மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக் காலத்தின் 21-ஆம் ஞாயிறு
இரண்டாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
யோசுவா 24:1-2, 15-18|எபேசியர். 5:21-32|யோவான். 6:60-69

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


நற்கருணை

அன்பார்ந்த சகோதரனே! சகோதரியே! ஆண்டவர் இயேசு படிப்படியாகத் தம் சீடர்களைத் தயாரித்து ஒரு மாபெரும் உண்மையை, உண்மை மசோதாவாக அறிவிக்கப் போகிறார். மக்களவையில் ஆளும் கட்சியினர் ஒரு மசோதாவைக் கொண்டு வரும்போது அதை எதிர்கட்சியினர் எதிர்த்து வெளிநடப்பு செய்வதை நாம் அன்றாடம் வாசிக்கிறோம், T.V-யில் பார்க்கிறோம். அதேபோல் மசோதாவை அறிவித்து, அறிமுகம் செய்தபோது யூத மக்கள் எதிர்த்தார்கள். இது மித மிஞ்சிய பேச்சு என்று முணுமுணுத்து வெளி நடப்புச் செய்தார்கள். இயேசுவை விட்டுப் பிரிந்த சீடர்கள் அவரிடம் மீண்டும் வரவில்லை (யோவா. 6:66)

அருமையான சகோதரனே! சகோதரியே! தீர்மானம் எடுப்பது என்பது வாழ்க்கையில் இன்றியமையாதது. வாழ்க்கைக்கு வடிவம் கொடுக்கிறது. வாழ்க்கையையே அமைத்துக் கொடுக்கிறது. ஆனால் சமூகத்தில் பலர் தீர்மானம், அல்லது முடிவு எடுக்கத் தடுமாறுகிறார்கள். தெளிவின்றி வாழ்வை இழந்து வாடுகிறார்கள். ஆனால் தீர்மானம் எடுக்கும்போது நிறைவான, மகிழ்வான, உயரிய , உண்மைக்கு இட்டுச் செல்வதில் தீர்மானம் எடுக்க வேண்டும்.

இயேசுவைப் பாருங்கள்!
தன் சீடருள் பலர் தம்மை விட்டுப் பிரிந்து செல்வதைக் கண்டு இயேசு சிறிதும் தயங்கவில்லை . தன் முடிவையும் மாற்றிக் கொள்ளவில்லை. மாறாகத் தன் பன்னிரு சீடர்களைப் பார்த்து நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா? (யோவா. 6:67) என்று கேட்கிறார் இயேசு. ஏனெனில் உண்மை ஒருபோதும் மறையாது. உண்மை உறங்குவதில்லை. இயேசு இந்த நற்கருணை மசோதாவைக் கொண்டு வந்தபோது பெரும்பான்மையோரின் வாக்கெடுப்புக்கு விடவில்லை. எதிர்ப்புக்கு மத்தியிலும் நிறைவேற்றினார்.

சீடர்கள் தீர்மானம் எடுப்பதில் முதலில் தயக்கம் காட்டினாலும், பேதுரு சீடர்கள் சார்பாக முடிவு எடுக்கிறார். ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம். வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன (யோவா. 6:68) என்று நம்பிக்கையின் தீர்மானத்தை வெளிப்படுத்துகிறார். ஆனால் கூடியிருந்த கூட்டம் எடுத்த தீர்மானம் வாழ்வை இழக்கும் தீர்மானமாக, உண்மையை மறுக்கும் தீர்மானமாக, தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் தீர்மானமாக அமைகிறது.

இன்றைய முதல் வாசகமும் மூன்றாம் வாசகமும் நமது வாழ்வில் சரியான தீர்மானங்கள் எடுக்க அழைப்பு விடுக்கின்றன.

கடந்த 2000 ஆண்டுகளாக எத்தனையோ பேர் நற்கருணை மறைபொருளை எதிர்த்து வந்தாலும், அதைத் திரித்துக் கூறினாலும், இன்றும் நற்கருணை மறைபொருளானது மங்காது, மறையாது, குன்றாது, குறையாது திருச்சபையின் வாழ்வு முழுவதற்கும் ஊற்றாக, சிகரமாக உள்ளது. யூதாசு இயேசுவைக் காட்டிக் கொடுத்தான். இறுதி உணவின் போது அவனுக்குள் அலகை நுழைந்தது. நற்கருணையில் பங்கேற்காமல் அவனை இருளில் அழைத்துச் சென்றது அலகை.

யூதாஸ் நமக்கெல்லாம் எச்சரிக்கை!
இன்று கத்தோலிக்க கிறிஸ்தவர்களில் சிலர் நற்கருணையை விட்டு விலகி பிரிவினை சபைக்கு ஓடுகிறார்கள். ஒரு பெண்ணைப் பார்த்து நீங்கள் எங்கள் சபைக்கு வாருங்கள். உங்கள் தீரா நோயை எடுத்துவிடுவோம் என்று பிரிந்த சபையினர் அழைத்தனர். நற்கருணை ஆண்டவர் என்னைக் குணப்படுத்துவார். வேறு எந்தச் சபைக்கும் நான் போகத் தயாராக இல்லை என்று உறுதிபடக் கூறினார் அந்தப் பெண். சுண்டல் கொடுக்கின்ற கோவில்களுக்கெல்லாம் ஓடும் சிறுபிள்ளைபோல, புற்றீசல் போல் பெருகி வரும் பிரிவினைச் சபைக்கு ஓடும் நிலையை நாம் கைவிட வேண்டும். ஓடியவர்களை நாம் கொண்டு வர முயற்சிப்போம். அப்போது நாம் வாழ்வு பெறுவோம்.

மலைகள் நிலை பெயரலாம். குன்றுகள் அசையலாம். என் அன்போ என்றுமே மாறாது. உன் மீது முடிவில்லா அன்பு கொண்டுள்ளேன் (எசா. 54:10). உன்னோடு முடிவில்லா உடன்படிக்கை செய்வேன் (எசா. 55:3-4).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இறைவார்த்தை வழியில்

ஒரு பங்குப் பணியாளர் ஞாயிறு மறையுரையின் போது, ஒரு மருந்து பாட்டிலெ மக்களுக்குக் காட்டி, இது என்ன? என்று கேட்டார். அதற்கு பங்கு மக்கள், மருந்துப் பாட்டில் என்றார்கள். இதன் மீது என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்பது தெரிகின்றதா? என்றார். மக்களோ, தெரியவில்லை, நீங்களே படித்துச் சொல்லுங்கள் என்றனர். பங்கு பணியாளர் படித்தார். காலையில் ஒரு ஸ்பூன், மதியம் ஒரு ஸ்பூன், இரவு ஒரு ஸ்பூன் சாப்பிடும்படி சொல்லப்பட்டிருக்கின்றது என்றார்.

இவ்வாறு சொல்லிவிட்டு மக்களைப் பார்த்து, இந்த மருந்துப் பாட்டிலை உங்கள் கையில் கொடுத்து, இதில் எழுதியுள்ளபடி குடியுங்கள் என்று சொன்னால், நீங்கள் என்ன செய்வீர்கள்? என்று கேட்டார். அதற்கு மக்கள், அதில் எழுதியுள்ளபடி செய்வோம் என்றார்கள்.

அப்போது பங்குப்பணியாளர் மக்களைப் பார்த்து, ஒரு டாக்டர் சொல்வதை நம்புகின்றீர்கள் ? கடவுள் சொல்வதை, இறைவார்த்தையை நம்ப ஏன் தயங்குகின்றீர்கள்? என்றார். அன்றிலிருந்து அந்தப் பங்கில் பெரும் ஆன்மிக மாற்றங்கள் துளிர்விடத் துவங்கின.

நமக்கு வாழ்வளிக்கும் ஆற்றல் இறைவார்த்தைக்கு உண்டு (நற்செய்தி). கடவுளின் வார்த்தை நேர்மையானது (திபா 33:4).
கடவுளின் வார்த்தைக்குக் குணமளிக்கும் ஆற்றல் உள்ளது (திபா 107:20).
கடவுளின் வார்த்தை நமது காலடிக்கு விளக்கு (திபா 119:105).
கடவுளின் வார்த்தை வல்லமை மிக்கது (எசா 55:10-11).
கடவுளின் வார்த்தை என்றும் அழியாதது (மத் 24:35).
கடவுளின் வார்த்தை நம்மை தூய்மைப்படுத்துகின்றது (இரண்டாம் வாசகம்).

நம் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் இறைவனிடமிருந்து பெற்றுத் தரும் சக்தி இறைவார்த்தைக்கு உண்டு! இதை மனத்தில் கொண்டு, நான் ஆண்டவரின் அடிமை ; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் (லூக் 1:38) என்ற அன்னை மரியாவின் முன்மாதிரியைப் பின்பற்றி, இறைவார்த்தையை நம்பி அதை நம் வாழ்வின் மையமாக்கி வளமுடன் வாழ்வோம்.

மேலும் அறிவோம் :

கேட்டார்ப் பிணிக்கும் தகை அவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல் (குறள் : 643)

பொருள் : சொல்லாற்றல் என்று சான்றோரால் பாராட்டப்படுவது கேட்ட வரைக் கவரத்தக்கதாகவும் கேளாதவரைக் கேட்க விரும்பச் செய்வதாகவும் விளங்குவதாகும்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மக்களவையில் ஆளும் கட்சியினர் ஒரு மசோதாவைக் கொண்டுவரும்போது அதை எதிர்த்து எதிர்க்கட்சியினர் வெளி நடப்புச் செய்கின்றனர். அவ்வாறே கிறிஸ்து நற்கருணை மசோதாவை, நம்பிக்கைக் கோட்பாட்டை யூதர்களுக்கு அறிமுகம் செய்தபோது, அதை எதிர்த்து மக்கள், "இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக் கொண்டிருக்க முடியுமா?" (யோவா 6:60) என்று கூறிவிட்டு வெளிநடப்புச் செய்தனர். அவ்வாறு இயேசுவை விட்டுப் பிரிந்த சீடர்கள் அவரிடம் மீண்டும் திரும்பி வரவில்லை (யோவா 6:66).

தம் சீடருள் பலர் தம்மை விட்டுப் பிரிந்து செல்வதைக் கண்ட இயேசு சிறிதும் கலங்கவில்லை . மாறாக, தம்முடன் இருந்த பன்னிருவரிடம், "நீங்களும் போய்விட நினைக்கிறார்களா?* (யோவா 6:67) என்றுதான் கேட்டார்.

உண்மை ஒருபோதும் பின்வாங்காது; சுடச்சுட ஒளிரும் பொன்னைப் போன்று எதிர்க்க எதிர்க்க மிளிரும் தன்மை உடையதுதான் உண்மை, "அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே: இச்செகத் துள்ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்று எத்தகையச் சவாலையும் எதிர்த்து நிமிர்ந்து நிற்பதுதான் உண்மை.

வழியும் வாழ்வும், உண்மையும் உயிருமான கிறிஸ்து நற்கருணை மசோதாவை பெரும்பான்மையோரின் வாக்கெடுப்பிற்கு விடவில்லை. மாறாக, பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் அதை நிறைவேற்றினார், கடந்த 2000 ஆண்டளவாக எத்தனையோ பேர் நற்கருணை மறைபொருளை எதிர்த்து வந்தாலும், அதைப்பற்றித் திரித்துக் கூறினாலும், இன்றும் நற்கருணை மறைபொருளானது மங்காது மறையாது. குன்றாது குறையாது, திருச்சபை வாழ்வு முழுவதற்கும் ஊற்றாகவும் சிகரமாகவும் உள்ளது.

நற்கருணை மறை உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு மனித அறிவு கை கொடுக்காது, அதற்குத் தேவையானது வானகத் தந்தையின் அருள், எனவேதான் இன்றைய நற்செய்தியில் இயேசு, "என் தந்தை அருன் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது"(யோவா 6:65) என்று கூறி, தமது நீண்ட உரைக்கு முத்திரை வைக்கிறார்.

இயேசு கிறிஸ்து 'ஆமென் என்ற பெயர் கொண்டவர்; நம்பிக்கைக்குரிய உண்மையான சாட்சியானவர் {திவெ 3:14}; ஒரே நேரத்தில் அவர் 'ஆம்' என்றும் 'இல்லை ' என்றும் பேசாமல், 'ஆம்' என்று உண்மையையே பேசுபவர் (2 கொரி 1:19). அவர் நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர் (எபி 13:8). உண்மையும் நம்பிக்கையும் உடைய அவர் நம்மிடம் எதிர்பார்ப்பதும் உண்மையும் நம்பிக்கையும் பற்றுறுதியுமாகும்.

கடவுளிடம் நாம் எவ்வாறு பற்றுறுதியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கு இன்றைய முதல் வாசகத்தில் யோசுவாவும், நற்செய்தியில் பேதுருவும் சிறந்த எடுத்துக் காட்டுக்களாகத் திகழ்கின்றனர்.

இஸ்ரயேல் மக்கள் உண்மையான கடவுளுக்கு ஊழியம் புரிந்தாலும் பிற இனத்தெய்வங்களையும் வழிபட்டு, இருமனத்தோராய் திகழ்ந்தனர். இந்நிலையில் யோசுவா அம்மக்களிடம், "நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம்" (யோசு 24:15) என்று திட்டவட்டமாகக் கூறினார். அவ்வாறே, எல்லாரும் இயேசுவை விட்டுச் சென்ற கட்டத்திலும் பேதுரு இயேசுவிடம், "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலை வாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன" (யோவா 6:67) என்று திண்ணமாக அறிக்கையிடுகிறார். ஒருவருக்குக் கேடுகாலம் வருவதும் ஒருவிதத்தில் நல்லது; ஏனெனில் அப்போதுதான் அவருடைய உண்மையான நண்பர்கள் யார் என்பதை இனம் காண முடியும் என்கிறார் வள்ளுவர்.

கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைரை
நீட்டி அளப்பதோர் கோல் (குறள் 796)

குளத்தில் தண்ணீர் இருக்கும்போதுதான் அதில் கொக்கும் மீனும் இருக்கும். தண்ணீர் வற்றி வறண்டு விட்டால் பறவைகள் வேறிடத்திற்குப் பறந்து போய்விடும். மாறாக, அக்குளத்திலுள்ள செடிகொடிகன் அக்குளத்திலேயே இருந்து அதிலேயே மாண்டுவிடும். இன்பத்தில் நட்புரிமை கொண்டாடி துன்பத்தில் காலை வாரிவிடுபவர்கள் நண்பர்கள் அல்ல, நயவஞ்சகர்கன்.

ஓர் உண்மைக் காதலன் தன் காதலியிடம், 'நீ மாலையானால் நான் அதில் மலேராவேன். நீ பாலையானால் நான் அதில் மணலாவேன்" என்கிறான். இன்றைய இரண்டாம் வாசகத்தில், கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயுள்ள உறவு கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் இடையேயுள்ள பிரிக்க முடியாத உறவு என்பதை விளக்குகிறார் புனித பவுல். இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் வெட்டிப் பிரித்தாலும் விட்டுப் பிரியாமல் இருப்பவர்களே உண்மையான தம்பதியர். அவ்வாறே இயேசுவுக்கும் அவருடைய அன்பின் அருள் அடையாளமாகிய நற்கருணைக்கும் நாம் என்றும் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

யூதாசு இயேசுவைக் காட்டிக் கொடுத்தான், அவனுக்கு இயேசுவின் மீதோ நற்கருணை மீதோ உண்மையான பற்றுறுதி இல்லை. நற்கருனை பற்றி இயேசு கொடுத்த விளக்கத்தின் இறுதியில் அவர் யூதாசை "அலகை" என்று அழைத்தார் (யோவா 6:70). இயேசுவின் இறுதி உணவின்போது அவனுக்குள் அலகை நுழைந்தது. நற்கருணையில் பங்கேற்காமல் அலகை அவனை இருளில் அழைத்துச் சென்றது (யோவா 13:27-30).

யூதாசு நமக்கெல்லாம் ஓர் எச்சரிக்கை இன்றும் கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களில் சிலர் நற்கருணையை விட்டு விலகிப் பிரிவினை சபைகளுக்குச் செல்கின்றனர், அவர்கள் மீண்டும் நற்கருணையிடம் திரும்பி வருவது அரிது.

ஒரு பெண்மணியிடம் பிரிவினை சபையினர், "நீங்கள் எங்கள் சபைக்கு வாருங்கள். உங்களின் தீராத நோயை எடுத்துவிடுகிறோம்" என்று அழைத்தனர். அப்பெண்மணியோ, "நற்கருணை ஆண்டவர் என்னைக் குணப்படுத்தாவிட்டால், வேறு எந்த சபைக்கும் போக நான் தயாராக இல்லை " என்று உறுதிபடக் கூறினார், சுண்டல் கொடுக்கிற கோவில்களுக்கெல்லாம் ஒடும் சிறு பிள்ளைகளைப்போல், இங்கும் அங்குமாகப் புற்றீசல்போல் பலுகிவரும் பிரிவினை சபைகளுக்கு ஓடும் இழிநிலையைக் கைவிட வேண்டும். அல்கையின் வஞ்சக வலையில் வீழ்ந்து நம் ஆன்மாவை இழக்கக் கூடாது.

எம்மாவுக்குச் சென்ற இரு சீடர்களுக்கு அப்பத்தைப் பிட்டுக் கொடுத்து, தம்மை அவர்களுக்கு அடையாளம் காட்டிய உயிர்த்த ஆண்டவர். அவர்கள் கண்கள் திறந்தவுடன் அவர்கள் பார்வையிலிருந்து மறைந்துவிட்டார், ஏன்? இனிமேல் இயேசுவின் இரண்டாம் வருகைவரை, அவரை நாம் அப்பம் பிடுவதில், அதாவது நற்கருணைக் கொண்டாட்டத்தில் காண வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பமாகும். இயேசுவின் விருப்பத்தை ஏற்காதவர்கள் இயேசுவின் சீடர்கள் அல்ல. அவர்கள் யாரோ? யான் அறியேன் பராபரமே!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நாம் தேர்ந்து கொண்டவர்கள்

திரைப்படம் ஒன்றில் இப்படி ஒரு காட்சி. பெற்றோரை இழந்த இரு சகோதரர்கள். மூத்தவன் தன் தம்பியை பாசத்தோடும் கண்டிப்போடும் வளர்த்து ஆளாக்கி விடுகிறான். ஒரு தாயின் நிலையிலிருந்து அண்ணியும் அன்பைப் பொழிகிறாள். குடும்பத்தில் செல்வமும் வசதியும் பெருகுகிறது. தீயமனம் படைத்த நண்பர்கள் இளையவனின் மனதைக் கெடுக்கிறார்கள்: "உன் அண்ணன் சொத்தையெல்லாம் தன் விருப்பம் போல் செலவிடுகிறார். நாளை உன்னை ஏமாற்றிவிடுவார். இப்போதே உனக்கு உரியதைப் பிரித்து வாங்கிவிடு”. அந்த ஆலோசனையின்படி தம்பியும் தன் அண்ணனைப் பார்த்து பாகப்பிரிவினை கோருகிறான். தன்மீது நம்பிக்கை இழந்துவிட்ட தம்பியை எண்ணி அண்ணன் அதிர்ச்சி அடைகிறான். அனலில் இட்ட புழுப்போலத் துடிக்கிறான். இருப்பினும் தன் தம்பியின் விருப்பத்தை நிறைவேற்ற ஏற்பாடு செய்கிறான்.

குறிப்பிட்ட நாளில் ஊர்ப் பெரியவர்கள், உற்றார் உறவினர் அனைவரையும் கூட்டிப் பாகம் பிரிக்கின்றான். தன்னிடம் இருந்த பொன், பொருள், நிலம் வீடு அனைத்தையும் மொத்தமாக ஒரு பக்கம் வைக்கின்றான். எதிர்ப்புறத்தில் அண்ணன் போய் நின்று கொண்டு “நம் செல்வங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. எது வேண்டுமோ அதை எடுத்துக்கொள்” என்றான். உண்மையைப் புரிந்து கொள்ளாத ஒருவர் குழம்புகிறார். சொத்து எல்லாம் ஒரே கும்பலாக ஒரு பக்கத்தில் அல்லவா இருக்கின்றன. எங்கே இரண்டு பாகங்கள் என்று தவிக்கிறார். ஆனால் உண்மையிலேயே சொத்து அனைத்தும் ஒரு பக்கம் இருக்க அண்ணன் மறுபக்கம் இருந்தார். “நான் வேண்டுமா இந்தச் செல்வங்கள் வேண்டுமா?” நல்ல முடிவெடுக்க. தன் தம்பியை அழைக்கிறார். அறிவு தெளிந்து தம்பி தன் அண்ணனிடம் ஓடிச் சென்று அவனைக் கட்டி அணைத்துப் பற்றிக் கொள்கிறான்.

பழைய ஏற்பாட்டில் யோசுவா இப்படி இஸ்ரயேல் மக்களை முடிவெடுக்க அழைக்கிறார். மீட்பின் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் உருவெடுக்கும்போது இறைவன் நம்பிக்கை அறிக்கையை எதிர்பார்க்கிறார். ஆபிரகாம், யாக்கோபு எனத் தொடங்கி அம்முறை இஸ்ரயேல் மக்களுடன் சீனாய் மலையில் உடன்படிக்கையாக நிறைவுறுகிறது.

மோசேயை அடுத்து இஸ்ரயேல் மக்களை வழி நடத்தும் பொறுப்பேற்ற யோசுவா தலைமையில் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழையுமுன் திரும்பவும் இந்த நம்பிக்கை அறிக்கை எதிர்பார்க்கப்படுகிறது. “உங்களை விடுதலை செய்து வழி நடத்திய அன்புக் கடவுளா? அந்நிய பொய்த் தெய்வங்களா? முடிவெடுங்கள்” என்று யோசுவா மக்களைச் சிந்திக்க வைக்கிறார். உங்கள் முடிவு எதுவாக இருந்தாலும் “நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்” (யோசு. 24:15) என்று உறுதிபடக் கூற, மக்களும் "நாங்களும் ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம்” என்கின்றனர்.

அதே தொனியில் பேதுரு வெளியிட்ட நம்பிக்கை அறிக்கை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன! நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அதை நம்புகிறோம்" (யோ. 6:68,69). எந்தப் பின்னணியில்? "எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்" (யோ. 6:51) என்ற இயேசுவின் உரையைக் கேட்ட சீடர்கள் மத்தியில் பிளவு ஏற்படுகிறது. “அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர்” என்ற சோக வரியை யோ. 6:66இல் பார்க்கிறோம். மீண்டும் இயேசு “எதிர்க்க ப்படும் அடையாளமாகிறார்” (லூக். 2:34).

“நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழி மரபினர்” (1 பேதுரு 2:9) என்று அழுந்தக் கூறும் பேதுரு இங்கே “இயேசுவின் சீடர்கள் நாம் தேர்ந்து கொள்ளப்பட்ட மக்கள் மட்டுமல்ல, மாறாகத் தேர்ந்துகொண்ட மக்கள்” (We are not just the chosen people but the choosing people) என்று வலியுறுத்துவதை உணர்கிறோம்.

நமது கிறிஸ்தவ வாழ்க்கையில் ஏனோ தானோவென்று மதில் மேல் பூனையாக, ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால் என்று இரு மனம் கொண்டவர்களாக இருக்க முடியாது. “என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்” (லூக். 11:23) என்று இயேசு தெளிவுறுத்தவில்லையா? குடிகாரன் ஒருவன் தினமும் கோவிலிலே மிக்கேல் சம்மனசிடம் வேண்டிக் கொள்வானாம். ஆனால் முடிக்குமுன் வானதூதரின் காலடியில் கிடக்கும் பேயிடமும் சிறு செபம் சொல்லி தொட்டு முத்தி செய்வானாம். இது பற்றிக் கேட்டபோது, “என் வாழ்க்கை எங்கே போய் முடியுமோ யார் கண்டது? சொர்க்கத்துக்குப் போனால் மிக்கேல் அதிதூதர் பார்த்துக் கொள்வார். நரகத்துக்குப் போனால் ... பேயிடமும் கொஞ்சம் சமரசம் செய்து கொள்வது நல்லதுதானே!'' என்றானாம். இது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை உணர்ந்தால் நம் இறைநம்பிக்கைக்கு நல்லதல்லவா!

இயேசுவைப் பின்பற்றுவது என்பது வாழ்வின் பல்வேறு கட்டங்களிலும் உறுதியான நிலைப்பாடு எடுப்பது. அதாவது தெளிவான தெரிவு செய்வதாகும். அன்றாட வாழ்க்கையில் உடுத்துகிற உடை, படிக்கிற புத்தகம், செய்ய விரும்பும் தொழில், தொழிலிலே கூட்டாளி, வாழ்க்கைத் துணை என்று நாம் தேர்ந்து கொள்பவைகள் பல. அதே வேளையில் நாம் தேர்ந்து கொள்ள இயலாத முக்கியமானவைகள் உள. எடுத்துக்காட்டாக நமது பெயர், நமது பெற்றோர், நாம் சார்ந்துள்ள இனம், ஏன் பிறப்புக்கூட. நாம் விரும்பியா, ஒப்புதல் தந்தா மனிதனாக, இந்தியனாக கிறிஸ்தவனாகப் பிறந்தோம்?

நாம் கிறிஸ்தவர்களாகப் பிறந்திருக்கிறோம். கிறிஸ்தவர்களாக ஆகி இருக்கிறோமா? பெற்றதனாலா அப்பா அம்மா? "என்னைப் பெற்றெடுக்க யார் சொன்னது. எனக்காகவா சுமந்தீர்கள்? உங்கள் இன்பத்துக்காகத்தானே என்னைச் சுமந்தீர்கள்!" என்று இன்றைய இளைஞன் கேட்கிறான். அப்பா அம்மாவாக செயல்பட வேண்டாமா? பெற்றோரைத் தேர்ந்தெடுக்கவில்லை. ஆனால் அவர்களை நேசிக்கிறோம். இந்தியனாகப் பிறக்க வேண்டும் என்று கேட்டதில்லை. ஆனால் தாய்த்திருநாடு என்று பெருமைப்படுகிறோம். பிறப்பால் கிறிஸ்தவர்களானவர்களை விட மனமாற்றத்தால் கிறிஸ்தவர்களானவர்கள் உறுதிப்பாட்டோடு இருக்கிறார்கள் என்றால் காரணம் : தெரிவு'.

இயேசுவை ஒரு முறையல்ல மீண்டும் மீண்டும் குறிப்பாக நம் நம்பிக்கை கிண்டலுக்கு ஆளாகிறபோது, எதிர்ப்புக்கும் அரசு சலுகை இழப்புக்கும் ஆளாகுகிறபோது, இப்படிக் கடினமான குழப்பமான சூழல்களில் இயேசுவை தெரிந்து தேர்ந்தெடுக்கும் பக்குவத்தைப் பெற வேண்டும்.

“யாரிடம் போவோம் இறைவா” - பேதுருவின் உருக்கம் இயேசுவின் உள்ளத்தைத் தொட்டிருக்கும். இந்த நிலையில் இயேசுவுக்கு இன்னொரு சங்கடம் போக விரும்பியவர்கள் எல்லாம் போய் விட்டார்கள். போக வேண்டிய அந்த யூதாஸ் போகாமலேயே 'அப்போஸ்தல' வேடத்தில் அவரோடு ஒட்டிக் கொண்டிருக்கிறானே, எவ்வளவு பெரிய வேதனை!

ஆயிரம் எதிரிகளைவிட ஒரு துரோகி ஆபத்தானவன் அல்லவா! அடையாளம் கண்டு கொண்ட பிறகும் கூட இயேசுவால் அவனை பிறர் முன்னே காட்டிக் கொடுக்க முடியவில்லை. அவரது உயர்ந்த பண்பு அப்படி! அதே நேரத்தில் அவனது துரோகம் பற்றி மறைமுகமாகவாவது முன்னறிவிப்புச் செய்யாமல் இருக்கவும் அவரது மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. "பன்னிருவராகிய உங்களை நான் தேர்ந்து கொண்டேன். ஆயினும் உங்களுள் ஒருவன் அலகையாய் இருக்கிறான்” (யோ. 6:70).

இறைமகன் இயேசுவாக அல்ல, மானிட மகன் இயேசுவாக அவரது மனம் படும்பாடு நம் உள்ளங்களிலும் உளியைப் பாய்ச்சத்தான் செய்கிறது. இயேசு என்னைத் தேர்ந்து கொண்டார். நானும் அவரைத் தேர்ந்து கொண்டேன் என்ற உறுதியான நிலைப்பாட்டில் நம் நம்பிக்கை ஊன்றப்படட்டும்.

இயேசுவின் சீடன் கிறிஸ்தவனைப் பொருத்தவரை, பிறந்ததற்காக வாழ்கிறோம் என்ற அவல உணர்வு நெஞ்சில் தஞ்சம் புகக்கூடாது. வாழ்வதற்காகப் பிறந்தோம், வாழ்விப்பதற்காகப் பிறந்தோம் என்ற பெருமித உணர்வு ஊற்றெடுக்கட்டும்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

“முழு உள்ளத்துடன் ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம்”

நிகழ்வு
ஒரு பங்கில் பங்குப்பணியாளராகப் பணியாற்றிய அருள்பணியாளர் ஒருவர், ஒரு ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலியில், முழு உள்ளத்தோடு ஆண்டவருக்கு ஊழியம் புரியவேண்டும் என்று மறையுரை ஆற்றிக்கொண்டிருந்தார். இடையில் அவர் பகிர்ந்த நிகழ்வு இது.

ஒருவர் சிற்றூரில் இருந்த தன்னுடைய வீட்டை விற்றுவிட்டு, நகரத்தில் தனது மனைவி மக்களுளுடன் குடியேறலாம் என்று திட்டமிட்டார். இதைத் தொடர்ந்து இவர், தன் வீட்டிற்கு முன்பாக, ‘வீடு விற்பனைக்கு’ என்றோர் அறிவிப்புப் பலகையை வைத்தார். நாள்கள் நகர்ந்தன; வீட்டை விலைக்கு வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. ஒருசில மாதங்கள் கழித்து, ஒருவர் வீட்டை வாங்குவதற்கு வந்தார்; அவரிடம் வீட்டை வாங்குகின்ற அளவுக்குப் போதுமான பணம் இல்லை. இதனால் வீட்டின் உரிமையாளர், ‘இனிமேலும் பொறுத்திருந்தால், இவரையும் இழக்க நேரிடும்’ என நினைத்துக்கொண்டு, ஒரு நிபந்தனையுடன், புதியவரிடம் வீட்டைப் பாதி விலைக்கு விற்றார். வீட்டின் உரிமையாளர் புதியவருக்குப் போட்ட சொன்ன நிபந்தனை இதுதான்: “நீங்கள் இந்த வீட்டிற்குப் பாதி விலைதான் கொடுத்திருப்பதால், தலைவாசலில் உள்ள கதவில் இருக்கும் ஆணி மட்டும் எனக்குச் சொந்தம்.”

‘இவ்வளவு பெரிய வீட்டில், சிறிய அளவு ஆணிதானே இவருக்குச் சொந்தம்; இருந்துவிட்டுப் போகட்டும்!’ என்று புதியவர் வீட்டின் உரிமையாளர் போட்ட நிபந்தனைக்குச் சம்மதம் தெரிவித்து வீட்டை வாங்கிக்கொண்டார். ஆண்டுகள் வேகமான உருண்டோடின. நகரத்தில் குடியேறிய வீட்டின் உரிமையாளருடைய மனைவி திடீரெனத் தவறினார். பிள்ளைகளும் வேறுவேறு நகரங்களில் குடிபெயர்ந்துவிட, கடைசிக் காலத்தில் சிற்றூரில் முன்பிருந்த வீட்டிலியே குடியேறுவது உத்தமம் என இவர் நினைத்தார். இதை இவர் வீட்டைப் பாதிவிலை கொடுத்து வாங்கிவரிடம் சொன்னபொழுது, அவர் வீட்டைத் தர மறுத்தார். இதனால் என்ன செய்வது என்று யோசித்த இவர் அவ்வீட்டின் தலைவாசலில் தனக்குச் சொந்தமாக இருந்த ஆணியில் செத்த நாயைத் தொங்கவிட்டார். புதிதாக வீட்டில் குடியேறியவரால் எதுவும் பேசமுடியவில்லை. இதையே இவர் பல நாள்களாகச் செய்து வந்தால், நாற்றம் தாங்க முடியாமல், புதிதாக வீட்டில் குடியேறியவர் வீட்டைக் காலிசெய்துவிட்டுப் போய்விட்டார்.

அருள்பணியாளர் இந்த நிகழ்வை மக்களிடம் சொல்லிவிட்டு இவ்வாறு தன் மறையுரை நிறைவுசெய்தார்: “வீட்டை வாங்கியவர் முழு விலை கொடுத்து வாங்கியிருக்கலாம்! அவர் பாதிவிலைக்கு வாங்கியதால், வீட்டின் உரிமையாளர் போட்ட நிபந்தனைக்குக் கட்டுப்பட வேண்டியிருந்தது. இறுதியில் வீட்டையே இழக்க வேண்டியதாயிற்று. கடவுளை அன்புசெய்து, அவருக்கு ஊழியம் செய்கின்ற ஒருவர் அரைகுறை உள்ளத்தோடு அல்ல, முழு உள்ளத்தோடு ஊழியம் புரியவேண்டும்.”

ஆம், பொதுகாலத்தின் இருபத்து ஒன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, கடவுளுக்கு நாம் முழு உள்ளத்தோடு ஊழியம் செய்யவேண்டும் என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

ஆண்டவருக்கு ஊழியம் புரிவதற்கு அவரது வார்த்தைகளைக் கேட்கவேண்டும்.

“அறிவிக்கப்பட்டதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும்” (உரோ 10: 17) என்று பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் கூறுவார். பவுல் சொல்லக்கூடிய இவ்வார்த்தைகள், உண்மையிலும் உண்மையானவை. ஏனெனில், கடவுளின் வார்த்தையைக் கேளாத ஒருவருக்கு அவர்மீது நம்பிக்கை ஏற்பட வாய்ப்புகள் மிகக் குறைவு.

கப்பர்நாகுமில் உள்ள தொழுகைக்கூடத்தில், “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே” என்று இயேசு பேசியபொழுது, அவரது சீடர்களுள் ஒருசிலர், “இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?” என்று, அவரை விட்டுப் பிரிந்து செல்கின்றார்கள். இவர்கள் இயேசுவின் வார்த்தைகளைக் கருத்தூன்றி கேட்காததால்தான் அவரை விட்டுப் பிரிந்துசெல்கின்றார்கள்; ஆனால், பேதுரு உட்பட பன்னிரு திருத்தூதர்கள் இயேசுவின் நிலைவாழ்வு வார்த்தைகளை, வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கும் வார்த்தைகளைக் கருத்தூன்றிக் கேட்டார்கள். அதனால்தான் அவர்களுக்கு இயேசுவின்மீது நம்பிக்கை ஏற்பட்டது; அவர்களால் அவருக்கு முழு உள்ளத்துடன் ஊழியம் செய்ய முடிந்தது. இதில் யூதாஸ் இஸ்காரியோத்து போன்ற விதிவிலக்குகள் இருக்கலாம். இருந்தாலும் ஆண்டவருக்கு முழு உள்ளத்துடன் ஊழியம் புரிவதற்கு அவருடைய வார்த்தைகளைக் கருத்தூன்றிக் கேட்பது இன்றியமையாதது.

ஆண்டவருக்கு ஊழியம் புரிவதற்கு அவருக்குப் பணிந்து அன்புசெய்வோம்.

கடவுளுக்கு முழு உள்ளத்துடன் ஊழியம் புரிவதற்கு அவருடைய வார்த்தையைக் கேட்பது முதல்நிலை என்றால், அவருக்குப் பணிந்து, அவரை அன்புசெய்வது இரண்டாவது நிலை என்று சொல்லலாம்.

கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் உறவு எப்படி இருக்கவேண்டும் என்ற பின்னணியில் வரும் இன்றைய இரண்டாம்வாசகம், மனைவி தன் கணவனுக்குப் பணிந்திருப்பது போல, கிறிஸ்து என்ற உடலின் உறுப்புகளாக இருக்கும் நாம் ஒவ்வொருவரும் அவருக்குப் பணிந்திருக்கவேண்டும் என்றும், கணவன் தன் மனைவியை அன்புசெய்வது போல் நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவை அன்பு செய்யவேண்டும் என்றும் கூறுகின்றது. இதில் மனைவி தன் கணவனுக்குப் பணிந்திருக்கவேண்டும் என்பதை கட்டாயத்தினால் அல்ல, உள்ளார்ந்த அன்பினால் பணிந்திருக்கவேண்டும் என்று புரிந்துகொள்ளலாம். அதைப் போன்று கணவன் தன் மனைவியை அன்பு செய்யவேண்டும் என்பதை, மனைவி தன் உடல் என்ற விதத்தில் அன்பு செய்யவேண்டும் என்றும் புரிந்துகொள்ளலாம். இவ்வாறு ஒவ்வொருவரும் தலையாகிய கிறிஸ்துவுக்கு உடல் உறுப்புகளாகிய நாம் ஒவ்வொருவரும் பணிந்து, அவரை அன்பு செய்கின்றபொழுது, அவருக்கு முழு உள்ளத்துடன் ஊழியம் செய்ய முடியும் என்பது உறுதி.

ஆண்டவருக்கு ஊழியர் புரிவோர் அவரில் நிலைத்திருக்க வேண்டும்.

ஆண்டவருடைய வார்த்தைகளைக் கேட்டு, அவருக்குப் பணிந்து, அவரை அன்பு செய்து, அவரில் நிலைத்திருப்பதை, ஆண்டவருக்கு முழு உள்ளத்துடன் ஊழியம் செய்வதில் மூன்றாம் நிலை என்று சொல்லலாம்.

சிலர் கடவுளைச் சிறிதுகாலத்திற்கு அன்பு செய்வார்கள். கால ஓட்டத்தில் அவர்கள் கடவுளை மறந்து தங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் வாழ்வார்கள். யோசுவா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகத்தில் யோசுவா இஸ்ரயேலின் எல்லாக் குலங்களுக்கும் முன்பாக, “நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்” என்று சொல்கின்றபொழுது, அவர்களும், “நாங்களும் ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம். ஏனெனில், அவரே என் கடவுள்” என்கிறார்கள். ஆனால், அவர்கள் பின்னாளில் கடவுளை மறந்து, அவரை முழு உள்ளத்தோடு அன்புசெய்யாமல், அவருக்கு முழு உள்ளத்தோடு ஊழியம் செய்யாமல் பாகால் தெய்வத்தை வழிபட்டார்கள். எனவேதான் அவர்கள்மீது அன்னியரின் படையெடுப்பு நடந்தது.

ஆகையால், நாம் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டு, அவருக்குப் பணிந்து, அவரை அன்பு செய்கின்றோம் எனில், அதில் இறுதிவரை நிலைத்து நிற்கவேண்டும். அப்பொழுதுதான் அவருக்கு முழு உள்ளத்துடன் ஊழியம் புரியமுடியும். கலப்பையில் கைவைத்த பின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியாற்றவர் (லூக் 9: 62). அதுபோன்று அரைகுறை உள்ளத்தோடு ஆண்டவரை அன்புசெய்பவராலும், அவருக்கு முழு உள்ளத்தோடு ஊழியம் செய்ய முடியாது. ஆகவே, நாம் இயேசுவை முழு உள்ளத்தோடு அன்பு செய்து, அவருக்கு முழுமையாக ஊழியம் செய்வோம்.

சிந்தனை:
‘இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்கப்பபடுவர்’ (மத் 10: 22) என்பார் இயேசு. ஆதலால், நாம் இறுதிவரை மன உறுதியுடன் ஆண்டவரில் நிலைத்திருந்து, அவருக்கு முழு உள்ளத்துடன் ஊழியம் புரிவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஆண்டவரைத் தெரிந்துகொள்தல்

'தெரிவு' (சாய்ஸ்) என்ற ஒற்றைச் சொல் நம்மை மற்ற உயிர்களிலிருந்து வேறுபடுத்துகிறது. 'எனக்கு எது வேண்டும்' என்பதை நான் என் உணர்வுத்தூண்டுதலால் அல்லாமல், அறிவுப்பூர்வமாக ஆய்ந்து தேர்ந்துகொள்ள முடியும். இதுவே மனுக்குலம் பெற்றிருக்கின்ற விருப்புரிமை. இந்த விருப்புரிமையின் அடிப்படையில் நாம் அனைத்திலும் இறைவனை மட்டுமே தெரிந்துகொண்டால் வாழ்க்கை எத்துணை இனிமையாக இருக்கும் என்று, இறைவனைத் தெரிந்துகொள்ள நம்மை அழைக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

இன்றைய முதல் வாசகத்தில் யோசுவா செக்கேமில் உடன்படிக்கையைப் புதுப்பிக்கின்றார். உடன்படிக்கையைப் புதுப்பிக்கும் முன் மக்களைத் தூய்மைப்படுத்தும் சடங்கு நடக்கிறது. யோசுவா மோசேயின் சாயலாக இரு நிலைகளில் முன்மொழியப்படுகின்றார்: முதலில், மோசே இஸ்ரயேல் மக்களைப் பாதம் நனையாமல் செங்கடலைக் கடக்கச் செய்தது போல, யோசுவா அவர்களைப் பாதம் நனையாமல் யோர்தான் ஆற்றைக் கடக்கச் செய்கின்றார். இரண்டாவதாக, மோசே ஆண்டவராகிய கடவுளுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் நடுவே நின்று உடன்படிக்கையை நிறைவேற்றியது போல, செக்கேமில் ஆண்டவராகிய கடவுளுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் நடுவே நின்று உடன்படிக்கையைப் புதுப்பிக்கின்றார். மோசே உடன்படிக்கை செய்யும்போது புறத்தூய்மையை வலியுறுத்துகின்றார். ஆனால், யோசுவா அகத்தூய்மையை வலியுறுத்துகின்றார்.

சிலைவழிபாட்டிலிருந்து மக்கள் தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்பதே யோசுவாவின் அழைப்பு. லாபான் வீட்டிலிருந்து தப்பி ஓடி வருகின்றார் யாக்கோபு. அவரை விரட்டி வருகின்ற லாபான் தன் வீட்டுச் சிலைகளை அவர் தூக்கி வந்ததாகக் குற்றம் சுமத்துகிறார். வீட்டுச் சிலைகளைத் தூக்கி வந்தது ராகேல். சிலைகள் வைத்திருந்த சாக்கின்மேல் அமர்ந்துகொண்டு தனக்கு மாதவிலக்கு உள்ளதாகச் சொல்லி, அந்தச் சாக்கையும் சிலைகளையும் காப்பாற்றுகின்றாள். அன்று தொடங்கி இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்படும் வரை சிலைகள் அவர்களுக்குப் பெரும் கண்ணியாக இருக்கின்றன. இஸ்ரயேல் மக்கள் யாவே என்ற ஏகக்கடவுளை வழிபடுமுன் ஏகப்பட்ட கடவுளர் நம்பிக்கையே கொண்டிருந்தனர். அவர்களால் மற்ற தெய்வங்களை எளிதாக விட இயலவில்லை. குறிப்பாக கானான் நாட்டில் விளங்கிய வளமை வழிபாடு அவர்களை மிகவும் ஈர்த்தது. நிலத்தின் வளமைக்கும், கால்நடைகளின் பலுகுதலுக்கும், பயிர்களின் விளைச்சலுக்கும் எனக் கானானியர் கடவுளர்களை வைத்திருந்தனர். இஸ்ரயேல் மக்கள் கானான் நாட்டில் தங்கத் தொடங்கியபோது விவசாய சமூகமாக உருவெடுத்ததால் மற்றவர்களின் வளமை வழிபாட்டிலும் பங்கேற்பதை அவர்களால் நிறுத்த முடியவில்லை. இந்தப் பின்புலத்தில்தான், 'யாருக்கு ஊழியம் புரிவீர்கள்?' என்று கேட்கின்றார் யோசுவா.

'ஊழியம் புரிதல்' என்பது விடுதலைப் பயண நூலில் மிக முக்கியமான வார்த்தை. ஏனெனில், எகிப்தில் பாரவோனுக்கு ஊழியம் புரிந்துகொண்டிருந்த மக்களைத் தனக்கு ஊழியம் புரியமாறு அழைத்துச் செல்கின்றார் ஆண்டவராகிய கடவுள். ஆண்டவருக்கு ஊழியம் புரிவதை விடுத்து மற்ற தெய்வங்களுக்கு ஊழியம் புரிவது 'பிரமாணிக்கமின்மை' அல்லது 'விபசாரம் செய்தல்' என்ற பெரிய பாவமாகக் கருதப்பட்டது. இஸ்ரயேல் மக்கள் இரு நிலைகளில் உந்தப்பட்டு, 'நாங்கள் ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம்' என்று சொல்கின்றனர்: முதலில், தங்கள் தலைவராகிய யோசுவாவின் முன்மாதிரி. யோசுவா இங்கே ஒரு நல்ல தலைவராக இருக்கிறார். 'நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம்' என்று நிபந்தனைகள் எதுவுமின்றி முன்மொழிகின்றார். இரண்டாவது, இஸ்ரயேல் மக்கள் தங்கள் ஆண்டவராகிய கடவுள் எகிப்தில் செய்த வியத்தகு அடையாளங்களை எண்ணிப்பார்க்கின்றனர். ஏறக்குறைய இப்போது இரண்டாவது அல்லது மூன்றாவது தலைமுறையினர் இங்கே நிற்கின்றனர். தங்கள் மூதாதையர் தங்களுக்குச் சொன்னவற்றை நினைவுகூர்கின்றனர்.

ஆக, முதல் வாசகத்தில் தங்கள் சிலைகளை விடுத்து ஆண்டவராகிய கடவுளைத் தெரிந்துகொள்கின்றனர் இஸ்ரயேல் மக்கள்.

இரண்டாம் வாசகத்தில், எபேசு நகர திருஅவைக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் (பவுல்), புதிய இயல்பு, ஒளிபெற்ற வாழ்க்கை ஆகியவை பற்றிய கருத்துருக்களை முன்வைத்த பின்னர், குடும்ப உறவு பற்றிப் பேசுகின்றார். இது ஒரே நேரத்தில் குடும்ப வாழ்வு பற்றிய அறநெறிப் போதனையாகவும், திருஅவையியல் பற்றிய கருதுகோளாகவும் இருக்கிறது.

'திருமணமான பெண்களே, கணவருக்குப் பணிந்திருங்கள் ... திருமணமான ஆண்களே உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள்' என்ற போதனை பலருக்கு நெருடல் தருகின்ற பகுதியாக இருக்கின்றது. பெண்கள் ஏன் பணிந்திருக்க வேண்டும்? இது ஆணாதிக்க சிந்தனை என்று சில பெண்ணியவாதிகள் தங்கள் எதிர்ப்பைப் பல தளங்களில் பதிவு செய்கின்றனர். உண்மையில் இது பெண்ணடிமைத்தன அல்ல, பெண் விடுதலை சிந்தனையே. எப்படி? இந்தப் பாடத்தின் பின்புலத்தில் இருப்பது கிரேக்க-உரோமை குடும்ப வாழ்க்கை முறை. அந்த வாழ்க்கை முறையின்படி, 'பெண்' அல்லது 'மனைவி' என்பவர் கணவருடைய ஒரு உடைமை. அதாவது, கணவன் தனக்கென்று ஆடு, மாடு, வீடு, வைத்திருப்பதுபோல, 'பெண்' அல்லது 'மனைவியை' வைத்திருப்பார். மனைவிக்கென்று எந்தச் சொத்துரிமையும் கிடையாது. ஆக, பொருள் போலக் கருதப்பட்டு பயன்படுத்தப்பட்ட பெண்ணை, ஆள் போலக் கருதி அன்பு செய்யுமாறு பணிக்கின்றார் பவுல். தன்னை அன்பு செய்கிற ஆணின்மேல் உரிமை கொண்டாடும் பெண், அந்த உரிமையை மதிப்பு என்று பதிலிறுப்பு செய்ய வேண்டும். ஆக, ஆணின் உரிமை அன்பு என்றும், பெண்ணின் உரிமை பணிவு என்றும் வெளிப்படுகின்றது.

இந்த உறவுக்கு உதாரணமாக, கிறிஸ்துவைக் கணவர் என்றும், திருச்சபையை மனைவி என்றும் உருவகிக்கின்றார் ஆசிரியர். கிறிஸ்து திருச்சபைக்காகத் தன்னையே ஒப்புவிக்கின்றார். அத்தகையே தற்கையளிப்பை கணவர் மனைவிக்குத் தர வேண்டும். மேலும், அத்திருச்சபை கறைதிறையோ, வேறு எக்குறையோ இல்லாமல் இருப்பதுபோல மனைவியும் பிளவுபடா உள்ளத்துடன் தன் கணவருக்குப் பணிந்திருக்க வேண்டும். கணவரின் உடைமை அல்ல மனைவி. மாறாக, அவருடைய உடல் என்று வரையறுக்கின்ற ஆசிரியர், இதில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது என்று வியக்கின்றார்.

ஆக, திருச்சபையின் நம்பிக்கையாளர்கள் ஆண்டவரைத் தெரிந்துகொள்கிறார்கள் என்றால், ஆண்டவரின் தற்கையளிப்பை உணர்கிறார்கள் என்றால், அதை அவர்கள் தங்கள் குடும்ப உறவில் காட்ட வேண்டும்.

நற்செய்தி வாசகத்தில், நாம் கடந்த நான்கு வாரங்களாகக் கேட்டு வந்த, 'வாழ்வுதரும் உணவு நானே' என்னும் இயேசுவின் பேருரை நிறைவுக்கு வருகின்றது. பேருரையின் இறுதியில், கேட்டுக்கொண்டிருந்த மக்கள் முடிவெடுக்க வேண்டும். மத்தேயு நற்செய்தியில் மலைப்பொழிவின் இறுதியில், 'இருவகை அடித்தளங்கள்' உருவகத்தின் வழியாக, தன் சீடர்கள் எவ்வகையான அடித்தளத்தைத் தெரிவு செய்கிறார்கள் என்ற கேள்வியை விடுக்கிறார் இயேசு. அவ்வாறே, இங்கும் தன் சீடர்கள் தன்னைத் தெரிவு செய்கிறார்களா? இல்லையா? என்ற கேள்வியை முன்வைக்கின்றார் இயேசு. 'வாழ்வுதரும் உணவு' பேருரையின் தொடக்கத்தில் ஐயாயிரம் பேர் இருந்தனர். பின்னர் அது ஒரு சிறிய கூட்டமாக மாறுகிறது. பின் தொழுகைக்கூடத்தில் உள்ள சிறிய குழுவாக மாறுகிறது. தொடர்ந்து இயேசுவின் சீடர்கள். இறுதியில் பன்னிரு திருத்தூதர்களுடன் பேருரை நிறைவு பெறுகிறது. அகன்ற இடத்தில் தொடங்கும் உரை, குறுகிய இடத்தில் முடிகிறது. அப்படி முடியும் உரை வாசகரின் உள்ளம் நோக்கி நகர்கிறது. அதாவது, தனது வாசிப்பின் இறுதியில் வாசகர், இயேசுவைத் தெரிந்துகொள்கிறாரா அல்லது இல்லையா என்பதை அவரே முடிவுசெய்ய வேண்டும்.

இயேசுவின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கின்ற சீடர்கள், 'இதை ஏற்றுக்கொள்வது கடினம். இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?' என்று இடறல்படுகின்றனர். மூன்று காரணங்களுக்காக இயேசுவை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை: ஒன்று, நாசரேத்தூரில் பிறந்த ஒருவர் தன்னையே எப்படி வானினின்று இறங்கி வந்த உணவு என்று சொல்ல முடியும்? என்ற இடறல். இரண்டு, இயேசுவைப் பின்பற்றுவதால் உடனடி பரிசு அல்லது வெகுமதி என்று எதுவும் இல்லை. மூன்று, அவர்கள் இயேசுவின்மேல் வைத்திருந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஏமாற்றங்களாக முடிகின்றன. 'வாழ்வு தருவது தூய ஆவியே. ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது' என்ற மிக அழகான வாக்கியத்தை மொழிகின்றார் இயேசு. அதாவது, காணக்கூடிய இயல்பு மறையக்கூடியது. காணாதது நிலையானது. அவர்கள் இயேசுவின் உடலை மட்டுமே கண்டு, அந்த உடலின் சதையை நினைத்து இடறல்பட்டனர். 'வார்த்தை மனுவுருவானர்' என்பதை அவர்கள் காணவில்லை.

ஆனால், பேதுரு அதைக் கண்டுகொள்கின்றார். 'நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?' என்று இயேசு பன்னிருவரைக் கேட்டவுடன், 'ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்?' என்று தன் கேள்வியால் விடை அளிக்கின்றார் பேதுரு. மேலும், 'வாழ்வுதரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன' என்கின்றார். ஆக, பேதுரு இயேசுவில் வார்த்தையைக் காண்கின்றார். வார்த்தை மனுவுருவாயிருப்பதைக் காண்கின்றார். தொடர்ந்து, 'நீரே கடவுளின் தூயவர் அல்லது கடவுளுக்கு அர்ப்பணமானவர்' என்ற நம்பிக்கை அறிக்கை செய்கின்றார்.

ஆக, இயேசுவின் போதனை கேட்டு இடறல்பட்டு, அவரை விட்டு விலகிய சீடர்கள் ஒரு பக்கம். இயேசுவை மட்டுமே தெரிந்துகொண்ட பன்னிருவர் இன்னொரு பக்கம்.

இவ்வாறாக,

முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரைத் தெரிந்துகொள்கின்றனர். தங்கள் சிலைகளை விடுகின்றனர்.

இரண்டாம் வாசகத்தில், எபேசு நகர மக்கள் ஆண்டவரைத் தெரிந்துகொள்கின்றனர். தங்கள் குடும்ப உறவுகளில் உள்ள வேறுபாட்டையும், மேட்டிமை உணர்வையும் களைகின்றனர்.

நற்செய்தி வாசகத்தில், பன்னிரு திருத்தூதர்கள் ஆண்டவரைத் தெரிந்துகொள்கின்றனர். அவரிடம் வாழ்வையும் தூய்மையையும் கண்டுகொள்கின்றனர்.

இன்று நாம் ஆண்டவரைத் தெரிந்துகொள்கின்றோமா?

நம் தெரிவு வழக்கமாக மூன்று விதிமுறைகளால் கட்டப்படுகின்றது: (அ) இன்பம்-வலி. இன்பமான ஒன்றைத் தெரிவு செய்து துன்பமான மற்றொன்றை விட்டுவிடுவது. (ஆ) நன்மை-தீமை. நன்மையானதைப் பற்றிக்கொண்டு தீமையானதை விட்டுவிடுவது. (இ) பரிசு-தண்டனை. நமக்குப் பரிசாக உள்ளதை எடுத்துக்கொண்டு, தண்டனை போல இருப்பதை விட்டுவிடுவது.

கடவுளைத் தெரிந்துகொள்தல் வலி தருவதாலும், உடனடி பரிவு எதுவும் இல்லாததாலும் அவரை நாம் தெரிந்துகொள்ள மறுக்கின்றோம். அல்லது தெரிந்துகொள்வதைத் தள்ளி வைக்கின்றோம். நன்மை-தீமை என்ற தளத்தில் இயங்கும்போது மட்டுமே நம்மால் அவரைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

நாம் நம்மை அறியாமல் தூக்கி வருகின்ற குட்டி தெய்வங்கள், நம் உள்ளத்தில் உள்ள மேட்டிமை உணர்வு, அல்லது கடவுள் பற்றிய முற்சார்பு எண்ணம் ஆகியவற்றால் நாம் அவரைத் தெரிந்துகொள்ள மறுக்கின்றோம்.

தெரிவு செய்தல் என்பது மூன்று நிலைகளில் நடக்க வேண்டும்: ஒன்று, நம் முன் இருப்பவற்றைச் சீர்தூக்கிப் பார்ப்பது. இரண்டு, அல்லவை விடுத்து நல்லவை பற்றுவது. மூன்று, அந்தப் பற்றுதலில் நிலைத்து நிற்பது.

தெரிவுகளே நமக்கு ஆற்றல் தருகின்றன. தெரிவுகள் பலவாக இருக்கும்போது நம் ஆற்றல் சிதைந்து போகிறது. ஒன்றைத் தெரிந்தால், நன்றைத் தெரிந்தால் ஆற்றல் சிதைவு மறைந்து பொறுப்புணர்வு கூடும். நம் தெரிவுக்கு நாமே பொறுப்பு. அந்தப் பொறுப்புணர்வே நமக்கு ஆற்றல் தருகிறது. அந்த ஆற்றல் நம்மை தலைசிறந்த மனிதர்களாக வாழவும், மகிழ்ச்சியுடனும் அமைதியுடனும் ஒருவர் மற்றவருடன் இணைந்து வாழவும் தூண்டுகிறது.

ஆண்டவரைத் தெரிந்துகொள்தல் என்பது நம்மையே தெரிந்துகொள்ளும் புதுப்பிறப்பு போன்றது. அகுஸ்தினார் ஆண்டவரைத் தெரிந்துகொண்ட அன்று தான் தன்னையே தெரிந்துகொண்டார்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இறைவார்த்தையை நம் வார்த்தைகளில் பிரதிபலிக்கத் தயாரா?

மாலா என்பவருக்கு மாலதி, லதா என இரண்டு தோழிகள் இருந்தனர். இருவரிடமுமே அவர் நன்றாகப் பேசுவார்,பழகுவார். ஆனால் தனக்கு ஏதாவது துன்பம் வந்தால் இருவருள் லதாவிடம் மட்டுமே சென்று தன் துன்பத்தைப் பகிர்வார். ஒருமுறை லதா, மாலாவிடம் "நீ ஏன் துன்பங்களை மாலதியோடு பகிர்ந்து கொள்ளவதில்லை " எனக்கேட்ட போது மாலா " உன்னுடன் பகிர்ந்து கொள்ளும் போது உன்னுடைய வார்த்தைகளும் ஆலோசனைகளும் எனக்கு ஆறுதலாக இருப்பதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். ஆகவேதான் நான் உன்னிடம் பகிர்ந்து கொள்வதையே விரும்புகிறேன் " என பதிலளித்தார்.

ஆம் அன்புக்குரியவர்களே வார்த்தை என்பது ஒரு பெரிய ஆயுதம். ஒருவரின் துயர நேரத்தில் கூறப்படும் கனிவான வார்த்தைகள் ஆற்றுப்படுத்தும். குழப்ப நேரத்தில் கூறப்படும் அறிவுரை கலந்த வார்த்தைகள் வழிநடத்தும். கோபமான நேரத்தில் கூறப்படும் சாந்தமான வார்த்தைகள் அமைதியைக் கொணரும். சோர்ந்த நேரத்தில் கூறப்படும் தைரியமான வார்த்தைகள் பலப்படுத்தும்.காயப்பட்டோரின் நெஞ்சிற்கு மருந்தாகவும் அவ்வார்த்தைகள் அமையும். இவ்வாறாக நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

அதே வேளையில் வார்த்தைகள் மனதைக் குத்திக்கிழிக்கும் வாளாகவும் மாறக்கூடும். இதையே "ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொல்லும்." என நம் முன்னோர்கள் கூறுவது வழக்கம்.

மனிதர்களுடைய வார்த்தைகள் சிலசமயம் வெல்வதாகவும் சில சமயம் கொல்வதாகவும் இருக்கலாம். ஆனால் இறைவனின் வார்த்தைகளோ அவ்வாறு அல்ல. அவை எப்போதும் வாழ்வை வழங்குவதாகவே திகழ்கின்றன. சிலசமயங்களில் அவை கொல்வதைப்போலத் தோன்றினாலும், அது உண்மையான மனமாற்றத்திற்கு வித்திட்டு புதுவாழ்வுக்கு வழிகாட்டுவதாகவே அமைகின்றன. இதை உள்ளூர உணர்ந்ததாலேயே பேதுரு "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. " என அறிக்கையிட்டார்.

ஆனால் இறைவார்த்தையின் உண்மைப் பொருளை உணர இயலாதவர்களோ இயேசுவை விட்டு நீங்கிச்சென்றனர். அதனால் இயேசுவின் வார்த்தைகள் வழங்கிய வாழ்வுதரும் ஆவியை அவர்களால் அனுபவிக்க இயலவில்லை.

அன்பு நண்பர்களே இன்றைய இந்நற்செய்தி மூலம் நாம் இறைவார்த்தையை ஆழமாகத் தியானித்து வாழ்வு தரும் ஆவியை ஆழமாக அனுபவிக்க அழைக்கப்பட்டுள்ளோம். நம் வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளிலும்,இன்ப துன்ப வேளையிலும் ஏன் எல்லா நொடிப்பொழுதும் இறைவார்த்தையை நம்பி அதன்படி வாழ்கின்ற போது இயேசு தரும் நிலைவாழ்வை நாம் பெறமுடியும்.

அதேபோல நாம் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையும் பிறருக்கு வாழ்வளிப்பதாக இன்னும் சிறப்பாகச் சொல்லப்போனால் இயேசுவின் வாழ்வளிக்கும் வார்த்தைகளை ஒத்ததாக இருக்க வேண்டும். நாம் எந்த அளவுக்கு இறைவார்த்தைக்குள் வாழ்கிறோமோ அந்த அளவுக்கு நமது வார்த்தைகளில் இறைவார்த்தை பிரதிபலிக்கும் என்ற ஆழமான உண்மையை உணர்வதே இன்றைய வழிபாடு நமக்கு விடுக்கும் உயரிய அழைப்பு. இவ்வழைப்பை உணர்ந்தவர்களாய் இறைவார்த்தையை ஆழமாகத் தியானிக்கவும், நம் வார்த்தையில் இறைவார்தையை பிரதிபலிக்கவும் நம்மையே தயாரிப்போம். அதற்கான இறையருளை வேண்டுவோம்.

இறைவேண்டல்
நிலைவாழ்வு தரும் வார்த்தையாம் இறைவா!
எம் வார்த்தைகள் உம் வார்த்தைகளைப் போல் வாழ்வளிப்பவையாக மாற அருள் தாரும். ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

சார்ந்து நிற்பதா? சாய்ந்து விழுவதா?

அயல்நாட்டில் பிறந்து அன்பர் இயேசுவால் அழைக்கப்பட்டு, அழைத்தலுக்குள் அழைப்பு பெற்ற கொல்கத்தா நகர புனித அன்னை தெரசா தன் வாழ்வின் எல்லா நிலைகளிலும் யாரை அவர் சார்ந்து வாழ்ந்துள்ளார் என்பதை பல இடங்களில் நாம் வாசித்திருக்கின்றோம். படங்களின் வழியாக பார்த்திருக்கின்றோம். பிறர் சொல்லியும் கேள்விப்பட்டிருக்கின்றோம். அப்படியாக அன்னை தெரசாவின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வினை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். பணக்காரர் ஒருவர் அன்னை தெரசாவைச் சந்திப்பதற்காக அவர் இல்லம் தேடி வந்தார். அவர் குழந்தைகளைப் பேணி வளர்க்கும் சிசுபவனில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான பொருள்களையும், ஒரு குறிப்பிட்ட பரப்பளவு உள்ள நிலத்தையும் கொடுத்துவிட்டு செல்வதற்காக வந்திருந்தார். அந்நேரம் அன்னை அவர்கள் நற்கருணை ஆண்டவர் முன் செபித்துக்கொண்டிருந்தார். அங்கிருந்த அருள்சகோதரி சற்று காத்திருங்கள், அன்னை இப்போது வந்துவிடுவார் என்றார். கொஞ்சம் கழித்து அவர் சொன்னதுபோன்றே அன்னை வந்தார், அவரைச் சந்தித்தார். அப்பணக்காரரும் விரிவாக நான் ஏன் வந்தேன் என்று சொன்னார். அவரிடம் அன்னை சற்று பொறுங்கள், இதோ வருகிறேன் என்றுச் சொல்லிவிட்டு மீண்டுமாக நற்கருணை ஆண்டவரிடம் செபிக்க சென்றார். செபித்துவிட்டு வந்து சொன்னார்: 'தோழரே, உங்கள் தாராள உள்ளத்திற்கு நன்றி. கடவுள் இது வேண்டுமென்று என்னிடம் சொல்கிறார். எச்சரிக்கிறார். எனவே இந்நிலம் எங்களுக்கு வேண்டாம்' என்று சொல்கிறார். அப்போது அவரின் இல்லத்திலிருந்து அருள்சகோதரி ஒருவர், 'அன்னையே ஏன் இந்த நிலத்தை வேண்டுமென்று சொல்லிவிட்டீர்கள்' என்று கேட்டார். அதற்்கு அன்னை தெரசா அவர்கள்: 'நான் வேண்டாமென்று சொல்லவில்லை. கடவுள் சொன்னார்' என்றார். மேலும், 'நான் இருப்பதும், இயங்குவதும், இயல்பாய் நடப்பதும் யாரால் என்று நினைக்கிறீர்கள், நான் சார்ந்திருக்கும் இயேசுவின் தயவால்தான் நடக்கிறது' என்று மனநிறைவோடு பதில் சொல்லிவிட்டு, இப்படியாய் அச்சகோதரியிடம் சொன்னார்: 'நான் சார்ந்து நிற்கிற ஆண்டவராகிய இயேசு கிறித்து நான் சாய்ந்து விடாமல் காப்பார். அவரை மட்டுமே நான் சார்ந்து நிற்க ஆசைப்படுகிறேன்'.

இறைஇயேசுவில் இனியவர்களே,
இன்றைய வாசகங்கள் மூன்றுமே முத்தான ஒரே ஒரு கேள்வியை மட்டும்தான் நம்மிடம் எழுப்புகின்றது. அது என்னவென்றால், நாம் சார்ந்து நிற்பது யாரை? இதற்கான விடையைத் தேடத்தான் அழைப்பு கொடுக்கிறது இந்த ஞாயிறு கொண்டாட்டம். மனிதர்களாகிய நாம் பிறப்பு தொடங்கி நம் வாழ்வின் முடிவு வரை யாரைச் சார்ந்து நிற்கிறோம் என்பதை அறிந்துகொண்டாலே போதும் நாம் எத்தகைய வாழ்வை நடத்துகின்றோம் என்பது புரியும். மனிதர்களாகிய நாம் கடவுளைச் சார்ந்து வாழ்வதற்காகவே படைக்கப்பட்டுள்ளோம். ஆனால் இது நடைமுறை வாழ்க்கையில் சாத்தியமாக இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டிய கடமை நமக்குண்டு. இன்று நாம் வாசித்து தியானிக்கின்ற முதல் வாசகமும், நற்செய்தி வாசகமும் நாம் யாரைச் சார்ந்து வாழ வேண்டுமென்பதையும், அப்படி சார்ந்து வாழ்க்கையில் நம் வாழ்வு எதன் அடிப்படையில் அமையும் என்பதை இரண்டாம் வாசகமும் மிகத் தெளிவாக நமக்குப் பயிற்றுவிக்கிறது.

முதல் வாசகத்தில்,
யோசுவா செக்கேமில் இஸ்ரயேல் மக்களின் பன்னிரண்டு குலங்களை அழைத்து நாம் அனைவரும் யாருக்கு ஊழியம் புரிய வேண்டுமென்ற படிப்பினையை வழங்குகிறார். நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம் என்று அவர் சொல்லும்போது மற்றவர்களும் அத்தகைய பார்வையைப் பெறுகின்றனர். நீங்கள் வேற்றுத்தெய்வங்களுக்கும், உங்கள் நாட்டிலுள்ள எமோரியரின் தெய்வங்களுக்கும் ஊழியம் புரிவது தவறு என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் யோசுவா. இதன் மூலம் நமக்கு கொடுக்கும் செய்தி என்னவென்றால், நீங்கள் யாருக்கு ஊழியம் புரிகிறீர்களோ, அவரைத்தான் சார்ந்து வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். எனவேதான் இஸ்ரயேல் மக்கள் நாங்கள் ஆண்டவரையே சார்ந்து நிற்கிறோம் என்பதை தங்கள் செயலால் நிரூபிக்கிறார்கள். எப்படி, வேற்றுத் தெய்வங்களை வணங்குவது எங்களிடத்தே அறவே நிகழாதிருப்பதாக! என்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் இரண்டு காரணங்களைச் சொல்கின்றனர்.

அடிமைத்தனத்திலிருந்து கொடுக்கப்பட்ட விடுதலை
கடவுளே எங்களைக் காத்தார் என்ற நம்பிக்கை
இதன் அடிப்படையில்தான் இஸ்ரயேல் மக்கள் கடவுளைச் சார்ந்து வாழ்வதை தங்கள் நெறியாக கொண்டனர். அவரைச் சார்ந்து இருப்பதால்தான் நாங்கள் உயிருடன் இருக்கிறோம் என்று சொல்லும் அளவிற்கு அவர்களின் செயல்பாடு நிகழ்ந்தது.

நற்செய்தி வாசகத்தில்,
இயேசுவின் போதனையைக் குறித்து அதிருப்தி அடைந்த மக்கள், சீடர்கள், அவரின் நற்செய்தி அறிவிப்பைக் குறித்து இடறல் படுகின்றனர். யோவான் 6:51 'விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வுதரும் உணவு நானே… உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்' என்று தன்னை உணவாக கொடுத்து, இதைச் சார்ந்து வாழ்வோர் என்றுமே வாழ்வை அடைவர் என்று போதிக்கும் இயேசு, யார் ஒருவர் என்னைச் சார்ந்து வருகிறாரோ அவர் எப்பக்கமும் சாயாமல் நிற்பர் என்ற உறுதித்தன்மையைக் கொடுக்கிறார். இன்றைய நற்செய்தியில் இயேசு மிக அருமையாக ஒரு செய்தியைக் கொடுக்கிறார், 'நம்பாதோர் யார், யார் என்பதும், தம்மைக் காட்டிக்கொடுக்கவிருப்பவன் யார் என்பதும் இயேசுவுக்குத் தொடக்கத்திலிருந்தே தெரிந்திருந்தது' (யோவான் 6:64). இவ்வார்த்தை வெளிப்படுத்தும் அழகான உண்மை என்னவென்றால், யார் என்னைச் சார்ந்து நிற்பார்கள், என்னைச் சாய்க்கிறோம் என்று தங்களைத் தாங்களாகவே சாய்த்து கொள்ளப் போகிறவர்கள் யார் என்பதையும் தெளிவாய் அறிந்து வைத்திருந்தார் இறைமகன் இயேசு. அத்தகைய சூழலில்தான் மாற்கு 3:13-15 வரையுள்ள இறைவார்த்தையில் நாம் காண்பதுபோன்று, தம்மோடு இருக்கவும், நற்செய்தியைப் பறைசாற்றவும், பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும்
இயேசுவால் அழைக்கப்பட்ட தம் திருத்தூதர்களைப் பார்த்து: 'நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?' என்ற கேள்வியைக் கேட்டு இயேசு, நீங்கள் என்னைச் சார்ந்து நிற்கிறீர்களா? அல்லது சாய்ந்து விழ துடிக்கிறீர்களா? என்ற சிந்தனைக்குரிய கேள்விக்கு விடை தேட உள்ளார்ந்த தேடலை உசுப்பிவிடுகிறார் தம் திருத்தூதர்களிடத்தில்… அதற்கு பேதுரு நாங்கள் உம்மைச் சார்ந்து வாழவே உம்மைப் பின்தொடர்கிறோம் என்றவாறு, 'ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அதை நம்புகிறோம்' என்று பதில் மொழி கொடுக்கிறார். இது எதைக் காட்டுகிறது என்றால், ஆண்டவரே யார் எப்படிச் சாய்ந்து விழுந்தாலும், கடைசிவரை நாங்கள் உம்மைச் சார்ந்தே வாழ்வோம் என்பதன் உறுதிப்பாடு.

இப்படியாக ஒருவர் ஆண்டவரைச் சார்ந்து வாழ்ந்தால் அவர் இரண்டு காரியங்களைச் செய்ய தயங்கமாட்டார் என்பதை புனித பவுல் இரண்டாம் வாசகத்தில் கூறுகின்றார். அது எதுவெனில், 1. அன்புச் செய்வது, 2. பணிந்து நடப்பது. யார் ஒருவர் ஆண்டவரைச் சார்ந்து வாழ்கிறோரோ அவர் நிச்சயமாய் ஆண்டவரை அன்புச்செய்வார் மற்றும் அவரின் வார்த்தைகளுக்கு பணிந்து நடப்பார். அவரின் வார்த்தைகளுக்கு செவிகொடுப்பார். எனவே, திருஅவை, திருமணமான ஆண், திருமணமான பெண் இந்த மூன்று உருவகத்தை வைத்து ஆண்டவர் சார்ந்து வாழ்ந்தால் அன்பும், பணிவும் அவசியம் என்பதையும், சாய்ந்து விழுவதற்கு பகைமையும், எதிர்த்து நிற்பதும் எதார்த்தமாய் எழும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றார். சிந்தித்துப் பார்ப்போம். நாம் ஆண்டவரைச் சார்ந்து நிற்கிறோமா அல்லது ஆண்டவரை விடுத்து மற்றவற்றில் சாய்ந்து நிற்கிறோமா என்பதைப் பின்வரும் அடையாளங்களின் வழியாகக் கண்டுகொள்வோம்:

செல்வம்:
இதைச் சார்ந்து நிற்பவரும் உண்டு. இதில் சாய்ந்து விழுபவரும் உண்டு. இங்கே ஒப்பற்ற செல்வமாய் இருக்கும் இயேசுவை (பிலி 3:8) நான் சார்ந்து நின்று அவரே என் ஒப்பற்ற செல்வம் என்று கூற போகிறானா அல்லது மண்ணுலகில் புூச்சியும் துருவும் அழிக்கும் செல்வத்தை வைத்து கொள்ளப்போகிறேனா?

2. ஊனியல்பு செயல்கள்:
புனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் தூய ஆவியின் கனிகளைக் குறித்து பேசுகின்ற போது, ஆவியின் கனிகள் நம்மில் இருப்பதற்கு தடையாக இருக்கும் ஊனியல்பின் இச்சைக்குரிய காரியங்களைப் பட்டியல் இடுகின்றார். கலா 5:19-20 வரையுள்ள இறைவார்த்தைகளில் யாருவது ஒருவர் சார்ந்து வாழ விரும்பினால் அவர் ஊனியல்பின் செயல்களில் சாய்ந்து நிற்பார். சரிந்து சாய்ந்து வாழ்வில் விழுவார். ஆவிக்குரிய இயல்பு நம்மில் இருந்தால் நாம் ஆண்டவரைச் சார்ந்து வாழ்வோம். இல்லையென்றால் சரிந்தே நிற்போம். சாய்ந்து விழுவோம்.

3. நல்லதைத் தேர்ந்தெடுத்தல்:
எவ்வளவு துன்பம் நம்மில் வந்தாலும், எப்படிப்பட்ட வேதனையை நாம் அனுபவித்தாலும் ஆண்டவரைச் சார்ந்து நின்றோமானால் நாம் நல்லதை மட்டுமே தேர்ந்தெடுக்க ஆசைப்படுவோம். எப்போது நாம் நல்லதை மறுப்போமென்றால், நாம் நல்லதை நாடாத போதுதான், உதாரணமாக, பொய்யைத் தேடினால் உண்மை இருக்காது. களவானித்தனமாய் இருந்தால் கை சுத்தம் இருக்காது, திமிராய் திரிந்தால் பணிவு இருக்காது, ஏமாற்றினால் ஏற்றம் இருக்காது, தொழில் முன்னேற்றம் அடையாது. இப்படிச் செய்கையில் என்ன நிகழும், ஒன்று நாம் சரிந்து விழுவோம். இன்னொன்று மேற்சொன்ன தீயக் காரியங்களுடன் கைகோர்த்து சாய்ந்து நிற்போம்். இதைத்தான், பிலி 4: 8-9இல் மிகத் தெளிவாக எடுத்துரைத்து, 2தெச 2:17இன் படி 'உங்கள் உள்ளங்களுக்கு ஊக்கமளித்து, நல்லதையே சொல்லவும், செய்யவும் உங்களை உறுதிப்படுத்துவார்களாக!' என்று புனித பவுல் நமக்கு பயிற்றுவிக்கிறார்.

இத்தகைய சிந்தனைகளையெல்லாம் இதயத்தில் இருத்தி நம்முடைய இயல்பு வாழ்க்கையைச் சோதித்து பார்ப்போம். இறைமகன் இயேசுவைச் சார்ந்து நிற்போர், அவரின் சாவில் பங்கேற்று மாட்சியைப் பெறுகிறோம். அவரைச் சார்ந்து நில்லாதோர் சாய்ந்து நின்று, சரிந்து விழுகிறோம். சாத்தானின் கையைப் பிடித்து அவர் சார்பாய் செயல்படுகிறோம். ஆகவே இவற்றிலிருந்து நாம் விடுபட்டு, இறுதி மூச்சு வரை இறைவனின் கரத்தைப் பிடிப்போம். ஆண்டவரையே சார்ந்து வாழ்வோம்!

ser
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு