பனிமய அன்னையே வரங்களைப் பொழியும் தாயே!
அருள்பணி ஜோசப் சஜீ OMD
ஒளி போர்த்தும் சந்திரனாய், தினம் தினம் வந்து போகும் சூரியனாய், பூமிக் கோப்பையில் நிரம்பி வழியும் காற்றாய், மண்ணுக்கு விண் போற்றும் மழையாய், காரிருள்தனில் பேரொளியாய் எங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் அருள் வரங்களைப் பொழியும் தாயே நீ வாழ்க! ஆயிரம் ஆயிரம் அடைமொழிகள் நம் அன்னைக்குக் கொடுத்தாலும், எல்லா மக்களும் கூவி அழைக்கும் அன்பு மொழி "தாய்". தாயன்புதான் அன்னையையும் பிள்ளையையும் இணைக்கும் பாலமாய்த் திகழ்ந்து, துன்புறும் மக்களின் வாழ்விலும், வாழ்வில் வழியறியாதுக் கலங்கும் உள்ளங்களிலும், தன் அன்பு மகனிடம் பரிந்துப் பேசி வரங்களைப் பெற்றுத்தருகிறது. இந்த அருள் வரங்கள் அன்னை நம்மையும் நம் குடும்பங்களையும் ஒருபோதும் கைவிடுவதில்லை என்பதற்குச் சான்றாக அமைகின்றது. அன்னையின் பெருவிழா வரலாறும், தன்னை நாடி வரும் மக்களுக்கு வரங்களைப் பொழியும் தாயாகத்தான் சுட்டிக்காட்டுகின்றது.
எத்தனையோ ஆண்டுகளாய் குழந்தை வரமின்றித் தவித்த வேளையில், தன் வாழ்வைத் தேற்ற யார் இருக்கிறார்கள் என்று கலங்கியபோது, பனிமய அன்னை பனிப் பொழிவது போல, வரங்களைப் பொழிந்து, மொட்டுக்குள் மறைந்திருக்கும் அழகைச் சூரியன் தட்டி எழுப்புவது போல, குழந்தை பாக்கியமின்றித் தவித்த தம்பதியருக்குக் குழந்தை வரம் கொடுத்து, அவர்கள் வாழ்வில் மறைந்திருந்த எல்லையில்லா மகிழ்ச்சியை முகத்தில் வெளிப்படுத்தினார் நம் தாய். அதன் விளைவுதான் நாம் அன்னையின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இத்தகைய மகிழ்ச்சி இன்று மட்டமல்ல, மாறாக அன்று கானாவூர் திருமண விழாவிலும், அன்னை மரியாளின் பரிந்து பேசுதல் வழியாக வெளிப்பட்டது (யோவான் 2:5). எங்குச் செல்வது, எதைக் கொடுப்பது என்று கண் கலங்கியபோது, கலங்கரை விளக்காய் தன் அன்பு மகன் இயேசுவிடம் பரிந்து பேசி, வரங்களைப் பொழிந்து திருமண விழாவை மகிழ்ச்சியால் அழகுபடுத்தினார். புனித ஜீலியானா, அன்னை மரியாள் இருள் என்னும் துன்பங்களின் மத்தியில் ஒளி என்னும் அருளைப் பொழிந்து வாழ்வை தன் கரங்களால் தாங்குகின்றார் என்று கூறுகின்றார். இதுதான் உண்மை.
இதுதான் தாய் தன் பிள்ளைகள்மேல் கொண்ட பாசப்பிணைப்பு. ஏனென்றால் இன்று எத்தகைய துன்பங்களோடும், வலிகளோடும், வேதனைகளோடும், வாழ்வின் சுமைகளோடும் சாரை சரையாய், முத்துக்குழித்துறை தாயின் பாதம் நாடி வரும் தன் பிள்ளைகளைப் பாசப்போர்வையில் அரவணைத்து, பாருலகமே வியக்கும் முறையில், வரங்களையும், கேட்கும் மன்றாட்டுக்களையும், தன் அன்பு மகன் இயேசுவிடம் பரிந்து பேசிப் பெற்றுத்தருகின்றார் அது மிகையாகாது. மழையில் மரங்கள் சாய்ந்தாலும் மலர்கள் கலங்குவதில்லை என்பது போல, துன்பங்கள் நம்மைப் புரட்டிப்போட்டாலும், பனிமய அன்னை நம்மை ஒருபோதும் கண்கலங்க விடாமல், நம் வாழ்வை அருள் வரங்களால் நிரம்பி வழியச் செய்கின்றார். ஆகவே கவலைப்படாதீர்கள்! உங்கள் அனைவரையும் அன்னை மரியாளின் பாதுகாவலில் ஒப்படைத்துள்ளேன். அன்னை மரியாள் நம் அனைவரையும் பார்த்துக் கொள்வார் என்று புனித ஜான் லெயோனார்தியார் கூறுவது போல, வாழ்வில் அனைத்தையும் பனிமய அன்னையிடம் ஒப்படைத்து, அவர் தாழ் பணிந்து, அவள் வழி நடப்போம்.