மழையில் நனையாத வானம்
மே மாதம் புனித மரியாளின் மாதம் அன்னை மரியாளின் தாழ்மை, ஏற்புடைமை ஆகியவற்றை தியானிக்கும் புனித காலமாகும். இயேசு கிறிஸ்துவின் தாயாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கன்னி மரியாள், “நான் ஆண்டவரின் அடிமை” (லூக்கா 1:38) என்ற விசுவாசப் பதிலால் உலகின் இரட்சிப்புக்கு வழிவகுத்தாள்.
தேவதூதன் அளித்த அருள்மிகப் பெற்றவரே வாழ்க என்ற அறிமுகம், வேறு யாருக்கும் கிடைக்கவில்லை. இது மரியாவின் தனித்துவமான அருள்நிலையையும், இயேசுவின் அவதாரத்திற்கான தேர்ந்தெடுப்பையும் குறிக்கிறது.
மரியாளின் வாழ்வு ஒரு வானதூதரின் வார்த்தையில் தொடங்கியது. அவளின் ஏற்புடைய பதிலில் நிறைவேறியது.
நான் ஆண்டவரின் அடிமை.
உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்.”
இந்த இரண்டு வரிகள் (லூக்1:38) மரியாளின் தனிப்பட்ட அனுபவமாக மட்டுமல்ல; முழு நற்செய்திகளின் சாரத்தையும் சுருக்கமாக வெளிப்படுத்தும் சாட்சிகளாக நிற்கின்றன. இந்த இரண்டு வரிகளில் படைப்பு, அருள், உடன்படிக்கை, அவதாரம், கீழ்ப்படிதல், மீட்பு ஆகியவை அனைத்தும் ஒளிந்திருக்கின்றன.
மரியாள் கூறிய “உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்ற இரண்டாவது வரி விவிலியத்தின் மையம். அதை விரிவாகப் பார்ப்போம்.
1. சொற்படியே எனக்கு நிகழட்டும்
லூக்காஸ் நற்செய்தி துவக்கத்தில் மரியன்னை வழியாகத் தொடங்கிய “உம் சொற்படியே” என்றார். அதே போல் முடிவாகப் பாடுகளின் பொழுதும் கெத்சேமனே தோட்டத்தில் இயேசு “என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்” (லூக்22:42) என்று கூறினார்.” தொடக்கமும் முடிவும் ஒரே ஆன்மிக உண்மையை வெளிப்படுத்துகின்றன — மனிதன் தன் சித்தத்தை விட இறைவனின் சித்தத்தை ஏற்றுக்கொள்ளும்போது இரட்சிப்பு நிகழ்கிறது.
விவிலியத்தில் கடவுளின் வார்த்தை செயலற்றதல்ல; அது நிகழ்வாக மாறும் சக்தி. “கடவுள் சொன்னார்… அப்படியே ஆனது” (தொட.நூல்1) என்று படைப்பின் வல்லமை வெளிப்படுகிறது. மரியாள் “உம் சொற்படியே” என்று சொன்னபோது, அந்த வார்த்தை தன்னுள் நிகழ இடம் கொடுத்தாள். இவ்வாறு மனிதன் தன் மனம், சித்தம், வாழ்க்கையை திறந்த பாத்திரமாக மாற்றும்போது தான் இறைவனின் வார்த்தை உலகில் செயல்படுகிறது.
தந்தையின் சித்தம் நிறைவேற மிகவும் முக்கியமானது மனிதன் முதலில் தன்னை வெறுமையாக்கி கொள்ள வேண்டும். அதுவே முதல் படி அப்பொழுதுதான் தந்தை விருப்பத்தை ஏற்றுக்கொள்ள முடியும்.
கிறிஸ்துவே. “தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்” (பிலி 2:8).என்று பவுல் கூறுகிறார். தெய்வீக மகிமையோடு இருந்த கிறிஸ்து தன்னைத் தாழ்த்தி மனிதராக வந்து, சிலுவை வரை கீழ்ப்படிந்தார். பின்னர் தந்தையிடம் உம் விருப்பப்படியே நிகழட்டும்” என்றார்.
இங்குக் கவனிக்கவேண்டியது, முதலில் தம்மை வெறுமையாக்க வேண்டும் இரண்டாவதாக இறைவனின் விருப்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
2. தம்மை வெறுமையாக்குதல்
இறைவனின் வார்த்தை மனித வாழ்க்கையில் நிறைவேறுவதற்கு மனிதன் தன்னைத்தான் வெறுமைப்படுத்தி இறைவனுக்குச் சொந்தமாக ஒப்படைக்க வேண்டும். அதுவே மரியாள் கூறிய “ஆண்டவரின் அடிமை” என்ற அடையாளத்தில் வெளிப்படுகிறது. தம்மை வெறுமையாக்குதல் இல்லாமல் “உம் சொற்படியே” என்று உண்மையாகச் சொல்ல முடியாது. இந்த இரண்டு வரிகளும் சேர்ந்து விவிலியத்தின் தெய்வீக இயக்கத்தை — அருள், அழைப்பு, வெறுமையாக்குதல், ஒப்புக்கொடுத்தல், ஏற்றுக்கொள்ளுதல் இறையரசின் பாதையாகின்றன.
மனிதன் தன்னைத்தான் மையமாக வைத்திருக்கும் வரை இறைவனின் சித்தம் முழுமையாக நிறைவேறாது. இதற்கான உச்சமான மாதிரி இதனால் நாம் புரிந்துகொள்வது: இறைவனின் சித்தம் நிறைவேற, தம்மையே வெறுமையாக்குதல் அவசியம்.
3. ஆண்டவரின் அடிமை
மரியாள் தன்னை “ஆண்டவரின் அடிமை” என்று அழைத்தபோது, அவள் தன் வாழ்க்கையின் உரிமையை இறைவனிடம் ஒப்படைத்தாள். இந்த அடையாளம் விவிலியத்தில் பவுல் தன்னை “இயேசு கிறிஸ்துவின் பணியாளனும்” (ரோம1:1) என்று அறிமுகப்படுத்துகிறார். இந்த அடிமைத்தனம் கட்டாயப்படுத்தப்பட்ட நிலை அல்ல; மாறாக அன்பின் அடிப்படையில் இறைவனுக்குச் சொந்தமான வாழ்க்கை.
பவுல் விசுவாசியின் வாழ்க்கையை இதே அடிப்படையில் விளக்குகிறார். “இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்” (காலா 2:20) என்று அவர் எழுதுகிறார். இது மனிதன் தன் ‘நான்’ என்பதை குறைத்து, இறைவனின் வாழ்வுக்கு இடம் கொடுக்கும் ஆன்மிக நிலையைச் சுட்டுகிறது. மனிதன் தன்னை வெறுமைப்படுத்தும்போது தான் இறைவனின் கிருபை அவனுள் பெரிதாக வெளிப்படும்.
“ஆண்டவரின் அடிமை” என்பது சுய வெறுமைப்படுத்தலின் அடையாளம்; “உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்பது இறைவனின் வார்த்தை மனித வாழ்க்கையில் நிறைவேற அனுமதிக்கும் விசுவாச ஒப்புதல். இவ்விரண்டும் ஒன்றாகச் சேரும்போது தான் விவிலியத்தின் முழு சாரம் வெளிப்படுகிறது. மனிதன் தன்னை இறைவனுக்குச் சொந்தமாக ஒப்படைக்கும்போது, இறைவனின் வார்த்தை அவனுள் உயிர்ப்பெடுத்து உலகில் இரட்சிப்பை உருவாக்குகிறது.
இரண்டு முக்கியமான உண்மைகள் ஒலிக்கின்றன: இறைவன் அழைக்கிறார்; மனிதன் கீழ்ப்படிதலால் பதிலளிக்கிறான்.
4. மழையில் நனையாத வானம்.
இயேசுவின் தாயார் மரியாள் தனது வாழ்நாளில் ஆழமான துன்பங்களையும் மனவேதனைகளையும் அனுபவித்தார். தெய்வத் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கன்னியாக இருந்து கர்ப்பம் தரித்த அதிசய அனுபவம் அவருக்கு மகிழ்ச்சியையும் அதே நேரத்தில் சமூகவழி குற்றச்சாட்டுகளையும் ஏற்படுத்தியது. பெத்லகேமில் ஏழ்மையான சூழலில் இயேசுவை பெற்றெடுத்ததும், பிறகு ஏரோது அரசனின் அச்சத்தால் எகிப்திற்கு தப்பிச் செல்ல வேண்டியதும் அவரது வாழ்க்கையைப் போராட்டமாக மாற்றியது. குழந்தை இயேசு வளர்ந்தபோது அவரைத் தேடி வருந்திய தருணங்களும் இருந்தன. இறுதியாக, தன் மகன் சிலுவையில் அறையப்பட்டதை நேரில் கண்ட தாயின் இதயம் அளவற்ற வேதனையைச் சுமந்தது. இந்த எல்லா துன்பங்களையும் அமைதியுடன் ஏற்றுக்கொண்ட மரியாள், நம்பிக்கையின், பணிவின், தியாகத்தின் உன்னத எடுத்துக்காட்டாக நிலைத்திருக்கிறார்.
மரியாள் தன் வாழ்வின் மிகப்பெரிய புயல் மழையை எதிர்கொள்ளும் தருணத்தை எதிர்பார்த்திருக்கமாட்டாள். ஆயினும் பொறுமையோடு எதிர்கொண்டாள். அவள் மழையில் நனையாத வானம்.
தன்னை வெறுமைப்படுத்திய அந்த நொடியில்தான் வார்த்தை மாம்சமாகிறது. மரியாளின் ‘ஆம்’ மனித வரலாற்றின் திருப்பமாகிறது மே மாதத்தில் அன்னையைத் தியானிப்போம்.


