மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக் காலத்தின் 18-ஆம் ஞாயிறு
இரண்டாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
விடுதலைப் பயண நூல் 16: 2-4, 12-15|எபேசியர் 4: 17, 20-24 |யோவான் 6:24-35

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்
நிலையான இன்பம்

அன்றொரு நாள் பள்ளி மாணவர்கள் உரையாடிக் கொண்டிருப்பதைக் காது கொடுத்துக் கேட்டேன். நான் தாமிரபரணி ஆற்றிலே மூழ்கிக் குளிப்பதில் தான் இன்பமும், சுகமும் காண்கின்றேன் என்றான் ஒரு மாணவன். இல்லை . மூழ்குவதால் நாமும் மூழ்கி உள்ளே சிக்கி மடிவோம். மாறாக குற்றால அருவியிலே தலை நீட்டி குளிப்பதில் தான் எனக்கு இன்பமும் சுகமும் உண்டு என்றான் இன்னொருவன். இதில் எனக்கு இன்பம் இல்லை. ஏனெனில் ஓடி வருகின்ற அருவியில் மின்சாரம் பாய்ந்து வருவதால் அது என் உடலைத் தாக்கும். எனவே என் வீட்டில் உள்ள குழாயில் பூப்போல் விழுகின்ற நீரிலே குளிப்பதில் தான் எனக்கு இன்பமும் சுகமும் உண்டு என்றான் மூன்றாம் மாணவன்.

இந்த வேறுபட்ட பதில்களைத் தருவது என்ன? நிலையற்ற உலகில் மனிதன் அடையும் இன்பமும் நிலையற்றவைதானே! மனிதன் பசியாக இருப்பதை நன்றாக உணருகின்றான். ஆனால் அந்த பசியும் தாகம் உண்டாக்கும் உண்மை நிலை என்ன என்பதை அறிய முடியாதவனாக வாழ்கின்றான். வயிராற உண்டால் பசி மாறிவிடும் என நினைக்கிறான் ஒருவன். போதை வர குடித்தால் போதும் என நினைக்கிறான் ஒருவன். சிற்றின்ப வாழ்விலே மூழ்கிவிட்டால் பேரின்பம் காண்பேன் எனக் கனவு காண்கின்றான் இன்னொருவன். ஏன் ! பணம் திரட்டி பொருள் சேர்ப்பதில் தான் இன்பம் காண்பேன் என நினைக்கிறான் இன்னும் ஒருவன். ஆனால் இவையனைத்தும் இன்று மனிதனுக்கு நிறைவு தருவதில்லையே! யோவான் நற்செய்தி 6:27 - இல் அழிந்துபோகும் உணவுக்காக உழைக்காதீர்கள். முடிவில்லா நிலையான வாழ்வு தரும் உணவிற்காக உழையுங்கள். அன்று வனாந்தரத்தில் இஸ்ரயேல் மக்கள் மன்னாவை உண்டார்கள். ஆனால் மடிந்தார்கள். நான் தரும் உணவை உண்பவனோ என்றுமே வாழ்வான் என்றாரே இயேசு! எதைக் குறிப்பிட்டுச் சொன்னார்?

ஆயிரக்கணக்கான மின் விளக்குகள் அரங்கேற்றப்பட்ட இடம் அழகாகக் காட்சித் தரலாம். வெளிச்சம் மிகுதியாக இருக்கலாம். ஆனால் அவையனைத்தும், உதயமாகும் சூரியனுக்கு முன்னே எம்மாத்திரம்! இந்த இடத்தில் இயேசுவின் அமுத வார்த்தைகளை ஆணித்தரமாகக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். நானே வாழ்வு தரும் உணவு, என்னிடம் வருபவனுக்கு என்றுமே பசியிராது (யோவா. 6:35) என்பது இயேசு கூறிய உயிருள்ள வார்த்தைகள் என்பதை இன்று சிந்திக்க உங்களை அழைக்கிறேன்.

அன்றொரு நாள் ஆற்றங்கரை ஓரத்திலே தனிமையில் வாழ்ந்த முனிவர் விலையேறப்பெற்ற ஒரு வைரக்கல்லைக் கண்டெடுத்தார். இதைப் பார்த்த வழிபோக்கன், ஐயா முனிவரே இக்கல்லை எனக்குத் தாரும் என்று கேட்க முனிவரும் மனம் உவந்து உடன் கொடுத்தார். என்ன பைத்தியக்காரத்தனம் இந்த முனிவருக்கு. இதன் மதிப்பு தெரியாது தந்துவிட்டாரே என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான். சில வாரங்கள் சென்று அந்த முனிவர் மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்த்தான் இந்த வழிப்போக்கன். ஐயா! விலையேறப்பட்ட வைரக் கல்லைக் கொடுத்த நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்களே! ஆனால் வைரக் கல்லைப் பெற்ற நான் மகிழ்ச்சி இழந்து நிற்கிறேனே என்றான் கண்ணீர் நிறைந்த கண்களோடு. மகனே! இந்த உயிரற்ற வைரக் கற்களெல்லாம் உன் உள்ளத்திற்கு நிறைவு தராது என்றார் அந்த முனிவர்.

இதுதான் இயேசு சபையைத் தோற்றுவித்த புனித இஞ்ஞாசியார் நமக்குக் கற்றுத் தரும் பாடம். நான் மாவீரனாக விளங்கினால் உலகில் புகழோடு வாழ்வேன் என்று கனவு கண்ட இஞ்ஞாசியார், வெறுமையைத்தான் கண்டார். எனவே மனம் திரும்பினார் - திருந்தினார். இயேசுவைத் தன் உள்ளத்தில் அரியணை ஏற்றினார். வாழ்வில் நிறைவும் கண்டார். இவரைப் போல நாமும் வாழ்வு தரும் இயேசுவை அண்டி வருவோமா?

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

புதிய மனிதர்களாவோம்.

கடவுளுக்கு எற்றவர்களாக நம்மால் வாழ முடியுமா? (நற்செய்தி)

முடியும். அதற்கு முதலாவதாக நாம் நமது தவறுகளை நியாயப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

ஒல்லி உடம்புக்காரர் ஒருவர் தாடியுடன் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார். புதிதாக மணமான ஒருவன் அவரிடம் கேட்டான்:

'நீ சிகரெட் பிடிப்பாயா?' -  'மாட்டேன்'
'குடிப்பாயா?' 'மாட்டேன்'
'சூதாடுவாயா?' 'மாட்டவே மாட்டேன்'
'சரி என் வீட்டுக்கு வா. நூறு ரூபாய் தருகின்றேன்.'

மணவாளன் அவனது மனைவிக்கு முன்னால் பிச்சைக்காரரை நிறுத்தி, "கண்ணே ! சிகரெட் பிடிக்காதே, குடிக்காதே, சூதாடாதேன்னு அடிக்கடி சண்டை போடுறியே! ... இதெல்லாம் இவரு செய்கிறதில்லை! இவரு நிலையைப் பார்..." என்றான்.

நாம் செய்யும் தவறுகளை நியாயப்படுத்துவதற்கு ஆயிரம் உதாரணங்களைச் சுட்டிக்காட்டலாம். ஆயினும் நாம் செய்யும் தவறுகளை சரி என்று நியாயப்படுத்த முயற்சி செய்வது தவறு!

இரண்டாவதாக நமது தவறான சிந்தனைகள், சொற்கள், செயல்கள் ஆகியவற்றை விட்டுவிட முன்வர வேண்டும். சாதாரணமாகத் தவறுகள் நம்மைப் பிடித்துவைத்திருப்பதில்லை, நாம்தான் அவற்றை பிடித்துவைத்திருக்கின்றோம்.

நாம் ஒவ்வொருவரும் இறைவனின் அன்பார்ந்த மகனாக, மகளாக வாழ முற்படும் போது, கடவுளின் கட்டளைகளைப் பின்பற்ற முன்வரும் போது (முதல் வாசகம்), நமது மனம் மாறும்; நமது உள்ளம் உள்ளொளி பெறும்; அகத்தின் அழகு முகத்தில் தெரியும் (இரண்டாம் வாசகம்). மேலும் அறிவோம் :

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் (குறள் : 706).
பொருள் : தன்னை நெருங்கி வருபவரது வடிவத்தையும் வண்ணத்தையும் தெளிவாகக் காட்டுவது கண்ணாடி. அது போன்று ஒருவரது உள்ளத்தில் மிகுந்து தோன்றும் உணர்வை அவரது முகமே வெளிப்படையாகக் காட்டிவிடும்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

சர்க்கரை நோயாளி ஒருவர் டாக்டரிடம் செல்ல, டாக்டர் அவரிடம், "இரண்டு கப் சாதம் மட்டும் சாப்பிடுங்கள்' என்றார். அவர் டாக்டரிடம், இந்த இரண்டு கப் சாதத்தை எப்போது சாப்பிடுவது? சாப்பிடுவதற்கு முன்பா? அல்லது சாப்பிட்ட பிறகா?" என்று கேட்டாராம். அவருடைய பசியோ யானைப்பசி; இரண்டு கப் சாதம் அவருக்குச் சோளப்பொறி. யானைப் பசிக்கு சோளப்பொறி கட்டுப்படியாகுமா?

பல்வேறு பசிகள் மனிதரை வாட்டி வதைக்கின்றன; பசி வந்தாலே மானம், குலம், கல்வி, வன்மை , அறிவுடமை, தானம், தவம், முயற்சி, தாளாமை (வாக்கம்), காதல் ஆகிய பத்தும் பறந்துவிடும், இஸ்ரயேல் மக்களுக்குப் பாலை நிலத்தில் பசி வந்தவுடன் பத்தும் பறந்துவிட்டன. அதாவது பரமனுடைய பத்துக் கட்டளைகளும் பறந்து போய்விட்டன. எஞ்சி இருந்தது அவர்களுடைய வயிறும் வயிற்றுப் பசியுமே. பாலை லக்கில் பட்டினி கிடந்து சாவதைவிட, எகிப்து நாட்டில் வயிராற உண்டு அடிமைகளாக வாழ்வதையே விரும்பினர். எனவே, மோசேயிடம் செயயாட்டிற்காகக் கூப்பாடு போட்டனர். கடவுளும் அவர்களுக்கு 'மாயா' என்ற அற்புத உணவை, வானத்து உணவை அளித்தார்,

புதிய உடன்படிக்கையின் இணைப்பாளரும் புதிய மோசேயுமாகிய கிறிஸ்து ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு அற்புதமான முறையில் உணவளித்தார். யூதர்கள் தங்கள் முன்னோர்கள் உண்ட மன்னா என்ற உனவை நினைவு கூர்ந்தனர், இந்நிகழ்ச்சி மறு ஒலிபரப்பு என்று எண்ணினர், ஆனால் கிறிஸ்து நிகழ்ச்சி முற்றிலும் வேறுபட்டது. அழிந்துபோகும் உணவுக்காக அலையாமல் அழியாத உணவைத் தேடிட அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார். அவர்தான் நிலைவாழ்வளிக்கும், உண்மையான உயிருள்ள உணவு என்பதைச் சுட்டிக் காட்டுகிறார் (நற்செய்தி).

இயேசு யூதர்களிடம், "என்னிடம் வருபவருக்குப் பசியே இராது: என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது" (யோவா 6:35) என்கிறார், அவ்வாறே சமாரியப் பெண்களிடமும், நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது (யோவா 4:14) என்று கூறுகிறார். கூடாரப் பண்டிகையின் இறுதி நாளில் இயேசு எருசலேம் ஆலயத்தில் உரத்த குரலில், “யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும். என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும்" (யோவா 7:37) என்று மக்களை அழைத்தார்.

நாம் நமது பசியையும் தாகத்தையும் தணிக்க நாயாக அலைகிறோம்; மாடாக உழைக்கிறோம்; இடாக இளைக்கிறோம், ஆனால் நம் பசி தீரவில்லை: தாகம் தணியவில்லை. மாறாக அவை பன்மடங்கு கொழுந்துவிட்டு எரிகின்றன. ஆகாய் இறைவாக்கினர் வழியாக இறைவன் கூறியது நமது வாழ்வில் உண்மையாகிறது, *நீங்கள் விதைத்தது மிகுதி: அறுத்ததோ குறைவு, நீங்கள் உண்கிறீர்கள், ஆனால் உங்கள் வயிறு நிரம்புவதில்லை ; நீங்கள் குடிக்கிறீர்கள், ஆலால் நீங்கள் நிறைவடைவதில்லை. ஆடை அணிகிறீர்கள், ஆனால் உங்களுள் எவருக்கும் குளிர் நீங்கவில்லை. வேலையாள் தன் கூலியாக வாங்கிய பணத்தைப் பொத்தலான பையில் போடுகிறான்” (ஆகாய் 1.6)

நாம் சாண் ஏறினால் முழம் வழுக்குகிறது! ஏன்? ஏனெனில் கடவுளை ஓரங்கட்டிவிட்டு, நாம் உயரப் பறக்கப் பார்க்கிறோம். மனசாட்சியை மழுங்கடித்துவிட்டு, குறுக்கு வழியில் சென்று குபேரர்களாக மாற விரும்புகிறோம். அங்காடியின் சிலை வழிபாட்டிற்கும் நுகர்வு வெறிக் கலாச்சாரத்திற்கும் அடிமைகளாக இருக்கிறோம். தேவைகளைக் குறைப்பதற்குப் பதிலாகத் தேவைகளைப் பெருக்குகின்றோம். மன அமைதியை இழந்து, மரண தேவதையைத் தழுவுகிறோம். சுருக்கமாக, உயிருள்ள தண்ணீர் சுரக்கும் கடவுளை கைவிட்டுவிட்டு, தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாத ஓட்டைத் தொட்டிகளைக் கட்டிக் கொள்கிறோம் (எரே 2:13)

நமது இதயத் தாகத்தைத் தணிக்க வல்லவர் இயேசு ஒருவரே. நிலை வாழ்வு பெற கடவுளுக்கு ஏற்புடைய செயலை நாம் செய்ய வேண்டும். கடவுளுக்கு ஏற்ற செயல் என்பது அவருடைய மகனில் நம்பிக்கை கொள்வது. நற்கருணை நம்பிக்கையின் மறைபொருள். நற்கருணையை நாம் இயேசுவின் உடல் என்று உட்கொண்டால் மட்டும் போதாது. நற்கருனையிலுள்ள இயேசுவை நம்பி, அவரிடம் சரணடைய வேண்டும், மனிதன் அதிகமாகத் துன்புறுவது மனக் கவலையாலும் மன அழுத்தத்தாலுமே. மற்ற எல்லா நோய்களுக்கும் மருந்து உண்டு. ஆனால் மனக் கவலையைப் போக்க வல்ல ஒரே மருந்து கடவுளிடம் சரணடைவதே.

தனக்கு உவமை இல்லாதாள்தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது (குறள் 7)
இறைவா எம் நெஞ்சங்கள் உமக்காகவே படைக்கப் பட்டுள்ளன; உம்மில் இளைப்பாறும் வரை அவற்றிற்கு அமைதி இல்லை - புனித அகுஸ்தீன்

ஒரு விவசாயிடம் இருந்த ஐந்து ரூபாய் பெறாத ஒரு தாமரை மலரை, ஐம்பது முதல் ஐநூறு ரூபாய் வரையில் விலை கொடுத்து வாங்கப் பலர் முன் வந்தனர். ஏன் என்று கேட்டதற்கு, காட்டில் தவம் செய்து கொண்டிருந்த புத்தருக்கு அம்மலரைப் படைக்க வேண்டும் என்று அவர்கள் பதில் சொன்னார்கள், தானே நேரில் புத்தரிடம் அம்மலரைக் கொடுத்தால் இன்னும் அதிகமாகப் பணம் கிடைக்கும் என்ற பேராசையுடன் அவவிவசாயி காட்டிற்குச் சென்று புத்தர் காலடியில் அம்மலரைப் படைத்தார், புன்னகை பூத்த முகத்துடன் அம்மலருக்கு எவ்வளவு பணம் வேண்டுமென்று புத்தர் விவசாயியைக் கேட்க, அவர் "பணமே வேண்டாம்; உங்களைப் பார்த்ததே போதும்" வென்றார். புத்தர் அவவிவசாயியின் பேராசையை அடியோடு ஒழித்து, அவரையும் நிர்வாண நிலையை அடையச் செய்தார்,

நற்கருணைப் பேழை முன் அமர்ந்து, ஆண்டவரை உற்று நோக்கும்போது, ஆண்டவர் நம் ஆசைகளை மடை மாற்றம் செய்கிறார். சிற்றின்பத்திலிருந்து பேரின்பத்திற்கு அழைத்துச் செல்கிறார், இன்றை இரண்டாவது வாசகத்தில் பவுலடியார் கூறுவதுபோல், பாவ நாட்டங்களால் ஏமாந்து அழிவுறும் நமது பழைய இயல்பைக் களைந்துவிட்டு, உண்மையிலும், நீதியிலும் படைக்கப்பட்ட புதிய இயல்பை (எபே 4:22-24) கிறிஸ்து நமக்கு அளிக்கிறார்.

எனவே, கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பதுபோல், உயிருள்ள இறைவன்மீது தாகம் கொள்வோம் (திபா 42:1-2). ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பார்ப்போம் (திபா 34:8).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

அன்றாட நலனும் - அருள் அடையாளமும்

நான் படித்துச் சுவைத்த பசி பற்றிய பாடல் இது.
அறியாத வயதினிலே அன்புக்கே ஏங்கி நின்றேன்
அறிந்து விட்ட வாலிபத்தில் பொருளுக்கே ஏங்கி நின்றேன்
இரண்டும் கெட்ட இப்பொழுதோ இல்வாழ்வில் குழம்புகின்றேன்
என்னதான் நடக்கும் என்று எதிர்நீச்சல் போடுகின்றேன்
உல்லாச மாளிகையில் முப்பொழுதும் காமப்பசி
இல்லாத குடிசையிலே எப்பொழுதும் வயிற்றுப்பசி
ஆராயும் மனிதனுக்கோ அடங்காத அறிவுப்பசி
அப்பனிடம் சென்றுவிட்டால் எப்பசியும் எடுப்பதிலை.
"இறைவா, உமக்காக எங்கள் இதயங்களைப் படைத்தீர். உம்மிலன்றி வேறு எதில் அவை நிம்மதி காண முடியும்? நிறைவு அடைய முடியும்?'' என்பார் புனித அகுஸ்தீன். மனித ஏக்கங்களுக்கெல்லாம் தீர்வு தரும் வகையில் இயேசு சொல்கிறார்: "வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது. என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது” (யோ. 6:35)

மனிதனுடைய அடிப்படை இன்றியமையாத் தேவைகளில் முதலிடம் வகிப்பது வயிற்றுப் பசி. எண்சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம் - இது அந்தக் காலம். எண்சாண் உடம்புக்கு வயிறே பிரதானம் என்பதே இன்றைய எதார்த்தம்!

உண்ணாமல் உயிர் வாழ முடியாது என்றாலும் மனிதர்கள் உண்பதற்காக மட்டுமே பிறந்தவர்கள் அல்ல. உண்பதற்காகவே உயிர் வாழ்பவர்கள் வெந்ததைத் தின்று வந்ததைப் பேசி விதி வந்தால் சாகுபவர்கள். உயிர் வாழ்வதற்காக உண்பவர்களே பெற்ற வாழ்வுக்குப் பெருமை சேர்ப்பவர்கள்.

பொதுவாக மனிதர்கள் நாம் மூன்று தளங்களில் வாழ்கிறோம்.
1. முதல் தளம் உடல் பசி, தாகம், காமம் எல்லாம் இந்தத் தளத்திற்கு உரியவை.
2. இரண்டாவது தளம் மனம்! காதல், புகழ், கலை, இலக்கியம், அன்பு, மதிப்பு, இவையெல்லாம் இத்தளத்தில் வாழ்பவர்களின் தேடல் .
3. மூன்றாவது தளம் ஆன்மா இது உடல், மனம், அறிவு என்ற எல்லா நிலைகளையும் கடந்து செல்லும் ஓர் உச்சநிலை. இதனையே ஆன்மீகத் தேடல் , அருள் வேட்கை என்று சொல்கிறோம்.

இந்த உன்னதமான மூன்றாவது கட்டத்திற்குத்தான் பெரும்பான்மையினர் வந்து சேர்வதில்லை. அது பற்றிச் சிந்திப்பதும் இல்லை என்பதுதான் மிகப் பெரிய சோகம். இப்படிப்பட்ட மக்களைத்தாம் அடையாளம் கண்டு , "நீங்கள் அருள் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள்” (யோ. 6:26) என்று இயேசு உறுதிபடக் கூறுகிறார்.

நற்செய்தியாளர் யோவானின் பார்வையில் இயேசு செய்த ஒவ்வொரு புதுமையிலும் இரண்டு கூறுகள் உண்டு. 1. மக்கள் பெறும் நன்மை . 2. அருள் அடையாளம். அப்பம் பலுகிய புதுமையில் கடவுளின் பரிவையும் மக்களின் பகிர்தலையும் மக்கள் உணர வேண்டுமென்று இயேசு விரும்புகிறார். ஆனால் மக்களோ தங்கள் வயிறு நிரம்பியதையே நினைத்து மீண்டும் தங்கள் வயிற்றை நிரப்புவதற்கே இயேசுவைத் தேடிச் செல்கிறார்கள்.

முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்களின் மனநிலையும் அப்படித்தான். விடுதலை என்ற உன்னதமான மதிப்பீட்டை மறந்து வயிற்றுக்கான உணவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் பார்க்கிறோம். உணவு இல்லையே என்ற முணுமுணுப்பு, முறையீடு! இப்படி உணவற்ற நிலையில் வாடுவதைவிட, எகிப்தில் அடிமைகளாக இருந்தால் வயிற்றுக்குச் சோறாவது கிடைக்குமே!.... இங்கே கடவுள் அவர்களுக்கு கொடுக்க விரும்பியது விடுதலை என்ற உயர்ந்த விழுமியத்தை. ஆனால் பசி வந்ததும் மக்கள் அந்த மதிப்பீட்டை மறந்து விடுகின்றனர் - எங்களுக்கு விடுதலை வேண்டாம், வெறும் உணவு போதும் என்று கேட்பது போல. உடல் சார்ந்த ஒரு சிறிய மதிப்பீட்டுக்காக, விடுதலை என்னும் உயர்ந்த அடிப்படையான மதிப்பீட்டையே விட்டுக் கொடுக்கத் தயாராகி விடுகிறார்கள்.

நற்செய்தியிலும் இதே நிலை. இயேசு அப்பம் பகிர்தல் என்னும் நிகழ்ச்சி வழியாக பகிர்தல்' என்ற உன்னதமான பண்பை - அரும் அடையாளத்தைக் காட்டிப் பகிர்தலே ' நிறைவாழ்வுக்கு வழி என்று உணர்த்தினார். ஆனால் மக்கள் அதை உணராமல் ஓசியில் உணவு தேடி வருகிறார்கள். எனவே 2ஆம் வாசகத்தில் கேட்டது போல இனியாவது ''உங்கள் மனப்பாங்கு புதுப்பிக்கப்படவேண்டும். கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதனுக்குரிய இயல்பை அணிந்து கொள்ளுங்கள். அவ்வியல்பு உண்மையான நீதியிலும் தூய்மையிலும் வெளிப்படும்" (எபேசி. 4:23-24) என்ற திருத்தூதர் பவுலின் கூற்றுக்கேற்ப கடவுளின் மதிப்பீடுகளுக்காக வாழ்வோம்.

உலகில் வாழும் மக்கள் அனைவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு நோக்கம் கொண்டு செயல்படுகின்றனர். சிலர் உடல் இன்பத்தைத் * தேடுகின்றனர். சிலர் பணத்தை , பதவியைத் தேடுகின்றனர். சிலர் புகழை, வீண் பெருமையைத் தேடுகின்றனர். பெரும்பான்மையினர் உயிர்வாழ வழிவகைகளைத் தேடுகின்றனர். நோக்கு எப்படியோ போக்கு அப்படியே! மக்கள் எதைத் தேடுகிறார்களோ அதற்கு ஏற்ப அவர்களுடைய வாழ்க்கை முறையும் உயர்வானதாகவோ அல்லது தரம் குறைந்ததாகவோ இருக்கும்.

வயிற்றில் கடுமையான பசி என்பதற்காக வயிற்றை கல்லாலோ, மண்ணாலோ, ஏன் தங்கக்கட்டியாலோ கூட நிரப்பி திருப்தி காணமுடியுமா? அதுபோல மனப்பசியை ஆன்மப்பசியை உலகம் தொடர்பானவற்றால் தீர்த்துக் கொள்ள இயலாது. அதனால்தான் இன்று இயேசு சொல்கிறார்: "அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார்" (யோ. 6:27). உணவு அளிப்பவராக மட்டுமல்ல இறைமகன் இயேசுவே அவ்வுணவாக இருப்பார். " வாழ்வு தரும் உணவு நானே" (யோ. 6:35)

இறைமையை நோக்கி நமது தேவைகளை நிறைவு செய்வோம் ஆபிரகாம் மாஸ்லோ என்ற உளவியலார் "தேவைகளின் படிக்கட்டு" (Hiararchy of Needs) என்னும் ஒரு சிந்தனையை வழங்கியுள்ளார். அதன்படி மனிதர்களுக்கு அடிப்படைத் தேவைகள் (உணவு, உடை, உறைவிடம்), பாதுகாப்புத் தேவைகள், உறவுத் தேவைகள், அன்புத் தேவைகள் மற்றும் ஆளுமை நிறைவுத் தேவைகள் என ஐந்து வகையான தேவைகள் படிப்படியாக ஒவ்வொரு தேவையாக நிறைவேற்றப்படும் போது மனிதர்கள் ஆளுமை நிறைவு அடைகிறார்கள் என்கிறார் அவர்.

இதே சிந்தனைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செயல் வடிவம் கொடுத்துள்ளார் இயேசு . மனிதர்களின் அடிப்படைத் தேவையான உணவை வயிறார அளித்த பிறகு அவர்களின் ஆன்மீக நிறைவுத் தேவையான நிலை வாழ்வு தரும் அழியாத உணவுக்காக உழைக்க அழைக்கிறார். " மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல. மாறாக கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்'' (மத். 4:4) என்கிறார்.

நரி முயலைத் துரத்தியது. வேகமாக ஓடி நின்ற முயலைப் பார்த்து நரி கேட்டது "உன்னால் எப்படி இவ்வளவு வேகமாக ஓட முடிகிறது?" முயல் சொன்னது, "நீ வயிற்றுக்காக ஓடினாய். நான் உயிருக்காக ஓடினேன்" என்று.

எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றுவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" எனச் சிலர் கேட்டதற்கு , "கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கு ஏற்ற செயல்" என்றார் இயேசு. அது அழிந்து போகும் உணவுக்காக உழைக்காது, மாறாக நிலைவாழ்வு தரும் உணவுக்காக உழைப்பதாகும். அந்த அழியாத உணவான இயேசுவைத் தேடினால் இறைவார்த்தையிலும் நற்கருணையிலும் நமது ஆன்ம பசியையும் ஆன்ம தாகத்தையும் தீர்த்துக் கொள்ள முடியும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தவறான ஊட்டத்தின்மேல் நாட்டம்

கடந்த ஞாயிறு நற்செய்தி வாசகத்தில் ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்தளித்தார் இயேசு. அந்நிகழ்வைத் தொடர்ந்து அவர் ஆற்றும், 'வாழ்வுதரும் உணவு நானே' என்னும் பேருரையின் முகவுரையே இன்றைய நற்செய்தி வாசகம். இன்றைய நற்செய்தி வாசகமும் முதல் வாசகமும், 'தவறான ஊட்டத்தையும் நாம் தேடி அலைவதற்கான வாய்ப்பு, மற்றும் பிறழ்வான ஆதாரங்களிலிருந்து வாழ்வைப் பெறுவதற்கான முயற்சி' பற்றி நமக்கு எச்சரிக்கின்றன.

இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வெளியேறியபோது, இஸ்ரயேல் மக்கள் தங்கள் ஆண்டவராகிய கடவுளின் அளப்பரிய செயல்களையும் வியத்தகு அறிகுறிகளையும் கண்டனர். அப்படிக் கண்டவர்கள் அதே ஆண்டவரை நோக்கி எப்படி முணுமுணுத்தார்கள் என்பதை நாம் இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம். செங்கடலைக் கடந்து அவர்கள் தொடர்கின்ற பயணத்தில் இன்று இரண்டாம் முறையாக முணுமுணுக்கின்றனர். முதலில், தண்ணீருக்காக அவர்கள் முணுமுணுத்தனர் (காண். விப 15:22-27). இரண்டாவது முணுமுணுப்பு முன்னதைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்கள், எகிப்தில் நைல் நதியின் கரைகளில் விளைச்சலைக் கண்டு, அதன் நிறைவை உண்டவர்கள், இப்போது பாலைவனத்தின் குறைவையும், வெறுமையையும், பாதுகாப்பின்மையையும் தாங்கிக்கொள்ள முடியாதவர்களாக மாறுகின்றனர். உணவுத் தேவை குறித்த அவர்களுடைய அங்கலாய்ப்பு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்தாலும், எகிப்தின் உணவே தங்களுக்கு வேண்டும் என்ற கோரிக்கை – 'இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து – ஏற்புடையது அல்ல.

தங்கள் கற்பனையில் மட்டுமே இருந்த இறைச்சிப் பாத்திரத்தின் நிறைவின்மேல் விருப்பம் கொள்வதும், கானல் நீர் போலிருந்த அப்பத்தை உண்டு நிறைவுகொள்வதில் நாட்டம் கொள்வதும் எகிப்தில் அவர்கள் பட்ட அடிமைத்தனத்தின் நினைவுகளை மறைத்துவிட்டது. எகிப்தின் உணவுக்காக, தங்கள் ஆண்டவராகிய கடவுள் தந்த விடுதலையை மறந்துவிட்டு, மீண்டும் பாரவோனுக்கு அடிமைகளாகிட அவர்கள் விரும்பினர். கடவுள் அவர்கள் செய்த அனைத்தையும் அப்படியே துடைத்து எடுத்து தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்துவிடுவது போல இருந்தது அவர்களுடைய செயல். கடவுள் அவர்களுக்கு விடுதலை தந்தார், அதை இலவசமாகத் தந்தார். ஆனால், இப்போது அவர்கள் மீண்டும் அடிமைகளாக இருந்தனர். அதற்காக தங்கள் இன்னுயிரையும் விலையாகத் தர முயன்றனர். பாலைவனத்தில் நிலவிய உணவுப் பற்றாக்குறை கடவுளுடைய அரும்பெரும் செயல்களை மறந்துவிட அவர்களைத் தூண்டியது. மேலும், கடவுள் தங்களைத் தொடர்ந்து பராமரிப்பாரா? என்ற அவநம்பிக்கைநிறை கேள்வியையும் அவர்கள் உள்ளத்தில் எழுப்பியது.

அவர்கள் தங்கள் மனத்தளவில் எகிப்து நாட்டையே விரும்பி தனக்குத் துரோகம் செய்தாலும், ஆண்டவர் தன் பிரமாணிக்கம் மற்றும் பற்றுறுதிநிலையில் தவறவில்லை. முணுமுணுக்கும் அந்த மக்களுக்கு மன்னாவும் காடையும் வழங்குகின்றார். இவை இரண்டுமே இயற்கை நிகழ்வுகள். எபிரேயத்தில், 'மன்னா' என்றால், 'அது என்ன?' என்பது பொருள். பாலைவன மரங்கள் சுரத்த பிசின் போன்ற உணவு வகையே மன்னா. அதிகாலையில் மரத்தில் வடியும் அது மதிய வெயிலில் மறைந்து போகும். காடைகள் பாலைவனத்தை ஒரே வேகத்தில் கடக்க முடியாமல், சோர்வடைந்து ஆங்காங்கே தரையிறங்கி நின்று ஓய்வெடுக்கக்கூடியவை. இவற்றை உணவாகத் தந்ததன் வழியாக, கடவுள் இயற்கையின் வழியாக அவர்களுக்கு ஊட்டம் தருகின்றார்.

'விண்ணகத்தின் கொடையான' மன்னா அவர்களுக்கு தினமும் கிடைக்கும். அதைச் சேகரித்து வைக்கவோ, சேமித்து வைக்கவோ வேண்டாம் என்று கடவுள் அவர்களை எச்சரித்தார். ஓய்வுநாளுக்கு முந்திய நாள் மட்டும் அவர்கள் ஓய்வுநாளுக்காகச் சேமித்துக்கொள்ளலாம். இப்படியாக, அவர்கள் ஆண்டவராகிய கடவுளின் பராமரிப்புச் செயலில் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்று அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். அத்தகைய பற்றுறுதியும் கீழ்ப்படிதலும் கடவுளின் மக்கள் கொள்ள வேண்டிய அடிப்படைப் பண்புகளாக இருந்தன. இப்படியாக, தங்களுடைய கற்பனை உணவையும், திட்டமிடுதலையும் விட்டு இறைவனின் விரலைப் பிடித்துக்கொண்டு அவர்கள் பயணம் செய்ய வேண்டியதாக இருந்தது. தொடர்ந்து அவர்களுக்கு உணவு கொடுத்ததன் வழியாக கடவுள் தன் மக்களுக்குப் பிரமாணிக்கமாக இருந்தார். ஆனால், மக்களோ உள்ளத்தில் உறுதியற்றவர்களாக இருந்தனர் – ஒரு பக்கம் ஆண்டவர் தரும் உணவையும் உண்டனர், இன்னொரு பக்கம் கருணையற்ற தங்களுடைய எகிப்தியத் தலைவர்களின் உணவின்மேலும் நாட்டம் கொண்டவர். ஆண்டவருக்கும் பாரவோனுக்கும் இடையே ஆடிக்கொண்டிருந்த ஊசல் போல இருந்தது அவர்களுடைய வாழ்க்கை.

இரண்டாம் வாசகம் (காண். எபே 4:17,20-24), இரண்டு வகையான வாழ்க்கை முறைகளை வேறுபடுத்திக் காட்டுகிறது: கிறிஸ்தவ முறை மற்றும் புறவினத்தார் முறை. இந்த இரண்டு முறைகளுக்கும் இடையே இருக்கின்ற தெரிவை எபேசிய நகரத் திருஅவைக்கு முன்மொழிகின்றார் பவுல். 'வீணான எண்ணங்கள்,' 'தீய நாட்டங்கள்,' 'ஏமாற்றும்,' 'அழிவுக்கு இட்டுச் செல்லும்', 'புத்தியை மழுங்கடிக்கும்,' 'கடவுளிடமிருந்து அந்நியப்படுத்தும்,' 'கடின உள்ளம் கொண்ட,' 'அழுக்கும் பேராசையும்' நிறைந்த வாழ்க்கை முறையாக இருந்தது புறவினத்தார் வாழ்க்கை முறை. யூத-கிறிஸ்தவ சமூகம் அன்றைய கிரேக்கச் சமூகத்தின் அறநெறியை எப்படிப் பார்த்தது என்பதை இது நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. பலகடவுளர் வழிபாட்டு முறை தழுவப்பட்ட நிலையில் மக்களை அடிமைப்படுத்திய, அறநெறிப் பிறழ்வுகள் நிறைந்த சமூகமாக அன்றைய கிரேக்கச் சமூகம் இருந்தது. இச்சமூகம் கடவுளின் சட்டத்தை உணராததாகவும், அறநெறியில் பிறழ்வுபட்டதாகவும் உணர்கின்ற பவுல், அதற்கான மாற்றுச் சமூகமாகக் கிறிஸ்தவ சமூகம் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றார். இருந்தாலும், தங்களுக்கு அருகில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையில் கிறிஸ்தவர்கள் மிகவும் அதிகம் ஈர்க்கப்படுகின்றனர். மேலும், புதிதாக மனம் மாறி கிறிஸ்தவத்தைத் தழுவியவர்கள் தங்கள் பழைய முறையையும், முறைமைகளையும் விட்டுவிட இயலாமல் தவித்தனர். சில வேளைகளில் கிறிஸ்தவத்தைப் பெயரளவில் தழுவிக்கொண்டு, மனதளவிலும் உடலளவிலும் தங்கள் பழைய வாழ்க்கையை வாழ்ந்து சமரசம் செய்தனர். இப்படி அவர்கள் செய்ததால் தங்களுடைய தான்மையையும் நம்பிக்கை அர்ப்பணத்தையும் நீர்த்துப்போகச் செய்தனர்.

பவுல் சமரசமற்ற ஒரு நிலைப்பாட்டை எடுக்கின்றார். 'இது அல்லது அது. இடைப்பட்டது எதுவும் இல்லை' என்று நேரிடையாக அவர்களுக்குச் சவால் விடுகின்றார். புறவினத்து முறைமேல் உள்ள ஈர்ப்பை வெல்வது அவர்களின் அன்றாடப் போராட்டமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றார். பழைய வழிகளை விட்டுவிட்டு, தங்கள் மனப்பாங்கை அவர்கள் புதுப்பித்து, 'கிறிஸ்துவை அணிந்துகொள்ள' அழைக்கின்றார். இந்தப் புதிய மனிதருக்குரிய இயல்பு, படைப்பின் தொடக்கத்தில் கடவுள் முதல் மனிதர்களுக்கு அளித்த இயல்பை மீட்டுருவாக்கம் செய்வதாக இருக்கும். இவ்வாறாக, இரண்டு வழிகளில் ஒன்றைத் தெரிவு செய்வது மற்றொன்றை விடுவதைக் குறிப்பதாகும் எனச் சொல்கின்ற பவுல், கிறிஸ்துவின் வழி நோக்கி அவர்கள் திரும்ப அவர்களை ஊக்குவிக்கின்றார். கிறிஸ்துவின் வழியில் நடப்பதன் வழியாக அவர்கள் தங்கள் வாழ்வின் ஊட்டத்தைக் கண்டுகொள்வார்கள். கண்ணுக்கு விருந்தளிக்கும் ஆனால் காலப்போக்கில் நம்மையே அழிக்கும் புறவினத்தாரின் வழி தவறான ஊட்டத்தையே தரும் என எச்சரிக்கின்றார்.

நற்செய்தி வாசகம், அப்பங்கள் பலுகிய நிகழ்வு மற்றும் இயேசு கடல்மேல் நடக்கும் நிகழ்வு (காண். யோவா 6:16-22) ஆகியவற்றின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. இந்த இரு அரும்பெரும் நிகழ்வுகளும் மக்கள்மேல் ஏற்படுத்திய தாக்கத்தை நம் கண்முன் கொண்டு வருகின்றார் யோவான். வியத்தகு முறையில் வயிறு நிரம்பிய மக்கள் இயேசுவை இறைவாக்கினராகவும் அரசராகவும் கண்டு அவரை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். இருந்தாலும், அவர்கள் அவரைத் தேடியதன் காரணம் தவறு. இன்னும் அதிக அப்பங்களையும் மீன்களையும் அவர் தருவார் என்றும், அரசர் தருகின்ற பாதுகாப்பை அவர் தங்களுக்கு வழங்குவார் என்றும் எதிர்நோக்கினர். அவர்களின் தவறான எண்ணங்களைத் திருத்துகின்ற இயேசு தான் அவர்களுக்குக் கொடுக்க விரும்புது என்ன என்பதைத் தெளிவுபடுத்துகின்றார். 'மானிட மகனாக' அவர் அவர்களுக்கு வழங்கும் உணவு சாதாரண அப்பம் அல்ல, மாறாக, நீடித்த, நிலையான ஊட்டம் என்று அறிவிக்கின்றார்.

இயேசுவின் வார்த்தைகளைத் தவறாகப் புரிந்துகொள்கின்ற மக்கள், அந்த உணவை உடல் உழைப்பால் பெற்றுக்கொள்ள முடியும் என்று எண்ணி, அந்த உணவைப் பெறுவதற்கான வழியைப் பற்றி இயேசுவிடம் கேட்கின்றனர். தன்மேல் அவர்கள் கொள்ளும் நம்பிக்கையே நீடித்த உணவின் ஊற்று என்கிறார் இயேசு. இதை ஏற்றுக்கொள்வதற்கு அவரிடம் அறிகுறி கேட்டு நிற்கின்றனர் மக்கள். மோசேயின்மேல் நம்பகத்தன்மையை உருவாக்க அன்று மன்னா பொழியப்பட்டது. இயேசு என்ன கொடுப்பார்? மக்கள் மேற்கோள் காட்டிய இறைவார்த்தையின் சரியான பொருளை இயேசு தருகின்றார். பாலைவனத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு உணவு கொடுத்தது மோசே அல்ல, கடவுளே என்று தெளிவுபடுத்தும் இயேசு, 'என் தந்தையே' என்று கடவுளை அழைக்கின்றார். இதுவே அவர்களுக்குள் ஒரு பெரிய நெருடலை ஏற்படுத்தியிருக்கும். கடவுள் தன் மகனையே புதிய அப்பமாக அனுப்பி மானுடத்தின் பசியையும் தாகத்தையும் போக்க விரும்புகின்றார்.

இயேசுவைத் தேடி வந்த கூட்டத்தின் எண்ணமெல்லாம் தவறான ஊட்டத்தின்மேல் இருந்தது. முதல் வாசகத்தின் இஸ்ரயேல் மக்கள் போல, தங்கள் வயிற்றுக்கான உணவையே அவர்கள் தேடி நின்றனர். ஆனால், இயேசு வழங்க விரும்பிய உணவோ வேறு. மக்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டு, இப்புதிய உணவை ஏற்றுக்கொள்வார்களா? அல்லது சாதாரண அப்பத்தையே அவர்கள் இன்னும் நாடி நிற்பார்களா? என்பதே கேள்வி.

இவ்வாறாக,

இன்றைய இறைவார்த்தை வழிபாடு சரியான ஊட்டம் பற்றிய தவறான புரிதல்களை நம்முன் நிறுத்துகின்றது. உடல் பசியால் உந்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள் அடிமைத்தனத்தின் பாதுகாப்பையே விரும்பினர். ஏனெனில், அது அவர்களுடைய உடல் பசியைப் போக்குவதாக இருந்தது. அவர்களுக்கு இப்போது தேவைப்படுவதோ கடவுள்மேல் நம்பிக்கையும் அவருடைய பராமரிப்பின்மேல் பற்றுறுதியும்தான். அவர்கள் எதைத் தெரிவு செய்வார்கள்?

இரண்டாம் வாசகத்தில், பவுல் சரியான வாழ்க்கை முறையைத் தெரிந்துகொள்ள எபேசிய நகர இறைமக்களை அழைக்கின்றார். அவர்கள் ஈர்ப்பு நிறைந்த புறவினத்தார் வழியைத் தெரிந்துகொள்வார்களா? அல்லது ஊட்டமும் வாழ்வும் தருகின்ற கிறிஸ்தவ வழியைத் தெரிந்துகொள்வார்களா?

தன்னைத் தேடி வந்த மக்களின் தவறான புரிதல்களைச் சரி செய்கின்ற இயேசு தான் அவர்களுக்கு அளிக்க விரும்புவது எது என்பதைத் தெளிவுபடுத்துகின்றார். அப்பத்தையும் மீனையும் கொடுக்க அவர் வரவில்லை. மாறாக, நிலைவாழ்வுக்கான ஊட்டத்தை வழங்க அவர் வந்துள்ளார். இயேசு தரும் அந்த உணவின்மேல் மக்கள் நாட்டம் கொள்வார்களா? தங்களுடைய எதிர்பார்ப்புகளை மாற்றிக்கொள்வார்களா? இக்கேள்விகளுக்கான விடையைத் தருகின்ற இனி வரும் வாரங்களின் வாசகங்கள்.

இயேசுவே வானகத் தந்தை நம்மை நோக்கி அனுப்பிய உணவு. இந்த உணவையே 'வானதூதரின் உணவு' என அழைக்கின்றார் இன்றைய பதிலுரைப்பாடலின் ஆசிரியர் (காண். திபா 78). வானத்து உணவை உண்டு மகிழும் நாம் தவறான உணவின் மேலும் ஊட்டத்தின் மேலும் நாட்டம் கொள்தல் சரியா?

இன்றைய நாம் வாழ்க்கை முறையில் ஏதோ ஒரு இனம் புரியாத குறையுணர்வு நம்மை இறுகப் பற்றியுள்ளது. எதன்மேலும் நமக்கு நிறைவு இல்லை. கையில் இருக்கும் செயல்திறன் பேசியை எவ்வளவு முறை பார்த்தாலும் இன்னும் அதைப் பார்க்க வேண்டும் என்றே தோன்றுகிறது. எவ்வளவு எதிர்மறையான செய்திகளை தொலைக்காட்சிகள் நம் இல்லங்களில் கொட்டினாலும் அவற்றைக் கேட்டுக் கொண்டே இருக்கவே மனம் விரும்புகிறது. ஸ்விக்கி, சோமாட்டோ என எச்செயலியில் நாம் உணவுக்கு ஆணையிட்டாலும் நம் உடல் இன்னும் அதிகம் கேட்கிறது. இந்த நிரந்தரமான அதிருப்தி உணர்வு கடவுள் நம் வாழ்வில் ஆற்றும் செயல்களை மறக்கடிக்கிறது. கடவுளின் அரும்பெரும் செயல்களையும் அவர் தந்த விடுதலையையும் நாம் மறந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன. அவருடைய பராமரிப்பு நமக்கு மறந்து போயிற்று. அவருக்கு நன்றி சொல்வதற்குப் பதிலாக நாமும் பல நேரங்களில் அவரை நோக்கு முணுமுணுக்கிறோம்.

வைஃபை கிடைக்கவில்லை என்றால், மொபைலில் சார்ஜ் இறங்கி விட்டால், நெட்வொர்க் சிக்னல் கிடைக்கவில்லை என்றால், உணவு வந்து சேரத் தாமதமானால் நாம் முணுமுணுக்கிறோம். உறவுகளில் முணுமுணுப்பு, பணியில் முணுமுணுப்பு, பயணத்தில் முணுமுணுப்பு என்று வாழ்க்கை நகர்கிறது. நம் தேடல்கள் எல்லாம் வீணாகப் போகின்றன. நாம் தேடிக் கண்டுபிடித்த புதையல்களாக நினைப்பவை செல்லாக் காசுகளாக மாறுகின்றன. இருந்தாலும் தேடி ஓடுகிறோம். தன் வாலைத் தானே கடித்துத் தின்று தன்னை அழித்துக் கொள்ளும் புராணக் கதை பாம்பு போல, நம்மை நாமே கடித்துக் தின்கிறோம்.

நம்மைச் சுற்றி இருக்கும் அனைத்தும் ஊட்டம் தந்தாலும், உண்மையான ஊட்டம் என்பது இறைவனிடம் மட்டுமே இருக்கின்றது. தவறான ஊட்டங்கள் நமக்கு சற்று நேரம் இன்பம் தரலாம். ஆனால், நீடித்த மகிழ்ச்சியை அவை நம்மிடமிருந்து பறித்துவிடுகின்றன.

உண்மையான ஊட்டத்தின், நீடித்த மதிப்பீடுகளின் ஊற்று – கடவுள் மட்டுமே.

அவரின் ஊட்டம் பெறும் நாம் அன்றாட வாழ்வில் பசி, தாகம், வேலையின்மை, வறுமை, புலம்பெயர்நிலை போன்ற காரணிகளால் வருந்தும் நம் சகோதர சகோதரிகளுக்கு ஊட்டம் தருதல் நலம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

உலகிற்கு உணவாகத் தயாரா?

வேலைதேடி அலைந்து கொண்டிருந்த பட்டதாரி இளைஞன் ஒருவர் சோகத்தோடு சாலையிலே நடந்துகொண்டிருந்தார். வழியில் வயது முதிர்ந்த முதியவர் ஒருவர் அவ்விளைஞனுடன் நடந்துகொண்டிருந்தார். திடீரென மயங்கி விழுந்தார் அந்த முதியவர். பதறிய அந்த இளைஞன் அம்முதயவரைத் தூக்கிப்பிடித்து நிழலுள்ள இடத்தில் அமரவைத்தார். பின்பு இருவரும் உரையாட ஆரம்பித்த போது சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆனதாக அம்முதியவர் கூறினார். அதைக்கேட்ட அவ்விளைஞன் மிகவும் வருந்தினான். ஆனால் அவனிடமும் உணவு வாங்கிக்கொடுக்க போதுமான பணம் இல்லை. என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டிருக்கும் போது வருகின்ற வழியல் உள்ள கோயிலில் அன்னதானம் கொடுத்துக்கொண்டிருந்தது நினைவிற்கு வரவே, அம்முதியவரை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு அக்கோயிலுக்குச் சென்று உணவு வாங்கிவந்து அம்முதியவருக்குக் கொடுத்தான் அவ்விளைஞன். அப்போது அம்முதியவர் அவ்விளைஞனை நோக்கி "என் பிள்ளைகளுக்குக் கூட என்மீது இவ்வளவு அக்கறை இல்லை. உன் அக்கறையால் என் மனதையும் சேர்த்து நிரப்பிவிட்டாய் தம்பி " என்று கூறி தேம்பித் தேம்பி அழுதாராம் .

மேற்கூறிய அவ்விளைஞனைப் போல இச்சமூகத்தில் எத்தனையோ பேர் தன்னிடம் இல்லாவிட்டாலும் ஏதாவது ஒரு வகையில் பிறருடைய தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்கின்றனர்.அதற்காகப் பல முயற்சிகள் எடுத்துக்கொண்டு இருக்கின்றனர். அவர்களெல்லாம் தேவையில் இருப்போர்க்கு உணவாக உறவாகத் திகழ்கின்றனர் என்று சொல்வதில் எவ்விதத் தவறும் இல்லை.அவர்களில் ஒருவராக நாம் திகழ்கின்றோமா எனச் சிந்திக்கவே இன்று நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

மனித வாழ்க்கைக்கு உணவு மிகமிக இன்றியமையாதது. ஏனெனில் நாம் உண்ணுகின்ற உணவுதான் நாம் இருப்பதற்கும் இயங்குவதற்கும் ஆற்றல் தருகிறது. உணவு என்று சொல்லும் போது வயிற்றுப்பசிக்காக நாம் உண்ணுகின்ற உணவு மட்டுமல்ல. அறிவுப்பசிக்காக நாம் எடுத்துக்கொள்ளும் உணவு கல்வி. ஆன்ம பசிக்கு நாம் எடுத்துக்கொள்ளும் உணவு இறைநம்பிக்கை. அன்புப் பசிக்காக நாம் உண்ணுகின்ற உணவு உறவும் நட்பும்.இவ்வாறாக நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். இவற்றுள் எவை சரியாகப் பூர்த்தி செய்யப்டவில்லை என்றாலும் நம் இருத்தலும் இயக்கமும் நிச்சயம் பாதிக்கப்படும்.

இன்றைய நற்செய்தியில் இயேசு " வாழ்வு தரும் உணவு நானே" என்று கூறுவதை நாம் தியானிக்கின்றோம். எவ்வாறு அவரால் அப்படிக் கூற முடிந்தது? ஏனென்றால் அவர் வாழ்ந்ததையே அவர் கூறினார். இயேசு தன்னுடைய போதனைகளையெல்லாம் யாருக்கு அதிகமாகக் கொடுத்தார் என சிந்திக்கும் போது, படிப்பறிவு இல்லாத ஏழை எளிய மக்கள் என்பது தெளிவாகப் புலப்படுகிறது. ஏன் அவருடன் இருந்த சீடர்களில் ஒருசிலரைத் தவிர அனைவருமே கல்வியறிவில் குறைந்தவர்கள் தான். அவர்களின் அறிவுப்பசியை தன்னுடைய எளிமையான போதனைகளால் அவர் நிறைவு செய்தார்.

அடிமைத்தனத்தில் வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள், எப்போது மெசியா வருவார் தங்களை விடுவிப்பார் என ஏங்கித் தவித்துக் கொண்டிருந்த வேளையில், தன்னுடைய வல்ல செயல்களால் இறைநம்பிக்கையை ஊட்டி அவர்களின் ஆன்மப் பசியைப் போக்கினார்.

பசியாய் இருந்த மக்களுக்கு அப்பங்களைப் பலுகச் செய்து களைப்பைப் போக்கினார்.பாவிகள், நோயாளிகள் என ஒதுக்கப்பட்ட ஓரங்கட்டப்பட்ட மக்களைத் தேடிச் சென்று, அவர்களோடு உறவாடி நட்புடன் பழகி அன்புப் பசியைப் பூர்த்திசெய்தார் இயேசு. எனவே தான் வாழ்வு தரும் உணவு நானே என இயேசுவால் சொல்லமுடிந்தது.

இன்று நம்மால் இவ்வார்த்தைகளைக் கூற முடியுமா? நம்முடைய நல்ல சிந்தனைப் பரிமாற்றங்களால், உறவால், நட்பால், பகிர்தலால் எத்தனைபேருடைய பசியை நாம் ஆற்றியிருக்கிறோம் என சிந்தித்துப் பார்ப்போமா? அவ்வாறு செய்திருந்தால் நாமும் " வாழ்வு தரும் உணவு நானே" என்னும் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதில் ஐயமில்லை.

அழிந்து போகின்றவைக்களுக்காக நம் நேரத்தையும் உழைப்பையும் செலவிடுவதைத் தவிர்த்து நம்மால் இயன்றவரை இயேசுவைப் போல பசித்திருப்போருக்கு உணவாகமாற முயற்சிப்போம்.

இறைவேண்டல்
இயேசுவே, வாழ்வு தரும் உணவே உம்மைப்போல எங்களுடைய அன்பால் பகிர்வால் உறவால் நம்பிக்கையால் உலகிற்கு உணவாகும் ஆற்றலைத் தாரும். ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ser
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு