் பார்ப்பாரா, வெளி ‘பார்சலை’யே பார்த்து நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறாரே என்று அவர் நினைத்தார். பல நேரங்களில் பரிசுகளை விட பரிசுகள் சுற்றப்பட்டுள்ள காகிதங்கள் நம் கவனத்தை ஈர்த்துள்ளன என்பது உணமைதானே! அதேபோல், பரிசுகளைத் தாங்கி வரும் இயேசுவை விட, பரிசுகள், நமது கவனத்தை அதிகம் கவர்ந்த நேரங்களும் உண்டல்லவா?

பரிசுகள் மட்டுமே முக்கியம் என்றால், கைநிறைய பரிசுகளை அள்ளிவரும் இறைவன், அவற்றை நம் இதயத்தின் வாசலில் விட்டுவிட்டு, மறைந்திருக்கலாம், கிறிஸ்மஸ் தாத்தாவைப்போல். கதவைத் திறக்கும் நமக்கு, ஆச்சரியமான பரிசுகள் மட்டும் காத்திருக்கும். பரிசுகளின் நாயகன் இருக்கமாட்டார். அப்படியே, அவர் அங்கு நின்றாலும், நம் கவனம் பரிசுகளில் புதைந்திருந்தால், பரிசுகளைக் கொணர்ந்த இறைவனை கவனிக்க மறந்துவிடுவோம்.

இயேசுவின் பாணி தனிப்பட்டது. பரிசுகளுடன், அவரும் நம் இல்லத்தில், உள்ளத்தில் நுழைவதையே பெரிதும் விரும்புகிறார். பரிசுகள் வழங்குவதைவிட, தன்னை வழங்குவதையே அதிகம் விரும்பும் இயேசு, சென்ற வாரமும், இந்த வாரமும் இதே கருத்தை வலியுறுத்திக் கூறியுள்ளார். இதில் மற்றோர் அழகிய அம்சம் என்னவென்றால், இந்தப் பிரியாவிடை உரையை, இயேசு, தன் இறுதி இரவுணவின்போது கூறினார். அந்த இரவுணவின்போது தன்னை இன்னும் அழகிய, ஆழமான வகையில், அப்ப இரச வடிவில், சீடர்களிடம் பகிர்ந்தளித்தார் என்பதை நாம் அறிவோம். துயரமும், கலக்கமும் நிறைந்த அந்த இறுதி இரவுணவில், "நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன்..." என்று அவர் சொன்னபோது, சீடர்களால் ஓரளவு உறுதி பெறமுடிந்தது. மிகவும் கடினமானச் சூழலில் தங்கள் தலைவன் எப்படியும் தங்களோடு இருப்பார் என்பதை நம்பி, சீடர்கள் வாழ்வுப் பயணத்தைத் தொடர்ந்தனர்.

நாம் எதை நம்பி, நம் வாழ்வுப் பயணத்தை மேற்கொள்கிறோம் என்பதை, அவ்வப்போது ஆய்வு செய்வது நல்லது. 1991ம் ஆண்டு நடைபெற்ற ஓர் உண்மை நிகழ்வு இது. நடுவானில் பறந்து கொண்டிருந்த ஒரு விமானத்தின் இயந்திரங்கள் திடீரென செயலிழக்க ஆரம்பித்தன. எரிபொருள் முற்றிலும் இல்லை என்பதைக் கண்டுபிடித்தனர். தலைமை விமானி, பல ஆண்டுகள் விமானம் ஒட்டியவர் என்பதால், அவரால் அந்த பயங்கரமானச் சூழலை சமாளிக்கமுடிந்தது. அவசரமாகத் தரையிறங்கவும் முடிந்தது. யாருக்கும் எந்தச் சேதமும் இல்லை. இந்நிலை உருவாகக் காரணம் என்ன என்பது ஆராயப்பட்டது. மிகவும் உயர்ந்த தொழில்நுட்பம் கொண்டு செய்யப்பட்டிருந்த விமானத்தில், எரிபொருளின் அளவைக் காட்டும் கருவி பழுதடைந்திருந்தது. எனவே அது விமானத்தில் எரிபொருள் முழுமையாக உள்ளதென்று எப்போதும் காட்டிக்கொண்டே இருந்தது. 2000 கி.மீ. பயணத்திற்குரிய எரிபொருள் உள்ளதென்ற நம்பிக்கையில் விமானம் கிளம்பியது. 200 கி.மீ. கடப்பதற்குள் எரிபொருள் சுத்தமாகத் தீர்ந்துவிட்டது. அத்தனை பெரிய விமானத்தை வழிநடத்திச் செல்வதற்கு ஒரு சிறு கருவியே ஆதாரமாய் இருந்தது. அந்தக் கருவி பழுதடைந்து போனால், அதை நம்பிச் செல்லும் அத்தனை உயிர்கள் என்னாவது?

எதை நம்பி, யாரை நம்பி நம் வாழ்வு அமையப்போகிறது என்ற அடிப்படைக் கேள்வியை, கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமி நம்மிடம் எழுப்பியுள்ளது. கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கம், விரும்பத்தக்க, அல்லது, விரும்பத்தகாத மாற்றங்களை நம்மீது திணித்துள்ளது. இந்தக் கிருமியின் பிடியிலிருந்து சிறிது, சிறிதாக விடுபட்டுவரும் நாம், இனிவரும் காலங்களில், எதை நம்பி, யாரை நம்பி, நம் வாழ்வை வடிவமைக்கப்போகிறோம் என்ற கேள்விக்கு, உண்மையான, நேர்மையான பதில்களைத் தேடுவோம். "நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன்..." என்று கூறும் இயேசுவை நம்பி, நம் வாழ்வுப் பயணத்தைக் தொடர, தூய ஆவியாரின் துணையை நாடுவோம்.

பொதுவாகவே, ஏப்ரல், மே மாதங்கள், மாற்றங்களைக் கொணரும் மாதங்கள். பலருக்கு, வேலை மாற்றம், ஊர் மாற்றம், வீடு மாற்றம் என்று, பல மாற்றங்களைச் சந்திக்கும் சூழல்கள் உருவாகியிருக்கலாம். குறிப்பாக, இளையோர், தங்கள் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, தொடர் கல்வியை, பணியை, வாழ்வின் அடுத்த நிலையைத் தீர்மானிக்கும் காலம் இது

.

கொரோனா தொற்றுக்கிருமி உருவாக்கியுள்ள நிலையற்ற ஒரு சூழல், குறிப்பாக, பொருளாதார உலகில் உருவாகியுள்ள சரிவு, இளையோருக்கு, கூடுதல் சவால்களை உருவாக்கியுள்ளது. தங்கள் எதிர்காலத்தைக் குறித்த பல கேள்விகள் இளையோரின் உள்ளங்களில் நிறைந்திருக்கும். இத்தகையச் சூழலில், அவர்கள் எடுக்கும் முடிவுகள், அவர்களுக்கும் அவர்களைச் சார்ந்திருப்போர் அனைவருக்கும் நன்மை தரும் முடிவுகளாக அமைய, தூய ஆவியார் அவர்களை நல்வழி நடத்தவேண்டும் என்று மன்றாடுவோம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு, அவரைப் போற்றுங்கள்

கிறிஸ்துவுக்காக உயிரைத் தந்த குடும்பம்

Jesus Freaks என்ற நூலில் இடம்பெறும் ஓர் உண்மை நிகழ்வு இது.

வியட்நாமில் போர் உச்சத்தில் இருந்தபோது, அந்நாட்டு இராணுவம் அங்கிருந்த கிறிஸ்தவர்களைப் பிடித்துத் துன்புறுத்தத் தொடங்கியது. இதனால் பலரும் தங்கள் கிறிஸ்தவ அடையாளத்தை மறைத்து வாழ்ந்தார்கள். இந்நிலையில், கம்போடியாவில் இருந்த ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் கிறிஸ்தவ அடையாளத்தை யாருக்காகவும் மறைத்துக் கொள்ளாமல், மிகவும் வெளிப்படையாக வாழ்ந்து வந்தார்கள்.

இதையெல்லாம் அறிந்த வியட்நாம் இராணுவம் அவர்களைக் கைது செய்து, ஒரு காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றது. பின்னர் அவர்கள் அந்தக் கிறிஸ்தவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம், “உங்களுக்கான சவக் குழிகளை நீங்களே தோண்டிக் கொள்ளுங்கள். அப்போதுதான் உங்களை நாங்கள் துப்பாக்கியால் சுட்ட பிறகு தூக்கிப் போட்டு அடக்கம் செய்ய வசதியாக இருக்கும்” என்றார்கள்.

இதையடுத்து, கிறிஸ்தவக் குடும்பத்தில் இருந்த தந்தை, தாய், ஒரு மகன் தங்களுக்கான குழியைத் தோண்டும்போது, அக்குடும்பத்தில் இருந்த இளைய மகன், இராணுவ வீரர்கள் தங்கள் கையில் துப்பாக்கியோடு இருப்பதைக் கண்டு அஞ்சி, காட்டுப் பக்கமாக ஓடினான். அவன் தப்பி ஓடுவதைப் பார்த்த இராணுவ வீரர் ஒருவர், அவனைச் சுட முயன்றார்.

“அவனைச் சுட வேண்டாம். அவனை நான் இங்கே அழைத்து வருகின்றேன்” என்று இராணுவவீரரிடம் சொன்ன தந்தை, தப்பியோடிய தன் இளைய மகனிடம், “சிறிது நேரத் துன்பத்திற்காக, இயேசு நமக்குத் தரவிருக்கும் விண்ணக வாழ்வை நீ இழந்துவிட வேண்டாம்” என்று சொல்லி அழைத்துக் கொண்டு வந்தார். பின்னர் அவர்கள் அனைவரும் தங்களுக்கான குழியைத் தோண்டி முடிக்க, இராணுவ வீரர்கள் அவர்களைத், துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திக் குழிக்குள் தள்ளி மூடினார்கள். இவ்வாறு அந்தக் கிறிஸ்தவக் குடும்பமே கிறிஸ்துவுக்காகத் தம் இன்னுயிரை இழந்து, கிறிஸ்துவுக்குச் சான்று பகர்ந்தது.

கிறிஸ்துவை ஆண்டவராக நம்பி ஏற்றுக்கொண்ட இந்தக் குடும்பம், வெறும் பெயரளவில் கிறிஸ்தவர்களாக வாழாமல், கிறிஸ்துவுக்காக உயிரையும் இழக்கத் துணிந்தது நமக்கெல்லாம் சிறந்த முன்மாதிரி. பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, “கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு, அவரைப் போற்றுங்கள்” என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

கிறிஸ்துவின்மீதான நம்பிக்கையும், துன்பங்களும்

கிறிஸ்தவம் வேகமாகப் பரவி வந்த தொடக்கக் காலகட்டத்தில் ஆட்சியாளர்களால் கிறிஸ்தவர்கள் பலவிதமான துன்பங்களையும் சித்திரவதையும் அனுபவித்தார்கள். இந்நிலையில் அவர்கள் மனந்தளர்ந்து விடக்கூடாது; கிறிஸ்துவின்மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை இழத்துவிடக்கூடாது என்பதற்காகப் பேதுரு அவர்களிடம் கூறுகின்ற வார்த்தைகள்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் இடம்பெறுகின்ற, “உள்ளத்தில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு, அவரைத் தூயவரெனப் போற்றுங்கள்” என்ற வார்த்தைகள் ஆகும்.

இங்கே இடம்பெறும் ‘போற்றுதல்’ என்ற வார்த்தைக்கு புகழ்தல் என்ற பொருள் மட்டுமல்ல, பறைசாற்றுதல் என்ற பொருளும் இருக்கின்றது. எனில், கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டிருக்கும் ஒருவர் அவரைப் புகழ்வது மட்டுமல்லாமல், அவரை மற்றவருக்குப் பறைசாற்ற வேண்டும்.

துன்பங்களும் ஆபத்துகளும் நிறைந்த சூழலில் கிறிஸ்துவைப் பற்றி மற்றவருக்குப் பறைசாற்றும்போது, மேலும் துன்பங்கள் வரத்தான் செய்யும். இதைப் பற்றிப் பேதுரு தொடர்ந்து கூறும்போது, “தீமை செய்து துன்புறுவதை விட, நன்மை செய்து துன்புறுவதே மேல். கிறிஸ்துவும் உங்கள் பாவங்களின் பொருட்டு, ஒரே முறையாக இறந்தார்” என்கிறார். இயேசு நமக்கு மீட்பளிக்கத் துன்பங்களை அனுபவித்திருக்கும்போது, அவர்மீது நம்பிக்கை கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கவேண்டும் என்பதுதான் பேதுரு சொல்லும் செய்தியாக இருக்கின்றது.

அன்பு செய்தலும் அறிவித்தலும்

இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டிருக்கும் ஒருவர் ஏன் துன்புற வேண்டும் என்ற கேள்வி எழலாம். இயேசு தன்னைப் பின்தொடர விரும்பியவர்களைப் பார்த்து, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்” (லூக் 9:23) என்று தொடக்கத்திலேயே சொல்லியிருந்தார். அதனால் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு, அவரைப் பின்தொடர்கின்ற ஒருவர் துன்பங்களைத் தாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்.

இன்றைய நற்செய்தியில் இயேசு, “நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால், என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள்” என்கிறார். இயேசுவின்மீது அன்பு கொண்டிருக்கும் ஒருவராலேயே அவரது கட்டளைகளைக் கடைப்பிடிக்க முடியும். அவ்வாறு இயேசுவின்மீது கொண்ட அன்பினால் அவரது கட்டளையைக் கடைப்பிடிக்கும் ஒருவர், அவர் பொருட்டு எத்தகைய துன்பங்களையும் தூங்கிக் கொள்வார். ஏன்; அவருக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்.

இன்றைய முதல் வாசகத்தில் திருத்தொண்டர்களுள் ஒருவரான பிலிப்பு சமாரியர்களுக்கு நற்செய்தி அறிவித்து, அவர்களும் தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளக் காரணமாக இருக்கின்றார். திருவிவிலியத்தில் இந்தப் பிலிப்புதான் முதன்முறையாக நற்செய்தி அறிவிப்பாளர் என அழைக்கப்படும் சிறப்புக்குச் சொந்தக்காரர் ஆகின்றார் (திப 21:8). இவர் சமாரியருக்கு நற்செய்தி அறிவித்து, அவர்களும் தூய ஆவியைப் பேரக் காரணமாக இருந்தது, இயேசுவின்மேல் கொண்ட அன்புதான்.

அன்பிற்குக் கிடைக்கும் கிடைக்கும்

இயேசுவின்மீது அன்பு கொண்டிருக்கும் ஒருவராலேயே அவரது கட்டளையைக் கடைப்படிக்க முடியும்; அவருக்காகத் துன்புற முடியும்; அவரது நற்செய்தியை மற்றவருக்கு அறிவிக்க முடியும் என்று நாம் இதுவரையில் சிந்தித்தோம். இயேசுவை அன்பு செய்கின்ற ஒருவருக்கு அவர் எத்தகைய கைம்மாறு தருகின்றார் என்பதை இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கின்றோம்.

இயேசு தன்னை அன்பு செய்து, தன் கட்டளைகளைக் கடைப்பிடிப்போருக்கு முதலாவதாக, தூய ஆவியாரைக் கொடையாகத் தருகின்றார்; இரண்டாவதாக, நிலைவாழ்வைத் தருகின்றார். மூன்றாவதாக, தந்தை மகன், தூய ஆவியார் என மூவொரு கடவுள் அவருள் குடியிருக்கச் செய்கின்றார். இத்தகைய பேறு ஒருவருக்கு இயேசுவின் கட்டளையைக் கடைப்பிடிதாலேயே கிடைக்கும்.

இன்றைக்குப் பலர், பெயருக்குக் கிறிஸ்தவர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அது உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கையாக இருக்காது. கிறிஸ்துவை ஆண்டவர் என அறிக்கையையிட்டு, அவருக்குச் சான்று பகர்வதே உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை. இன்றைய நாளில் நாம் பாடிய பதிலுரைப்பாடல், “அனைத்துலகோரே கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்” என்கிறது. இதன்மூலம் ஒரு குறிப்பிட்ட இனத்தவர் மட்டுமல்ல, அனைத்துலகோரும் ஆண்டவருக்குச் சான்று பகர அழைக்கப்படுகின்றார்கள். நாம் இயேசுவே ஆண்டவர் எனச் சான்று பகர்ந்து, அவர் தரும் ஆசிகளைப் பெறுவோம்.

சிந்தனைக்கு

“நற்செய்தியை அறிவிப்பதற்கு அஞ்ச வேண்டாம்; ஏனெனில், இயேசு சிலுவையில் இறக்க அஞ்சவே இல்லை” என்பார் பெலிக்ஸ் வான்டாங் என்ற அறிஞர். ஆகையால், நாம் இயேசுவைப் பற்றித் துணிவோடு அறிவித்து, அவர்மீதான நமது அன்பை வெளிப்படுத்துவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

உள்ளத்தின் உயிர்ப்பு

நாம் நம்முடைய நம்பிக்கை அறிக்கையில், 'பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து, மூன்றாம் நாள் (இயேசு) உயிர்த்தெழுந்தார்' என்றும் '...உடலின் உயிர்ப்பை நம்புகிறேன்' என்றும் அறிக்கையிடுகின்றோம்.

இவை இரண்டுமே உடலின் உயிர்த்தெழுதலையே குறிப்பிடுகின்றன.

உடலின் உயிர்ப்புக்கு முன் உள்ளத்தின் உயிர்ப்பு அல்லது உள்ளத்தால் உயிர்ப்பு அல்லது ஆன்மாவின் உயிர்ப்பின் அவசியத்தை இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு உணர்த்துகிறது.

இயேசுவின் உயிர்ப்பு நம் வாழ்வின் திசையை மாற்றுகிறது என்பதை கடந்த வாரங்களில் நாம் வௌ;வேறு நிலைகளில் சிந்தித்தோம். இயேசுவின் விண்ணேற்றமும் தூய ஆவியார் பெருவிழாவும் நெருங்கி வருகின்ற வேளையில், இந்த வார வாசகங்கள் அவற்றுக்கு நம்மை தயாரிப்பது போல இருக்கின்றன. இன்றைய முதல் வாசகத்தில் சமாரியர்கள்மேல் தூய ஆவியார் பொழியப்படுவதையும், நற்செய்தி வாசகத்தில், இயேசு தாம் அனுப்பப் போகிற தூய ஆவியார் பற்றி முன்மொழிவதையும் நாம் பார்க்கின்றோம்.

இன்றைய முதல் வாசகம் (காண். திப 8:5-8,14-17), 'சமாரியர்களின் பெந்தெகோஸ்து' என அழைக்கப்படுகிறது. ஏனெனில், சமாரியாவில் வாழ்ந்த நம்பிக்கையாளர்கள்மேல் தூய ஆவியார் எப்படி பொழியப்பட்டது என்பதை இந்நிகழ்வு நமக்குக் காட்டுகிறது. சமாரியர்கள் முதலில் திருமுழுக்கு பெறுகின்றனர். ஆனால், திருமுழுக்கின்போது அவர்கள்மேல் தூய ஆவியார் பொழியப்படவில்லை. மற்றவர்கள் திருமுழுக்கு பெறும்போது தூய ஆவியார் இணைந்தே பொழியப்படுகின்றார் (காண். திப 2:38, 9:17-18). தூய ஆவியார் ஆள்பார்த்துச் செயல்பட்டாரா அல்லது, தொடக்கத் திருஅவையில் நிலவிய சமய அரசியலையும், இனவெறுப்பையும் காட்டுகிறதா என்று தெரியவில்லை. தொடக்கத் திருஅவையில் இனவெறுப்பு கண்டிப்பாக இருந்திருக்கும். யூதராக இருந்து புதிய நம்பிக்கையைத் தழுவியவர்கள் கண்டிப்பாக சமாரியர்களாக இருந்து புதிய நம்பிக்கையைத் தழுவியவர்களை இகழ்ச்சியுடன்தான் பார்த்திருப்பார்கள்.

திருத்தொண்டர் பிலிப்பு சமாரியாவில் பணி செய்கின்றார். அவருடைய போதனை, மற்றும் வல்ல செயல்களைப் பார்த்து நிறையப் பேர் கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்கின்றனர். அவர்களுக்கு பிலிப்பு திருமுழுக்கு கொடுக்கின்றார். ஆனால், பேதுருவும், யோவானும் வந்து அவர்கள்மேல் கைகளை வைத்தபின்தான் அவர்கள்மேல் தூய ஆவியார் பொழியப்படுகிறது. ஒருவர் திருமுழுக்கு கொடுக்க, இன்னொருவருவர் தூய ஆவியாரைக் கொடுப்பது ஏன்? அல்லது திருமுழுக்கிற்கும் தூய ஆவியார் வருகைக்கும் ஏன் இந்த இடைவெளி? ஒன்று, திருத்தூதர் பணிகள் நூல் எழுதப்பட்ட காலத்தில் திருஅவையில் படிநிலை அல்லது பணி வரையறை வளர்ந்திருக்கலாம். திருத்தொண்டரின் பணி திருமுழுக்கு கொடுப்பது என்றும், தூய ஆவியாரைக் கொடுப்பது திருத்தூதர்களின் பணி என்றும் வரையறை வளர்ந்திருக்கலாம். இதே வரையறைதான் இன்று வரை நம் திருஅவையில் இருக்கிறது. திருத்தொண்டர் யாருக்கும் திருமுழுக்கு கொடுக்கலாம். ஆனால், திருத்தூதர்களின் வழிமரபினர் என்று சொல்லப்படுகின்ற ஆயர்கள் மட்டுமே உறுதிப்பூசுதல் (தூய ஆவியாரின் நிரப்புதல்) அருளடையாளம் கொடுக்க முடியும். இரண்டு, திருமுழுக்கு மற்றும் உறுதிப்பூசுதல் என்ற அருளடையாள வரையறை தொடங்கியிருக்கலாம். அதாவது, திருமுழுக்கு பெறுபவரின் திடம், உறுதியான மனநிலை, தன்னுடைய பழைய வாழ்வுக்குத் திரும்பாமை ஆகியவை கண்காணிக்கப்பட்டு பின்னர் அவர்களுக்கு தூய ஆவியார் கொடுக்கப்பட்டிருக்கலாம். மூன்று, இனவெறுப்பால் வரும் வேற்றுமை. யூதர்களுக்கு என்றால் ஒரு சட்டம், சமாரியர்கள் அல்லது புறவினத்தார் என்றால் வேறு சட்டம் என்ற சமயச் சூழல் இருந்திருக்கலாம்.

இந்த மூன்று காரணங்களில் எதுவாக இருந்தாலும், பேதுருவும் யோவானும் இங்கே உள்ளார்ந்த உயிர்ப்பு அடைகின்றனர். அதாவது, தூய ஆவியார் என்பவர் தங்களுக்கோ, அல்லது யூதர்களுக்கோ உரித்தானவர் அல்ல, மாறாக, அவர் அனைவருக்கும் பொதுவானவர் என்ற விழிப்புநிலையை அடைகின்றனர். அவர்களோடு சேர்ந்து, தொடக்கத் திருச்சபையும் விழிப்புநிலையை அடைகின்றது.

ஆக, உள்ளார்ந்த உயிர்ப்பு என்பது ஒருவரின் இனவெறுப்பு அல்லது பகைமை உணர்வைத் தாண்டுவது.

இரண்டாம் வாசகம் (காண். 1 பேது 3:15-18), பேதுருவின் அறிவுரைப் பகுதியாக இருக்கிறது. 'கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றுங்கள்' என தன் திருச்சபைக்கு அழைப்பு விடுக்கின்றார் பேதுரு. இயேசுவை ஒரு மனிதர் என்ற நிலையிலிருந்து கடவுள் என்ற நிலைக்கு உயர்த்த விழைகிறார் பேதுரு. ஏனெனில், 'ஆண்டவராகிய இறைவன் ஒருவரே தூயவர்' என்பது யூதர்களின் நம்பிக்கையாக இருந்தது. இப்போது தன்னுடைய உயிர்ப்பின் வழியாக இயேசுவும் இதே நிலையை அடைகின்றார். ஆக, தொடக்கத் திருஅவையில், யாவே இறைவனின் இடத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிக்கின்றார் இயேசு. அல்லது, யாவே இறைவனை, 'தூயவர்' என வழிபட்டு வந்த மக்கள், கொஞ்சம் கொஞ்சமாக இயேசுவை 'தூயவர்' என அழைக்கத் தொடங்குகின்றனர். இயேசுவின் போதனைக்கு இது கொஞ்சம் முரணானதாக இருக்கிறது. ஏனெனில், இயேசு தன்னை ஒரு புதிய மதத்தின் நிறுவுனராகத் தன்னை ஒருபோதும் முன்வைத்ததே இல்லை. தான் தூயவர் என்று அழைக்கப்படுவதையும் அவர் விரும்பவில்லை. ஆனால், பேதுரு, இன்னும் குறிப்பாக பவுல்தான், இயேசுவை கிறிஸ்து என்று மாற்றியவர். மேலும், உள்ளார்ந்த நிலையில் இயேசுவை ஆண்டவர் என ஏற்றுக்கொண்ட ஒருவர், அதைத் தன் நன்னடத்தையான வாழ்வால் அறிக்கையிட வேண்டும் என்றும் பேதுரு அறிவுறுத்துகின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் ஏற்படும் உள்ளார்ந்த உயிர்ப்பு இதுதான். அதாவது, நம்பிக்கையாளர்கள் தங்களுடைய பழைய தெய்வங்களை விலக்கி விட்டு, இயேசுவை ஆண்டவராகவும், கடவுளாகவும், தூயவராகவும் உள்ளத்தில் போற்ற வேண்டும். இது ஏன்? நாம் உள்ளத்தில் ஒருவரை ஏற்றுப் போற்றும்போது அவருக்கு முரணாக நாம் எதையும் செய்வதில்லை. அவர் நம்மோடு இருக்கிறார் என்ற உணர்வு நம்மை உந்தித் தள்ளுகிறது.

ஆக, பிற தெய்வங்களை விலக்கிவிட்டு, ஆண்டவராகிய இயேசுவை மனத்தில் ஏற்றுக்கொள்வதும், அந்த ஏற்றுக்கொள்தலை வெளிப்படையான நன்னடத்தையான வாழ்வால் பிரதிபலிப்பதும் உள்ளார்ந்த உயிர்ப்பு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 14:15-21), இயேசு, துணையாளராம் தூய ஆவியாரின் வருகையைப் பற்றிப் பேசுகின்றார். தொடர்ந்து, 'நான் உங்களைத் திக்கற்றவர்களாக (அநாதைகளாக) விட்டுவிட மாட்டேன்' என்று சொல்கின்ற இயேசு, 'அன்பு கொள்தலைப் பற்றி' அறிவுறுத்துகின்றார். ஆக, இயேசுவைப் பொருத்தவரையில், அன்பு செய்தலே உள்ளார்ந்த உயிர்த்தெழுதல். ஏனெனில், தந்தை-மகன்-தூய ஆவியார் என்னும் மூவொரு இறைவனை ஒன்றாய்ப் பிணைப்பது அன்பு. இதே அன்புதான் தந்தை-இயேசு-சீடர் என்னும் உறவின் பிணைப்பாகவும் இருக்கிறது.

ஆக, அன்பு செய்யும் ஒருவர் இயல்பாகவே உள்ளார்ந்த உயிர்த்தெழுதலை அடைகிறார்.

இவ்வாறாக,

முதல் வாசகத்தில், உள்ளார்ந்த உயிர்த்தல் என்பது இனவெறுப்பு அல்லது பகைமையைத் தாண்டுவதாகவும், இரண்டாம் வாசகத்தில், இயேசுவின்மேல் நம்பிக்கை கொண்டு நன்னடத்தையுடன் வாழ்வதையும், நற்செய்தி வாசகத்தில் அன்பு செய்தலையும் குறிக்கிறது

. உள்ளார்ந்த உயிர்த்தல் அல்லது உள்ளம் உயிர்த்தலே நம் உடல் உயிர்ப்பின் முன்னோடி.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

ஆவிக்குரிய இயல்போடு உயிர்ப்போமா !

நம் எல்லாருக்கும் இரண்டுவகையான இயல்புகள் உண்டு. ஒன்று மனிதருக்குரிய இயல்பு. மற்றொன்று ஆவிக்குரிய இயல்பு. நம் அனைவருக்குள்ளும் இந்த ஆவிக்குரிய இயல்பு இருப்பதற்கு காரணம் கடவுள் நம்மை அவருடைய சாயலிலே படைத்து உயிர் மூச்சாக தூய ஆவியாரைக் கொடுத்ததே. ஆயினும் நமக்குள்ளே மனித இயல்பு மேலோங்கியது. அதற்கு காரணம் நமது பாவ இயல்புகளே. இன்றைய வாசகங்கள் நம் அனைவரையும் ஆவிக்குரிய இயல்போடு உயிர்க்கச் சொல்கிறது.ஏனெனில் நம் அன்றாட வாழ்வில் மனித இயல்புகளால் நாம் பலமுறை இறக்கிறோம்.

"மனித இயல்போடு இருந்த கிறிஸ்து இறந்தார் எனினும் ஆவிக்குரிய இயல்பு உடையவராய் உயிர் பெற்றெழுந்தார்" என்று நாம் இரண்டாம் வாசகத்தில் வாசிக்கிறோம். இங்கே இயேசுவின் மனித இயல்பாகக் குறிப்பிடப்படுவது அவருடைய உடல் பலவீனத்தையே. பாவம் தவிர மற்றனைத்திலும் மனிதனாக இயேசு வாழ்ந்தார். அந்த இயல்பில் பாடுகளுக்கு உள்ளானார். அவர் இறந்தார்.ஆனால் ஆவிக்குரிய இயல்பிலே அவர் கடவுளால் எழுப்பப்பட்டார்.

இயேசுவின் இறப்புக்குப்பின் அவருடைய சீடர்களும் கூட மனித இயல்புகளான பயம், துக்கம் போன்றவற்றால் இறந்தவர்களாய் இருந்தார்கள்.ஏன் அவருடைய உயிர்ப்புக்குப் பின்னும் கூட பலமுறை இயேசு காட்சி கொடுத்த பின்னும் கூட சந்தேகம் என்ற மனித இயல்பால் இறந்தவர்களாக இருந்தார்கள். ஆனால் ஆவியைப் பெற்ற பிறகு உயிர்பெற்றவர்களானார்கள். நற்செய்தியை போதித்தார்கள். அவர்கள் தூய ஆவியை பிறருக்கு வழங்குபவர்களானார்கள். இதை இன்றைய முதல்வாசகம் எடுத்துரைக்கிறது.

இந்த இறைவார்த்தைகளை சிந்திக்கும் நாம் நம்மை இறக்கச் செய்யும் மனித இயல்புகளைக் கண்டறிய வேண்டும். அவை நம்முடைய பயமாக இருக்கலாம்.சோம்பலாக இருக்கலாம். பாவ தூண்டல்களாக இருக்கலாம். இறை நம்பிக்கையின்மை, அன்பில்லாமை, பகை உணர்வுகள், சந்தேகம் ,இச்சை இழிவுணர்வுகள் என எவையாகவும் இருக்கலாம். அவற்றை ஆவிக்குரிய இயல்போடு வென்று நாம் உயிர்த்தவர்களாக வாழ வேண்டும். இதைச் செய்ய நமக்கு உதவுபவர் ஆவியானவரே.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு நான் உங்களை திக்கற்றவர்களாக விடமாட்டேன் என வாக்களிக்கிறார். துணையாளராம் தூய ஆவியானவரை நமக்குத் தருவதாக உறுதியளிக்கிறார். உயிர்த்த ஆண்டவர் இயேசு நமக்கு அன்றாடம் தூய ஆவியாரை தந்துகொண்டே இருக்கிறார். அந்த ஆவியின் இயல்புகளை உணர முயல்வோம். உயிர்ப்பின் மக்களாக வாழ்வோம்.

இறைவேண்டல்

ஆவியானவரே இறைவா! உமது இயல்புகளை எம்மிலே அதிகரித்திடும். மனித இயல்புகளுக்கு இறந்து ஆவிக்குரிய இயல்பிலே உயிர்பெற்றவர்களாக வாழ அருள்புரியும். ஆமென்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
ser